http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 86

இதழ் 86
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

எதுதான் தமிழ்ப்புத்தாண்டு?
திரும்பிப்பார்க்கிறோம் - 33
தவ்வைத்தேவி
சேக்கிழாரும் அவர் காலமும் - 3
The Sapthamathas at Ayyarappar temple in Thiruvaiyaru
நன்னன் திருவிழா / நன்னன் பிறந்தநாள் விழா
இதழ் எண். 86 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப்பார்க்கிறோம் - 33
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி,

உன் மடல் கண்டேன். திரு. சிவக்குமாரின் ஓவியப்பார்வைகள் பொழிவிற்கு வந்திருந்தமையை நினைவுகூர்ந்திருந்தாய். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவேரி மகளிர் கல்லூரி மாணவியருள் ஒருவர் சென்ற திங்கள் வெளியான திரும்பிப்பார்க்கிறோம் தொடரைப் படித்து மிகுந்த மகிழ்வுடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். பதிவுகள் தொடர்புடைய அனைவரையுமே திரும்பிப்பார்க்க வைப்பதில் மகிழ்கிறேன்.

17. 3. 1990 காலை தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் துறைப் பேராசிரியர் புலவர் செ. இராசு தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார். ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் உள்ள அருங்காட்சியகம் பேராசிரியர் இராசுவின் உழைப்பையும் ஊக்கத்தையும் வெளிப்படுத்தும் அமைப்பாகும். அவர் அங்குப் பணியாற்றியபோது மாவட்டம் முழுவதும் பயணித்துத் தேடிச் சேகரித்த கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்பேடுகள் அனைத்தும் அந்த அருங்காட்சியகத்தில் அவரது திறமையைப் பறைசாற்றுமாறு இடம்பெற்றுள்ளன. கல்வெட்டுத்துறையில் கோலோச்சிய சதாசிவ பண்டாரத்தார், டாக்டர் மா. இராசமாணிக்கனார், சுந்தரேசனார், மயிலை சீனி. வேங்கடசாமி இவர்களுக்குப் பிறகு தமிழறிஞராக அத்துறையில் சிறப்பிடம் பெற்றவர் புலவர் இராசு. எளிமையும் அனைவரிடமும் இனிமையாகப் பழகும் பண்பும் அவரிடம் இயல்பாகவே இருந்தமையால் மாணவர்கள் அவர் வகுப்பைப் பெரிதும் விரும்பினர்.

அன்று மாலை 'பாடுகளும் பயன்களும்' என்ற தலைப்பில் மையக் கூட்டத்தில் புலவர் இராசு உரையாற்றினார். மருத்துவர் சு. பழனியாண்டி நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். திரு. பழனி யாண்டி சிறந்த தமிழ் ஆர்வலர். கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். பயணக் கட்டுரைகள் படைப்பதில் வல்லவர். ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிகழும் இந்திய மருத்துவ மன்ற மாநாடுகளுக்குச் செல்வதுடன் அந்தந்த மாநிலத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சென்று கண்டு களிப்பதுடன், தம்முடைய ஒவ்வொரு பயணத்தையும் ஒரு கட்டுரையாக அமைத்து அதை மருத்துவ மன்ற மலர்களில் வெளியிட்டு அனைவரும் படித்துப் பயன்பெறுமாறு செய்வது அவர் வழக்கம். அக்கட்டுரைகளைத் தொகுத்து இரண்டு நூல்கள் வெளியிட்ட பெருமையும் அவருக்கு உண்டு. முதல் நூல் அந்த ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வெளியான நூல்களில் சிறந்த நூலாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுப் பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இராசுவின் உரைக்குப் பிறகு உதவி இயக்குநராகப் பணி உயர்வு பெற்று மதுரைக்கு மாற்றலாகிச் செல்லும் இனிய நண்பர் அப்துல் மஜீதுக்குப் பாராட்டு-வழியனுப்பு விழா நிகழ்ந்தது. மஜீதின் பண்புநலன்களையும் உழைப்பையும் பாராட்டி நான் உரையாற்ற, மஜீது ஏற்புரை வழங்கினார். ஞhயிறு காலை வகுப்பில் புலவர் இராசு செப்பேடுகள் பற்றி விரித்துரைத்தார். மாணவர்களுள் ஸ்ரீராம் விலகிக் கொள்ள, திருச்சிராப்பள்ளி அருங்காட்சியக் காப்பாட்சியர் திரு. ம. காந்தி புதிய உறுப்பினராக இணைந்து கொண்டார். ஆறுமுகத்தின் மூத்த மகள் தமிழரசியும் வகுப்புக்கு வரத் தொடங்கினார்.

அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அழைப்பை ஏற்று 24. 3. 1990 அன்று திருப்புத்தூர் சென்றிருந்தோம். ஆதீனக் கோயில்களுள் ஒன்றான திருத்தளிநாதர் கோயிலின் திருப்பணி வேலைகள் தொடங்கியிருந்தமையால், கல்வெட்டுகளைப் படியெடுத்துக் கோயிலின் வரலாற்றைத் தொகுத்துத் தருமாறு அடிகளார் கேட்டிருந்தார். திருத்தளிநாதர் கோயில் முற்பாண்டியர் கலைமுறையில் அமைந்த அருமையான கட்டுமானமாகும். ஏற்கனவே பார்த்திருந்தபோதும் கோயிலாரின் முழு ஒத்துழைப்புடன் பார்க்கும் வாய்ப்பு அமைந்தமை மகிழ்வளித்தது. கெளரிதாண்டவர் என்ற பெயருடன் ஆடவல்லானின் மிகப் பெரிய திருமேனி அங்குள்ளது. அதை விரிவான அளவில் ஆராய முடிந்தது. நந்தி மத்தளம் வாசிக்க, சிவபெருமான் ஆடல்நிகழ்த்த, உமை அதை நின்று நோக்குமாறு போலச் சிற்பத்தொகுதி அமைந்துள்ளது. ஆய்வின்போது குடக்கூத்துச் சிற்பம் ஒன்றையும் மாறன் சடையனின் வட்டெழுத்துக் கல்வெட்டொன்றையும் கண்டறிய முடிந்தது. ஏறத்தாழ நாற்பதிற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுகள் கிடைத்தன. இப்பணிக்காக ஓராண்டுக்கும் மேலாக உழைக்கவேண்டியிருந்தது.



முதல் பயணத்தின்போதே அடிகளாரின் உதவியுடன் பிள்ளையார்பட்டிக் குடைவரையைக் காணச் சென்றிருந்தோம். குடைவரையின் உள்ளிருந்த வட்டெழுத்துக் கல்வெட்டைப் படித்தோம். பிள்ளையாரின் வலக்கையில் இருந்த பொருளைச் சிதைந்த மோதகமாக அடையாளப்படுத்தினோம். அதைக் கோயிலார் இலிங்கம் என்று கருதிக் கொண்டிருந்தனர். அக்குடைவரை பிற குடைவரைகளில் இருந்து அமைப்பில் சற்று வேறுபட்டிருப்பதை அறியமுடிந்தது. சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து குறிப்புகள் எடுத்தோம்.



குன்றக்குடிக் குடைவரைகளையும் பார்வையிட்டுப் படங்கள் எடுத்துக்கொண்டோம். அந்தப் பயணத்தின்போது முதல் நாள் இரவு தங்கத் திருப்புத்தூர் சுற்றுலா மாளிகையில் அறை ஒதுக்கியிருந்தார்கள். அந்த வளாகச் சூழலின் அமைதி எங்களைப் பெரிதும் கவர்ந்தது. நான், நளினி, அகிலா மூவரும் ஆறுமுகத்துடன் நெடுநேரம் திருப்புத்தூர்க் கோயிலைப் பற்றி வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இரவு உணவு வந்து சேர்ந்தது. அதைக் கொணர்ந்த கோயில் அலுவலர்கள் இருவரும் எங்களிடம் பெரிதும் அன்பு பாராட்டினர். திருப்புத்தூரில் இருந்தவரை எங்கள் உணவுத் தேவைகளை அவர்களே மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டனர்.

26. 3. 1990 காலை மைசூர்க் கல்வெட்டு இயக்குநர் அலுவலகத்தைச் சேர்ந்த முனைவர் மு. து. சம்பத் பிராமி கல்வெட்டுகள் குறித்து வகுப்பெடுத்தார். அத்துறையில் கல்வெட்டாய்வாளராகப் பணியேற்றிருந்த திரு. சு. இராசவேலு தமிழ்க் கல்வெட்டுகள் குறித்து உரைநிகழ்த்தினார். மாலை நிகழ்ந்த மைய வரலாற்றுச் சொற்பொழிவுகள் முதலாண்டு நிறைவு விழாவிற்கு அவரே தலைமை ஏற்றார். 'எப்படி இயங்குகிறோம்' என்ற தலைப்பில் சம்பத் பொழிவாற்ற, பெருந்திரளாய்ச் சுவைஞர்கள் கலந்துகொண்ட மையக் கூட்டங்களுள் அதுவும் ஒன்றாக அமைந்தது.

30. 3. 1990ல் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆனந்தரங்கரின் பிறந்த நாள் விழாக் கருத்தரங்கம் அமைய விருப்பதாகவும் அதில் ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் காட்டும் அரசியல் எனும் தலைப்பில் கட்டுரை வழங்கவேண்டும் என்றும் கேட்டுப் பேராசிரியர் க. ப. அறவாணன் மடல் எழுதியிருந்தார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு புதுச்சேரி மாநிலக் கோயில்களைப் பார்வையிடவும் நானும் நளினியும் 29. 3. 1990 மாலை புதுச்சேரி சேர்ந்தோம். புதுச்சேரிப் பல்கலை நாடகப்பள்ளியில் இளங்கலை பயின்று கொண்டிருந்த என் அண்ணன் பேராசிரியர் மா. ரா. இளங்கோவனின் மகன் குமரவேல் எங்களை வரவேற்றதுடன் 30, 31 இரண்டு நாட்களும் உடனிருந்து கோயில் ஆய்வுகளுக்குத் துணையானார்.

கருத்தரங்கத்தின் போதுதான் ஆனந்தரங்கரின் மரபுவழிப் பெயரர் திரு. ஆனந்தரங்க ரவிச்சந்தரைச் சந்திக்கமுடிந்தது. பழகுதற்கு இனியராக இருந்தமையால் அவருடன் நட்பு ஏற்பட்டது. ஆனந்தரங்கர் மாளிகையைப் பார்த்துக் கட்டுரை ஒன்று எழுதித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார். கருத்தரங்கை நிகழ்த்திய தமிழ்த்துறைப் பேராசிரியர்களோடு பழகவும் வாய்ப்பமைந்தது. கருத்தரங்கில் பங்கேற்ற சுவைஞர்கள் பலரும் நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னை அணுகி வாழ்த்தியதோடு அவர்களுக்கும் என் தந்தையாருக்கும் இருந்த நட்பு, தொடர்பு, இன்னபிற குறித்துப் பேசி மகிழ்வித்தனர்.

கருத்தரங்கம் முடிந்ததும் பாகூர் திருமூலநாதர் கோயிலுக்குச் சென்றோம். புதுவை மாநிலக் கோயில்களை நான் பார்ப்பது அதுவே முதல் முறை. நிருபதுங்கப் பல்லவரின் பாகூர்ச் செப்பேட்டைப் படித்த நாள் முதலே பாகூரைப் பார்க்கவேண்டும் எனக் கருதியிருந்தேன். அந்த வாய்ப்பு ஆனந்தரங்கர் வழி வந்தது. நாங்கள் சென்றிருந்தபோது பாகூர்க் கோயிலில் ஆள்நடமாட்டமே இல்லை. அதனால், எந்தத் தொல்லையும் இன்றிக் கோயிலைக் காணமுடிந்தது.

விமானத்தின் பூதவரி இணையற்றது. விமானத்தின் முப்புறத்தும் இருந்த ஆடற்சிற்பங்களும் இசைக்கலைஞர்களின் சிற்பங்களும் வியக்க வைத்தன. இடக்கை எனும் தோல் கருவியைக் குணில் கொண்டு வருடி இசையெழுப்பும் கலைஞரின் சிற்பம், சிரட்டைக் கின்னரிக் கலைஞரின் சிற்பம் இவை கருத்தைக் கவர்ந்தன. ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கு மேல் அங்கிருந்து குறிப்புகள் எடுத்தோம். அந்த ஆடற்சிற்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் வாய்ப்பு அடுத்த ஆண்டிலேயே அமைய இருந்தமையை அப்போது நான் அறியவில்லை.

31. 3. 1990 காலை திரிபுவனை தோத்தாத்ரிநாதர் கோயிலுக்குச் சென்றிருந்தோம். முன்மண்டபச் சிற்பங்களுள் ஆடற் சிற்பங்கள் பலவாய் இருந்தன. படிக்கட்டுப் பகுதிச் சிற்பங்களுள் யானையின் வாலைத் தூக்கிப் பிடித்தபடி அதன் பிறப்புறுப்புக்குள் தலையை நுழைத்திருந்த ஆடவரின் சிற்பம் அதிசயிக்க வைத்தது. அகநோக்கிகள் கொண்டு இன்று செய்யப்படும் மருத்துவ முறையின் முன்னோடி போல அச்சிற்பம் அமைந்திருந்தது. நளினி விமானத்திலும் மண்டபத்திலும் இருந்த சிற்றுருவச் சிற்பங்களை ஆராய்ந்து குறிப்புகள் எடுத்தார்.



பாகூர், திரிபுவனைக் கோயில்களின் ஆய்வு குமரவேலைப் பெரிதும் கவர்ந்திருக்கவேண்டும். கோயில்கள் எந்த அளவிற்கு வரலாற்றைப் பதிவு செய்து வைத்திருக்கின்றன என்பதைத் தாம் அப்போதுதான் உணர்ந்ததாகக் கூறியதுடன், கலை தொடர்பாக அவ்விரண்டு கோயில்களிலும் தாம் பார்க்க நேர்ந்த சிற்பங்கள் தம்முள் பெரும் எழுச்சியை உருவாக்கியிருப்பதாகவும் பின்னாளில் முனைவர் ஆய்வு செய்ய நேர்ந்தால் கோயில்களின் பூதவரிகள் குறித்தே ஆய்வு மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தபோது நாங்கள் மகிழ்ந்தோம்.

புதுவையில் இளங்கலை முடித்த குமரவேல் பின்னாளில் சிறந்த நாடக, திரைக்கலைஞராக உருவானார். கல்கியின் பொன்னியின் செல்வனை நாடகமாக்கிச் சென்னையில் நிகழ்த்திக் காட்டிய பெருமை அவரையே சேரும். திரைக் கலைஞர் திரு. நாசருடன் இணைந்து பல திரைப்படங்களில் குமரவேல் பங்கேற்றுள்ளார். 'அபியும் நானும்' திரைப்படத்தில் அவருடைய பங்களிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. கற்பனை வளமும் நடிப்பாற்றலும் மிக்க குமரவேலின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும் என்ற நம்பிக்கை அந்தப் பயணத்தின்போதே எனக்கு ஏற்பட்டது.

மார்ச்சு 1990 தினமணிகதிர் இதழில், 'கண்கவர் உரலும் கலையெழில் தொட்டியும்' என்ற தலைப்பில் திருநெடுங்களம் உரல், திருவல்லம் தொட்டி இவை குறித்த என் கட்டுரை வெளியானது. 1990 ஏப்ரல் 10ம் நாள் தென்னிந்திய வரலாற்றுக் கழகத்தின் மாநாடு சிராப்பள்ளி வளனார் கல்லூரி வரலாற்றுத் துறையின் சார்பில் அமைந்தது. அம்மாநாட்டில் எங்கள் ஆய்வுப் பணிகளைப் பாராட்டிய தென்னிந்திய வரலாற்றுக் கழக அமைப்பாளர்கள், 'வரலாற்று மாமணி' என்ற விருதை எனக்கு வழங்கினர். வளனார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை ஜே. மூலெல் அடிகளார் விருது வழங்க, திரு. என். சேதுராமன் எங்கள் பணிகளைப் பட்டியலிட்டுப் பாராட்டி மகிழ்ந்தார்.

1. 4. 1990 அன்று மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகக் காப்பாட்சியர் திரு. வெ. வேதாசலம் வட்டெழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார். விஜய்பாரத் இந்த வகுப்பிற்கு வராமையுடன் தொடர்ந்து வரத்தவறியதால் பட்டயக்கல்வி பயிலும் வாய்ப்பிழந்தார். திரு. மஜீதின் பொறுப்பிற்குச் சென்னையிலிருந்து மாற்றலாகி வந்த திரு. கி. ஸ்ரீதரன் 7, 8. 4. 1990 ஆகிய நாட்களில் பல்லவர் கலைமரபு பற்றி மாணவர்களிடையே உரையாற்றினார்.

ஏப்ரல் திங்களில் திருப்புறம்பியம் சாட்சிநாதசாமி கோயிலைக் காணப் பொன்மணி, தமிழரசி, அகிலா, நளினி, ஆறுமுகம் இவர்களுடன் சென்றிருந்தேன். ஆறுமுகத்தின் மகள் களுக்கு அதுதான் முதல் களப்பயணம். அதனால், இருவரும் மிகுந்த ஆர்வத்துடன் நளினியின் வழிகாட்டலில் செயற்பட்டனர். சிற்பங்களைக் குறிப்பெடுப்பதில் பொன்மணி உதவினார். சிற்றுருவச் சிற்பங்களில் வலக்கால் உயர்த்திய சிவபெருமானின் ஆனந்தத்தாண்டவமும் கிராதார்ச்சுன சிற்பமும் எங்களைப் பெரிதும் கவர்ந்தன. ஆனந்தத்தாண்டவத்தின் தோற்றம், வளர் நிலைகள் குறித்தும் அது தொடர்பான புஜங்கத்ராசிதம், புஜங்கத்ரஸ்தரேசிதம், புஜங்காஞ்சிதம் எனும் மூன்று கரணங்கள் பற்றியும் அக்கரணச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் கோயில் கள் குறித்தும் அவர்களுக்கு விளங்குமாறு எடுத்துச் சொன்னேன்.



17. 4. 1990 அன்று துடையூர் விஷமங்களேசுவரர் கோயிலுக்குச் சென்றிருந்தோம். பெருஞ்சிற்பங்களும் சிற்றுருவச் சிற்பங்களும் நிறைந்திருந்த அக்கோயில் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. விஷ்ணு தேவியருடன் காணப்படும் பலகைச் சிற்பம் வழக்கமாகக் காணப்படும் சேட்டைத்தேவியின் சிற்பம் போல அமைந்திருந்தது. சுகாசனத்தில் விஷ்ணுவும் உத்குடியில் வலப்புறம் நிலமகளும் இடப்புறம் திருமகளும் அமர்ந்திருந்த அத்தொகுதியில் விஷ்ணுவின் வலப் பின் கைச் சக்கரம் எறி நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோட்டச் சிற்பமாக அர்த்தபத்மாசனத்தில் இருக்கும் கலைமகளின் பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் விளங்க, வல முன் கை சின்முத்திரையில் உள்ளது. இட முன் கை ஏடேந்தித் தொடைமீது படர்ந்துள்ளது. முதலாம் இராஜராஜருக்கு முற்பட்ட தமிழ்நாட்டுக் கோயில்களில் கோட்டச் சிற்பமாகக் கலைமகளைக் காண்பது அரிது. ஆனால், சிற்றுருவச் சிற்பமாகத் தஞ்சாவூர் மாவட்டம் திருவிசலூர் சிவயோகநாதசாமி திருக்கோயிலில் கலைமகளைக் காணமுடிகிறது. முதலாம் இராஜராஜரின் இராஜராஜீசுவரத்திலும் கங்கைகொண்ட சோழீசுவரத்திலும் வலஞ்சுழி வாணர் கோயிலிலும் அற்புதமான கலைமகள் சிற்பங்கள் உள்ளன.

விஷமங்களேசுவரர் கோயிலில் உள்ள வீணை இசைக்கும் சிவபெருமானின் சிற்பம் சிறப்புக்குரியதாகும். சிற்பத்தின் மேற்பகுதியில் சிவபெருமானின் இருபுறத்தும் வீணையேந்திய கின்னரர்கள் அமைய, கீழே வலப்புறம் குணிலும் தோல்கருவியு மாய்ப் பூதமொன்றும் இடப்புறம் தாளஇசை தருபவராய்ப் பெண் ஒருவரும் காட்டப்பட்டுள்ளமை இச்சிற்பத்தின் பெருமையைப் பன்மடங்காக்கியுள்ளன. பெண்ணின் செவிக் குண்டலங்களும் ஸ்வர்ணவைகாக்ஷமும் அவரை உமையாகக் கொள்ளத் தூண்டுகின்றன. சிவபெருமானின் ஆடலுக்கு உமை தாளம் இசைத்ததாகப் பாடல்கள் கூறும். இங்கோ அவருடைய வீணை இசைக்கு அன்னை தாளம் சேர்க்குமாறு சிற்பம் அமைந்துள்ளது. சிற்றுருவச் சிற்பங்களுள் குடக்கூத்து, ஆனந்தத்தாண்டவம், வீணைக் கலைஞர்கள், ஆடற்சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன.

ஏப்ரல் 21, 22ல் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறை ஆய்வாளர் திரு. ப. ஜெயக்குமார் பெருங்கற்காலம் பற்றி மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார். சனிக்கிழமை மாலை நடந்த அ. முருகப்பனார் நினைவுப் பொழிவிற்கு மஜீது தலைமை யேற்றார். ஜெயக்குமார் பெருங்கற்காலச் சின்னங்கள் பற்றி உரையாற்றினார். திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் ஆய்வு மார்ச்சு மாதத்துடன் முடிவுற்றதால், 'காவிரிக் கரையில் ஒரு காவியக் கற்றளி' என்ற தலைப்பில் ஆய்வு முடிவுகளைக் கட்டுரையாக்கிச் செந்தமிழ்ச் செல்விக்கு அனுப்பியிருந்தேன். அக்கட்டுரை ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரை தொடராக வெளிவந்தது.

சக்தி சதுஷ்கா, ஆனந்தத்தாண்டவ விஷ்ணு சுதைச் சிற்பங்கள், கரணச் சிற்பங்கள், நிலமளந்தகோல், குழிக்கோல், கிரீவ கரணச் சிற்பங்கள், மூன்று புதிய கல்வெட்டுகள், சில விட்டுப்போன தொடர்ச்சிகள் இவை திருச்செந்துறை ஆய்வில் வெளிப்பட்ட புதிய வரவுகளாகும். தமிழ்நாட்டில் வேறெங்கும் கிடைத்திராத, குழந்தைக்கு முதல் உணவூட்டும் நிகழ்வு பற்றிய கல்வெட்டு திருச்செந்துறையில் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. கல்வெட்டறிஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இக்கல்வெட்டின் ஒரு பகுதி ஆலமர்அண்ணல் கோட்டத்தின் முன் எழுப்பப் பெற்றிருந்த மண்டபக் கட்டுமானத்தால் மறைக்கப்பட்டிருந்தது. பின்னாளில் குடமுழுக்கிற்காகக் கோயில் திருப்பணி நடந்தபோது எங்கள் வேண்டுகோளை ஏற்ற ஊரார் அக்கட்டுமானத்தை அகற்றிக் கல்வெட்டை முழுமையாகப் படிக்க வகை செய்து தந்தனர்.

பட்டயக்கல்வி மாணவர்களுள் ஒருவராக இணைந்த திரு. மு. ம. கோபாலன் உறையூரைச் சேர்ந்தவர். நீதிமன்றப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். வரலாற்றில் இணையற்ற ஆர்வம் கொண்டவர். பழகுதற்கு இனியவரான அவர் உறையூரில் தம் வீட்டருகே தலைப்பலிச் சிற்பம் ஒன்று மண்ணில் புதைந்து காணப்படுவதாகத் தகவல் தந்தார். உடனே நானும் நளினியும் அவருடன் சென்று அச்சிற்பத்தைப் பார்வையிட்டோம். வழக்கமான தலைப்பலிச் சிற்பமாக அது அமைந்திருந்தது. பொதுவாகத் தலைப்பலிச் சிற்பங்கள் அமர்ந்த அல்லது நின்ற கோலத்தில் காணப்படும். அச்சிற்பம் நின்ற கோலத்தில் இருந்தது. சிற்பம் கண்டறியப்பட்ட தகவலை அருங்காட்சியகத்திற்குத் தெரிவித்ததும் காப்பாட்சியர் காந்தி உடன் அச்சிற்பத்தை அருங்காட்சியத்திற்கு எடுக்க முயற்சி மேற்கொண்டார். 3. 5. 1990 அன்று வெளிவந்த நாளிதழ்களில் சிற்பம் கண்டறியப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது.

தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல்துறைப் பேராசிரியர் முனைவர் கா. இராசன் மே 5, 6 இருநாட்களும் தொல்லியல், அகழாய்வு குறித்து மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார். சுந்தரமூர்த்தி, செங்குட்டுவன் இருவரும் தவிர்க்கமுடியாத காரணங்களால் மேத்திங்களில் இருந்து வருகையை நிறுத்திக் கொண்டனர். இராசனுடைய வகுப்புகள் படவில்லைக் காட்சியுடன் கண் திறப்பாக அமைந்தன.

மேத்திங்களில் பெரியார் மாவட்டத்தைச் சேர்ந்த கொடுமணல் கிராமத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் துறையினரும் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரும் இணைந்து அகழாய்வு மேற்கொண்டனர். அகழாய்வில் பல அரிய பொருட்கள் வெளிப்பட்டதால் நொய்யல் நாகரிகம் பற்றிப் புதிய தரவுகள் கிடைத்தன. பட்டயக் கல்வி மாணவர்கள் இந்த அகழாய்வைக் காணுவது பயன்தரும் என்று கருதியதால் களக்கல்விப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்தோம். பன்னிரண்டு மாணவர்கள் பங்கேற்றனர். நான், நளினி, ஆறுமுகம் உடன் சென்றோம்.

பயணத்திற்கு முன்னதாகவே பேராசிரியர் இராசனுடன் பேசிக் கொடுமணலில் தங்கவும் அகழாய்வைக் காணவும் உதவுமாறு கேட்டுக்கொண்டோம். மே 22 காலை சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டுக் கருவூர், புகழூர், சென்னிமலை, அரச்சலூர் வழியாகக் கொடுமணல் சென்றடைந்தோம். கருவூரில் ஆனிலையப்பர் கோயிலை ஆய்வு செய்தோம். அடுத்துப் புகழூர் சென்றோம். அங்குள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகளைப் படிப்பதற்காக மிகக் குறுகலான மலைப்பாதை வழி அவை வெட்டப்பட்டிருக்கும் பாறைச்சரிவிற்குச் சென்றோம். மாணவர்கள் பார்த்த முதல் பழந்தமிழ்க் கல்வெட்டு அதுதான். பழந்தமிழ் எழுத்துக்களைப் பற்றிய அறிமுகம் இருந்தமையால் எளிதாக அவர்களால் அங்கிருந்த கல்வெட்டுகளைப் படிக்க முடிந்தது. ஒவ்வொருவரும் அவற்றை அங்கிருந்தாற் போலவே தத்தம் குறிப்பேடுகளில் எழுதிக்கொண்டனர்.

புலவர் தமிழகன், பேராசிரியர் திருமாறன் இருவரும் சேர மன்னர்கள், பதிற்றுப்பத்து செய்திகள் இவை குறித்த பல சுவையான செய்திகளை அனைவருடனும் பகிர்ந்துகொண்டனர். வீராசாமியின் நண்பர் புகழூரில் இருந்ததால் மதிய உணவு அங்கேயே அமைந்தது. அந்த நண்பர் மிகுந்த அன்புடன் எங்கள் அனைவரையும் கவனித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து சென்னிமலை சென்றோம். மலைக்கோயிலை அடைந்ததும் அக்கோயிலின் விமானம், மண்டபம் இவற்றின் கட்டட உறுப்புகளை ஒவ்வொருவரும் ஆராய்ந்து குறிப்புகள் எடுத்தனர். தாங்குதளம், சுவர், கோட்டங்கள், கூரையுறுப்புகள் பற்றிய என் கேள்விகளுக்குப் பெரும்பாலும் சரியான விடைகளையே அனைவரும் கூறியமை மகிழ்வளித்தது.

அங்கிருந்து அரச்சலூர் பயணமானோம். வட்டெழுத்துக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டிருந்த இடத்தைக் கண்டறிவது எளிதாக இல்லை. நளினி ஒருமுறை அங்குச் சென்றிருந்த போதும் சரியான வழியை அவரால் கூறக்கூடவில்லை. சிரமப்பட்டு வழியைக் கண்டறிந்து இடத்தை அடைந்ததும் அங்குப் பாறையில் வெட்டப்பட்டிருந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படிக்குமாறு மாணவர்களை நளினி வழிப்படுத்தினார். காப்பாட்சியர் காந்தி உட்பட அனைவரும் ஆர்வத்தோடு அரச்சலூர்க் கல்வெட்டைப் படித்தமை மறக்க முடியாத நிகழ்வாகும். அங்குள்ள தத்தகாரக் கல்வெட்டுகளும் 'எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்' என்ற பொறிப்பும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தன.

கொடுமணலில் அனைவரும் தங்குவதற்கும் உணவருந்துவதற்கும் இராசன் ஏற்பாடு செய்திருந்தார். முதல் நாள் இரவு 8 மணி அளவில் கொடுமணல் அகழ்வில் கிடைத்த பொருட் களைக் காட்டி அவற்றைப் பற்றிய விளக்கங்களைப் பேராசிரியர் சுப்பராயலு வழங்கினார். சிறுசிறு குழுக்களாக மாணவர்களைப் பிரித்து அனைவருக்கும் அனைத்துப் பொருட்களையும் விரிவாக விளக்கிக் காட்டிய அவரது பேரன்பு அனைவரையும் கவர்ந்தது. மாணவர்களின் கேள்விகளுக்கு நன்கு விடையளித்த பேராசிரியர் தொல்லியல் பற்றிய அடிப்படைச் செய்திகளையும் சொல்லி உதவினார். அன்று இரவு நெடுநேரம் மாணவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அனைவருமே அந்தக் களப்பயணத்தைப் பெரிதும் பயனுடையதென்று பாராட்டி மகிழ்ந்தனர்.

அடுத்த நாள் காலை அகழாய்வு நடந்துகொண்டிருந்த பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்று சேகரிக்கப்பட்ட பானைஓடுகளையும் அகழாய்வு செய்திருந்த குழிகளையும் சுட்டிக்காட்டி அதுவரை நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் பற்றிய அனைத்துத் தரவுகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறிய சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல்துறைப் பேராசிரியர் முனைவர் ப. சண்முகம் பெருங்கற்காலச் சின்னங்களையும் மாணவர்கள் அறியுமாறு செய்தார். பானைஓடுகளை மாணவர்கள் அனைவரும் கையிலெடுத்து ஆராய்ந்தனர். அது போழ்து தற்செயலாகப் பழங்கால நாணயம் ஒன்றை நளினி கண்டறிந்தார். அந்தக் கண்டறிதலுக்காக அவரைப் பெரிதும் பாராட்டிய பேராசிரியர் சுப்பராயலு அதுவரை அந்தக் களத்தில் காசுகள் ஏதும் கண்டறியப்படாமையைக் குறிப்பிட்டு மீண்டுமொரு முறை நளினியின் தேடல் திறனைப் போற்றினார். கொடுமணல் பயணம் மாணவர்களுக்குப் பேரூக்கம் தந்ததுடன் அகழாய்வு பற்றிய தெளிவையும் அளித்தது.

மே 26 சனிக்கிழமை திரு. இராமகிருட்டிணன் திருமதி அம்புஜம் இராமகிருட்டிணன் நினைவுப் பொழிவாகச் சங்குகள் ஒரு காலப்பார்வை என்ற தலைப்பில் அப்துல் மஜீது உரையாற்றினார். இந்திய மருத்தவ மன்றத் திருச்சிராப்பள்ளிக் கிளையின் செயலாளராக இருந்த மருத்துவர் மீ. சா. அஷ்ரப் அந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றார். பட்டயக்கல்வி மாணவர் மு. ம. கோபாலன் அனைவரையும் வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார். அஷ்ரப் சிராப்பள்ளி மருத்துவர்களுள் குறிப்பிடத் தக்கவர். தமிழ்நாட்டின் புகழ்மிக்க குடும்பங்களுள் ஒன்றான எல். கே. எஸ். குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் எளிமையும் அடக்கமும் நிறைந்தவராக விளங்கிய அஷ்ரப் பொதுவாழ்க்கையின் முதல் படிகளில் நின்ற காலம் அது.

முயற்சியும் நேர்மையும் அனைவரையும் அணைத்துப் போகும் பண்பும் அவரைச் சிராப்பள்ளியின் முதன்மை மனிதர்களுள் ஒருவராக உயர்த்தியுள்ளன. மனித நேயமும் எல்லார்க்கும் உதவும் உளப்பாங்கும் அவரது தனிச் சிறப்புகள். இந்திய மருத்துவ மன்றச் சிராப்பள்ளிக் கிளைக்கு அவர் செயலாளராகவும் நான் துணைத் தலைவராகவும் விளங்கிய ஆண்டு அது. அவருடைய செயலாற்றலை முழுமையாக உணர்ந்திருந்தமையால்தான் அந்தத் திங்கட் பொழிவிற்கு அவரைத் தலைவராகத் தேர்ந்திருந்தேன். அவரும் அனைவர் மனமும் மகிழும்படி சிறக்க உரையாற்றினார்.

1990 மேத்திங்களில்தான் முதுகலைத் தமிழ்ப் படிப்பை முடிக்க முடிந்தது. சொல்லதிகாரத்தில் 61, எழுத்ததிகாரத்தில் 69 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேறியமை மகிழ்வளித்தது. 26. 5. 1990 அன்று வெளியான தினமணி சுடரில் திருவள்ளுவரின் மருத்துவக் கோட்பாடு என்ற தலைப்பில் என் கட்டுரை வெளியாகியிருந்தது. இருபதாம் நூற்றாண்டு மருத்துவச் சிந்தனைகளோடு வள்ளுவரின் மருந்து அதிகாரக் கருத்துக்களை ஒப்புமை செய்து எழுதப்பட்டிருந்த அக்கட்டுரை பல தமிழறிஞர்களின் பாராட்டைப் பெற்றது. அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார், 'குளிப்பதற்கு நேரமில்லை' என்ற என் கட்டுரையைப் பாராட்டியது போலவே இந்தக் கட்டுரையையும் பெரிதும் பாராட்டி மடல் எழுதியிருந்தார். அப்பெருந்தகையின் வாழ்த்து என்னை நெகிழ்வித்தது.

ஜூன் 2, 3ம் நாட்களில் நளினியின் வட்டெழுத்து வகுப்புகள் நிகழ்ந்தன. பிராமி, தமிழ் போல் அல்லாமல் வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படிப்பது சற்றுக் கடினமான செயலாகும். வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படிப்பதில் நல்ல பயிற்சி உடையவர்கள் மிகச் சிலரே. அவர்களுள் நளினியும் ஒருவர். பாண்டிய நாட்டுப் பகுதிகளில் நாங்கள் களப்பயணம் மேற்கொண்ட காலங்களில் வட்டெழுத்துக் கல்வெட்டுகளை அவர் படித்துக் காட்டிய திறம் போற்றற்குரியது. திருப்புத்தூர்த் திருத்தளிநாதர் கோயிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளை 1. 6. 1990 அன்று நடந்த களஆய்வின்போது அவர் படித்துப் படியெடுத்தமை கண்டு தவத்திரு அடிகளார் பெருந்தகை பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார்.



9. 6. 1990 அன்று பொன்னமராவதியிலுள்ள இராஜேந்திர சோழீசுவரம் சென்றிருந்தோம். கல்வெட்டுகள் பலவாய் இடம் பெற்றுள்ள அக்கோயில் தொல்லியல்துறையின் பாதுகாப்பில் உள்ளது. நிஷதராஜன் கல்வெட்டுகளை வாசித்தோம். அங்கிருந்த 66 செ. மீ. உயரமுடைய பாவைவிளக்கு சிதைந்த நிலையிலான எழுத்துப் பொறிப்புகளைக் கொண்டிருந்தது. ஆவணித்திங்களில் பொன்னமராவதி சோழீசுவரமுடையாருக்குப் புண்ணியவதி அளித்த கொடையாகக் கருதத்தக்க அளவில் அப்பொறிப்புகள் அமைந்திருந்தன. அப்பாவையின் முதுகிலேயே எண்ணெய்ச் சட்டியைக் கட்டித் தொங்கவிட்டிருந்த கொடுமை கண்களையும் உள்ளத்தையும் ஒருசேர வருத்தியது. காவலரிடம் அச்சட்டியை அகற்றுமாறு வேண்டிக்கொண்டேன்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.