http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 140

இதழ் 140
[ ஃபிப்ரவரி 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

இருண்டகாலமா? - 2
செய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 1
கயிலைப் பயணம் - 2
மாமல்லபுரக் குடைவரைகள்
வட்டாடல் கலை
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 5
இதழ் எண். 140 > கலையும் ஆய்வும்
கயிலைப் பயணம் - 2
இரா.கலைக்கோவன், மு.நளினி
குதிரை

துதிக்கையை முன்னுக்கு நீட்டியவாறு விரைந்து தாவும் யானையின் முன் குதிரையொன்று நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறுவதைச் சோழ ஓவியர்கள் படம்பிடித்துள்ளனர். குதிரையின் முன்கால்கள் தாவலில் வளைந்திருக்க, பின்கால்கள் நீர்ப்பெருக்கிலிருந்து விடுபடும் நிலையில் உந்துகின்றன. அதன் அடர்த்தியான வாலைச் சுற்றி அதன் தொடக்கத்தில் தொங்கல்களுடன் ஓர் அலங்காரச் சுருள்.



யானையைப் போலவே குதிரையின் உடலிலும் முதுகிலிருந்து முன்பின்னாக, பதக்கப் பட்டையில் தைக்கப்பட்ட பூத்தொங்கல்களும் சரவளைவுகளும் அழகிய தோரணம் போலச் சுற்றியமைந்துள்ளன. பின்பகுதியில், இத்தோரணம் பட்டையையொட்டியும் முன்பக்கம் சற்றே விலகியும் காட்சியளிக்கிறது. உடலின் முன்பகுதியில் வயிற்றைச் சுற்றி முதுகிலிருந்து இரு புறத்தும் அலங்காரப்பட்டையொன்று சுற்றப்பட்டுள்ளது. அதன் நடுவிலிருந்து ஒரு பட்டை, குதிரையின் முன்கால்களுக்கிடையில் மேல் நோக்கித் திரும்பிக் கழுத்திற்குக் கீழுள்ள தோரணப்பட்டையில் இணைகிறது. கழுத்தின் மேல் விளிம் பில் பூச்சரம், மணிச்சரம் ஆகியன தைத்த பட்டை. இச்சரங்கள் வேறுபட்ட நீளங்களில் கழுத்திலிருந்து தொங்குகின்றன. கண்களுக்கு மேலொன்று, நாசிக்கு மேலொன்றென முகத்தில் இரண்டு குறுக்குப் பட்டைகள். இவை இணையும் செங்குத்துப் பட்டையிலிருந்து மேலும் இரு குறுக்குப் பட்டைகள் நீளுகின்றன. செங்குத்துப் பட்டை கழுத்து முழுவதையும் அணைத்துள்ளது. நாசிக்கு மேலுள்ள குறுக்குப் பட்டைகள் வாயைச் சுற்றிப் பிடிமானமாய் அமைய, அதிலிருந்து பூக்கள் தைத்த கடிவாளக் கயிறு குதிரையின் கழுத்தையணைத்தபடி சேரமானின் இடக்கையில் அடைக்கலமாகிறது.

சேரமான் பெருமாள்

இருபுறத்தும் கால்களைத் தொங்கவிட்ட நிலையில் குதிரையின் முதுகிலிட்ட சேணத்தில் அமர்ந்துள்ள சேரமான் பெருமாளின் கழுத்திலுள்ள சற்று நீளமான ருத்திராக்கமாலை குதிரையின் ஓட்ட வேகத்திற்கேற்ப இடப்புறம் அசைந்து சுருண்டுள்ளது. கழுத்தை ஒட்டிப் பெருமுத்துமாலை ஒன்றும் அணிந் துள்ள அவர் கைகளில் அடுக்கு வளைகளும் கடக வளைகளும் உள்ளன. இடுப்பில் அரைப்பட்டிகையுடன் சிற்றாடை; குதம்பை பெற்ற நீள்செவிகள், தாடி, மீசை, பூ வைத்த கொண்டையெனக் காட்சிதரும் சேரமானின் வலக்கை கடிவாளத்தைப் பிடித்திருக்க, இடக்கை சுந்தரரை நோக்கி அங்குசத்துடன் நீண்டுள்ளது. காலில் தண்டை. சுந்தரரை நோக்கித் திரும்பியுள்ள சேரமானின் முகம் அவரிடம் ஏதோ பேசுமாறு போல உணர்ச்சிக் குவியலாக அமைந்துள்ளது. ஆனால், சுந்தரர் சேரமான் பேச்சைக் கேட்டுணரும் நிலையிலில்லை. தம் பாட்டைத் தாமே இரசித்தவாறு கயிலையைக் கண்முன் நிறுத்தி கடுகிச் செல்லும் யானைக்கும் முன்னாகக் காற்று வேகத்தில் உள்ளம் ஓட, பழையனவெல்லாம் கண்முன் படமாய் விரிய, பரவசம் ததும்பிய பயணம் அவருக்கு. சோழத் தூரிகைகள் இந்த இரு நண்பர்களின் மெய்ப் பாடுகளையும் மிகத் துல்லியமாகப் படம்பிடித்திருக்கும் இடம் இது.

சொல்லாமல் போனார் சுந்தரர் எனினும், அவரிடம் தாம் தொடர்வதை உணர்த்தும் கடமையுணர்வு சேரமானிடம். சொந்த வீடு செல்லும் சுகத்தில் நட்பாவது, நினைவாவது என்ற நிலை சுந்தரருக்கு. யானைக்கு முன் குதிரை பறந்தாலும் 'என்னிடம் சொல்லாமல் சென்றாயே, பார்த்தாயா முந்தி விட்டேன்' என்ற அகமில்லை சேரமான் முகத்தில். 'வந்து விட்டேன் நண்பரே உடன் தொடர்ந்து, உம்மைவிட்டு இருக்கமுடியாமல்' என்ற பணிவுதான் அவர் பார்வையில். நண்பரை யிழக்கத் துணியாத நேயத்தின் முத்தாய்ப்பும் தம்மை மெய்மறக்கச் செய்து கருத்தழிய வைத்த ஆனந்ததாண்டவரை நண்பருடன் சந்திக்கப் போகிறோம் என்ற ஆவல் நிறைந்த எதிர்பார்ப்பும்தான் சேரமானின் விழிகளில் பொருள் நிறைப் பார்வையாய் மலர்ந்துள்ளன. சுந்தரர் இதற்கு நேரெதிர். பிறவிக்கு முன்னிருந்த நிலைக்குப் பிறவிப்பயன் கருதாது இறை வனே அழைத்திருக்கும் உயர்நிலை வழிப் பிறந்த கனவுப் பார்வையும் களிப்பின் உற்சாகமும் கரைபுரண்டோடும் அவரது முகக் கரையில் சேரமானின் நட்பு வீச்சுகள் எதிரொலிக்கவேயில்லை.

வரவேற்பு

கயிலை வரும் சுந்தரரை மகிழ்ந்து வரவேற்கும் கலைஞர்களும் அந்த வரவேற்பைக் கண்டு மகிழ்ந்து உரையாடும் அவரது தேவருலக நண்பர்களும் பயணக் காட்சியின் மேற்புறத்தே சேரமானுக்கு இருபுறமும் இருக்குமாறு காட்டப்பட்டுள்ளனர்.



தேவருலக நண்பர்கள்



சுந்தரரின் வலப்புறமுள்ள அவரது தேவருலக நண்பர்களில் ஒருவர் இளமஞ்சள் நிறத்திலும் மற்றொருவர் இளம்பச்சை வண்ணத்திலும் பிறிதொருவர் மென்சிவப்பு வண்ணத்திலும் அருகருகே நின்றவாறு தமக்குள் உரையாடி மகிழுமாறு மேகங்களுக்கிடையில் காட்டப்பட்டுள்ளனர். அவர்தம் தொடைகளுக்குக் கீழ்ப்பட்ட பகுதிகளை மேகங்கள் மறைத்துள்ளன. அனைவருமே துணியை மடித்து முப்புரிநூலென அணிந்து, தலைமுடியைச் சடைமகுடமாக்கியுள்ளனர். அவருள் இருவர் நெற்றியைச் சுற்றி மலர்ச்சென்னிகள் போல் பூக்களா லாகிய அழகிய நெற்றிப்பட்டங்கள். இச்சென்னியற்ற மஞ்சள் வண்ணருக்குச் சடைமகுட முகப்பில் இரு மலர்கள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பதக்கங்களெனப் பொருந்தியுள்ளன. மூவருமே ஒன்றுக்கு மேற்பட்ட கழுத்தணிகள் கொண்டுள்ளனர்.

