http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[186 Issues]
[1832 Articles]
Home About US Temples Facebook
Issue No. 186

இதழ் 186
[ அக்டோபர் 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

திருமலை மலைக்கொழுந்தீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
கீழையூர் மாடக்கோயில்
Krishna – The Master Strategist and Statesman
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 8
ஜப்பானியப் பழங்குறுநூறு – பின்னணி - 2
இதழ் எண். 186 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு – பின்னணி - 2
ச. கமலக்கண்ணன்

தனிமை

காதலின் பிரிவால் ஏற்படும் தனிமையும் முதுமையால் ஏற்படும் தனிமையும் இத்தொகுப்பின் பல செய்யுள்களில் குறிப்பிடப்படுகின்றன. இணையைப் பிரிந்து அழுகுரல் எழுப்பும் மானின் தனிமைகூடத் “தனிமையின் வலியறிவார் யார்?” என்ற 5ஆவது செய்யுளில் சொல்லப்படுகிறது. பிரிந்து போன தன் துணையை மீண்டும் சேரமாட்டோமா என அழும் ஆண்மானின் குரலைத் தனிமையில் ஏங்குபவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் எனப் புலவர் உரைக்கிறார்.

பொதுவாகவே தனிமை கொடிது. அதுவும் குளிரில் தனிமை அதைவிடக் கொடிது. “குளிரில் தனிமை கொடிது” எனும் 28ஆவது செய்யுளில் மலைக்கிராமம் பொதுவாகவே தனிமை நிறைந்ததாகவே இருப்பினும் பனிக்காலம் வந்துவிட்டால் மனிதர்களின் வரத்து மட்டுமன்றி மரங்களின் இலைகளும் இவ்விடத்தை நீங்கி விடுகின்றன என்று மலையில் குளிர்காலத் தனிமையை எடுத்துரைக்கிறார் புலவர்.

முதுமை நெருங்க நெருங்க நெருங்கியவர்கள் ஒவ்வொருவராக இவ்வுலகை விட்டு நீங்குவதைப் பார்த்துக்கொண்டே உயிருடன் இருப்பது கொடிதிலும் கொடிது. “நீண்ட வாழ்வே சாபமோ?” எனும் 34ஆவது செய்யுள், நண்பர் எனக் கடைசியாக இருந்தவரும் இறந்துபோக, அப்போது இயற்றப்பட்ட கையறுநிலைப் பாடலாகும். தொடர்ந்து பிரிவையே பார்த்தவர்களுக்கு அந்தத் துன்பமும் ஒரு கட்டத்தில் இல்லையென்று ஆகும் நிலையை இச்செய்யுள் படிப்போர்க்குக் கடத்துகிறது.

காதல்பிரிவும் முதுமையும் மட்டுமன்றிக் கணவரின் வருகைக்காகக் காத்திருக்கும் மனைவியின் தனிமையும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. இரவு முழுவதும் உங்களுக்காகக் காத்திருந்த என் தனிமை வேதனையை இந்த அறை மட்டுமே அறியும். உங்களுக்கு எங்கே புரியப்போகிறது? என “கொடிது கொடிது தனிமை கொடிது!” எனும் 53ஆவது செய்யுள் பகர்கிறது.

அந்நாளில் புத்தமதத் துறவிகள் பிரார்த்தனையின்மூலம் நோய்களைக் குணப்படுத்துவதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் ஒரு பகுதியாகப் பல ஆண்டுகள் தொடர்ந்து மனிதர்களையே காணக்கூடாது. இத்தகைய தனிமையும் இத்தொகுப்பில் இடம்பெறுகிறது. அடர்ந்த வனத்துக்குள் அத்தனிமையைப் போக்கும் விதமாக மலர் ஒன்று புத்துணர்ச்சி அளிக்கும் காட்சியை “எனக்கெனவே மலர்ந்தாயோ?” என்ற 66ஆவது செய்யுள் படம்பிடிக்கிறது.

மனிதர்களுக்கு மட்டுமன்றி ஊருக்கும் ஏற்பட்ட தனிமையை “ஊருக்கும் தனிமை துயரமே!” எனும் 94ஆவது செய்யுள் குறிப்பிடுகிறது. ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குத் தலைநகர் மாற்றப்படும்போது பழைய தலைநகர் களையிழந்து போவது இச்செய்யுளில் கூறப்படுகிறது.

66ஆவது செய்யுளில் தனிமைக்கு மலர் துணையாக வந்ததுபோல் “விழியிலிருந்து நினைவுக்கு” எனும் 68ஆவது செய்யுளில் தனிமைக்கு நிலவு துணையாக வருகிறது. கண்பார்வை குறைந்துகொண்டே வருவதால் வாழ்வு இனி நரகமாகத்தான் இருக்கும் என்று வருந்தி, தனிமையில் வாழ்வதற்குத் துணையாக இருக்கும் அந்நிலவையும் காணும் வாய்ப்பு விரைவில் பறிபோகுமே! என்ற கவலையை வெளிப்படுத்துகிறார் புலவர்.

கனவு

நம் அகப்பாடல்களைப் போலவே, ஜப்பானிய இலக்கியங்களிலும் கனவு என்பது வருமுன் உரைக்கும் கருவியாகக் கருதப்பட்டு வந்திருப்பதைப் பல செய்யுள்களில் காணலாம்.

பேரரசர் சுதொகுவின் இடங்கைப் பிரிவு மெய்க்காவல் படையில் அதிகாரியாக இருந்த சாய்க்யோ என்பவர் துறவறம் பூண்டதற்குப் பின்னால் ஒரு சுவையான நிகழ்வு உண்டு. “அழச்சொன்னாயோ நிலவே?” எனும் 86ஆவது செய்யுளின் ஆசிரியர் இவர். ஒருநாள் பேரரசருடன் நந்தவனத்தில் உலா வந்தபோது ஒரு பறவை அங்குமிங்கும் பறந்தபடி அங்கிருந்த செர்ரிப்பூக்களின் இதழ்களைச் சிதறடித்துக்கொண்டிருந்தது. அதைக்கண்டு கோபமுற்ற பேரரசர் இவரிடம் பறவையை விரட்டச் சொன்னார். இவர் தனது கைவிசிறியால் குறிபார்த்து அடித்துப் பறவையை வீழ்த்தினார். பின்னர் வீட்டுக்குத் திரும்பியதும் இவரது மனைவி தான் ஒரு கெட்டகனவைக் கண்டதாகவும் கனவில் தான் ஒரு பறவையாக மாறியதாகவும் அதை அவர் கொன்றுவிட்டதாகவும் கூறினார். இதைக்கேட்டுத் துயருற்று அப்போதே (22ம் வயதில்) குடும்பத்தையும் மனைவியையும் விட்டுவிட்டுத் துறவறம் மேற்கொண்டுவிட்டார்.

தனது செய்யுள்களை ஓர் இலக்கியத் தொகுப்பில் சேர்த்ததற்காக நண்பரின் கனவில் வந்து ஒரு புலவர் நன்றி சொன்ன குறிப்பும் உள்ளது.

கனவு வந்ததா எனத் தெரியாவிட்டாலும் தன் மரணத்தை முன்கூட்டியே தெரிந்தது போன்ற ஒரு நிகழ்வு “காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு” எனும் 93ஆவது செய்யுளின் ஆசிரியர் சனேதொமோவின் வாழ்வில் நிகழ்ந்தது. ஷோகன் குடும்பத்தின் உட்பூசலால் தலை வெட்டப்பட்டு இறந்த சனேதொமொவுக்கு எப்படியோ தனது முடிவு தெரிந்திருந்தது. உளவுத்துறையின் தகவலாகக்கூட இருக்கலாம். அன்று ஹச்சிமாங்கு கோயிலுக்குச் செல்லும் முன்னர், தான் ஆசையாக வளர்த்த ப்ளம் மரத்துக்கு ஒரு பிரிவுபசாரக் கவிதை எழுதியிருக்கிறார். தன் வேலைக்காரன் ஒருவனுக்குத் தன் தலைமுடி ஒன்றைத் தன் ஞாபகமாக வைத்துக்கொள்ளுமாறு தந்திருக்கிறார். அன்று அவர் கொல்லப்பட்ட பிறகு தலையைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் இவர் தனது வேலைக்காரனுக்குக் கொடுத்த தலைமுடியை மட்டும் வைத்து கமாகுராவில் ஜுஃபுக்குஜி (Jufukuji) என்னும் இடத்தில் இவரது கல்லறை எழுப்பப்பட்டது.

மதங்கள், தத்துவங்கள், புராணங்கள்

ஜப்பான் ஒரு புராணக்கதைகள் நிரம்பிய நாடு. ஆனால் இத்தொகுப்பில் இரு செய்யுள்களில் மட்டும் புராணக்கதைகள் குறிப்பிடப்படுகின்றன. “தோகை உலரும் வரை” எனும் 2ஆவது செய்யுளில் ஒரு மீனவர்-தேவதைக் கதையும் “உறைபனி கூட்டும் அழகு” எனும் 6ஆவது செய்யுளில் “தனாபட்டா” (Tanabata) எனும் புராணக்கதையில் வரும் பாலம் ஒன்றும் உவமையாகக் கையாளப்பட்டுள்ளன.

சமகாலத்தில் நடந்த ஒரு புத்தமதப் பண்டிகையும் “பனித்துளியன்ன உறுதிமொழி” என்னும் 75ஆவது செய்யுளில் இடம்பெறுகிறது. நரா என்னுமிடத்திலிருந்த கொஃபுகுஜி என்ற கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் இலையுதிர்காலத்தில் யூய்மா என்றொரு திருவிழா நடைபெறும். இது மகாயான புத்தமதத்தின் விமலகீர்த்தி எனும் திருவிழாவாகும்.

இவைபோக, கீழ்க்கண்ட இரு செய்யுள்களைத் தவிர மதக்கருத்துகளோ தத்துவங்களோ இத்தொகுப்பில் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இயற்றிய ஆசிரியர்கள் தங்கள் வாழ்வில் புத்த மதத்தைக் கடைப்பிடித்துள்ளனர். 11 மதகுருமார்கள் இயற்றிய செய்யுள்களும்கூட இயற்கையையும் காதலையும் தனிமையையுமே பாடுபொருளாகக் கொண்டுள்ளன.

“பிறத்தலே இறத்தலின் முதல்படி” என்ற 10ஆவது செய்யுள் சுவையான கருத்தை உடையது. ஜப்பானியப் பவுத்தத்தின் ஜென் பிரிவில் எஷாஜோரி என்றொரு தத்துவம் உண்டு. ‘சந்திப்பு என்பதே பிரிவதற்காகத்தான்’ என்பதே இதன் பொருள். உலகின் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு முடிவு உண்டு. அந்த முடிவு அந்நிகழ்வு தொடங்கும்போதே உறுதிப்பட்டுவிடுகிறது என்று பொருள்பட உள்ளது. புத்தர் கூறிய ‘ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்பதுபோலப் ‘பிறத்தலே இறத்தலின் முதல்படி’ என்ற தத்துவம் அமைந்துள்ளது.

இயற்கை வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட ஷிண்ட்டோ மதத்தின் கருத்தையும் 24ஆவது செய்யுளான “செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை” குறிப்பிடுகிறது. கடவுள் செம்பட்டாலான உயர்ந்த ஆடையைவிட இயற்கையான மேப்பிள் மரத்துச் செவ்விலையை உயர்வாகக் கருதுவார் என்கிறது இச்செய்யுள்.

சீனப் பழங்கதைகளும் இத்தொகுப்பில் ஆங்காங்கே சுட்டப் பெறுகின்றன. “பொய்யால் அடையுந்தாழ்” எனும் 62ஆவது செய்யுளில் தலைவியின் இல்லத்திலிருந்து வெளியேறும் நோக்கில் விடிந்துவிட்டது எனக்கூறிப் புறப்பட்ட தலைவனை நோக்கிப் பாடுவதாக அமைந்த இச்செய்யுளில் பின்வரும் கதை உவமையாகக் கூறப்படுகிறது.

சீன இளவரசன் மெங்லியாங்ஜுன் க்யின் மாநிலத்துக்குள் நுழைந்ததால் தன் வீரர்களுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அடுத்தநாள் காலை விடிவதற்கு முன்பாகவே வீரர் ஒருவர் சேவலைப்போல் கூவவே, சுங்கச்சாவடியின் அதிகாரி விடிந்துவிட்டது என எண்ணிக் கதவைத் திறந்துவைக்கிறார். இளவரசனும் வீரர்களும் அதன்வழியே தப்பி விடுகின்றனர். தலைவி இதைச் சுட்டிக்காட்டி, விடிந்துவிட்டது என ஏமாற்றினால் சுங்கச்சாவடியின் கதவு வேண்டுமானால் திறக்கலாம் ஆனால் உங்கள் பொய்யால் என் உள்ளக்கதவு எப்போதும் திறக்கப் போவதில்லை என விடைகொடுத்து அனுப்புகிறாள்.

நம்பிக்கைகள், சடங்குகள்

இப்போதைய ஜப்பானில் பெரும்பாலும் இறை நம்பிக்கையற்றவர்களே அதிகம் என்றாலும் ஓரிருவர் நம்பிக்கை கொண்டிருப்பதுபோல் அக்காலத்திலும் இருந்திருக்கக்கூடும். இத்தொகுப்பின் 100 செய்யுள்களில் சில செய்யுள்களில் இறை நம்பிக்கை குறித்த குறிப்பு வருகிறது.

“இறை நின்று கொல்லுமோ?” என்ற 38ஆவது செய்யுளில் என்னை மறக்கவே மாட்டேன் எனக் கடவுளின் முன் உறுதிமொழி ஏற்றுவிட்டு இப்போது என்னை மறந்துவிட்டாயே, அக்கடவுளின் கோபம் உன்னை என்ன செய்யுமோ என்றே வருந்துகிறேன் எனக் காதலி வருந்துகிறாள்.

மேலே ஷிண்ட்டோ மதத்தைப் பற்றிக் குறிப்பிட்டதுபோல் செம்பட்டு இழையைவிட மேப்பிள் மரத்தின் செவ்விலை கடவுளுக்கு நெருக்கமானது என்ற செய்தி “செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை” என்ற 24ஆவது செய்யுளில் கூறப்படுகிறது.

“குயிலிசை போதுமே” எனும் 81ஆவது செய்யுளில் இடைக்கால ஜப்பானில் நிலவிவந்த ஒரு நம்பிக்கை குறிப்பிடப்படுகிறது. மே மாதங்களில் ஹொதொதொகிசு (Hototogisu) என்றொரு குயிலினம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வலசை வரும். மே மாதம் என்பது ஜப்பானில் வசந்தகாலம் முடிந்து கோடை தொடங்குவதற்குச் சற்று முன்னர் என்பதால் இக்குயிலின் முதல் கூவல் கோடையின் வரவை அறிவிப்பதற்கானது என்று ஜப்பானியர்கள் காத்திருப்பார்கள். இயற்கையைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்புப் பெற்ற காலத்தில் இருந்த இப்பழக்கம் இப்போது தொழில்நுட்ப யுகத்தில் காணாமல் போயிற்று. இந்தக் குயிலினத்தின் பெயரில் ஒரு ஹைக்கு மாத இதழ் இன்றும் ஜப்பானில் வெளியாகிக்கொண்டிருக்கிறது. 1897இல் தொடங்கப்பட்ட இதுதான் ஜப்பானில் நீண்டகாலமாக வெளிவரும் இலக்கிய இதழ்.

தமிழ்நாட்டு வரலாற்றுக் கூறுகளுடன் ஒப்புநோக்கத்தக்க இன்னொரு வழக்கம் வடக்கிருத்தல் போன்று குறிப்பிட்ட காலகட்டத்தில் உயிருடன் கல்லறைக்குள் அமர்வது. இத்தொகுப்பின் இரு ஆசிரியர்கள் (12ஆவது மற்றும் 95ஆவது) செய்யுள்களை இயற்றிய புத்தமதக் குருமார்கள் இவ்வாறு இறந்திருக்கிறார்கள்.

ஜப்பானியர்களின் மிசோகி எனும் குளியல்முறை இத்தொகுப்பின் மூலம் நமக்குத் தெரியவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30ம் தேதியும் டிசம்பர் 31ம் தேதியும் மிசோகி எனப்படும் குளியலை ஜப்பானியர்கள் மேற்கொள்வார்கள். ஆற்றில் மூழ்கிக் குளிப்பதாகவோ அல்லது சிறிதளவு நீரைத் தலையில் தெளித்துக் கொள்வதாகவோ அமையும் இது உடலை மட்டுமன்றிக் கடந்த ஆறு மாதங்களாக மனதில் சேர்ந்த அழுக்கையும் தூய்மைப் படுத்துவதாக நம்புகிறார்கள்.

மரணத்துக்குப் பின்பு

புத்தர் வைதீக மதத்துக்கு எதிராக அநாத்ம வாதத்தை முன்வைத்திருந்தாலும் ஜப்பானில் பரவியது மகாயான புத்தமதம் என்பதால் இறப்புக்குப் பிந்தைய வாழ்வில் மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.

“இறப்பினும் வாழினும் ஒந்தொடி கண்ணே!” எனும் 50ஆவது செய்யுளை இயற்றிய புலவர் யொஷிதகா தீவிரமாகப் புத்த மதத்தைப் பின்பற்றியவர். கி.பி 1119இல் இயற்றப்பட்ட ஒகாகமி என்ற நூலில் இவரது மரணத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது. தான் இறந்தபிறகு எரியூட்டவேண்டாம் எனத் தன் தாயிடம் கடைசி ஆசையாகக் கேட்டுக்கொண்டார். ஏனெனில் மீண்டும் உயிர்பெற்றுத் தாமரைச் சூத்திரம் நூலைப் படித்துப் புத்தரின் பாதங்களை அடைய விரும்பினார். ஆனால் இவரது தாய் இதைப் பொருட்படுத்தாமல் யொஷிதகாவின் உடலை எரியூட்டிவிட்டார். எனவே அடிக்கடி இவரது தாயின் கனவில் தோன்றிக் கடிந்து கொண்டிருந்தார். பின்னர் வானுலகில் இவர் நிரந்தரமாக இருந்ததாக அந்நூல் குறிப்பிடுகிறது.

பெண்களுக்கு விலக்கப்பட்டவை

உலகின் எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானவை என்ற கூற்று ஜப்பானிய மதங்களிலும் சான்றுகளைக் கொண்டுள்ளது. “எனக்கெனவே மலர்ந்தாயோ?” எனும் 66ஆவது செய்யுளில் பிரார்த்தனைகள் மூலம் மனிதர்களின் துயரங்களைப் போக்க ஒரு கடுமையான பயிற்சிமுறை ஜப்பானில் பின்பற்றப்பட்டு வந்த செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி பல ஆண்டுகள் கானகத்தில் மனிதர்களையே காணாது தனிமையில் இப்பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். இப்பயிற்சியை மேற்கொள்ளப் பெண்களுக்கு அனுமதியில்லை.

அதேபோலச் சீனமொழியைப் பயில்வதிலிருந்தும் பெண்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். “நிலவென மறைந்தது நீயா?” எனும் 57ஆவது செய்யுளின் ஆசிரியர் முராசகி ஷிக்கிபு சீனமொழியைக் கற்க விரும்பினார். ஆனால் அவருக்குக் கற்றுத்தர எந்த ஆசிரியரும் முன்வரவில்லை. அக்காலத்தில் சீனமொழியானது அரண்மனையில் அதிகாரிகளாகப் போகும் ஆண்களுக்கு மட்டுமே ஆசிரியர்களை வைத்துக் கற்றுத்தரப்பட்டது. ஷிக்கிபுவின் அண்ணன் சீனத்தைப் பயில்வதற்காக இவரது தந்தை ஏற்பாடு செய்திருந்தார். வகுப்புகள் நடக்கும்போது அறைக்கு வெளியே அமர்ந்து கவனித்துத் தானே கற்று இலக்கியங்களை வாசிக்கும் அளவுக்கு முன்னேறினார்.

(முற்றும்)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.