http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 76
இதழ் 76 [ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம். கடந்த 3-ஜனவரி-2011 ஜூனியர் விகடன் இதழில் வெளியான ஒரு கட்டுரை நம் கவனத்தை ஈர்த்தது. 'வாழ முடியாத ஊரில் நாட்டிய விழா எதற்கு?' என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்தக் கட்டுரையில், மாமல்லபுரம் மக்களின் குறைகளை அரசியலாக்கியிருந்தார்கள். தொன்மைச் சின்னங்களைச் சுற்றி 1000 அடி சுற்றளவுக்கு எந்தவொரு புதிய கட்டடத்தையும் கட்டவோ, இருப்பதைப் புதுப்பிக்கவோ விரும்பினால், தொல்லியல் துறையின் அனுமதி பெற்ற பிறகே செய்ய முடியும். இது நினைவுச் சின்னங்களைப் (Monuments) பாதுகாப்பதற்கான தொல்லியல் துறையின் சட்டங்களில் ஒன்று. இந்தச் சட்டத்தினால் மாமல்லபுரம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சில அரசியல்வாதிகளும் சிற்பக்கூடம் வைத்திருப்பவர்களும் பேட்டி அளித்திருந்தார்கள். அதாவது, கடற்கரைக் கோயில், ஐந்து இரதங்கள் மற்றும் குடைவரைகளைச் சுற்றிப் பொதுமக்கள் வசிக்க முடியவில்லையாம். அக்கட்டுரையில் ஓர் அரசியல்வாதி கீழ்க்கண்டவாறு கூறியிருந்தார். "வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்திட வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நினைவு இடங்களுக்கும், ஆலயங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல், மாமல்லபுரத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தியதுதான் தவறு. பொதுவாக நினைவிடங்கள் என்பவை ஊருக்கு வெளியே இருப்பவை. அங்கே, இந்தச் சட்டம் மக்களுக்குப் பெரிய பாதிப்பை உண்டாக்காது. ஆனால் மாமல்லபுரத்தில் இருக்கும் புராதனச் சின்னங்கள் அனைத்தும் ஆறுகால பூஜைகள் நடக்கும் கோயில்கள். இந்த ஆலயங்களைச் சுற்றித் தேர் ஓடும் ராஜவீதி, அங்காடி, பூங்கா என அனைத்தும் மக்கள் வாழ்விடமாகவே இருக்கிறது. வீடுகளில் புதிதாக ஒரு மின் இணைப்புப் பெறக்கூட இந்தச் சட்டம் அனுமதி மறுக்கிறது. அவ்வளவு ஏன்? சேதமடைந்துபோன ஒரு மின்சார மீட்டரை வேறு இடத்தில் மாற்றிப் பொருத்துவதுகூட இந்தச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். சுதந்திர இந்தியாவில் இருந்தும், சொந்த நாட்டிலேயே அகதிகள் போல இருக்கிறார்கள் மல்லை நகர மக்கள். எனவேதான், கெடுபிடியான இந்தத் தொல்லியல்துறை சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி, கட்சிப் பாகுபாடு இன்றி அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களோடு கைகோத்து, மனிதச் சங்கிலி, கடையடைப்புப் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டோம்." இதில், மாமல்லபுரத்தில் உள்ள எந்தக் கோயிலில் ஆறுகால பூஜை நடக்கிறது என்று தெரியவில்லை. எங்களுக்குத் தெரிந்து ஒரேயொரு பெருமாள் கோயிலில் மட்டும் பக்தர்கள் வரவை எதிர்நோக்கிக் குருக்கள் காத்திருப்பார். மற்றபடி மாமல்லபுரத்துக்கு வரும் யாரும் பக்தி நோக்கோடு வருவதாகத் தெரியவில்லை. சுற்றுலாவாகவும், வரலாற்று ஆய்வுக்காகவும்தான் மாமல்லபுரத்துக்கு மக்கள் வருகிறார்கள். அங்கு இருக்கும் பூக்கடைகளின் எண்ணிக்கையையும், குளிர்பானக் கடைகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை விளங்கும். ஒருவேளை, தொல்லியல்துறை இந்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தால், மாமல்லபுரம் எப்படி மாறும் என்பதை நினைத்தாலே கவலையளிக்கிறது. இன்று சென்னையில் மிகவேகமாக முன்னேறி வரும் பகுதி, தகவல் தொழில்நுட்ப விரைவுச்சாலை எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலை. அடையாறிலிருந்து கல்பாக்கம் வரையில் விண்ணை முட்டும் எண்ணற்ற அடுக்குமாடிக் குடியிருப்புகள் தினந்தோறும் தோன்றிய வண்ணம் உள்ளன. இதில் மாமல்லபுரம் மட்டுமே இப்போது விதிவிலக்காக இருக்கிறது. அதனால்தான் அதன் அழகும் ஓரளவுக்குக் கெடாமல் இருக்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் நட்சத்திர விடுதிகளுக்கும் கடற்கரை ஓய்வு இல்லங்களுக்கும் பஞ்சமே இல்லை. யோசித்துப் பாருங்கள். தற்போது கடற்கரைக் கோயிலின் நுழைவிடத்தில் அழகிய புல்வெளி இருக்கிறது. அந்த இடத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு இருந்தால் எவ்வளவு அசிங்கமாக இருக்கும்? தொல்லியல்துறையின் இந்தச் சட்டம் இல்லாவிடில், இதுதான் நடக்கும். பாரீஸ் சென்று வந்தவர்கள் ஈஃபில் டவரைப் பார்த்திருப்பார்கள். ஜப்பான் சென்று வந்தவர்கள் டோக்கியோ டவரைப் பார்த்திருப்பார்கள். இரண்டில் எது பிரம்மாண்டம் என்று கேட்டால், ஈஃபில் டவர்தான் உயரமானது என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் டோக்கியோ டவர்தான் உயரம் அதிகம். இருப்பினும் அதன் உயரத்தை ஏன் உணரமுடியாமல் போனது? அதைச் சுற்றிலும் ஏறத்தாழ அதே உயரத்துக்கு அடுக்குமாடிக் கட்டடங்கள் இருப்பதால்தான். பாரீஸில் பரந்த புல்வெளிக்கு நடுவே ஒற்றையாய் அக்கோபுரம் நிற்பதாலேயே பார்த்தவுடன் பிரமிக்க வைக்கிறது. அதுபோல்தான் மாமல்லபுரமும் வருங்காலத்தில் ஆகும் இச்சட்டம் இல்லாவிடில். புராதனச் சின்னங்கள் இல்லாத இடங்களுக்கு மக்கள் தங்கள் வாழ்விடங்களை மாற்றிக்கொள்வதும் அரசு அவர்களுக்கு மாற்று இடங்களை அளிப்பதும் எளிது. ஆனால் கடற்கரைக் கோயிலையும் ஐந்து இரதங்களையும் பெயர்த்து மக்கள் வசிக்காத இடங்களில் வைப்பது இயலாத காரியம். நாட்டில் அரசியலாக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் தொல்லியல்துறையின் செயல்பாட்டைக் கெடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |