http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 25

இதழ் 25
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றுக்கு வரவு
முல்லைநிலத்தில் ஒரு நாள்
வரலாற்றின் வரலாறு - 4
உடையாளூரும் திரிபுவனமும் துக்காச்சியும் - 1
அணுகுண்டு
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பார்வை - 2
Gopalakrishna Bharathi - 6
சங்கச்சாரல் - 12
இதழ் எண். 25 > கலைக்கோவன் பக்கம்
வரலாற்றின் வரலாறு - 4
இரா. கலைக்கோவன்

1953ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் 1959ஆம் ஆண்டு ஆகஸ்டு வரையில் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார் இராசமாணிக்கனார். அக்காலத்தில் அவரிடம் பயின்ற மாணவர்களுள் ஒருவரான திரு.வீ.வீராசாமி, 'தம்முடன் பழக நேர்ந்த அனைவரையும் தம்மிடம் தனி அன்பும் மதிப்பும் கொள்ளுமாறு செய்தது, வேறுபாடின்றி அனைவருடனும் பழகிய பேராசிரியரது நல்லியல்புதான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

'கல்வி பயிலும்போது பல ஆசிரியர்கள் தம் வாழ்க்கையில் எதிர்ப்படுகிறார்கள். அவர்களுள் ஒரு சிலரே நம் மனத்தில் நிலைபெற்று வாழ்கிறார்கள். சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. தாங்கள்தாம் அறிவுக்களஞ்சியங்கள் என நினைத்துக் கொள்வார்கள். மாணவர்கள்தாம் சிந்தனைக் கருவூலங்கள், அவர்களது சிந்தனையை நல்வழியில் கொண்டுசெல்வதுதான் ஆசிரியர்களது கடமை என உணர்ந்து, கற்றறிந்தோன் என்று சிறிதும் மமதையின்றி, அனைவரிடமும் மனம் திறந்து பேசும் எங்கள் மதிப்பிற்குரிய டாக்டர். இராசமாணிக்கனார் அவர்களின் பண்பு எவரையும் அவர்பால் ஈர்த்துவிடும். கல்லூரியில் உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள், 'நீங்கள் இவ்வளவு தூரம் மாணவர்களுடன் நெருங்கிப் பழகக்கூடாது' என்று இவரிடம் கூறுவர். இவரோ புன்முறுவலுடன், 'நாமும் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியன நிறைய இருக்கின்றன' என அவர்களுக்குப் பதிலிறுப்பார்.

ஒவ்வொரு மாலையும் மாணவர்களுடன் உலாவச் செல்வது இவரது வழக்கம். மற்றைப் பாடங்களுக்கு எவ்வாறு 'டிமிக்கி' கொடுப்பது என்று மாணவர்கள் யோசித்துக் கொண்டிருப்பர். ஆனால், இவரது பாடமோ வாரத்தில் மூன்று நாட்கள்தானே வருகின்றது என்று மனம் வருந்துவர். அவ்வளவு தூரம் இவர் நடத்தும் பாடங்கள் சுவையுடனும் மனத்தில் பதியும் எடுத்துக்காட்டுகளுடனும் விளங்கும். உலக நடப்புக்களை மிக்க நகைச்சுவையுடன் எடுத்துக் கூறுவதில் இவருக்கு நிகர் இவரேதான்' என்று பேராசிரியரின் பழகும் பாங்கையும் கற்றுத் தரும் திறனையும் நினைவு கூர்ந்துள்ளார் திரு.வீ.வீராசாமி.

மதுரையில் வாழ்ந்தபோது அங்கு எழுத்தாளர் மன்றம் உருவாவதற்குப் பெருந்துணையாயிருந்தார். அதன் தலைவராகவும் விளங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அதன் சார்பில் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வுக்கு மாணவர்களை அனுப்பச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். எழுத்துப்பணி மதுரையிலும் தொடர்ந்தது. இக்காலகட்டத்தில் ஏறத்தாழ நாற்பது நூல்கள் இராசமாணிக்கனாரால் எழுதப்பட்டன. இவர் தலைமையேற்று நடத்திவைத்த திருமணங்களும் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றிய நிகழ்ச்சிகளும் கணக்கற்றவை.

'ஆடம்பரத் திருமண செலவுகளை டாக்டர் அடியோடு வெறுப்பவர். பண வசதியுள்ளவர்கள் எப்படியாவது நடத்திவிட்டுப் போகட்டும். ஏழைகளும் குலப்பெருமை பேசிக் கடன்வாங்கிச் செலவு செய்து சீர்குலைந்து போகிறார்களே என மிகவும் மனம் வருந்துவார். திருமண அழைப்பிதழ்கள், 'இன்னின்னாருக்கு இந்தத் தேதியில் இந்த நேரத்துக்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது. தாங்கள் அப்போது இருந்த இடத்தில் இருந்துகொண்டே மணமக்களை வாழ்த்தியருளும்படி வேண்டுகிறேன்' என அச்சடிக்கப்படவேண்டும் என்று நகைச்சுவையுடன் கூறுவார். அதிலும், 'இருந்த இடத்தில் இருந்து கொண்டே என்பது அடிக்கோடு இடப்பட்டிருக்கவேண்டும் என்பார்' என்று இராசமாணிக்கனாரின் மணவினைக் கொள்கையினைத் தம் கட்டுரையொன்றில் விவரித்துள்ளார் திரு.வீ.வீராசாமி.

மதுரையில் இருந்தபோது தமிழ்நாடெங்கும் பயணித்து இராசமாணிக்கனார் ஆற்றிய சொற்பொழிவுகள் இலக்கிய நுகர்வையும் சமய, சமூக சீர்திருத்த மனப்பாங்கையும் மக்களுக்கு ஊட்டுவனவாக அமைந்தன. தமிழர் ஒற்றுமை, தமிழ் மொழியின் மேன்மை, எளிய நிலையில் அமையவேண்டிய தமிழர் திருமணம், இலக்கியங்கள் சுட்டும் தமிழர் வாழ்வு, உழைப்பின் உயர்வு, சாதி, சமயப் பூசலற்ற - ஏற்றத் தாழ்வுகள் கருதாத தமிழ்ச் சமூகம் என்பனவே பெரும்பாலும் அவர் பொழிவுப் பொருள்களாக அமைந்தன. எளிய, இனிய நடையில் நகைச்சுவை உணர்வு பொங்க ஆற்றொழுக்காகப் பேசும் ஆற்றல் அவருக்கு இருந்ததால், உரை கேட்டவர்கள் அவர் வயமாயினர்.

பள்ளி, கல்லூரி அளவிலான பாடப்புத்தகக் கட்டுரைகளாலும், துணைப்பாட நூல்களாலும் இத்தகு பயன் தரு பொழிவுகளாலும் இராசமாணிக்கனார் நாடறிந்த நல்லறிஞராகத் திகழ்ந்தார். இவரது இலக்கிய, சமய, சமுதாயப் பணிகளைப் பாராட்டிக் கோயமுத்தூர் திருவள்ளுவர் கழகம் 1956 ஆகஸ்டு 26இல் பெருமைக்குரிய பாராட்டு விழாவொன்றை அமைத்தது. இராஜா சர். முத்தையா செட்டியார், அமைச்சர் சி. சுப்பிரமணியம், தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருக்குறள் வீ.முனுசாமி முதலிய அறிஞர்கள் இராசமாணிக்கனார் தமிழுலகிற்குஆற்றிய அரும் பணிகளையும் அவரது ஆய்வுப் படைப்புகளையும் ஒருமனதாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைத் தமிழ்ப் பேராசிரியராக 1959 செப்டம்பர்த் திங்களில் பொறுப்பேற்ற இப்பெருமகனார் 1967 முடிய அப்பணியில் இருந்தார். பணியிலிருந்த முதல் ஐந்தாண்டுகளில் சங்கத் தமிழ் இலக்கியமான பத்துப்பாட்டை ஆய்வு செய்து, 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி' என்ற பெயரில் நூலாக்கி, பல்கலைக்கழகத்திடம் ஒப்புவித்தார். அவ்வரிய ஆராய்ச்சி நூல் பின்னால் (1970) பல்கலைக்கழகத்தாரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தாம் செய்த ஆராய்ச்சிகளைக் கட்டுரைகளாக்கிப் பல இதழ்களிலும் வெளியிட்டார்ர். பல மன்றங்களிலும் இலக்கியக் கழகங்களிலும் தாம் ஆற்றிய சொற்பொழிவுகளுக்குக் கட்டுரை வடிவம் தந்து நூல்களாக்கினார். தாம் அரிதின் முயன்று அறிந்த பல வரலாற்று உண்மைகளை, என்றும் அழியாது இருக்குமாறு எழுத்து வடிவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.