http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 126

இதழ் 126
[ ஜனவரி 2016 ]


இந்த இதழில்..
In this Issue..

திருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை (பொ. கா. 500-1300) - 3
Someswara Shrine of Somur
Vijayalaya choleeswaram
தொல் பதுகைகள்
இதழ் எண். 126 > கலைக்கோவன் பக்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை (பொ. கா. 500-1300) - 3
இரா.கலைக்கோவன், மு.நளினி
கூரையுறுப்புகள்

உத்திரம், வாஜனம், வலபி, கூரையின் வெளிநீட்டலான கபோதம், பூமிதேசம் ஆகியவை கூரையுறுப்புகளில் அடங்கும். தாங்குதளத்தின் மீதெழும் சுவரை மூடும் இக்கூரையுறுப்பு களுக்கும் சுவருக்கும் இடையில் இணைப்பாக இருப்பவை போதிகைகள். அரைத்தூண்களின் வீரகண்டத்தில் அமரும் இவை தங்கள் கைகளால் கூரையுறுப்புகளில் முதலாவதான உத்திரத்தைத் தாங்குகின்றன. இக்கைகள் வளைமுகமாகவோ, விரிகோண அமைப்பிலோ அமைவது மரபு. காலந்தோறும் இப்போதிகைக் கைகளில் விளைந்த மாறுதல்களே கல்வெட்டு களற்ற கட்டுமானங்களின் காலத்தைக் கணிக்க உதவுகின்றன.

பல்லவர் காலத்தில் பரவலாகக் காணப்படும் தரங்கப் போதிகைகள் இம்மாவட்டத்திலும் (இலளிதாங்குரம் குடை வரை) இடம் பெற்றுள்ளன. முற்சோழர் கட்டுமானங்களில் இப்போதிகைகள் குளவு பெற்ற தரங்கக் கைகளுடன் (செந் துறை, கோபுரப்பட்டி, தவத்துறை) காட்சிதருகின்றன. குளவற்ற தரங்கக் கைகளைத் திருமங்கலம் பெற்றுள்ளது. இவ்விரு வகை யிலுமே கொடிக்கருக்குப் பட்டைகளையும் காணமுடிகிறது. முதலாம் இராஜராஜருக்கும் முதலாம் குலோத்துங்கருக்கும் இடைப்பட்ட கட்டுமானங்களில் (திருவாசி, குழுமணி) வெட்டுப் போதிகைகளைப் பார்க்க முடிகிறது. பிற்சோழர் கட்டுமானப் போதிகைகள் மதலையும் நாணுதலும் கொள்ள, நாணுதல் களில் பூமொட்டுக் காணப்படுகிறது (போசளீசுவரம்). இக்கால கட்டப் போதிகைகள் சில வெட்டுத் தரங்கக் கைகளுடனும் காட்டப்பட்டுள்ளன (சிலையாத்தி).

வலபி

உத்திரம், வாஜனம் எனும் இரண்டு கூரையுறுப்புகளும் பொதுவாக அலங்கரிப்பு ஏதும் பெறுவதில்லை. ஆனால், சிற்பி களின் கற்பனையாற்றலுக்கும் செய்திறனுக்கும் உகந்த களமாக வலபி அமைந்திருப்பதைப் பல கட்டுமானங்களில் காணமுடி கிறது. சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான சைவக் கோயில்கள் வலபியில் பூதவரி கொண்டுள்ளன. செழிப்பும் வளமையும் செறிவும் நிரம்பிய பூதவரிகளைத் தவத்துறை, நங்க வரம், அல்லூர், செந்துறை, பெருங்குடி, சோழமாதேவி, துடையூர் விமானங்களின் ஆதிதளங்களில் காணமுடிகிறது. தவத்துறை, அல்லூர், நங்கவரம் பூதவரிகள் குறிப்பிடத்தக்கவை. வயலூர்ப் பூதவரி வேறெங்கும் அமையாத இலிங்கோத்பவர் தொகுதி யைத் தன் மேற்குப் பகுதியில் கொண்டுள்ளமை சிறப்பாகும்.

இப்பூதவரிகளில் அவை அமைந்த காலகட்டம் சார்ந்த இசைக்கருவிகள், ஆடல் வகைகள், போர்க்கருவிகள், போர் முறைகள், விலங்குகள், மானுட வாழ்க்கையின் பாலுணர்வு உள்ளிட்ட பல்வேறுவிதமான உணர்வு வெளிப்பாடுகள், தலை யலங்காரம் உள்ளிட்ட ஒப்பனைகள், ஆடையணிகலன்கள், விளையாட்டுகள், உறவுமுறைகள், தண்டனைகள், சமயச் சிந்தனைகள் எனும் பல்வேறு விதமான சமுதாயப் பதிவுகளைச் சோழச் சிற்பாசிரியர்கள் மிகுந்த நுண்மாண் நுழைபுலத் துடன், வரலாற்றுக் கண்ணோட்டம் கொண்டு செதுக்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கோயில்கள் பத்திமைப் பூச்சுடன் உருவான வரலாற்றுக் களங்கள் என்பதை இப்பூத வரிகள் ஐயத்திற்கிடமின்றி நிறுவுகின்றன.

அனைத்துக் கோயில்களிலும் இடம்பெற்றுள்ள கபோதம் இயல்பான கொடிக்கருக்கு அழகூட்டல்களுடன் காட்சிதந்த போதிலும், அதன் கூடுகளில் குறிப்பிடத்தக்க சிற்பப் பதிவுகள் இன்மையைச் சுட்டவேண்டும். ஒரு சில இடங்களில் சந்திர மண்டலப் பதிவைக் காணமுடிகிறது. மிகை அலங்கரிப்பும் கூடுகளில் மனிதத் தலைகள் உள்ளிட்ட சிற்பப் பதிவுகளும் குழலூதும்பிள்ளைக் கோயில் விமானத்தில் இடம்பெற்றுள் ளன. கபோதத்தின் கர்ணபத்திகளில் அமையும் நேத்ர நாசிகைகளை அல்லூர், செந்துறை, நங்கவரம், சோழமாதேவி உள்ளிட்ட மிகச் சில கோயில்களிலேயே காணமுடிகிறது.

ஆதிதள வகைகள்

வேசர, திராவிட, தூங்கானைமாட ஆதிதளங்கள் பெற்ற முதன்மை விமானங்கள் இம்மாவட்டக் கோயில்களில் இல்லை. பெரும்பான்மையான ஆதிதளங்கள் நாகரமாக அமைய, பெருமாளின் படுத்த திருக்கோலம் கொண்டுள்ள திருவரங்கம் உள்ளிட்ட ஆதிதளங்கள் சாலை அமைப்பில் உள்ளன. சாந்தாரம் பெற்ற ஒரே ஆதிதளமாகப் பல்லவர் காலத் திருப்பட்டூர் விமானம் இலங்க, திருநடைமாளிகை கொண்ட ஆதிதளங்களை நெடுங்களம், எறும்பியூர், உய்யக்கொண்டான் திருமலை, பைஞ்ஞீலி ஆகிய இடங்களில் காணமுடிகிறது.

ஒரு தளமும் பல் தளமும்

சோழர் கால விமானங்களில் ஆதிதளம் மட்டுமே பெற்று மேலே கிரீவம், சிகரம், தூபி கொண்டு ஒருதள ஆறங்க விமானங்களாகக் காட்சி தருபவையும் (எறும்பியூர், துடையூர், தவத்துறை, பெருமுடி, வயலூர், இடையாற்றுமங்கலம், அல்லூர் முதலியன), ஆதிதளத்திற்கு மேலே மற்றொரு தளம் பெற்று அதன்மீது கிரீவம், சிகரம், தூபி அமைய இருதள எண்ணங்க விமானங்களாகக் காட்சிதருவனவும் (செந்துறை, சோழமா தேவி, குழுமணி, நங்கவரம், திருவாசி, திருமங்கலம், சீனிவாச நல்லூர் முதலியன) ஏறத்தாழ ஒரே விகிதத்தில் உள்ளன. போசளீசுவரம், வெள்ளூர்க் காமீசுவரம், நகர், உறையூர்ப் பஞ்ச வர்ணேசுவரம் முதலிய சிலவிமானங்களே முத்தளங்கள் கொண்டுள்ளன. இம்மாவட்டத்தின் உயரமான ஒரே விமான மாகப் பல்லவர் கலைப்பணியான திருப்பட்டூர்க் கயிலாசநாதர் நான்கு தளங்களுடன் முன்னணியில் நிற்கிறது.

விமானத்தின் ஆதிதளமும் அதன் மேலமையும் மேல் உறுப்புகளும் ஒரே வகையின எனில் அவ்விமானம் தூயதாக வும் ஆதிதளமும் மேலுறுப்புகளும் மாறுபட்ட வகையில் அமையின் அவ்விமானம் கலப்பினத்ததாகவும் கொள்ளப்படும். இம்மாவட்டத்தில் தூய வகையினவாக நாகர விமானங்கi யும் (செந்துறை, உய்யக்கொண்டான் திருமலை, வயலூர், சீனிவாச நல்லூர் முதலியன) சாலை விமானங்களையும் (நத்தம், அன்பில், திருவரங்கம்) மட்டுமே காணமுடிகிறது. கலப்பு வகைகளில் வேசரம் (அல்லூர், தவத்துறை, இடையாற்றுமங்கலம், பெரு முடி, குழுமணி, நங்கவரம், எறும்பியூர் முதலியன) மிகுதியாகவும் திராவிடம் (நெடுங்களம், துடையூர், அலகறை, சிலையாத்தி, திருமங்கலம், நகர் முதலியன) அடுத்த நிலையிலும் உள்ளன.

விமானத்தின் மேற்றளங்கள் பெரும்பாலான கட்டுமானங் களில் ஒன்று போலச் சிறப்புக் கூறுகள் ஏதுமின்றி அமைந் திருந்தாலும், சிலவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண முடிகிறது. செந்துறை இரண்டாம் தளம் விருத்த ஸ்புடிதங் களைக் கொண்டுள்ளது. இது இடைச்சோழர் கட்டுமானங்களி லும் (திருவையாற்றுத் தென்கயிலாயம்) காணப்படும் பல்லவக் கலைமரபின் தொடரிழையாகும். சீனிவாசநல்லூரில் இரண்டாம் தளம் முதல்தள ஆரத்திலிருந்து நன்கு உள்தள்ளி சுற்று வழிப் பெற்று அமைந்துள்ளது. விமான ஆதிதளத்தில் சாந்தாரம் இல் லாதபோதும் அதன் அனர்பித ஆரத்தின் விளைவாக இச்சுற்று வழி ஏற்பட்டுள்ளமையும், இந்த இரண்டாம் தளம் பல்லவ மரபுகளைப் பின்பற்றிச் சுவர்ப் பஞ்சரங்களைக் கொண்டுள் ளமையும் குறிப்பிடத்தக்கன.

திருப்பட்டூர்க் கயிலாசநாதர் கோயில் இது போல் சுற்று வழிப் பெற்ற இரண்டாம் தளம் கொண்டிருப்பினும், அத்தளத் தில் பஞ்சரங்கள் இடம்பெறாமையும், தளச்சுவர் சீனிவாச நல்லூர் போல் நெடிதாக அமையாமையும், விமானத்தின் ஆதி தளம் சீனிவாசநல்லூர் போலன்றிச் சாந்தாரம் பெற்றுள்ளமை யும் எண்ணத்தக்கன. திருவாசி, முசிறி, குழுமணி முதலிய வற்றின் இரண்டாம் தளம் அவற்றின் ஆறங்க ஆரம் காரண மாக நெடுமை பெற்றுச் சிறக்கின்றன.

பெரும்பாலான இருதள, முத்தள விமானங்களில் ஆதி தளம் தவிர, ஏனைய தளங்கள் செங்கல் கட்டுமானமாகவே உள்ளபோதும் திருப்பட்டூர்க் கயிலாசநாதர் கோயில் முழுமை யும் மணற்கல்லாலான தளங்கள் பெற்றுள்ளது.


திருத்தவத்துறை - கிரீவமும் சிகரமும்



திருவாசி - ஆரமும் இரண்டாம் தளமும்



செந்துறை - ஆரமும் இரண்டாம் தளமும்



பெருங்குடி - கிரீவத்தில் முருகன்


கிரீவம், சிகரம், தூபி

முதன்மை விமானங்களின் கிரீவம், சிகரம் இரண்டும் வேசரம், நாகரம், திராவிடம், சாலை எனப் பல்வேறு வடிவின வாக உள்ளன. தூங்கானைமாட அமைப்புப் பெற்ற முதன்மை விமானம் இம்மாவட்டத்தில் இடம்பெறாத போதும், துணை விமானங்கள் சில அவ்வமைப்புக் கொண்டுள்ளமையைக் காண முடிகிறது (நங்கவரம்). அனைத்து கிரீவங்களும் சுவர், கூரை யுறுப்புகள் கொண்டு அமைய, சிகரம் அதை மூடும் விதமாக எளிமையாகவோ, அலங்கரிப்புகளுடனோ உருவாக்கப்பட்டுள் ளது. சில கிரீவங்கள் முதன்மைத் திசைகளில் மட்டும் கோட்டங் கள் பெற, ஏனையன எட்டுத் திசைகளிலும் கோட்டங்கள் கொண்டுள்ளன.

முதன்மைத் திசைக் கோட்டங்கள் அனைத்து கிரீவங்களி லும் பேரளவினதாக அமைய, கோணத்திசைக் கோட்டங்கள் அளவில் சிறியனவாக வடி வமைக்கப்பட்டுள்ளன. மிகச் சில கிரீவ சுவர்களே சிற்பங்கள் பெற்றுள்ளன (அல்லூர், செந் துறை, தவத்துறை, திருவாசி, உய்யக்கொண்டான் திருமலை, முசிறி முதலியன). அவற்றுள் பெரும்பான்மையன எண்திசைக் காவலர் சிற்பங்களாக அமைய, செந்துறையில் மட்டும் ஆடல் தொகுதிகளைக் காண முடிகிறது. சில கிரீவ வலபிகள் பூதவரி (தவத்துறை, நங்கவரம்), அன்னவரி (பெருங்குடி, எறும்பியூர்), மதலைவரி (அலகறை, இடையாற்றுமங்கலம்) இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருந்தபோதும் சில வெறுமையாக (வெள்ளூர், எட்டரை, சிலையாத்தி முதலியன) உள்ளமையையும் பார்க்க முடிகிறது.

சீனிவாசநல்லூர் தவிர்த்த பிற அனைத்து விமானங் களிலும் கிரீவம் எழும் தளக்கூரையின் நான்கு மூலைகளிலும் வேதிகை மீது அமர்ந்த நிலையில் நந்திகள் காட்டப்பட்டுள் ளன. குழலூதும்பிள்ளைக் கோயில் நந்திக்கு மாற்றாகச் சிம்மம் கொண்டுள்ளது. திருவாசி விமானத்தில் வேறெங்கும் இல்லாக் காட்சியாக கிரீவம் அமரும் தளத்தின் நான்கு மூலைகளிலும் கர்ணகூடங்கள் இருத்தப்பட்டுள்ளன. கிரீவகோட்டங்களில் சிற்பங்கள் இல்லாத விமானங்களாக சீனிவாசநல்லூர், நெடுங் களம் ஆகியவற்றைக் குறிக்கலாம். ஏனைய அனைத்து விமானங் களிலும் கருங்கற் சிற்பமாகவோ (பெருங்குடி, வெள்ளூர், செந் துறை முதலியன) சுதை உருவமாகவோ (குழுமணி, நங்கவரம், திருவாசி முதலியன) இறை வடிவங்கள் உள்ளன.

தெற்கில் ஆலமர்அண்ணலும், வடக்கில் நான்முகனும் மேற்கில் விஷ்ணுவும் இக்கோட்டங்களில் இடம்பெற, கிழக்கில் உமாசகிதர், முருகன் முதலிய இறைவடிவங்களைக் காணமுடி கிறது. பெருங்குடி, காமீசுவரம் கிரீவகோட்டச் சிற்பங்கள் இணையற்ற எழிலின. கிரீவ, சிகர அமைப்பில் வேசர வடிவமே விரும்பிக் கொள்ளப்பட்டுள்ளது. இது நாகர, திராவிட வடிவ கிரீவங்களைப் போல் மும்மடங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்

ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் பெற்றமையும் விமானங் களில், கிரீவம் அமரும் தளம் தவிர, ஏனைய தளக் கூரைகளில் நாற்புறத்தும் மாலை போல் தொடர்ந்தமையும் கட்டுமானமே ஆரம் என்றழைக்கப்படும். இது ஆரஉறுப்புகள், அவற்றை இணைக்கும் குறுஞ்சுவர் என இரண்டு வகைப்படும். ஆர உறுப்புகளில் தளத்தின் மூலைகளில் அமைவன கர்ணகூடங் கள் என்றும் அவற்றுக்கு இடைப்பட்டு அமைவன சாலைகள் என்றும் அறியப்படும். அவற்றை இணைக்கும் குறுஞ்சுவர் ஆரச்சுவராகும்.

மிகச் சில விமானங்களில் கர்ணகூடங்களுக்கும் சாலை களுக்கும் இடைப்பட்டுப் பஞ்சரம் என்னும் ஆரஉறுப்பும் இடம் பெறுவதுண்டு (திருவாசி). இவ்ஆரஉறுப்புகளிலும் ஆரச்சுவரி லும் அமையும் நாசிகைகள் சிற்பங்கள் ஏற்பதுண்டு. பெரும்பா லான ஆரங்களில் சாலைகள் மட்டுமே சிற்பங்கள் (குழுமணி) கொள்ளும் எனினும், சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆரம் முழுமையும் சிற்பங்கள் பெற்ற கட்டுமானங்களையே அதிக அளவில் காணமுடிகிறது (நங்கவரம், முசிறி, திருமங்கலம், செந் துறை, திருவாசி முதலியன). சாலைகள், கர்ணகூடுகள் மட்டும் சிற்பம் கொள்ள, ஆரச்சுவர் வெறுமையாக உள்ள விமானங் களும் இங்குள்ளன (சோழமாதேவி).

ஆரத்தை ஆறங்க ஆரமாக அமைத்திடும் பாங்கு பல்லவர் பணிகளிலேயே தொடங்கிவிடுகிறது (திருப்பட்டூர்). இம்மரபு தொடர்ந்து பிற்சோழர் காலம்வரை பின்பற்றப் பட்டமை சிராப்பள்ளி மாவட்டத்தின் பல விமானங்கள் வழி உறுதிப் படுத்தப்பட்டுள்ளது (குழுமணி, அன்பில், வெள்ளூர், திருவாசி, முசிறி, போசளீசுவரம் முதலியன). செந்துறையில் சாலைகள் மட்டும் ஆறங்கம் பெற்றுத் தனித்து நிற்கின்றன. சிறப்பான ஆரச்சிற்பங்களைச் செந்துறை பெற்றுள்ளது.

மாடக்கோயில்கள்

தமிழ்நாட்டின் மிகச் சில மாவட்டங்களிலேயே காணப் படும் மாடக்கோயில்கள் சிராப்பள்ளி மாவட்டத்திலும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்குள்ள இரண்டு மாடக் கோயில்களுமே வைணவச் சார்புடையவை; பல்லவர் காலக் கட்டமைப்பு எச்சங்களைக் கொண்டுள்ளவை. ஆலம்பாக்கம் மாடக்கோயிலின் வெற்றுத் தளம் பக்கத்திற்கு ஏழு பத்திகள் கொண்டது. அவற்றுள் சாலைப்பத்திகள் கோட்டங்கள் கொண்டு நெடிய சிற்பங்களைப் பெற்றுள்ளன. இம்மாவட்டத் தில் ஏழு பத்திகள் கொண்டமைந்த ஒரே கட்டுமானம் இது தான். இதன் விமானம் ஐந்து பத்திகள் கொண்டது.

திருவெள்ளறை புண்டரிகாட்சப் பெருமாள் மாடக்கோயில் திருப்பணிகளுக்கு ஆட்பட்டிருந்தபோதும் பல்லவர் காலச் சிற்பங்களை வெற்றுத்தளத்தின் துணைத்தளத்தில் காப்பாற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஒருதள விமானத் தின் சிகரம் திருப்பணிகளின் காரணமாக முழுமையான சாலை யாக அமையாமல் வேசர வடிவும் சாலையமைப்பும் கலந்த கலவையாகக் காட்சிதருகிறது. உய்யக்கொண்டான் திருமலை வளாகத்தில் இறைவன், இறைவி திருமுன்களுக்கு முன்னுள்ள மண்டப அமைப்புகள் மாடக்கோயில் அமைப்பில் கட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புக்கூறுகள்

சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலையின் சிறப்புக்கூறுகளாகப் பலவற்றைச் சுட்டமுடியும். குறிப்பாகச் சுவர்ப்பங்கீடு இங்குள்ள பல்லவர் கட்டுமானங்களில் உச்சத் தைத் தொட்டுள்ளதாகக் கூறலாம். ஏழு பத்திகள் கொண்ட ஆலம்பாக்கம் மாடமேற்றளியின் தளக் கட்டுமானம் இம்மாவட் டத்தின் தலையாய சிறப்புக்கூறாகும். மிக அரிதாகவே பழங் கட்டுமானங்களில் (காஞ்சிபுரம் வைகுந்தப்பெருமாள் கோயில்) இந்த எண்ணிக்கையிலான பத்திப் பிரிப்புகளைக் காணமுடி கிறது.

சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரையின் பின்சுவர்ப் பகிர்வும் தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரையிலும் பார்க்கமுடியாத நேர்த்தி எனலாம். ஏறத்தாழ ஒரே அகலமும் உயரமும் கொண்ட நெடுமையான ஐந்து கோட்டங்கள் தமிழ்நாட்டின் ஐம்பெரும் இறைவடிவங்களை ஒரு நிலையில் காட்ட அகழப்பட்டுள் ளமை கீழ்க் குடைவரையின் இணையற்ற சிறப்பாகும். இக்குடை வரையின் கட்டமைப்பும் அதன் அளவிற்கும் கம்பீரத்திற்கும் ஏற்பத் திட்டமிடப்பட்டுள்ள சிற்பப் பகிர்வும் தமிழ்நாட்டில் மிகச் சில குடைவரைகளிலேயே காணக்கிடைக்கும் காட்சி களாம். பைஞ்ஞீலி சோமாஸ்கந்தர் பொ. கா. 8ஆம் நூற்றாண் டில் உருவான தமிழ்நாட்டுக் குடைவரைச் சிற்பங்களில் குறிப் பிடத்தக்கதாகும். இதன் ஊரகத்தன்மை பல்லவர் பகுதியிலோ, சமகாலப் பாண்டியர் பகுதியிலோ காணமுடியாத சிறப்பாகும்.

கற்றளிகளில் திருப்பட்டூர், சீனிவாசநல்லூர், தவத்துறை ஆகிய மூன்றுமே பல சிறப்புக்கூறுகளை வெளிப்படுத்துவன வாக அமைந்துள்ளன. திருப்பட்டூர்க் கயிலாசநாதர் கோயில் காஞ்சிபுரம் கயிலாசநாதர், வைகுந்தப்பெருமாள் விமானங் களுக்கு இணையாக நான்கு தளங்களுடன் உயர்ந்துள்ளமை அதன் சிறப்பாகும். சாந்தாரத்தில் சாளரங்கள் பெற்றுள்ள ஒரே பல்லவ விமானம் இது என்பது கூடுதல் சிறப்பு.

சிறிய ஒருதள விமானமாக அமைந்திருந்தபோதும் தவத்துறை இரண்டு விதங்களில் தனித்துவம் பெறுகிறது. அதன் பத்மபந்தத் தாங்குதளத்தின் நடைபயிலும் விலங்குருவப் பிரதி வரி முற்சோழர் கட்டுமானங்களில் காணமுடியாத அமைப்பா கும். தாங்குதளத்தை முதன்மைப்படுத்தி அது நோக்கிக் கண் களை ஈர்க்கும் இப்பிரதிவரி விமானத்துக்கு மிகுந்த கவர்ச்சியை யும் கம்பீரத்தை யும் தருவதுடன் சிற்பிகளின் புதுமை அவாவும் போக்கிற்கும் சான்றாகி நிற்கிறது. தமிழ்நாட்டின் மிகச் சில விமானங்களிலேயே அனைத்துக் கோட்ட இறைவடிவங்களும் சிவபெருமானின் மாறுபட்ட தோற்றங்களாகவே அமைந்துள் ளன. தவத்துறை அவற்றுள் ஒன்றாய் விளங்குவதும் அதன் சிறப்புக்கூறாய்ப் பொலிகிறது.

சீனிவாசநல்லூர்க் குரங்கநாதர் விமானத்தின் பத்திப் பிரிப்பும் சுவர் அலங்கரிப்பும் குறிப்பிடத்தக்க பல்லவ, சோழ விமானங்களில் காணப்படுபவைதான் என்றாலும், ஒடுக்கங் களில் அது பெற்றுள்ள சிற்பங்கள் தனித்தன்மையனவாகவும் பேரெழில் படைத்தனவாகவும் விளங்குவதைக் கருதவேண்டும். தெற்கிலுள்ள கைகட்டி அடியவரும் மேற்கிலுள்ள கவரிப் பிணாக்களும் தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் காண முடியாத சிற்ப அற்புதங்கள். இந்த விமானத்தின் தொங்கல், கட்டுச் சிற்பங்களும் சிறப்பானவை. மகப்பேறு தொடர் தனித்துவமானது. வேறெங்கும் இடம்பெறாதது. வயலூர் வலபியில் காணப்பெறும் இலிங்கோத்பவர் தொகுதி வேறெந்த முற்சோழர் விமான வலபியிலும் அறியப்படவில்லை.

சாலைக் கோட்டச் சிற்பமாக சிவபெருமானின் 108 கரணங் களுள் ஒன்றான ஊர்த்வஜாநு இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழ் நாட்டுக் கற்றளியாகத் திருப்பட்டூர்க் கயிலாசநாதர் கோயில் உயர்கிறது. துணைத்தளக் கண்டபாதங்களில் இராமாயணச் சிற்பத்தொடர் பெற்ற இரண்டே தமிழ்நாட்டு விமானங்களில் திருமங்கலம் ஒன்றென்பது அதன் சிறப்புக்கூறாக மிளிர்கிறது. பல்லவச் சிற்பத்தொடர் பெற்ற ஒரே துணைத்தளக் கண்டபாத விமானமாக வெள்ளறைப் புண்டரிகாட்சர் பெருமை கொள் கிறார். பல்லவர்ப் படைப்புகளில் குடக்கூத்தைக் காணமுடிவ தும் இங்கு மட்டுமே.

கோயிற் கட்டடக்கலை எந்த மண்ணிலும் அதன் சாரம் பெறாமல் பிறப்பதும் இல்லை, வளர்வதும் இல்லை. மண் சார்ந்த எதிரொலிப்புகளே அதனின்று விளையும் ஒவ்வொரு கட்டுமானத்திலும் சமயப் பூச்சுடன் பதிவாகின்றன. கட்டுமான உறுப்பானாலும் சிற்பக் காட்சியானாலும் சமுதாயச் சார்புகளே தனித்துவங்களை உருவாக்குகின்றன. பார்வைகள் விரியும்போது படைப்புகள் நிலைப்படுவதும் அதனால்தான்.

(நிறைவடைந்தது)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.