செவ்வண்ணர் கழுத்தில் கண்டிகையும் பதக்கம் பெற்ற இருசர ஆரமும் கொள்ள, மஞ்சளழகர் சவடியும் பதக்கம் பெற்ற ஆரமும் அணிந்துள்ளார். இடைப்பட்டவர் கழுத்தில் இப்பதக்க ஆரம் முதலாவதாகவும் நன்கு தாழ்ந்து தொங்கும் மற்றொரு பதக்க ஆரம் இரண்டாவதாகவும் உள்ளன. மூவருமே முத்தாலான கங்கணங்களும் வளைகளும் அணிந்துள்ளனர். முதல்வராக நிற்கும் மஞ்சளழகர் இடத்திருப்பமாய் ஒருக்கணித்துள்ளார். பச்சை வண்ண மேனியர் இட ஒருக்கணிப்பில் நின்றாலும், முகத்தை மஞ்சள் வண்ணருக்காய்த் திருப்பியுள்ளார். செவ்வண்ணரோ வலப்புறமாய் ஒருக்கணித்துள்ளார். இடுப்பில் முடிச்சுத்தொங்கல்களோடு அரைப்பட்டிகை இறுக் கும் இடையாடை கொண்ட இம்மூவர் பார்வையிலும் வியப்பும் மகிழ்வும். பச்சை வண்ணரின் அரைப்பட்டிகைத் தொங்கல்கள் அவர் இயக்கத்திற்கேற்ப வலப்புறமாய்ப் பறக்கின்றன. நீள் செவியராயுள்ள இம்மூவருமே மேகலையணிந்திருந்தாலும் சிவப்பரின் மேகலை, மிகுந்த அலங்காரத்துடன் உள்ளது. மஞ்சள் வண்ணரின் தோள்களில் சரிந்து தொங்கும் ஸ்கந்தமாலை மற்ற இருவருக்கும் இல்லை.

மூவரில் மஞ்சள் வண்ணர் வலக்கையிலும் பச்சை வண் ணர் இடக்கையிலுமாய் நன்கு மலர்ந்த தாமரைப்பூக்களை ஏந்தியுள்ளனர். வியப்பு முத்திரையிலுள்ள சிவப்பரது இடக்கை வினாக்களும் விளக்கத் தேடலுமாய்ப் பிறந்திருக்கும் அவரது பார்வையோடு ஐக்கியமாகிப் பொருள் பொதிந்த கோலம் கொண்டுள்ளது. பச்சை வண்ணரின் வலக்கை சின்முத்திரை காட்ட, அதற்குக் காரணமானவர் போல் மஞ்சளழகர் காட்சி தருகிறார். வாய்ப்பகுதி சிதைந்திருந்தாலும் அவரது நெற்றிப் பகுதியும் கையமைப்பும் உடன்கூட்டத்தாரின் மெய்ப்பாடு களும் உரையாடுபவர் இவரே என்பதை மிக நயமாகச் சுட்டி விடுகின்றன.

இம்மூவர்க்கும் வலப்புறத்தே சற்றுக் கீழே மற்றொரு கந்தருவர் மேகங்களுக்கிடையில் தென்படுகிறார். நெற்றிப்பட் டம் சூழ்ந்த அவரது சிறுமகுடத்தின் முகப்பில் பூப்பதக்கம். கழுத்தின் வலப்புறம் சடைக்கற்றை. நீள்செவியரான அவர் கழுத்தில் இரண்டு ஆரங்கள். கைகளில் கங்கணங்களும் பட்டை வளைகளும் அணிந்துள்ள அவரது இடக்கை மேலுயர்ந்து விரிந்த பதாகத்தில் போற்ற, வலக்கையில் தாமரை மலர்.

கலைஞர்களின் வரவேற்பு

சுந்தரரை வரவேற்கும் தேவருலகக் கலைஞர்களும் மேகங் களுக்கிடையே இளமஞ்சள், இளம்பச்சை, சிவப்பு வண்ணங் களில் காட்டப்பட்டுள்ளனர். மந்தகாச முறுவலுடன் மகிழ்ந் தாடி, இசைபொழியும் அவர்களுள் முதலிடம் இரண்டு ஆடல் அரசியருக்கே. வலக்காலை ஊன்றி, இடக்காலை பார்சுவஜாநு வாகப் பக்கவாட்டில் உயர்த்தி மடித்துள்ள அத்தேவமங்கை யரின் வலக்கைகள் மேலுயர்ந்து போற்ற, மார்பருகே அலபத்ம மாய்ப் பூத்த இடக்கைகளில் தாமரை. மார்பில் ஸ்வர்ண வைகாக்ஷம் அணிந்து, தமிழம் கொண்டையமைப்பில் தலை முடிந்துள்ள இருவரும் நெற்றிச்சுட்டி, தலைமுடிப் புரிகளோடு பின்னிக் கொண்டை முழுவதற்குமாய்ப் பரவயிருக்கும் முத்துச் சரங்கள், தலையின் இருபுறத்தும் பூப்பதக்கங்கள், செவிகளில் அழகிய குதம்பைகள், செவிப்பூக்கள் அணிந்து, வலச்சுழற்சியில் உடலும் வலச்சாய்வாய் முகமும் கீழ்நோக்கியதாய்ப் பார்வை யும் கொண்டு மோகன பிம்பங்களாய் ஆடுகின்றனர்.



இவ்விருவர் கைகளிலும் கங்கணம், கடகவளை, அடுக்கிய முத்துவளைகள். கழுத்திலோ சவடி, முத்துச்சரப்பளி. உடுக்கை யாய்ச் சுருங்கிய இடைக்கு மேலே மணிகள் பதித்த முத்துப் பட்டையாய் உதரபந்தம். அளவாய்த் திரண்ட, அழகிய மார்பகங்கள். உடலின் சுழற்சிக்கேற்ப அவற்றின் எழுச்சியை யும் திருப்பத்தையும் காட்டியிருக்கும் ஓவியக் கலைஞர்தம் திறன் வியந்து விதந்தோதற்குரியது.



மஞ்சளழகியின் இடையில் மேகலை; கற்கள் பதித்த அரைப் பட்டிகை; அதன் கீழ் மெல்லிய இடையாடையும் வளையத் தொங்கலாய் இடைக்கட்டும். அரைப்பட்டிகையின் முடிச்சு கள் இருபுறத்தும் அளவாய் அழகுற முடியப் பெற்றுள்ளன. கூர்நாசியும் ஆயிரம் கவிதை சிந்தும் அஞ்சன விழிகளும் இளநகை பூத்த இதழ்களும் ஸ்வர்ணவைகாக்ஷத்தின் பிடிக் குள் சிக்கித் திமிறும் மார்பகங்களும் மஞ்சளழகியை மகோன் னத எழிலரசியாய்க் கண்களுக்கு விருந்தாக்குகின்றன.

அடுத்தாடும் பச்சைப் பெண்ணும் அழகில் மஞ்சள் மங்கைக்கு நிகரானவரே. அம்மங்கை நல்லாளின் இடைக்கு மேல் தோரணப் பதக்கங்களாலான உதரபந்தம்; இடுப்பில் மேகலை, அரைப்பட்டிகை, சிற்றாடை, இடைக்கட்டு. கைகளின் மேற்பகுதியில் பட்டையாக அமைந்த பேரளவுக் கங்கணம்; இவ்வம்மையின் இடுப்புப் பகுதியில் ஓவியம் சிதைந்திருப்ப தால் ஆடையணிகளின் அனைத்து வனப்புகளையும் காணக் கூடவில்லை. மலர்ந்த தாமரைகளுடன் சுந்தரரைப் போற்றி வரவேற்கும் இவ்வாடல் காரிகைகள் அக்காலத் தளிப்பெண்டு களைக் கண்முன் நிறுத்தும் இராஜராஜரின் சிந்தனை மலர்வுகள்.

இவர்களையடுத்து, ஆடவரொருவர் நட்டுவ ஆசான் போல் செவ்வண்ண மேனியுடன் சிந்தை குளிர நடம் செய் கிறார். அவரது வலக்கையும் சுந்தரரைப் போற்றி வரவேற்கிறது. இடக்கையில் மலர்ந்த தாமரை. பிரமரகமா, பிருஷ்டஸ்வஸ் திகமா எனப் பிரித்தறிய முடியாத கரணக்கோலத்தில் வஸ்திர முப்புரிநூல் காற்றில் நெளிநெளியாய் மடிந்து பறக்கக் கழுத் தில் கண்டிகையும் சவடியும் அணிந்து ஆடும் இவ்ஆடல் ஆசானின் தலைமுடி சடைமகுடமாய் முடியப்பட்டுப் பூப்பதக் கங்கள் பெற்றுள்ளது. சுற்றிலும் முகப்புகளோடு முத்துச்சரம் இணைத்த நெற்றிப்பட்டம். கழுத்தில் கண்டிகையும் நீள்சர மும். கைகளில் வளைகள். உதரபந்தத்துடன், அரைப்பட்டிகை இருத்தும் கீழ்ப்பாய்ச்சிய சிற்றாடையும் முந்தானை முடிச்சு மாய் உள்ள அவரது இளஞ் சிரிப்பும் இருவிழி விரிந்த வரவேற்பு நோக்கும் சுந்தரரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தி யிருக்குமென்பதில் ஐயமில்லை.

ஆடற்கலைஞர்களை அடுத்த ஆடவர் மூவரும் இசைக் கலைஞர்கள். முதலாமவர் ஆடிக்கொண்டே இலைத்தாளங் களை இயக்குகிறார். நெற்றிப்பட்டம் தழுவிய சடைமகுடரான அவரது மார்பில் வஸ்திர முப்புரிநூல். கழுத்தில் சரப்பளி. கைகளில் வளைகள் அடுக்கியுள்ள அவருக்கும் கங்கணங்க ளில்லை. செவிக்குண்டலங்களை அடையாளம் காணமுடியா அளவிற்கு மகுடம் மீறிய சடைப்புரிகள் அடர்ந்து தொங்கு கின்றன. இடுப்பில் அரைப்பட்டிகையுடன் சிற்றாடை. இடைக் கட்டின் முடிச்சுத்தொங்கல்கள் இடப்புறம் தெரிகின்றன. அவரது இடைநெளிவும் உடல் ஒருக்கணிப்பும் வலச்சாய் வாய்த் திரும்பிய முகமும் அவரை ஆடலில் தேர்ச்சி பெற்ற இசைக்கலைஞராக அறிமுகப்படுத்துகின்றன. மெய்ப்பாட்டு அலைகள் முத்தமிடும் கரை போலக் கனவுகள் சுமந்த விழி களில் அந்த இளமுகமே புத்தழகு பெற்றுவிடுகிறது. மிகச் சிறந்த கலைஞர் அவரென்பதை அவரது பார்வைப் பின்னல்களே பக்குவமாய் விளக்கிவிடுகின்றன. சோழ ஓவியர்கள் சிகர உச்சி யைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞரின் படப்பிடிப்பு, தமிழ் நாட்டுக் கலைவரலாற்றின் காலமுத்திரை.



அடுத்து நிற்கும் இளம்பச்சைக் கருவிக்கலைஞர் தம் இடையருகே கயிறொன்றால் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள தோல்கருவியின் இடமுகத்தை இடக்கையால் முழக்கியவாறு வலக்கையால் சுந்தரரைப் போற்றுகிறார். இடை சிறுத்துக் குறுக, இருபுறத்தும் விரிந்து முகங்கொண்ட இத்தோல்கருவி இடைப்பட்டையுடன் இருபுறத்தும் குறுக்கும் நெடுக்குமான கயிற்றுப்பின்னல்கள் கொண்டுள்ளது. கலைஞரின் தலைப் பகுதி சிதைந்திருப்பதால் முடியலங்காரத்தை அறியக்கூட வில்லை. குண்டலங்கள், பதக்கம் வைத்த நீள்சரம், பிரம்மமுடிச் சுடனான உபவீத முப்புரிநூல், அரைப்பட்டிகை இருத்தும் சிற்றாடை, இடைக்கட்டுக் கொண்டு, வலப்புறம் முகம் சாய்த்து மேல் நோக்கிய கிறங்கிய பார்வையுடன் ஒருகை ஓசையால் இசையெழுப்புகிறார் இக்கலைஞர்.



அடுத்தவர் உடல் இடப்புறம் ஒருக்கணித்திருந்தாலும் முகம் வலச்சாய்வாய்த் திரும்பியுள்ளது. பார்வையோ உடல் போன திசையில். இலைத்தாளரைப் போல் இவரும் மஞ்சள் வண்ணரே. அழகிய சடைமகுடம்; அதை மீறிய சடைப்புரிகள் தோள்களில். கழுத்தில் சவடி, சரப்பளி. நீள வளர்த்த செவிகள் வெறுமையாக உள்ளன. வளைகள், முப்புரிநூல், அரைப் பட்டிகை இருத்தும் சிற்றாடையுடன், செண்டை போன்ற ஒரு முக முழவொன்றை மார்பின் இடப்பகுதியில் அணைத்தவாறு இரு கைகளாலும் அதை இயக்குகிறார் இந்தத் தோலிசைக் கருவியர். அக்கருவியின் மேல்முகம் அகலப்பட்டும் கீழ்முகம் சற்று அகலம் குறைந்தும் காட்சியளிக்கின்றன. முழவின் நடுவில் பதக்கப் பட்டை. அதன் இருபுறத்தும் குறுக்கும் நெடுக்குமாக கயிற்றுப் பின்னல். முன்னிருக்கும் கலைஞர்கள் அனைவரும் சுந்தரப் பார்வையிலிருக்க, இவர் சுந்தரரை அறிந்தவர் போல் எதிர்த்திசையில் எங்கோ நோக்கியவராய், 'தானுண்டு தன் இசையுண்டு' எனத் தாளக்கட்டுகளில் இலயித்துள்ளார்.

இந்த முழவறிஞருக்கு இடப்புறம் வியப்பே விழிகளானாற் போல் விஸ்மயப் பார்வை சிந்தி அதில் சற்றுத் திகைப்பும் நிழலாடக் காட்சிதரும் செவ்வண்ணரும் சடைமகுடரே. நெற்றிப் பட்டம் சூழ்ந்த சடைமகுடத்தில் முத்துக்கள் தைக்கப் பெற்றுள் ளன. செவிகளில் குதம்பை. கழுத்தில் சரப்பளி, நீள்சரம். பிரம்ம முடிச்சுடனான அலங்கார முப்புரிநூல். வலக்கையில் மலர்ந்த தாமரைப்பூ. பார்வைக்கேற்றாற் போல் உள்ள விஸ்மய இடக் கையில் கங்கணம், கடகவளை, வளைகள். இச்சிவப்பரின் வியப்புச் சுந்தரருக்குக் கிடைத்த வரவேற்பினால் விளைந்ததா அல்லது அவருக்கும் முன்னதாகப் பாய்ந்து வருகிறதே சேரமான் குதிரை அதில் இவர்ந்திருக்கும் உண்மைத் தொண்டரை, நட்பின் நாயகரைத் தரிசித்ததால் வந்ததா என்பதைக் கேட்டுத் தான் அறிதல் வேண்டும். இடையில் அரைப்பட்டிகையுடன் சிற்றாடை. அழகிய இடைக்கட்டு வளையத்தொங்கலாய்த் தொடைகளைத் தழுவி விரிந்துள்ளது.

சுவரில் முடியும் இவரையடுத்து வாயில் நிலையின் பக்கப் பகுதியில் எழிலார்ந்த முகமும் இளமஞ்சள் நிறமுமாய் மற்றொரு பார்வையாளர். மணிகள் பதித்த நெற்றிப்பட்டம் சூழ்ச் சடைமகுடமும் அலங்கார முப்புரிநூலும் சவடியும் வளைகளும் நீள்செவிகளில் குண்டலங்களும் அணிந்துள்ள அவரது அரைப்பட்டிகை இருத்தும் சாம்பல் நிறக் கோடுகள் பெற்ற சிற்றாடையின்மீது பட்டிகையின் முடிச்சுகள் படர்ந் துள்ளன. சுந்தரரையும் சேரமானையும் நோக்கி முகம் திருப்பி யிருக்கும் அவரது விழிகளிலும் வியப்புக் குடியமர்ந்துள்ளது.

இந்தத் தொகுப்பின் இரண்டாம் பேரழகர் இவர். பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்றெண்ணத் தோன்றும் இளமை கொஞ்சும் இனியமுகம். வலக்கையில் மலர்ந்த தாமரை. இடக் கை சிதைந்துள்ளது. மேக மூட்டங்களுக்கிடையில் உலவும் இவரது இருதொடைகளும் பக்கவாட்டுகளில் விரிந்துள்ள தைப் பார்க்கும்போது மகிழ்வின் முத்தாய்ப்பில் மண்டலித்து ஆடுகிறாரோ என்று தோன்றுகிறது.

வாயில்நிலையின் நேர்முகப் பகுதியில் மூன்று கலைஞர் கள். ஊதுகுழலூதும் வித்தகரும் முழவிசைக்கும் ஆசிரியரும் பக்கத்திற்கொருவராக, இடையில் ஆடலர். அவர்தம் ஆவர்த் தனமும் மேகங்களுக்கிடையில்தான். கீழே, எழிலே உருவான இளமங்கை ஒருவரின் சுழலாட்டம். நீள்குழலூதும் வித்தகர் சடையை மகுடமாய் முடித்துள்ளார். நெற்றியில் பதக்கப் பட்டம். கழுத்தில் கண்டிகை. அரைப்பட்டிகை இருத்தும் சிற்றாடையும் இடைக்கட்டும் பெற்றுள்ள அவரது இடைக்கு மேல் உதரபந்தம். முழவின் ஒலிக்கேற்பக் குழல் வழுவாது அமைய வேண்டுமே என்ற கவலையுடன் சுந்தரரைக்கூடப் பார்க்காமல் முழவர் பக்கமே முழுவதுமாய்த் திரும்பி ஊதும் அவரது குழல் ஆடலரைத் தாண்டியும் நீளுகிறது.

இடைப்பட்டவரும் இவரைப் போலவே முழவரைப் பார்த்தபடி இடத்திருப்பமாய் ஆடுகிறார். விரிந்த வல உள்ளங் கையில் தாமரைப்பூ. இடக்கை உயர்ந்து போற்றுகிறது. பார்வை யில் தீட்சண்யம். பூப்பதக்கம் பொருத்திய சடைமகுடம் தலையை அலங்கரிக்கக் கழுத்தில் கண்டிகை. செவிகளில் குண்டலங்களும் கைகளில் வளைகளும் அணிந்துள்ள இவர் ஒருவரே, ஆண் கலைஞர்களில் மேற்கைகளில் கங்கணங்கள் பூண்டுள்ளவர். இடுப்பில் முத்துச்சரம் பதித்த அரைப்பட்டிகை யும் சிற்றாடையும்; இடைக்கட்டு மேகமூட்டத்தில் மறைந் துள்ளதெனினும் வளைவுகள் தென்படுகின்றன. கலைஞர் களில் அளவற்ற முகமலர்ச்சியோடு இதழ்களை விரித்துப் பெரு நகை பூத்திருப்பவர் இவரே. நட்டுவ ஆசானாக இருப்பாரோ? கீழே ஆடும் குமரியின் ஆட்ட இலாவகத்தில் தாம் கற்றுத் தந்ததை மீறிய ஜதிக்கோர்வைகள் ஒளிர்வது கண்டே களிப்பின் உச்சத்தில் இதழ்கள் விரித்தாரோ?

முழவரும் சடைமகுடரே. கயிற்றால் பிணைத்த நிலையில் அவர் மார்போடு தொங்கும் இருமுக முழவு நடுவில் பருத்து முகங்களை நோக்கிச் சிறுத்துள்ளது. நட்டுவ ஆசானைப் பார்த்தபடியே முழவிசைக்கும் அவரது சடை விரிந்து சடை மண்டலமாய்க் காட்சியளிக்கிறது. கட்டி முடித்தவர்தான்; கை வீச்சுக்கும் கழுத்தசைவுக்கும் தாங்காமல் அவிழ்ந்து விரிந்து விட்டது போலும்! தோற்றம் பெரிதும் சிதைந்திருப்பதால் அவரது ஒப்பனையை அறியக்கூடவில்லை. இடையில் சிற்றாடையும் அதையிருத்தும் அரைப்பட்டிகையும் தெரிகின்றன.

- வளரும்

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.