http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 105

இதழ் 105
[ மார்ச் 2014]


இந்த இதழில்..
In this Issue..

அமுது - ஒரு வரலாற்றுப் பார்வை
Gokarneswara - 3
Chola Ramayana 12
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 3
பெரும்பேறூர் தான்தோன்றீசுவர சுவாமி திருக்கோயில்
நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்
தேடலில் தெறித்தவை - 11
ஊழி நான்முகன்
இதழ் எண். 105 > கலைக்கோவன் பக்கம்
அமுது - ஒரு வரலாற்றுப் பார்வை
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணிக்கு,

அமுது வளர்ந்த வரலாறு கேட்டிருந்தாய். கல்வெட்டுகளுக்குள் நுழையும் முன் ‘மடை’ பற்றியும் சில பார்க்கலாம்.

இறைவனுக்குக் கொண்டு செல்லப்பட்ட உணவை, ‘மடை’ என்று போற்றும் மதுரைக் காஞ்சி. பழம்பெரும் ஆற்றுப்படை இலக்கியமான பெரும்பாண் ஆற்றுப்படை, ‘தெய்வ மடை’ என்றே அதைச் சிறப்போடு முன்னொட்டு இட்டுக் குறிக்கும். வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் குறுந்தொகைச் செய்யுளோ, ‘சில் அவிழ் மடை’யாக அதைச் சிறப்பிக்கும். இறைவனுக்கான பலி, உணவு இவற்றைக் குறிக்க, இலக்கியங்கள் பயன்படுத்திய ‘மடை’ எனுஞ் சொல், கோயில்கள் வளர்ந்த காலத்தில் ‘அமுது’ என்றானது. ‘மடை’ சுட்டும் கல்வெட்டுகள், தேடப்படும் நிலையில் அமைய, ‘அமுது’ பேராட்சிச் சொல்லாகப் பரவி விரிந்துள்ளது.



மடை, தெய்வ மடையானாற் போல, அமுதும் கல்வெட்டுகளில் திருவமுதானது. போனகங்களும், அப்பப் படையலும் அளிக்கப்பட்டாற் போலவே, இறைவனுக்குத் திருவமுதும் வழங்கப்பட்டது. பொரிக்கறி, புழுக்குக்கறி, புளிங்கறி, தயிர், நெய் இவற்றுடன், சோறு சேர்ந்து அமுதானது. உடன் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழமும் இருந்தன. உணவில் சுவைக்குச் சேர்க்கப்படும் உப்பும் மிளகும் நெய்யும்கூட ‘அமுது’ என்றே அழைக்கப்பட்டன. மட்பாண்டச் சமையல் அமைந்த காலமென்பதால் சோறு ‘சட்டிச் சோறாக’ அளவிடப்பட்டது. விழாக் காலங்களில் ‘திருஅமுது’ பெருந்திருஅமுதாக அளவிலும் வகையிலும் பல்கிப் பெருமை சேர்த்தது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் கிடைப்பவை சோழர் கல்வெட்டுகளே. ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் இம்மண்ணையாண்ட பெருமைக்குரியவர்கள் சோழர்கள். தமிழ்நாட்டின் முன்னோடி அரசுகளான பல்லவர், பாண்டியர் பதிவுகளிலேயே அமுதைக் காணமுடிந்தாலும், அதன் பல்வேறு முகங்களைக் காட்டும் கண்ணாடியாக விளங்குபவை சோழர் கல்வெட்டுகளே. இறைவனுக்கு எப்போதெல்லாம் அமுது வழங்கப்பட்டது? என்bனன்ன வகையினவாய் இவ்வமுதுகள் அமைந்தன? விழாக் கால அமுதுகள் எப்படியிருந்தன? இறைவன் அமுதுண்டபோது, அதே நேரத்தில் அமுதுண்ணும் வாய்ப்பு யார் யாருக்கெல்லாம் கிடைத்தது? இந்த அமுதுகளுக்கான கொடைகள் எப்படியெல்லாம் அமைந்தன? எனத் தரவுகளின் களஞ்சியங்களாய்ச் சோழர் கல்வெட்டுகள் மின்னுகின்றன.இறைவன் அமுது அடியார் அமுதுமாம். அதனால், கல்வெட்டுகள் சுட்டும் இந்த அமுதுவகைகள் எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்தியவையே.

கோயிலில் அமுதூட்டும் பணி காலையில் தொடங்குகிறது. இந்தக் காலையை,பொழுது புலரும் விடியல் வேளையைச் சிறுகாலைச் சந்தியென்கின்றன கல்வெட்டுகள். சில கோயில்கள் சிறுகாலையில் போனக அமுது படைக்க, பிற கோயில்களில் வெண்பொங்கல் வழங்கப்பட்டது. கும்மாயம், அக்கார அடிசில் என்பனவும் சிறப்பு நாட்களின் சிறுகாலை உணவாக அமைந்தன. ‘உச்சம்போது’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் நடுப்பகல் வேளையை, ‘மத்தியானமாகவும்’ சில பதிவுகளில் காணமுடிகிறது. இந்த மதியப்போதில்தான் ‘பெருந்திருவமுதுகள்’ உருவாயின. பூரிக்குத்தல் அரிசி, பழவரிசி இவற்றாலான சோறு, பொரிக்கறி, புழுக்குக்கறி, மிளகுப் பொடிக்கறி எனப் பல்வகையான கறித் தயாரிப்புகள் சோறுடன் இணைந்தமைய, பருப்பு, நெய், தயிர் என்பனவும் கூட்டுச் சேர்ந்து பெருந்திருவமுதுக்குத் துணைநின்றன. ‘குதகளி’ என்றுகூட ஒரு மதிய உணவு குறிக்கப்படுகிறது. இது எவ்வகை உணவாகலாம் என்பதை அறியக்கூடவில்லை.

மதிய உணவுக்குப் பிறகு ‘வழுக்கை பற்றின’ இளநீர் அமுதும் இறைவன் கொள்வதுண்டு. இந்தச் சிறப்பு, விரல்விட்டு எண்ணக்கூடிய கோயில்களிலேயே வழங்கப்பெற்றது. அந்தியில் சிற்றுண்டி அல்லது பால் போனகம் அமுதாக, இரவுப் போதில் எளிமையான உணவே வழங்கப் பெற்றது. புரதச்சத்து மிக்க பருப்புச் சோறும், அளவான கொழுப்பும், தாது உப்புக்களும், புரதமும் மிகுந்த தயிர்ச்சோறும், வயல்வெளிகளில் செழிக்க விளைந்த பல்வகைக் காய்கறிகளும் கோயிலில் அமுதாகி இறைவனை நோக்கிப் படைக்கப்பட்டாலும், உண்டவர்கள் உள்ளிருந்தவர்களே. கோயிலுக்கு வந்தவர்களும், கோயில் சூழ வாழ்ந்திருந்தவர்களும் இந்தப் படையல்களில் பங்கு பெற்றனர்.

இறைவனுடன் சேர்ந்து உண்பதற்காகவே பல அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டன. நிலமாகவும், பொன்னாகவும் காசாகவும் முதலீடு செய்யப்பட்ட இந்த அறக்கட்டளைகளால், தமிழ்நாட்டின் பல கோயில்களில் அந்தணர்கள், பரதேசிகள், தவசியர், அபூர்விகள், வேதமோதிகள், அடியவர்கள் எனப் பலரும் உணவு பெற்றனர். தங்கும் விடுதிகளும், உணவுச் சாலைகளும் அற்ற அந்த நாட்களில், குறைந்த அளவிலேயே சத்திரங்கள் இருந்தன. அதனால், பயணிகள், பத்திமையாளர்கள், ஆதரவற்றோர் இவர்களின் உணவுத் தேவையை இறைக் கோயில்களே நிறைவு செய்தன. அரசர்களும் அரசியர்களும் அரசு அலுவலர்களும் பெருஞ் செல்வர்களும் இறைக்கோயிலுடன் தொடர்புடையவர்களாயிருந்த பணியாளர்களும்கூட இவ்வறக்கட்டளைகளை அமைப்பதில் பேரார்வம் காட்டினர். இப்படி அமைக்கப்பட்ட உணவுக்கட்டளைகளை நிறைவேற்றச் சாலைகளும் சத்திரங்களும் உருவாக்கப்பட்டன. திருஎறும்பியூர் மலை மேல் ஒரு சத்திரம் இருந்தது. உய்யக்கொண்டான் திருமலையில் முதலாம் இராஜேந்திரசோழர் காலத்தில் ஓர் உணவுச் சாலை அமைக்கப்பெற்றது. திருச்செந்துறையில் சோழர் காலத்தில் சாலை உருவாக்கப்பட்டது. இதை அமைத்தவர் ஒரு பெருமாட்டி.

இத்தகு உணவிடங்களில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சோறு, எத்தகு சோறு வழங்கவேண்டும் என்பதைக் கொடையாளர்களே தீர்மானித்து, கொடையை நிருவகிக்கும் பொறுப்பையும் நிறைவேற்றும் பொறுப்பையும் கோயிலாரிடமோ, ஊரவையினரிடமோ ஒப்படைத்தனர். தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில், கோயில் சார்ந்த அறக்கட்டளைகள் தொடர்பான எத்தனையோ தவறான செய்கைகள் பதிவாகியிருந்தபோதும், உணவுச்சாலைகளிலோ, சத்திரங்களிலோ உணவிடலில் பிழை நேர்ந்ததாக ஒரு கல்வெட்டுக் கூட கண் காட்டாமை நோக்கும்போது, தமிழ்நாட்டில் ‘அமுது படைத்தல்’ மிகப் பொறுப்பான கடமையாக நேரிய முறையில் நிறைவேற்றப்பட்டமையை அறியமுடிகிறது.

இந்த அமுதை ‘உத்தம உணவாகப்’ பார்த்தவர்களும் இருந்தனர். ‘திருஅமிர்து உத்தம அக்கிரமாகத் தேவர் அமிது செய்வதாகவும்’ என்பது கல்வெட்டு. கல்வெட்டுகளில் ‘உத்தமாக்கிரம்’ எனப்படும் இந்த ‘நிறைவான உணவு’ கோயில்களில் வந்தார்க்கு வழங்கப்பட்டது. குறிப்பாக வேதம் வல்லார் இச்சிறப்பு உணவு பெற்றனர். ‘அக்ரம்’ சமைக்கப்பட்ட சாலை அக்ரசாலையானது. தமிழ்நாட்டில் பல கோயில்களில் அக்ரசாலைகள் இருந்தன. சிராப்பள்ளி உய்யக்கொண்டான் திருமலையில் சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திரரின் பெயரால் ஓர் அக்ரசாலை செயற்பட்டது. ‘அக்ரசாலைகளும் உத்தமாக்ரமும்’ கல்வெட்டுகளில் பரவிக் கிளைக்கும் தொடர்களாகும். அமுதும் அக்ரமும் ‘மடையை’ ஒதுக்கி விட்டனவா?

இறை உணவைக் குறித்த ‘மடை’ எனும் சொல், வழக்கிழந்துவிடவில்லை. மாறாக இடைக்கால இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் தொடர்ந்து உணவு சார்ந்த சொல்லாகவே பயன்பட்டு வந்துள்ளது. இக்காலச் சமையற்கலை நூல்கள் போல அக்காலத்திலும் நூல்கள் இருந்தமையை ‘மடைநூல்’ எனும் சங்க இலக்கிய ஆளல் குறிக்க, அது சமையற்கலை நூல்கள் பழந்தமிழகத்திலேயே வழக்கில் இருந்தமையை நிறுவும் சான்றாகிறது. மணிமேகலையும் மடைநூலைத் தொட்டுக் காட்டுகிறது. ‘சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடை தீ உறுக்கும் வன்னி மன்றம்’ என்ற மணிமேகலை அடி, மடை, சோற்றைக் குறித்தமையை அழுந்தப் பதிவு செய்ய, சிலம்பு, ‘புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்’ என்ற பாடலடியின் வழி அதை உறுதி செய்கிறது. இந்தப் புழுக்கல்தான் கல்வெட்டுகளில் புழுக்குக்கறியாகச் சுட்டப்படுவது. ‘இடைக்குல மடைந்தையரின் இயல்பிற் குன்றா’ மடைக்கலத்தில்தான் கண்ணகியின் சமையல் நடந்ததாகச் சிலப்பதிகாரம் பேசுகிறது. அந்தச் சமையலை அமுதம் உண்க என்று கூறியே கண்ணகி படைத்திருக்கிறார்.

சிலம்பைப் போலவே மணிமேகலையும் மடைக்கலம் குறிப்பதுடன், மடையனையும் சுட்டுகிறது. அறிவு குறைந்தவர்களைச் சுட்டும் சொல்லாக இன்று வழக்கிலிருக்கும் மடையன் என்ற சொல் காப்பிய காலத்தில் சமையற்காரர்களைக் குறித்தது. மடையன் என்ற சொல் போல மடையள் என்ற வழக்கு இல்லாமை, சமையற்கலை, தொழில் நிலையில் ஆடவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதை உணர்த்துகிறது. கல்வெட்டுகளும்கூடச் ‘சாலை மடையன் ஒருவனுக்கு நெல்லு அறு நாழியும்’ என்ற சுட்டலின் வழி அதை உறுதிப்படுத்துகின்றன. மடையர் மடைத்தொழில் செய்த இடமே மடைப்பள்ளியானது. இம்மடைப்பள்ளிகளில் இருந்த முகத்தலளவைகளில் ஒன்று ‘மடைப்பள்ளி நாழி’ என்றே வழங்கப்பட்டது.

மடைப்பள்ளிகளில் வேலை பார்த்த பெண்கள் மடைப்பள்ளிப் பெண்டாட்டிகளாக அறியப்பட்டனர். பெண்டாட்டி என்ற சொல்லின் பொருள் வழங்கலும் காலத்தால் மாறுபட்டுள்ளது. சோழர் காலத்தில் பணிப்பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட இச்சொல், தற்போது இல்லத்தரசியாம் மனைவியைச் சுட்டக் கையகப்பட்டுள்ளது. திருவரங்கம் திருக்கோயிலில் முதலாம் குலோத்துங்கர் காலத்தில் நிகழ்ந்த நிலச் சீரமைப்பில் மூன்று பெண்டாட்டிகள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் படைத்தலைவர்கள், அரசியர்தம் பணிப்பெண்களாக இருந்தவர்கள். சில கல்வெட்டுகள் மடைப்பள்ளிப் பெண்டாட்டிகளை அடுக்களைப் பெண்கள் என்றும் அழைக்கின்றன. மடைப்பள்ளி அடுக்களை என்றும் வழங்கப்பட்டது. அடும் களமாக இருந்து அடுக்களையாகிப் போன மடைப்பள்ளி இன்றளவும் கோயில்களில் தொடர்கிறது. ஆனால், யாரும் அவ்விடத்தை மடைப்பள்ளி என்று அழைப்பதில்லை. மடப்பள்ளி என்றால்தான் இடம் காட்டுவார்கள். இன்றைக்கும் இறைவனுக்கான படையல்கள் இந்த மடைப்பள்ளியில்தான் சமைக்கப்படுகின்றன. பெரும்பாலான மடைப்பள்ளிகளில் குறைவான உணவு வகைகளே சமைக்கப்படுவதால் அவை சீர்மையுடன் இருப்பதில்லை.

ஒருகால வழிபாட்டுக் கோயில்களில் இந்த மடைப்பள்ளிகளின் நிலைமை பரிதாபகரமானது. எங்கள் களப்பணிக் காலங்களில் மடைப்பள்ளிகளில் இருந்து பல சிறப்பான கல்வெட்டுகளைப் படியெடுத்துள்ளோம். திருத்தவத்துறை சப்தரிஷிசுவரர் கோயிலின் மடைப்பள்ளி நுழைவாயில் அருகே உள்ள கல்வெட்டு, அச்சமையலறை மண்டபத்தைக் கட்டியவரின் பெயரைத் தருகிறது. வலஞ்சுழிச் சடைமுடிநாதர் கோயில் மடைப்பள்ளித் தூணில் இருந்து எங்களால் படியெடுக்கப்பட்ட சோழர் கல்வெட்டு பல புதிய செய்திகளின் கருவூலமாக விளங்கியது. திருக்கோளக்குடி மடைப்பள்ளி மிகப்பெரியது. அதன் சுவர்களில் பிற்பாண்டியர் கல்வெட்டுக்கள் பல உள்ளன. சில புதியன. சில, பாடங்கள் வெளியாகாமல் சுருக்கங்கள் மட்டுமே கண்டவை. மிகச் சில கோயில்களில் மட்டுமே மடைப்பள்ளிகள் இன்றைக்கும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. இறைவனுக்கான மடை மட்டுமல்லாது பத்திமையாளர்களுக்குப் பிரசாதம் என்ற பெயரில் வழங்கப்படும் உணவு வகைகளும் இங்குத் தயாராகின்றன.

மடைப்பள்ளிப் பெண்டுகள் எனும் தொடரில் உள்ள பெண்டுகள் எனும் சொல்லும் சங்கப் பழைமையதே. நற்றிணையும் ஐங்குறுநூறும் பல பாடல்களில் இச்சொல்லைப் பெய்துள்ளன. ‘ஒண்டொடி வினவும் பேதையம் பெண்டே’ என்று, பெண் என்ற பொருளிலும், ‘நல்மலை நாடன் பெண்டு’ என்று, துணைவி என்ற பொருளிலும் இச்சொல் ஐங்குறுநூற்றில் கையாளப்பட்டுள்ளது. கல்வெட்டுகளிலும் பெண்டு இவ்விரு பொருள்நிலைகளிலும் வழங்குவது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் பெருமைக்குரிய தளிச்சேரிக் கல்வெட்டு, தளிப்பெண்டுகள் என்ற ஆட்சியின் வழி ஆடல்மகளிரைக் குறிக்க, அதே கோயிலில் உள்ள இராஜராஜரின் அறிவிப்பாக விளங்கும் கல்வெட்டு, நம் பெண்டுகள் என்று மன்னர் வாய்மொழியாகவே அவர் தேவியர்களை முன்னிருத்துகிறது. தொல்காப்பியம் ‘பெண்டு என் கிளவி’ எனப் பெண்டுக்குச் சொல் இலக்கணம் கூறுவதும் கருதத்தக்கதே.

மடைப்பள்ளிகளில் கொள்ளப்பட்ட முக்கியமான கலங்களுள் குறிப்பிடத்தக்கது மண்டை. இதுவும் சங்க காலத்திலிருந்தே வழக்கில் இருந்துவரும் சுடுமண்ணால் செய்யப்பட்ட வாயகன்ற பாத்திரமாகும். வெள்ளிவீதியார் பாணர் பயன்படுத்திய மண்டையைக் குறிப்பார். அக இலக்கியங்களில் குறைவான அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ள இச்சொல், புறநானூற்றில் 15 இடங்களில் ஆளப்பட்டுள்ளது. காப்பியங்களும் மண்டையை விடவில்லை. கண்ணகி, சமைத்த உணவைக் கோவலனுக்குப் பரிமாறும் முன்னர் சுடுமண் மண்டையிலிருந்த நீர் ஊற்றியே அவன் திருவடிகளைக் கழுவினாள். மண்டையைக் கொண்டவர் மண்டையர் என்றும் அழைக்கப்பட்டனர். செல்வம் கொழித்த சோழர் காலத்தில் சுடுமண் மண்டை வெள்ளியிலும் வடிக்கப்பட்டது. வெள்ளி உள் நுழைந்தபோதும் சுடுமண் மண்டை வழக்கிழக்கவில்லை. புதுப்புது கலங்கள் செய்தளிக்கவென்றே கோயில்களில் பானை வனைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கென வாழ்நாள் ஊதியமாய் நிலத்துண்டுகள் வழங்கப்பெற்றன.

அதுசரி பானை பழஞ்சொல்லா, புதுவரவா?

அடுத்த மாதம் பார்ப்போம்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.