http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 168
இதழ் 168 [ ஃபிப்ரவரி 2023 ] இந்த இதழில்.. In this Issue.. |
விமானம் பாதங்களுடனான கண்டம், பெருவாஜனம் பெற்ற துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி கொண்டெழும் இறைவன் விமானம் மூன்று பத்திகளாக முன்னிழுக்கப்பட்டுள்ளது. தாய்ச்சுவரிலிருந்து சற்று முன்தள்ளியுள்ள கர்ணபத்திகளினும் நன்கு முன்தள்ளியுள்ள சாலைப்பத்தி கம்பீரமாக அமைந்துள்ளது. சதுரபாதத்தின் (18 செ. மீ. - 18 செ. மீ.) மீதெழும் எண்முக அரைத்தூண்கள் கர்ணபத்திகளைத் தழுவ, சாலைப்பத்திகளை இந்திரகாந்த அரைத்தூண்கள் அணைத்துள்ளன. சிதைவின் காரணமாகச் சாலைப்பத்தித் தூண்கள் சில எண்முகம் போல் காட்சிதரினும் உற்றுநோக்கின் அவற்றின் மெய்வடிவு விளக்கம் பெறும். இவ்விருவகைத் தூண்களுமே மாலைத்தொங்கல், தாமரைக்கட்டுக் கொண்டிருந்தபோதும் அவற்றில், வடபுறத் தூண்கள் சிலவற்றில் மட்டும் சிற்பச்செதுக்கல்களைக் காணமுடிகிறது. தொங்கல்களில் கொடிக்கருக்குகள், பூப்பதக்கங்களுடன் மானுடர்களும் இடம்பெற்றுள்ளனர். ஓங்கிய வாளும் கேடயமுமாய்க் கரண்டமகுடப் போர்வீரர் ஒரு தொங்கலில் காட்சிதர, எதிர்த்தொங்கலில் வில்வளைத்து அம்பெய்கிறார் மற்றொரு வீரர். அவரின் இருபுறத்தும் கவரிகள். கதை மேல் ஊன்றியுள்ள வலக்கை பதாகமாக, கணுக்கால் வரையில் ஆடை அணிந்துள்ள ஆடவரின் இடக்கை கடியவலம்பிதமாக உள்ளது. மற்றொரு தொங்கலில் இருகைகளிலும் பிடித்த கத்தி போன்ற கருவியுடன் விரையும் வீரர். தொங்கலுக்கு மேலுள்ள கட்டின் சதுரங்களில் பலவாய்ப் பறவைகள். ஒன்று இரு நந்திகள் பெற்றுள்ளது. மற்றொரு சதுரம் இரு கரண்டமகுடர்களைக் கொண்டுள்ளது. ஒருவர் நேராகவும் மற்றொருவர் தலைகீழாகவும் காட்டப்பட்டுள்ளனர். நேர்நிற்பவர் இருகைகளையும் உயர்த்த, மற்றவரின் கைகள் சிதைந்துள்ளன. தூண் மேலுறுப்புகள் அனைத்தும் கருக்கணிகள் பெற, சாலை, கோட்ட அணைவுத் தூண்கள் பலகைக்குக் கீழ் பாலி கொண்டுள்ளன. பிற தூண்களில் அழகிய தாமரை இதழ்விரித்துள்ளது. மேலுள்ள வீரகண்டம், குளவும் பட்டையும் பெற்ற தரங்கப் போதிகைகள் வழிக் கூரையுறுப்புகள் தாங்க, வலபியில் பூதவரி. கபோதத்தில் சிம்மமுகத் தலைப்புடன் அழகிய கொடிக்கருக்குப் பரவல் பெற்ற கூடுவளைவுகள். பல கூடுகள் கந்தருவத் தலைகள், பூப்பதக்கங்கள், நடைபயிலும் விலங்குகள் கொள்ள, சில வெறுமையாக உள்ளன. எழிலார்ந்த கோணப்பட்டங்களும் சந்திரமண்டலமும் விளங்கும் கபோதத்தின் மேல் எடுப்பான பூமிதேசம். சுவர்ப்பஞ்சரங்கள் பத்திகளுக்கு இடைப்பட்ட தாய்ச்சுவரை நிறைத்துள்ள சுவர்ப் பஞ்சரங்களின் இரண்டு எண்முக அரைத்தூண்களுமே பிற தூண்கள் போலத் தாங்குதளக் கண்டபாதத்திலிருந்து எழுவதுடன், மேற்கம்பின் மேல் சதுரபாதம் காட்டி வளர்கின்றன. அணைவுத் தூண்கள் போலவே தாமரையுடன் பொலியும் இப்பஞ்சரத்தூண்கள் விரிகோணப் போதிகைகளால் கூரையுறுப்புகள் தாங்க, கபோதத்தில் இரு கூடுவளைவுகள். மேலே பூமிதேசம், இரு சிறு நான்முக அரைத்தூண்கள் அணைத்த கிரீவகோட்டம், கொடிக்கருக்கு அலங்கரிப்புடன் பேரளவிலான கூடுவளைவு, அதன் சிம்மமுகத் தலைப்பு என நிறையும் இச்சுவர்ப்பஞ்சரங்கள் பாதங்களில் சிற்பங்களும் சில கூடுவளைவுகளில் கந்தருவத்தலைகளும் பெற்றுள்ளன. பூதவரியை இடையிட்டு விமான வலபியில் நிறையும் பஞ்சரத் தலைப்புகளின் இருபுறத்தும் பக்கத்திற்கொன்றாய் வலபிப் பூதம். கோட்டங்கள் சாலைப்பத்திகள் தெற்கு, மேற்கு, வடக்கு முத்திசைகளிலும் சதுரபாதத்தின் மீதெழும் சட்டத்தலை உருளைஅரைத்தூண்கள் தழுவும் கோட்டங்கள் பெற்றுள்ளன. தூண்களின் வீரகண்டம் கூரையுறுப்புகள் தாங்க, அழகிய மகரதோரணம் கோட்டங்களைத் தலைப்பிட்டுள்ளது. தெற்குக் கோட்டம் ஆலமர்அண்ணல் கொள்ள, மேற்கில் சங்கரநாராயணர். வடக்கில் நான்முகன். ஆலமர்அண்ணல் கோட்டத்தின் முன்னுள்ள முன்றில் மேடையின் விளிம்பில் இரு முச்சதுர இருகட்டுத் தூண்கள். கிழக்குப் பார்வையிலுள்ள மேடைக்கான படிகளின் தென்முகப் பக்கச்சுவரில் தாவும் வேழயாளி செதுக்கப்பட்டுள்ளது. அதன் துளைக்கையே சுவரின் வளைமுகப் பிடிமானமாக உருவகிக்கப்பட்டுள்ளது. கோட்டச் சிற்பங்கள் முகமண்டபத் தென்கோட்டத்தில் மண்டையோடு முகப்பணியாகத் தொங்கல்களும் வளையங்களும் பெற்ற சடைமகுடம், சரப்பளி, பெருமுத்துமாலை, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், தாள்செறி, மிதியடி பெற்றவராய் நேர்ப்பார்வையிலுள்ள பிச்சையுகக்கும் பெம்மானின் வல முன் கை மானுக்குப் புல்லளிக்க, இட முன் கையில் தலையோடு. வலச்செவியில் பனையோலைக் குண்டலமும் இடச்செவியில் மகரகுண்டலமும் அணிந்து ஆடையற்றவராய்க் காட்சிதரும் அவரது பின்கைகளில் தமருகம், கவரி. இறைவனின் இடையில் படமெடுத்த பாம்பு சுற்றியுள்ளது. இடப்புறம் பிச்சைப் பாத்திரத்தைத் தலையில் சுமந்தபடி நடைபயிலும் பூதத்தின் இடையில் சிற்றாடை. சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், தாள்செறி அணிந்துள்ள அதன் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். இக்கோட்ட மகரதோரணத்தின் கீழ்வளைவில் பக்கத்திற்கொருவர் ஒரு கை நெகிழ்த்தி ஒரு கையால் போற்றுமாறு சதுர ஆவுடையாரும் பேருளைப் பாணமுமாய் லிங்கத்திருமேனி அமைய, இருபுறத்தும் குத்துவிளக்குகள். மேலே குடையும் கவரிகளும். தோரண நெற்றிப்பொட்டில் சிவபெருமான் கறிக்கால் மேல் சுகாசனத்தில் உள்ளார். சடைமகுடமும் சிற்றாடையுமாயுள்ள அவரது பின்கைகளில் மழு, மான். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை தொடையில். விமானத் தென்கோட்டத்தில் சிரஸ்திரகச் சுருள்களுடனான சடைப்பாரம், சவடி, முத்துமாலை, சரப்பளி, முப்புரிநூல், தோள், கை வளைகள், தோள்மாலை, தாள்செறி, இடைக்கட்டுடனான சிற்றாடையென வீராசனத்திலுள்ள இறைவனின் வலப்பாதம் கீழுள்ள முயலகன் தலை மேல். இறைவனின் இடச்செவி நீள்செவியாக வலச்செவியில் பனையோலைக் குண்டலம். பின்கைகளில் அக்கமாலை, தீச்சுடர். வல முன் கை சின் முத்திரை காட்ட, சுவடியேந்திய இட முன் கை தொடையில். வலக்கையில் பாம்புடன் பனையோலைக் குண்டலங்களும் சிற்றாடையுமாய் விளங்கும் முயலகனின் வலப்புறம் இரண்டு புலிகள். அண்ணலின் பின் கிளைவிரிக்கும் மரத்தின் நடுப்பொந்தில் ஆந்தை. கிளைகளில் வலப்புறம் அணில். இடப்புறம் பல்லி, பாம்பு. வலப்புறக் கீழ்க் கிளையொன்றில் இறைவனின் திருநீற்றுப்பையான பொக்கணம். இறைவனின் வலப்புறத்தே தனித்துக் காட்டப்பட்டுள்ள அர்த்தபத்மாசன முனிவர் சடைமகுடம், தாடி, மீசை, இடையாடையுடன் இடக்கையில் பாத்திரமேந்தி, வலக்கையில் காக்கும் குறிப்புக் காட்டுகிறார். கோட்டத்தின் கீழ்ப்பகுதியில் பதிக்கப் பெற்றுள்ள தனிக்கல்லில் இரண்டு மான்கள். மேற்குக் கோட்ட சங்கரநாராயணர் தலையின் வலப்புறம் சடைமகுடமும் இடப்புறம் கிரீடமகுடமும் கொண்டுள்ளார். மகரகுண்டலங்கள், சரப்பளி, பெருமுத்துமாலை, முப்புரிநூல், உதரபந்தம், தோள்மாலை, தோள், கை வளைகள் பெற்றுள்ள அவரது இடையின் வலப்பகுதியில் சிற்றாடை. இடப்பகுதியில் பட்டாடை. வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க இட முன் கையைக் கடியவலம்பிதமாக்கியுள்ள இறைவனின் பின்கைகளில் வலப்புறம் மழு. இடப்புறம் பூவிதழ்களால் அலங்கரிக்கப்பட்ட சங்கு. மகரதோரணத்தில் லலிதாசனத்திலுள்ள பிள்ளையாரின் இருபுறமும் குத்துவிளக்குகள், கவரிகள். கரண்டமகுடம், இடைக்கட்டுடனான சிற்றாடை, தோள், கை வளைகள் பெற்றுள்ள அவரது பின்கைகளில் பாசம், அங்குசம். வலம்புரியரான அவரது முன்கைகளில் தந்தம், மோதகம். வடக்குக் கோட்டத்தில் சடைமகுடம், மகரகுண்டலங்கள், முத்துமாலை, சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், குறங்குசெறியும் பெருமுத்துக்கச்சும் இடையிருத்தும் இடைக்கட்டுடனான பட்டாடை பெற்றுப் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகையுடன் தாமரையில் காட்சிதரும் நான்முகனின் முன்கைகள் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும். மகரதோரணத்தில் இடப் பின் கையில் கவரியுடன் வல முன் கையால் மானுக்குப் புல்லளித்தவாறு நடைபயிலும் பிச்சையேற்கும் அண்ணல். அவரது வலப் பின் கையில் தமருகம். நெகிழ்ந்துள்ள இட முன் கைப் பொருள் தலையோடாகலாம். இறைவனுக்கு முன்னால் தலையில் பாத்திரம் சுமந்து நடக்கும் பூதம். முகமண்டப வடக்குக் கோட்ட மகிடாசுரமர்த்தினி எருமைத்தலை பொறித்த உயரமான தளத்தின் மீது சமபங்கத்தில் உள்ளார். கரண்டமகுடம், சரப்பளி, மகரகுண்டலங்கள், தோள்மாலை, தோள், கடக, கை வளைகள், மார்புக்கச்சு, சுவர்ண வைகாக்ஷம், சிம்மமுக அரைக்கச்சு இருத்தும் இடைக்கட்டுடனான பட்டாடை பெற்றுள்ள அம்மையின் பின்கைகளில் சங்கு, சக்கரம். முன்கைகள் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும். சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களின் மகரதோரணங்களில் இடம்பெறாத அரிய படப்பிடிப்பு இக்கோட்ட மகரதோரணக் கீழ்வளைவில் காட்சியாகிறது. கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, இடையில் கத்தி, பட்டாடை என விளங்கும் வாலி கருடாசனத்தில் வலப்புறம் பூச்செண்டுடன் விளங்கும் வேசரலிங்கத்தை வழிபடுகிறார். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, பட்டாடையுடன் மூன்று முகங்களும் பல கைகளுமாய் வாலியின் பின்னால் இடந்திரும்பி லலிதாசனத்திலுள்ள ராவணனின் பார்வை வாலியின் செயலை நோட்டமிடும் மெய்ப்பாட்டில்.தோரணத்தின் கீழ்ப்பகுதியில் வலப்புறம் உத்குடியிலுள்ள குரங்கு வலக்கையைத் தளத்தின் மீதிருத்தி, இடக்கையை முழங்கால்மீது நெகிழவிட்டுள்ளது. தோரணத்தின் இடப்புறம் முகில்களிலிருந்து வெளிப்படும் தொடையளவினரான வானவர் வலக்கையால் போற்றி, இடக்கையை மார்பருகே பதாகமாக்கியுள்ளார். தோரண நெற்றிப்பொட்டில் அர்த்தபத்மாசனத்திலுள்ள திருமகளின் பின்கைகளில் மலர்கள். கரண்டமகுடம் முத்துமாலை, பட்டாடை பெற்றுள்ள அம்மையின் முன் கைகளுள் ஒன்று காக்கும் குறிப்புக் காட்ட, மற்றொன்று தொடையில். வலபிப் பூதவரி பிற சோழர் கோயில்களில் காணுமாறு போலவே மங்கலத்துப் பூதவரியும் வலபியில் தொடரான பூதங்களையும் வலபி மடிப்புகளில் ஆலிலைக்கண்ணன், பள்ளி கொண்ட பெண், அமர்நந்திகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வலபித் திருப்பங்களில் யாளி, சிங்கமுகங்கள். தென்புற வலபி மடிப்பில் முடிகள் பறக்க ஒரு கை தளத்தில் ஊன்ற, மற்றொரு கையை முகத்திற்குத் தாங்கலாக்கி, ஒரு கால் நீட்டி, ஒரு கால் மடக்கி குப்புறப்படுத்துள்ள பூதத்தின் கால்களுக்கிடையில் மற்றொரு உருவம் எதிர்ப் பார்வையாகக் கைகளைத் தாங்கலாக்கிப் படுத்துள்ளது. அதே தென்புறத்தில் மற்றொரு வலபி மடிப்பில் இடக்கையைப் படுக்கையில் கிடத்தி, வலக்கையைத் தோளரு கொண்டு கால்களைக் குறுக்கீடு செய்து படுக்கையில் தலை உயர்த்தி இடஒருக்கணிப்பில் படுத்திருக்கும் அழகியின் இடையில் பட்டாடை. பூதங்கள் பெரிய அளவினவாய்ப் பெரும்பாலும் குத்துக்கால் அமர்வில் உள்ளன. ஓரிரண்டே லலிதாசனத்தில் காணப்படும் இப்பூதவரியில் அனைத்துப் பூதங்களும் இயங்கு நிலையில் உள்ளன. சடைமகுடம், விரிசடை, சடைப்பாரம், பெருங்கொண்டை எனப் பலவகையான தலையலங்காரமும் சவடி, சரப்பளி, முத்துமாலை, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம் என அணிவகைகளும் கொண்டுள்ள அவற்றுள் பெரும்பாலன பனையோலைக் குண்டலங்கள் பெற்றுள்ளன. ஆடல்தோற்றத்தில் சிலவும் குறும்புகள் நிகழ்த்துவனவாய்ச் சிலவும் உணர்வு வயப்பட்டனவாய்ச் சிலவும் காட்சிதரும் இவ்வரியில் முகமண்டபக் கிழக்குத்தொடர் சிறப்பிடம் பெறுகிறது. கயிற்றில் கட்டித் தோளிலிருந்து தொங்கும் மத்தளத்தை ஒரு பூதம் முழக்க, இருபூதங்கள் உடுக்கையை மார்போடு அணைத்து அதன் கயிற்றுப் புரிக்குள் கை நுழைத்துத் தாளங்களை வயப்படுத்தி இயக்குகின்றன. மற்றொரு பூதத்தின் கைகளில் செண்டுதாளங்கள். இவ்விசைக்கு வலக்கையைப் பதாகத்திலிருத்தி, இடக்கையை அர்த்தரேசிதத்தில் வீசி ஆடும் பெண்பூதத்தின் மார்பில் சுவர்ணவைகாக்ஷம். தாடி, மீசையுடன் தோற்றம் காட்டும் இரண்டு பூதங்களில் ஒன்று பத்திமைக் குறிப்பில் வாய்ப்பொத்தி நிற்க, மற்றொன்று கைத்தாளமிடுகிறது. இரண்டு பூதங்கள் தலைகீழாக நின்றவாறு காட்சிகளை நோட்டமிடுகின்றன. நெறித்த புருவங்கள், புடைத்த விழிகள், கோரைப்பற்களென வயிற்றிலும் ஒரு முகம் கொண்டு காட்சிதரும் இருமுகப் பூதத்தைக் கண்ட மிரட்சியில் கண்களைக் கசக்கிக் கதறுகிறது மற்றொரும் பூதம். பிறப்புறுப்பை வாத்தொன்று பிடித்திழுக்க, வலித்துன்பத்தால் அலறுகிறது மற்றொரு பூதம். கீழ்த்தள ஆரம் கீழ்த்தள பூமிதேசத்தின் மேல் வேதிகையும் கர்ணகூடங்கள், சாலைகள், ஆரச்சுவர் என விளங்கும் ஆரமும் அமைய, மேலே இரண்டாம் தளம். ஆரச்சாலைகளில் தெற்கில் சிவபெருமானும் உமையும். சுகாசனத்தில் இறைவனின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்பிலிருக்க, பின்கைகள் சின்முத்திரையிலும் மழுவேந்தியும் உள்ளன. உமையின் வலக்கையில் மலர். இடக்கை அருள்முத்திரையில். மேற்கில் சுகாசனத்தில் நரசிம்மர். அவரது இடத்தொடையில் அமர்ந்துள்ள தேவி வலக்கையில் மலரேந்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டுள்ள நரசிம்மரின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை இறைவியை அணைத்துள்ளது. வடக்குச் சாலையில் தாமரையில் அர்த்தபத்மாசனத்திலுள்ள நான்முகனின் இரு புறத்துள்ள தேவியர் ஒருகையில் மலருடன் மற்றொரு கையை நெகிழ்த்திக் காட்சிதர, இறைவனின் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை. பின்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். கிழக்குச் சாலை வெறுமையாக அமைய, கர்ணகூடங்களில் எண்திசைக் காவலர்கள். ஆரச்சுவரில் வடக்கிலும் தெற்கிலும் சாலையின் இருபுறத்தும் பக்கத்திற்கிருவராய் வணங்கிய கைகளுடன் அர்த்தபத்மாசன முனிவர்கள். மேற்கு ஆரச்சுவரில் தென்புறம் வீராசனத்தில் குழலூதும் கண்ணனும் வடபுறம் குழலிசையில் மயங்கிய பசுக்களுடன் மரத்தடியில் ஆனாயநாயனாரும் காட்சிதர, கிழக்கு ஆரச்சுவர் சுதையுருவங்களின்றி வெறுமையாக உள்ளது. இரண்டாம் தளம் கீழ்த்தள ஆரத்தின் பின்னெழும் உயரக்குறுக்கமான இரண்டாம் தளச்சுவர்த் திருப்பங்களை நான்முக அரைத்தூண்கள் தழுவ, சாலைப்பத்தி சற்றே முன்தள்ளியுள்ளது. தூண்களின் மேலுள்ள போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, வலபி வெறுமையாக உள்ளது. கபோதம் திசைக்கு நான்கு மேலோட்டமான கூடுவளைவுகளுடன் அமைய, பூமிதேசம், வேதிகை. தளக்கூரையைத் தாங்குவார் போலத் திசைக்கோர் ஆணும் பெண்ணும். கிரீவம், சிகரம் இரண்டாம் தளக்கூரையின் நான்கு மூலைகளிலும் கருடாசனத்திலுள்ள பூதர்கள் ஒரு கையை முழங்கால் மீதிருத்தி, ஒரு கையால் போற்ற, அவர்தம் இருபுறத்தும் அமர்நந்திகள். எண்முகமாக உள்ள கிரீவசுவரைச் சிறிய நான்முக அரைத்தூண்கள் தழுவ, மேலே கூரையுறுப்புகள். கிரீவகோட்டங்களில் தெற்கில் உத்குடியில் ஆலமர்அண்ணலும் மேற்கில் பாம்பிருக்கையில் வீராசனத்தில் விஷ்ணுவும் வடக்கில் தாமரையில் அர்த்தபத்மாசன நான்முகனும் அமைய, கிழக்கில் பிள்ளையாருடன் சிவபெருமானும் உமையும். ஆலமர்அண்ணலின் பாதம் பாம்புடன் படுத்துள்ள முயலகன் மீது. அவர் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை முழங்கால் மீது. பின்கைகளில் தமருகம், தீச்சுடர். இறைவனின் இருபுறத்தும் பக்கத்திற்கொருவராய்த் தாடி, மீசையுடன் அர்த்த பத்மாசன முனிவர். ஐந்துதலைகளுடன் படம் விரித்திருக்கும் பாம்பிருக்கையில் வைகுந்தராயுள்ள விஷ்ணுவின் இருபுறத்தும் தேவியர். இறைவனின் இட முன் கை உருள்பெருந்தடி மேலமர, வல முன் கை காக்கும் குறிப்பில். பின்கைகளில் சங்கு, சக்கரம். தேவியர் ஒரு கையை முழங்கால் மீதிருத்தி, மற்றொரு கையால் விஷ்ணுவைத் தழுவியுள்ளனர். சாலையர் போலவே காட்சிதரும் கிரீவ நான்முகனின் இருபுறத்துள்ள தேவியர் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ளனர். வல, இட ஒருக்கணிப்பிலுள்ள அவர்தம் ஒரு கை முழங்கால்மீது படர, மற்றொரு கையில் மலர். கிழக்கில் கால்களைத் தொங்கவிட்டமர்ந்துள்ள சிவபெருமானின் பின்கைகளில் மான், மழு. வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை அருகிலுள்ள உமையைத் தழுவியுள்ளது. இலேசான இடஒருக்கணிப்பிலுள்ள உமையின் மடியிலுள்ள வலக்கை மீது இடக்கை. இறைவனின் வலப்புறமுள்ள பிள்ளையார் துளைக்கையால் சிவபெருமானை வருடியவாறே அன்னையைக் கடைக்கண்களால் பார்க்கிறார். அவரது வல முன் கையில் மோதகம். பின்கையில் அங்குசம். மண்டபங்கள் விமானத்தின் முன்னுள்ள முகமண்டபம் விமானம் ஒத்த கட்டமைப்பில் ஆனால், பத்திப்பிரிப்பும் சுவர்ப்பஞ்சரங்களுமின்றித் தெற்கிலும் வடக்கிலும் கோட்டங்கள் பெற்று, தென்கோட்டத்தில் பிச்சையேற்கும் பெம்மானும் வடக்குக் கோட்டத்தில் மகிடாசுரமர்த்தினியும் கொண்டுள்ளது. இதன் சாலைப்பத்தி அணைவுத் தூண்கள் விமானம் போலன்றி எண்முகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னுள்ள பெருமண்டபம் முகமண்டப அமைப்பிலேயே கட்டமைக்கப் பெற்றிருந்தாலும் அதன் சுவர் நான்முக அரைத்தூண்களால் தழுவப் பெற்றுள்ளது. போதிகைகள் முகமண்டப அமைப்பிலின்றித் தரங்க வெட்டுப் போதிகைகளாய்க் கூரை தாங்க, வலபி வெறுமை யாக உள்ளது. வடக்கில் போதிகைகளோ, கூரையுறுப்புகளோ அற்ற சுவர். கபோதமற்ற அதன் கூரை மேல் மழைநீர் வடிகால் குழாய்கள். இப்பெருமண்டபம் கிழக்கிலும் தெற்கிலும் வாயில்கள் பெற்றிருந்தபோதும் கிழக்கு வாயிலே முதன்மை வாயிலாய்த் துளைக்கைப் பிடிச்சுவருடன் படிகள் பெற்று விளங்குகிறது. தெற்கு வாயில் அளவில் சிறியதாய் படிகளின்றி அமைய, வாயிலின் வலப்புறத் தூணொன்றில் வலக்கையில் கேடயம் மாட்டிய ஆடவர் சிற்பம். அவரது இடப்புறம் கத்தியொன்று நிறுத்தப்பட்டுள்ளது. (தொடரும்) |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |