http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 165
இதழ் 165 [ ஜூன் 2022 ] இந்த இதழில்.. In this Issue.. |
நிலவிற்பனை
முதலாம் ராஜராஜரின் 8ஆம் ஆட்சியாண்டில் நெடுங்களம் சபையாரும் ஊராரும் கோயில் தேவகன்மிகளும் சூரலூர்க் கிழவர் கம்பன் மணியனுக்குக் குடிநீக்காத் தேவதானமாகக் கிள்ளி வயல் பழநிலத்துக்கு வடக்கிலிருந்த நிலத்தை மதுரைப் பெருவழி நீக்கிக் கற்பூரவிலையில் (கோயில் நிலத்தின் மீது உரிமை பெறக் கொடுக்கப்படும் குறைந்த விலை) 30 காசுக்கு விற்றனர். இந்நிலத் திற்கான எல்லைகளாக மாங்காநல்லூர், புதுவயக்குளத்து உட்கடை நீரோடுகால், குளத்தின் நீர்க்கோப்பு, மாதேவன் மயக்கல், விக்கிராமபரணநல்லூர், அரையன் சதுரவிடங்கன் நிலம் ஆகியன அமைந்தன. விற்பனையான ஆண்டிற்கு அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் காணிக்கடனாக ஊர்மரக்கால் கோதுகுலவ னால் 150 கலம் நெல்லளக்க வேண்டுமென்றும் தென்னாற்றிலிருந்து கிள்ளிவயலுக்குப் பாய்ந்த குமிழியாறே இந்நிலத்திற்கும் நீரளிப்பதாகவும் ஆவணம் அமைந்தது. இவ்விற்பனையின் போது கோயில் ஸ்ரீகாரியமாக ராஜராஜ பிரும்மமாராயர் விளங்கினார். தென்னாற்றை எல்லையாகக் கொண்ட நிலத்தை நெடுங்கள சபையாரும் ஊராரும் விற்றமை கூறும் துண்டுக் கல்வெட்டால் திருமூவாணம் குளம் அகழப்பட்ட தகவல் கிடைக்கிறது. உள்சுற்று வடபுறச் சுவர்த் தாங்குதளக் கல்வெட்டு 1 வேலி 6 மா நிலத்தைக் குறிப்பதுடன், அதனுள் அகப்பட்ட நிலத்துண்டுகள் சிலவற்றின் எல்லைகளாக மேலைக்குமிழி, நாகன் மசக்கல், ஊருணிக் குளக்கரை, மேற்குநோக்கிப்போன வாய்க்கால், தாமோ தரனின் வேலஞ்செய் ஆகியவற்றைச் சுட்டுகிறது. சடையவர்மர் சுந்தரபாண்டியர் ஆட்சிக்காலமான பொ. கா. 1258இல் பெரியமுதலியான காங்கயர், காருடனை அழித்து ஓடிப்போகையில் அவர் கட்டவேண்டிய கடமைக்காக அவர் அண்ணன் செழியகங்கன் 8 வேலி நிலத்தை இறைவனுக்கான திருநாமத்துக்காணியாகக் கோயில் தேவகன்மிகளிடம் அன்றாடுநற்காசான ராசிப்பணம் 450க்கு விற்று நிலஆவண இசைவுத்தீட்டுத் தந்தார்1 பாண்டிமண்டலத்து முத்தூற்றுக் கூற்றத்து வானவன் மாதேவிநல்லூர் ராமபிரான் சர்வாதித்தமுடையானுக்கு நந்தாவிளக்குப்புறமாக இறைவன் திருநாமத்துக்காணியான மாங்கானமான நித்தமணவாளநல்லூரில் ஏழரை மா நிலம் கோயில் தேவகன்மிகளால் அன்றாடுநற்காசு 8,000க்கு விற்கப்பட்டது. அந்நிலத்திற்கான மாக்கலம் உள்ளிட்ட கடமையை இறுக்கத் தேவகன்மிகள் இசைந்தனர். இந்த ஆவணத்தில் ஊர்க்கண்காணி திருஞானசம்பந்தரும் கோயில்கணக்குப் பெரும்புலியூருடையான் நித்தமணவாளப் பிரியனும் கையெழுத்திட்டுள்ளனர். வளம்பக்குடித் தலைவரான தில்லைத் திருநட்டப் பெருமாளான விசையாலய முத்தரையர் விளைநிலம், புஞ்சை, நீர்நிலம், காடு, கரம்பை உட்படக் காடருப்பற்றின் அந்தராயம், சில்வரி, புறவெட்டி உள்ளிட்ட அரசாயங்களையும் தருவெல்லை, தள்ளுக்கடை இறை, தட்டார்பாட்டம், ஈழம்புன்செய், கூலவரி உள்ளிட்ட ஆயங்களையும் தம் நலத்திற்காகவும் தம் வழியினர் நலத் திற்காகவும் நெடுங்கள இறைவன் பண்டாரத்திற்கு அளித்தார். கோயில் தேவதானமாக விளங்கிய இக்காடருப்பற்றின் எல்லைகளாகத் தியாகவல்லிச் சதுர்வேதிமங்கலம், விக்கிரமாபரணநல்லூர், புத்தாம்பூர், மாங்கானல் ஆகியன சுட்டப்பட்டுள்ளன. விசையாலய முத்தரையர் பிள்ளைகளில் ஒருவரான ஆளுடையபிள்ளையார் அடியார்கள் இடர்களைவானான அனபாய முத்தரையனுக்குத் தியாகவல்லிச் சதுர்வேதிமங்கல சபை உறுப்பினர்கள் எண்மர் 5,000 அன்றாடு நற்காசுக்கு மூன்றே முக்கால் வேலி இரண்டு மா முக்காணி நிலம் விற்றனர். விற்பனைத் தொகையில் 1,600 காசு வேதநாயகனைச் சேர, எஞ்சிய 3,400 காசு பிற உறுப்பினர்களுக்காயிற்று. வரி செலுத்துவதில் நேர்ந்த குறைகளை நேர்செய்ய மாங்கானத்தை அவ்வூராரிடம் விலைக்குப்பெற்ற கிளியூர் ஊரார் அதைக் கோயிலுக்குத் திருநாமத்துக்காணியாக அன்றாடு நற்காசு 12,000க்கு விற்றனர். இது ராசிப்பணம் 400க்கு இணையாக அமைந்தது. இதற்கான ஆவணத்தில் கிளியூர்க் கணக்கு பெரியநாயன் மாதுயர் மதித்தான் கையெழுத்திட்டுள்ளார். சடையவர்மர் சுந்தரபாண்டி யரின் 10ஆம் ஆட்சியாண்டில் எழுதப்பெற்ற இந்த ஆவணத்தில் ஒப்பிலாமுலை நாச்சியார் குடிக்காடு, சிங்காண்டான் குடிக்காடு முதலிய நிலங்கள் சுட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டால், பொ. கா. 13ஆம் நூற்றாண்டளவில் இறைவியின் திருமேனி நெடுங்களம் வளாகத்தில் இருந்தமையும் அம்மையின் பெயர் ஒப்பிலாமுலை நாச்சியார் என வழங்கப்பட்டமையும் அறியப்படும். வடபுறையூர் நாட்டுச் சேந்தன் காரியான செம்பியன் மூவேந்த வேளான் திருநாராயணச் சதுர்வேதிமங்கலத்து சபையாரிட மிருந்து 6 வேலி நிலம் இறையிலியாக விலைக்குப் பெற்று 12 பிராமணர்களுக்கு தன்மதானமாக அளித்தார். நிலஎல்லைகளாகக் கிழக்கோடிய வாய்க்காலும் ஆற்றுக்குலைத் தலைவாய் நிலமும் பிலாம் குறிக்கப்பட்டுள்ளன. இதில் குளம், ஊர் இருக்கை ஆகியன முக்கால் வேலியாக, எஞ்சிய ஐந்தேகால் வேலி நீர்நிலமானது. குளமும் நிலமனையும் இறையிலியாக்கப்பட்டன. நீர்நிலத்துக்கான வரியாக அதைக் கொடையாகப் பெற்றவர்கள் மாத்தால் கலனே தூணிப்பதக்காகக் கிள்ளிக்குடித்தேவர் சூலக்காலால் வாடாக்கடனாக ஆண்டுதோறும் 157 கலன் தூணிப்பதக்கு நெல் அவ்வூர் ஸ்ரீகயிலாயத்து மகாதேவருக்கு அளக்கவேண்டும். அதில் சரிபாதி நெல்லில் இறைவன் திருச்சென்னடையாக உச்சிவேளையில் பாக்கு உள்ளிட்ட அமுது, திருப்பலிக்கு 4 நாழி விளக்கெண்ணெய், திருமெழுக்கிடுவாருக்கு நாளும் 3 நாழி நெல் ஆகியன தரப்படவேண்டும். மறுபாதி நெல் கொண்டு கோயில் உவச்சர்கள் நால்வருக்கு ஊதியமளிக்க வேண்டும். இந்நெல்லைக் கார்பாதி, பிசானம் பாதியாகக் கொடையாளிகள் வழங்கலாம். இந்த ஆவணத்தை சபை நடுவர் பிரம்மபிரியனான வேளார் எழுதியுள்ளார். நெடுங்களம் இறைவனின் ஊர்களில் ஒன்றான மேலைக் குறிச்சியிலிருந்த விளைந்தறியாக் களரையும் திடலையும் காமநெறிமைனன் பண்படுத்த, அதற்குக் கோதுகுலவர்க்காணி என்று நெடுங்களத்து கணத்தார் பெயரிட்டனர். அந்நிலத்தை உழுவார் விளைந்தாலும் விளையாவிட்டாலும் நாளும் மூன்று நாழிக் குத்தலரிசி சிறுகுடியாகக் கோயிலுக்குச் செலுத்தவேண்டும் எனக் காமநெறிமைனன் ஆவணம் செய்தார். நால்வர் மேடையின் பின்புறமுள்ள கல்வெட்டின் ஒருபகுதி மட்டுமே படிக்கமுடிந்தது. மறுபகுதி பதிவாகியுள்ள சுவருக்கு அருகில் திருமேனிகள் இருப்பதால் அதைப் படிக்கக்கூடவில்லை. படித்தறியப்பட்ட பகுதியால் மடக்கு வாய்க்கால், கிளிவாய்க்கால் ஆகிய இருவாய்க்கால்களை எல்லைகளாகக் கொண்ட நிலத்துண்டு கோயிலுக்களிக்கப்பட்டதை அறியமுடிகிறது. வழிபாடு, படையல், திருவிழா உத்தமசோழ பிரும்மாதிராஜரின் அலுவலரான செம்பியன் மூவேந்தவேளாருக்காக ஸ்ரீகாரியம் ஆராய்ந்த கோவிந்தபட்டர் இக்கோயிலில் மூன்று சந்திகளிலும் ‘அக்னிகாரியம்’ நிகழ்த்தக் களரிக்குறிச்சி மேல்வாய்க்கால் கரை நிலவிளைவில் ஆண்டு தோறும் 12 கலம் நெல்லளித்தார். அது கொண்டு, போது அரைப்பிடி நெய்யால் அந்நிவந்தம் நிறைவேற்றக் கோயில் நிருவாகம் பொறுப்பேற்றது. திங்கள்தோறும் ஆயில்யத்தன்று இறைவனுக்கு மதியப் படையலாக திருஅமுது, கறியமுது, பொரிக்கறியமுது, நெய், சர்க்கரை, ஒரு வாழைப்பழம், தயிர் உள்ளிட்டன வழங்க உள்ளூர் வேளாளர் ஒருவர் 20 கலம் நெல்லளிக்க, அதை முதலாகக் கொண்டு அதன் வட்டியில் இது செய்யக் கோயிலார் ஒப்பினர். நெடுங்களத்து இறைவனுக்கு நாளும் மதியம் 4 நாழிப் பால், 2 நாழித் தயிர், ஆழாக்கு நெய், 2 நாழி கோமூத்திரம், கோமயம் ஆகிய ஆனைந்து கொண்டு திருமுழுக்குச் செய்ய 61 பசுக்கள் அளித்த பாலவாயற்றூர்க் கிழவர் கீர்த்தி ஆயிரவன், சங்கராந்திதோறும் 20 நாழி நெய்யால் இறைவன் முழுக்குக் கொள்ளவும் அது போழ்து ஒளிரும் விளக்கிற்கு நாழி நெய் அளக்கவும் கூடுதலாக 7 பசுக்கள் வழங்கினார். சாவா மூவாப் பெரும் பசுக்கள் என்றழைக்கப்பெற்ற இந்த 68 பசுக்களும் பராமரிப்பிற்காக இடையர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன. உத்தராயண சங்கராந்திதோறும் இவ்வூர் வண்ணார் இடக்கடவ நெல்லுக்கான பொலியூட்டாகக் கலம் நெல் அளித்த ஆயிரவன், நாளும் இறைத்திருமுன் சிதாரி புகைக்க ஏற்பாடு செய்ததுடன், அதற்கெனத் தம்மால் விலைக்குப் பெறப்பட்டுப் பண்படுத்தப்பட்ட கானற்குளம் பாய்ந்த வாய்க்கால், குவாவன் மயக்கல், சுடுகாட்டுத்திடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட முத்திவயக்கல் நிலத்தைக் குடிநீங்காத் தேவதானமாகத் தேவரடியாள் ஆச்சன் அரிஞ்சிகைக்கு அளிக்க, அவ்வம்மை ஆண்டுதோறும் கோதுகுலவன் மரக்காலால் அளக்கப்பெற்ற 12 கலம் நெல்லைக் கோயிலுக்கு வழங்கினார். நிலத்துக்கான இல்மனையாக மேலைமனையும் சிதாரி புகைக்கத் தராவிலான 64 பலம் நிறை தூபப்பாத்திரமும் ஆயிரவனால் வழங்கப்பட்டன. விளாநாட்டுத் தேவதான பிரமதேயமான திருவானைக்காவலில் வாழ்ந்த மோசியன் ஒற்றியூரன் கூத்தன் இக்கோயிலில் மாசி, சித்திரையில் நிகழ்ந்த ஏழுநாள் திருவிழாக்களில் நாளும் 25 சிவயோகிகள் உண்ணுமாறு அறக்கட்டளை நிறுவினார். உணவு, அதற்கான நெய், தயிர், பாக்கு ஆகியவற்றுடன் நெல்குற்றுவார், விறகளிப்பார், சமைப்பவர் ஆகியோருக்கான ஊதியமுமாக ஒரு சிவயோகிக்குக் குறுணி நெல்லாக 350 பேருக்கான 30 கலம் நெல் லைத் தமக்குரிய கூத்தன்மயக்கல், குஞ்சிரமலிமயக்கல் ஆகிய இரு நிலத்துண்டுகளின் விளைவிலிருந்து விழாக்காலத்தே கோயில் முற்றத்திலேயே கோதுகுலவன் எனும் மரக்காலால் அளந்து வழங்கும் பொறுப்பை ஊர் சபை ஏற்குமாறு அந்த அறக்கட்டளையைக் கூத்தன் அமைத்தார். இறைவனுக்குச் சிறுகாலைச் சந்தியில் பயற்றுப்போனகம் அளிக்க நாளும் தூணி நெல்லாக ஆண்டுக்கு 120 கலம் நெல் கோதுகுலவன் எனும் மரக்காலால் கோயிலில் அளப்பதற்காக அரையன் சதுரவிடங்கனுக்கு நெடுங்களம் ஊராரும் சபையும் கோயில் அலுவலர்களும் நிலத்துண்டொன்றைக் குடிநீங்காத் தேவதானமாக அளித்தனர். அந்நிலத்திற்கான எல்லைகளாக மாங்கானல் முன்குளத்தின் மேலைப் பெருவழியிலிருந்த மேலை ஊருணியும் குசக்குழியும் நம்பன்குளமும் விக்ரமாபரணநல்லூர் வரம்பறை நிலமும் தென்னாற்றினின்று வானவன்பேரையர் குளத் துக்குப்போன வாய்க்கால் கரையின் மேற்கிலிருந்த குளத்தின் தென்கரையும் குறிக்கப்பட்டுள்ளன. தென்னாற்றினின்று கிள்ளி வயலுக்குப் பாய்ந்த வாய்க்காலும் குமிழியும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை இந்நிலத்துண்டிற்கும் நீரளிக்குமாறு பாசனம் திட்டமிடப்பட்டது. இறைக்கோயில் தணிக்கையில் (தேவர்கள் சோதினைக் களம்) கிடைத்த தொகையே இந்நிலத்திற்கான விலைப் பொருளானது. இருதுண்டுகளாக உள்சுற்றின் வடபுறச்சுவரில் காணப்படும் சோழர் காலக் கல்வெட்டு, கொடையாளி ஒருவர் தம் பிறந்த நாளான சித்திரை மாதச் சித்திரையில் இறைவனுக்குத் திருமுழுக் காட்டவும் அதுஞான்று செய்யப்படும் தருப்பணம் உள்ளிட்ட சடங்குகளுக்கான பொரி, முளிமஞ்சள், கடுகு, எள், நறும்பூ வடம் 3 பெறவும் இறைவனுக்குத் திருவமுதளிக்கவும் கதிரவன் மறைவது தொட்டு இறைவன் அமுது செய்தருளும்போதுவரை விளக்கு ஒளிரவும் எனத் திங்கள்தோறும் சித்திரை நாளுக்குரிய செலவு களுக்காகப் பொற்கொடையளித்த தகவலைத் தருகிறது. இக்கல் வெட்டால் அக்காலத்தே கழஞ்சுப் பொன்னுக்கு ஆண்டுதோறும் இருகல நெல் வட்டியாகக் கிடைத்தமை தெரியவருகிறது. சோமாஸ்கந்தர் திருமுன் கபோதத்தில் பல துண்டுகளாகச் சிதறியுள்ள சோழர் காலக் கல்வெட்டு இறைவனுக்குத் திருமுழுக்கு, படையல் நிகழ்ந்தமை சுட்டுவதுடன், இங்குக் காளம், சங்கு, செயகண்டிகை, கைம்மணி, செண்டை ஆகியன ஒலித் தமையும் குறிக்கிறது. நெடுங்கள இறைவன் திருவிழா இரவு, வேட்டை ஆகியவற் றின்போது எழுந்தருள்வதற்காக உலகசுந்தரர் எனும் பெயரில் செப்புத்திருமேனி ஒன்றையும் மோசி ஒற்றியூரன் கூத்தன் பிரான் இக்கோயிலில் அமைத்தார். அதற்கு நாளும் திருவமுது, கறியமுது, நெய்யமுது படைக்க ஆண்டுச் செலவாக 46 கலம் 2 தூணி 1 பதக்கு 4 நாழி நெல் கணக்கிடப்பட்டது. கூத்தப்பிரானின் உறவின ரான அருமுனைகண்ட பெருநாயன் கிள்ளிவயலில் தாம் விலைக்கு வாங்கிப் பண்படுத்திய நிலத்துண்டின் விளைவில் மேல்வாரம் பெற்றுக் கோயிலாரே இவ்வறத்தைத் தொடருமாறு செய்தார். மூவரையன் குருகுலநாடாழ்வான், தேவாண்டான், அவன் தம்பி அழகியான் ஆகிய மூவரிடமும் மீசெங்கிளி நாட்டு நாட்டவர் கொண்ட தீயநேரி நிலம் 12 வேலியை உலகுடைய நாயனார் சடையவர்மர் சுந்தரபாண்டியர் பிறந்த நட்சத்திரத்தின் போது விழாச்செய்யுமாறு நாட்டவரும் காணியுடையாரும் காணியுடைய அரையரும் கோயிலாரிடம் திருநாமத்துக் காணியாக அளித்தனர். இத்தீயநேரிக்கான எல்லைகளாகக் கண்ணங்குடிப் பெருவழி, வெண்ணெய்மங்கலம், பழங்குடி, அரையர்குறிச்சிச்செய் ஆகியன அமைந்தன. இந்நிலத்திற்கான கடமை, குடிமை இரண்டையும் கொடையாளர்கள் அளிப்பதென்றும் வேலியால் தூணிப்பதக்கு மாக்கலக் கடமையாகக் கோயிலார் இறுப்பதென்றும் ஊர்மகன்மை, சிற்றாயம் ஆகிய இரண்டு வரிகளும் இறைவனுக்கானவை என் றும் முடிவானது. வளம்பக்குடி வாழ் விசையாலாய முத்தரையன் நாற்பத்தெண்ணாயிரப் பிள்ளை திருக்கோயிலுக்குத் தெற்கில் திருமடை விளாகத்திருந்த கோயில் பணியாளர்களின் மாண்போக நிலங்களுக்கு மாற்றாகத் தாம் சண்டேசுவர விலையில் பெற்ற நிலத்தொகுதியை அளித்தார். அதில் ஒருவேலி நிலம் இறையிலியாக்கப்பட்டு கௌதமன் சம்பந்தப்பெருமானுக்கும் தாழியான அம்மி ரனபூஷணநம்பிக்கும் திருமஞ்சனப்புறமாக அளிக்கப்பட்டது. இருவரும் நாளும் தலைக்கு இருதூணி கொள்ளும் குடம் இரண்டினால் இறைவனை முழுக்காட்டக் காவிரி நீர் கொணர்ந்தளிக்க வேண்டும். இது போன்றதொரு திருமஞ்சனப்புறம் முன்பே அளிக்கப்பெற்று நாளும் தூணி கொள்ளும் குடத்தால் ஒரு குடம் காவிரி நீர் அளித்துவந்த தேவன் ஆண்டவரும் தொடர்ந்து அப்பணி செய்ய முத்தரையர் இடமளித்தார். வல்லம் அரசரின் மகன் கம்பயதேவர் தம் ஜீவிதமான கடையக்குடியைக் கம்பரசநல்லூர் எனப் பெயரிட்டு தாம் நெடுங்களம் கோயிலில் அமைத்திருந்த கம்பராசன் சந்திக் கட்டளைக்குத் திருநாமத்துக்காணியாக சர்வமானியமாக அளித்தார். முதலியார் என அழைக்கப்பட்ட மடத்தலைவருக்கான மடப்புறமாகவும் இவ்வூர் அமைந்தது. பொ. கா. 1267இல் பதிவான ஹொய்சள அரசர் வீரராமநாதர் காலக் கல்வெட்டு நெடுங்களம் கோயில் அமுதுபடி, விஞ்சனம், பணியாளர் ஊதியம், திருப்பணி ஆகியவற்றிற்காக அரியலூரைச் சேர்ந்த குற்றமறிஞ்சான் வணிகைப்புரந்தரர் 770 கலம் நெல்லளித்த தகவலையும் அதற்குக் கைம்மாறாக இறைத்திருமுன் புரந்தரர் வந்த சிறுகாலங்களில் திருச்சின்னம் பணிமாறியதையும் தெரிவிக்கிறது. விருப்பண்ண உடையார் ஆட்சிக்காலமான 1384இல் பொன்னம்பலச் சொக்கர்நாயன் பாண்டியதரையர், சேந்தப்பிள்ளை குருகுலராயர், நச்சினார்க்கினியர் சூரியதேவர், பூமர்சேந்தர், திருநெல்வேலியுடைய குருகுலராயர் தவப்பெருமாள், நாயகர் திருமாணிக்க மலை உடையார், அழகப்பிள்ளையார் வில்லவராயர் கூத்தப்பெருமாள், திருப்பேந்தரான திருநெல்வேலியுடையார், பாண்டிகுலாசநி விழுப்பரையர் முதலியார் நாயனார், மழவதரையர் முதலியார் நாயனார், அடைஞ்சியூர் விக்கிரமர், மன்றுளாடும் பெருமாள் மழவதரையர் ஆகிய பன்னிருவரும் மெய்கண்டதேவ நாயனார் சந்தானத்துச் செங்கமலப் பொற்பாத நாயனார் அடிமைத்திறத்துச் சாய்க்குடி நச்சினார்க்கினியார் நாயகரான ஆளுடைத்தேவநாயனாருக்குத் தாடன்பாடியான நித்தமணநல்லூர் நிலம் 132 மா திருநாமத்துக்காணியாக பிரீதிதானப் பரிவர்த்தனையில் அளித்தனர். இந்நிலம் நெடுங்களநாயனார் திருச்சுற்றிலுள்ள திருமுன்னைத் திருப்பணி செய்து இறைவனை எழுந்தருளச் செய்வதற்காக அளிக்கப்பட்டது. 1501இல் இம்மடி தம்மயதேவ மகாராயர் ஆட்சிக்காலத்தில் நரசாநாயக்கர் தட்சிணசமுத்திராதிபதி ஐய்யன் சோமயவீரமராசர் கிளியூர்நாட்டு வடபுறக்குடியை வீரமரசநல்லூர் எனப் பெயர் மாற்றி ஊரிலுள்ள நன்செய், புன்செய், நத்தம், செய்த்தலை, திடல், தோட்டம், மாவடை, மரவடை என அனைத்தும் உட்பட மகபூசைத் திருப்பணிக்கும் இறைவனின் அர்த்தசாமக்கட்டளைக்குமாகத் தலையாரி திம்மநாயக்கரிடம் சர்வமானியமாக அளித்தார். நிலவருவாய் கொண்டு தலையாரி அறக்கட்டளையை நிறைவேற்றுமாறு ஆவணம் அமைந்தது. அறத்தை நிறைவேற்றாவிடில் குருவதை செய்த பாவம் பெறுவதோடு, எரிவாய் நரகம் போவார் என்று ஆவணம் எச்சரிக்கிறது. 1503இல் ஆவுடைநயினார் பகாமடத்துச் சாமந்தனார் இறைவனுக்குத் தம் சந்தியாக ஒரு சந்தியில் அமுது, பெரும்பூசைத் திருப்பணி, திருநாள் ஆகியவை நிகழ்த்த வங்காரமான தேவராய னேரியை சர்வமானியமாக அளித்தார். அதில் முன்பு திருமலைச் சாமந்தனார் மடப்புறமாக அளித்த நிலப்பகுதியும் அடங்கும். சாம்பயராயர் காரியத்துக்குக் கர்த்தரான வடமலையப்பமுதலி மகனான சுப்பிரமணியமுதலி இறைவழிபாட்டிற்கு நிலக்கொடையளித்தமை ஆங்காங்கே சிதைந்துள்ள விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலக் கல்வெட்டால் தெரியவருகிறது. ஸ்ரீமதிபுறக்குடிப்பள்ளி கனகசேனன் அவ்வூர் வீரன் வசம் 100 ஈழக்காசுகள் தந்து அதன் வழிக் கிடைத்த 200 கலம் நெல்லால் அவ்வூர்ச் சித்திரைத் திருவிழாவில் தேவர்பூசை, ரிஷிபூசை முதலியன நிகழ்த்துமாறு செய்தார். கோயிலின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ள 9 கல்வெட்டுத் துண்டுகளும் இறைவழிபாட்டுச் செலவினங்கள் குறித்தும் அவற்றைச் சந்திக்கத் தரப்பட்ட நிலத்தின் எல்லைகள் குறித்தும் பேசுகின்றன. எழுத்தமைதி உள்ளீடு கொண்டு இவற்றைச் சோழர் காலக் கல்வெட்டுகளின் துண்டாடப்பட்ட பகுதிகளாகக் கொள்ளலாம். - வளரும் |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |