http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 101
இதழ் 101 [ நவம்பர் 2013] இந்த இதழில்.. In this Issue.. |
ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்..
சரியாகச் சொல்லவேண்டுமென்றால் 1863 மே மாதம் 30ம் நாள். சென்னைக்கருகில் பல்லாவரம் மலையடிவாரப் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு ஆங்கிலேயரின் கண்களில் தொல்பழங்காலக் கற்கோடரியொன்று தென்பட்டது. அதற்கு முன்னால் பலர் கண்களிலும் அந்தக் கருவி பட்டிருந்தாலும் அதன் முக்கியத்துவம் என்ன என்பது அவருக்கு மட்டும்தான் புரிந்தது. இந்திப் பீடபூமியின் பழைமை தொல்லியல் ரீதியாகச் சரிவர நிலைநாட்டப்படாத காலம் அது என்பதால் அந்தக் கண்டுபிடிப்பு அவரைப் பெருத்த ஆச்சரியத்திற் குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து தென்னகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணப்பட்டு பல்வேறு கள ஆய்வுகளை நிகழ்த்தினார் அந்த அறிஞர். அவரது ஆய்வுகள் பிற்காலத்தில் ஆதிச்சநல்லூர் - அரிக்கமேடு என்று பலப்பல அகழ்வாராய்ச்சிகளுக்கு வித்திட்டன. இருபதாண்டுகளுக்கும் மேல் இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டுத் தென்னிந்தியாவின் தொல்லியல் பழைமையை உறுதியாக நிலைநாட்டிய அவரே ‘இந்தியத் தொல்பழங்கால ஆய்வின் தந்தை’ என்று போற்றப்படும் சர் இராபர்ட் புரூஸ் புட் (Sir Robert Bruce Foote) ஆவார். அந்தக் காலத்தின் பொதுவான சூழல்களையும் ஆங்கிலேயர் இந்தியர்களின் வரலாறு மற்றும் பண்பாட்டைப் பற்றிக் கொண்டிருந்த இளக்காரமான எண்ணங்களையும் கருத்தில் கொண்டால்தான் புட்டின் ஆய்வுகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது புரியும். இந்திய புவியியல் அளவீட்டுத் துறையில் 1858 முதல் 1891 வரை நிலவியல் நிபுணராகப் பணிபுரிந்த இந்த அறிஞர் தனது பணிக்காலத்தின் பெரும் பகுதியை தென்னிந்தியாவில் (அந்நாளைய மெட்ராஸ் பிரெஸிடென்ஸி) செலவிட்டார். அதன் பல்வேறு பகுதிகளிலும் சுற்றியலைந்து பல்வேறு பழங்கற்கால - புதிய கற்கால - பெருங்கற்காலக் கருவிகளையும் பானையோடுகளையும் சேகரித்தார். அவரது ஆய்வுகளினால் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் எச்சங்கள் தென்னிந்தியாவில் தொடர்ந்து இருந்து வந்துள்ளமை தெரிய வந்தது. 1914ல் இரு பகுதிகளாக ஏராளமான புகைப்படங்களுடன் பதிப்பிக்கப்பட்ட அவரது ஆய்வுத் தொகுப்பான The Foote collection of Indian Prehistoric and Proto historic Antiquities எனும் நூல் தென்னிந்தியாவின் தொல்பழங்கால வரலாற்றை ஐயத்திற்கிடமின்றி உறுதியாக நிலைநாட்டியது. அவர் அரும்பாடுபட்டு சேகரித்த தொல்பழங்காலப் பொருட்கள் இன்று சென்னை அருங்காட்சியகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மாபெரும் தொல்லியல் அறிஞரின் நினைவாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை ஒரு நினைவு அறக்கட்டளையை இந்த ஆண்டு நிறுவியுள்ளது. அன்னாரின் உருவப்படம் பல்கலையில் இந்த ஆண்டு மே மாதம் 30 தேதியன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தொகுப்பு நல்கை தமிழ்ப் பல்கலைக் கழகத்திடம் அளிக்கப்பட்டு அதில் கிடைக்கும் வட்டியிலிருந்து ஆண்டுதோறும் இந்தியத் தொல்லியல் குறித்த ஒரு சொற்பொழிவுக்கு கல்வெட்டுத்துறை ஏற்பாடு செய்யும். ஒரு தொல்லியல் அறிஞரை நினைவு கூற இதனினும் சிறந்த வழி கிடையாது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தியர்களே தங்களின் பழைமையை முற்றிலுமாக மறந்து போய்விட்ட ஒரு காலத்தில் எங்கிருந்தோ வந்து தனது வாழ்நாளின் கணிசமான பகுதியை தொல்லியல் ஆய்வுகளில் செலவிட்டு இன்றைக்குக் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி’ என்று நாம் மேடைதோறும் முழங்கக் காரணமான அந்த நல்லறிஞரை மறவாமலிருக்கத் தமிழ்ப் பல்கலை எடுத்திருக்கும் இந்த முயற்சியை கரம் குவித்து வரவேற்கிறோம். இந்த நிதியம் வரலாற்றில் நேசம் கொண்ட நம் போன்ற பல்வேறு நெஞ்சங்களையும் நம்பித்தான் துவக்கப் பட்டிருக்கிறது என்பதால் வாசகர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு இந்த அறக்கட்டளைக்கு நிதி உதவிகளை அளிக்க முன்வருமாறு கோருகிறோம். குறைந்தபட்சத் தொகை என்று எதுவுமில்லை. தாங்கள் கொடுக்க முன்வரும் எந்த சிறு தொகையும் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும். நிதி உதவி அனுப்ப விரும்பும் வாசகர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரியையும் நிதித் தொகையையும் கீழ்க்கண்ட பின்னூட்டத்தில் குறிப்பிட்டு எழுதினால் தமிழ்ப் பல்கலைக்கு எந்த வங்கிக் கணக்கில் இந்த நிதியைச் செலுத்தலாம் என்பன போன்ற விபரங்களைத் தெரிவிக்கிறோம். செலவுகள் தொடர்ந்து அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நிலைத்து நிற்கப்போகும் ஒரு நல்ல நோக்கத்திற்காக செலவு செய்யும் வாய்ப்பு எப்போதாவது ஒரு முறைதான் ஏற்படுகிறது. அத்தகையதொரு நல்ல வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள முன்வருமாறு கோருகிறோம். மிக்க அன்புடன் ஆசிரியர் குழு.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |