http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[186 Issues]
[1832 Articles]
Home About US Temples Facebook
Issue No. 186

இதழ் 186
[ அக்டோபர் 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

திருமலை மலைக்கொழுந்தீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
கீழையூர் மாடக்கோயில்
Krishna – The Master Strategist and Statesman
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 8
ஜப்பானியப் பழங்குறுநூறு – பின்னணி - 2
இதழ் எண். 186 > கலையும் ஆய்வும்
திருமலை மலைக்கொழுந்தீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 2
இரா.கலைக்கோவன், மு.நளினி

நிலவிற்பனை

பெரும்பாலான நிலவிற்பனை ஆவணங்கள் விற்பனைக்கு உள்ளாகும் நிலத்தின் உரிமையைக் கோயில் இறைவனுக்கோ அல்லது இறைவிக்கோ உறுதிசெய்து பயிரிடும் உரிமையை மட்டுமே நிலம் வாங்குவோருக்கு அளித்து எழுதப்பட்டுள்ளன. வடகளவழி நாட்டுப் புற்குழிக்கு வடபால் இருந்த சிறுமாணிக்கம் எனும் நிலத்துண்டைப் பயிரிடும் உரிமை கோயில் கணக்கர் பண்டாரிகளால் அளகைமாநகரைச் சேர்ந்த வேளான் ஆட்கொண்டான் இராசசிங்கபன்மன் இவர்கட்கு அறுபது சோழிய நற்பழங்காசுகளுக்கு விற்கப்பட்டது. நிலத்துண்டின் உரிமை சோமன் திருவுடையான் எழுந்தருளுவித்திருந்த திருக்காமக் கோட்ட நாச்சியாருக்கு அளிக்கப்பட்டிருந்தது.33

வரம்புகள் அழிந்து தரிசாசிக் காடு மண்டிய நிலையில் இருந்த நிலத்திற்கு வரி கட்டமுடியாத சூழலில் மன்னர் பராக்கிரம பாண்டியரின் ஐந்தாம் ஆட்சியாண்டின்போது, பொன்பற்றியைச் சேர்ந்த உய்யநின்றாடுவான் உலகுய்யவந்தானுக்கு, நாமனூர் ஊரார் இறையிலி நீர்நிலமாய் ஊர் ஈந்த காணியாகக் குளமும் குளப்பரப்பும் காலும் உட்பட வராகன் இராசிமராசன் குளிகைப் பணம் நாற்பதுக்கு அந்நிலத்தை விற்றனர். அதே நிலத்தை நான்காண்டுகளுக்குப் பிறகு ஏழகப் பெருமாளான பொய் சொல்லாதாருக்குக் காணி விலையாக இராசிமராசன் புள்ளி 480க்கு உய்யவந்தான் விற்றமையை மற்றொரு கல்வெட்டால் அறிகிறோம்.34

வடகளவழி நாட்டு பிரமதேயமான அதிசய பாண்டியநல்லூர் ஊராரிடம் குடிக்காடு ஒன்று விலைக்குப் பெறப்பட்டுத் திருமலைக் கோயிலுக்குக் கொடையளிக்கப்பட்டது. அந்த நிலத்தை வரியிலியாக்குமாறு அளகைமாநகரைச் சேர்ந்த மதலை அணிச்சான் கலிங்கத்தரையர் பரிந்துரைக்க, அரசர் குலசேகர பாண்டியர் குடிக்காட்டை இறையிலியாக்கினார்.35

'நாலுதிக்கும் வென்றான்' எனும் பெயரில் அமைந்த குடிக்காடு மலைமண்டலத்தைச் சேர்ந்த மத்தியகோட்டுப் பெருமாள் நாராயணனான திருநாராயணபன்மனுக்கு எழுக பெருமாள் கண்ணிறைஞ்ச பெருமாளான களவழி நாடாள்வாரால் விற்கப்பட்டது.36 அளகைமாநகர் ஊராரால் நீலகங்கரையர் மகள் மாணிக்காண்டாளுக்கு நிலத்துண்டொன்று இறையிலியாக விற்கப்பட்டது. இந்நிலத்தைப் பயிரிடும் உரிமை கோயிலிடம் இருந்தது.37

