http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 106
இதழ் 106 [ ஏப்ரல் 2014] இந்த இதழில்.. In this Issue.. |
வரலாறு என்றால் என்ன?
வரலாறு டாட் காம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் கழித்து ஏன் இப்படி ஒரு கேள்வி என்று கேட்கத் தோன்றுகிறதா? வேறொன்றுமில்லை. அண்மையில் வரலாற்று வரைவியல் (Historiography) தொடர்பான சில நூல்களை வாசிக்க நேர்ந்தது. அவற்றில் வரலாறு என்ற சொல்லுக்குப் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வரையறைகளைத் தந்திருக்கிறார்கள். அவற்றைப் படித்தபொழுது பெரும்பாலானவை வியப்பாகவும் புதிய கோணத்திலும் வரலாறு பற்றிச் சொன்னவையாக இருந்தன. எனவேதான் இந்த யாம் பெற்ற இன்பம்!! பெரும்பாலும் எல்லா வரலாற்றறிஞர்களும் ஒத்துக்கொள்வது, நிகழ்காலத்தைப் புரிந்துகொண்டு எதிர்காலத்தைக் கணிப்பதற்குக் கடந்தகாலத்தை ஆராயும் இயல் என்ற பொதுவான கருத்தைத்தான். ஆனால் ஒவ்வொருவரும் இதைச் சொல்லி இருக்கும் விதம் வேறுபடுகிறது. இந்த வேறுபாடு அவ்வவ்வறிஞர்கள் வாழ்ந்த காலத்தை ஒட்டியும், அக்காலகட்டங்களில் நிலவிய நம்பிக்கைகள் மற்றும் அரச, மத வழிகாட்டுதல்களையும் பொறுத்து அமைந்து இருக்கிறது. வரலாறு என்பது வாழ்வியல் உதாரணங்களில் இருந்து திரட்டப்பட்ட தத்துவம் Dionysius of Halicarnassus (கி.மு 40 லிருந்து கி.மு 8 வரை) என்ற பண்டைய கிரேக்க அறிஞரின் கருத்துப்படி, தத்துவம் என்பது கடந்த காலத்தைக் கவனித்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது. உதாரணம் என்பது உண்மையில் நிகழ்ந்த வாழ்க்கைச் சம்பவங்கள். சுருங்கக் கூறினால், வரலாறு என்பது மனிதர்களின் அனுபவம். இன்னும் சற்றுத் தெளிவாகக் கூறவேண்டுமானால், நாகரிகம் மிகுந்த சமுதாயத்தில் வாழ்ந்த மனிதர்களின் அனுபவம் எனலாம். மாறாத கடந்தகாலத்தின் பதிவு அரிஸ்டாட்டில் என்ற கிரேக்கத் தத்துவஞானியின் கூற்றுப்படி வரலாறு என்பது மாறாதது. ஏனெனில், மனிதனின் அடிப்படைக் குணங்கள் மாறாதவை. எனவேதான் போர் மற்றும் அமைதி, புரட்சி மற்றும் மறுசீரமைப்பு, விரிவாக்கம் மற்றும் சுரண்டல், முன்னேற்றம் மற்றும் பிற்போக்குத்தனம் ஆகியவை தொடர்கதையாகின்றன. கடந்த காலத்தைக் கடவுளாலும் மாற்ற முடியாது என்ற புகழ்பெற்ற வாக்கியத்தைச் சொன்னவரும் இதே அரிஸ்டாட்டில்தான். மனிதனை அறிவாளியாக்கும் இயல் Sir Francis Bacon (கி.பி 1561 லிருந்து 1626 வரை) என்ற அறிஞரைப் பொறுத்தவரை வரலாறு என்பது தரவுகளின் தொகுப்போ அல்லது நிகழ்வுகளின் பட்டியலோ அல்லாது படிப்போருக்குப் படிப்பினையை வழங்கவல்ல இயலேயாகும். இந்தப் படிப்பினை என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால், விழிப்புணர்ச்சியைத் தருவதாக மட்டும் இல்லாது, நல்லது - கெட்டது, சரி - தவறு, பயனுள்ளது - பயனற்றது, நடைமுறைக்கு உகந்தது - ஒவ்வாதது, நிலையானது - நிலையற்றது ஆகியவற்றை வேறுபடுத்தி உணர்த்தவல்ல மனமுதிர்ச்சியேயாகும். வாழ்க்கை வரலாறுகளின் சாரம் Thomas Carlyle (கி.பி 1795 லிருந்து 1881 வரை) என்ற ஸ்காட்லாந்து அறிஞர், "எண்ணற்ற மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளின் சாராம்சம்தான் வரலாறு" என்று வரையறுத்துள்ளார். இன்னும் ஒருபடி மேலேபோய், "வரலாற்று நிகழ்வுகளே அம்மாமனிதர்களின் சிந்தனைகளை உணர்தலும் வெளிப்படுத்தலும்தான்" என்றும் கூறுகிறார். "மாமனிதர்" என்ற கருத்தை (Greatmen Theory) வரலாற்று உலகில் முதன்முதலில் விதைத்தவர் என்றும் இவர் கூறப்படுகிறார். மக்களின் தலையெழுத்தை மாற்றுவதற்கான விருப்பமும் திறனும் கொண்டு அதைச் செயல்படுத்தியும் காட்டி நீண்டகாலம் பெயருடனும் புகழுடனும் நினைவுகூரப்படுபவர்களே மாமனிதர்கள் என்பது இவரது விளக்கம். கடந்தகால அரசியல் John R. Seeley (கி.பி 1834 லிருந்து 1895 வரை) என்ற ஆங்கிலேய அறிஞரின் கருத்து என்னவென்றால், அரசியல் என்பதை ஒரு மரத்தின் வேராகக் கொண்டால், வரலாறு என்பது அம்மரத்தின் பழம் ஆகும். கடந்தகாலம் என்னும் கருவறையில் சுமக்கப்படும் இன்றைய அரசியல் விதைதான் நாளைய வரலாறாகக் கனிகிறது. எனவே, வரலாற்றின் நோக்கமானது, அரசியல் கலை நுணுக்கம் சார்ந்த விஷயங்களில் ஒளிபாய்ச்சி, ஆட்சியாளர்களுக்கு அவர்தம் நாடுகளை ஆள உதவுவதே என்கிறார். நேற்றைய அரசியல் இன்றைய வரலாறு; இன்றைய அரசியல் நாளைய வரலாறு என்பதும் இவர் கூறியதே. வரலாறும் ஓர் அறிவியலே J.D. Bury (கி.பி 1861 லிருந்து 1927 வரை) என்ற ஆங்கிலேய அறிஞர் வரலாற்றாய்வின் முடிவுகள் துல்லியமாகவும் (Accuracy) ஆதாரபூர்வமானதாகவும் (Authenticity) இருக்கவேண்டும் என வலியுறுத்தினார். வரலாறு என்பது வெறும் தரவுகளின் தொகுப்பு என்பதை மறுத்து, கவனித்தல், விளக்குதல் மற்றும் சரிபார்த்தல் என்பதன் அடிப்படையில்தான் இருக்கவேண்டும் என்றார் இவர். கலை மற்றும் இலக்கியங்களில் துல்லியமும் உண்மைத்தன்மையும் அவ்வளவாகக் கட்டாயமில்லை என்பதே வரலாறை ஓர் அறிவியல் என்று கருதவேண்டும் என இவர் வலியுறுத்தக் காரணம். மனித விடுதலையில் மலர்வது Lord Acton (கி.பி 1884 லிருந்து 1902 வரை) என்பவர், "மனித இனத்தின் விடுதலை பறிக்கப்படும்போது வரலாற்று நிகழ்வுகள் இடம்பெறுகின்றன; மீண்டும் விடுதலை கிடைக்கும்போது அந்நிகழ்வுகள் தக்க வடிவம் பெறுகின்றன" என்றார். திறமை, கற்பனை, அறிவு, கண்டுபிடிப்பு ஆகியவை மனிதமனம் சுதந்திரமான சூழலில் இருக்கும்போது மட்டுமே மலரும் என்பது இவரது கருத்து. எனவே, அரசுகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை விட விடுதலைதான் வரலாற்றின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும் என்றார். வரலாறு சமகாலத்தியது Benedetto Croce (கி.பி 1866 லிருந்து 1952 வரை) என்ற இத்தாலிய அறிஞரின் கூற்றுப்படி வரலாற்றாய்வாளர்கள் கடந்த காலத்தை வரலாறாக மாற்றுகிறார்கள். நிகழ்காலக் கண்களால் நிகழ்காலப் பிரச்சினைகளின் வெளிச்சத்தில் கடந்த காலத்தை வரலாற்றாய்வாளர்கள் பார்ப்பதால் எல்லா வரலாறுகளுமே சமகாலத்திய வரலாறுகள் என்றே சொல்லப்படவேண்டும் என்கிறார். கடந்தகால நிகழ்வுகள் வரலாற்றாய்வாளர்களின் சிந்தனையில் உருமாறி வரலாறாக வெளிவருகிறது. சிந்தனையின் மறு அரங்கேற்றம் R.G. Collingwood (கி.பி 1889 லிருந்து 1943 வரை) என்ற அறிஞர் Benedetto Croce-ஐ அடியொற்றி வந்தவர். இவரது வரையறையிலும் வரலாற்றாய்வாளர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். வரலாறு என்பது வெறும் உண்மைகளை ஒப்பிப்பது அல்ல; வரலாற்றாய்வாளரின் அனுபவ அறிவால் கடந்தகால நிகழ்வுகள் அவரது சிந்தனையில் மறு அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இத்தகைய மறு அரங்கேற்றத்தின்போது விளக்கப்படும் உண்மைகள் வரலாற்று உண்மைகள் ஆகின்றன. நிகழ்காலத்துக்கும் இறந்தகாலத்துக்கும் இடையேயான முடிவற்ற உரையாடல் E.H. Carr என்ற வரலாற்றறிஞரின் கூற்றானது வரலாற்று உண்மைகள் தூய்மையானவை அல்ல; அவை எப்போதும் அவற்றைப் பதிவு செய்பவரின் மனக்கண்ணாடி வழியே வெளிப்படும் ஒளிக்கற்றைகளே. ஆகவே, வரலாற்று உண்மைகளைவிட அவற்றைப் பயன்படுத்தும் வரலாற்று ஆய்வாளரே முக்கியமானவர். அவ்வாறு அவ்வுண்மைகளைப் பயன்படுத்துவது அவரது நிகழ்கால அனுபவங்களைக் கொண்டுதான். ஆய்வாளர் இல்லாமல் உண்மை வேரற்றது; உண்மைகள் இல்லாமல் ஆய்வாளர் பொருளற்றவர். ஆகவே, வரலாற்று உண்மை என்ற இறந்தகாலத்துக்கும் வரலாற்றாய்வாளர் என்ற நிகழ்காலத்துக்கும் இடையிலான ஓர் இடையறாத உரையாடலே வரலாறு என்கிறார். நாகரிகமான சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் அனுபவம் G.J. Renier என்ற டச்சு அறிஞர், "சமுதாயத்திற்காகப் பங்களித்த செயல்களைச் செய்த மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்பு" என்று வரலாற்றை வரையறுக்கிறார். ஒரு மனிதனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் பட்டியல் முக்கியமல்ல. அந்த நிகழ்வுகள் அம்மனிதனின் வாழ்வில் எந்தக்கட்டத்தில் நிகழ்ந்தன; அவை மற்ற நிகழ்வுகளின் மீதும் சமுதாயத்தின் மீதும் செலுத்திய தாக்கம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம். ஆகவேதான் நாகரிகம் வளர்ந்த கடந்த 5000 ஆண்டுகால மனித வாழ்வுதான் வரலாற்றாய்வாளர்களின் இலக்காக இருக்கவேண்டும் என்கிறார். இவை மட்டுமல்ல. இன்னும் வரலாற்றாய்வை மேற்கொள்வது எப்படி, ஆய்வுக்கட்டுரைகளை வடிப்பது எப்படி போன்ற நிறைய சுவையான 'எப்படி'க்கள் இந்த வரலாற்று வரைவியலில் பொதிந்து கிடக்கின்றன. தக்க நேரம் வாய்க்கும்போது பார்ப்போம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |