http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 117

இதழ் 117
[ மார்ச் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

Srirangam under the Sundara Pandyas
Srirangam under the Sundara Pandyas
பத்தர் மன்னிய திருப்பாற்றுறை
பாண்டில் விளக்குகள்
இதழ் எண். 117 > கலையும் ஆய்வும்
பத்தர் மன்னிய திருப்பாற்றுறை
கி.ஸ்ரீதரன்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் பாடல் பெற்ற 59வது தலமாக விளங்கும் திருப்பாற்றுறை திருக்கோயில் வழிபாட்டுச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் பெற்ற தலமாக விளங்குகிறது. திருச்சி நகரிலிருந்து திருவானைக்காவல்-திருவளர்சோலை வழியாக கல்லணை செல்லும் சாலையில் பனையபுரம் என்ற ஊரிலிருந்து வடக்கே 1 கி.மீ. தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

இத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன் ஆதிமூலநாதர் எனவும் இறைவி நித்யகல்யாணி-மேகலாம்பிகை எனவும் போற்றி வழிபடப்படுகின்றனர். திருஞான சம்மந்தப் பெருமான் இத்தலத்தை ‘பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய பத்து - நூறு பெயரனைப் பாடிப்பரவுமே’ (முதல் திருமுறை) எனப் போற்றியுள்ளதைக் காணலாம்.

மார்க்கண்டேய மகரிஷி தமது சிவபூஜைக்குப் பால் கிடைக்காத தால் வருந்தி இறைவனை வேண்ட அவனருளால் பால் பொங்கியதாகவும் அதனால் இத்தலம் திருப்பாற்றுறை எனப் பெயர் பெற்றதாகவும் புராண வரலாறு கூறுகிறது. பொதுமக்கள் இத்தலத்தினை இன்றும் திருப்பால்துறை என்றே அழைக்கின்றனர்.

திருக்கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கிய திசையில் திருக்கோயில் அமைந்துள்ளது. வாயிலில் அமைந்துள்ள மூன்று நிலைக் கோபுரம் நகரத்தார் திருப்பணி. கோபுரத்தின் இடப்புறம் விநாயகர். வலப்புறம் தண்டாயுதபாணி சன்னிதிகள். கோபுரத்திற்கு முன்பாக பலிபீடமும் சிறிய நந்தி மண்டபமும் அமைந்துள்ளன.



கருவறையை உள்ளடக்கிய விமானம் ஒரு தள வேசர விமானமாகும். ஆதிதளத்திற்கு மேலமைந்த பகுதிகள் அனைத்தும் அண்மைக்கால சுதை மற்றும் வண்ணப்பூச்சுக்கு ஆளாகி நிற்கின்றன. ஆதிதளத்தின் நான்கு மூலைகளிலும் காணப்படும் நந்தி உருவங்கள் பழமையான சிற்பங்களாகும்.



விமானத்திற்கு முன்பாக அர்த்தமண்டபம், முக மண்டபம், மகாமண்பம் ஆகிய மண்டபங்கள் அமைந்துள்ளன. கருவறையில் சுயம்பு லிங்கமாக இறைவன் சிறிய வடிவில் காட்சியளிக்கிறார்.

மண்டபச் சிற்பங்கள்

அர்த்த மண்டபத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அர்த்த மண்டப நுழைவாயிலுக்கு மேல் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் மகர தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. தோரணத்தின் இருபுறங்களிலும் வாய் பிளந்துள்ள மகரங்களினின்றும் பூதங்கள் வெளிப்படுகின்றன.

தோரணத்தின் மையப்பகுதியில் ஆலிலையின் மீது படுத்திருக்கும் குழந்தைக் கண்ணனின் திருவுருவம் காணப்படுகிறது. கண்ணனின் இடது கை மேலெழும்பியுள்ளது. மார்பின் குறுக்கே ஸ்வர்ண வைகாக்ஷம் அணிசெய்கிறது.கண்ணனின் இரு புறங்களிலும் சாமரங்களும் தலைக்கு மேல் குடையும் காட்டப்பட்டுள்ளன. வழக்கமாக கண்ட அல்லது வேதி பாதங்களில் குறுஞ்சிற்ப வடிவில் இடம்பெறும் கண்ணனை இங்கு மகரதோரணத்தில் வடித்திருப்பது சிறப்புக்குரியது.




மகர தோரணத்தின் நடுவில் ஆலிலைக் கண்ணன். கண்ணனைச் சுற்றிலும் ஆலிலையின் எல்லைகள் செதுக்கப்பட்டுள்ளன


மகர தோரணத்தின் கீழே நிலைக்காலின் மேற்பகுதியில் மூன்று குறுஞ்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மையப்பகுதியில் கஜலட்சுமி (வேழத் திருமகள்) வடிவம் அமைந்திருக்க அவருக்கு வலப்புறத்தில் கொற்றவை (துர்க்கை) சிற்பமும் இடப்புறத்தில் உமையுடன் நந்தியணுக்கராக நிற்கும் சிவபெருமானும் செதுக்கப் பெற்றுள்ளனர். இக்குறுஞ்சிற்பங்களுக்கு மத்தியில் சதுரப் பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.



மான் வாகனத்துடன் காணப்படும் கொற்றவைக்கு வலப்புறத்தில் ஒரு ஆடவர் தனது தலையைத் தானே பிடித்துக்கொண்டு பலியிடும் நவகண்ட நிலையில் உள்ளார். துர்க்கைக்கு இடப்புறத்தே ஒரு பெண் அடியவர் காட்டப்பட்டுள்ளார். இடபத்தின் மீது சாய்ந்து நிற்கும் கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கும் சிவபெருமானுக்கு வலப்புறத்தில் பதாக முத்திரை காட்டியபடி நிற்கும் ஒரு அடியவரும் இடப்புறத்தில் உமையும் காணப்படுகின்றனர்.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள முக மண்டபத்தில் தேவார நால்வர், பாமா ருக்மிணியுடன் வேணுகோபாலர், அதிகார நந்தி, சுயசாம்பிகை என்றழைக்கப்படும் அம்மன் மற்றும் வணங்கிய திருக்கரங்களுடன் காணப்படும் அரசர் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.



தேவக்கோட்டச் சிற்பங்கள்

விமானம் மற்றும் அர்த்த மண்டபச் சுவர்களில் தேவக்கோட்டங்கள் அமைக்கப்பெற்று அவற்றில் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. விமானக் கோட்டங்களில் தெற்கில் வீணாதார தட்சிணாமூர்த்தியும், மேற்கே ஹரிஹரரும், வடக்கே பிரம்மனும் இடம் பெற்றுள்ளனர். வீணாதார தட்சிணாமூர்த்தி கோட்டத்தையொட்டி ஒரு அண்மைக்காலத் திருமுன் அமைக்கப்பட்டுள்ளது. பண்டைய விமானத்தின் அழகை முற்றிலும் சிதைக்கும் இதுபோன்ற சிமெண்டு கட்டுமானங்கள் தொடர்ந்து அனைத்து பழங்கோயில்களிலும் இடம்பெற்று வருவது வேதனைக்குரியதாகும்.

அர்த்த மண்டபக் கோட்டங்களில் தெற்கே பிட்சாடன மூர்த்தியும் வடக்கே துர்க்கையும் காணப்படுகின்றனர். இக்கோட்டங்களுக்கு மேல் மகர தோரணங்கள் அணி செய்கின்றன. பிட்சாடனர் கோட்டத்திற்கு மேல் அமைந்துள்ள தோரணத்தின் நடுவே கால சம்ஹாரர் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

அர்த்த மண்டபச் சுவரில் கோட்டத்திற்கு மேற்கே நின்ற நிலையில் காணப்படும் விநாயகப் பெருமானின் புடைப்புச் சிற்பம் இடம்பெற்றுள்ளது. நான்கு திருக்கரங்களுடன் காணப்படும் இப்பெருமானின் தலைக்கு மேல் ஒரு குடை காட்டப்பட்டிருக்க அவரது இரு புறங்களிலும் சாமரங்கள் அணி செய்கின்றன.



திருச்சுற்று

விமானத்தைச் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்றில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, சண்டிகேசுவர ர், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்களின் வடிவங்கள் வழிபடப்பெறுகின்றன. சூரியன் திருமேனி சோழர் காலத்தைச் சார்ந்தது. இத்திருக்கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டில் உத்தமச் சோழன் காலத்தில் ஒரு அடியவர் இக்கோயிலில் சூரியன் திருமேனியை நிறுவியதாகக் குறிப்பு உள்ளது. அப்போது நிறுவப்பட்ட திருமேனி இதுதானா என்பதை உறுதிபடக் கூற இயலவில்லை.

கல்வெட்டுக்கள்

திருப்பாற்றுறை திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோயிலாகும். 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோயிலிலிருந்து படியெடுக்கப் பட்டுள்ளன. பல்லவ மன்ன னான மூன்றாம் ந ந்திவர்மன் (846-869), முதலாம் பராந்தக சோழன் (907-955), கண்டராதித்த சோழன் (950-957), இரண்டாம் பராந்தகனான சுந்தரச் சோழன் (957 - 975), உத்தமச் சோழன் (971 - 987), முதலாம் இராஜராஜ சோழன் (985-1012), முதலாம் குலோத்துங்க சோழன்(1070-1120), விக்கிரம சோழன் (1118-1136), போசள மன்ன ன் வீர இராமனாதன் ஆகிய மன்னர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் இவற்றுள் அடக்கம். முதலாம் பராந்தக சோழன் காலக் கல்வெட்டுக்கள் சில உத்தமச் சோழன் காலத்தில் மீள்பொறிப்புக்கு ஆளாகியுள்ளன.



இக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன் திருப்பாற்றுறை மகாதேவர், திருப்பாற்றுறை மகாதேவ பட்டாரர், திருப்பாத்துரை பரமேசுவர ர், திருப்பாத்துறை ஆழ்வார், திருப்பால்துறை உடைய மகாதேவர், திருப்பனம்புதூர் பரமேசுவரர் என்றெல்லாம் பல்வேறு காலகட்டங்களில் அழைக்கப்பட்டதை கல்வெட்டுக்கள் வழி அறிய முடிகிறது. மேலும் இத்தலத்திற்குத் திருப்பனம்புதூர் எனும் பெயரும் வழங்கி வந்தது புலனாகின்றது.



இக்கோயில் ‘தென்கரை பிரம்மதேயம் உத்தமசீலீ சதுர்வேதி மங்கலத்துத் திருப்பாற்றுறை’ என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பராந்தக சோழனின் நான்கு மகன்களுள் ஒருவரான உத்தம சீலீயின் பெயரால் இப்பகுதியில் சதுர்வேதி மங்கலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இன்றும் திருச்சியிலிருந்து கல்லணைக்குச் செல்லும் வழியில் உத்தம சீலீ எனும் பெயரில் ஒரு ஊர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெள்ளாறு எறிந்த நந்திப்போத்தரையன் ஆன மூன்றாம் நந்திவர்மனின் 22வத் ஆட்சியாண்டில் திருப்பாற்றுறை சபையார் 60 கழஞ்சுகள் பெற்றுக்கொண்டு கோயிலில் ஒரு ந ந்தாவிளக்கு எரிக்க ஒப்புக்கொண்டமையை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. முதலாம் பராந்தக சோழரின் மகன்களுள் ஒருவரான அரிகுலகேசரியின் (அதாவது அரிஞ்சய சோழரின்) அதிகாரி, பணியாளர் போன்றோர் இக்கோயிலுக்கு தானங்கள் அளித்துள்ளனர். பராந்தகர் காலத்தில் அளிக்கப்பட்ட கொடைகள் சில மீண்டும் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டமையை உத்தமச் சோழனது கல்வெட்டு ஒன்றினால் அறியமுடிகிறது. இதே மன்னனது மற்றொரு கல்வெட்டில் இக்கோயிலில் இருந்த ‘தயாபரன் அம்பலத்தில்’ ஊர்ச்சபை கூடியதையும் மானவீரன் என்பான் இக்கோயிலில் சூரிய பகவானுடைய திருமேனியை நிறுவி வழிபாட்டிற்குத் தானமளித்த செய்தியும் கூறப்படுகிறது. இத்திருச்சிற்பமே தற்போது ஆலயத் திருச்சுற்றில் உள்ள சூரியன் சிற்பமாக இருக்கலாம்.

ஆதனூரைச் சேர்ந்த பாலாசிரியன் பட்டன் சிவன் கூத்தர் என்பவர் இக்கோயிலில் இறைவன் அமுதுக்கும் ந ந்தா விளக்கு எரிக்கவும் வாய்ப்பாக நிலத்தானம் அளித்தார். இத்தானம் இறையிலி நிலமாக அளிக்கப்பட்டது. இதனைக் கல்வெட்டு ‘இறை இழிச்சி இழித்தினபடி நிலமுதலப் பொத்தகத்தும் கைய்த தடியிலும் இறையிழிச்சி இழிச்சினபடி.. ஸ்ரீகொயிலிலெய் கல்மேல் வெட்டுவித்துக் குடுத்தோம்’ எனக் குறிப்பிடுகின்றது.

ஆதனூரைச் சேர்ந்த மற்றொரு அடியவரான கூத்தபிரான் பட்டன் இக்கோயிலில் வழிபாடு மேற்கொள்ளவும் பாற்போனகம் அமுது படைக்கவும் அதனைப் படைக்க செப்புத் தளிகையும் (பாத்திரங்களும்) அதன் எடையும், சிதாரி புகைக்கு தராவில் செய்யப்பட்ட தூப அகல், தூப மணி, திருப்பள்ளிதாம ம் (மலர் மாலை) ஆகியன வழங்கவும் வாய்ப்பாக நல்கிய தானம் பற்றி மற்றொரு கல்வெட்டு விரிவாகப் பேசுகிறது. இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தைச் சார்ந்தது எனத் தொல்லியல் கல்வெட்டு ஆண்டறிக்கை குறிப்பிடுகின்றது.



விக்கிரமச் சோழனது கல்வெட்டுக்கள் இக்கோயிலில் அதிக அளவில் காணப்படுகின்றன. இக்கோயிலில் நந்தா விளக்கெரிக்க 15 பசுக்கள் அளித்த செய்தியும் திருவெறும்பூரை அடுத்துள்ள சோழமாதேவிச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தவர் ஒருவர் இக்கோயிலில் விளக்கெரிக்க தானம் அளித்த செய்திகளையும் இம்மன்னன் காலக் கல்வெட்டுக்கள் எடுத்து இயம்புகின்றன.

மேலும் இக்கோயிலின் அருகே காக்கு நாயக்கன் மடம், திருநாவுக்கரசு தேவன் மடம் என்கிற மடங்கள் செயல்பட்டதையும் அங்கு மாகேசுவர ர்ரகளுக்கு உணவு அளிக்கப்பட்டதையும் திருவானைக்கா திருக்கோயில் மடங்கள் பற்றியும் இங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

பல்லவர் காலம் முதல் வழிபாட்டில் இருந்து சோழர் காலம் முழுவதும் சிறப்புற்று விளங்கிய இத்திருக்கோயில், காவிரிப் படுகையில் அமைந்துள்ள சோழர் கற்றளிகளில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் விளங்கி வருவதை அறியலாம்.

குறிப்புக்கள்;

1. திருப்பாற்றுறை பதிகங்கள் - திருஞானசம்மந்தர் - முதல் திருமுறை
2. Inscriptions of the Madras Presidency - V.Rangacharya - Vol III - 1919 - Tiruppaltturai - 611 - (169 of 1907) to 647 (586 of 1908)
3. South Indian Inscriptions Volumes. Nos. 3, 8. 12. 13. 19, 23.
4. Early Chola Art (Part I) - S.R.Balasubrahmanyam - 1966. Pages 126 - 128.
5. K.A.Nilakanda Sastri Felicitation Volume - State Dept of Archaeology. Page 467.
6. பிற்காலச் சோழர் வரலாறு - தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் - 1974
7. திருப்பாற்றுறை திருக்கோயில் - குடமுழுக்கு விழா மலர் - 05.06.2014
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.