http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 10

இதழ் 10
[ ஏப்ரல் 15 - மே 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றாய்வுப் பணிகளில் வரலாறு டாட் காம்
பகவதஜ்ஜுகம் - 1
கதை 5 - காளி நீலி
நன்றியுடன் நகரிலிருந்து . . . !
பழுவூர்-3
கல்வெட்டாய்வு - 8
கட்டடக்கலைத்தொடர் - 8
சமய சாசனம்
நார்த்தாமலையை நோக்கி... - 2
The Origin and Evolution of Amman Worship
சங்கச்சாரல் - 9
பெண் தெய்வ வழிபாடு
இதழ் எண். 10 > கதைநேரம்
எங்கள் இருவரின் புரவிகளுமே சோர்ந்து நடைதளர்ந்துவிட்டன... காவிரியின் கரையோரமாய் எத்தனை தூரம் கடந்து வந்தோமோ - அந்தப் பரமேசுவரப் பெருமானாருக்குத்தான் வெளிச்சம் !

என்னை கவனிக்காதீர்கள் - நான் அத்தனை முக்கியப்பட்டவனில்லை. என் அருகே வந்துகொண்டிருக்கிறாரே - அவரை கவனியுங்கள். ஆடை அணிகலனெல்லாம் சாதாரணமாய் இருக்கிறதே என்று அவரை குறைவாய் மதிப்பிட்டுவிட வேண்டாம்.. சராசரிக்கும் அதிகமான அவருடய உயரத்தை கவனியுங்கள்.... வாள் சுழற்றி சுழற்றி தழும்பேறிக்கிடக்கும் அவருடைய கரங்களை கவனியுங்கள்... திண்மை படர்ந்த தோள்களை கவனியுங்ள்.. பார்ப்பவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் தீட்சிண்யமான அந்தக் கண்களை கவனியுங்கள்....

"சர்ப்பதேவா - அதோ தெரிவது திருஈங்கோய் மலையா என்ன ? "

"சந்தேகமே இல்லை ஐயா - திருஈங்கோய் மலையேதான்.. வேறு எந்த மலையும் இந்தப்பகுதிகளில் கிடையாது. அப்படியே போனால் அடியேனுடைய ஊரான இராசகேசரிபுரம் வந்துவிடும்.. நான் உத்தரவு பெற்றுக் கொள்வேன்..."

"நாசமாய்ப் போயிற்று - உத்தரவாவது, மண்ணாவது - அடுத்த பத்து பக்கத்துக்கு(1) உமக்கு வேலை என்னோடு பக்கத்திலேயே இருப்பதுதான், தெரிந்ததா ?"

(1)ஒரு பக்ஷம் அல்லது பக்கம் - 15 நாள்

"உத்தரவு" என்ற சொல் வாய் வரை வந்துவிட்டது. மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். அப்படி நான் சொல்வது அவருக்கு கட்டோடு பிடிக்காது. "ஆகட்டும் ஐயா..."

"ஏனோ இந்தப்பகுதி என்னை வசீகரிக்கிறது சர்ப்பதேவா - பலப் பல பிறவிகளாக தொடர்ந்து இந்த இடத்திற்கு நான் வருவது போலவும் இந்த மண்ணில் பல ஜென்ம ஜென்மாந்திரங்கள் சுற்றித் திரிந்து விளையாடி மகிழ்ந்ததுபோலவும் தோன்றுகிறது...- இதோ ஓடிக்கொண்டிருக்கிறதே இந்த நதியை இப்போதுதான் பார்க்கிறேனா ? இல்லை, முன்பு எங்கோ எப்போதோ நிச்சயம் பார்த்திருக்கிறேன்... இதோ - இந்த மரங்களும் வயல்களும் ஏன் இத்தனை பழகியதாய் என் கண்களுக்குத் தெரிகின்றன ? அதோ, அந்தக் குருவியின் அழைப்பில் ஏதோ செய்தி மறைந்திருக்கவில்லை ? ஆதித்தா ! ஆதித்தா ! என்று அழைப்பதாய் உனக்குத் தோன்றவில்லை...? நன்றாகக் கேட்டுப்பார் !"

நான் புன்னகைத்தேன். சில சமயங்களில் இவர் இப்படித்தான் உணர்ச்சி நிலைகடந்து வேறு லோகத்துக்குச் சென்றுவிடுவார். அதனால்தான் இவரைவிட்டு நான் ஒரு கணமும் பிரிவதில்லை.

"அந்த இரகசியச் செய்தி உங்களுக்கு உரியது ஐயா - அதனால்தான் எனக்குப் புரியவில்லை" என்றேன்.

மகேந்திர மங்கலத்தின் எல்லை புலனாகியது... அதோ, சற்று தள்ளி தெரியும் அந்தணர் குடில்கள்...அதற்கப்பால் காவிரி மணலை அகழ்ந்து உண்டாக்கிய மணலீடு நீக்கிய பெருவழி - அப்புறம் இராசகேசரிபுரம் !

அடடா - இத்தனை தூரம் வந்துவிட்டு சொந்த ஊருக்குப் போகாமல் திரும்பிப் போகவேண்டிய துர்பாக்கியம் நேர்ந்துவிட்டதே...

என்ன செய்வது ? என் அன்னையாருக்கு இவரை நிச்சயம் அடையாளம் தெரிந்துவிடும் - ஒரு கணத்தில் "மகாராசா வந்திருக்கிறார் ! மகாராசா வந்திருக்கிறார் !" என்று கூவி ஊரையே கூட்டிவிடுவாள். அது இவருக்குக் கட்டோடு பிடிக்காது...

"நிச்சயம் இது பழகிய இடம்தான் - என் புரவிக்கு என் உணர்வுகள் தெரிகின்றன... நான் நினைப்பது மட்டும் சரியாயிருந்தால்......ஆஹா! நாம் காண்பதென்ன ?"

அது ஒரு பாழடைந்த சிவன் கோயில். திருக்கொருக்குத்துறை மகாதேவர் கோயில் என்று ஊர்ப் பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். கோயிலா அது - வெறும் செங்கல் குவியல். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே வழிபாடுகள் நடைபெறுவதில்லை.

இவருக்கு இந்த மாதிரி பாழடைந்த பழங்கோயில்களைப் பார்த்தால் உணர்ச்சி பொங்கிவிடும்...

"ஆஹா - எத்தனை அருமையான கோயில் எப்படி இருக்கிறது பார்த்தாயா ? இந்தக் கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வம்தான் இன்றைக்கு நம்மை உறையூரிலிருந்து இத்தனை தூரம் இழுத்துக்கொண்டு வந்திருக்க வேண்டும்.. சர்ப்பதேவா - நான் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பேனல்லவா ? நான் ஒரு காலத்தில் என் முன்னோர்களுள் தலைசிறந்தவரான கோச்செங்கட் சோழரின் மகனாக இருந்தேன் - நானும் அவருமாய் காவிரிக் கரையெல்லாம் சிவபெருமானுக்குப் பலப்பல கோயில்கள் அமைத்தோம்... செங்கல்லினாலான அக்கோயில்கள் விரைவில் பாழடைந்துவிட்டன... சிவத்திற்கருகில் நிரந்தரமாய் நிலைத்துவிட்ட என் தந்தையார் வேண்டிக் கேட்டுக்கொண்டதன்பேரில் இறைவனே என்னை பூவுலகிற்கு அனுப்பி வைத்தார்... எம் கோயில்கள் அனைத்தையும் சீர்செய்க ! காவிரிக் கரையில் எனக்கு கற்றளிகள் எழுப்பி வழிபடுக ! நீயும் உம் பரம்பரையும் நிரந்தரமாய் எம்மில் உறைவீர்கள் ! என்று கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.. நானோ போர் ! போர் ! என்று ஓயாமல் வாள் சுழற்றிக்கொண்டிருக்கிறேன்... வந்த கடமையைச் செய்யாமல் இராஜ்ஜிய பாரத்தில் அமுங்கிக் கொண்டிருக்கிறேன்..."

நான் என்ன பதில் சொல்வது? திகைத்தேன். அவருடைய மன உணர்வுகளை என்னிடம் மட்டும்தான் தங்கு தடையின்றி திறந்து காட்டுவார்... தன்னை மறந்து அவர் பேசும்போதெல்லாம் அவருடைய முகத்தில் வீரக்களையும் பக்தி உணர்வும் மாறி மாறிப் பொங்கும்.. இதோ இப்போதுகூட அவரின் முகத்தைப் பாருங்கள் - திருப்புறம்பியத்தில் நான் பார்த்த வீராவேசம் மிக்க முகத்திற்கும் இப்போது பார்க்கும் பக்தி முதிர்ந்த முகத்திற்கும் எத்தனை வித்தியாசம்....

"தேவா ! ஒன்று மட்டும் உறுதி ! நான் மற்ற இராஜாக்களைப்போல் கடைசிவரை இராஜ்ஜிய விஸ்தரிப்பில் அலைந்துகொண்டிருக்க மாட்டேன்... சோழதேசத்தை ஓரளவிற்கு பலம் பொருந்தியதாய் செய்துவிட்டு அதனைக் காத்து நிர்வகிக்கும் பொறுப்பை என் மகன் பராந்தகனிடம் ஒப்படைத்துவிடுவேன்... அதற்குப்பிறகு தலம் தலமாகச் செல்வேன்... கோச் செங்கணர் கட்டிய செங்கற் கோயில்களையெல்லாம் கருங்கல் தளியாக்குவேன்.. இதோ, என் கண்முன்னால் செங்கல் குவியலாக மண்மேடிட்டுக் காட்சிதரும் இதே இடத்தில் ஒரு அற்புதமான ஆலயம் எழும்...அந்த ஆலயம் காலகாலங்களுக்கும் சோழமன்னர்களின் புகழை சொல்லிக்கொண்டிருக்கும்... நான் மட்டுமல்ல, என் பின்னால் வரும் சந்ததியினரும் இந்தத் திருப்பணியை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.... தமிழகத்தை ஆண்ட மன்னர்களுள் சோழர் தொல்குடியைப்போல் சிவப்பணி செய்வித்தவர் யாருமில்லை என்று பலப்பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மக்கள் பேசிக் கொள்வார்கள் - இது உறுதி !"

ஆவேசமாய் பேசிமுடித்தார் ஆதித்த சோழர்... வேகவேகமாய் பேசியதில் முச்சு வாங்குகிறது....எப்பேர்ப்பட்ட மனிதர் ?

இத்தனை பெரிய மனிதரின் தோழமைபூண்ட நான் எத்தனை பாக்கியசாலி ?

