http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 168
இதழ் 168 [ ஃபிப்ரவரி 2023 ] இந்த இதழில்.. In this Issue.. |
பாடல் 27: ஊற்றுநீர் அன்ன தூய இதயம் மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் みかの原 わきて流るる いづみ川 いつみきとてか 恋しかるらむ கனா எழுத்துருக்களில் みかのはら わきてながるる いづみがは いつみきとてか こひしかるらむ ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் கனேசுகே காலம்: கி.பி. 877-933. ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த இவர் மூன்றாம் நிலை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். 10ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் தவிர்க்க முடியாத இடம் இவருக்கு உண்டு. புலவர் ட்சுராயுக்கி தொகுத்த காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். ட்சுராயுக்கியின் நெருங்கிய நண்பரும்கூட. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக கொசென்ஷூ தொகுப்பில் பல பாடல்களும் கனேசுகேஷூ எனப்படும் தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கிறது. கொசென்ஷூ தொகுப்பின் 1102வது பாடல் ஹெய்கேவின் கதைகள் என்ற புதினத்தில் நேரடியாக இடம்பெற்றுள்ளது. எல்லா விஷயங்களிலும் தெளிவாகச் சிந்திக்கும் தந்தைக்குத் தனது மகன் விஷயத்தில் மட்டும் அன்பு கண்ணை மறைத்தது என்ற புகழ்பெற்ற கவிதைதான் அது. கென்ஜியின் கதை புதினத்தை எழுதிய முராசாகி இவரது கொள்ளுப்பேத்தி ஆவார். இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் மிகா சமவெளியின் அருகில்தான் இவர் வசித்து வந்திருக்கிறார். இரு வெவ்வேறு காலகட்டங்களில் தலைநகர்களாக இருந்த நராவையும் கியோத்தோவையும் பிரிக்கும் கமோ ஆற்றின் கரையில்தான் இச்சமவெளி அமைந்துள்ளது. பாடுபொருள்: காதலைப் போற்றும் கள்ளங்கபடமற்ற இதயம் பாடலின் பொருள்: மிகா சமவெளியை இரண்டாகப் பிரித்துப் பாயும் (ஊற்றெடுக்கும்) இசுமி நதியைப் போன்ற எனது தூய இதயம் இதுவரை சந்தித்தே இராத (செவிவழியாக மட்டுமே கேள்விப்பட்ட) உன்னை எண்ணியே ஏங்குகிறது. இத்தொகுப்பில் இரட்டுற மொழிதல் நிரம்பிய இன்னொரு காதல் பாடல். ஒருவகையில் பார்த்தால் சொற்பொருள் பின்வருநிலையணியாகவும் இப்பாடலைக் கருதலாம். இரண்டு இடங்களில் சிலேடை பயின்று வருகிறது. முன்பொரு பாடலில் கூறியதுபோல எழுதும் விதத்தில் மாறுபட்டாலும் வாசிப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 分ける (வகேரு) என்றால் பிரித்தல் என்று பொருள். 湧ける (வகேரு) என்றால் ஊற்றெடுத்தல் என்று பொருள். இசுமி நதி மிகா சமவெளியில் ஊற்றெடுக்கிறது என்றும் மிகா சமவெளியின் நடுவில் பாய்ந்து இரண்டாகப் பிரிக்கிறது என்றும் இருவேறாகப் பொருள் கொள்ளலாம். கான்ஜி எழுத்துருவைப் பயன்படுத்தி இருந்தால் ஏதாவதொரு பொருள் மட்டுமே அமையும் வண்ணம் இருக்கும் என்பதால் 'வ' என்ற எழுத்தைக் கனா எழுத்துருவில் (わ) எழுதிப் படிப்போரின் தேர்வுக்கு விட்டிருக்கிறார் ஆசிரியர். 3வது அடியில் நீரூற்று என்பதைக் குறிக்கும் இசுமி என்பதை いづみ என்று கனா எழுத்துருவிலும் 泉 என்று கான்ஜி எழுத்துருவிலும் எழுதலாம். 4வது அடியில் வரும் いつ என்றால் எப்போது. み(見) என்றால் பார்த்தல். இரண்டையும் சேர்த்தால் எப்போது பார்த்தோம் என்று பொருள்படும். இரண்டையும் எதுகையாகப் பயன்படுத்த வேண்டி 泉 என்று கான்ஜியில் எழுதாமல் கனாவிலேயே எழுதியிருக்கிறார். மிகா சமவெளியை இரண்டாகப் பிரித்துப் பாய்கிறது என்பதைக் குறிக்க 川 (ஆறு) என்ற சொல்லையும் இசுமியுடன் சேர்த்து விளையாடியிருக்கிறார். எப்போது பார்த்தோம் என்ற பதத்துக்கு இருவகையாகப் பொருள்கொள்கிறார்கள் உரையாசிரியர்கள். இதுவரை சந்தித்ததே இல்லை என்றும் கொள்ளலாம். பார்த்தோமா என்றே நினைவேயில்லை என்றும் கொள்ளலாம். பார்க்காமலே காதல்வயப்பட்டதைத்தான் பெரும்பாலான உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். வெண்பா: ஊற்றெடுத்து மண்பிளக்கும் தூயநீராய்க் காதலின் காற்றடித்து மெய்சிலிர்த் தூனுருகி - மாற்றில்லா மெல்லியள் கண்டேனோ கேட்டேனோ என்றறியா தெண்ணியே ஏங்கும் மனது (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |