http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 87

இதழ் 87
[ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது எப்போது?
சுந்தரர் வழியில் . . . .
திரும்பிப்பார்க்கிறோம் - 34
கல்வெட்டுப் பாடல்கள்
UDIRAPPATTI
சப்தரிஷி மண்டல வழிபாடு
இதழ் எண். 87 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப்பார்க்கிறோம் - 34
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி,

பொன்னமராவதியில் இராஜேந்திர சோழீசுவரம் பார்த்த பிறகு அன்று மதியம் தவத்திரு அடிகளாரின் ஆளுகையில் உள்ள திருக்கோளக்குடிக் கோயிலுக்குச் சென்றிருந்தோம். பின்னாளில் எங்களால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுத் தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் நூலில் ஒரு கட்டுரையாக இடம்பெற்ற அந்தக் கோயில் வளாகத்தில் ஒரு குடைவரையும் இரண்டு குடைவுத் திருமுன்களும் பல கற்றளிகளும் மண்டபங்களுடன் உள்ளன. எழுவர்அன்னையர் பாறைச்சிற்பங்களாய் அமைந்துள்ள ஐந்து தென்தமிழ்நாட்டுக் குடைவரைகளில் கோளக்குடிக் குடைவரையும் ஒன்று. பிள்ளையார் இடம்பெறாத இரண்டே அன்னையர் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகச் சிறப்புறுகிறது.

தனிப்பெருந்தேவியாய் மார்புக் கச்சோ கைவளைகளோ இல்லாமல் தென்பார்வையாய் சுகாசனத்தில் உள்ள சாமுண்டி குறிப்பிடத்தக்கவர். தனித்தளத்தில் இருத்தப்பட்டிருக்கும் அம்மையின் இடப்பாதத்திற்கு முன்னால் தரையில் எருமைத்தலை காட்டப்பட்டுள்ளமை தமிழ்நாட்டில் வேறெந்தப் பழஞ் சாமுண்டிச் சிற்பத்திலும் காணமுடியாத அமைப்பாகும். ஆகமங்கள் சாமுண்டியை இயமனின் துணைவியாகக் குறிக்கின்றன. அதைச் சுட்டுமாறு போல எருமையின் தலை சாமுண்டியின் முன்னால் காட்டப்பட்டுள்ளதா, அல்லது சாமுண்டியே மகிடவதம் செய்தவள் என்பதை இவ்வமைப்புக் குறிப்பால் உணர்த்துகிறதா என்பது ஆய்வுக்குரியது.







முழங்காலுக்கு மேல் சுருக்கப்பட்ட இடையாடையும் படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள அம்மையில் செவிகள் நன்கு இறங்கிப் பிணக்குண்டலங்களுடன் தோள்களை வருடுகின்றன. கொண்டையின் முகப்பில் மண்டையோடு. முப்புரிநூல் உருத்திராக்கமாலையாய் மார்பின் குறுக்கே அமைய, நடுவில் பெரிய மணியுடன் அமைந்த கழுத்தணி மார்பை அலங்கரிக்கிறது. வலக்கைப் பொருளை இனம் காண முடியவில்லை. இடக்கை இடத்தொடையில். தனித்தன்மை கொண்ட இச்சிற்பம் சரியான பராமரிப்புப் பெறாமல் இருப்பது துன்பமானது.

திருப்புத்தூர்க் கோயில் பணியின்போதே மேற்குத் திருத்தளிநாதர் கோயிலையும் ஆய்வு செய்ய வாய்ப்பமைந்தது. இடைத்திருச்சுற்று மதிலின் வடக்குச் சுவரில் நாகசேுவரர் கோயிலுக்கு எதிரில் 4 மீ. நீளத்தில் நீட்டல் அளவை ஒன்றை நளினி கண்டறிந்தார். அதுநாள்வரை படி எடுக்கப்படாமலிருந்த வட்டெழுத்துக் கல்வெட்டையும் ஆறுமுகத்தின் துணையுடன் நானும் நளினியும் படியெடுத்தோம்.

ஜூன் 12, 16ம் நாட்களில் நடந்த வகுப்புகளில் பதினொரு மாணவர்கள் கலந்துகொண்டனர். முனைவர் மு. து. சம்பத் கிரந்தக் கல்வெட்டுகள் பற்றி வகுப்பெடுத்தார். தமிழ், ஆங்கிலம், கன்னடம், வடமொழி இவற்றில் ஆழ்ந்த பயிற்சி பெற்றிருந்த சம்பத்தின் வகுப்புகள் மிகுந்த பயனளித்தன. சம்பத் அணுகுதற்கு எளியவர். கடல் போல் தரவுகளால் நிறைந்தவர். அள்ள அள்ளக் குறையாத செய்திகளின் சுரங்கம். என்னிடமும் மைய உறுப்பினர்களிடமும் மிகுந்த அன்பும் பற்றுதலும் உடையவர். நடுவண் அரசின் கல்வெட்டுப் பதிப்புகளை அவை வெளிவந்த உடன் நாங்கள் பெறுமாறு செய்தவர். அவருடைய துணைவியார் திருமதி பங்கஜம் சம்பத்திற்கு இணையாகக் கல்வெட்டுகளில் ஆர்வமும் பயிற்சியும் உடையவர். இருவரும் பல முறை மையத்திற்கு வந்துள்ளனர். சம்பத் எங்கள் மாணவர்களுக்குக் களப்பயிற்சி அளித்துள்ளார். ஆறுமுகத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும். இருவரும் இணைந்தே நாங்கள் கண்டறிந்த கல்வெட்டுகளைப் படியெடுக்கச் செல்வது வழக்கம்.

ஜூன் மாத தினமணிகதிர் இதழ்களில் புதியவார்ப்புகள், திரிவிக்கிரமரும் விஷ்ணுகிராந்தமும் என்னும் தலைப்புகளில் என்னுடைய இரண்டு கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அவற்றுள் புதிய வார்ப்புகள் கட்டுரை சிராப்பள்ளியிலுள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நான் காண நேர்ந்த இரண்டு செப்புத்திருமேனிகளைப் பற்றியதாக அமைந்தது. சிவபெருமானும் உமையும் ஊர்த்வஜாநு கரணத்தில் ஆடல் நிகழ்த்துமாறு போல அப்படிமங்கள் இருந்தன. மிகுந்த கலைநயத்துடன் வார்க்கப்பட்டிருந்த அத்திருமேனிகளைப் பூம்புகார் நிருவாக அலுவலர் அனுமதியோடு படமெடுத்துக் கட்டுரையுடன் அவற்றை இணைத்து அனுப்பியிருந்தேன். கதிரில் அந்தக் கட்டுரையைப் படித்த வாணியின் அன்னை திருமதி செல்வி சந்திரசேகரன் அவற்றின் அழகில் தமையிழந்து அப்படிமங்களை வாங்கித் தம் இல்லத்தில் இருத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அமுதசுரபி ஜூன் இதழில், 'காதல் செய்பவர் பெறுவதென்?' என்ற தலைப்பில் பைஞ்ஞீலிக் கோயிலைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகி இருந்தது. 15. 6. 1990 வெள்ளிக்கிழமை காலை, மாலை இருவேளைகளிலும் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை இயக்குநர் திரு. நடன. காசிநாதன் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் குறித்தும் முத்தரையர் வரலாறு பற்றியும் வகுப்பெடுத்தார். காசிநாதன் வளமான வட்டெழுத்துப் பயிற்சி உடையவர். முள்ளிக்கரும்பூர் சீரமைப்பு, தொல்லியல்துறை மாணவர்களுக்கான வரவேற்பு எனப் பல நிகழ்ச்சிகளில் அவருடன் பங்கேற்றிருந்தமையால் அவரது இயல்புகளை அறிந்திருந்தேன். எங்கள் மையத்துடன் இணக்கமான தொடர்புடன் இருக்கும் தொல்லியல் அறிஞர்களுள் அவரும் ஒருவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நெய்வேலித் தமிழ்ச் சங்கம் நிகழ்த்திய கருத்தரங்கொன்றில் நானும் அவரும் கட்டுரையாளர்களாகக் கலந்து கொண்டோம். நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என் தலைமையில் அவர் பேசுமாறு செய்திருந்தனர். வயதிலும் அனுபவத்திலும் அவர் என்னினும் மூத்தவர் என்பதால் அமைப்பாளர்களுடன் பேசி அவர் தலைமையில் நான் பேசுமாறு அந்நிகழ்ச்சியை மாற்றி அமைத்தேன். என் தலைமையில் பேசுவது குறித்து காசிநாதன் மகிழ்ச்சி தெரிவித்திருந்த போதும் எனக்கு அது ஒப்புதலாகாமையால் தலைமை மாற்றம் நேர்ந்தது. மூத்தவர்களை முன்னிறுத்திப் போற்றுவதுதான் தகைமையான செயல். அது அவர்களையும் மகிழ்விக்கும்; நேரிய நடைமுறையாகவும் இருக்கும்.

17. 6. 1990 அன்று பட்டயக்கல்வி மாணவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டக் கோயில்கள் சிலவற்றைப் பார்வையிடச் சென்றோம். விசலூர் மார்க்கபுரீசுவரர் சிவன்கோயில் சேட்டைத்தேவியை மாணவர்கள் ஆர்வத்துடன் ஆராய்ந்தனர். அவர்களுள் பலர் சேட்டைத்தேவியைப் பார்ப்பது அதுவே முதல்முறை. சிலர் அகிலாவின் துணையுடன் கல்வெட்டுகளைப் படிக்க முயன்றனர். அடுத்து மலையடிப்பட்டி சிவன், விஷ்ணு கோயில்களைக் கண்டோம். அங்குள்ள தந்திவர்மர் கல்வெட்டை அனைவருமே இணைந்து படித்துப் படியெடுத்தோம். பகல் 2 மணி அளவில் குன்றாண்டார்கோயிலை அடைந்து, மதிய உணவுக்குப் பிறகு கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். பாண்டியர்பகுதிக் குடைவரைகளைப் பற்றிய அறிமுகம் கிடைத்த மகிழ்வில் மாணவர்கள் இருந்தனர். மாலை நகரத்தார்மலை சென்று விஜயாலய சோழீசுவரம், பழியிலி ஈசுவரம், பதினெண் பூமி விண்ணகர் முதலிய கோயில்களைப் பார்வையிட்டோம். அங்கிருந்த கல்வெட்டுகளை மாணவர்கள் முயன்று படித்தனர்.

23. 6. 1990 மாலை கூ. ரா. சீனிவாசனின் கோயிற்கலை வகுப்பு அமைந்தது. கோட்டங்கள், தோரணங்கள், கூரையுறுப்புகள் பற்றிப் பாடமெடுத்தார். தேவையான இடங்களில் படம் வரைந்து விளக்கினார். கோயில் கட்டடக்கலையில் அவர் பெற்றிருந்த அனுபவ அறிவு என்னை மயக்கியது. அதுநாள் வரை கட்டடக் கலையில் பெரிதாக ஏதும் சாதித்திராத எனக்குக் கட்டடக் கலையில் சிறப்புப் பயிற்சி பெறும் அவா ஏற்பட்டது. ஒரு கட்டடத்தை அனுபவிக்க அதைப் பற்றிய அறிவும் தெளிவும் இன்றியமையாதன. வரலாற்றுப் பின்னணியில் கட்டடக் கலை அறிவோடு கட்டமைப்பு நுணுக்கங்களை இரசிப்பதே பேரின்பம்தான். அந்த இன்பம் விடாமுயற்சியினாலும் தொடர்ந்தமைந்த களஆய்வுகளினாலும் நிறைய கேட்டு என்னை ஆழச் சிந்திக்க வைத்த என் தோழர்களாலும் எனக்கு வாய்த்தது.

24. 6. 1990 ஞாயிறன்று மாணவர்களுடன் இரண்டாவது களக்கல்விப் பயணம் மேற்கொண்டோம். திருஎறும்பியூர், திருவையாறு, பசுபதிகோயில் ஊரிலிருந்த புள்ளமங்கலத்து ஆலந்துறையார் கோயில், தஞ்சாவூர் அரண்மனை, சரசுவதி மஹால் நூலகம், அருங்காட்சியகம், இராஜராஜீசுவரம் இவை எங்கள் பயணத்திட்டத்தில் இடம்பெற்றன. காலை 6 மணிக்குப் புறப்பட்டு எறும்பியூரை அடைந்தோம். நளினி தம்முடைய முதல் ஆய்விடமான எறும்பீசுவரத்தை மாணவர்களுக்குச் சுற்றிக்காட்டினார். கல்வெட்டுகளைப் படிப்பதிலும் நிலவறைகளைப் பார்ப்பதிலும் சிற்பங்களை ஆராய்வதிலும் அவர்கள் ஆர்வம் காட்டினர். காலைச் சிற்றுண்டிக்குத் திருவையாறு அடைந்தோம்.

வழக்கறிஞர் திரு. நடராஜன் வீட்டில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அவரும் அப்பூதி மன்றத்தைச் சேர்ந்த அன்பர்களும் திருவையாறு திருக்கோயில் ஆய்வில் எங்களுடன் இணைந்து கொண்டனர். மிகப் பெரிய வளாகமாக அமைந்திருந்த அந்தக் கோயிலில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கல்வெட்டு, சிற்பம், கட்டடக்கலை பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டனர். தூண் ஒன்றின் மாலைத்தொங்கலில் இருந்த குடக்கூத்துச் சிற்பத்தை நளினி கண்டறிந்து மாணவர்களுக்கு விளக்கினார். முதலாம் இராஜராஜரின் பட்டத்தரசி தந்திசக்தி விடங்கி அவ்வளாகத்தில் எழுப்பியிருக்கும் வடகயிலாயம், முதலாம் இராஜேந்திரரின் தேவியருள் ஒருவரான பஞ்சவன்மாதேவி கட்டமைத்த தென்கயிலாயம் என அனைத்தும் பார்த்து மகிழ்ந்த நிலையில் மதிய உணவிற்காகப் பசுபதிகோயிலுக்குப் பயணப்பட்டோம். கோயில் குருக்கள் திரு. குமாரின் இல்லத்தில் உணவு தயாராக இருந்தது. பசியாறியதும் சிற்பக் களஞ்சியமான ஆலந்துறையார் கோயிலை வலம் வந்தோம்.

பசுபதிகோயிலிலிருந்து தஞ்சாவூர் சென்றோம். அரண் மனையைக் காணத் தொல்லியல்துறையினரும் நூலகத்தைப் பார்வையிடத் திரு. பெருமாள், திரு. குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் உதவினர். அருங்காட்சியகத்தைப் பார்த்த பிறகு இராஜராஜீசுவரம் அடைந்தோம். மாணவர்களுள் சிலர் முதன் முறையாக அக்கோயிலைப் பார்த்தமையால் அதன் செம்மாந்த தோற்றம், வளாகம் கண்டு வியந்தனர். அந்த விமானத்தைப் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுகள் பற்றியும் நானும் நளினியும் சிற்றுரைகளாற்றினோம். மாணவர்கள் ஐயாறு போல இங்கும் குழுக்களாகப் பிரிந்து கோயிலை வலம் வந்தனர். புறப்படுவதற்கு முன் அனைவரும் ஒன்று போல அக்கோயிலை மீண்டும் ஒரு முறை விரிவான அளவில் பார்க்க விழைவதாகக் கூறினர். நானும் நளினியும் அவர்கள் ஆர்வத்தைப் பயன்படுத்தி இராஜராஜீசுவரத்தை முழுமையான அளவில் ஆய்வுக்குட்படுத்த எண்ணினோம். கோயிலைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு மாணவருக்கும் ஒருபகுதி என அளித்து ஆய்வு செய்வது பயனளிக்கும் என்ற என் கருத்தை அனைவரும் ஏற்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் கோபாலன் ஆவுடையார் கோயிலில் இருந்த ஆத்மநாதர் கோயிலைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தருமாறு கேட்டமையால் அங்குப் பயணப்பட்டோம். எங்களுடன் பட்டயக்கல்வி மாணவர்கள் சிலரும் உடன் வந்தனர். திருவாவடுதுறை ஆதீனத்தின் அனுமதி பெற்றுச் சென்றிருந்தமையால் கோயிலார் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தது. ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து பல தரவுகளைச் சேகரித்தோம். கூரை ஓவியங்கள், நாயக்கர் காலச் சிற்பங்கள், கல்வெட்டுத் துணுக்குகள் எனப் பலவும் ஆய்வுக்குட்பட்டன. கொடுங்கைக்குப் புகழ் பெற்றது அக்கோயில் என்பதால், ஆய்வு மாணவர்களுக்கு அதைக் காட்டி, கொடுங்கையின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துரைத்தேன்.

கூரை ஓவியங்களில் யோகாசனக் காட்சிகள் பலவாய் இருப்பதை அவர்களுக்குக் காட்டி ஓவியங்களின் வழி அறியக்கூடிய வரலாற்றுத் தரவுகளின் வளமை குறித்து விளக்கினேன். 22. 6 . 1990 அன்று வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸில் 'The Temple of Treasures' என்ற தலைப்பில் ஆத்மநாதர் கோயில் பற்றிய கட்டுரை வெளியானது. அக்கட்டுரையைப் படித்த மாலை மலர் நாளிதழின் செய்தி சேகரிப்பாளர் தம் நாளிதழிலும் ஆத்மநாதர் கோயில் பற்றிய கட்டுரை வெளியாக வேண்டும் என விரும்பி என்னை அணுகினார். மூன்று வாரங்கள் தொடர்ந்து வெளியிடுமாறு விரிவான அளவில் கட்டுரை வழங்க வேண்டிக்கொண்டார். நான் அளித்த கட்டுரையை, 'சிந்தையைக் கவரும் சிற்பங்கள்', 'கல்வெட்டுச் சொல்லும் கதைகள்', 'அள்ள அள்ளக் குறையாத ஆவுடையார் கோயில் வரலாறு' எனும் மூன்று தலைப்புகளின் கீழ் ஜூலை மாதம் 18, 22, 25ம் நாட்களில் வெளியான மாலைமலர்ச் சிறப்பிதழ்களில் வெளியிட்டார். கட்டுரையைப் பாராட்டித் திருவாவடுதுறை ஆதீனம் வணக்கத்திற்குரிய சிவப்பிரகாசர் சார்பில் மடத்தில் இருந்து கடிதம் வந்தது.

ஜூலை முதல் நாள் ஞாயிறன்று பட்டயக்கல்வி மாணவர் களுக்கான முதல் கருத்தரங்கை நிகழ்த்தக் கருத்துக் கொண்டமையால், ஜூன் மாதமே அவர்களிடம் யார் யார் எந்தெந்தத் தலைப்புகளில் கட்டுரை வாசிக்க விழைகிறார்கள் என்பது குறித்து விவாதித்தோம். கோயில், கல்வெட்டு, காசு, சிற்பம் என அனைத்துத் திசைகளிலும் அவர்தம் தலைப்புகள் அமைந்தன. பட்டயக்கல்வி தொடங்கிய ஆறே மாதங்களில் பயிற்சியாளர்கள் தாங்களே கருத்தரங்கு அமைப்பது எனக்கும் நளினிக்கும் மகிழ்வும் பெருமையும் தந்தன.

கருத்தரங்கைத் தொடங்கி வைக்க பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ச. முத்துக்குமரனை அழைத்திருந்தோம். அவரது வழிகாட்டலும் வாழ்த்தும் மாணவர் களைப் பெருமிதப்படச் செய்தன. பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மா. எழில் முதல்வன் சிறப்புரையாற்றினார். அப்பர் பெருமானின் பதிகத்தைப் பின்பற்றி ஆய்வு நெறிமுறைகளை அவர் விளக்கிய விதம் மாணவர்கள் நெஞ்சில் ஆழப் பதிந்தது. கல்வி பயிலத் தொடங்கிய ஆறே திங்கள்களில் பல்துறைக் கருத்தரங்கு அமைக்கும் அளவிற்கு அனுபவம் பெற்றமைக்காக மாணவர்களை அவர் வாழ்த்தினார். முதல் அமர்விற்கு இராதாகிருட்டிணன் தலைமை ஏற்க, திருமாறன் சீனிவாசநல்லூர்க் குரங்கநாதர்கோயில் குறித்தும் சோமரசன்பேட்டை அரசு மேனிலைப்பள்ளித் தமிழ் ஆசிரியரும் மாணவர்களுள் ஒருவருமான புலவர் பி. தமிழகன் புகழூர்க் கல்வெட்டுகளைப் பற்றியும் ஆய்வுக்கட்டுரை வழங்கினர். மு. ம. கோபாலன் 'காலந் தோறும் காசுகள்' என்ற தலைப்பில் கட்டுரை படித்தார்.

இரண்டாம் அமர்விற்கு நளினி தலைமையேற்றார். வேங்கடத்தான் துறையூர் பற்றி அர. அகிலாவும் திருநாராயணபுரம் கோயில் குறித்து இராதாகிருட்டிணனும் திருஉசாத்தானம் கல்வெட்டுகளைப் பற்றிக் கோயிலூர்ப் பெரியநாயகி மகளிர் மேனிலைப்பள்ளி இசையாசிரியையும் மாணவியருள் ஒருவருமான இரா. இலலிதாம்பாளும் 'சேக்கிழார் சேக்கிழார்தானா?' என்ற தலைப்பில் இராமகிருஷ்ணனும் கட்டுரைகள் வழங்கினர்.

இராமகிருஷ்ணனின் கட்டுரை தினமணி ஜூலை முதல் நாள் இதழில் வெளியாகியிருந்த 'சேக்கிழார் உருவச்சிலை கண்டு பிடிப்பு' என்ற செய்தியில் இருந்த முரண்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வரலாற்றுக் கொடுமைகளுள் ஒன்றாக எந்தச் சான்றுகளும் இல்லாத நிலையிலும் சிற்பங்களை மனம் போன போக்கில் அடையாளப்படுத்தும் அவலத்தைக் குறிப்பிடலாம். சிற்றாடையும் வணக்க முத்திரையும் நீள்செவிகளும் உருத்திராக்கமாலை யும் இருந்துவிட்டால் அந்தச் சிற்பத்தைச் சேக்கிழார் என்று அடையாளப்படுத்தும் துணிவு எப்படியோ சில ஆய்வாளர்களுக்கு வந்துவிடுகிறது. மகரதோரணத்திலும் பெருஞ்சிற்பங்களின் காலடியிலும் காணப்படும் வணக்க நிலை அடியவர்களைக்கூடப் பெருவேந்தர்களாக அடையாளப்படுத்தும் ஆய்வாளர்களும் இந்த மண்ணில் உண்டு. இந்தத் துன்பங்களுக்கெல்லாம் என்றைக்கு முடிவு வரும்?

திருமாறனின் தலைமையில் அமைந்த மூன்றாம் அமர்வில் அனபாயன் அழுந்தூர்க் கோயில் கட்டடக் கலை குறித்தும் இரா. இராஜேந்திரதேவன் கொடுமணல் அகழ்வுகள் குறித்தும் வெ. சு. இலட்சுமி பைஞ்ஞீலிக் குடைவரை பற்றியும் கட்டுரைகள் படித்தனர். மதிய உணவிற்குப் பிறகு, தமிழகன் தலைமையில் அமைந்த நான்காம் அமர்வில் 'சிராப்பள்ளி அருங்காட்சியகச் சமணச் சிற்பங்கள்' என்ற தலைப்பில் காப்பாட்சியர் ம. காந்தியும் திருப்புத்தூர் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பற்றி ஆ. பொன் மணியும் 'கல்வெட்டுகள்' என்ற தலைப்பில் சுந்தரமூர்த்தியும் கட்டுரைகள் வழங்கினர்.

காந்தியின் தலைமையில் அமைந்த இறுதி அமர்வில் தமிழரசி அழுந்தூர்க் கல்வெட்டுகள் குறித்தும் வீராசாமி 'வரிகளும் வடிவங்களும்' என்ற தலைப்பிலும் கோபாலன் கதை சொல்லும் சிற்பங்கள் குறித்தும் கட்டுரைகள் தந்தனர். மாலை 6. 15 மணிக்கு நிகழ்ந்த நிறைவுவிழாவில் கல்வெட்டறிஞர் என். சேதுராமன் தலைமையில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி. பாலசுப்பிரமணியம் நிறைவுப் பேருரையாற்றினார். மாணவர்களின் இந்த அரிய முயற்சியைப் பெரிதும் பாராட்டியதுடன் அவர்களுடைய எதிர்காலப் பணிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்த துணைவேந்தர், மையத்தின் பணிகளை முன்னிறுத்திப் பேசிப் பெருமைப்படுத்தினார்.

வழங்கப்பட்ட பதினைந்து கட்டுரைகளுள் சிறந்தனவாக வீராசாமி, பொன்மணி இவர்தம் கட்டுரைகள் நடுவர் தே. சந்திரனால் தேர்ந்தெடுக்கப்பட்டன. பரிசுகளை அறிஞர் என். சேதுராமன் வழங்கிப் பாராட்டி வாழ்த்தினார். புலவர் செ. இராசு, சரசுவதிமஹால் நூலக இயக்குநர் திரு. சதாசிவம் பேராசிரியர் பே. க. வேலாயுதம், காவேரி மகளிர் கல்லூரி முதல்வர் ந. சகுந்தலா, பேராசிரியர் கோ. வேணிதேவி, மருத்துவர் சு. பழனியாண்டி முதலிய பெருமக்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு மாணவர்களின் முயற்சியை வாழ்த்தினர்.

13. 7. 1990ல் வெளியான இந்து நாளிதழில், 'Importance of Research on Temple arts stressed' என்ற தலைப்பில் ஏறத்தாழக் கால் பக்க அளவில் இக்கருத்தரங்கம் பற்றிய விரிவான செய்தி வெளியாகியிருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி இதழ் களும் இக்கருத்தரங்கு பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் சென்னைப் பிரிவில் உதவி கண்காணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த முனைவர் தயாளன் மையத்தின் அன்புக்குரிய நண்பர்களுள் ஒருவர். ஜூலை 14, 15 இருநாட்களும் பல்லவர் குடைவரைகள், பல்லவர் கற்றளிகள் பற்றி மாணவர்களிடையே அவர் உரை யாற்றினார். 15ம் நாள் பிற்பகல் திருச்சிராப்பள்ளிக் குடைவரைகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று நேரிடையாகக் குடைவரை அமைப்பை விளக்கியுரைத்தார்.

பட்டயக்கல்வி மாணவர்களுள் ஒருவரான ப. இராம கிருஷ்ணன் மையக் கூட்டங்களுக்குப் பார்வையாளராக வந்து கொண்டிருந்த காலத்திலேயே சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் அமைந்துள்ள பஞ்சப்பூரில் புதர்களினிடையே ஒரு கல்வெட்டுப் பலகை புதைந்திருப்பதாகத் தகவல் தந்திருந்தார். நான், நளினி, ஆறுமுகம் மூவரும் அவருடன் பஞ்சப்பூர் சென்றோம். கல்வெட்டுப் புதைந்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற இராமகிருஷ்ணன் உள்ளூர் மக்களின் உதவியோடு கல்வெட்டுப் பலகையை அகழ்ந்து தர, நாங்கள் கல்வெட்டைப் படித்தோம்.

திருநாவுக்கரசர் பெயரால் அங்கு அமைந்திருந்த திருமடம் ஒன்றிற்கு அளிக்கப்பட்டிருந்த நிலக்கொடை பற்றிய பதிவாக அக்கல்வெட்டு விளங்கியது. என்றாலும், சில வரிகளில் சில சொற்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை. வெளிச்சக் குறைவு முக்கியமான காரணமாக இருந்தமையால் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்தில் வந்து படித்த பிறகு செய்தி வெளியிட லாம் எனக் கருதினோம். பணிச்சுமையில் அந்தக் கல்வெட்டைப் படிக்கும் வாய்ப்பு நெடுங்காலம் அமையவில்லை. இராமகிருஷ் ணன் அவ்வப்போது நினைவூட்டியும்கூடச் செல்ல முடிய வில்லை. 1990 ஜூலையில்தான் மீண்டும் அங்குச் செல்லவும் கல்வெட்டை முழுமையாகப் படிக்கவும் முடிந்தது. சேகரிக்கப் பட்ட தரவை நாளிதழ்களுக்கு வழங்கினோம். இந்தியன் எக்ஸ்பிரஸ் 14. 7. 1990 அன்றும் இந்து 20. 7. 1990 அன்றும் அச்செய்தியை வெளியிட்டிருந்தன. பட்டயக்கல்வி மாணவர் களுள் இராமகிருஷ்ணனே முதல்வராகப் புதிய கல்வெட்டைக் கண்டறிந்து வரலாற்றுக்கு உதவினார். அந்தக் கல்வெட்டின் பாடம் பின்னாளில் வரலாறு இதழில் வெளியிடப்பட்டது.

திண்ணக்குளம் காசி விசுவநாதர் கோயிலில் அரியலூர் அரசுக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் திரு. இல. தியாகராஜன் சில புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து வெளியிட் டிருந்தார். அவ்வூர் சம்பந்தர் பாடிய நெற்குன்றம் என்று அவர் கூறியிருந்தமையால் கல்வெட்டுகளைப் படிக்கவும் கோயிலைப் பார்க்கவும் கருதிப் பட்டயக்கல்வி மாணவர்கள் சிலருடன் 13. 7. 1990ல் திண்ணக்குளம் சென்றோம். அங்குள்ள கோயில் களையும் சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் ஆராய்ந்தோம்.

அங்கிருந்த சிங்கத் தூண்களைத் தியாகராஜன் கூறியிருந்த வாறு பல்லவர் காலத் தூண்களாக ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. அதனால், தினமணியில் வெளியான பாடல் பெற்ற கோயில் கண்டுபிடிப்பு என்ற செய்திக்குப் பட்டயக்கல்வி மாணவர் வீராசாமி எங்கள் கண்டுபிடிப்பின் அடிப்படையில் மறுமொழி எழுதியிருந்தார். அக்கடிதம் 29. 7. 1990 தினமணியில் வெளியாகியிருந்தது. தியாகராஜன் அத்தூண்கள் பல்லவர் காலத் தூண்களே என்று எழுதியிருந்த பதில் 9. 8. 1990 தினமணி இதழில் பதிவானது. மாற்றுக் கருத்துகளைப் பதிவு செய்வதும் அவற்றிற்கான மறுமொழிகளை எதிர்கொள்வதும் பட்டயக் கல்வி மாணவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் எளிதாய்ப் பழக்கமானது.

திண்ணக்குளம் ஆய்வின்போது புள்ளம்பாடி சிதம்பரேசு வரர் கோயில், ஆலம்பாக்கம் சிவன்கோயில், திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில் இவற்றையும் ஆராய்ந்தோம். ஆலம்பாக்கத்து மகரதோரணச் சிற்பங்கள் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தன. புள்ளம்பாடியில் இராமர், சீதை செப்புத் திருமேனிகளைப் பார்வையிட்டுக் குறிப்பெடுத்தோம். திருமழ பாடியில் வெளிச்சுற்றின் மேற்குப்பகுதியில் இருந்த மகரதோரண நடராஜரை ஆய்வின்போது கண்டறிந்தோம். அருமையான அந்தச் சிற்பம் முதன்முறையாக வரலாற்றில் பதிவானது.







21. 7. 1990 அன்று இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை துணைஆணையர் திரு. கே. என். அழகப்பன் தலைமையில் திருமதி இராஜேசுவரி மரைக்காயர் நினைவுப் பொழிவு அமைந்தது. திரு. என். சேதுராமன் பாசுபதச் சிந்தனைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். மறுநாள் காலை பாண்டியர்கள் பற்றி இரண்டு வகுப்புகளில் அவர் பேசினார். அன்று மதியம் மாணவர்களுக்குக் கோயில்களில் கல்வெட்டுப் படியெடுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. நளினியின் வழிகாட்டலில் அனைத்து மாணவர்களும் ஆளுக்கொரு கல்வெட்டை மசிப்படி எடுத்துப் படித்தனர்.

ஆடித்திங்கள் சிறப்புப் பொழிவாக 28. 7. 1990 அன்று புதுவைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், 'ஆய்வுகள் நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆய்வு மையத்தின் பணிகளைப் பாராட்டிய அவர் மையத்தின் ஆய்வுகளுக்கு அரசின் நிதி உதவி கிடைக்கத் தம்மாலான முயற்சிகளைச் செய்வதாகக் கூறினார். ஆனால், பயனேதும் விளையவில்லை.

29. 7. 1990 அன்று நிகழ்ந்த திருப்புத்தூர்ப் பயணத்தின் போது பிரான்மலை, பெரிச்சியூர், திருக்கோட்டியூர் சென்றிருந் தோம். ஆய்வுக்காலத் தொடக்கத்திலேயே என் வாழ்வரசியுடன் பிரான்மலை சென்றிருக்கிறேன். அப்போது கோயில் கட்டடக் கலை, குடைவரை அமைப்புப் பற்றி அதிகம் தெரியாது என்பதால் பல விஷயங்கள் விளங்காமல் இருந்தன. பிரான் மலைக் கோயில் தவத்திரு அடிகளாரின் ஆதீனக் கோயில் என்பதால் இந்த முறை கோயிலை விரிவாகப் பார்க்கும் நோக்கோடு அங்குச் சென்றிருந்தேன். நளினி அதற்கு முன்னர்ப் பிரான்மலை பார்த்ததில்லை.

அடிவாரக் கோயிலையும் மேலிருந்த மண்டபங்களையும் பார்த்த பிறகு குடைவரைப் பகுதிக்குச் சென்றோம். குடை வரைக்கு முன்னிருந்த மண்டபத்தின் கூரையில் அற்புதமான பாண்டியர் காலச் சிற்பங்களைப் பார்த்தோம். அவற்றுள் சில கரணச் சிற்பங்களாக இருந்தன. வாய்ப்பமையும்போது அந்தக் கூரைச் சிற்பங்களை விரிவான அளவில் பார்க்கவேண்டும் என்று கருதினேன். பாண்டியர் காலக் கலைப் பண்பாட்டு வரலாற்றிற்கு அக்கூரைச் சிற்பங்கள் மிகச் செழுமையான தரவுகளைத் தரவல்லவை என்பதை என் உள் மனம் கூறியது. இது குறித்துத் தவத்திரு அடிகளார் பெருந்தகையிடமும் தவத்திரு பொன்னம்பல அடிகளாரிடமும் தெரிவித்திருக்கிறேன்.

பிரான்மலைக் குடைவரை சிறியது. அதன் கருவறையில் இறைவனும் இறைவியும் ஒருசேர அமர்ந்துள்ளனர். இந்த அரிய காட்சி கருவறைக் காட்சியாகக் கிடைக்கும் மற்றொரு குடை வரை சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருமலைக் குடைவரை யாகும். இக்குடைவரை சிவகங்கை அரச மரபினரின் ஆளுகை யில் உள்ளது. இவ்விரண்டு குடைவரைகளையுமே முழுமை யான அளவில் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதும் பேறு எங்களுக்கு வாய்த்தது. பிரான்மலைக் குடைவரை தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் என்ற நூலிலும் திருமலைக் குடைவரை தென்மாவட்டக் குடைவரைகள் என்ற நூலிலும் இடம்பெற்றன.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.