http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 101

இதழ் 101
[ நவம்பர் 2013]


இந்த இதழில்..
In this Issue..

சர் இராபர்ட் புரூஸ் புட் நினைவு அறக்கட்டளை
காலங்காலமாக வண்ணமடிக்கப்பட்டு...
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 2
Chola Ramayana 10
Thirumeyyam - 7
மகேந்திர விஷ்ணு கிருகம்
தேடலில் தெறித்தவை - 8
சிற்பங்கள் ஓவியங்கள் காட்டும் தலவரலாறுகள்
மரபுக் கட்டடக்கலை - 01
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 2
மூங்கிலரிசி அடிசில்
இதழ் எண். 101 > கலைக்கோவன் பக்கம்
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 2
இரா. கலைக்கோவன்
திருவரங்கத்துப் பள்ளிகொண்டருளிய பெருமாளுக்குப் பெருந்தனத்துச் சிறுதனத்து மலையாளர் ஐம்பது கழஞ்சுப் பொன்னில் பிடியிட்ட, ஆயிரவன் என்னும் பெயர் கொண்ட கவரி ஒன்றைக் கொடையளித்தனர். ‘பொற்கைத் திருவெண்சாமரை’ என்று கல்வெட்டுச் சுட்டும் இக்கவரியைப் பள்ளிகொண்ட பெருமாளுக்கு வீச இராஜாச்ரய சதுர்வேதிமங்கலத்து மங்கையாழ்வான் பணியமர்த்தப்பட்டார். பொறுப்பைத் திருவரங்கத்துப் பெருங்குறி மகாசபை ஏற்றமையும் கோயில் நிருவாகக் குழு சார்ந்த யாரும் இவ்வறக்கட்டளையில் இடம்பெறாமையும் குறிப்பிடத்தக்கன.

விழாக் காலங்களில் கோயில் உற்சவர்கள் மேற்கொண்ட உலாக்கள் பேசும் கல்வெட்டுகளைத் தமிழ்நாட்டுக் கோயில்களில் குறைவாகவே எதிர்கொள்ள முடிகிறது. அத்தகு மிகச் சில கல்வெட்டுகளுள் திருவரங்கத்துக் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகள் ஐந்து குறிப்பிடத்தக்கன. அழகிய மணவாளப் பெருமாளின் எழுந்தருள்கை பேசும் முதற் கல்வெட்டு அவர் அமாவாசி நாளில் வெளிப்போந்து அப்பப் படையல் பெற்றதாகக் கூறுகிறது. கோயில் வளாகத்தில் இருந்த புன்னை மரத்தின் கீழ் எழுந்தருளித் தேட்டருந்திறல் கேட்டு, அப்பம் பெற்றமையை மற்றொரு கல்வெட்டு பகிர்ந்துகொள்ள, பிறிதொன்று, பங்குனிப் பெரிய திருநாளின்போது கோயில் திருமுற்றத்தே கீழைச் சோபானத்தில் அமையப்பெற்ற மண்ணாளன் பூப்பந்தலின் கீழ் மாலைகளுடன் இறைவன் எழுந்தருளி தானம் செய்து அப்பப் படையல் - பாக்கு வெற்றிலை ஏற்று, திருநாள் சேவகத்திற்கு வந்த வைணவர்களுக்கு விடை கொடுத்தனுப்பியதாகத் தெரிவிக்கிறது. இதே கல்வெட்டு, அரங்கனுக்குச் சிறுகாலைச் சந்தியில் அறுகும் உச்சம்போதில் விஷ்ணுகிராந்தியும் அந்தியில் துழாயும் சாத்தப்பட்டதாகக் கூறுகிறது. மூன்று சந்திகளுக்கும் முவ்வேறு தொடையல்கள்.

குலோத்துங்கரின் 41ஆம்ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஆதித்தன் திருவரங்க தேவனான விருதராஜபயங்கர விஜயபாலனின் கஸ்தூரி சாத்துகை ஏற்று, ஏகாதசி அன்று புறம்பே எழுந்தருளிய அழகிய மணவாளப் பெருமாள் முழுக்காடி, முக்கல அரிசியில் சமைத்த அமுது கொண்டதாகக் கூறுகிறது. மற்றொரு கல்வெட்டு, குலோத்துங்கரின் அதிகாரிகளுள் ஒருவரான இராஜராஜன் மதுராந்தக தேவரான வற்சராஜர் பிறந்த நட்சத்திரமான மகத்தன்று மணவாளப் பெருமாள் புறத்தே எழுந்தருளி, 81 குடம் நீரால் திருமுழுக்குப் பெற்று, முக்கல அரிசியில் அமுது பெற்றதாகப் பேசுகிறது. இந்நிகழ்வுக்கான கொடை நில எல்லைகள் சுட்டும்போது, ஜயங்கொண்ட சோழச் சேனாமுக மூவேந்த வேளார் நிலம் குறிக்கப்படுகிறது. சேனாமுகம் என்ற சொல்லாட்சி வணிகக் குழு ஒன்றைக் குறிப்பதாக அறிஞர் சுட்டுவர். இங்கு அது பொருந்துமா என்பதை ஆராயவேண்டும்.

குலோத்துங்கரின் கல்வெட்டுகள் முன்வைக்கும் மூன்று திருமடல்களில் இரண்டு மன்னருடையன. ஒன்று கடவுளுடயது. குலோத்துங்கரின் மடல்களுள் ஒன்று மன்னரின் 13ஆம் ஆட்சியாண்டின் 231 ஆம் நாளில் அரங்கர் கோயில் ஸ்ரீகாரியம் நாராயண பட்டருக்கு அனுப்பப்பட்டது. சேனாபதி வீரராஜேந்திர அதியமானும் அவர் மணவாட்டி ஆதித்தன் மென்கையும் அரங்கருக்கென உருவாக்கிய நந்தவனங்களைப் பற்றிய செய்தியைக் கோயிலில் கல்வெட்டாக்கிடுமாறு உணர்த்திய அந்த அரச ஆணை கோயில் வைணவ வாரியம், பண்டார வாரியம், கண்காணிப்பில் வைணவக் கணக்கு வேம்பன் உடையானால் செயலாக்கம் பெற்றது.

‘அழகிய மணவாளப் பெருமாள் திருவாய் மொழிந்தருளின திருமுகப்படி’ என அமைந்துள்ள கல்வெட்டால், ஆரியன் அனந்த தேவனான மூவேந்த வேளானுக்குக் கோயில் நிருவாகம் நிலப்பகுதி ஒன்றை இரண்டு காசுக்கு விற்றமையும் அச்செய்தியை இராஜமகேந்திரன் திருசுற்றுமாளிகையில் கல்வெட்டாகப் பொறித்தமையும் தெரிய வருகின்றன. கோயில் சார்ந்த விற்பனைகள் பல நிகழ்ந்துள்ள போதும் அவை அனைத்துமே கல்வெட்டுகளாக வடிவம் பெற்றிருந்த போதும் இவ்விரண்டு விற்பனைகள் மட்டும் கல்வெட்டு வடிவம் பெற ஏன் அரசாணையும் இறையாணையும் தேவைப்பட்டன என்பதை அறியக்கூடவில்லை. குலோத்துங்கரின் 47ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் முதன்முதலாக வெளிப்படும் இவ்விறையாணை பிற்காலத்தில் பரவலாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. விற்பனைகள், கொடைகள் என அனைத்து நிகழ்வுகளுமே இறைவன் முன் விண்ணப்பிக்கப்பட்டு அவர் உத்தரவு கொடுத்த பின்பே நடைமுறைக்கு வருமாறு போல ஆவணங்கள் எழுதப்பட்டுள்ளமை திருவரங்கத்தின் தனித்தன்மை எனலாம். இந்த மாற்றத்திற்கு முன்னோடியாகவே குலோத்துங்கரின் இறையாணைக் கல்வெட்டைக் காணமுடிகிறது.

குலோத்துங்கர் பிறந்த நட்சத்திரமான பூசத்தின்போது, திருவரங்கத்தாழ்வார் முழுக்காடி அப்பப் படையல் பெற வாய்ப்பாக மன்னரின் 10ஆம் ஆட்சியாண்டின் போது தேவதான இறையிலியாக வழங்கப்பட்ட நிலத்துண்டுக்கு மாற்றாக, மன்னரின் 40ஆம் ஆட்சியாண்டில் கலார் கூற்றத்துச் சிறுதவூரில் நிலம் வழங்கப்பட்டமையைத் தெரிவிக்கும் அரசரின் இரண்டாம் திருமுகத்திற்கு ஏற்ப, கோயிலுக்கு உள்வரி ஓலை தரப்பட்டது. அதில் புரவுவரித் திணைக்கள நாயகங்கள் மூவரும் முகவெட்டிகள் நால்வரும் கையெழுத்திட்டுள்ளனர்.

குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகளில் திருவரங்கம் தவிர்த்த பிற அந்தண ஊர்களின் ஆட்சிக்குழுக்கள் நடத்திய கூட்டங்கள் சில பதிவாகியுள்ளன. அவற்றுள் மூன்று குறிப்பிடத்தக்கன. ஆற்காட்டுக் கூற்றத்து பிரமதேயங்களுள் ஒன்று சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலம். இவ்வூர் சபை முதற் பராந்தகரின ஆட்சிக் காலமான பொதுக்காலம் 917இல் திருவரங்கத்துப் பள்ளிகொண்ட பெருமாளிடமிருந்து 400 கழஞ்சுப் பொன் கடனாகப் பெற்றிருந்தது. அதற்கான வட்டியை அவ்வப்போது செலுத்திவந்தபோதும் அசலைச் செலுத்தக்கூடவில்லை. குலோத்துங்கரின் 10ஆம் ஆட்சியாண்டின்போது ஏறத்தாழ 163 ஆண்டுகளுக்குப் பிறகும் பெற்ற கடனைப் பொன்னாகத் திருப்பித்தர முடியாத நிலையில், சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலத்து சபை ஊர்ப் பொது நிலம் 6 வேலியை, நிலவரியைத் தாங்களே தொடர்ந்து செலுத்துவதென்ற ஒப்பந்தத்துடன் அரங்கர் கோயிலுக்கு விற்றுக் கொடுத்தது. இக்கல்வெட்டில் நியமத்துக்குப் போன பெருவழி குறிக்கப்படுவது கூடுதல் தரவு. திருவரங்கம் கல்வெட்டுகளில் இதுபோல் பெருவழிகள் சில (கொங்கப் பெருவழி, நியமப் பெருவழி) இடம்பெற்றுள்ளன.

நித்தவினோத வளநாட்டு காந்தார நாட்டு பிரமதேயமான இராஜமகேந்திர சதுர்வேதிமங்கலம் குலோத்துங்கரின் 2ஆம் ஆட்சியாண்டின்போது
அப்பகுதியில் நிகழ்ந்த வலங்கை இடங்கைச் சச்சரவில் சிக்கிப் பல துன்பங்களைச் சந்தித்தது. ஊர் சுட்டெரிக்கப்பட்டது. திருமுற்றங்கள் அழிக்கப்பட்டன. திருவுருக்களும் கருவூலங்களும் கள்ளரால் கொள்ளையிடப்பட்டன. தப்பிப் பிழைத்தவற்றைப் பண்டாரத்தில் வைத்துக் காக்க முடியாத நிலையில் ஊர் இருந்தது. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அழிக்கப்பெற்ற திருமுற்றங்களை மீள உருவாக்கவும் மதில் கட்டவும் திருவுருக்களை எழுந்தருளச் செய்யவும் சபைக்குப் பொருள் தேவைப்பட்டதால் மும்முடிசோழ விண்ணகர் ஆழ்வார் நிருவாகத்திடம் 50 கழஞ்சுப் பொன்னை சபை கடனாகப் பெற்றது. இப்பொன் அப்போது வழக்கில் இருந்த இராஜேந்திர சோழன் மாடைக்கு அரை மாற்றுத் தாழ இருந்தது. கடனுக்கு வட்டியாக 25 கழஞ்சுப் பொன் அமைந்தது.

இந்த 75 கழஞ்சுப் பொன்னில் ஐந்து கழஞ்சு திருமுற்றம் சீரமைக்கவும் திருவுருக்களை எழுந்தருளுவிக்கவும் செலவிடப்பட்டதால், எஞ்சிய 70
பொன்னுக்கு இணையாகக் கோயில் நிலங்கள் சில வரிநீக்கம் செய்யப்பட்டன. பெருவரி, மஞ்சிக்கம், சில்வரி, வெள்ளான் வெட்டி, மகமை, பண்டை வெட்டி, அந்தராயம், குலை, குரம்பு, எச்சோறு, கூற்றரிசி, ஊராட்டுவரி என நீக்கப்பட்ட அவ்வரியினங்களைக் கடனாகப் பெற்ற பொன்னுக்கும் அதற்கான வட்டிக்கும் ஈடாக ஆண்டாண்டு தோறும் செலுத்தும் பொறுப்பை சபையே ஏற்றது. இராஜமகேந்திர சதுர்வேதிமங்கல சபையின் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த ஆவணம் அவர்கள் ஊர்ப் பெருமாள் கோயிலுடன் தொடர்புடையதெனினும் எக்காரணம் பற்றியோ திருவரங்கம் கோயில் நான்காம் சுற்றின் வடசுவரில் இடம்பிடித்துள்ளது.

குலோத்துங்கரின் 34ஆம் ஆட்சியாண்டில் பதிவாகியுள்ள சபை சார்ந்த மற்றொரு கல்வெட்டு மேலது போலன்றித் திருவரங்கம் கோயிலுடன் தொடர்புடையதாகவே அமைந்துள்ளது. தங்கள் ஊர் இராஜேந்திரசோழன் மண்டபத்தில் முன்னறிவிப்புச் செய்து கூடிய உறையூர்க்கூற்றத்து பிரமதேயமான இராஜாச்ரய சதுர்வேதிமங்கலத்து சபை கலந்துகொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை பார்த்து (புள்ளி வாசித்து) நிகழ்வைத் தொடங்கியது. திருவரங்க தேவருக்கு நந்தவனம் அமைக்கவும் திருப்பணிகளுக்கான முதலாகவும் பிரமதேயத்துக்கு உட்பட்ட சிற்றூரான இராஜேந்திர சோழப் பேரிளமை நாட்டு வடவூரில் சிற்றம்பர் எல்லைக்குத் தெற்கில் அமைந்த புன்செய் நிலம், மலை, நீர்நிலை ஆகியவை உள்ளடங்கக் கொடையளிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் வடவூர் இன்றும் அதே பெயரில் சிராப்பள்ளி நகராட்சிக்கு உட்பட்ட தில்லைநகருக்கு மேற்கில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

அப்ப அமுது போலவே இறைவனுக்கு அவலமுது அளிக்கப்பட்டமை ஒரு கல்வெட்டாக வடிவெடுத்துள்ளது. கோயில் நிருவாகத்திடம் நிலத்துண்டு ஒன்றைப் பெற்ற அரிகண்டதேவர் ஆயர்கொழுந்தினாரான சேனாபதிகள் கங்கைகொண்ட சோழ முனையதரையர் அதை ஆயிரக்கொழுந்து எனும் பெயரில் நந்தவனமாகத் திருத்தி, அங்கு அரிகண்ட தேவன் எனும் தம் பெயரால் மண்டபம் எடுப்பித்தார். ஐப்பசி, பங்குனித் திருநாள்களில் இம்மண்டபத்தில் திருவேட்டைக்கு எழுந்தருளிய பெருமாள் அவலமுது ஏற்றார்.

கணக்குக் கேட்டல், வரிகொடாது ஓடிய நிகழ்வு எனச் சமுதாயத்தின் மறுபக்கம் காட்டும் கல்வெட்டுகளும் குலோத்துங்கர் காலத்தில் திருவரங்கத்தில் பதிவாகியுள்ளன. மன்னரின் 22ஆம் ஆட்சியாண்டின்போது பாச்சில் கூற்றத்து ஊர் ஒன்றின் காணியாளர்கள் வரிகட்டாமையால், ஊராட்சிக் குழு அவ்வூரின் பெயரை மாற்றி நிலப்பகுதிகளை 40 கூறாக்கி வேறு காணியாளர்களுக்கு வழங்கிய தகவலை வெளிப்படுத்தும் கல்வெட்டு 24 ஊர்ப் பெயர்களைத் தருகிறது. அவற்றுள் 10, ஊர் என்னும் பின்னொட்டுக் கொள்ள, 3, குடி என்னும் பின்னொட்டுடன் முடிகின்றன. 2 ஊர்கள் மங்கலமாய் நிறைவுற, நல்லூர், பாடி எனும் பின்னொட்டுக்களில் காடன்பாடியும் கிளிநல்லூரும் உள்ளன. பல்வகைப் பின்னொட்டுகள் பெற்ற ஊர்களாக 7 அமைந்துள்ளன. பொதுவாக ஒரே கல்வெட்டில் பல ஊர்களின் பெயர்கள் கிடைப்பது அரிதாகும். ஆனால், திருவரங்கத்தில் உள்ள இரண்டு சோழர் கல்வெட்டுகள் ஊர்ப் பெயர்களின் திரட்டலாக அமைந்துள்ளன. முதற் குலோத்துங்கர் கல்வெட்டு 24 ஊர்ப் பெயர்களைத் தந்துள்ளமை போல மூன்றாம் குலோத்துங்கர் கல்வெட்டொன்று 75 ஊர்ப் பெயர்களை முன்வைக்கிறது.

நாழி கேட்டான் திருவாயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு கோயிலில் ஸ்ரீகாரியம் செய்த இராஜேந்திசோழ மூவேந்த வேளார் பண்டாரக் கணக்குகளைச் சரிபார்த்தபோது, செலுத்தவேண்டிய கடமைக் காசைச் சிலர் செலுத்தாமல் இருந்தமையைக் கண்டறிந்ததாகக் கூறுகிறது. பெயர் அறியமுடியாத இருவரும் திருவரங்க நாராயணனும் முறையே 60, 42, 52 காசு என நெற் பண்டாரத்திற்கு நிலுவை வைக்க, திருவரங்கன் புருஷோத்தமன் பொற்பண்டாரக் கடமைக்கு 443 3/4 காசு செலுத்தவில்லை. கல்வெட்டுச் சிதைவால் வேளார் எடுத்த நடவடிக்கை குறித்து அறியக்கூடவில்லை. அதே கல்வெட்டின் மற்றொரு பகுதி கோயில் பண்டாரத்துக்குச் செலுத்த வேண்டிய 940 காசு செலுத்தாமைக்காகப் பாரதாயன் திருவரங்கன் சிறையில்
இருந்தமையைப் பகிர்ந்துகொள்கிறது. முழுமையற்ற நிலையிலும் இக்கல்வெட்டு இறைக் கருவூலக் கணக்குகளில் ஏற்பட்ட முறைகேடுகளையும் அவற்றுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளையும் ஓரளவிற்கேனும் வெளிப்படுத்துகிறது.

பொதுவாகத் தமிழ்நாட்டுக் கோயில்களில் விளக்குக் கொடைகள் பேசும் கல்வெட்டுகளே மிகுதியான எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், திருவரங்கத்தில் குலோத்துங்கரின் 83 கல்வெட்டுகளில் ஐந்து மட்டுமே விளக்குகள் பற்றி உரையாடுகின்றன. அவற்றுள் நந்தாவிளக்குகளை இரண்டும் திருவிளக்குகளை மூன்றும் குறிக்கின்றன. அதிகாரிகளான இராஜநாராயண முனையதரையரும் இராஜேந்திர சோழ முனையதரையரும் கங்கைகொண்ட சோழ முனையதரையரும் மூன்று விளக்குகளின் கொடையாளிகளாக அறிமுகமாக, ஒன்றைத் தந்தவர் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. குலோத்துங்கர் கல்வெட்டுகளிலேயே மிகச் சிறியதாக 11 வரிகளில் காட்சியளிக்கும் கல்வெட்டு, 110 பலம் நிறையுள்ள விளக்கொன்றை சாத்தந்தை ஐயாறன் சங்கர நாராயணன் அளித்ததாகக் கூறுகிறது. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இயற்பெயருக்கு இளம்பூரணர் காட்டும் மேற்கோள் சாத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

முதற் குலோத்துங்கரின் 83 கல்வெட்டுகள் திருவரங்கம் திருக்கோயில் சார்ந்து முன்னிலைப்படுத்தும் முதன்மைத் தரவுகளே தமிழ்நாட்டின் வரலாற்றிற்கு ஒன்பது பக்கங்களை வழங்க முடியும் என்றால், தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் நம் முன்னோர்கள் பதிவுசெய்திருக்கும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள் உரிய அணுகுமுறையில் ஆராயப்படுமானால், இந்த மண்ணின் வரலாறுதான் எத்தனை வளப்படும்! அரங்கத்தின் மணலடித்த நிலங்களும் அவற்றை நந்தவனங்களாக்கிய உள்ளங்களும் அதற்கென அளிக்கப்பட்ட சலுகைகளும் அங்கு உழைத்த உழுகுடிகளும் சரியான எழுதுகோல்களில் அடைக்கலமானால் எத்தனை அற்புதமான சிறுகதைகளும் வரலாற்றுப் பூச்சு விலகாத புதினங்களும் உருவாக முடியும். வரலாறு காத்திருக்கிறது. இனங்கண்டு அள்ளிக்கொள்ளத்தான் ஆட்களே இல்லை. this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.