http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 118
இதழ் 118 [ ஏப்ரல் 2015 ] இந்த இதழில்.. In this Issue.. |
முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறையில் பொறுப்பேற்ற பிறகு,துறை மாணவர்களுடன் சிராப்பள்ளி முசிறிச் சாலையில் உள்ள வரலாறு தொடர்புடைய அனைத்துக் கட்டுமானங்களையும் ஆய்வு வெளிச்சத்திற்குக் கொணரும் முயற்சியில் ஈடுபட்டபோது பல அரிய வரலாற்றுத் தகவல்கள் வெளிப்பட்டன.
அவற்றுள், ஏவூர்ப் பிரிவுச் சாலைக்கு முன்பு ஒன்றும் உமையாள்புரத்தில் மற்றொன்றுமாய் உள்ள தண்ணீர்ப்பந்தல்கள் குறிப்பிடத்தக்கன. பின்னது 95 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு இன்று பாழடைந்த நிலையில் தண்ணீர்ப்பந்தல் சத்திரமாக அமைந்துள்ளது. உமையாள்புரம் தண்ணீர்ப்பந்தல் காவிரியைப் பார்த்தவாறு உள்ள இத்தண்ணீர்ப் பந்தல், தங்குவதற்கான சத்திரமும் கொண்டுள்ளது. ஒருதளச் செங்கல் கட்டுமானமாய்க் காரைப்பூச்சுடன், முப்புறத்தும் காற்றோட்டத்திற்கும் வெளிச்சத்திற்கும் வாய்ப்பாகப் பெரிய அளவிலான சாளரங்கள் பெற்றுள்ள இதன் முன்புறத்தும், மேற்கிலும் ஓட்டுக் கூரையுடன் உள்ள தாழ்வாரம் கருங்கல் அடித்தளத்தின் மேல் செம்மையாகப் பரவியுள்ளது. கோயில் கட்டமைப்பில் காணப்படும் துணைத்தளம் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அடித்தளம் ஓரிடத்தும் சிதையாமல் பழைய பொலிவுடன் இன்னமும் வலிமை குன்றாமல் உள்ளது. அடித்தளத்தில் ஊன்றப்பட்டு ஓட்டுக்கூரையைத் தாங்கும் மரத்தூண்கள் பல இடங்களில் முழுமையாக உள்ளமையுடன் கோயில் தூண்களைப் போலவே தலையுறுப்புகள் கொண்டுள்ளன. முதல் தளத்தின் கூரை வெளிநீட்டலுடன் கோயில் கட்டுமானக் கபோதம் போல வளைக்கப்பட்டுள்ளது. தளத்தின் மேல் நாற்புறத்தும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு மேற்பகுதி மொட்டை மாடியெனக் காட்சிதருகிறது. கட்டடத்தின் கிழக்குப் பகுதியில் இதை அடைவதற்கான படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டு அமைப்பின் மேற்பகுதியில் வெளிச்சத்திற்கும் காற்றோட்டத்திற்கும் வசதியாகச் சாளரம். சுற்றுச் சுவரின் தென்முகத்தில் மூன்று வளைவு மாடங்கள் காட்டி, அதன் இருபுறத்தும் பூச்சுருள் அலங்கரிப்புச் செய்துள்ளனர். மாடங்களின் இருபுறத்தும் சுதையாலான நந்திகளும் மயில்களும் காட்டப்பட்டுள்ளன. சுற்றுச் சுவர் அரைத்தூண்களின் முகப்புகள் அழகிய பூப்பதக்கங்கள் கொண்டுள்ளன. வளைவு மாடங்களில் மேற்கில் யானைத்திருமகளும் கிழக்கில் விநாயகரும் சுதைவடிவங்களாய்ப் பொலிகின்றனர். யானைத்திருமகளின் இருபுறத்துமுள்ள யானைகள் தங்கள் துளைக்கைகளில் கொண்டிருக்கும் குடங்களிலுள்ள நீரை, அம்மை பின்கைகளில் ஏந்தியிருக்கும் தாமரைகளின் மேல் ஊற்றுமாறு காட்சி அமைந்துள்ளது. மூஞ்சுறு வாகனத்தில், இரண்டு கால்களையும் குத்துக்கால்களாக வைத்து அமர்ந்திருக்கும் விநாயகரின் பின்கைகளில் பாசம், அங்குசம். இந்த இரண்டு இறைவடிவங்களுமே பெருமளவிற்குச் சிதைவின்றிக் காட்சிதந்தபோதும் நடுவிலுள்ள மாடவளைவின் சுதைச் சிற்பம் மட்டும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு அழிந்துள்ளது. கட்டடத்தின் உட்புறம் நுழைய இயலாதவாறு சிதைந்து தொங்கும் ஓட்டுக் கூரையிலிருந்து நழுவி நிற்கும் ஓடுகள் அச்சுறுத்துகின்றன. கட்டடத்தின் முப்புறத்தும் முட்செடிகளும் புதர்களும் காட்டுக் கொடிகளும் மண்டியுள்ளன. தாழ்வாரத்தின் மேற்பகுதியில் உடைந்த நிலையில் மரப்பெட்டி ஒன்றைக் காணமுடிகிறது. சத்திரத்தின் வாயிலை ஒட்டி வலப்புறத்தே சுவரில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டு சத்திரத்தின் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. குரோதன ஆண்டு, கார்த்திகை மாதம் 12ஆம் நாள் சுக்கிரவாரத்தன்று (27. 11. 1925 வெள்ளிக்கிழமை) இக்கட்டமைப்பில் புதுமனை புகுவிழா நிகழ்த்தப்பட்டதாகக் கூறும் கல்வெட்டு, இந்தத் தண்ணீர்ப்பந்தல் சத்திரம் முசிறி வட்டம், ஒமயபுரம் (உமையாள்புரம்) இராமசாமி நாடாள்வார் நினைவாக அவரது மகன் பழனியாண்டி நாடாள்வாரால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது. சோழர் காலக் கல்வெட்டுகளில் தோற்றம் தரும் நாடாள்வார்களின் தொடர்ச்சியாக இந்நாடாள்வார்களைக் கொள்ளமுடியுமா என்பது குறித்துச் சிந்திக்கலாம். இறந்தவர் நினைவாக இது போல் தண்ணீர்ப்பந்தல் அமைப்பது காலங் காலமாய்த் தமிழ்நாட்டில் இருந்துவரும் மரபாகும். சிவலோகத்துக்கு எழுந்தருளின முதலாம் இராஜேந்திரசோழருக்கும் அவர் தேவி வீரமாதேவிக்கும் செய்யாறு வட்டம், பிரம்மதேசத்தில் வீரமாதேவியின் உடன்பிறந்தாரான மதுராந்தகன் தண்ணீர்ப்பந்தல் அமைந்ததைக் குறிப்பிடும் கல்வெட்டு நினைக்கத்தக்கது (தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 30: 184). சிராப்பள்ளி நகரில் தென்னூர் நெடுஞ்சாலையில் காவேரி மருத்துவமனை அருகே டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்ட கல்வெட்டுப் பலகை, பலர் உதவியைப் பெற்று 1882ஆம் வருடம் ஜூலை மாதம் அங்கு நிறுவப்பட்ட தண்ணீர்ப்பந்தலை இன்றைக்கும் நினைவுபடுத்திக் கொண்டுள்ளது. ஏவூர்த் தண்ணீர்ப்பந்தல் ஏவூர்ப் பிரிவுச் சாலையில் காணப்படும் தண்ணீர்ப்பந்தல் பெருமரங்களின் தழுவலில் கட்டடத்தின் பெரும்பகுதியை இழந்து முன்புற வளைவையும் மேற்கு நுழைவாயிலையும் மட்டுமே எச்சங்களாய்க் கொண்டுள்ளது. காவிரியின் கரையில் இருக்கும் இந்தச் செங்கல் கட்டடத்தின் காரைப்பூச்சு பல இடங்களில் உதிர்ந்துள்ளது. ஏவூர் எம். அரவன் சேர்வையின் தண்ணீர்ப்பந்தலாக எழுத்துப் பொறிப்புப் பெற்றுள்ள இக்கட்டமைப்பில் காலக்குறிப்பு இல்லை. இதன் அருகில் கல்வெட்டுப் பொறிப்புடன் அண்மைக்கால நினைவுக் கற்கள் இரண்டைக் காணமுடிந்தது. மக்கள் அமரப் பயன்படுத்தும் இக்கற்களில் ஒன்று, 1953 புரட்டாசி வியாழனன்று தெய்வப் பதவியடைந்த ஏவூர் திருமதி. மீனாக்ஷி அம்மாளுக்கு மு.காத்தான் சேர்வை செய்த உபயமாகக் காட்சிதருகிறது. மற்றொன்று, 20. 2. 2000 அன்று மறைந்த ஏவூர் லெ. சிவகாமியின் நினைவாக சே. லெட்சுமணன் செய்த உபயமாக உள்ளது. களஆய்வுகளுக்குத் துணைநின்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கும் இணை இயக்குநர் பேராசிரியர் மு.நளினிக்கும் உழுவல் நன்றி உரியது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |