http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 102

இதழ் 102
[ டிசம்பர் 2013]


இந்த இதழில்..
In this Issue..

2013 ஆண்டிற்கான மாமன்னன் இராஜராஜன் விருது
Thirumeyyam - 8
மாமண்டூர் நரசமங்கலம் குடைவரைகள் - 01
ஒரு கல், ஒரு கண்ணாடி
மரபுக் கட்டடக்கலை - 02
தனித்து விடப்பட்ட சோழர் காலத் திருமால்
விட்டலாபுரம் விட்டல கிருஷ்ணன் திருக்கோயில்
ஆலமர் செல்வன் பெற்ற கொடை
இதழ் எண். 102 > கலையும் ஆய்வும்
ஒரு கல், ஒரு கண்ணாடி
வீ.செல்வகுமார்
தஞ்சை இராஜராஜீஸ்வரத்தில் (பெரிய கோவில், பிரகதீஸ்வரர்) இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையினர் நடத்திய உலக மரபியல் வார விழாவிற்குச் சென்றிருந்தேன். மரபியல் நடைப்பயணம், சொற்பொழிவு, மரபுச் சின்னங்களின் நிழற்படக் கண்காட்சியுடன் அமைந்த நல்லதொரு விழா. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை அவர்கள் துவக்கி வைக்க, நன்கு நடைபெற்றது விழா. “உங்கள் முகத்தில் ஒருவர் கீறினால் தாங்குவீர்களா? உங்களது முகம் போலத்தான் நினைவுச் சின்னங்களும்; அவற்றைப் பாதுகாக்கவேண்டும்’’ என்று தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பதின் சிறப்பை மிகத் தெளிவாக ‘நச்சென்று’ உரைத்தார் அவர்.

Heritage என்ற சொல்லை பாரம்பரியம், மரபியல் என்று மொழிபெயர்க்கலாம். பாரம்பரியம் என்பதைவிட மரபியல் என்ற தமிழ்ச்சொல் பொருத்தமானதாக எனக்குத் தோன்றுகின்றது. ஒவ்வொரு சமூகமும் தனது முன்னோர்களிடமிருந்து பெற்றவைகளில், எவற்றை ஏற்றுக்கொண்டு, வரும் தலைமுறையினரிடம் ஒப்படைக்க விரும்புகின்றதோ அவை மரபியல் எனப்படும். இவ்வாறு ஒப்படைக்க விரும்பாத பண்பாட்டுக் கூறுகள் (எ.கா. குழந்தைத் திருமணம், சதி போன்றவை) எதிர்வரும் தலைமுறையினருக்குப் பாடமாக அமையும்.

மரபியல் சின்னங்கள் வளங்கள் (Resources) என்ற கருதப்படுகின்றன. அவை ஒரு சமூகத்தின் சொத்து. மரபியல் வளங்கள், இயற்கைசார் வளங்கள் (Natural Heritage Resources), பாண்பாடுசார் வளங்கள் (Cultural Heritage Resources) என இரண்டாகப் பிரிக்கப்பெறும். ஆனால் இயற்கையையும் பண்பாட்டையும் பிரிக்க இயலாது. இயற்கை இல்லையென்றால் பண்பாடு இல்லை. அதனால்தான் சங்க இலக்கியத் திணையில் இயற்கையும் பண்பாடும் இயைந்து நிற்பதைக் காணலாம்.

பாண்பாடுசார் வளங்கள், தொடக்கூடிய (Tangible Heritage), தொடா மரபியல் (Intangible Heritage) வளங்கள் என வகைப்படுத்தப்பெறுகின்றன. தொல்லியல் சின்னங்கள், தொல்பொருள்கள் உள்ளிட்டவை தொடக்கூடிய மரபியல் வளங்களில் அடங்கும். நடனம், இசை, போன்றவை தொடா மரபியல் வளங்கள் எனப்படும்.

மரபியல் சின்னங்களை உள்ளூர், வட்டார, தேசிய, உலக மரபியல் சின்னங்கள் என வகைப்படுத்தலாம். ஓர் ஊரில் உள்ள ஆலமரமும், கோவில்காடும் உள்ளூர் மரபியல் சின்னங்கள் எனலாம். அது போல வட்டார, தேசிய அளவில் சிறப்புபெற்ற சின்னங்கள், அமைந்துள்ளன.

ஐக்கிய நாடுகளின் கல்வி, சமூக, பண்பாட்டு அமைப்பினால் (யுனேஸ்கோ) உலக அளவில் சிறப்பு பெற்ற சின்னங்கள் உலக மரபியல் சின்னங்களாக அறிவிக்கப்படுகின்றன. இது குறித்த ஒரு சட்டவரைவு 1972 ஆம் ஆண்டு யுனேஸ்கோவினால் உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில் உலகின் தலைசிறந்த மரபியல் சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

உலகெங்கும் 981 உலக மரபுச்சின்னங்கள் யுனெஸ்கோவின் உலக மரபியல் குழுவால் (World Heritage Committee) ஏற்பளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 30 உலக மரபியல் சின்னங்கள் அல்லது சின்னத் தொகுப்புகள் உள்ளன. அவை பின்வருமாறு
1. ஆக்ரா கோட்டை
2. அஜந்தா குகைகள்
3. எல்லோரா குகைகள்
4. தாஜ் மகால்
5. மகாபலிபுரக் கோவில்கள்
6. சூரியன் கோவில், கோனார்க்
7. காசிரங்கா தேசிய பூங்கா
8. கியாலோதியோ தேசிய பூங்கா
9. மனாஸ் வனப்புகலிடம்
10. தேவாலயங்களும், கான்வென்டுகளும், கோவா
11. பதேபூர் சிக்ரி
12. ஹம்பி நினைவுச்சின்னங்கள்
13. கஜுராஹோ நினைவுச்சின்னங்கள்
14. எலிபெண்டா குகை
15. பட்டடக்கல் நினைவுச்சின்னங்கள்
16. புகழ்மிகு வாழும் சோழர் கோவில்கள், (தஞ்சை, கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம்)
17. சுந்தர்பன்ஸ் தேசிய பூங்கா
18. நந்ததேவி பூப்பள்ளத்தாக்கு தேசிய பூங்கா
19. புத்த நினைவுச்சின்னங்கள், சாஞ்சி
20. ஹூமாயூன் கல்லறை, புது தில்லி
21. குதுப்மினாரும் அதனைச்சார்ந்த நினைவுச்சின்னங்களும்
22. இந்தியவின் மலை இரயில் அமைப்பு
23. மகாபோதி கோவில், புத்த கயை
24. பிம்பேத்கா குகைகள்
25. சம்பானேர்-பவகர் தொல்லியல் பூங்கா
26. சத்ரபதி சிவாஜி இரயில் முனையம், மும்பை
27. செங்கோட்டை, தில்லி
28. ஜந்தர் மந்தர், ஜெய்ப்பூர்
29. மேற்குத்தொடர்ச்சி மலை
30. இராஜஸ்தான் மலைக்கோட்டைகள்

Monument என்பதை நினைவுச்சின்னம் என்று மொழிபெயர்ப்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. சின்னம், இங்கு குறியீடு என்ற பொருளில் பயன்படுத்தப்பெறுகின்றது. புதுக்கோட்டைப் பகுதியில் ‘சிறியதாக உள்ளது’ என்பதை ‘சின்னமா’ உள்ளது என்று கூறுவர். உலக மரபுச் சின்னம் என்பது உலக மரபுப் பெருமையை சிறிதாக்குவது போல் உள்ளது. தஞ்சைப் பெரிய கோவில் போன்ற உலகமரபுச் சின்னங்களை உலக மரபுப் பெருமை என்றுதான் கூறவேண்டும்.

உலக மரபியல் நாள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 18 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. உலக மரபியல் வாரம் நவம்பர் 19 முதல் 25 வரை இந்திய அரசால் கொண்டாடப்படுகின்றது.

விழா முடிந்து தஞ்சை விமானத்தின் உட்கூட்டைக் கண்டேன். நல்ல கருங்கற்துண்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து நேர்த்தியாக ஒட்டி விமானத்தை ஒரே கல்லாகப் படைத்துள்ளது பிரமிப்பூட்டியது. புவியே ஆவுடையாராக, விமானமே லிங்க உருவமாக அமைந்த வடிவத்தை கூகிள் தரைப்படத்தை நோக்கினால் அறியலாம். கம்பீரமாக, மேருமலையைப்போல, தென்னக மேருவாக ஆயிரம் ஆண்டுக்கு மேலாகியும் உயர்ந்தோங்கி நிற்கும் ஒரே கல்லால் உருவாக்கியதைப்போல அமைந்துள்ள விமானம் தனி அழகு பெற்றது. தற்காலக்கட்டடக்கலையை நினைக்கும்போது, இக்கோவிலுக்கு முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட, அண்மையில் விரிவுபடுத்தப்பட்ட சென்னை விமான நிலையக் கட்டடம் என் நினைவுக்கு வருகின்றது. இதன் விளைவுதான் இந்த ஒரு கல், ஒரு கண்ணாடி.

சென்னை விமான நிலையத்தில் காங்கிரீட் தூண்களால் எடுத்து நந்திபோல நிற்கும் பழைய தூண்களைக் கண்ட அனுபவம் உண்டு. புதிய விமான நிலையம் உலகமயமாக்கத்தின் பிரதிபலிப்பு. இரும்புத் தூண்களையும் “நட்- போல்ட்,” கண்ணாடிகளைப் பயன்படுத்தி கட்டியிருக்கின்றார்கள். மேலைநாட்டு விமான நிலையங்களைப் போல் உள்ளது. சிறு குழந்தைகள் பொருத்தி விளையாடும் பொம்மைக் கட்டமைப்போல எளிதில் உருவாக்கியுள்ளார்கள். ஆயிரம் ஆண்டுகால இடைவெளியில் என்ன ஒரு மாற்றம்!

கட்டடம் என்பது ஆங்கிலத்தில் built space எனப்படுகின்றது. திறந்தவெளியை கட்டி கட்டடம் (கட்டப்பட்ட இடம்) உருவாக்கப்படுகின்றது.

கற்கால மக்கள் இயற்கையாக அமைந்த குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வசித்தனர். கற்கால மனிதர்கள் வசித்த குடியம் குகை சென்னைக்கருகே கம்பீரமாக நிற்கின்றது. பின்னர் தழை, இலை, குச்சிகளைக் கொண்டு தற்காலிகமான குடிசைகளை உருவாக்கினர். காலப்போக்கில் கட்டடங்கள் செங்கல், களிமண், சுதை, மரம் கொண்டு உருவாக்கப்பட்டன. பின்னர் பாறைகளைக் குடைந்து குடைவறைகளை உருவாக்கினர். மகேந்திர்வர்மனின் மண்டகப்பட்டு குடைவரைக் கல்வெட்டை இங்கு நாம் நினைவுகூறலாம். இந்தியாவில் சிறப்பாக அமைந்த கட்டுமானக் கோவில்கள் பல உள்ளன. இடைக்காலத்திலிருந்துதான் தமிழகத்தில் பெரிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால் சிலகட்டட நுட்பங்கள் காலம் காலமாகத் தொடர்ந்து வருகின்றன. சிந்துவெளி நாகரிகக் கட்டடநுட்பத்தின் சில கூறுகள் பெரியகோவிலின் உள்கட்டமைப்பிலும் பிரதிபலிப்பதைக் காணலாம். தஞ்சைப்பெரிய கோவிலின் விமானத்தின் இருசுவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இணைக்கும் ‘கதலிகரணம்’ என்ற தொழில்நுட்பம், அரப்பா, மொகஞ்சதாரோவில் கழிவுநீர் செல்லும் பாதைகளை வடிவமைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு சிறு மாதிரி அரிக்கமேட்டு அகழாய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


படம் 1. மொகஞ்சதாரோ – கழிவு நீர் செல்லும் வழி (தோ. கி.மு 2500) நன்றி; மொகஞ்சதாரோ.காம்படம் 2 ஹரப்பா – கழிவு நீர் செல்லும் வழி தோ. கி.மு 2500, நன்றி; ஹரப்பா.காம்படம் 3 தஞ்சைப்பெரிய கோவில் திருச்சுற்றுப்பாதையில் கதலிகரண் அமைப்பு – 11 ஆம் நூற்றாண்டு நன்றி; பெசார்டு, பிரகதீஸ்வரர் கோயில்படம் 4. அரிக்கமேடு- கதலிகரண அமைப்பை ஒத்த நீர்வழி –தோ.முதல் நூற்றாண்டு. நன்றி வீலர்


சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டிடம் பல முறை இடிந்து விழுந்த்தாகச் செய்தித்தாள்களில் கண்டேன். அந்த விமான நிலையக்கட்டம் ஒரு பயத்தை ஏற்படுத்துகின்றது. சிலகாலம் முன்பு தஞ்சை இராஜராஜஸ்வரம் விமானத்தின் மீது சாரம் அமைக்கப்பட்ட போது விமானத்தின் மேற்புறத்திலிருந்து காணும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ஏற்படாத பயம் சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டடத்தில் ஏற்பட்டது. அண்மையில் பிலிப்பைன்சில் ஏற்பட்ட புயலால் அங்குள்ள விமானநிலையம் முற்றிலும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். அது உருவிழந்து மறுநாள் காலை இணையதளத்தில் அன்றைய செய்தியை வாசிக்கமுற்பட்டேன். சென்னை விமான நிலைய்ய கண்ணாடிப் பலகை விழுந்து பத்தாவது முறையாக விபத்து என்ற செய்தியைக் கண்டேன். ‘ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும் பேனாம்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது. காலம்தான் கட்டடங்களின் சிறப்பை விளக்கும்.

உலக மரபுச்சின்னங்கள் உலகின் ஒட்டு மொத்த சொத்தாகும். தற்போது தமிழகத்தில் தஞ்சை, தாரசுரம், கங்கைகொண்டசோழபுரம் மற்றும் மாமல்லபுரக் கோவில்கள் மட்டுமே உலகமரபுச் சின்னங்களில் உட்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் கோவில்களையும், மதுரை, சிதம்பரம் கோவில்களையும் உலகமரபுச்சின்னங்களில் உட்படுத்தவேண்டும்.

உலக மரபுச்சின்னங்கள அமைந்த சூழலையும் நாம் அழகுபடுத்த வேண்டும். தற்பொது தஞ்சைப் பெரிய கோவிலின்முன்பு மிக அருகிலேயே நெடுஞ்சாலை அமைந்துள்ளதால், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கோவிலின் உள்ளே செல்லவது மிகவும் கடினமாகின்றது. இங்கு சாலையை சற்று மாற்றியமைத்து கோவிலின் முன்பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு ஆக்குவது கோவிலுக்கு அழகூட்டுவதுடன், பக்தர்களும், சுற்றலாப்பயணிகளும் கோவிலின் உள்ள செல்வதற்கு உதவும். மேலும் கோவிலின் அகழியையும் சுத்தப்படுத்தி பூங்கா அமைக்கலாம், அல்லது அகழியில் நீரிட்டு அழகூட்டலாம். எவ்வாறு ஒரு விமான நிலையத்தின் முகப்பு அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றோமோ அதுபோல உலக மரபியல் சின்னமான தஞ்சைப் பெரிய கோவிலின் முகப்பையும் அழகுபடுத்தவேண்டும். இதில் தஞ்சை நகராட்சியும், தமிழக அரசும், இந்திய அரசு தொல்லியல் துறையும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.

மரபியல் சின்னங்களைக் கவனத்துடன் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். இந்தியக் கோவில்களை வரலாற்றுப் பெட்டகங்கள் எனலாம். அவற்றில் தலைசிறந்த கலை, வரலாறு, தொல்லியல் மற்றும் பண்பாட்டுச்சான்றுகள் பல பொதிந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாப்பது அரசு நிறுவனங்களின் கடமை மட்டுமல்ல; ஒட்டு மொத்த சமூகத்தின் பொறுப்பாகும். இவற்றைப் பாதுகாக்க இளையதலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். கட்டுப்பாட்டற்ற சுற்றுலா மரபியல் சின்னங்களின்மீது அளவு கடந்த பாதிப்பை எற்படுத்துகின்றது.

மேலைநாட்டைச் சேர்ந்த பீட்டர் ரைஸ் என்ற பொறியியல் அறிஞர் ‘’நவீன காலக் கட்டடங்கள் இடைக்காலக் கட்டடங்களைப் போல் விரும்பப் படுவதில்லை. அதற்குக் காரணம் அவற்றில் மனிதப் பங்களிப்பைக் காணமுடிவதில்லை. மேலும் அவற்றின் தன்மையையும் அறிய முடிவதில்லை. கட்டுமான நிறுவனங்கள் கட்டடங்களின் ஒவ்வொரு கூறையும் வரைமுறைப்படுத்திவிட்டனர். பொறியியல் அறிஞர்கள் கட்டுமானை முறையை மனிதமயமாக்கவேண்டும்; மேலும் அவர்கள் கட்டடக்கலை மகிழத்த்தக்க வகையில் அமைக்கவேண்டும். என்று கூறுகின்றார்.

சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டடமும் ஓர் ஆச்சரியப்பட்டத்தக்க தொழில் நுடபத்தால் உருவானதுதான். உழைப்போர் பற்றாக்குறை உள்ள உலகமயமாக்க காலத்தில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் எளிதில் கட்டடங்களை உருவாக்க உதவுகின்றன. நான் பழமையைப் புகழ்ந்து, புதிய தொழில்நுட்பத்தை இகழவில்லை. ‘பழயன கழிதலும் புதியன புகுதலும்’ இயற்கையே எனத் தொல்காப்பியர் கூறியள்ளார். காலத்தின், சமூகத்தின் தேவைகளுக்கேற்க கட்டடக்கலை மாறும். அது தவிர்க்க முடியாதது. இத்தகைய புதிய கட்டடங்களை நாம் கவனமாக, பாதுகாப்பான ரீதியில் வடிவமைக்கவேண்டும். இந்நவீன கட்டடங்களும் சில மரபியல் கூறுகளை உட்படுத்தி அமைக்கப்பெறலாம். அது நமது மரபின் வடிவங்களைப் போற்றிப் பாதுகாக்கவும், உதவும். புதியதொழில் நுட்பங்கள் (எ.கா. உயிரை உருக்கும் அண்மைக்கால வோல்வோ பேருந்து விபத்துகள்) சற்று பயமுறுத்துகின்றன. புதிய தொழில் நுட்பத்தைச் செம்மையாக உருவாக்கி பல பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தி பயன்படுத்த வேண்டும்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.