வழியில் புன்னை வாய்க்கால் குறுக்கிட்டது நல்லதாயிற்று. புரவிகளை விட்டு இருவரும் இறங்கிவிட்டு அவைகளுக்கு நீர்காட்டினோம்...

கரைகளில் அமர்ந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.

நீரில் தெரிந்த என்னுடைய பிம்பத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டேன்.... இருபுறமும் நீண்ட கருத்த மீசை.. சுற்றிக்கட்டிய தலைப்பாகை...உறுதியான முகவாய்..

புரவி தலையை அசைக்க நீரில் பிம்பம் சல சலவென்று கலைந்தது.....


***********************************************************************************************


கலைந்துவிட்டது.

பிம்பம் ரொம்பவும் கலைந்துதான் போய்விட்டது....

கருத்த மீசை நரையோடிவிட்டது.... தலைப்பாகை பெருத்துவிட்டது.... காதில் தங்கக் குழை... தொங்கிய கன்னங்கள்... இருண்ட கண்கள்...முப்பத்தி ஐந்து வருடங்களின் உழவு முகத்தில் கோடுகளாய் விரிந்து கிடக்கின்றன....

இப்போது நான் வெறும் சர்ப்பதேவன் இல்லை... கிழவன் சர்ப்பதேவன்..... செம்பியர் கிழார் நாட்டுக் கோன் ! இராசகேசரிபுரத்தின் ஊர்த்தலைவன் ! சிரிப்பாக இல்லை ? எல்லாம் அரசர் ஆதித்த சோழரும் இளவரசர் பராந்தகரும் செய்த வேலை.....

போர், வாணிபம், புரவு வரி, நாட்டுரிமை, அரசியல் - எல்லாம் பார்த்துவிட்டு ஒரு வழியாக ஓய்ந்துபோய் மீண்டும் இராசகேசரிபுரத்திலேயே ஒடுங்கிவிட்டேன்.

ஆதித்தருக்கு அன்றைக்கிருந்த மனோநிலை எனக்கு இன்றைக்குத்தான் வாய்த்திருக்கிறது.சிந்தை "சிவம் ! சிவம் !" என்று சதா அரற்றுகிறது... மகேந்திர மங்கலத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்த செங்கல் குவியலிலிருந்து ஒரு ஒற்றைக்குரல் கேட்கிறது.... "எப்போது எமக்குக் கற்றளி கட்டப் போகிறாய் ?"

சொன்னால் மகேந்திர மங்கல சிவாச்சாரியர்களே சிரிப்பார்கள்....கிழவனுக்கு புத்தி பேதலித்துவிட்டது என்பார்கள்.கற்றளி கட்டுவது தனிமனித வேலையா என்ன ?

அரசாங்கத்துக்கு எத்தனையோ ஓலையெழுதிவிட்டேன் - பாவம் பராந்தகரையும் குற்றம் சொல்ல முடியாது. மதுரையை வென்றபின் இராஜ்ஜியத்தில் கிளம்பும் பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல...

"ஐயா!"

வாயிலில் ஏதோ குரல் கேட்பதுபோலில்லை ? இருங்கள், கொஞ்சம் மெதுவாகத்தான் எழுந்திருக்கமுடியும்...

"ஐயா!"

"இதோ வந்துகொண்டிருக்கிறேன்...!"

வாயிலில் நின்றவர் என்னைவிட சற்று இளமையாய்த் தெரிந்தார் - பிராயம் ஐம்பது சொல்லலாமா ?

"ஐயா - கிழவர் சர்ப்பதேவர் என்பது...."

"நான்தான் - சொல்லுங்கள் !"

"வாகீசன் என்று அழைப்பார்கள் என்னை - ஒரு கற்றளித் திருப்பணிக்காக தஞ்சையலிருந்து என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள்.. இதோ ஓலை.!"

திருப்பணியா... அப்படியானால்... அப்படியானால்..... பரபரப்புடன் ஓலையைப் பிரித்தேன்....

வாகீசர் ... மிகவும் கேள்விப்பட்ட பெயராக இல்லை ?

"அன்புப்பாட்டனார் சர்ப்பதேவருக்கு அடியேனுடைய வணக்கங்கள். தங்களுடைய ஓலைகளெல்லாம் கிடைத்தன - என்மீது தங்களுக்குக் கோபம்கூட இருக்கலாம்.ஒரு காரணத்தோடுதான் இந்தத் திருப்பணியை தாமதப் படுத்தினேன். சிற்பிகளுள் மயன் என்று சொல்லத்தக்க ஒருவரைக்கொண்டுதான் உங்கள் ஊர்க்கோயில் புதுப்பிக்கப்படவேண்டும் என்று நினைத்தேன். அது நிறைவேற இத்தனை நாட்களாகிவிட்டது. வாகீசருக்கு அறிமுகம் தேவையில்லை. புள்ளமங்கலத்தில் அவர் வடித்த கோயிலில் பித்தனைப்போல் அவ்வப்போது திரிந்துகொண்டிருக்கிறேன். தெய்வீகச் சிற்பி. இனி பணி தங்குதடையில்லாமல் நடக்கும். என்ன வேண்டுமானாலும் எனக்கு எழுதுங்கள். தந்தையார் காலத்தில் விடப்பட்ட நிவந்தங்களையும் தவறாமல் கல்லில் பொறித்து விடவும். பராந்தகன்"

அடடா - கண்களில் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நான் வாழும் காலத்திற்குள் அந்தக் கோயிலை உயிர்ப்பித்து விடுவேனா ?

வாகீசரைக் கட்டி அணைத்துக் கொண்டேன்.


***********************************************************************************************


மகேந்திர மங்கலத்தின் சூழ்நிலையே மாறிவிட்டது. இரவும் பகலும் இடையறாது உளிச்சத்தம் கேட்கிறது.

சிற்பிகள் - அவர்களோடு தங்கி தொழில்பழகும் மாணாக்கர்கள் - உணவு சமைக்கும் ஆட்கள் - போக்கு வரத்து - கற்களை சுமந்துவரும் வண்டிகள் - அப்பா, எத்தனை கலகலப்பாய் மாறிவிட்டது காவிரிக்கரை ?

நான் அநேகமாய் வீட்டுப்பக்கமே செல்வதில்லை. இரவையும் பகலையும் இங்கேயே கழிக்கிறேன்.

வாகீசர் எனக்கு அந்யந்தமான தோழராகிவிட்டார். அவர் மூலம் சிற்பக் கலையின் நுட்பங்களை கற்று வருகிறேன்.

குமுதம், ஐகதி, வாஜனம், கபோதம், கூடு, கிரீவம் என்று என்னென்னவோ சொல்வார் - அப்போதைக்குப் புரிகிறது, அப்புறம் மறந்துவிடுகிறது. வயதாகிவிட்டதல்லவா ?

முடிந்தவரை திருப்பணிக்கு உதவுகிறேன். அவ்வப்போது மோர் சுமந்து கொண்டு போவது, தாம்பூலம் கொண்டு செல்வது போன்ற காரியங்களையும் செய்வது உண்டு.. சிற்பிகளெல்லாம் முதலில் பதறிப் போனார்கள் ! வாகீசர்தான் சமாதானப்படுத்தினார் - என் உணர்வுகளை புரிந்துகொண்ட மனிதர்...

இதோ, இங்கு வடிக்கப்பட்டிருக்கும் விதவிதமான யாளிகளும் மகரங்களும் கோயிலின் அடிப்புறத்தை அழகுசெய்யுமாம்... வாகீசர்தான் இப்படிப்பட்ட வெவ்வேறு வகையான யாளிகளை அறிமுகப்படுத்தியவராம்... அவருடைய திருப்பணியிலேயே மகேந்திர மங்கலம் மிகச்சிறந்து விளங்குமாம்...

திருக்கொருக்குத்துறை கோயிலின் மகரங்களும் யாளிகளும்


அதோ - வழக்கம்போல இன்றும் சிற்பிகளுக்கு வாகீசர் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார். போய் என்ன சொல்லித்தருகிறாரென்று செவிமடுப்போமா ?

"தட்சிணா மூர்த்தம் என்று குறிக்கப்படும் ஆலமர் அண்ணல் சிவபெருமானுடைய வடிவங்களில் மிகச் சிறப்பான வடிவம். அதானல்தான் எல்லாக் கோயில்களிலுமே அதனை தென்திசையில் வடித்து வைக்கிறோம் ! யோகநிலையில் நின்று உயரிய வேதாந்தக் கருத்துக்களை உபதேசித்த பெருமானை கல்லில் இறக்க நாமே அந்த யோக நிலைக்குச் சென்றாக வேண்டும். சித்தம் வேறு சிவம் வேறு என்று வேறுபாடு தோன்றாத அந்தக் கணத்தில்தான் மூர்த்தம் கைகளிலிருந்து கல்லில் இறங்க வேண்டும். அந்த மூர்த்தியை வடிக்கும் நாட்களில் சுயகட்டுப்பாடு மிக அவசியம். மனதில் இல்லாத பக்தியும் கருணையும் படைப்பில் வந்துவிட முடியாது...."

சிற்பிகள் ஆவென்று வாய்பிளந்தபடி அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

"காற்றில் சிவம்... கண்களில் சிவம்... உணவில் சிவம்... உணர்வில் சிவம்... என்று ஒன்றியவர்களுக்குத்தான் தட்சிணாமூர்த்தி சாத்தியப்படும். நான் இன்றிலிருந்து நாற்பத்தியெட்டு நாட்களுக்கு விரதமிருந்து இந்த மூர்த்தத்தை முடிக்க எண்ணியுள்ளேன். முழு மூர்த்தமும் ஒரே கல்லில் மரத்துடன் வடிக்கப்படும். சுற்றிலும் சிம்மங்கள், கணங்கள் முதலியவவை இடம்பெறும் - சனத்குமாரர்களான சனகர், சனந்தர், சநாதனர் முதலியோரை பக்கத்திற்கு இருவராக இரு பக்கங்களில் காண்பிக்கலாம்.. சரியா ? ஏதேனும் கேள்விகள் உண்டா ?"

மாணாக்கர்களைத் தவிர அவர்களைச் சுற்றியிருந்த மரங்களும் செடிகொடிகளும்கூட திகைத்தனபோலும் அசையாது நின்றன. காற்று விர்ரென்று ஒரு முறை சுழன்றடித்து மெளனத்தைக் கலைத்தது.


***********************************************************************************************


அடுத்து வந்த நாட்கள்தான் மிகச் சிரமமானவை.

வாகீசர் ஒரு யோகியைப்போல் தான் சொன்னவாரே சிவத்தில் ஒடுங்கிவிட்டார். ஒரு வேளைதான் உணவு... மற்றபடி இரவும் பகலும் தொடர்ந்து வேலை. எவரையும் தன் குடிசைப்பக்கம் அண்ட விடுவதில்லை. அந்தப் பகுதியைத் தாண்டினாலே காற்றில் திருநீற்றின் மணம் கமழ்ந்தது.

உடல் ஒரு விதமாய் ஒடுங்கிக் கூடாகிக் கிடந்தது. ஒரு பக்திகலந்த மயக்கம் கண்களில் நிரந்தரமாய் குடிகொண்டுவிட்டது. சட்டென்று பார்த்தால் இந்த உலகத்து மனிதரைப்போலவே தெரியவில்லை - பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது.

யாருடனும் அதிகம் பேச்சில்லை - அல்லது அவரை நெருங்குப்போது நமக்குத்தான் பேச்சற்று விடுகிறதா ?

இறைவனின் சாந்நித்தியம் அவருடைய குடிசையில் பரிபூரணமாக லயித்து விட்டது. உளி சத்தம்கூட ஓம் ! ஓம் ! என்று கேட்பதாக பிரமை தட்டியது எனக்கு.


***********************************************************************************************


ஒருநாள் வாகீசரே என்னை நாடி வந்தார்.

"மன்னிக்கவும்! கடந்த நாட்களில் நான் உங்களுடன் அதிகமாக பேச்சு வைத்துக்கொள்ளவில்லை - ஆலமர் இறைவனிடம் முழுமையாக என்னை கொடுத்துவிட்டேன். இன்னமும் சொல்லப்போனால் நானே இறையாய் மாறிவிட்டதாகக்கூட உணர்ந்தேன்... கைகள் நம் கைகள்தான் - ஆனால் நம் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொள்வது பரம்பொருள் அல்லவா ?"

அப்பாடா ! அந்தப் பழைய சினேகிதன் திரும்ப வந்துவிட்டான் போலிருக்கிறது... தழதழத்த கைகளைக் கட்டிக்கொண்டேன்...

"வாகீசரே! நீர் அபூர்வப்பிறவி !"

"வாருங்கள் - இன்னும் கண்கள் திறக்கவில்லை - ஆனால் வடிவம் முழுமையடைந்துவிட்டது. மரத்தில் தொங்கும் பொக்கணத்தில் கொஞ்சம் வேலை இருக்கிறது.. அவ்வளவுதான்..."

குடிசைக்குள் பயபக்தியுடன் நுழைந்தேன். வாகீசர் கீழே கிடத்தப்பட்டிருந்த அந்த வடிவத்தின் மீதிருந்த துணியை நீக்கினார்...

மெல்லிய விளக்கு வெளிச்சத்தில்....ஐயோ ! நான் கண்ட காட்சியை எவ்விதம் வர்ணிப்பேன் ?

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கலாவடிவம் என்முன் நின்றது.

யோகத்தில் கனிந்து உறைந்துபோன உருவம். உறுதியும் கம்பீரமும் கலந்து தெரியும் திருமுக மண்டலம்... அனாயசமான, இயற்கையான அமர்வு....பரந்து விரியும் சடாமுடி....

யோகத்தில் கனிந்த வடிவம் - திருக்கொருக்குத்துறை தட்சிணா மூர்த்தி


கைகள் தாமாகக் கூப்பிக்கொண்டன... கண்களிலிருந்து தாரை தாரையாய் நீர்வடிந்தது..."இதுதான் ! இதுதான் !" என்று மனம் அரற்றியது. உடல் ஒருமுறை நடுங்கி அடங்க..அப்படியே அமர்ந்துவிட்டேன்.


***********************************************************************************************


அதற்கப்புறம் வேலை துரிதமாய் நடக்கத் துவங்கியது.

வாகீசருக்கு தட்சிணா மூர்த்தி சிறப்பாக அமைய வேண்டுமாம் - அப்பறம்தான் அவர் மற்ற வேலைகளில் சிரத்தையாய் ஈடுபடுவாராம். இதுபோன்றதொரு தட்சிணா மூர்த்த்தை இதுவரை தான் வடித்ததில்லை என்று அவரே வாய்விட்டுச் சொன்னதாக ஒரு சிற்பி தெரிவித்தான்.

மகேந்திர மங்கலம் கொடுத்து வைத்த ஊர்தான். விரைவிலேயே அதன் பெயர் மகேந்திர மந்திரம் என்று மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.பார்ப்பவர்களை இப்படிப் பரவசப்படுத்தும் இடம் மந்திர சக்தி வாய்ந்ததாகத்தானே இருக்க வேண்டும் ?

பலப்பல குறுவடிவங்களும் ஆங்காங்கே வடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.. இவையெல்லாம் இறுதிக் கோயிலில் எவ்வாறு பொருந்தி வரும் என்பதில்தான் என் நாட்டமெல்லாம் நிற்கிறது... எத்தனையெத்தனை வடிவங்கள்...அப்பப்பா..


***********************************************************************************************


காவிரிக் கரையோரமாய் நானும் வாகீசரும் நடந்து கொண்டிருக்கிறோம். அந்த மாலைநேர நதியின் குழந்தை அலையொன்று எங்கள் கால்களை ஒருமுறை வருடிவிட்டுச் சென்றது.

"நீங்கள் இளவயதில் காதலித்திருக்கிறீர்களா ?" - திடீரென்று கேள்வி என் நாவில் வந்துவிட்டது. அந்தச் சூழ்நிலைதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும்.

அவரிடம் கேட்கக்கூடாதென்று நினைத்த கேள்வி. வாகீசருக்கும் குடும்பமென்று ஒன்று இருப்பதாய் தெரியவில்லை.

"மனதில் கலாஉணர்ச்சி சிறிதளவு இருப்பவர்கூட காதலிக்காமல் இருக்க முடியாது. கலாதேவிக்காகவே என்னை அர்ப்பணம் செய்தவன் நான்.அப்படிப்பட்டவன் கலவியில் வேண்டுமானால் ஈடுபடாமல் இருக்கலாம் - காதலில் ஈடுபடாமல் இருக்க முடியுமா என்ன ?"

சிறிது நேரம் எங்களுக்கிடையில் ஒரு மெளனம் நிலவியது. ஒரு உன்னதமான - தூய்மை மிக்க கலைஞனின் இதயத்தில் நிரம்பி நிற்கும் காதலுக்கு இருவரும் மரியாதை செய்தோம் போலும்.

"பின் ஏன் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளவில்லை ?"

"அவளைப் பார்ப்பவர்கள் யாருமே அவளை நேசிக்காமல் இருக்க முடியாது.. நானும் அவளை மனமாற நேசித்தேன்.அந்த நேசம் இறுதிவரை என் ஆயுளில் அவிந்து அடங்கவேண்டுமென்று நினைத்தேன். அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை!"

"புரியவில்லையே ஐயா !"

"காதலில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசிப்பதாக நினைத்தாலும் உண்மையில் அவர்கள் உருவம் கடந்த ஒரு பரிபூரணத்தைத்தான் நேசிக்கிறார்கள். அது அவர்களுக்கு அப்போது புரிவதில்லை. முழுமையின் ஒரு பகுதி ஆணாகவும் மறு பகுதி பெண்ணாகவும் வடிவெடுத்தது. முழுமை பெறவேண்டும் என்ற பசியும் தாகமும் அதற்கு அருளப்பட்டன. பிரிவின் வாடலும் இணைப்பின் சுகமுமே கலைகளின் ஊற்றுகண்ணாய் அமைந்தது..ஆணும் பெண்ணும் நேசிக்கத்தொடங்கிய அன்றுதான் கலைகள் பிறந்தன. அதுவரை கலைகள் உலகில் இல்லை..!"

சில சமயங்களில் வாகீசர் ஆதித்த சோழ தேவரை நினைவுபடுத்துகிறார். உணர்வுநிலைகடந்த ஒரு ஆவேசம் மகத்தான மனிதர்கள் அனைவருக்குமே வாய்த்துவிடும் போலும்.

"திருமணம் காதலின் பரவசத்தை வேறுதிசைகளில் திருப்பிவிடுகிறது... எனக்கோ இறுதிவரை அந்தத் தவிப்பும் தாகமும் தேவைப்பட்டன.... அவள் முழுமையின் வடிவமாய் என் மனத்திலேயே இருத்திவைக்க ஆசைப்பட்டேன்... அதனால்தான் திருமணமே செய்துகொள்ளவில்லை...."

அவருடைய அதிசயமான கவித்துவம்மிக்க காதலில் நானும் ஆழ்ந்து போனேன்.

"என்றாலும் அவளுடன் நான் குடும்பம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன்... அவள் என் மனதில் இருப்பதால் எப்போதும் அருகிலேயே இருக்கிறாள்... என்னுடைய வேலையை அருகிலிருந்து எப்போதும் பார்வையிட்டபடி இருக்கிறாள்.... அவ்வப்போது அரிய யோசனைகள் சொல்கிறாள்... சுருங்கச் சொன்னால் அவள் என் இருப்பின் எல்லாக் கணங்ளையும் நிறைக்கிறாள். அவளை நான் அடைவதுமில்லை, பிரிவதுமில்லை..."

"அந்த அதிசயக் காதலி இப்போது எங்கே இருக்கிறாள் ?"

"தூலவடிவில் அவள் காளிநீலி என்ற பெயரில் புள்ளமங்கலத்தில் சிலநாள் தங்கி வளர்ந்தாள். இப்போது அந்த வடிவம் மறைந்துவிட்டது. காற்றில் மட்டும்தான் அவளை இப்போது காணமுடியும்..."

எதற்காகவோ வாகீசர் கண்களில் நீர் துளிர்த்தது... என் கண்களிலும் தாங்க முடியாத ஒரு வேதனையில் கண்ணீர் பெருகியது... இதனைப் படிக்கும் உங்களுக்கும்கூட கண்களில் நீர் பனிக்கலாம்... இதற்கெல்லாம் யாராவது விளக்கம் சொல்ல முடியுமா என்ன ?

"காற்றில் இருப்பவளைக் காண எல்லோருக்கும் பக்குவம் இருக்காதே !"

வாகீசர் திடுக்கிட்டவர்போல் திரும்பி என்னையே சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்..."பக்குவம் இருக்காது.. ஆம், பக்குவம் இருக்காதுதான் !" என்பதுபோல் அவர் வாய் முணுமுணுத்தது.

"ஆஹா! என் கண்களைத் திறந்துவிட்டீர்கள் கிழாரே ! நான் இத்தனை நாட்களும் என்னவளை நான் மட்டும்தான் தரிசனம் செய்யவேண்டும் என்று சுயநலத்தோடு நினைத்திருந்தேன்.. அவளை வெளிஉலகிற்குக் காண்பிக்கும் நாள் வந்துவிட்டது !"

"புரியவில்லையே...!"

"கிழாரே - மேற்கே எழுந்தருளப்போகும் திருமாலின் இரு பக்கங்களிலும் இரு தேவியரை வைப்பதாய் கூறினேனல்லவா ? அதில் ஒரு தேவியை என்னவளின் வடிவமாய் எழுந்தருள வைப்பேன்.... காலகாலத்திற்கும் பூரணப் பெண்மையின் நிழலாய் அவர் கல்லில் நிரந்தரமாவாள் !"


***********************************************************************************************


எனக்கு உடம்பு வெகுவாக சீக்கடைந்து விட்டது. கோயில் பணியில் இடையறாது நின்றதால் கற்தூசை சுவாசித்து சுவாசித்து நுரையிரல் கெட்டுவிட்டதாய் வைத்தியர் தெரிவித்தார்.

படுத்த படுக்கையாகிவிட்டேன். வாகீசர் அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கிறார்.

எத்தனை நாட்கள் கழிந்தனவோ ?

ஒருநாள் பலத்த மேளதாள சப்தங்கள் கேட்டன... சக்கரவர்த்தியே இராஜகேசரிபுரத்திற்கு வந்திருப்பதாய்ச் சொன்னார்கள். சிறிது நேரத்தில் என் கட்டிலின் பக்கத்தில் பல குரல்கள் கேட்டன... கண்விழித்துப் பார்த்தால் - பராந்தக சோழர் !

"என்ன திருப்திதானே ?" என்று கேட்டார். இரவும் பகலும் நான் கோயிலைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதை அவர் எப்படி அறிந்துகொண்டார் ?

தொண்டையை எச்சில் விழுங்கி சற்றே ஈரப்படுத்திக் கொண்டேன்.."முழுத்திருப்தி ஐயா !"

"பணி முழுமையடைந்துவிட்டது. குடமுழுக்கிற்கு நல்லநாள் பார்க்கச் சொல்லியிருக்கிறேன். கல்வெட்டுக்களில் முதலாவதாக என் தந்தையாருடைய நிவந்தத்தையும் அடுத்தபடியாக உம்முடைய நிவந்தத்தையும் பொறிக்கச் சொல்லியிருக்கிறேன் !"

கைகூப்ப முயன்றேன். வேறு என்ன செய்வது ?

கூப்பிய கரங்களை பராந்தகர் கட்டிக்கொண்டார்.

"உங்களை ஒருமுறை கூட்டிக்கொண்டு வரும்படி வாகீசர் சொன்னார்... நடக்க இயலுமா ?"

கோயில் முழுமையடைந்துவிட்டது என்ற செய்தியே எனக்குள் புதிய தெம்மை கொடுத்திருந்தது. சற்று சிரமப்பட்டு எழுந்தேன்.


***********************************************************************************************


என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை -

இதுதான் நான் கனவிலும் கற்பனைகளிலும் இடையறாது தரிசித்த தளியா இது ?

அடடா - வார்த்தைகளுக்கெட்டாத கம்பீரமான செளந்தர்யம் ! அதை உங்களுக்கு என்னால் வர்ணிக்கவே முடியாது !

அதோ - அதிட்டானத்தின்மேல் விதவிதமான யாளிகள், மகரங்கள்... அவற்றின் வாயில் போரிடும் விதவிதமான வீரர்கள்....

அதோ - நான் கண்டு மெய்மறந்த ஆலமர் இறைவன்... அடடா - அவரைச் சுற்றிலும் எத்தனை வடிவங்கள்....

கோயிலை சுற்றி மேற்குப் பகுதியை அடைகிறேன்.

சங்கு சக்கரங்களுடன் திருமால். இருபக்கங்களிலும் கவரியுடன்.... இருங்கள், கவரியுடன் தெரிவது...கவரியுடன் தெரிவது உண்மையில் சிற்பங்களா, அல்லது சிற்பங்களைப்போல் உறைந்து நிற்கும் தேவகன்னிகைகளா ?

அதிலும் வலது கைப்புறம் தெரியும் பாவை.... திருமால் பக்கத்து தேவியரைப் பற்றி வாகீசர் சொன்னது நினைவுக்கு வந்தது.. அவளா இவள் ? அவளா இவள் ?

திடுக்கிட்டுப்போய் திரும்பினேன்... வாகீசர் !

"ஆம் ! நீங்கள் நினைப்பதுதான் சரி !" என்பதாக ஒருமுறை தலையை அசைத்தார்.

பூரணமான பெண்மை - திருக்கொருக்குத்துறை கருவறை மேற்குச்சுவரில் கவரிப் பெண்


ஆக இவள்தான் காளிநீலி...இல்லை, இல்லை... அந்தப் பெயரில் அந்த வடிவத்தில் பூமியில் அவதரித்த ஒரு பரிபூரணம்... அடடா.... அவளுடைய கண்களில் ஏன் எல்லையில்லாத சோகம் ? அப்படியே துயரம் நெஞ்சைப் பிழிகிறதே.....

வேண்டாம். அவள் ஏன் சோகமாய் இருக்கிறாள் என்று கேட்கவேண்டாம். அது படைப்பின் இரகசியம். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அல்லது காரணம் இல்லாமலே இருக்கலாம்.

அவள் பரிபூரணத்தின் பிரதிபிம்பம். அதுதான் முக்கியம்.

"அவளைப் பார்ப்பவர்கள் யாருமே அவளை நேசிக்காமல் இருக்க முடியாது.." என்று வாகீசர் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது.


***********************************************************************************************


கோயில் திருப்பணி நல்லவிதமாக முடிந்து நித்திய வழிபாடுகள் ஆரம்பமாகிவிட்டன. கூட்டங் கூட்டமாக ஆண்களும் பெண்களும் முதியவர்களும் சிறார்களுமாக காலை மாலைகளில் கூடிநின்று வழிபாடு செய்வதைப் பார்க்கையில் நெஞ்சில் எல்லையற்ற அமைதியும் நிறைவும் குடிகொண்டுவிடுகின்றன.

வாகீசன் என்ற மகாகலைஞனால் காலகாலத்திற்கும் நிற்கப்போகும் ஒரு மகோன்னதமான வடிவம் முழுமையடைந்துவிட்டது. அந்த வடிவம் உருவாவதிற்குக் காரணமானவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் என்னுடைய வாழ்க்கையும் நிறைவடைந்துவிட்டது. அர்த்தம்பெற்றுவிட்டது.

இனி எந்த எதிர்பார்ப்புகளோ தவிப்புக்களோ ஏக்கங்களோ எனக்கில்லை.

இந்த உலகிற்கு நன்றி. இங்கு வாழும் எல்லா உயிர்கட்கும் நன்றி.

வாழ்வின் ஆழங்களை உணரவைக்கும் கலாஇரசனையை மனதில் தோற்றுவித்த படைப்புக்கு நன்றி.

சோழதேசத்துக்கு நன்றி. அந்த தேசத்தை அணைத்துக்கொண்டு ஓடும் ஜீவநதியான காவிரிக்கு நன்றி. நான் பிறந்த மண்ணுக்கும் அதில் பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், குருவிகள், காய் கனிகள் அனைத்திற்கும் நன்றி.

கனி உதிர்வதற்கான காலம் கனிந்துவிட்டது.

அதோ - அந்திக் காற்றில் என் அத்யந்த தோழர் ஆதித்த சோழதேவரின் அழைப்பொலி கலந்து கரைந்து சங்கமித்துக் கேட்கிறது -

"தேவா ! எப்போது இங்கே வரப் போகிறாய் ?"

"விரைவில் கிளம்பிவிடுவேன் ஐயா !" என்று எனக்குள் முணுமுணுத்துக்கொள்கிறேன்.
கல்வெட்டுச் செய்தி
சீனிவாசநல்லூர்.

திருச்சி சேலம் சாலையில் முசிறி தாண்டியதும் வரும் சிறிய அழகான காவேரிக்கரை கிராமம். முக்கிய சாலையிலிருந்து சற்று ஒதுங்கி நிற்கும் குரங்குநாதர் கோயில் பராந்தக சோழர் காலத்துக் கலைப் பொக்கிஷம். காணக்காணத் திகட்டாத திரவியம்.

குரங்கநாதர் திருக்கோயில், சீனிவாசநல்லூர்


இந்தக் கோயிலில் கிடைத்துள்ள பல்வேறு கல்வெட்டுக்களின் அடிப்படையில்தான் உருவானதே இந்தக் கதை....

கதை என்றா சொன்னேன் ?

இந்தச் சம்பவங்கள் நடக்கும் மகேந்திர மங்கலம் நிஜம். கல்வெட்டுக்களில் ஸ்ர்நிவாசநல்லூர் இப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்பியன் கிழார் நாட்டுக்கோன் சர்ப்பதேவர் நிஜம். தன்னுடைய மகள் உமையாளுக்கு சீதனமாய்க் கொடுத்த நிலத்தின் பக்கத்திலிருந்த ஒரு மா நிலப்பரப்பை காளிநீலியின் பெயரில் விளக்குக் கொடையாக அளிக்கிறார் அவர்.அந்தக் கல்வெட்டு இன்றைக்கும் படிக்கும் நிலையில் உள்ளது.

இராஜகேசரிபுரம், மணலீடு நீக்கிய பெருவழி, புன்னை வாய்க்கால் - இவை அத்தனையுமே இந்தக் கோயிலின் பல்வேறு கல்வெட்டுக்களிலும் நிரந்தரமாகிப்போன நிஜங்கள்.

திருக்கொருக்குத்துறை மகாதேவர் கோயிலாக கல்வெட்டுக்கள் குறிக்கும் அந்தக் கற்றளி காலாகாலாத்துக்கும் இறவாத கலையை காத்து நிற்பது நிஜம்.

அப்புறம்....

கல்வெட்டுக்களில் இடம்பெறாவிட்டாலும் அந்த அமரச் சிற்பி வாகீசர்கூட நிஜம்தானாம். ஸ்ர்நிவாசநல்லூர் கோயிலை ஒருமுறை நேரில் சென்று தரிசித்துவிட்டு வந்தவர்கள் தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள் !this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.