http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 140

இதழ் 140
[ ஃபிப்ரவரி 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

இருண்டகாலமா? - 2
செய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 1
கயிலைப் பயணம் - 2
மாமல்லபுரக் குடைவரைகள்
வட்டாடல் கலை
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 5
இதழ் எண். 140 > இலக்கியச் சுவை
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 5
சு.சீதாராமன்
கண்ணதாசன் இயற்றி M.S.விஸ்வநாதன் இசையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் சுசீலாவின் தேமதுரக்குரலிலும் ஜெமினி மற்றும் சாவித்திரியின் நடிப்பிலும் "காத்திருந்த கண்கள்" என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா" காலத்தால் அழியாத அற்புதக் கவிதை

இப்பாடலில் அகத்திணை இலக்கியங்களில் ஒன்றாகக் கருதக்கூடிய "தூது" புதுமையான வகையிலும் அழகாகவும் கையாளப்பட்டிருக்கிறது.

தூது - ஒருவர் தம் கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்க இடையே பிறிதொருவரை அனுப்புவதே தூதாகும். தூதினைப் புறத்தூது, அகத்தூது என இரண்டாகக் கூறலாம்.

அகத்தூது - தலைவன் தலைவியிடத்தே தூது அனுப்புதலும், தலைவி தலைவனிடத்தே தூது அனுப்புதலும் அகத்தூது எனலாம்.

புறத்தூது - அரசர்கள், பகைவரிடத்துத் தூது அனுப்புதலும், புலவர்கள் புரவலர்களிடத்துத் தூது அனுப்புவதும் புறத்தூது ஆகும்

"ஓதல் பகை தூது இவை பிரிவே"
(தொல்காப்பியம்-அகத்திணையியல்)

தொல்காப்பியம் பிரிவு ஏற்படுங்காரணங்களாக "ஓதல், பகை மற்றும் தூது" ஆகிய மூன்றைக் குறிப்பிடுகின்றது.

அவற்றுள்,

"ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன"

என்று கல்வி கற்க மேற்கொள்ளப்படும் பிரிவையும், தலைவன் தலைவி ஆகியோரிடத்தில் ஏற்படும் பிரிவால் ஏற்படும் தூதும் உயர்ந்தோரால் மேற்கொள்ளப்படுபவை என்று தொல்காப்பியம் இயம்புகிறது.

திருக்குறளில் தூது

திருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற தலைப்பில் ஓர் அதிகாரத்தையே அமைத்துள்ளார். அந்த அதிகாரத்தில் தூதுவரின் இலக்கணம், பண்புகள், தூது சொல்லும் முறை என்பவற்றைப் பத்துக் குறள்களில் விளக்குகின்றார்.

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்ப தாம் தூது


தொகுத்துச் சொல்லி, மனம் நோகச்செய்யக்கூடிய கொடிய சொற்களை நீக்கி, மனம் மகிழும்படியான இனிய சொற்களைக் கூறி நன்றி பயப்பவனே சிறந்த தூதுவன் ஆவான் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எழுந்த ஊடல் பிரிவாகி இருவரும் மனம் வருந்த இவர்களை தூதினால் இணைப்போர் "வாயில்கள்" என்றழைக்கப்பட்டனர். யாரெல்லாம் வாயில்களாகச் செயல்படலாம் என்ற வினாவிற்கு,

"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளைஞர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப"

(தொல் – கற்பியல் – 52)

கற்புக்காலத்தில் தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகிய பன்னிருவரை வாயில்கள் என தொல்காப்பியம் விடை பகர்கிறது.

தொல்காப்பியர் களவு, கற்பு எனும் இரு வகைக் கைகோளுக்கும் உரிய பிரிவு வகைகளைப் பொது நிலையில் சுட்டியிருப்பினும் பிற்காலத்தில் இவை களவுக்கும், கற்புக்கும் எனத் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளது .தொல்காப்பியர் தூதிற் பிரிவு என்பதைப் பொதுவகையில் சுட்டியிருப்பினும், அது கற்புக் காலத்திற்கே பெரும்பான்மையும் உரியது என்பதை அறிய முடிகின்றது. இத்தூது உயர்திணத்தூது மற்றும் அஃறிணைத்தூது என இருவகைப்படும்.

உயர்திணையில் தூதுவர்களாக கீழ்க்கண்டோரும்
1. விறலி
2. மங்கை
3. பாங்கி
4. மதங்கி
5. தாதி
6. தோழி
7. நங்கை
8. நவநீதகிருஷ்ணன்
9. மாது
10. பாவை
11. பிள்ளை
12. புலந்திரன்
13. புலவர்
14. பூவை
15. பெண்டிர்
16. மோகன வல்லி
17. வானவன்
18. நவீனமாது

அஃறிணையில் தூதுவர்களாக கீழ்க்கண்டவையும்

விலங்குகளில்
1. கழுதை
2. குக்கல் (நாய்)
3. எலி
4. மான்

பறவைகளில்
1. கிள்ளை
2. வண்டு
3. காக்கை
4. கிளி
5. குயில்
6. குருவி
7. தத்தை
8. மயில்
9. கருடன்
10. பொறிமயில்
11. அன்றில்
12. புறா
13. கழுகு

மணங்களில்
1. குவளை
2. சவ்வாது
3. சந்தனம்
4. மாலை
5. மலர்
6. இருவாட்சி
7. பாரிசாதம்

உணவுபொருள்களில்
1. அன்னம்
2. நெல்
3. வெற்றிலை
4. பாங்கு

குணங்களில்
1. அன்பு
2. காதல்
3. நெஞ்சு
4. சிரிப்பு

பிறவற்றில்
1. பணம்
2. பொடி
3. மேகம்
4. துகில்
5. கொண்டல்
6. கொன்றை
7. பொன்
8. வனச
9. பஞ்சவர்ணம்
10. படுக்கை
11. பள்ளியறை
12. தென்றல்
13. வசனம்
14. வெண்ணிலா
15. சங்கு
16. நீதி
17. மறலி
18. நன்னூல்
19. பிச்சி
20. பிரபந்தம்
21. தமிழ்
22. விளக்கு

ஆகியவையும் புலவர்களால் தூதுப் பொருள்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக எடுத்தாளப்படும் உயர்திணைத்தூதுவர்கள் பேசும் திறனுடையவர்கள், அஃறிணைத்தூதுவர்களோ பேச இயலாத சாட்சி பூதங்களே ஆவர், ஆனால் கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் புதுவிதமாக ஒரு தூதுவரை அறிமுகம் செய்கிறார்! ஆம், அத்தூதர் உயர்திணையாக இருக்கிறார். அதே சமயம், அஃறிணைத்தூதுவர் போல் பாவம் சாட்சிபூதமாகவே இருக்கிறார்.

வாருங்கள் பாடலைக் காண்போம்!

கற்பில் ஒன்றிணைந்த தலைவனும் தலைவியும் ஊடல் காரணமாகப் பிரிகின்றனர். அவர்களிடையே அவர்கள் எண்ணங்களைப் பரிமாரிக்கொள்ள அவர்களின் செல்வன் இப்பாடலில் தூதுவனாகப் பயன்படுத்தப்படுகின்றான். தலைவன் பழமையை ஞாபகப் படுத்துகின்றான்!

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா!


தலைவி இன்பமான பழைய நினைவுகளில் மூழ்குவதைத் தவிர்த்துக் குடும்பம் என்ற அமைப்பில் மூழ்கிச் சற்றே சலித்துக் கொள்கிறாள்.

குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?


ஆனாலும், தலைவன் விடுவதாக இல்லை! காதலிக்கும்போது இனிமையாக இருந்த தலைவி தாலி கட்டியவுடன் மாறிவிட்டதாகப் பிள்ளையைத் தூதாக வைத்துத் தலைவியின்பால் குற்றம் சுமத்துகின்றான்!

காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா


ஆனால் தலைவி, காதலியும் மனைவியும் ஒருவள்தான் என்றும் அந்த ஒருவள் எந்த மாற்றத்திற்கும் உட்படவில்லை என்றும் தலைவன்தான் தன்னைச் சரியாகக் கவனிக்கவில்லை என்றும் திரும்பச் செல்வனைத் தூதுவனாக வைத்துத் தலைவன்பால் குற்றம் சுமத்துகிறாள்.

காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா


மேலும், மனதில் தன் காதலனையே மணாளனாக வரித்துக்கொண்டுவிட்டதாகவும் கோபதாபங்களுக்காக அவ்வாறு மனதில் வரித்துக்கொண்ட மணாளனை எக்காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க இயலாதென்பதையும் தூதாகச் சொல்லிச் சற்று இறங்கி வருகிறாள்!

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா


தலைவனும் இக்கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்து தலைவியின் கோபமே தன்னையும் கோபம் கொள்ளச்செய்ததாகவும் அவளின் தேவையையும் ஆசையையும் உடனே நிறைவேற்றத் தயார் என்பதைத் தூதாகச்சொல்லித் தன் சமரச நிலையைத் தெளிவுபடுத்துகின்றான்.

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா


தலைவி தனக்குத் தலைவனைத்தவிர வேறெதுவும் தேவையில்லை என்பதை நாசூக்காகவும் அழகாகவும் வெளிப்படுத்துகிறாள்.

நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா


தலைவன் தலைவியின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு கடந்த காலங்கள் போகட்டும் என்றும் இனிவரும் காலங்களில் தன்னிடம் கோபமின்றி வாழவும் செல்வனைத் தூதாகக்கொண்டு வேண்டுகோளாக வைக்கிறான்.

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா


தலைவனின் வேண்டுகோள் தலைவியை முற்றிலும் சாந்தப்படுத்தியதோடல்லாமல் தான் தலைவனிடம் அடைக்கலமடைந்து விட்டபடியால் தன் கோபங்களைப் பெரிதுபடுத்தாமல் தன்னை ஏற்றுக்கொள்ளும்படியாகக் தூது சொல்லும் பாங்கு நெகிழ்ச்சியானதாகும்!

அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா!


இறுதியில் தூதின் பயனாகச் சமாதானம் விளைந்து தலைவனும் தலைவியும் இணைகின்றனர். கவிஞர் கண்ணதாசனின் இப்பாடல் தமிழின் அகத்திணைச் சிற்றிலக்கியங்கள் வகைப்பாட்டியலில் இடம்பெற முற்றிலும் தகுதியான பாடலாகும்!

வாழ்க தமிழ்!
ஓங்குக கண்ணதாசனின் புகழ்!

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.