http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 76
இதழ் 76 [ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
அன்புள்ள சிபி, உனக்கு மூன்று வயது முடியப்போகிறது. அடுத்த ஆண்டு பள்ளியில் சேர்க்க வேண்டும். அதற்கு இப்போதே பல பள்ளிகள் மாணவர் சேர்க்கையைத் தொடங்கி விட்டன. நாங்கள் படித்த காலத்திலெல்லாம் ஐந்து வயது நிரம்பியிருந்தாலும், வலது கையைத் தலைக்கு மேல் கொண்டு சென்று இடது காதைத் தொட முடிந்தால்தான் முதல் வகுப்பில் சேரமுடியும். அதுவரை குழந்தைகளுக்கு வீட்டிலும் வெளியிலும் சுதந்திரமாக விளையாட வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடையாது. நான்கு சுவர்களுக்குள்தான் உங்கள் சுதந்திரமெல்லாம். வீட்டுக்கு வெளியில் இருக்கும் சகமனிதன் மீதான நம்பிக்கை அந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது. கடத்தல்களும் பலாத்காரங்களும் தொன்றுதொட்டே இருந்து வந்திருந்தாலும், ஊடகங்களால் அளவுக்கு அதிகமாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டு, பெற்றோர்களின் மனதில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டரை வயது நிரம்பியிருந்தாலே அடுத்து வரும் விஜயதசமியன்று பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று நல்ல பள்ளிகளைத் தேடிப் பெற்றோர்கள் அலையும் காலம் இது. முன்பெல்லாம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தால், வீட்டிலும் ஏதாவது சொல்லித் தருவார்கள். பெற்றோர் படிப்பறிவற்றவர்களாக இருந்தால் சொல்லித் தராமல் இருப்பதுண்டு. ஆனால் இக்காலத்தில் பெற்றோர்கள் இருவருமே படிப்பறிவு பெற்றிருந்தாலும், வீட்டில் சொல்லித் தருவதைவிடப் பள்ளியில் குழந்தைகள் கற்பதையே விரும்புகிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது போன்ற முக்கியமான பொறுப்புகள் இருப்பதால், கற்றுத்தருதல் இயலாததாக இருக்கிறது. பள்ளிகள் இந்த இடைவெளியைப் பூர்த்தி செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தம்மைவிடத் தம் பிள்ளைகள் அதிகமாக முன்னேறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லாப் பெற்றோர்களிடமும் இருக்கும். 'தம்மின் தம்மக்கள்' என்ற குறள் இச்சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை நிறுவுகிறது. இன்றைய பள்ளிகளும் இதை வியாபார உத்தியாகக் கொண்டுள்ளன. நல்ல பள்ளிகளில் சேர்த்து விட்டால், குழந்தை தானே முன்னுக்கு வந்து விடுவான் என்ற எண்ணம் பெற்றோர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது. நல்ல பள்ளிகளில் சேரப் போட்டி அதிகமிருப்பதால், இடையில் சேர்க்க முடியாது. மழலை வகுப்புகளிலேயே சேர்த்துவிட வேண்டும். எனவே, மழலை வகுப்புகளுக்கே ஆண்டுக்கு சுமார் 50000 ரூபாய் அளவுக்கு வசூல் செய்கிறார்கள். அதுபோகக் கட்டட நிதியும் சேர்க்கைக் கட்டணமும். இத்தனையெல்லாம் செலவு செய்து படிக்க வைத்தாலும் இப்பள்ளிகள் வாழ்க்கைக் கல்வியைக் கற்றுத் தருகின்றனவா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு பள்ளி நல்ல பள்ளியாக அறியப்படுவது அது பத்தாம் வகுப்பிலும் பணிரெண்டாம் வகுப்பிலும் பெறும் தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண்களைப் பொறுத்தே. எனவே, தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். நம் தேர்வு முறையும் மாணவர்களின் வாழ்க்கைக் கல்வியை ஊக்குவிப்பதாக இல்லை. அறிவை வளர்ப்பதுதான் தேர்வு என்ற காலம் மாறி, அறியாமையை அளப்பதற்குப் பெயர்தான் தேர்வு என்றாகி விட்டது. பாடப்புத்தகத்தை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வில் சிறந்த முறையில் வாந்தி எடுப்பவனே அறிவு மிகுந்த மாணவன் என்ற கருத்து நம் மக்களின் மனதில் வேரூன்றி விட்டது. கல்வி என்பது சிறந்த குடிமகனை உருவாக்க வேண்டுமேயன்றி, சமூகப் பொறுப்புணர்வற்ற மனப்பாடம் செய்யும் இயந்திரங்களை அல்ல. கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் சொல்வதானால், கையொப்பமிடத் தெரிந்த மரங்களைத்தான் இன்றைய கல்விமுறை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு மாற்றுத் தீர்வாக இன்று மாண்டிசோரி மற்றும் பன்னாட்டுக் கல்விமுறைகள் பெருக ஆரம்பித்திருக்கின்றன. செயல்வழிக் கற்றல் மூலமாகக் கல்வியைப் போதிக்கும் இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி ஒரு சுமையாக இல்லை எனத் தோன்றுகிறது. பாடங்கள் எதையும் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை. சிந்திப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இப்போதெல்லாம் அரசு ஆரம்பப் பள்ளிகளிலேயே செயல்வழிக் கற்றல்முறை பின்பற்றப்பட்டு, சமச்சீர் கல்விமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டு, தனியார் பள்ளிகளின் அளவுக்குத் தரம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டு பேருவகை கொள்ளலாம். தனியாரிடம் அதிகம் செலவழித்துத்தான் தரமான கல்வியைக் கற்கவேண்டும் என்ற நிலைமாறி, அரசுப் பள்ளிகளிலும் அதே தரத்திலான கல்வியைப் பெறலாம் என்ற நிலை இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், தம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கலாம் என்ற எண்ணம் பெற்றோர்களிடையே இன்னும் வளரவில்லை. நானும் 12ம் வகுப்பு வரை கிராமப் புறத்திலிருந்த அரசுப் பள்ளியில் தமிழ்வழியில்தான் படித்தேன். என் வளர்ச்சிக்கு அரசுப் பள்ளி என்பது எந்த விதத்திலும் தடையாக இருக்கவில்லை என்று தெளிவாகத் தெரிந்தபோதும், உன்னை அரசுப் பள்ளியில் சேர்க்க மனம் தயங்குகிறது. ஒருவேளை, எதிர்காலத்தில் தனியார் பள்ளியில் படித்தவர்களுடன் போட்டிபோட முடியாமல் பின் தங்கி விடுவாயோ என்ற இந்தியர்களுக்கே உரிய அடிமனப் பயம்தான் முதல் காரணம். என்னதான் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருவதைச் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் கண்டாலும், தந்தை என்ற முறையில் இந்த அடிமனப் பயத்தைப் புறந்தள்ளத் துணிவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் படிக்கும் காலத்தில் கிடைக்கப்பெற்ற வெளியுலக அனுபவங்கள் (Exposure) என் ஆளுமைப்பண்பை வளர்க்க உதவியதைவிட, வசதி மிகுந்த தனியார் பள்ளியில் நீ பெறப்போகும் அனுபவங்கள் உன் வாழ்க்கைக்கு அதிகமாக உதவும் என்ற எண்ணமும் ஒரு காரணம். என்னதான் கல்விமுறையை மாற்றியிருந்தாலும், அதே ஆசிரியர்கள்தானே? நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சியும் கடமை உணர்வும் இக்காலத்தில் குறைந்து விட்டதைக் காண்கிறோம். என்றைக்கு ஆசிரியர் பணியை நல்ல வருமானத்துக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய துறை என்று மக்கள் எண்ணத் தொடங்கினார்களோ, அன்றே கற்பித்தலின் தரமும் குறையத் தொடங்கிவிட்டது. மக்கள் அரசுப்பள்ளிகளை அணுகாமைக்கு இதுவும் ஒரு காரணம். இன்று இருக்கும் இளைஞர்களில் இரண்டு வகையினர் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். தன்னைப்பற்றி மட்டுமே கவலை கொள்பவர்கள் ஒருவகை. எதைப் பற்றியும் சட்டை செய்யாதவர்கள் இரண்டாம் வகை. இந்தத் தூண்களின் மீது நின்று கொண்டுதான் எதிர்கால இந்தியா உலக வல்லரசுகளுக்குச் சவால் விடப்போகிறது. இன்றைய தேர்வுமுறை இப்படியே தொடர்வதானால், இந்திய மற்றும் தமிழ் விழுமியங்கள் பட்டுப்போகும். பண்பாடும் கலாச்சாரமும் களையிழந்து போகும். இதற்குத் தீர்வு, நல்ல நூல்களை வாசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தகங்கள் மனிதர்களுக்குச் சிறகுகள் போன்றவை. நிலத்தில் இருக்கும்போது சிறகுகளைச் சுமையாகக் கருதாமல் பறவைகள் சுமப்பதால்தான் அவை பறக்க முற்படும்போது சிறகுகள் உடலைச் சுமையாகக் கருதாமல் பறக்க உதவுகின்றன. அதுபோலத்தான் நூல்களும். நேரம் கிடைக்கும்போது நல்ல நூல்களை வாசிக்கக் கற்றுக்கொண்டால்தான் வாழ்வில் பல நேரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கத் துணைபுரியும் என்பது நான் என் சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டது. ஆகவே, வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள் என்று உனக்கும் அறிவுரை கூறுவேன். ஈரோட்டில் இளைய தலைமுறைக்கு நூல்களை அறிமுகப்படுத்தும் அரிய பணியை மேற்கொண்டு வருகிறது மக்கள் சிந்தனைப் பேரவை. அப்புத்தகத் திருவிழாவைப் பற்றி நான் அறிந்து கொண்டது ஒரு சுவாரசியமான சம்பவம். 26-ஜூலை-2010 அன்று காலை 8 மணியளவில் கோபிசெட்டிபாளையத்திலிருந்து சேலம் சித்தர்மலையை நோக்கி நமது WagonR விரைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு பண்பலையாகத் திருப்பிக்கொண்டே வந்த எனக்கு, புத்தகங்களைப் பற்றிய குரல் ஆச்சரியத்தையளித்தது. சற்று நேரம் கேட்டபிறகுதான் புலப்பட்டது, பேசிக்கொண்டிருப்பவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். ஈரோட்டை மையமாகக்கொண்டு செயல்படும் சேவை அமைப்புதான் 'மக்கள் சிந்தனைப் பேரவை'. அவ்வமைப்பின் நிறுவனர்தான் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். மூடநம்பிக்கைக்கு எதிராகத் தந்தை பெரியார் தனிமனிதனாகப் போர்தொடுத்த ஈரோட்டு மண்ணில், அறியாமைக்கு எதிராகத் தனிமனிதனாகப் போர் தொடுத்திருக்கிறார் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக ஆண்டுதோறும் புத்தகத்திருவிழாவை நடத்தி வருகிறார். பதிப்பாளர் சங்கம் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியை நடத்திக்கொண்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் தனியார் அமைப்புகள் புத்தகத்திருவிழாக்களை நடத்துகின்றன என்றால், அவை இரண்டே இரண்டுதான். ஈரோட்டிலும் நெய்வேலியிலும்தான். நெய்வேலியில் நடப்பதுபற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், மேலதிகத் தகவல்கள் தெரியவில்லை. ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை இத்தகைய திருவிழாவை நடத்தி வருகிறது. சென்னையில் நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஈரோட்டில் இலவசம். மக்கள் சிந்தனைப் பேரவை, இதை இலாப நோக்கத்தில் நடத்தவில்லை. நல்ல நூல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் இவர்களது குறிக்கோள். குறிப்பாக இளைய தலைமுறையைச் சென்றடைய வேண்டும். இந்த நோக்கிலேயே பலவிதத் திட்டங்களைப் புத்தகத் திருவிழாவில் புகுத்தியிருக்கிறார்கள். அவற்றில் தலையாயதுதான் 'உண்டியல் திட்டம்'. இது ஏதோ நன்கொடை கேட்டு உண்டியல் குலுக்கும் திட்டம் என்று எண்ணி விடாதீர்கள். புத்தகத் திருவிழாவுக்கு வருகைதரும் ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் ஓர் உண்டியலை விநியோகிக்கிறார்கள். அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் பணம் சேர்த்து, அடுத்த ஆண்டுத் திருவிழாவில் சேர்த்துள்ள தொகையின் ஒன்றரை மடங்குக்கு 15 சதவீதக் கழிவுடன் வாங்கிச் செல்லலாம். மாணவர்களின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே இத்திட்டம். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளி மாணவர்கள் இதனால் பயன் பெறுகிறார்கள். இதுபோக மாணவ வாசிப்பாளர் என்ற சான்றிதழும் தருகிறார்கள். மாணவர்களுக்கு இத்தகைய திட்டங்கள் என்றால், மற்றவர்களுக்கும் இத்திருவிழாவில் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. 168 அரங்கங்களில் பதிப்பகங்கள் தங்களது நூல்களைக் காட்சிப் படுத்தியிருந்தாலும், உலகத்தமிழர் படைப்பரங்கம் என்றொரு சிறப்பு அரங்கத்தை ஏற்படுத்தி, தனிப்பட்ட முறையில் பதிப்பிக்கப்பட்ட நூல்களை இடம்பெறச் செய்திருக்கிறார்கள். தமிழர் வரலாற்று அரங்கத்தில், தமிழ் மற்றும் தமிழ்நாட்டு வரலாறு தொடர்பான நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி, மாலை வேளைகளில் சிந்தனையைத் தூண்டும் சொற்பொழிவுகளும் இடம்பெறும். இவையெல்லாம் திருவிழா சார்ந்து மக்கள் சிந்தனைப் பேரவை மேற்கொண்டு வரும் பணிகள். புத்தகச் சந்தைக்கு வெளியேயும் இவர்களது பணி தொடர்கிறது. கட்டுமானப் பொறியாளர்களிடம் வீட்டுக்கு ஒரு பூஜையறை இருப்பதுபோல், வீட்டுக்கு ஒரு படிக்கும் அறை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுமாறு பொறியாளர் சங்கக் கூட்டங்களில் வலியுறுத்தி வருகிறார் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். ஈரோடு மாவட்டத்தின் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு பொது நூலகம் அமைக்கும் அரும்பணியிலும் இவரது பங்கு மகத்தானது. ஈரோட்டுக்கு அண்டை மாவட்டங்கள் நான்கு. நாமக்கல், சேலம், கரூர், கோவை ஆகியன. சேலம் மாவட்டம் தொழில் வளர்ச்சியிலும், நாமக்கல் மாவட்டம் விவசாயம் மற்றும் பண்ணை வளர்ச்சியிலும், கரூர் மாவட்டம் விவசாய வளர்ச்சியிலும், கோவை மாவட்டம் தொழில் மற்றும் கல்வி வளர்ச்சியிலும் தமிழ்நாட்டில் அதிகப் பங்களிப்பைக் கொண்டிருந்தாலும், விவசாயம், தொழில் (நெசவு) மற்றும் கல்வி என அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டிருப்பது ஈரோடு மாவட்டம்தான். பரப்பளவில் கோவைக்கும் சேலத்துக்கும் அடுத்த இடம்தான் என்றாலும், தான் பெற்ற மக்களாலும் அம்மக்களின் உழைப்பாலும் பெயர்பெற்றது ஈரோடு மாவட்டம்தான். கொங்கு நாட்டின் தலைநகராகக் கோவை குறிப்பிடப்பட்டாலும், அதன் தனித்தன்மைகளான அன்புக்கும் சகிப்புத்தன்மைக்கும் சான்று பகர்வது ஈரோடு மண்தான். கள்ளங்கபடமற்ற ஈரோடு மக்களால்தான் கொங்கு மண்டலத்துக்கே நல்ல பெயர். மக்கள் சிந்தனைப் பேரவையால் ஈரோட்டுக்கே நல்ல பெயர். இந்த ஆண்டின் மாலைச் சொற்பொழிவு ஒன்றில் வைகோ அவர்கள் கலந்துகொண்டு 'எழுத்து என்னும் கருவறை' என்ற தலைப்பில் மிக அருமையாக உரையாற்றினார். இலக்கியங்கள் உலக வரலாற்றில் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கின என்று தெளிவாக எடுத்துரைத்தார். சுமார் 2 மணிநேரம் நிகழ்ந்த பொழிவில் ஒரு சிறு குறிப்புக்கூட இல்லாமல் மடைதிறந்த வெள்ளமென முழங்கினார் வைகோ. துளியும் அரசியல் கலப்பில்லாத அவ்வுரை, கேட்டோரை மெய்சிலிர்க்க வைத்தது. அதற்கு திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அழகான முன்னுரை ஒன்றையும் தந்திருந்தார். 'இந்த அருமையான நிகழ்ச்சியில் காணுகின்ற இடமெல்லாம் கடல்போல அமர்ந்திருக்கின்ற மக்கள் கூட்டத்தைப் பார்க்கின்றபோது மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம். இந்த ஈரோடு புத்தகத் திருவிழாவை, கடந்த ஐந்து ஆண்டுகாலமாக நடத்தி, இது ஆறாவது ஆண்டாக நடத்திக் கொண்டிருக்கின்றது மக்கள் சிந்தனைப் பேரவை. மக்கள் சிந்தனைப் பேரவைக்கென்று அரசியல் கட்சி சார்பு கிடையாது. கட்சி சார்பற்ற ஒரு பொது அமைப்பு. அந்தப் பேரவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் வேறு கட்சியில் உறுப்பினர்களாக இருப்பதற்கு உரிமை பெற்றவர்கள். அதில் தடையுமில்லை. ஆனால், இந்த இயக்கத்திற்கு என்று தனியாக அரசியல் கட்சி சார்பை வைத்துக் கொள்ளாமல், அதுபோன்று சாதி சார்பு, மதச் சார்பு போன்ற எந்த ஒரு சார்பையும் வைத்துக் கொள்ளாமல், தீபாவளி இந்துக்களுக்கும், கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களுக்கும், இரம்ஜான் இஸ்லாமியர்களுக்கும் எப்படிப் பண்டிகையாக அமைகிறதோ, அதுபோல ஒரு அறிவுத் திருவிழாவாக ஈரோடு மாவட்ட மக்கள் அனைவருக்கும், அனைத்துப் பகுதி மக்களுக்கும் இந்தத் திருவிழாவைப் பொதுவான திருவிழாவாக நடத்துவதற்குத்தான் மக்கள் சிந்தனைப் பேரவை எண்ணுகிறது. அவ்வாறுதான் நடத்திக் கொண்டு வருகிறது. அதற்குப் பொருத்தமானவர்கள், அந்தச் சிந்தனைக்குப் பொருத்தமானவர்கள், எதிர்காலத் திசையில் இட்டுச் செல்வதற்குப் பொருத்தமானவர்கள், எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்களைச் சிந்தனைக்கானவர்கள் என்று கருதி நாங்கள் மகிழ்வோடு அழைக்கின்றோம். ஆகவே, அந்த அடிப்படையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குச் சாலப் பொருத்தமானவரும், நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டி, புத்தகத்தின்பால் மேலும் காதலை உருவாக்கி, வாசிப்பை மேலும் கூட்டுவதற்காக, ஒரு சமுதாயக் கடமையைச் செய்வதற்காக நம் அன்பான அழைப்பை ஏற்று வருகை புரிந்திருக்கின்ற நம் பாராட்டுதலுக்குரிய அண்ணன் வைகோ அவர்களைச் சிறப்புப் பேருரை நிகழ்த்த வேண்டும் என்று உங்கள் அனைவரின் சார்பில் அன்போடு அழைக்கின்றேன்.' உலக வரலாற்றில் எழுத்து ஏற்படுத்திய நல்ல மாற்றங்களைக் கூறிய பின்பு, இலக்கியத்தினால் விளைந்த துன்பங்களையும் வைகோ அவர்கள் எடுத்துரைத்தார். அவரது வார்த்தைகளிலேயே கீழே தருகிறேன். 'ஒரு தீக்குச்சி குத்துவிளக்கையும் ஏற்றலாம், வீட்டையும் கொளுத்தலாம் என்பதுபோல, கொடுங்கோலர்களின் தலையணை மந்திரமாக இருந்த 'இளவரசன்' (The Prince) என்ற நூல் வெனிசு நகரத்தின் மாக்கியவல்லியால் 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டது. அந்த நூல்தான் ஹிட்லருக்கும் முசோலினிக்கும் வேதப் புத்தகமாக ஆயிற்று. அதில் மாக்கியவல்லி மூன்று கருத்துக்களைச் சொல்கிறான். 1. Ends justify the means. முடிவுகள் வழிகளை நியாயப் படுத்துகிறது. நீ பஞ்சமா பாதகங்களைப் புரிந்திருக்கலாம். ஜெயித்தால் போதும். வெற்றி பெற்றால் போதும். குறிக்கோளை எட்டினால் போதும். எந்தக் கொடுமையும் நிகழ்த்தலாம். இதைத்தான் சாணக்கியன் வேறு வழியிலே சொன்னான். ஆனால் தமிழன் அதை ஏற்றுக் கொண்டவனல்லன். தமிழனின் சிந்தனை அப்படிப்பட்டதல்ல. "ஈன்றாள் பசிகாண்பாண் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை". தாயே பட்டினி கிடந்தாலும், தவறு செய்து அவள் பசியைப் போக்க முயலாதே. சொன்னவன் தமிழன். உலகில் எவனுமில்லை. ஆனால், மாக்கியவல்லி, நீ வெற்றி பெற்றால் போதும். எந்தக் கொடுமையையும் நீ செய்யலாம் என்கிறான். 2. Might is right. வல்லான் வகுத்ததே வாய்க்கால். வலிமையுள்ளவன் எதையும் செய்யலாம். அக்கிரமம் செய்யலாம். அநீதி செய்யலாம். அடக்கி ஒடுக்கலாம். 3. Necessity knows no laws. தேவைக்கு சட்டங்களே கிடையாது. இந்த மூன்றும் அவனது தாரக மந்திரங்கள். இதைச் சர்வாதிகாரிகள் பின்பற்றினார்கள்; சவக்குழிக்குப் போனார்கள்.' இங்கே இரா.விஜயன் என்ற இளைஞரைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் 'தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு' என்ற நிகழ்ச்சியில் முதல் பரிசு வாங்கிய இளைஞர். இவரைப் போன்றவர்களின் பேச்சாற்றலையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் களமாக ஈரோடு புத்தகத் திருவிழா திகழ்கிறது. கருத்துச் செறிவாக அமைந்திருந்தது இவரது பேச்சு. ஏற்ற இறக்கங்களைச் சற்றுக் கூட்டியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். இவரது பேச்சில், மகாத்மா காந்திக்கும் கஸ்தூரிபாய் அம்மையாருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலைக் குறிப்பிடும் பகுதி உள்ளத்தைக் கவர்ந்தது. 'அருமை நண்பர்களே, திரு. சகாயம் அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டார் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். என்னிடம் தொலைபேசியில் பேசுகிறபோது குறிப்பிட்டார். ஒரு மாவட்ட ஆட்சியர் (நாமக்கல் மாவட்டம்) என்பதற்காக நாங்கள் அழைக்கவில்லை. அதிகாரத்தில் இருக்கிறார் என்பதற்காக அழைக்கவில்லை. லஞ்சம் வாங்காத, கையூட்டு வாங்காத ஒரு நேர்மையான அதிகாரி என்பதால்தான் நாங்கள் அழைத்திருக்கிறோம் என்றார். நேர்மையாக இருப்பது என்பது, ஏதோவொரு தனிமனிதன் எடுக்கக்கூடிய முடிவாக நான் கருதவில்லை. அவன் மட்டும் எடுத்துவிட முடியுமா என்று நான் யோசிக்கவில்லை. இன்றைக்குச் சமூகம் சீரழிந்து போயிருக்கிறது. நேர்மையாளனைப் பிழைக்கத் தெரியாத மனிதன் என்கிறது. பணத்தைத்தேடி இன்றைய இளைஞர்களைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிற வேலையில்தான் பெற்றோர்கள் இருக்கிறார்கள். எந்த அயோக்கியத்தனத்தையும் செய்துகொள். உன்னிடம் பணம் இருக்கிறதா, உனக்கு டாக்டர் பட்டத்தை வாங்கித்தர ஆயிரம் பல்கலைக்கழகங்களை நான் காட்டுவேன். அப்படிப்பட்ட சூழலில், நேர்மையாக இருப்பது என்பது ஒரு வேள்வி. அது ஒரு போராட்டம். நேர்மையாக இருப்பது சாதாரணமானதல்ல. குடும்பத்தார்க்குப் புரியவைப்பதே பெரிய பாடாக இருக்கும். தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தியார் இந்தியாவிற்குத் திரும்புகிறார். காந்தியாருக்கு நிறையப் பரிசுப் பொருட்களைக் கொடுக்கிறார்கள். அதில், 52 பவுன் மதிப்புள்ள ஒரு தங்கச் சங்கிலியையும் கொடுத்து விட்டார்கள். காந்தியார் வாங்கி வைத்துக்கொண்டு, இரவெல்லாம் உறங்க முடியவில்லை. பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டோம்; பரிசுப்பொருள் பெறுவது சரியா? அவர் உலாவுகிறார். காலை புலருகிறபோது ஒரு முடிவெடுக்கிறார். பரிசுப்பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். தன்னுடைய குழந்தைகளை அழைக்கிறார். காந்தியார் : நான் பரிசுப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்து விடலாம் என்று எண்ணுகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? குழந்தைகள் : பரவாயில்லை அப்பா. நாங்கள் சம்பாதித்துக் கொள்கிறோம். காந்தியார் : சரி, உங்களைச் சமாளித்தாகிவிட்டது. அம்மாவை எப்படிச் சமாளிப்பது? கஸ்தூரிபாய் : என்ன? பரிசுப் பொருட்களைத் திருப்பிக் கொடுப்பதா? முடியாது. காந்தியார் : இல்லை. கொடுத்து விடு. கஸ்தூரிபாய் : நம் குழந்தைகளுக்காக நீங்கள் எதையுமே சேர்த்து வைக்கவில்லையே? காந்தியார் : நம் குழந்தைகள் வளர்கிறபோது அவர்களாகவே சம்பாதித்துக் கொள்வார்கள். நீ கொடுத்துவிடு. கஸ்தூரிபாய் : அந்த 52 பவுன் சங்கிலியையும் கொடுக்கச் சொல்கிறீர்களா? காந்தியார் : கொடுத்துவிடு. கஸ்தூரிபாய் : மாட்டேன். நாளை மருமகள் வந்தால் கொடுக்கணுமே. அப்போது இந்த 52 பவுன் சங்கிலியைக் கொடுப்போமே. காந்தியார் : (கோபத்துடன்) உன்னுடைய சேவைக்காகக் கொடுத்தார்களா? என்னுடைய சேவைக்காகக் கொடுத்தார்களா? திருப்பிக்கொடு. கஸ்தூரிபாய் : பொது வாழ்க்கையில் உங்கள் சேவை என்று ஒன்று இருக்கிறது; என் சேவை என்று ஒன்றா இருக்கிறது? உங்கள் சேவையில் என் சேவை இருக்கிறது. நீங்கள் சிறைக்குச் செல்கிறபோது உங்கள் குடும்பத்தை யார் பார்த்துக்கொண்டார்கள்? நான் கவனித்துக் கொள்ளவில்லையா? நீங்கள் நடுநிசிப் பொழுதுகளில் நண்பர்களை அழைத்து வருவீர்களே, அவர்களையெல்லாம் நான் பராமரிக்கவில்லையா? அது என் சேவையில்லையா? காந்தியார் யோசித்தார். ஒரு மனிதன் நேர்மையாளனாக இருப்பதற்கு எத்தகைய போராட்டத்தைக் குடும்பத்திலேயே நடத்த வேண்டியிருக்கிறது?' இது நேர்மையாளனாக இருப்பதற்கு மட்டும் உள்ள கடினங்கள் அல்ல. தொழில் தவிர்த்த பிற ஆர்வமுள்ள துறைகளில் ஈடுபடுவதற்கும் இப்படித்தான் குடும்பத்துடன் மல்லுக் கட்ட வேண்டியிருக்கும். கலைத்துறையில் நேர்மையாக இருக்க விரும்புபவர்களுக்கும் இத்தகைய இடர்ப்பாடுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். எல்லோரும் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு படைப்பில் ஈடுபடுகையில், தான் கொண்ட கொள்கைக்காகக் கலைப்படைப்புகளை உருவாக்குபவர்களுக்கும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தன் நிலைமையைத் தெளிவுபடுத்துவதில் இத்தகைய சிக்கல்கள் இருக்கும். வீதி நாடகக் கலைஞர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, 'வீதி நாடகங்களுக்குப் பதிலாகத் திரைப்படத்தில் தலைகாட்டினால் வருமானம் வருமே' என்று குடும்பத்தினரிடமிருந்து விமர்சனம் வந்ததாக வருத்தத்துடன் கூறினார். செயற்கைத்தனம் ஏதுமின்றி மக்களிடம் நேரடியாகச் செய்தியைக் கொண்டு சேர்க்கும் உன்னதக் கலையான வீதி நாடகத்தையே புரிந்து கொள்ள முடியாமல் போனது விழுமியங்கள் தொலைந்து போனதைத்தானே காட்டுகிறது? எல்லாத் துறைகளிலும் இப்படித்தான் இருக்கிறது. மக்களுக்கு அறிவூட்டுவதுதான் ஊடகங்களின் பணி. ஆனால் அதிலும் மக்கள் இரசனை என்ற பொய் முகமூடியுடன் வியாபாரம் நுழைந்து விட்டது. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என அனைத்து ஊடகங்களுமே இன்று வியாபார மயமாகிவிட்டன. இன்றைய இளைஞர்களுக்குச் செய்தியைத் தரவேண்டும் என்கிற நோக்கத்திற்காகப் பத்திரிகையாளர்கள் நடிகையின் படுக்கையறைக்கு வெளியில் காத்துக்கொண்டிருக்கும் கசப்பான உண்மையையும் இங்கே செரித்தாக வேண்டியிருக்கிறது. மகிழ்வுந்தில் பயணிக்கும்போது பண்பலை வானொலியை இரசித்துக்கொண்டே ஓட்டுவது பயணத்தின் சுமையைப் பெருமளவு குறைக்கும் என்பது என் கருத்து. ஆனால் இன்று இருக்கும் எல்லாப் பண்பலை வானொலிகளையும் இந்தப் பட்டியலில் சேர்த்துவிடமுடியாது. பெரும்பாலானவை சப்தஸ்வரங்களை விட சத்தஸ்வரங்களே இன்றைய மக்களின் இரசனை என்ற தவறான புரிதலில் ஒலிபரப்பிக்கொண்டிருப்பவை. சென்னைக்கு வெளியே கொடைக்கானல் பண்பலை வானொலியையும் சென்னைக்குள் அகில இந்திய வானொலியின் வானவில் பண்பலையையும் இருப்பவற்றிலேயே சற்றுத் தரமானவை என்று கூறலாம். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் குரல்வளமும் உச்சரிப்பும் இந்த இரு வானொலிகளையும் நேயர்களின் நேசிப்புக்கு உரியவையாக வைத்திருக்கின்றன. தனியார் வானொலிகளில் சில வானொலிகளின் ஓரிரு நிகழ்ச்சிகளை மட்டுமே இப்பட்டியலில் சேர்க்க இயலும். உதாரணமாக சென்னை ஹலோ பண்பலையின் ஹலோ தமிழா நிகழ்ச்சி. 'சுச்சி'யின் குரல் கவர்ச்சியாக இருந்தாலும், உச்சரிப்புத் தெளிவாக இருக்கிறதா என்பதை அவர் பேசும் வேகத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், சென்னைப் போக்குவரத்து நிலவரம், சமூக முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் பேட்டிகள் போன்றவற்றால் சற்று நல்ல நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. மக்கள் இரசிப்பதால் அவற்றைத் தயாரித்துத் தருகிறோம் என்பது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் வாதமாக இருக்கிறது. படைப்பாளர்களுக்குச் சமூகப் பொறுப்புணர்ச்சி தேவை. அப்போதுதான் அப்படைப்பால் சமூகத்துக்குப் பயன்விளையும். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத் தயாரிப்பவன் கலைஞன் அல்ல, வியாபாரி. மக்களுக்கு எது நல்லதோ அதைத் தருபவனே சிறந்த படைப்பாளி. இதற்கு பாரதி முன்னுதாரணமாக விளங்கியிருக்கிறார். அதனால்தான் இன்றும் போற்றப்படுகிறார். பாஞ்சாலி சபதத்தை எழுதி முடித்துவிட்டு, 'இது எனக்குப் பின்னர் வரப்போகும் வரகவிகளுக்குச் சமர்ப்பணம்' என்று முடிவுரையையும் சேர்த்து அச்சிட்டபிறகு பார்த்தால், சரியாக விற்பனையாகவில்லை. நல்ல தமிழ் நூல்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அன்றும் இப்படித்தான் இருந்திருக்கிறது. சிலகாலம் கழித்து, அன்னிபெசண்ட் அம்மையாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு, A fox with golden tail என்றொரு ஆங்கிலச் சிறுகதையை எழுதினார். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. ஆங்கிலத்தைப் புகுந்தவீடாகத் தமிழன் கொண்டிருக்கிறானல்லவா? அதனால் பதிப்பாளர் பாரதியிடம் இரண்டாவது பதிப்புக்காகக் கேட்டபோது, பாரதி மறுத்து விட்டார். 'தமிழில் அழகுற எழுதினால் படிக்க மாட்டானாம்; இவனுக்காக நான் ஆங்கிலத்தில் எழுதித் தரவேண்டுமாம்; தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டுப்போ!' என்று மனத்திண்மையுடன் பதிலளித்திருக்கிறார். இத்தகைய பதில் பாரதியிடமிருந்து வந்தபோது, வீட்டில் வறுமை தலைவிரித்துத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. இன்றைய படைப்பாளிகளில் எத்தனை பேருக்கு இத்தகைய வறுமையிலும் செம்மையாக வாழும் துணிவு இருக்கிறது? மக்களின் இரசனை என்று பொய்சொல்லித் தமிழ்க்கொலையை நியாயப்படுத்தத்தானே செய்கிறார்கள்? எனவே, எதிர்காலத்தில் நீ கலைகளைக் கற்றுத் தேரும் காலம் வந்தால், சமுதாயத்துக்குப் பலனளிக்கும் விதத்தில் உன் படைப்புகளும் வெளிப்பாடுகளும் இருக்கவேண்டும் என்ற மனத்திண்மையைப் பாரதியிடமிருந்து கற்றுக்கொள். ஒரு வியாபாரம் செய்யும்போது அதில் பணம்தான் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பணத்துடன் கூடவே சமூக சேவையையும் கலக்க முடியும். இப்படித்தான் கோபிசெட்டிபாளையத்தில் திரு. A.R.குணசேகரன் என்பவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் நம் மாவட்டத்தின் பெருமை என்றால், 'ஹைதர் காலம்' குணசேகரன் அவர்கள் நம் ஊரின் பெருமை. இவரது தொழில், ஒலி நாடாக்கள் மற்றும் குறுந்தட்டுக்களைப் பதிவு செய்து விற்பது. இதை முழுக்க முழுக்க வியாபார நோக்கில் செய்யவேண்டும் என்று அவர் முடிவெடுத்திருந்தால், திரைப்படப் பாடல்களையும் பக்திப்பாடல்களையும் மட்டுமே பதிவு செய்து விற்று லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். ஏனெனில், இவ்விரண்டும்தான் இன்று அதிக அளவில் விற்பனையாகின்றன. ஆனால், இவர் மக்களுக்கு நல்லறிவைப் புகட்டும் மேடைப்பேச்சுக்களையும் சேகரித்து வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் எந்தவொரு விழாவின் ஒலிப்பதிவும் இவரிடம் கிடைக்கும். ஒருமுறை நான் குன்றக்குடி அடிகளார் (மறைந்த பெரியவர்) கோபியில் ஒருமுறை ஏதோவொரு நிகழ்ச்சியில் பேசியதாகக் கேள்விப்பட்டு, அந்த ஒலிநாடா எங்காவது கிடைக்குமா என்று தேடியலைந்தபோது, ஒரு நண்பரால் பரிந்துரைக்கப்பட்ட ஒலியகம்தான் 'ஹைதர் காலம்' கடை. இவரது கடையில் இருக்கும் ஒலிநாடாக்கள் மட்டுமல்ல, கடையே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். காணுமிடங்களிலெல்லாம் அறிஞர்களின் பொன்மொழிகள், ஆன்மிகவாதிகளின் தத்துவங்கள், சிந்தனையைத் தூண்டும் விடுகதைகள், புதிர்கள், தினந்தோறும் ஒரு கவிதை, தகவல் என ஒரு பல்கலைக் களஞ்சியமாகத் திகழ்கிறது. தினந்தோறும் இவரது கடைவாசலில் வைக்கப்படும் கவிதைப்பலகையைப் படிப்பதற்காகச் செல்பவர்களையும் நானறிவேன். அவ்வளவு ஏன்? நானே கோபியில் இருக்கும் நாட்களில் அவரது கடையை வாகனத்தில் கடக்க நேரிட்டால், ஒரு நிமிடம் நின்று என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று படித்துவிட்டுத்தான் செல்வேன். திரு. குணசேகரன் அவர்களது இரு மகன்களும் இந்தச் செயல்பாட்டில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்பது அடுத்த தலைமுறையும் இக்கடையால் பயனடையும் என்பதற்குக் கட்டியங் கூறும் நிகழ்வு. பழகுவதற்கு இனிமையான மனிதர். நிறையக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று விழைபவர். தான் தெரிந்து கொண்டவற்றைப் பிறருக்கும் பகிர்ந்தளிக்கும் உள்ளம் கொண்ட தகைமை சான்றவர். அவரது கடையில் எடுத்த சில புகைப்படங்கள் கீழே. நல்ல கருத்துக்களைக் கூறும்போது ஏன் நடிகைகளின் படத்தைப் போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்போதுதான் கல்லூரி மாணவர்கள் நின்று படித்துப் பார்த்துவிட்டுப் போகிறார்கள் என்றார். "தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி யிருப்பச் செயல்" என்னும் குறட்பாவுக்குத் தக்கபடி, ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் கற்றுக் கொள்வதை உனக்காகச் சேர்த்து வைத்து உன்னைச் செம்மையாக்க வேண்டுமென விழைகிறேன். அதைத் தக்கபடி பயன்படுத்தி வாழ்வில் வெற்றி நடை போடுவாயாக! அன்புடன் அப்பா this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |