http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 165
இதழ் 165 [ ஜூன் 2022 ] இந்த இதழில்.. In this Issue.. |
சிராப்பள்ளித் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் துழாய்க்குடியை1 அடுத்து இடப்புறம் பிரியும் சாலையில் 4 கி. மீ. தொலைவிலுள்ளது நெடுங்களம். சம்பந்தரால் பாடப்பெற்ற2 இவ்வூர்க் கோயில் பல்லவர், பாண்டியர் காலத்திலிருந்தே மக்கள் கொடைகளால் செழித்திருந்தமைக்கு டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையக் களஆய்வுகளின்போது கிடைத்த புதிய கல்வெட்டுகளே சான்றாகும்.3 கோயிலின் முதல் கட்டுமானமாகக் கீழ்த்தளத் துடன் இருந்த முதற்கோபுரம் 1999 திருப்பணியில் ஐந்து தளக் கட்டுமானமாக மாறியது.
முதற்கோபுரம் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி கொண்டெழும் கோபுரக் கீழ்த்தளம் சுவரளவில் ஐந்து பத்திகளாக் கப்பட்டுள்ளது. சதுரபாதத்தின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் தாமரை உள்ளிட்ட மேலுறுப்புகளுடன் அணைக்கும் இப்பத்திகளில் சாலைப்பத்தி முன்தள்ளியமைந்து வாயிலாகியுள்ளது. கர்ண, பஞ்சரப்பத்திகளுக்கு இடைப்பட்ட தாய்ச்சுவரில் உருளை அரைத்தூண்கள் தழுவும் ஆழக்குறைவான வெறுமையான கோட்டங்கள் தலைப்பில் கூரையுறுப்புகளுடன். பஞ்சர, சாலைப்பத்திகளுக்கு இடைப்பட்ட தாய்ச்சுவர் வேதிகைத்தொகுதி பெறாது ஆழமான வெறுமையான கோட்டங்களுடன் திகழ்கிறது. பத்தி அணைவுத்தூண்களின் மேலுள்ள தரங்க வெட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, மேலே கூடுவளைவுகளுடன் கபோதம், பூமிதேசம், வேதிகை. கீழ்த்தளஆரம் ஆறங்கமாக, மூலைகளில் கர்ணகூடங்கள், நடுவில் சாலை, அவற்றிற்கு இடைப்பட்டுப் பஞ்சரங்கள், அனைத்தையும் இணைக்கும் ஆரச்சுவர் கொள்ள, சாலை தவிர்த்த பிற ஆரஉறுப்புகளில் சுதையுருவங்கள். திறப்பாக உள்ள சாலைச்சுவரில் இருபுறத்தும் காவலர்கள். இரண்டாம், மூன்றாம், நான்காம் தளங்கள் அளவில் சிறுத்துத் திருப்பங்களில் நான்முக அரைத்தூண்கள் கொள்ள, தளங்களின் மேல், கீழுள்ளாற் போன்றே ஆரம். ஐந்தாம் தளம் சுருங்கியமைய, கிரீவத்தில் கோட்டத் திறப்பின் இருபுறத்தும் சங்க, பத்மநிதிகள், பிள்ளையார், முருகன். கிரீவ வேதிகையில் பூதங்களும் நந்திகளும். மேலே சிகரம், தூபி. கோபுரத்தின் வடக்கு, தெற்கு முகங்களில் பஞ்சரப்பத்தி விடுபட்டுள்ளது. இத்திசைகளில் கர்ண, சாலைப்பத்திகளுக்கு இடைப்பட்ட தாய்ச்சுவரில் காட்டப்பட்டுள்ள வெறுமையான கோட்டங்கள், தலைப்பாகக் கூரையுறுப்புகளுடன் இரு கூடுவளைவுகள் பெற்ற கபோதமும் கொண்டுள்ளன. வடமுகச் சாலைகளில் நான்முகன் அமைய, தெற்கில் ஆலமர்அண்ணல். கோபுரத்தையொட்டிய வடக்கு மதிலின் மேற்குமுகத்தில் 1999 குடமுழுக்குத் திருப்பணியின்போது இவ்வளாகத்தில் கிடைத்த உத்திரமொத்த கட்டட உறுப்பு இணைக்கப்பட்டுள்ளது.4 அதில் யானைத்திரு மகள், அர்த்தபத்மாசனத் தீர்த்தங்கரர், இயக்கி ஆகியோர் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது இப்பகுதியில் சோழர் காலத்தே வளமுற விளங்கியதாகக் கல்வெட்டுகள் குறிக்கும் ஸ்ரீபுறக்குடிப்பள்ளியின் கட்டுமான உறுப்பாகலாம்.5 முதற்கோபுரத்திற்கும் இரண்டாம் கோபுரத்திற்கும் இடையிலுள்ள பகுதியில் பலித்தளம், கொடித்தளம், நந்திப்பந்தல் அமைய, வடபுறம் ஒப்பிலாநாயகித் திருமுன்னும் அதனருகே புதிதாகக் கட்டமைக்கப்பட்ட திருமணமண்டபமும் உள்ளன. தெற்கில் கோயில் தோட்டம். ஒப்பிலாநாயகி அம்மன் திருமுன் ஒருதளத் திராவிட விமானம், முகமண்டபம், பெருமண்டபம், கற்பந்தல் கொண்டுள்ள அம்மன் திருமுன் தெற்குப் பார்வையிலுள்ளது. யானைமுகப் படிகளுடனுள்ள பிற்கால இணைப்பான கற்பந்தலின் கூரையைத் தரங்க வெட்டுப் போதிகைகளுடன் உருளைத்தூண்கள் தாங்க, முகப்பின் வளைமாடத்தில் பின்கைகளில் மலர்களுடன் முன்கைகளில் காக்கும், அருட்குறிப்புகள் காட்டும் சுதையுருவ அம்மன். விமானம், முகமண்டபம் விமானமும் முகமண்டபமும் ஒரு காலக்கட்டத்திலும் பெருமண்டபம் மற்றொரு காலக்கட்டத்திலும் எழுப்பப்பட்டுள்ளன. முதலிரு கட்டுமானங்களின் பிரதிபந்தத் தாங்குதளம் பிரதிவரியின் கீழ்ப்பகுதிவரை சுற்றுத்தளத்தின் தரை உயர்வால் நிலத்தடியில் மறைந்துள்ளது. மேலே வேதிகைத்தொகுதி. நான்முக அரைத்தூண்கள் தழுவும் சுவர், தரங்க வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், மேலோட்டமான கூடுவளைவுகளுடன் கபோதம் கொண்டுள்ள அம்மன் விமானம், சாலைப்பத்தி முன்தள்ளல் பெற்றுள்ளது. சுவரின் முப்புறத்துமுள்ள வெறுமையான கோட்டங்களைச் சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் தழுவ, மேலே கூரையுறுப்புகளும் தலைப்பாகத் தோரணவளைவும். தளத்தின் மேல் பூமிதேசமும் வேதிகையும் அமைய, கிரீவம், சிகரம் எண்முகமாக உள்ளன. கிரீவசுவரை உயரக்குறைவான நான்முக அரைத்தூண்கள் தழுவ, மேலே கூரையுறுப்புகள். கீர்த்தி முகங்கள் தலைப்பிட்டுள்ள நான்முக அரைத்தூண்கள் தழுவும் பெருநாசிகைக் கோட்டங்களில் சுதையுருவங்களாகத் தெற்கில் மகேசுவரி, மேற்கில் வைணவி, வடக்கில் நான்முகி, கிழக்கில் திருமகள். வேதிகையின் மேல், நாற்புறத்தும் அழகிய அமர்நந்திகள். கீழ்த்தளம்வரை கருங்கல் பணியாகவுள்ள விமானத்தின் கிரீவம், சிகரம் செங்கற்பணிகள். விமானக் கட்டமைப்பை ஒத்து, ஆனால், முன்தள்ளலின்றி ஒரே நேர்க்கோட்டிலுள்ள முகமண்டபத்தின் கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. பெருமண்டபம் தாங்குதளமோ, தூண் தழுவலோ, கோட்டங்களோ அற்ற சுவர்களுடன் விரியும் பெருமண்டபத்தில் பூமிதேசம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. மண்டபத் தென்முகத்தில் வெளித்தெரியும் துணைத்தளப் பகுதியில் வாயிலின் வலப்புறம் கோலாட்டமும் இடப்புறம் ஊர்வலமும் சிற்பத்தொடராகக் காட்சியாகின்றன.7 ஊர்வலத்தில், முன்னால் ஒருவர் ஓங்கிய வாளுடன் நன்கு அலங்கரித்த குதிரையை நடத்திச்செல்ல அதன் மேல் இவர்ந்துள்ளவர் இடக்கையில் கடிவாளத்தைப் பிடித்தவாறு வலக்கையை நீட்டி யுள்ளார். குதிரையின் பின்னால் குடை, கவரி, குடுவை, சந்தனக்கிண்ணம் ஆகியவற்றுடன் பணியாட்கள் ஐவரும் வாள், கேடயம் கொண்டவர்களாய் வீரர்கள் மூவரும் பின்தொடர்கின்றனர். இந்த ஊர்வலத்திற்கான முன்னோட்ட ஆடலாய் வாயிலின் வலப்புறம் பத்துப் பெண்களின் கோலாட்டம். அனைவருமே அழகிய கொண்டையும் பனையோலைக் குண்டலங்களும் கழுத்தாரமும் தோள், கை வளைகளும் நடுப்பட்டை கொண்ட இடையாடையும் பெற்றுள்ளனர். இடையாடையின் மேல் அழகிய விரிப்பாய் அனைவருக்கும் தொடையளவிலான சுருக்கிக்கட்டிய மடிப்பாடை. சிலர் நேர்ப்பார்வையிலும் சிலர் லேசான ஒருக் கணிப்பிலும் உள்ளனர். ஆட்ட விரைவுக்கேற்பச் சிலர் தலையை வலம் அல்லது இடம் சாய்த்தும் குனிந்தும் சற்றே நிமிர்ந்தும் அழகுடன் திகழ்கின்றனர். ஒரு கையின் கோல், உடலின் முன்புறம் நீண்டு வல அல்லது இட ஆடலரின் கோலுடன் மோத, மற்றொரு கை தலையின் பின்புறம் கோலை நீட்டி, அடுத்துள்ள ஆடலரின் அதே அமைப்பிலான கோலைத் தட்டுமாறு ஆடும் இவ்வழகியரின் பாதங்கள் ஆட்டத்தின் போக்கிற்கேற்பப் பார்சுவம், சூசி, அக்ரதலசஞ்சாரம் எனப் பலவாறு அமைய, சிலர் ஊர்த்வஜாநு வாய்க் காலை உயர்த்தியும் ஆடுகின்றனர். பிற்சோழர் காலக் கட்டுமானமான தாராசுரத்தில் மட்டுமே சோழர் பதிவாகக் கோலாட்டக் காட்சியைக் காணமுடிகிறது.8 பிற தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்பெறும் கோலாட்டச் செதுக்கல்கள் பெரும்பாலும் விஜயநகரகாலப் படைப்பாகவே அமைந்துள்ளன. நெடுங்களம் கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் சில விஜயநகரகாலப் பதிவுகளாக இருப்பதாலும்,9 இவ்வூர்வலக்காட்சியிலுள்ள ஆண், பெண் உறுப்பினர்களின் தோற்றம், ஆடை, அணிகலன்கள் விஜயநகரகாலக் கலைமுறை சார்ந்திருப்பதாலும் இச்சிற்பத்தொடரை அவர்தம் கைவண்ணமாகக் கொள்வது பொருந்தும். சிராப்பள்ளி மாவட்டத்தின் பாடல் பெற்ற பழங்கோயில்களில் கோலாட்டம் காணப்பெறும் ஒரே வளாகமாக நெடுங்களம் பெருமை கொள்கிறது. பெருமண்டப வாயிலின் வலப்புறச் சுவரில் சாளரம். உட்புறம் கிழக்கு, மேற்கு இருபகுதிகளிலும் மேடைகள். மண்டபக் கூரையைத் தாங்கும் இரு முச்சதுர இருகட்டுத் தூண்களுள் ஒன்று பூமொட்டுப் போதிகை கொள்ள, மற்றொன்றில் தரங்க வெட்டுப் போதிகை. தூண்களின் கீழ்ச்சதுரம் பாம்புப்படம் பெற்றுள்ளது. மேலே உத்திரம், வாஜனம், வலபி. கூரையைப் பலகைக் கற்கள் மூடியுள்ளன. நந்தி அமர்ந்துள்ள இம்மண்டபம் அகலத்தில் சுருங்கி முகமண்டப வாயிலைத் தொடுகிறது. தூண்களற்ற, சிறிய முகமண்டபத்தையடுத்த கருவறையில் அம்மை பின் கைகளில் மலர்மொட்டுகளுடன் சமபாதத்தில் காட்சிதருகிறார். சடைமகுடம், குண்டலங்கள், கழுத்தணிகள், பட்டாடை பெற்றுள்ள அவர் முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். குறிப்புகள் 1. துவாக்குடி என்று தற்போது அழைக்கப்படும் இவ்வூர் இங்குள்ள அழகிய குலோத்துங்க சோழீசுவரம் கல்வெட்டு களில் துழாய்க்குடி என்றே சுட்டப்படுகிறது. பராமரிப்பற் றிருந்த இக்கோயிலை 1999இல் அறிமுகப்படுத்தி, இங்குள்ள கல்வெட்டுகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற் றாய்வு மைய ஆய்வர்கள் படியெடுக்கத் துணையானவர் நெடுங்களம் விவேகானந்தர் நற்பணி மன்ற அன்பர் திரு. குருசாமி. தினந்தந்தி, தினமணி 24. 12. 1999, Indian Express 25. 12. 1999, The Hindu 26. 12. 1999. 2. முதல் திருமுறை பதிக எண் 52. இப்பதிகத்தின் பத்துப் பாடல்களும் ‘இடர்களையாய் நெடுங்கள மேயவனே’ என்றே முடிகின்றன. இத்தொடரிலுள்ள, ‘இடர்களைதல்‘ எனும் சொல்லின் அடிப்படையில், இடர்களைவான் என்ற பெயருடன் வளம்பக்குடியைச் சேர்ந்த விஜயாலய முத்தரையரின் மகன் வாழ்ந்தமை இங்குள்ள மூன்றாம் குலோத்துங்கர் கல்வெட்டால் தெரியவருகிறது. சம்பந்தரின் நெடுங்களப் பதிகம் அக்காலக்கட்டத்தே இப்பகுதி மக்களிடை ஆழ வேரூன்றியிருந்தமை இதனால் அறியப்படும். SII 26: 730. 3. வரலாறு 2, 8, 11, 31-32; S. Muthulakshmi, Nedungalanathaswami Temple - Epigraphical Study, Dissertation submitted to Bharathidasan University, Thiruchirappalli, 1999. 4. தினமலர் 19. 1. 2000, தினமணி 20. 1. 2000. 5. மு. நளினி, இரா. கலைக்கோவன் ‘ஸ்ரீபுறக்குடிப்பள்ளி’, கோயில்களை நோக்கி . . . ., பக். 135-141. 6. இங்கிருந்துதான் தந்திவர்மர், சேந்தன் குழுவினர் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இப்பந்தலுள் விளக்கேற்றப் பயன்படும் தூணில் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. 7. 1999 குடமுழுக்கின்போது வெளிப்பட்ட இச்சிற்பத்தொடர்களைத் திருப்பணியாளர்களுக்கு விளக்கி, இவை மக்கள் பார்வைக்குத் தொடருமாறு செய்தவர்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள். இங்குள்ள குதிரை ஊர்வலமும் கோலாட்ட நிகழ்வும் சிறப்புக்குரிய பதிவுகள். இது ஒத்த மற்றொரு பதிவு தஞ்சாவூர் மாவட்டம் திருக்கோடிக்கா சிவன்கோயில் கோபுர உட்சுவரில் உள்ளது. 8. இரா. கலைக்கோவன், ‘கோலாட்டம்’, டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இணையதளம். 9. SII 26: 715-17, 727, 745. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |