http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 101

இதழ் 101
[ நவம்பர் 2013]


இந்த இதழில்..
In this Issue..

சர் இராபர்ட் புரூஸ் புட் நினைவு அறக்கட்டளை
காலங்காலமாக வண்ணமடிக்கப்பட்டு...
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 2
Chola Ramayana 10
Thirumeyyam - 7
மகேந்திர விஷ்ணு கிருகம்
தேடலில் தெறித்தவை - 8
சிற்பங்கள் ஓவியங்கள் காட்டும் தலவரலாறுகள்
மரபுக் கட்டடக்கலை - 01
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 2
மூங்கிலரிசி அடிசில்
இதழ் எண். 101 > கலைக்கோவன் பக்கம்
காலங்காலமாக வண்ணமடிக்கப்பட்டு...
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணிக்கு,

மத்திய பிரதேசத்தின் சில ஊர்களைக் கண்டு 26.10. 2013 அன்றுதான் சிராப்பள்ளி திரும்பினேன். குவாலியர் கோபகிரிக் கோட்டையையும் அங்குள்ள சில கோயில்களையும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள தீர்த்தங்கரர் சிற்பங்களையும் பார்க்க வாய்த்தது. தீர்த்தங்கரர் சிற்பங்கள் கருநாடகத்தின் கோமடேசுவரர் போல உயரமாகவும் கம்பீரமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. சில சிற்பங்கள் குடைவரை போன்ற அமைப்பில், அதாவது தூண்களாலான முகப்பும் ஒரு மண்டபமும் பெற்ற நிலையில் மண்டபத்தின் பின்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.

குடைவரைகளைப் போல் மண்டபத்தை முற்றிலும் உள்ளடக்கியதாய் முகப்பு அமையாமல், உள்ளிருக்கும் தீர்த்தங்கரரின் மார்புக்கு மேற்பட்டபகுதி வெளித்தெரியுமாறு முடிக்கப்பட்டுள்ளது. குடைவரை ஒத்த முகப்பு (தூண்கள், போதிகைகள், உத்திரம் வாஜனம், கபோதம் அனைத்தும் பெற்றதாய்), ஆனால், மேல் திறப்புடன், மண்டபப் பின்சுவரின் மேற்பகுதி வெளித்தெரியும் அமைப்பில், புதிய உத்தியாய் அந்தக் கட்டமைப்பு காட்சியளித்தது. இளங்காலையில் தீர்த்தங்கரர்களின் உறவாடலும், அந்தக் கட்டமைப்பின் புதிய பரிமாணமும் உள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்தன.


படம் - குவாலியர் குடைவரை


வாருணி, குடைவரைகளுடனான என் உறவுக்கு முப்பது வயது. 1966இல் நானும் என் தோழியும் மாமல்லபுரம் சென்றபோதுதான் குடைவரை என்ற அமைப்பைக் கண்டேன். அந்த வயதில் (18) மாமல்லபுரக் கலைப்படைப்புகள் எங்கள் கலந்துரைகளுக்குப் பின்புலமாக மட்டுமே விளங்கின. புரிந்தும் புரியாமலும் பார்த்தும் பார்க்காமலும் பிரமிப்பும் காதலுமாய் மணல் வெளியில் மகிழ்வு பொங்க வலம் வந்தது மட்டுமே அப்போதைக்கு முடிந்தது.

காதலித்தவளையே கைப்பிடித்துச் சிராப்பள்ளி வந்தபோது, மருத்துவப் பணிக்கிடையே ஞாயிறுகளில் அமைந்த ‘ஓய்வு’ சிராப்பள்ளி, குடுமியான்மலை, சிற்றண்ணல்வாயில் குடைவரைகளுக்குச் செல்ல வழி கோலியது. அப்போதும் மகிழ்விடங்களாகவும் மனதைத் தொட்ட இடங்களாகவும் அவை விளங்கினவே தவிர, புரிதல் நிகழவில்லை.

உறையூர் ஐவண்ணப்பெருமான் கோயில் ‘சைக்கிள்’ சிற்பம் என் வாழ்க்கையைத் திசை திருப்பியது என்றால், அறிஞர் கூ. ரா. சீனிவாசனின் ‘பல்லவர் குடைவரைகள்’ நூல் என்னைக் குடைவரைப் பாதையில் தடம் பதிக்க வைத்தது.

மாமண்டூரில் நான், நளினி, அகிலா மூவரும் சீனிவாசனின் வரிகளோடும் குடைவரைகளின் அமைப்போடும் போராடியது மறக்கமுடியாத நினைவு. அக்குடைவரைகள் ஊரகத்திலிருந்து விலகி நிற்பவை. அதனாலேயே, மனித நடமாட்டம் குறைந்தவை. சுற்றிலும் இயற்கையின் ஆட்சிதான். ஒருபுறம் வறண்டு கிடக்கும் பேரேரி. மறுபக்கம் புதர்களும் தோப்புகளும். இடையில் இடைவெளிவிட்டும் விடாமலும் தொடரும் குன்றின் நீட்சி. அதில்தான் கீழும் மேலுமாய் நான்கு குடைவரைகள். எனக்குள் மாமண்டூர் நிறைந்ததற்கு அதன் மோகனச் சூழல் முதன்மைக் காரணம். குறிப்பிட்டுச் சொல்லுமாறு சிற்பங்களேதுமற்ற நிலையிலும் அந்தக் கற்குடைவுகளுக்கு ஒரு கவர்ச்சி இருந்ததை உணரமுடிந்தது. ஏழெட்டு முறைகள் அவற்றை ஆராய்ந்திருப்போம். புதிய கல்வெட்டுகளும் கிடைத்தன. மதிய உணவுப் போதுகளில் நிகழ்ந்த கலந்துரைகள் மாமண்டூர்க் குடைவரைகளோடு எங்களை நெருக்கப்படுத்தின. கிராமத்து நட்பும் அக்கறையும் எங்கள் ஆய்வுக்கு அர்த்தம் சேர்த்தன.

வாருணி, இந்த முப்பதாண்டுகளில் முதல் இருபதாண்டுகள் தென்னிந்தியக் குடைவரைகளைப் புரிந்து கொள்வதில் நிறைந்தன. ‘புரிந்து கொள்ள முடியும்’ என்ற நம்பிக்கை தந்த துணிவில் இந்தியக் குடைவரைகளை அணுகினோம். இப்போது நாங்கள் குடைவரைகளின் உறவுகள். குன்றுகளிலும் பாறைகளிலும் மலைகளிலுமாய் மனித முயற்சியின் வெளிப்பாடுகள் குடைவரைகளாக உருவெடுத்துள்ளன. மனிதனின் தன்னம்பிக்கை, எதையும் தன் வலிமையின் கீழ்க் கொணர வல்ல ஆற்றல், இயற்கையோடு இயைந்த அவன் சிந்தனைகள், உருவாக்கங்களின் பாங்கு எனக் குடைவரைகள் வரலாற்று விடிவிளக்குகளாய் மின்னுகின்றன.

\கருவறை மட்டும் அல்லது தூண் முகப்புப் பெற்ற மண்டபத்தில் கருவறை. இதுதான் தமிழ்நாட்டுக் குடைவரைகளின் அடிப்படைக் கட்டமைப்பு.

சங்க காலப் பொதியிலின் கல்வடிவமாய்ப் பிறந்த இந்த அடிப்படைக் கட்டமைப்பில் தமிழ்நாட்டுப் பல்லவரும் பாண்டியரும் முத்தரையரும் அதியரும் நிகழ்த்தியிருக்கும் கலை ஆளுமைகள் இந்த மண்ணின் சிந்தனை வளம் காட்டும் செழுமைப் பதிவுகள். ஒரு குடைவரை போல் மற்றொன்று இல்லை. தமிழ்நாட்டின் 105 குடைவரைகளில் நிறைவடையாதவை கூட சில வரலாற்றுப் பக்கங்களை விரிக்கின்றன. முகப்பில் தொடங்கிக் கருவறை வரை ஒவ்வொரு குடைவரையிலும் வரலாறு வாழ்கிறது. தூண்களின் வடிவம், அவற்றில் இணையும் பதக்கங்கள், போதிகைகள், கூரையுறுப்புகள், முகப்பின் தாங்குதளம், மண்டப அமைப்பு, அதில் உறையும் கருவறை எனக் கட்டமைப்பினும், முன்னிருந்து பின்னாகவும் - அங்கும் இங்குமாகவும் - எங்கும் பரவிய நோக்கிலும் எனக் கண்களைச் சுழற்றிச் சுழற்றிச் சுகிக்கவைக்கும் சிற்ப உருவாக்கத்திலும் இந்த நான்கு அரசமரபுகளும் இணையற்ற உயரங்களை எய்தியுள்ளன.

நான்கு நூற்றாண்டுகளில் நிகழ்ந்து முடிந்த இந்தப் படைப்பாக்கம் சமயங்களை வெளி வட்டத்திலும் வாழ்க்கையை உள்வட்டத்திலும் எதிரொலித்துள்ளமை அனுபவித்து உணர்தற்குரியது. மானுடப் பண்புகளையும் உள்ளத்தின் எதிர்நோக்கல்களையும் உள்வாங்கியே சிற்பங்கள் வடிவெடுத்துள்ளன. அவ்வக்கால சமுதாயத்தின் ஆளுமையே எங்கும் எதிலுமாய்த் தேங்கியுள்ளது.


படம் - உமா சகிதர்


பரந்த பார்வைதான் வேர்களையும் விழுதுகளையும் விளங்க வைக்கிறது. ஒன்றைப் புரிந்துகொள்ள மற்றொன்று உதவுகிறது. ஒன்று பலவாய்க் கிளைப்பதும் பல ஒன்றாய் ஒடுங்குவதும் நடக்க, நடக்கத்தான் தெரிகிறது. உமாசகிதரில்தான் எத்தனை படப்பிடிப்புகள்! ஆண், பெண் வாழ்க்கையின் உன்னதத்தை விளக்க எத்தனை இறைவடிவங்கள் இணைவின் ஒன்றுதல்களாய்! உள்ளதைச் சொல்ல, உணர்ந்ததைக் காட்டக் கலையின் கைப்பிடித்த மானுடம் அவற்றை நிலைப்படுத்தவும் நிறைவாக்கவும் சமயத்தை உள்வாங்கியது. புரியாத பார்வைகள் சமயத்தை மட்டுமே சுவைக்கின்றன. அதனாலேயே, இணக்கம் விளையவேண்டிய இடங்களில்கூட இறுக்கமே பிறக்கிறது.

வாருணி, தமிழ்நாட்டுக் குடைவரைகளில் பல இன்றளவும்கூட ஊர்களை விட்டு ஒதுங்கியே உள்ளன. நகர்ப் பெருக்கம், நில வெறி இவற்றையெல்லாம் தாண்டி ஏகாந்தச் சூழலில் வாழும் இந்தக் கட்டுமானங்கள் கலை பயில விழைவோருக்கும் மானுடப் படிநிலை அறிய நினைப்போருக்கும் தூண்டுதல்களாக அமையும். சைவம், வைணம் சார்ந்த குடைவரைகள் இந்த எண்ணிக்கையில் தென்னிந்தியாவில் தமிழ்நாடு தவிர வேறெங்கும் இல்லை.

கலிங்கத்துத் தாக்கம், சளுக்கியத் தொடர்ச்சி, இராட்டிரகூடரின் மேலாண்மை, வேங்கியின் தொடர்பிழைகள் என்றெல்லாம் காலங்காலமாக வண்ணமடிக்கப்பட்டு வரும் இந்த மண்ணின் படைப்புகள் இங்கு வாழ்ந்த இதயங்களின் வெளிப்பாடுகளே என்பதை எங்களின் முப்பதாண்டு உறவு உணர்த்தியுள்ளது.

மகேந்திரர் குடைவரைகள், தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள், தென்மாவட்டக் குடைவரைகள், மதுரை மாவட்டக் குடைவரைகள், புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், மாமல்லபுரம் குடைவரைகள், பல்லவர், பாண்டியர், அதியர் குடைவரைகள் என்ற நூல் வரிசையில் தமிழ்நாட்டுக் குடைவரைகளின் தனித்தன்மைகளை இந்தியக் கண்ணோட்டத்தில் தொட்டுக்காட்டியிருக்கும் எங்கள் ஆய்வுகள், இந்த வரிசையின் முழுமையை வெளிப்படுத்த, ‘தமிழ்நாட்டுக் குடைவரைகள்-ஓர் இந்தியப் பார்வை’ என்ற இறுதி நூலுடன் நிறைவுறும்.

அந்த நூலுக்கான பயணங்களுள் ஒன்றுதான் குவாலியர் தீர்த்தங்கரர்களைக் காணவும் அந்தச் செதுக்கல்கள் வழிக் குடைவரை நினைவுகளில் மூழ்கவும் காரணமானது.

அன்புடன்,
இரா. கலைக்கோவன் this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.