பெரியான் ஆண்டபிரானான திருவெண்காட்டு நங்கைக்குச் சிறுவேளங்குளமான திருஞானசம்பந்தநல்லூர் மேற்குக் குடிக்காடு, சந்தன்குடி, கோதைக்குடி, கீழுரான குடிக்காடு எனும் நிலத்துண்டுகள் களவழி நாடாள்வாரால் காராண்மையாகத் தரப்பட்டன. குடிநீங்காத் தேவதானமாகத் தரப்பட்ட இந்நிலப் பகுதிகளின் விளைவு ஒரு மா நிலத்துக்கு மூன்று கலம் நெல் கடமையாகவும் அந்தராயம் அஞ்சுமேனித் திரமமாகவும் திட்டமிடப்பட்டு, அவை கொண்டு இறைவனின் திருப்பள்ளியெழுச்சி, ஆண்டபிள்ளையார் திருப்படிமாற்று இவற்றிற்கான செலவினங்கள் நேர்செய்யப்பட்டன. நிலத்தின் உரிமை இறைவன் பெயரில் அமைந்தது.38

முதல் சடையவர்மர் குலசேகரர் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு நிலமளிப்பும் இதே களவழி நாடாள்வாரின் ஆணைப் படியே நிகழ்ந்தது. நாகன் சுந்தரனான உத்தமபாண்டிய மூவேந்த வேளான், அகிலாபரண மூவேந்த வேளான் எனும் இருவருக்கும் வண்ணான் ஏம்பலான ஸ்ரீகரண நல்லூரில் பயிரிடும் உரிமை அளிக்கப்பட்டது. நிலஉரிமை இறைவனுக்குத் தரப்பட்டது. வரிகள் நங்கைக்குத் திட்டமிட்டாற் போலவே அமைய, புன்செய்ப் போக வரி ஒரு கலம் விளைவுக்குக் குறுணி என்ற நிலையில் இவ்வரியினங்கள் இறைக்கோயிலின் திருப்படி மாற்று உள்ளிட்ட நிவந்தங்களுக்கு அளிக்கப்பட்டன.39

சடையவர்மர் குலசேகரர் கால மற்றொரு கல்வெட்டும் களவழி நாடாள்வார் ஓலை வழி அளித்த நிலம் பற்றிப் பேசுகிறது. பெருங்குடி எனும் ஊரில் ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தின் பயிரிடும் உரிமை பெற்றவரின் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. நிலஉரிமை கோயிலில் இருந்த திருமாளிகைப் பிள்ளையார் பெயரில் அமைந்தது. நிலத்தின் மீதான கடமை, அந்தராயம் இவை கோயிலுக்கு அளிக்கப்பட்டன. கடமை ஒரு மாவுக்கு ஐந்து கலமாகவும் தினை, வரகு பயிரிட்ட காலங்களில் இரண்டரைக் கலமாகவும் கொள்ளப்பட்டது.40

மாறவர்மர் விக்கிரம பாண்டியரின் காலத்தில் களவழி நாட்டுச் சிற்றரசராக இருந்த ஜெயங்கொண்டான் ஸ்ரீவல்லபன் களவழி நாடாள்வார், திருமலை ஜெயங்கொண்ட சோழப் பெருந்தெருவில் இருந்த திருப்பூவணம் உடையாருக்கு ஒரு மா அளவினதான, 'பிள்ளைச்சி வயக்கல்' எனும் திருத்தப்பட்ட நிலப்பகுதியை இறையிலித் தேவதானமாக விற்றார். திருமலைக் கோயிலில் பூவணத்தார் எழுந்தருளுவித்திருந்த திருச்சிற்றம்பல சேத்ரபாலப் பிள்ளையாருக்கான படையல், வழிபாடு இவற்றிற்கான செலவினங்களுக்கு இந்நிலவிளைவு துணைநின்றது.41

காகுத்தன் தேவராண்டார், அவர் தம்பி அமந்தான் இவர்கள் இருவருக்கும் ‘தமராக்கி’ எனும் பெயரிலமைந்த குடிக்காடு அறவிலைக்குக் களவழி நாடாள்வாரால் வழங்கப்பட்டது. நிலத்தை ஒற்றிவைக்கவும் விற்கவும் உரிமை தரப்பட்டதுடன், வரிகளைக் கோயிலுக்களிக்கவும் உத்தரவானது. அதன்படி ஒரு மா நிலத்துக்கு நான்கு கலம் விளைவு கடமையாகவும் அந்தராயம் ஐந்து மேனிக்கு ஒரு திரமமாகவும் அமைந்தன. புன்செய் விளைவில் கலத்திற்குக் குறுணியும் கோடைப்போகத்தில் வரகு இரண்டு கலமாகவும் தினை ஒரு கலமாகவும் தரப்பட்டன.42

முதல் சடையவர்மர் குலசேகரரின் ஐந்தாம் ஆட்சியாண்டில், காரிதேவனான மண்டலிகள் கம்பீரப்பிச்சருக்குத் திருஞானசம்பந்த நல்லூரென்றும் அறியப்பட்ட பாடகக்குளக் கீழ் முறியன் வயலில் பயிரிடும் உரிமை களவழி நாடாள்வாரால் அளிக்கப்பட்டது. திருமலைக் கோயில் தேவரடியாள் பெருமாள் திருமறை நாச்சியான திருஞானசம்பந்த நங்கை எழுந்தருளுவித்த திருஞானசம்பந்தர் படிமத்திற்குத் தேவதானமாக இந்நிலம் அமைந்தது. அதனால், இவ்வடியார் படிமத்திற்கான வழிபாடு, படையல் இவற்றிற்காகும் செலவினங்களைச் சந்திக்க விளைவிலிருந்து உரிய அளவு கம்பீரப்பிச்சரால் வழங்கப்பட்டது.43 அளகைமாநகர் உடையாரான களவழி நாடாள்வாரின் கணக்குப் பண்டாரிகள் தென்பறப்பு நாட்டு பிரமதேயமான இராஜேந்திரசோழச் சதுர்வேதி மங்கலத்திருந்த உய்யக்கொண்டான் சபாபதிக்கு அளகை மாநகர் மேற்கிலிருந்த காற்கரைக் குளத்தில் பயிர் செய்யும் உரிமையைக் கொடையாகத் தந்தனர். இந்நிலத்தின் உரிமை திருமலைக் கோயில் இறைவனின் திருமஞ்சன அறக்கட்டளையைச் சார்ந்ததாக அறிவிக்கப்பட்டது. திருமஞ்சனத்திற்கான நீர் சூரதேவன் என்று பெயரிடப்பட்டிருந்த நீர் நிலையில் இருந்து கொணரப்பட்டது.44

படையல், வழிபாடு

அளகைமாநகர் நாராயணன் காகுத்தன் ஸ்ரீராமதேவரின் மனைவி கனியகண்டன் சேமாழ்வி என்பார் திருமலை இறைவன், இறைவி, திருஅனந்தீசுவரத்து இறைவன், இறைவி, விநாயகர், சேத்ரபாலர் இவர்கட்கு விஷு இரண்டு, அயனம் இரண்டு, சிவராத்திரி, அமாவாசை பன்னிரண்டு, மார்கழித் திருவாதிரை ஆகிய முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு, திருவமுது செய்விக்க விழைந்து, சண்டேசுவர விலையில் சீராண்டானிடமிருந்து நிலம் ஒன்றைப் பெற்றுக் கோயிலுக்கு அளித்தார். சீராண்டான் தற்குறி என்பதால் விலையாவணத்தில் அவருக்குப் பதிலாகப் பூழியதரையன் கையெழுத்திட்டுள்ளார்.64

திருமலைக் கோயில் திருநடைமாளிகையில் தட்டோடு இட விரும்பிய கோயிலார் அதற்கான செலவுகளைச் சந்திக்கக் கோயில் சார்ந்த குளம் ஒன்றை மிழலைக் கூற்றத்துக் கீழ்க் கூற்றுப் பொதுவக்குடியைச் சேர்ந்த நீலகங்கரையன் தாயிலும் நல்ல பெருமாளான நரசிங்க தேவருக்குப் புதுக்குளிகைப் பணம் இருநூறுக்கு விற்றனர். விற்கப்பட்ட குளம், 'நாலு திக்கும் வென்றான்' பற்றில் இருந்த சோலை ஏரியான சுந்தரநல்லூராகும். இது உடைகுளமாய் இருந்ததால், சூழ இருந்த நிலங்கள் விளையாதிருந்தன. விற்கப்பட்ட குளப்பற்றிற்குக் கடமை, அந்தராயம், பொன்வரி, வினியோகம் இவை தீர்மானிக்கப்பட்டன. கடமை ஒரு மா நிலத்திற்குக் காலகண்டதேவனால் இரண்டு கலம் நெல் என அமைந்தது. அந்தராயம் திரமத்திற்கு இராசிப் பணம் ஒன்றாகவும் ஐப்பசிக் குறுவைக்கு ஒன்றே முக்கால் கலம் நெல்லும் ஆடிக் குறுவைக்கு ஒன்றரைக் கலம் நெல்லும் தினை, வரகு பயிர்கள் எனில் ஒன்றேகால் கலமும் நிர்ணயிக்கப்பட்டன.65

இக்கோயிலில் சோமன் திருவுடையான் எழுந்தருளுவித்திருந்த திருக்காமக்கோட்ட நாச்சியாருக்கான சாத்துபடிகளுக்காக வேளான் ஆட்கொண்டார், இராசசிங்கபன்மன் இவர்களுக்குக் களவழி நாடாள்வாரின் கணக்குப் பண்டாரிகளால் சிறுமாணிக்கம் எனும் பெயரிலமைந்த நிலத்துண்டு ஒன்று அறுபது சோழிய நற்பழங்காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.66

இறைவனுக்குத் திருமுழுக்காட்டச் சூரதேவன் என்னும் நீர் நிலையிலிருந்து நீர் எடுத்து வருவாரின் வாழ்வூதியத்திற்கான உரிமை நிலமாகவும் ஆடவல்லான் கூத்தனான குருகுலராயருக்குப் பயிர் செய்யும் உரிமை உடைய நிலமாகவும் களவழி நாடாள்வாரால் ஆடவல்லானுக்கு விற்பனை செய்யப்பட்ட புலிக்குட்டிநல்லூரின் நீர்நிலம், புன்செய் இவற்றிற்கான வரியினங்கள் தீர்மானிக்கப்பட்டன. அதன்படி, கடமை ஒருமா நிலத்திற்கு மூன்று கலம் நெல்லாகவும் அந்தராயம் முக்காலே அரைக்கால் திரமமாகவும் அமைந்தன. ஐப்பசிக் குறுவைக்கு மாக்கடமையில் ஒன்றேமுக்காலும் ஆடிக் குறுவையில் ஒன்றரையும் விளைவு வரகு எனில் ஒன்றரையும் எள், தினை எனில் ஒன்றே காலும் அமைந்தன. வினியோகம் ஒரு மாவிற்குத் தூணி நெல்லாகவும் புன்செய் விளைவில் அரைத் திரமமாகவும் விளங்கியது.67

சடையவர்மரான வீரபாண்டியரின் ஆட்சிக்காலத்தில், களவழி நாடாள்வாரான ஜெயங்கொண்டான் ஸ்ரீவல்லவன், அளகைமாநகர் ஜெயங்கொண்ட சோழப் பெருந்தெருவில் குடியிருந்த வணிகர் பட்டியுடையான் தில்லைவேந்தன் குப்பையான வீரபாண்டிய தென்னகோனுக்கு ஸ்ரீவல்லவநல்லூரைக் காராண்மைக் காணியாக அளிக்கும்படி அரசரை வேண்ட, மன்னரும் முன்னுடையார் ஜீவிதம் தவிர்த்து, ஊருக்கான கடமை, அந்தராயம் இவற்றைத் திருமலைக் கோயில் இறைவனின் நிவந்தங்களுக்கான முதலாக அளிக்குமாறு ஆணையிட்டு ஊரை அளித்தார். ஊர் நிலத்தின் மீதான கடமை ஒரு மாச் செய்க்கு மூன்று கலமாகவும் அந்தராயம் ஐஞ்சுமேனி ஒரு திரமமாகவும் அமைய, புன்செய்ப் போகத்தில் கலத்திற்குக் குறுணி விளைவு பெறப்பட்டது. பாண்டிய அரசாணைகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்பதை இக்கல்வெட்டு ஓரளவிற்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.68

முதல் சடையவர்மர் குலசேகரர் தம் நான்காம் ஆட்சியாண்டின்போது திருமலைக் கோயில் இறைவனின் நள்ளிரவுச் சந்திக்காக மூன்றரை மா நிலம் இறையிலித் தேவதானமாக அளித்தார். மண்டலிக் கம்பீரன் சந்தி என்றழைக்கப்பட்ட அச்சந்தியின்போது இறைவனுக்கு நாள் ஒன்றுக்கு அறுநாழி அரிசியில் திருவமுதும் விஞ்ஞனங்களும் படைக்கப்பட்டு, உரிய சாத்துபடிகளும் செய்யப்பட்டன. கொடையளிக்கப்பட்ட மூன்றரை மா நிலம் ஆதித்தன் வயக்கல், மேற்குத்தை நாற்றங்கால், சூரதேவ நாடாள்வான் பற்று நிலம், பெரியரையன் வயக்கல், கலியன் பெற்றான் தெற்குத்தை மேற்குத் துடவல், தச்சன் துடவல், புறையா விருத்தி நிலம் எனும் பல்வேறு நிலத் துண்டுகளை உள்ளடக்கியிருந்தது.69

குன்றத்தூரைச் சேர்ந்த அரும்பாக்கிழான் செங்கதிர்ச் செல்வன் கோயில் நாச்சியாருக்கான திருஅமுது இனங்களுக்காக நிலக்கொடை அளித்தார். இந்நிலத்தின் எல்லைகளைக் குறிக்கும்போது, மடப்புறம் ஒன்றும் ஸ்ரீராமதேவர் மனைவிக்கு விற்கப்பட்ட நிலத்துண்டும் சுட்டப்படுகின்றன.70 ஒருத்துவ நீக்கினானால் இறைவனுக்கான திருநாமத்துத் தேவதானமாக ஆற்றூர் அளிக்கப்பட்டது.71

விளக்குக்கொடை

ஆடவல்லான் ஆதித்ததேவனான பூழியதரையர் மாலை விளக்கு ஒன்று ஏற்றுவதற்காகச் சோழிய நற்பழங்காசுகள் ஐந்தினைக் கோயிலில் வழிபாடு நிகழ்த்திய முப்பது வட்டச் சிவஅந்தணர்களிடம் ஒப்புவித்தார். அளகைமாநகரைச் சேர்ந்த பெண்களில் காமாண்டிக் கூத்தியின் மகள் அஞ்சலான பெருமாள் இறைவனுக்கு மாலை விளக்கு ஒன்று ஏற்றுவதற்காக இரண்டு அச்சுகளைக் கோயில் சிவஅந்தணர்களிடம் தந்தார்.72 ஸ்ரீவல்லவனான வில்லவராயர் ஸ்ரீமாகேசுவர நல்லூரில் பயிரிடும் உரிமையைத் தமக்கு அளிக்குமாறும் அந்நிலத்தின் உரிமையை நந்தாவிளக்குப்புறமாக இறைவனுக்கு வழங்கு மாறும் வேண்டி, களவழி நாடாள்வாரிடம் விண்ணப்பிக்க, வேண்டுகோள் ஏற்கப்பட்டு நிலம் ஒதுக்கப்பட்டது. நிலத்திற்கான வரியினங்கள் விளைவிற்கு ஏற்பத் திட்டமிடப்பட்டு, கோயிலுக்கு அளக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இறைக் கோயிலில் மாலை விளக்கு ஒன்று ஏற்ற வாய்ப்பாகப் பஞ்சவன் மாதேவிப் பெருந்தெருவைச் சேர்ந்த தன்மதாவளத்தார் தங்கள் செக்கில் இருந்து நாளும் உரிய எண்ணெய் வழங்க ஒப்பினர். கல்வெட்டில் இச்செய்தி பாடலாகவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.73

சிறப்புச்செய்திகள்

சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியரின் பதினேழாம் ஆட்சியாண்டில் திருமலைக் கோயிலில் இருந்த ஐநூற்றுவன் திருக்காவணத்தில் கூடிய பல்வேறு வணிகப் பிரிவினரும் தாம் விற்கும் பொருள்களின் மீது குறிப்பட்ட அளவுத் தீர்வையினைத் திருமலைக் கோயில் இறைவனின் வழிபாடு, படையல் இவற்றிற்காக அளிப்பதெனத் தீர்மானித்தனர் வணிகக் குழுக்களின் பெயர்களையும் விற்பனைப் பொருட்களின் வகைகளையும் தெரிவிக்க வல்ல இக்கல்வெட்டுப் பெரிதும் சிதைந்துள்ளமையால் தேவையான தரவுகளைப் பெறக்கூடவில்லை.74









திருமலைக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ள இரண்டு மடங்களில் பிச்சாமடமும் ஒன்று. சடையவர்மர் பராக்கிரம பாண்டியர் ஆட்சிக்காலத்தில் இம்மடத்தின் தலைவராக பூமீசுவரமுடைய முதலியார் இருந்தார். மற்றொரு மடத்தின் தலைவராக ஞானதேவ முதலியார் விளங்கினார்.75

முதல் சடையவர்மர் குலசேகரரின் ஐந்தாம் ஆட்சியாண்டின் வைகாசித் திங்களில் அளகைமாநகர் சூரதேவ ஈசுவரமுடையார் கோயில் திருஞானசம்பந்தன் திருவெடுத்துக்கட்டியில் கூடிய பெரிய திருக்கூட்டத்துப் பதினெண் மண்டலத்து ஸ்ரீருத்ர, ஸ்ரீமாகேசுவரர்கள் அளகைமாநகரைச் சேர்ந்த ஆண்டபிரானான திருவெண்காட்டு நங்கை செய்த பல அருஞ்செயல்களை நினைவு கூர்ந்து, பாராட்டி, அவர் மகளான தேவரடியாள் பெருமாள் திருமறைநாச்சியான திருஞானசம்பந்த நங்கைக்குச் சில சிறப்பு உரிமைகளை வழங்கினர். அளகைமாநகர் சூரதேவர் கோயிலில் சண்டேசுவரரை நிறுவியதுடன், திருமலைக் கோயிலில் திருவாதிரை நாயனார், அவர் தேவியார் இவர்களையும் திருஞானசம்பந்தரையும் எழுந்தருளச் செய்து, திருநடைமாளிகையையும் அமைத்தவர் திருவெண்காட்டு நங்கை. நங்கையின் பணிகளுக்குப் பாராட்டாக அவர் மகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகளுள் சங்கு ஊதி, பேரிகை கொட்டிக் கொள்ளும் உரிமை குறிப்பிடத்தக்கதாகும்.76

பிற கோயில்கள்

அளகைமாநகரிலும் அதைச் சூழ்ந்திருந்த ஊர்களிலும் இருந்த பிற கோயில்களாகத் திருஅனந்தீசுவரம், பூமிசுவரம், கண்ணுடைய ஈசுவரம், ஸ்ரீவலஈசுவரம், சூரதேவ ஈசுவரம், ஐயனார் காற்குரை உடையார் கோயில் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சூரதேவ ஈசுவரமுடையார் கோயிலில் திருஞானசம்பந்தர் திருவெடுத்துக்கட்டி என்ற பெயரில் பெருமண்டபம் ஒன்று அமைந்திருந்தது. சூரதேவன் என்ற பெயரில் திருமஞ்சன நீர் நிலை ஒன்றும் இருந்துள்ளது.

கோயில் நிருவாகம்

குன்றத்தூர் நாயனார் கோயில், திருமலைப்பெருமாள் கோயில் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருக்கோயிலின் நிருவாகத்தை ருத்ரமாகேசுவரர்கள், தேவகன்மிகள், ஸ்ரீகாரியம், மாடாபத்தியம் எனும் அலுவலர்கள் மேற்கொண்டிருந்தனர். பொ. கா. 1194ல் திருவெண்காட்டுப் பிள்ளை இக்கோயில் ஸ்ரீகாரியமாக இருந்தார். விரதம் முடித்த பெருமாள், வீரபாண்டிய பிரமாதராயன், திருமலைப்பெருமாள், சுந்தரபாண்டிய பிரமாதராயன், புறப்பொன்னம்பட்டன், சத்திபட்டன், திருக்காளைச் சோழகோன் பிரமாதராயன், பேருடையான் மலைப்பெருமாள் இவர்கள் ருத்ர மாகேசுவரர்களாகவும் தேவகன்மிகளாகவும் அமைய, சொக்கனார் மாடாபத்தியமாக இருந்தார். திருவுண்ணாழிகைப் பிள்ளை, ஆண்டார் பெரிய தேவர் இருவரும் கோயில் வயிராகிகளாக இருந்தனர்.77

சோணாடு வழங்கிய சுந்தர பாண்டியர் காலத்தில் சித்தனான நித்தவினோத பட்டன், திருப்பூவண பட்டன், திருஏகம்பம் உடையான், கண்ணுடையான், உமைபாகன், சொக்கன், சேனை மீகாமபட்டன், அழகியான் திருவேகம்பமுடையான், குரவமுடையான் குன்றன் தேவர்பட்டனான சீவலபட்டன் இவர்கள் இக்கோயில் சிவஅந்தணர்களாகப் பணியாற்றினர். அதே காலத்தில் கோயில் கணக்குப் பண்டாரிகளாக ஏழக மீகாம பிரமமாராயன், பூழியதரையன், கச்சியராயன், வயிராதராயன், சுந்தர பாண்டிய மூவேந்த வேளான் இவர்கள் பணியாற்றினர்.78

சடையவர்மர் பராக்கிரம பாண்டியர் காலத்தில் கண்நிறைஞ்சான் விரதம் முடித்த பெருமாள், செல்லப் பிள்ளையான வீரபாண்டிய பிரமாதராயன், அணுக்கநம்பி, சித்த பட்டன், மயிலன் திருமலைப்பெருமாள், இராசநாராயண கண்டிய பிரமாதராயன், பெரிய முதலி எனக்கு நல்ல பெருமாளான சுந்தர பாண்டிய பட்டன், நாவிளங்காதானான சோழகோன் பிரமாதராயர், சுந்தர பாண்டிய பிரமாதராயர் இவர்கள் மாகேசுவரர்களாகப் பணியாற்றினர். வந்து உதையஞ் செய்வான் சொக்கராயன் கோயிற் கணக்காளராக இருந்தார்.79

குடைவரையின் காலம்

குடைவரைச் சிற்பங்கள் அனைத்தும் சுதை பூசப்பெற்று வண்ணக்கோலங்களில் மிளிர்வதால், கட்டுமானம் கொண்டே காலத்தை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. முகப்புத்தூண்கள், அவற்றில் உள்ள தொங்கல்கள், எளிமையான கூரையுறுப்புகள் இவை கொண்டு இக்குடைவரையின் காலத்தைக் பொ. கா. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகக் கொள்ளலாம்.

குறிப்புகள்
33. ARE 1924 : 14. 34. ARE 1924 : 15, 16.
35. ARE 1924 : 29. 36. ARE 1924 : 35.
37. ARE 1924 : 41. 38. ARE 1924 : 27.
39. ARE 1924 : 28. 40. ARE 1924 : 25.
41. ARE 1924 : 22. 42. ARE 1924 : 32.
43. ARE 1924 : 34. 44. ARE 1924 : 36.
45. ARE 1924 : 40. 46. ARE 1924 : 11.
47. ARE 1924 : 14. 48. ARE 1924 : 18.
49. ARE 1924 : 23. 50. ARE 1924 : 31.
51. ARE 1924 : 37. 52 ARE 1924 : 38.
53. ARE 1924 : 13, 26. 54. ARE 1924 : 30, 20.
55. ARE 1924 : 10. 56. ARE 1924 : 15, 30.
57. ARE 1924 : 25. 58. ARE 1924 : 11.
59. ARE 1924 : 13, 14. 60. ARE 1924 : 39.
61. ARE 1924 : 32. 62. ARE 1924 : 34.
63. ARE 1924 : 36. 64. ARE 1924 : 40.
65. ARE 1924 : 11. 66. ARE 1924 : 14.
67. ARE 1924 : 18. 68. ARE 1924 : 23.
69. ARE 1924 : 31. 70. ARE 1924 : 37.
71. ARE 1924 : 38. 72. ARE 1924 : 13, 26.
73. ARE 1924 : 30, 20. 74. ARE 1924 : 10.
75. ARE 1924 : 15, 30. 76. ARE 1924 : 25.
77. ARE 1924 : 11. 78. ARE 1924 : 13, 14.
79. ARE 1924 : 39.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.