![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 10
![]() இதழ் 10 [ ஏப்ரல் 15 - மே 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
கட்டிடக்கலை ஆய்வு
வரலாற்றிலேயே முதன் முறையாக முதலாம் மகேந்திரவர்மர் குடைவரைகளை அமைக்க ஆரம்பித்தபோது, அப்போது வழக்கிலிருந்த செங்கல், மரம், உலோகம் மற்றும் சுதை ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்ட வடிவிலேயே வடித்தார். குடைவரைக்கும் ஒற்றைக்கல் தளிக்கும் கட்டுமானத்தளிகளைப் போல அஸ்திவாரம் அமைக்கத் தேவையில்லை. நேரடியாகத் தரைப்பரப்பைச் சமன்படுத்த ஆரம்பித்து விடலாம்தான். ஆனாலும் கட்டுமானத்தை உயர்த்திக் காண்பிக்கப் பயன்படும் தாங்குதளத்தை அமைத்திருக்கிறார். வழக்கத்திலிருக்கும் ஆலயத்தைப் போன்ற உணர்வு வரவேண்டும் என்பதற்காக அவ்வாறு வடித்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா எனத் தெரியவில்லை. அதேபோலத்தான் போதிகை என்னும் உறுப்பும். போதிகை என்பது தூண் உத்தரத்துடன் இணையும் பகுதியில் இருக்கும் உறுப்பு.
மரத்தாலான உத்தரங்களை மரத்தூண்களோ செங்கற்தூண்களோ தாங்கும்போது, இரண்டும் இணையும் T சந்திப்பில் அழுத்தம் அதிகமாக இருக்கும். சிறிது காலத்துக்குப் பிறகு உத்தரத்தில் விரிசல் ஏற்பட்டு உடையவும் வாய்ப்புண்டு. கட்டுமானங்களைக் கட்ட ஆரம்பித்த காலங்களில் இத்தகைய சிக்கலைச் சந்திக்க நேர்ந்த கட்டடப் பொறியாளர்களுக்குத் தோன்றிய தீர்வே போதிகை. அதாவது, கூம்பு போன்ற ஒரு உறுப்பைப் பயன்படுத்தி, இந்த T சந்திப்பின் பரப்பை அதிகப்படுத்தினால், அழுத்தம் பரவலாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு, உத்தரம் உடையாமலிருக்கும். இந்த நுட்பம் இப்போது வேண்டுமானால் நமக்கு எளிதாகத் தோன்றலாம். ஆனால், இன்று வல்லரசாக இருக்கும் பல நாடுகள் உலக வரைபடத்தில் இடம்பெறாத காலத்திலேயே இப்படிப்பட்ட சிக்கலுக்கு இப்படி ஒரு தீர்வு இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்த நம் முன்னோர்களுக்கு எப்படிப்பட்ட ஒரு சிந்தனை வளர்ச்சி இருந்திருக்க வேண்டும்? தமிழர்களின் கட்டடக்கலை அறிவை வியக்க இதைக் காட்டிலும் வேறு சான்று வேண்டுமோ? ![]() இது மட்டுமல்ல. இந்தப் போதிகை உத்தரத்தைத் தாங்கும் இந்த அரிய பணியை மட்டுமின்றி, மற்றொரு முக்கியமான பணியையும் சிரமேற்கொண்டுள்ளது. அதுதான் நம் கட்டுரையின் நோக்கத்துக்கு உதவி செய்வது. ஆம். கட்டுமானத்தின் காலத்தைக் கணிப்பதில் இப்போதிகையின் பங்கு மகத்தானது. மகேந்திரர் மண்டகப்பட்டில் முதல் குடைவரையை அமைத்தபோது, வழக்கத்திலிருந்தது மேலேயுள்ள படத்தில் காட்டப்பட்டிருக்கும் மூன்றாவது வளைந்த எளிய போதிகையாகத்தான் இருந்திருக்கும். ![]() எத்தனை காலத்துக்குத்தான் போதிகையை ஒரே மாதிரியாக எளிமையாக வடித்துக் கொண்டிருப்பது? இதில் சில புதுமைகளைப் புகுத்தினால் என்ன? என்ற சிந்தனை நிச்சயம் விசித்திரசித்தருக்குத் தோன்றாமலிருந்திருக்க முடியாது. ஏனெனில், போதிகையின் பல்வேறு அவதாரங்களுக்குச் சொந்தக்காரர் அவர்தான். ஒரு கால் வட்ட வடிவமான உறுப்பில் வேறு என்னதான் புதுமையைப் புகுத்தி விடமுடியும்? சற்றுப் பிசகினாலும், கால் வட்டம் முக்கோணமாகிவிடும். அந்த வட்டவடிவிலான மேற்பரப்பில் தரங்கங்களை (அலைகளை) அறிமுகப்படுத்தினார். கீழே உள்ள படத்தில் இருப்பது போல. ![]() தரங்கம் மட்டும்தான் வைக்க முடியுமா? இன்னும் என்னவெல்லாம் செய்கிறேன் பார்! என்று யாருக்கோ சவால் விட்டுச் செய்தாற்போல் சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவரகிருகத்திலும் தளவானூர் சத்ருமல்லேசுவராலயத்திலும் தரங்கங்களுக்கு நடுவில் மேலிருந்து கீழாக ஒரு பட்டையைப் புகுத்தி, அதில் கொடிக்கருக்குகளை அழகுற வடித்தார். ![]() ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்பது போல, ஏழு குடைவரைகளிலேயே எத்தனை புதுமைகள்! மாற்றங்கள்! விசித்திரசித்தர் என்ற பெயர் வேறு யாருக்குப் பொருந்தும்? அவருக்குப்பின் வந்த இராஜசிம்மர், போன்ற பிற பல்லவ மன்னர்கள் காலத்தில் கோயிற் கட்டுமான முறைகளில் பல அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், போதிகை எந்தவொரு மாறுதலையும் பெறாமல், முதலாம் ஆதித்தர் மற்றும் முதலாம் பராந்தகருக்காகக் காத்திருந்தது. இவர்கள் இருவரையும் கோயிற்கட்டடக்கலை வரலாற்றில் புரட்சிக்காரர்கள் எனக் கூறலாம். செங்கற்றளிகளைக் கருங்கற்றளிகளாக மாற்றிய புரட்சியால் மட்டுமன்று. தரங்கப்போதிகையிலிருக்கும் ஒரு தரங்கத்தையே புரட்டிப்போட்டதாலும்தான். அவர்கள் காலத்தில்தான், குழவுடன் கூடிய தரங்கப்போதிகை அறிமுகப்படுத்தப்பட்டது. குழவு என்பது வேறொன்றுமில்லை. தரங்கத்தின் வளைந்த பரப்பு கீழ் நோக்கி இருப்பதற்குப் பதிலாக, புரட்டிப்போட்டாற்போல் மேல் நோக்கி இருப்பதுதான். நடுவிலுள்ள ஒரேயொரு அலை மட்டும் இவ்வாறு இருக்கும். கீழேயுள்ள படம் தெளிவாகப் புரியவைக்கும். ![]() இக்குழவுடன் கூடிய தரங்கப்போதிகையைப் பார்த்தாலே போதும் கண்ணை மூடிக்கொண்டு (போதிகையைப் பார்த்த பிறகுதான்) முற்காலச் சோழர் காலத்திய கட்டுமானம் என்று கூறிவிடலாம். செங்கற்றளிகளைக் கருங்கற்றளிகளாக மாற்றியவர்களையே புரட்சியாளர்கள் என்று சொன்னால், என்றும் அழியாப்புகழ் பெற்ற பிரம்மாண்டமான இராஜராஜீசுவரத்தை மனதில் உருவகித்து வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டிய நித்தவினோதரை என்னவென்று சொல்வது? போதிகையின் பரிணாம வளர்ச்சிக்கு அவரது பங்களிப்புதான் வெட்டுப்போதிகை. பட்டையுடன் கூடிய தரங்கப்போதிகையிலிருந்த தரங்கத்தை நீக்கி விட்டு, பட்டையைச் சற்று வெளியே நீட்டிச் சிறு முக்கோணம் போல மாற்றினார். ![]() முதலாம் இராஜராஜருக்குப்பின் சில காலம் வரை இப்போதிகையே நீடித்தது. அதே சமயம் மற்ற போதிகைகளும் இடம் பெற்றபடியேதான் இருந்தன. வெட்டுப்போதிகையின் வெறுமையாக இருந்த பகுதியில் இரண்டாம் இராஜராஜர் நீலோத்பல மலர் போன்ற அலங்காரம் செய்தார். பிறகு அதுவே செதுக்கப்பட்டு மேல்நோக்கியுள்ள மலர் போல் ஆனது. சிறு முக்கோணமாக வெளியே நீட்டிக்கொண்டிருந்த வெட்டு, சிறு குமிழ் போல மாறத் தொடங்கியது. ![]() இவர் எழுப்பிய தாராசுரத்தில் இத்தகைய போதிகையைக் காணலாம். இந்தப் பூமொட்டுப்போதிகையின் முனை, ஒரு சிறிய குமிழ் போல இருந்தால் அதை இரண்டாம் இராஜராஜர் அல்லது அவருக்குப் பிற்காலம் என உறுதியாகக் கூறலாம். இந்த மேல்நோக்கிய மலரை மதலை எனவும் கீழ்நோக்கிய மலரை நாணுதல் எனவும் கூறலாம். இதன் மேம்பட்ட வடிவத்தை மேலைக்கடம்பூரில் காணலாம். ![]() வெட்டு பூமொட்டாக மலரும்போது, சிறு மொட்டு பெரிதாக வளராமல் இருக்குமா? சோழர்களின் பிற்காலத்தில் அதாவது மூன்றாம் குலோத்துங்கர் மற்றும் மூன்றாம் இராஜராஜர் காலத்தில் வளர்ந்தது. இவையே விஜயநகர மன்னர்கள் காலத்தில் மாங்கனி அளவுக்கு வளர்ந்திருந்தது. ![]() வழக்கமாக, ஒரு காலகட்டத்தில் வழக்கிலிருக்கும் கட்டட அமைதி, பரிணாம வளர்ச்சிப் பாதையில் அடுத்த கட்டத்தை அடையும்போது, அதன் ஏதாவது ஒரு பகுதி மாற்றம் பெறுவது மரபு. ஆனால் பூமொட்டுப் போதிகைக்கு அடுத்த கட்டமான தரங்கத்துடன் கூடிய வெட்டுப்போதிகை சிறிதும் தொடர்பில்லாமல் இருக்கிறது. அருள்மொழிவர்மன் என்ன செய்தாலும், அதற்கு எதிராகவோ அல்லது மேலே ஒருபடி போய் அதிகமாகவோ ஏதாவது செய்யும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் சதியாகத்தான் இருக்கும் என்பது எனது கற்பனை. அவர் தரங்கத்தை நீக்கிவிட்டு வெட்டை அமைத்தார் என்றால், இவர்கள் தரங்கத்துடனேயே வெட்டை அமைத்தனர் அல்லது வெட்டுப் போதிகையில் தரங்கத்தைப் புகுத்தினர். ![]() இதற்கு மேல் போதிகை எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தையும் பெறவில்லை. இன்றைக்கு இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கட்டப்படும் கோயில்களிலும் இவற்றில் ஏதாவது ஒரு போதிகையை அமைப்பது வழக்கம். அதற்காக, அக்கோயில்களை அந்தந்த மன்னர்கள் கட்டினர் என்று கூறுவது பொருந்தாதல்லவா? ஆகவே, போதிகையைப் பொறுத்துக் காலத்தைக் கணிக்கும்போது, அந்தந்த மன்னர் அல்லது அவர்களுக்குப் பிறகு வந்தவர்களின் காலம் எனக் கூறுவதே சரியானதாகும். உதாரணமாக, வெட்டுப்போதிகை உள்ள ஒரு கட்டுமானத்தை, இது முதலாம் இராஜராஜர் அல்லது முதலாம் இராஜேந்திரர் காலம் அல்லது அதற்குப் பிந்தையது எனக் கூறவேண்டும். இப்படத்திலுள்ள போதிகை எந்தக் காலத்தைச் சேர்ந்தது அல்லது எந்த இடத்திலுள்ளது என யாராவது கூறமுடியுமா? ![]() செவ்விந்தியச்சோழனை நினைவிருக்கிறதா? இக்கட்டுரைத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தில் வந்தாரே!! அமெரிக்காவில் நியூயார்க்கில் அவர் கட்டிய ஒரு புகைவண்டி நிலையத்திலுள்ள (14th Street PATH Station) ஒரு தூணில்தான் இந்தப் போதிகை இருக்கிறது. (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |