http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 76

இதழ் 76
[ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழமுடியாத ஊரும் தொல்லியல் துறையும்
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 2
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 1
மேற்றளியாரும் நலக்குன்றத்தாரும் - 1
சிபியும் நானும் - 2
கனிவின் பாலை
இதழ் எண். 76 > கலையும் ஆய்வும்
மேற்றளியாரும் நலக்குன்றத்தாரும் - 1
இரா. கலைக்கோவன்


புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலைக் கோயில் வளாகம் மிகப் பெரியது.1 கோயிலின் எதிரில் மண்டபம் ஒன்றும் அதற்குச் சற்றுத் தொலைவில் நந்தி மண்டபமும் உள்ளன. கோயில் வளாகம் கோபுரமற்ற நுழைவாயிலுடன் தொடங்குகிறது. அதற்கும் கோபுரத்துடனான இரண்டாம் வாயிலுக்கும் இடையில் சிற்பத்தூண்களோடு அமைந்த மண்டபமாய்த் தொடங்கும் திருச்சுற்று, தெற்கிலும் வடக்கிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

கோபுரம்

துணைத்தளம் பெற்ற கபோதபந்தத் தாங்குதளத்தின் மீது கோபுரம் எழுகிறது. ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகள் தழுவலில் பாதங்கள் பெற்ற கண்டம், பட்டிகை, மற்றொரு கண்டம், கூடுவளைவுகளுடனான கபோதம், பூமிதேசம் எனத் தாங்குதளம் அமைய, மேலே வேதிக்கண்டமும் வேதிகையும் பூமுனைப் போதிகைகளுடன் எண்முக அரைத்தூண்கள் பெற்ற சுவரும் கூரையுறுப்புகளும் உள்ளன. இங்குள்ள கல்வெட்டு களும் இரட்டைமீன், செண்டுச் செதுக்கலும் இக்கோபுரத்தின் வயதைப் பிற்பாண்டியர் காலமாகக் காட்டுகின்றன. தாங்குதளக் கபோதக்கூடுகளில் உள்ள ஆடற்சிற்பங்களும் கையில் விலங்கொன்றைப் பிடித்தபடி தடியால் அதை அச்சுறுத்தும் ஆடவரின் சிற்பமும் காணத்தக்கன.

சிற்பமண்டபம்

கோபுரவாயில் வழி நுழைவாரைத் தெற்கிலும் வடக்கிலும் சுற்றாய்ப் பரவி மேற்கில் விரியும் இரண்டாவது மண்டபம் வரவேற்கிறது. மண்டபப் பெருந்தூண்களில் முதல் மண்டபம் போலவே பல சிற்பங்கள். ஊர்த்வதாண்டவர், நரசிம்மர், மோகினி, இரதி, மன்மதன் சிற்பங்கள் அவற்றில் அடக்கம். மன்மதனுக்கு மிகப் பெரிய குடையும் இரதிக்குச் சிறிய அளவிலான குடையும் காட்டப்பட்டுள்ளன.

திருச்சுற்று

சுற்றின் தெற்கில் மடைப்பள்ளியும் உற்சவமண்டபமும் உள்ளன. வடமேற்கில் கிழக்கு நோக்கிய அகிலாண்டேசுவரி அம்மன் கோயில் உள்ளது. மேற்கில் வெளிச்சுற்றுக்குச் செல்ல வாய்ப்பாக வாயிலொன்று உள்ளது. இவ்வெளிச்சுற்றில்தான் குடைவரைக் கோயிலும் அதன் வலப்புறத்தே சவுந்தரநாயகி அம்மன் கற்றளியும் இடப்புறத்தே பிள்ளையார் திருமுன்னும் உள்ளன.

இரண்டாம் கோபுரவாயிலின் இருபுறத்தும் பேரளவிலான காவலர் சிற்பங்கள் உள்ளன. வாயிலுள் நுழைந்ததும் எதிரில் உள்ள மையக்கோயில் வரவேற்கிறது. அங்குள்ள சுற்று மாளிகையில் எழுவர் அன்னையர் உட்படப் பல சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. வடமேற்கு மூலையில் உள்ள சேட்டைத்தேவி சிற்பம் இளமார்பகங்களுடன் காணப்படுகிறது.

குடுமிநாதர் திருமுன்

விமானம், முகமண்டபம், பெருமண்டபம், பெருமுன்றில் எனக் கட்டமைக்கப்பட்டுள்ள மையக்கோயில் வளாகத்தில் கல்வெட்டுகள் அதிகமில்லை. விமானமும் முகமண்டபமும் ஒரே விதமான கட்டுமானம் கொண்டவை. விமானத்தின் துணைத்தளம் நான்கு மூலைகளிலும் சிறிய அளவிலான இரட்டை நந்திகள் கொண்ட மேடையொன்றின்மீது அமைந்துள்ளது. அதிலிருந்து எழும் கபோதபந்தத் தாங்குதளத்தின் மேல் வேதிகைத்தொகுதி, நாகபந்தப் பாதங்கள் பெற்ற எண்முக அரைத்தூண்களுடனான சுவர், பூமுனைப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் அமைந்துள்ளன. வலபி, தாமரை இதழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் மூன்று பத்திகளும் கீழ்த்தளத்தில் பிதுக்கமாக அமைய, இடைப்பட்ட ஒடுக்கங்கள் குடப்பஞ்சரங்கள் கொண்டுள்ளன. இந்திரகாந்த அணைவுத்தூண்களோடு அமைந்த சாலைப்பத்திகளின் கோட்டங்களில் தெற்கில் தென்திசைக் கடவுளும் மேற்கில் விஷ்ணுவும் வடக்கில் நான்முகனும் உள்ளனர். கர்ணபத்திகள் கலப்புத் திராவிட விமானங்களைச் செதுக்கல்களாகப் பெற்றுள்ளன. வடபுறத்தே உள்ள முழுக்காட்டு நீர்த்தொட்டி, மேல் நான்கு மூலைகளிலும் இரட்டை நந்திகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூமிதேசத்தை அடுத்துக் கீழ்த்தள ஆரமும் மேலே இரண்டாம் தளமும் அதற்கான ஆரமும் அமைய, மூன்றாம் தளம் வேதிகையால் மூடப்பட்டுள்ளது. மேலே திராவிட கிரீவம்; சிகரம்.

முகமண்டபத்தில் சாலைப்பத்தி மட்டுமே பிதுக்கமாக உள்ளது. கோட்டத்தில் தென்புறம் பிச்சையுகக்கும் பெருமானும் வடபுறம் கொற்றவையும் உள்ளனர். வடசுற்றில் முகமண்டபத்தருகே பேரளவிலான சண்டேசுவரர் திருமுன் அதற்குச் சற்றும் பொருத்தமில்லாத திருமேனியுடன் காட்சியளிக்கிறது. முகமண்டப வாயிலின் இருபுறத்தும் காவலர்கள். கருவறையில் முன்குடுமிநாதராய் இறைவன். பெருமண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் இடம்பெற்றுள்ளன. தென்புறத்திலுள்ள நிலவறையிலிருந்து சில புதிய கல்வெட்டுகள் படித்தறியப்பட்டன. முன்றில் கூரையில் சிதைந்த ஓவியக்காட்சிகள் உள்ளன.

அகிலாண்டேசுவரி திருமுன்

குடுமிநாதரின் இறைவியாய் இரண்டாம் சுற்றின் வடமேற்கு மூலையில் இடம்பெற்றுள்ள அகிலாண்டேசுவரி கோயிலும் இறைவன் கோயில் போலவே பல மண்டபங்களைப் பெற்றுள்ளது. விமானம் இருதளக் கலப்பு வேசரமாய்க் கபோதபந்தத் தாங்குதளத்துடன் அமைய, தூண்கள் பூமுனைப் போதிகைகள் பெற்றுள்ளன. அம்மன் கோயில் முகமண்டபத்தை அடுத்துப் பன்னிரு தூண் மண்டபமும் அதன் கிழக்கில் ஆறு தூண் தளமும் தொடர்ந்து மற்றொரு மண்டபமும் உள்ளன. அங்குள்ள கல்வெட்டு ஆறுகால் பீடம், பன்னிருகால் மண்டபம், இருபத்து நாலு கால் சொக்கட்டான் மண்டபம் என அம்மண்டபங்களைப் பெயரிடுவதுடன் அவற்றை அமைத்தவராகச் சோலைச்சி மகள் அகிலி பல்லவராய மாணிக்கத்தைக் குறிப்பிடுகிறது.2 முன்னாலுள்ள மண்டபத்தில் பள்ளியறை.

அகிலாண்டேசுவரி திருமுன்னில் காணப்படும் 12-13ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள கிரந்தக் கல்வெட்டு, சுந்தரேசன் என்பவரால் பார்வதிக்கு விமானம் எழுப்பப்பட்ட தகவலைத் தருகிறது. அதே திருமுன்னில் உள்ள தெலுங்குக் கல்வெட்டு கி. பி. 1866 பிப்ருவரியில் இராமச்சந்திரத் தொண்டைமான் இறைவன், இறைவி விமானங்களுக்குக் குடமுழுக்குச் செய்தமையைத் தெரிவிக்கிறது.3

குடைவரைக் கோயில்

மூன்றாம் திருச்சுற்றான வெளிச்சுற்றில்தான் உள்ளூர் மக்களால் மேலைக்கோயில் என்றழைக்கப்படும் குடைவரைக் கோயில் உள்ளது. குன்றின் கிழக்கு முகத்தில் குடையப்பட்டுள்ள குடைவரையின் முன்னால் இரண்டு மண்டபங்கள் எழுப்பப் பட்டிருப்பதால், குன்றின் பிற பகுதிகளிலிருந்து இது நன்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இசைக்கல்வெட்டும் பிள்ளையாரும்

குடைவரைக்குத் தெற்கிலுள்ள பாறைச்சரிவில்தான் உலகப் புகழ்பெற்ற இசைக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.4 அருகே இலலிதாசனத்தில் உடைந்த வலத்தந்தத்துடன் இடம்புரியாகக் காட்சியளிக்கும் பிள்ளையாரின் பின்கைகளில் வலப்புறம் அங்குசமும் இடப்புறம் பாசமும் உள்ளன. முன்கைகளில் வலப்புறம் உடைந்த தந்தம். இடப்புறம் இருப்பது ஏடாகலாம். மணியாரமும் உதரபந்தமும் முப்புரிநூலும் அணிந்துள்ள அவரது தலையை நெற்றிப்பட்டம் அணைத்த கரண்டமகுடம் அணிசெய்யக் கணுக்கால்களில் சலங்கைகள். கைகளில் வளைகள். பிள்ளையார் அமர்ந்துள்ள தளம் வலப்பகுதியில் தாமரைத் தளமாய் உருவாகியுள்ளது.

மலைச்சரிவையொட்டிச் சுனை ஒன்று காணப்படுகிறது.5 குடைவரைக்கு வடக்கிலுள்ள கற்றளியிலும் பிள்ளையார் சிற்பமே உள்ளது. இக்கற்றளியை வயலகம் நமசிவாய தேவன் அமைத்துள்ளார்.6 குடைவரைக்கு மேலுள்ள பகுதியில் காணப்படும் பிளவின் நெற்றிப்பகுதியில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நாயன்மார்களுக்கு இடையே இறைவனும் இறைவியும் நந்திமீது இவர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர்.

சவுந்தரநாயகி திருமுன்

குடைவரைக்குத் தென்புறத்தே வீரபாண்டியர் காலத்தில் தேவரடியார் துக்கையாண்டாள் மகள் நாச்சியால் எழுப்பப்பட்ட சவுந்தரநாயகியம்மன் கோயில் காட்சிதருகிறது. பாதபந்தத் தாங்குதளத்துடன் எழும் இக்கோயில் விமானத்தின் முதல் மூன்று உறுப்புகள் மட்டுமே உள்ளன. எஞ்சியவை சிதறி விட்டன. முகமண்டபம் முன்னால் ஒரு முன்றில் பெற்றுள்ளது.

குடைவரைக்கு முன்னுள்ள மண்டபங்கள்

குடைவரைக்கு முன் கட்டப்பட்டுள்ள இரு மண்டபங்களுள்,7 கற்கள் அடுக்கிய துணைத்தளத்தின்மீது பாதபந்தத் தாங்குதளம், நான்முகத் தூண்கள் தழுவிய சுவர், கூரையுறுப்புகள் பெற்று நிற்கும் முதல் மண்டபம் அளவில் சிறியது. தாங்கு தளத்திலும் சுவரிலும் உள்ள கல்வெட்டுகள் கொண்டு அதைப் பிற்சோழர் காலத்ததாகக் கொள்ளலாம்.

அதைப் போல் மும்மடங்கிற்கும் மேலான அளவில் கட்டப்பட்டுள்ள இரண்டாம் மண்டபத்தின்8 புறச்சுவரில் சில கல்வெட்டுத் துணுக்குகளும் இரண்டு சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. அம்மண்டபத்தின் முன்னுள்ள படிக்கட்டு மேடை இரகுநாதராய தொண்டைமானால் கட்டப்பட்டது.9 மண்டபத்தின் நுழைவாயில் தாமரைவரிகளும் சிறிய நாகபந்தங்களும் பெற்ற நிலைக்கால்களைக் கொண்டுள்ளது. உட்புறத்தே நான்கு தூண்கள் தாங்கும் அம்மண்டபத்தில், கருவறையை நோக்கிய நந்தியொன்று உள்ளது. தூண்களின் நடுச்சதுரங்களில் மலர்ப்பதக்கங்கள். ஒன்றில் மட்டும் சிம்மம்.10

முச்சதுர, இருகட்டுத் தூண்கள் நான்கு தாங்கும் முதல் மண்டபத்தின் வாயிலும் தாமரையிதழ்களுடனான நிலைக்கால்களைப் பெற்றுள்ளது. மண்டபத்தின் தென்வாயில் அடைபட்டு உள்ளது. இங்குள்ள சோமாஸ்கந்தர், சண்டேசுவரர் சிற்பங்களுள் சண்டேசுவரர் சுகாசனத்தில் உள்ளார். செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். வலக்கையில் மழு. இடக்கை தொடை மீது உள்ளது. சிதைந்துள்ள சோமாஸ்கந்தர் சிற்பத்தில் இறைவன் பின்கைகளில் மழு, மான் ஏந்தி சுகாசனத்தில் உள்ளார். இட முன் கை தொடையின் மீதிருக்க, வல முன் கை சிதைந்துள்ளது. இடக்கையை ஊன்றியவாறு, இடப்புறமுள்ள இறைவியின் மடியில், தந்தையை நோக்கிக் கைகளை நீட்டித் தாவியவாறு கந்தன்.11 உத்குடியிலுள்ள இறைவியின் வலக்கையில் மலர் மொட்டு. மண்டபங்கள் இரண்டிலும் உட்புறத்தே கல்வெட்டுகள் ஏதும் காணுமாறில்லை.

குடைவரை

முகப்பு, கருவறை பெற்ற செவ்வக மண்டபம் எனக் குடைவரை எளிமையாக அகழப்பட்டுள்ளது. முகப்பிற்கு முன்னுள்ள பாறைத்தரையுடன் இணையுமாறு முதல் மண்டபத் தரை பலகைக்கற்களால் மூடப்பட்டுள்ளது.

முகப்பு

பாறைத்தரையில் இருந்து ஏறத்தாழ 6 செ. மீ. உயரத்தில், கிழக்கு மேற்காக 70 செ. மீ. அகலமும் தென்வடலாக 5. 66 மீ. நீளமும் கொண்ட முகப்புத்தரை உருவாகியுள்ளது. அதன் மீதிருந்தே, ஆனால், கிழக்கிலும் மேற்கிலும் ஏறத்தாழ 4 செ. மீ. உள்ளடங்கிய நிலையில் எழும் நான்கு கனமான நான்முகத் தூண்களுள் இடைத்தூண்கள் முழுத்தூண்களாகவும் பக்கத் தூண்கள் அரைத்தூண்களாகவும் உள்ளன.

பிற தென்தமிழ்நாட்டுக் குடைவரைத் தூண்களினும் கனமாகவும் உயரம் குறைந்தும் காணப்படும் அவற்றின் மேற்பகுதியில் நாற்புறத்தும் 16 செ. மீ. உயரம் கொண்ட இடைக்கட்டு உள்ளது. உடலின் முடிவில் வடிவமைக்கப்படாத தாமரைக்கட்டும் அதையடுத்துக் கலசம்,12 தாடி, கும்பம், மெலிதான வீரகண்டம் இவையும் நிரலே காட்டப்பட்டுள்ளன. வீரகண்டத்தின் மேல் அமர்ந்துள்ள உயரக் குறைவான போதிகையின்13 பட்டை பெற்ற தரங்கக் கைகள் இடைத்தூண்களில் இருபுறம் கிளைத்தும் பக்கத்தூண்களில் ஒருபுறம் கிளைத்தும் வளைமுகமாக உத்திரம் தாங்குகின்றன. மேலே கூரையைத் தழுவிய வாஜனம்.

முகப்புக் கூரையின் முன்னிழுப்பு முதல் மண்டபக் கூரையுடன் பொருந்தியுள்ளதால், கபோத அமைப்பை அறியக்கூடவில்லை. அரைத்தூண்களின் கிழக்கு முகமும் அவை ஒன்றியுள்ள பாறையின் பக்கச்சுவர்களும் முதல் மண்டபக் கட்டமைப்பில் பெரிதும் மறைந்துள்ளன. அச்சுவர்களில் கிழக்குமுகமாக அரைத்தூண்களை ஒட்டி, மேலிருந்து கீழாக இரண்டு சதுரப்பட்டிகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றுள், உத்திரத்திலிருந்து கீழ்நோக்கி இறங்கும் வெளிப்பட்டி, உத்திரத்தின் கீழ் அதன் விளம்பிற்குச் சற்று உள்ளடங்கி இறங்கும் உள்பட்டியைவிட ஏறத்தாழ 2 செ. மீ. அளவிற்குப் பிதுக்கமாக உள்ளது.

மண்டபம்

முகப்புத் தரையிலிருந்து 3 செ. மீ. தாழ உள்ள மண்டபம் தென்வடலாக 7. 25 மீ. நீளம், கிழக்கு மேற்காக 1. 82 மீ. அகலம் கொண்டுள்ளது. 2. 58 மீ. உயரமுள்ள அதன் பின்சுவரில் 91 செ. மீ. அகலத்தில் 1. 99 மீ. உயரத்தில் கருவறைக்கான வாயில் வெட்டப்பட்டுள்ளது. கீழ், மேல் நிலைகளும் அலங்கரிப்பற்ற பக்கநிலைகளும் கொண்டுள்ள அவ்வாயிலை, மண்டபத் தரையிலிருந்து எழும் உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள், பக்கத்திற்கு ஒன்றாக அணைத்துள்ளன. அவற்றின் மேலுள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் தாங்கும் உத்திரத்தை அடுத்துக் கூரையைத் தழுவிய வாஜனம். இவ்வாஜனம் வாயிலை அடுத்துத் தெற்கிலும் வடக்கிலும் கூரையையொட்டி இரண்டு சதுரப்பட்டிகளெனப் பிரிந்து மேற்குச்சுவர் முழுவதும் நீள்கிறது.

பூதத்தோரணம்

கருவறை வாயில் மேல்நிலையின் வட, தென்மூலைகளை மறைத்தவாறு பக்கத்திற்கு ஒன்றாகப் பூதங்கள் இரண்டு பறக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளன.14 உட்கைகளால் உத்திரத்தையும் வெளிக்கைகளால் வாஜனத்தையும் தாங்கும் அவற்றின் மடங்கிய உட்கால்கள் அரைத்தூண்களைத் தொட்டவாறு இருக்க, வெளிக்கால்கள் மடங்கி, மேலுயர்ந்து, உத்திரம் தாங்கும் பணியில் முனைந்துள்ளன. தலையோ வாஜனந் தாங்கியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. கற்றளிகளில் காணப்படும் தாங்கு சிற்பங்களின் முன்னோடிகள் போல் அமைந்துள்ள இவை, வாயில் தோரணமாகவும் விளங்குகின்றன. தமிழ்நாட்டுக் குடைவரைகளில் கருவறை வாயிலில் பூதமாலை காட்டப்பட்டுள்ள ஒரே இடம் இதுதான் எனலாம்.

இதே போல் மேலுமிரண்டு பூதங்கள் போதிகைக் கைகளை மறைத்தவாறு பக்கத்திற்கொன்றாக அவ்வத்திசை நோக்கிப் பறக்கும் நிலையில் உள்ளன. எனினும், அவற்றின் முகங்கள் கிழக்குப் பார்வையாக உள்ளன. தென்பூதம் தலையாலும் இடக்கையாலும் வாஜனம் தாங்கியபடி, வளைத்துத் திருப்பிய இடக்காலால் உத்திரத்தைத் தொட்டவாறுள்ளது. அதன் வலக்கையும் மடக்கிய வலக்காலும் போதிகையில் ஒன்றியுள்ளன. சடைப்பாரமாகத் தலைமுடி பெற்றுள்ள அதன் கழுத்தில் ஆரம்; கைகளில் வளை. சிதைந்துள்ள வடக்குப் பூதம் தலையாலும் வலக்கையாலும் வாஜனம் தாங்கி, வலக்காலால் உத்திரத்தைத் தொட்டுள்ளது. இடக்கால் மடங்கி அரைத்தூணின் போதிகையில் ஒன்ற, இடக்கை முழங்காலின் மேல்.

முகமண்டபத் தரையிலிருந்து கருவறை வாயிலையடைய வாய்ப்பாக மூன்று படிகள் வெட்டப்பட்டுள்ளன. கீழ்ப்படி நிலாக்கல்லென வளைந்து இருபுறத்தும் சுருண்டு முடிகிறது. இரண்டாம் படியின் அளவிலிருந்தே வாயிலின் பக்கநிலைகள் எழுகின்றன.

கோட்டங்கள்

முகமண்டப மேற்குச்சுவரின் தென்புறத்தே கீழ்ப்பகுதியில், தரையிலிருந்து 28 செ. மீ. உயரத்தில் 55 செ. மீ. அகல, 65 செ. மீ. உயர, 5 செ. மீ. ஆழக் கோட்டம் மாடஅமைப்பில் அகழப்பட்டுப் பிள்ளையார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.15 முகமண்டப வட, தென்சுவர்களின் பெரும்பகுதி அகழ்ந்து கோட்டமாக்கப்பட்டுள்ளது. தெற்குக் கோட்டம் 2. 19 மீ. உயரம், 1. 25 மீ. அகலம், 12 செ. மீ. ஆழம் கொள்ள, வடக்குக் கோட்டம் 2. 19 மீ. உயரம், 1. 30 மீ. அகலம், 12 செ. மீ. ஆழம் பெற்றுள்ளது. மாடஅமைப்பில் உள்ள இத்தகு கோட்டங்களைப் பல்லவர் குடைவரைகளில் காணமுடிவதில்லை.16 பாண்டியர்பகுதிக் குடைவரைகளில் மூவரைவென்றான், ம. புதுப்பட்டி போன்ற ஒன்றிரண்டு இடங்களிலேயே இத்தகு மாடக்கோட்டங்கள் காணக்கிடைக்கின்றன.

கோட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள நெடிய காவலர்கள் நிற்பதற்கேற்பக் கோட்டங்களின் கீழ்ப்பகுதி தென்புறம் 27 செ. மீ. அகலத்திலும் வடபுறம் 24 செ. மீ. அகலத்திலும் தளம் போல அமைக்கப்பட்டுள்ளது. இத்தளங்கள் முகமண்டபத் தரையில் இருந்து தென்புறம் 35 செ. மீ. உயரத்திலும் வடபுறம் 30 செ. மீ. உயரத்திலுமாய் உள்ளன. கோட்டங்களைச் சுவர்ப் பகுதிகள் அணைத்துள்ளன.

மேற்குச்சுவர்க் கூரையை ஒட்டி ஓடும் பிதுக்கமான இரண்டு சதுரப்பட்டிகளுள் மேற்பட்டி, வட, தென்சுவர்களின் கூரையை ஒட்டியும் தொடர்ந்தமைந்துள்ளது. கீழ்ப்பட்டி, கனத்தில் குறைந்து, அகலம் பெருகி 10 செ. மீ. அளவிற்கான செவ்வகப் பட்டியாக மேற்குச் சுவரை ஒட்டி வட, தென்சுவர்களில் முகமண்டபத்தரைவரை இறக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் கூரையும் தரையும் சீர்மையுற்றுள்ளன.

கருவறை

வடக்குத் தெற்காக 4. 07 மீ. நீளம், கிழக்கு மேற்காக 3. 75 மீ. அகலம், 2. 38 மீ. உயரமுடைய கருவறையின் நான்கு சுவர்களும் கூரையும் வெறுமையாகச் சீர்மையுற உள்ளன. கருவறைத் தரையின் நடுவே 81 செ. மீ. உயரம், 1. 60 மீ. பக்கமுடைய சதுரமான ஆவுடையாரும் 78 செ. மீ. உயர உருளைப் பாணமுமாய்ப் பாறையில் வெட்டப்பட்ட இலிங்கத்திருமேனி காட்சியளிக்கிறது.

ஆவுடையாரின் தென்பகுதியில் தரையிலிருந்து கண்டக் கீழ்க் கம்புவரை 29 செ. மீ. நீளம், 32 செ. மீ. அகலம், 15 செ. மீ. கனமுள்ள பாறைப்பகுதி சேர்ந்துள்ளது. ஆவுடையாரின் புறப்பகுதி ஜகதி, உருள்குமுதம், கம்புகளும் பாதங்களும் பெற்ற கண்டம், பட்டிகை, மேற்கம்பு என உறுப்புகள் பெற்றுப் பாதபந்தமாக அமைய, மேற்கம்பின் வடநீட்டல் கோமுகமாக உள்ளது. முழுக்காட்டு நீரை ஏற்கத் தரையிலுள்ள சதுரமான குழி கற்பலகையொன்றால் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து தொடரும் வடிகால் வடபுறத்தே ஓடி வெளியேறுகிறது.

கருவறையின் நான்கு சுவர்கள் மீதும் கூரையையொட்டி உத்திரமும் வாஜனமும் படர்ந்துள்ளன. பொதுவாகக் கருவறைக் கூரையைத் தழுவிய நிலையில் வாஜனம் மட்டுமே இடம்பெறும். ஆனால், இங்கு உத்திரமும் காட்டப்பட்டிருப்பது மாறுபட்ட கலைமரபாக விளங்குகிறது. கருவறையின் உட்புறத்தே வாயில் மேல்நிலைக்கு மேலாகக் கதவமைப்பிற்காகப் பிற்காலத்தே உத்திரம் சிதைக்கப்பட்டுள்ளது. அதன் எஞ்சிய பகுதிகள் கருவறையின் வட, தென்சுவர்களின் கிழக்கு மூலைகளில் தென்புறத்தே செவ்வகமாகவும் வடபுறத்தே வளைமுகமாகவும் உள்ளன.

குறிப்புகள்

1. முதலாய்வு நாட்கள் 3. 3. 2001, 20. 12. 2001. மீளாய்வு நாள் 14. 6. 2009.
2. சொ. சாந்தலிங்கம் பல்லவராயர் கட்டியதாகக் கூறுகிறார். குடுமியான்மலை, ப. 66.
3. SII 17 : 385, 386.
4. IPS : 2.
5. இச்சுனை அருகே உள்ள கல்வெட்டு, '(பரம) சேவகன் நக்கன்' என்று படிக்கப்பட்டுள்ளது. ஆவணம் 18, ப. 18. இதன் காலம் கி. பி. 6ம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது.
6. சொ. சாந்தலிங்கம், மு. கு. நூல், ப. 36.
7. குடைவரைக்கு முன் மூன்று மண்டபங்கள் இருப்பதாகக் கூறுகிறார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 20.
8. இம்மண்டபம் இரகுநாதராய தொண்டைமானால் கட்டப் பட்டதென்னும் ஜெ. ராஜாமுகமது அதற்கான சான்றேதும் தரவில்லை. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, ப. 208.
9. IPS : 1089.
10. நரசிம்மம் என்கிறார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 24.
11. கந்தன் அன்னையின் மடியில் விளையாடிய நிலையில் இருப்ப தாகக் கூறுகிறார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 23.
12. மாலாஸ்தானமும் உள்ளதென்கிறார் கே. வி. செளந்தரராஜன், மு. கு. நூல், ப. 83. நான்கு பட்டை அமைப்பு, மேலே குடம் உள்ளதாகக் கூறுகிறார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 21.
13. 'Padmakesara type of corbel' என்கிறார் கே. வி. செளந்தர ராஜன். மு. கு. நூல், ப. 83.
14. வாயிலின் மேல் கபோதம் இருப்பதாகவும் அதன் கீழுள்ள வலபிப்பகுதியில் பறக்கும் கணங்கள் காட்டப்பட்டிருப்ப தாகவும் கே. வி. செளந்தரராஜன் கூறுவது பிழையாகும். மு. கு. நூல், ப. 83.
15. 'கருவறை நுழைவாயிலுக்கு இடதுபுறமாக உள்ள கிழக்குச் சுவரில்' பிள்ளையார் செதுக்கப்பட்டுள்ளார் என்கிறார் சொ. சாந்தலிங்கம். மு. கு. நூல், ப. 21.
இப்பிள்ளையாருக்குச் சற்றுத் தொலைவில் சப்தமாதர்களின் புடைப்புச் சிற்பத்தொகுதி காணப்படுவதாகக் கூறும் சு. இராச வேலும் அ. கி. சேஷாத்திரியும் இச்சிற்பங்கள் இக்குடை வரை, 'மாகேசுவரர்' பிரிவைச் சார்ந்தது எனக் கட்டியம் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இங்கு சப்த மாதர் புடைப்புச் சிற்பத்தொகுதியே இல்லை. சப்தமாதர் சிற்பங்களின் இருப்பு ஒரு குடைவரையை மாகேசுவரர் குடை வரையாகக் கருதவைக்கும் எனில், கோகர்ணம், மலையடிப் பட்டி, பரங்குன்றம், குன்றத்தூர், கோளக்குடிக் குடைவரை களும் மாகேசுவரர் குடைவரைகளாகிவிடும். ஆனால், அக்குடைவரைகளைப் பற்றி எழுதியுள்ள எவ்விடத்தும் அவற்றை மாகேசுவரர் குடைவரைகளாக இவ்விருவரும் அடையாளப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சப்தமாதர்களுக்கும் மாகேசுவரப் பிரிவிற்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் இவர்கள் விளக்கமேதும் தரவில்லை. மு. கு. நூல், ப. 171.
16. மேலைச்சேரி சிகாரி பல்லவேசுவரம் குடைவரையில் காணப் படும் அம்மன் கோட்டம் மாடஅமைப்பில் இருந்தபோதும் அது காலத்தால் பிற்பட்டதாகும். மு. நளினி, இரா. கலைக் கோவன், மகேந்திரர் குடைவரைகள், ப. 260.

(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.