http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[186 Issues]
[1832 Articles]
Home About US Temples Facebook
Issue No. 186

இதழ் 186
[ அக்டோபர் 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

திருமலை மலைக்கொழுந்தீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
கீழையூர் மாடக்கோயில்
Krishna – The Master Strategist and Statesman
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 8
ஜப்பானியப் பழங்குறுநூறு – பின்னணி - 2
இதழ் எண். 186 > இலக்கியச் சுவை
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 8
மு. சுப்புலட்சுமி

ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com
வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி

அப்பர்- சமயப் பற்றுடன் ஒரு பகுத்தறிவாளர்!

இறை நம்பிக்கையுடைய எவரும் எய்தக் கருதுவது இறையருள் என்றாலும், இறையருளால் பெறவிரும்புபவற்றின் பட்டியலுக்கே முன்னுரிமை என்பதை மறுக்கவியலாது. இறைவன்மேல் தீரா அன்பும், அவனன்றி வேறு சிந்தனையில்லா வாழ்வும், அவனருளால் அவனையுணரும் வேட்கையும், அவ்வுணர்வால் தம்முள் இறைவனைக் காணும் தெளிவும் அடியவர்களின் மேன்மை சொல்லும் பத்திமை நெறி.

அவ்வகையில், இறைவனைப் பலகுலத்து மக்களிடமிருந்து விலக்கிநிறுத்தி வணங்கும் வேத வேள்வியாளரின் பக்திநெறியினின்று வேறுபட்டுத் தெரிகிறது சிந்தையில் சிவனை நிறுத்திய நாயன்மார் பத்திமைநெறி. இறைப்பற்றோடு சமூகப் பற்றாளர்களாகவும் நாயன்மார் வாழ்ந்ததால்தான், அவர்கள் படைத்த இலக்கியங்கள் இன்றைய சமூகத்தோடும் பொருந்தி நோக்கத் தக்கவையாக ஒளிர்கின்றன.

அவர்களுள்ளும், சைவத்தைத் தமிழ்மண்ணில் புதியதோர் நெறியாக அல்லாது, தமிழ்ப் பண்பாட்டின் வேர்களோடு பிணைந்த வாழ்வியல் நெறியாகவும் பொருந்தச் செய்ததில் அப்பர் தனித்து நிற்கிறார். இறைவனைத் தலைவனாகவும் தம்மை அடிமையாகவும் நினைந்து நெக்குருகிய நாவுக்கரசர், மக்களில் ஒருவராகத் தம்மை நடத்திக் கொண்டது அவருடைய நற்பண்பால் மட்டுமல்ல, சமூகப் பற்றாலும்தான்.

இறைவனையும் அன்பு செய்யுமடியாரையும் அன்பரென்ற ஒற்றைச் சொல்லால் விளித்து அன்பே சைவத்தின் சாரம் என்று புலப்படுத்தியவர் அப்பர். துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழுது ஆடிப்பாடும் அன்பைத் தவிர வேறொன்றைப் பொருளாக இறைவன் கொள்வதில்லை என்று திருவையாற்றில் அன்பே சிவமென்று வலியுறுத்துகிறார். ஆரூர் அறநெறியில், வீரமும், தாரமும், அரவின் ஆரமும் பூண்ட பெருமான், தமக்கன்பு பட்டவர் பாரத்தையும் தாமே ஏற்றுக் கொள்பவர் என்றுரைக்கிறார்.

அன்பனாகவும் பண்பினனாகவும் பாட்டுடைத் தலைவன் ஒருவனிருக்க, அவனைப் பாடும் போக்கில் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டும் சங்ககாலத் தமிழ்ப் படைப்பாளர்களின் மரபை அப்பரும் கைக்கொண்டது அவருடைய இலக்கியப் பயிற்சி எனலாம். ஆயினும், சிவனே முதற்பொருளான பத்திமை இலக்கியத்தில், அன்பே சிவமான இறையன்பில் தோய்ந்த உணர்வலைகளையும் மீறி, மக்கள்- அவர்தம் வாழ்வு- பண்புநலன்- சமூக நெறிகள்- பிற்போக்குக் கட்டுப்பாடுகளைக் கருப்பொருளாக வைத்து அப்பர் பாடுவது சிந்தித்தற்குரியது. அடியார்களில் முன்னவராகவோ மூத்தவராகவோ தம்மையெண்ணாது, மக்கள் சமூகத்தில் ஒருவராக அவர்களுக்கிடையில் நின்று அமர்ந்து அளவளாவி கூர்ந்து நோக்கி அவர்களுக்காகச் சிந்தித்ததன் பயனால் உயர்ந்தவர் அப்பர் எனும் பகுத்தறிவாளர்.

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் எத்தன்மைத்தாயினும், மெய்பொருள் காண்பதே அறிவு என்ற வள்ளுவரின் வாக்கைப் பின்பற்றிய நாவுக்கரசரின் தேர்ந்த சிந்தனையால், சமூகப் பற்றாளராக மட்டுமல்லாமல் சிலவேளைகளில் சமூகப் போராளியாகவும் அவர் மிளிர்கிறார். அதன் தொடர்ச்சியாகவே, அன்பு மட்டுமல்லாது அறமும் அறிவும், நெறியும் நீதியும், கல்வியும் தகவும் தழைத்தோங்கும் சமூகத்தை உருவாக்க முயன்ற சமூக ஆர்வலராகச் சிரிக்கிறார் அப்பர்.

அவர் காலத்தே மக்களிடையில் வழக்கிலிருந்த பிரிவினைகள், பாகுபாடுகள், சமயத்தின் பெயரால் திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், தேவையற்ற சடங்குகளைக் கடுமையாகச் சாடிய மறுமலர்ச்சியாளராகப் பாடல்கள் அவரைக் காட்டுகின்றன. இறைவனின் பெயரால் உருவான சாத்திரங்களும் கோட்பாடுகளும் மனிதத்தை வீழ்த்துமெனில், அவற்றைக் களையெடுத்திட ஒலித்த முதல் பத்திமைக் குரல் அப்பருடையதுதான். இன்று இருபத்தோராம் நூற்றாண்டுப் பகுத்தறிவுவாதிகள் எதிர்ப்பவற்றைத் திருநீறணிந்தபடிச் சாடிச் சினந்த உள்ளம் அவர் உள்ளம்.

நெறியுடன் வாழ்வதே சைவம்

சைவ நெறி என்று பத்திமையுலகம் பற்றியதையும் போற்றியதையும் மாற்றி, நெறியுடன் வாழ்வதே சைவம் என்ற நிலைக்கு இறைவன் வாழும் இதயத்தை மேன்மைப்படுத்திய பெருமையும் அப்பரையே சாரும். அந்நெறியே, தீவினை நாடாது அனைவரையும் சமமாகக் கருதத் தூண்டி, சமூகத்தை நல்வழியில் செலுத்திய நெறி.

அன்பே சிவமென்ற திருமூலர் திருமந்திரத்தை அறமே சிவமென்று மாற்றியமைத்தவர் நாவுக்கரசர். முற்போக்குப் பாதையில் மக்கள் பயணிப்பதைப் பெருவேட்கையாகக் கொண்ட அவர், அறமென்ற ஒற்றைக் குடையின்கீழ் எண்ணிலடங்கா வாழ்வியல் அறிவுரைகளை வழங்குகிறார். வயதில் மூத்தவராகவோ நல்லாசிரியராகவோ அப்பர் அறவுரைகளை வழங்கியிருப்பின், கேட்டும் படித்தும் மக்கள் நகர்ந்திருப்பர். கல்லடிப்பட்ட மரமாக, சொல்லடி தாங்கிய சான்றோராக, இறைவனையுணர்ந்த அடியாராக, பிறருக்கு உரைத்தவற்றைத் தாமே பழகிய பண்பாளராக, பெருமையின் பெருக்கத்தில் பணிவும் சோதனைகள் தாக்கியபோது உயர்வும் காட்டிய சீராளராக அவர் மக்களிடையே தோளணைத்து உரையாடியதால், நாவுக்கரசரின் சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை மக்கள் மனமொன்றிக் கேட்டனர்.

அப்பர் சுட்டி வலியுறுத்திய அறங்களைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துப் பார்த்தால்தான் முழுமையாகச் சுவைக்கமுடியும். எனவே, அவர் பாடல்கள் காட்டும் நன்னெறிகள் மட்டும் இந்தப் பகுதியில் நோக்கப்படுகின்றன.

நன்னெறியே நமச்சிவாயம்

நாநவின்றேத்தும் ‘நமச்சிவாயம்’ ஞானமும் கல்வியும் தாமறிந்த வித்தையும் என்றாலும், இறைவனின் ஐந்தெழுத்து அருளுவதில் அப்பர் முன்னிலைப்படுத்துவது நன்னெறியையே - ‘நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே’ என்கிறார். நன்னெறி காட்டலை வீடுபேறு அருளல் என்றும் கொள்ளலாம். ஆனால், அவர்தம் பாடல்களை ஆழ்ந்து நோக்க, நன்னெறிகளென்று பெரிய பட்டியலையே அவர் வழங்கியிருப்பது புலப்படும்.

‘சொல்லார்ந்த சோற்றுத்துறையான் தொல்நரகம் நன்னெறியால் தூர்ப்பான்’ என்று, நரகத்தின் தீயதன்மையைத் தூய்மையாக்க இறைவனே நாடுவது நன்னெறியென்பதை போதிக்கிறார். தில்லையிலோ, “நெஞ்சத் தூய்மையுடன் உம்மை நினைக்கச் செய்யாது வஞ்சிக்கிறீரே,” என்று சிவனாரைக் குற்றம் சாட்டுகிறார் (நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ..).

“நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்,” என்று கேட்பவர், அதே பதிகத்தில் (05.090) நாணம் தவிர்க்க என்ன செய்யவேண்டுமென்று விடையுமளிக்கிறார்.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.
(05.090.09)

நெகிழ்ந்து நினைபவர் நெஞ்சுளே புகுந்து நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன், பூவும் நீரும் கொண்டு வழிபடும் பொய்ம்மையாளர் நாணுமாறு சிரித்து நிற்பாராம். தவறிழைத்து நாணமின்றி வாழ- பொய்ம்மையைத் தவிர்க்கச் சொன்னார்.


பொய்மை விடுத்து மெய்யைப் பற்றுதல்

பொய்ம்மை விடுத்து, மெய்யைப் பற்றுமாறு பல்வேறிடங்களில் உணர்த்துகிறார் நாவுக்கரசர். திருநல்லத்தில், ‘பொக்கம் பேசிப் பொழுது கழியாதே’, என்று அதே கருத்தை விதைக்கிறார். ஆவடுதுறை அரனை ‘மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை,’ என்று கூறி, பொய்யரைத் தவிர்க்கும் பணியை இறைவனுக்களிக்கிறார். திருநாகேச்சரத்தில் மேலும் தெளிவுபடுத்துகிறார்- தம்மை விரும்புவார்க்கு மெய்யானாகவும் விரும்பாதவர்க்குப் பொய்யானாகவும் விளங்குபவராம் இறைவன் (மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு; விரும்பாதவரும் பாவியவர்கட்கென்றும் பொய்யானை). வன்னியூர் ஈசன், ‘மெய்ம்மையால் நினைவார்கள்தம் வல்வினை தீர்ப்பர்’ என்று உறுதியளிக்கிறார்.

மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித்
தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே
(04.076.02)

எனும் பாடலில், பொதுவாகக் குறிக்கப்படும் சமயத் தேவைகளைவிடுத்து சிவகதிக்கான வழிகளாக நற்பண்புகளையே விரிவுபடுத்துகிறார் வாகீசர். நற்பண்புகள் பெருக்கிக் குறைகள் களைந்த செம்மை வாழ்வை இதைவிட எங்ஙனம் தெளிவுபடுத்துவது?

ஓர் ஏழாம் நூற்றாண்டு சமயப்பற்றாளரின் வாக்கிலிருந்து வரும் சமூக மேம்பாட்டு அறைக்கூவல்கள் இவை. அப்பர், பத்திமைக்காலத் தமிழகத்திற்குக் கிடைத்த முற்போக்குச் சிந்தனையாளர் என்பதில் ஐயமுண்டோ?

இவை, நன்னெறிக் கடலின் சிறுதுளிகளே. பொருந்தாப் பண்புகள் வேறு என்னென்ன?

கள்ளம் ஒழித்தல்

திருச்செம்பொன்பள்ளியில், உலகியல் வாழ்வே நன்றென்று கள்ளத்தை ஒழிக்காமல் வாழும் மக்களுக்கு மேம்பட்ட அறிவுரையொன்றை நல்குகிறார். செற்றமும் குரோதமும் நீக்கினால், இறைவன் ஒழுக்கமும் நோன்புமாக உடனிருப்பார் என்கிறார்.

ஞாலமு மறிய வேண்டில் நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான கள்ளத்தை யொழிய கில்லீர்
கோலமும் வேண்டா வார்வச் செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமுந் நோன்பு மாவார் திருச்செம்பொன் பள்ளி யாரே
(04.029.06)

பயனற்ற செயல்கள் தவிர்த்தல்

குடமூக்கிலோ, பயனற்ற செயல்களைச் செய்து வாழ்நாளைக் கழிக்காமலும் (பூத்தாடிக் கழியாதேநீர் பூமியீர்), மனம்விரும்பிய செயல்களையே செய்து காலத்தைக் கழிக்காமலும் (காமியஞ்செய்து காலங் கழியாதே), தீயிலாடும் சிவனாரின் திறத்தைச் சிந்தையுள் வைக்கப் பணிக்கிறார். தீதவை செய்து தீவினை வீழாதே என்றும் குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர் என்றும் அறிவுறுத்துகிறார் அப்பர்.



மனத்துக்கண் மாசிலன் ஆதல்

மனத்துக்கண் மாசிலனாதலே அறம் என்ற வள்ளுவர் வாக்கின்வழி, இறைவன் தமது ஞானவெப்பத்தினால் மனத்தின் மாசுகளைக் களைபவர் (வெப்பத் தின்மன மாசு விளக்கியவர்) என்று பொதுப் பதிகமொன்றில் (05.096) கூறுகிறார். கீழ்வேளூரில், ‘உள்புக்கென் மனத்து மாசு கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோ’ என்று உருகுகிறார்.

தனத்தினைத் தவிர்ந்து நின்று தம்மடி பரவு வார்க்கு
மனத்தினுண் மாசு தீர்ப்பார் மாமறைக் காட னாரே
(04.033.08)
மறைக்காட்டு மணாளரோ, செல்வங்களைத் தவிர்த்து அடிபரவும் பத்தர்களின் மனத்தின் மாசு தீர்ப்பவராம்.

தூயநெறி

ஆதியு மறிவு மாகி யறிவினுட் செறிவு மாகிச்
சோதியுட் சுடரு மாகித் தூநெறிக் கொருவ னாகி
(04.048.02)

நன்னெறியுடன் தீயபண்புகளைக் களைந்து மனத்துக்கண் மாசிலனாதல் உலகத்தோர் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வுநெறியென்று பலவாறாகச் சொன்னார் அப்பர். அடுத்து, இறைவனே தூய நெறியானவன் என்று சமூகம் சிறக்கும் வழியை இறைவன்மேலும் ஏத்தி வலியுறுத்தும் ஆசானாகிறார்.

சிரமஞ் சேரழல் தீவினை யாளரே… என்று கடின வாழ்வில் அழல்வோருக்கு நற்செய்தி வழங்குகிறார்- தானே நல்வழியானவன், தவமானவன், அத்தவத்தால் வரும் செயலும் அவனே; அவனைச் சேர தொல்லைகள் தீருமாம். மக்கள் நல்வழிகளையும் நற்பண்புகளையும் வளர்க்கும் திறத்தவராக வாழ்தலின் தேவையைத் தம் பாடல்கள்மூலம் விடாமல் ஒலிக்கச் செய்தவர் அப்பர்.

தருமந் தான்தவந் தான்தவத் தால்வரும்
கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே.
(05.097.21)

குற்றமற்றோர் ஆதல்

மக்கள் கூட்டத்தை அழைக்கும் நாவுக்கரசர், சிலபோது அன்பாகவும் அமைதியாகவும் சிலபோது பொறுமையிழந்து சினமுற்றும் வருத்தம் நிறைந்தும், சைவத்தைப் பற்றுமாறு எடுத்துரைக்கிறார். பலப்பல உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டாலும், குற்றமற்றவர் வாழும் சமூகத்தையே குடிகள் மனங்களில் பதியச் செய்கிறார்.

மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
இனிது சாலவு மேசற்ற வர்கட்கே .
(05.091.07)

நாவுக்கரசரின் நல்லுரைகள், அன்பாக அழைத்து ‘இங்கே வாருங்கள்.. ஒன்று சொல்கிறேன்,’ என்று கனிவுடன் திண்ணையில் அமர்ந்து பேசுவதுபோலவே படிப்போருக்குத் தோன்றும். பொற்கழல்கள் அணிந்த புனிதனான ஈசனெனும் கனி, குற்றமற்றவர்களுக்கு மிகவும் இனியது எனும் இப்பாடலில், இறைவன்மீது பேரன்பையும் மக்கள்மீதான பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறார்.

சிவனைச் சேருங்கள்! சிவனை வழிபடுங்கள்! சிவனுக்காய்த் தொண்டாற்றுங்கள்! சிவனடியாரைச் சிவனென்று போற்றிப் பணிசெய்யுங்கள்! என்றெல்லாம் சொன்ன அப்பர், அவரவர் நற்பண்புகளைப் பேணுவதும் நல்ல நெறிகளுடன் வாழ்வதும் இறைவழிபாட்டின் இன்றியமையாத் தகுதிகள் என்று ஆணித்தரமாக உரைக்கிறார். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நால்வழிகளையும் தாண்டி, அடிப்படை நற்பண்பை வலியுறுத்திய பத்திமைக்காலச் சமூகச் சீர்திருத்தவாதி அவர் என்பதற்கு அவர்தம் பாடல்களே சான்று.

நன்றி: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.