http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 149
இதழ் 149 [ மே 2020 ] இந்த இதழில்.. In this Issue.. |
சிராப்பள்ளித் தொட்டியம் சாலையில் முசிறியை அடுத்த மணமேட்டின் வடக்கே 1 கி. மீ. தொலைவிலிருக்கும் அலகறை, சோழர் காலத்தில் அலகறை நாட்டின் தலைமை ஊராக இருந்தது. பின்தங்கிய சிற்றூராக இன்று உருமாறியிருக்கும் அலகறையில் கவனிப்பாரற்ற நிலையிலுள்ளது சோழர் கல்வெட்டுகளில் சேமீசுவரம் என்றழைக்கப்படும் சோமசுந்தரேசுவரர் கோயில்.1
அலகறை சேமீசுவரம் விமானம் கோபுரம் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம் பெற்றெழும் சேமீசுவரக் கோபுரத்தின் வாயில் அரைச்சுவருடன் நிற்கிறது. பாம்புப் படமும் தாமரைவரியும் பெற்ற நிலைக்கால்களால் அணைக்கப்பட்டுள்ள வாயிலின் வலப்புறச் சுவரில் பொ. கா. 1887 ஆகஸ்டில் (சர்வஜித் ஆவணி 10) பொறிக்கப்பட்டுள்ள தமிழ்க் கல்வெட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் அலகறை கிராமத்து தர்மசம்வர்த்தனி, சோமசுந்தரேசுவரர் கோயிலுக்குச் சுற்றுமதில் எழுப்ப நாகயநல்லூர் கல்யாணசுந்தரர் நினைவாக அவர் மகன் பாஸ்கரன் 500 ரூபாய் கொடையளித்த தகவலைத் தருகிறது.2 கோபுரத் தென், வடஅகச்சுவர்களில் பரவியுள்ள மூன்றாம் குலோத்துங்கசோழரின் அரசாணைக் கல்வெட்டு இக்கோயிலின் தோற்ற வரலாற்றைத் தெளிவுறத் தருகிறது.3 வளாகச் சுற்று மதிலால் சூழப்பட்டுள்ள கோயில் வளாகத்தில் ஒருதளத் திராவிட விமானம், முகமண்டபம், பெருமண்டபம் என அமைந் துள்ளது சேமீசுவரர் திருமுன். அதன் பெருமண்டப வாயிலைப் பார்த்தவாறு துணைத்தளம், இருசதுர நீள்கட்டுத் தூண்கள், பூமொட்டுப் போதிகைகள், கூரையுறுப்புகள் என அமைந்த அழகிய கற்பந்தலில் பிற்சோழர் கால நந்தி. கழுத்திலும் முதுகிலும் கிளிஞ்சல் மாலைகள் படர, கழுத்தில் குஞ்சலங்களும் மணிகளும் கலந்தமைந்த மற்றொரு சரம். இரண்டுக்குமிடையில் பெருமணி கோத்த கழுத்துப் பட்டை. திமிலையொட்டி இருபுறத்தும் இறங்கும் நீள் குஞ்சலங்களை அடுத்து முதுகிலுள்ள ஈரடுக்கு மென்விரிப்பு மார்புப்பகுதியில் முடிச்சிட்டுக் கட்டப்பட்டிருப்பதுடன் வால்புறத்தும் இறுக்கப்பட்டுள்ளது. கொம்புகளைச் சுற்றியும் வளைந்திறங்கும் குஞ்சலங்கள். நந்தியின் தொடைப்பகுதிகளில் அழகிய கீர்த்திமுகப் பட்டைகள். வாயிலுக்கும் நந்திப்பந்தலுக்கும் இடையில் பலித்தளம். சுற்றின் தென்மேற்கு மூலையில் முச்சதுர, இருகட்டுத் தூண் கள் தரங்க வெட்டுப் போதிகைகளுடன் கூரைதாங்கும் முன்றிலை அடுத்துள்ள ஒருதள நாகர விமானம் துணைத்தளத்தின் மீதான தூண்களற்ற சுவரும் கூடுகளுடனான கபோதமும் பெற்றுள்ளது. இக்கருங்கல் கட்டுமானத்தின் மேலுள்ள விமான உறுப்புகள் காரையாலானவை. வேதிகையில் நாற்புறமும் நந்திகள் அமைய, நான்முக அரைத்தூண்கள் தழுவும் கிரீவகோட்டங்களில் உருக் குலைந்த சுதைவடிவங்கள். பிள்ளையார் இலலிதாசனத்திலுள்ள இதன் கருவறை வாயிலுக்கு மேல் யானைத்திருமகள். உறுப்பு வேறுபாடற்ற துணைத்தளம், தூண்களற்ற சுவர், கூரை யுறுப்புகள், ஆழமற்ற கூடுகளுடனான கபோதம் பெற்று ஒருதளத் திராவிடமாக மேற்கிலுள்ள சுற்றாலை விமானத்தில் முருகன் தேவியருடன் உள்ளார். கருவறை முன் முச்சதுர, இருகட்டுத் தூண்கள் தரங்க வெட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்கும் முன்றில். அதன் கூரையில் காட்டப்பட்டுள்ள அரைத் தூண்கள் தாங்கும் கீர்த்திமுக வளைமாடத்தில் சுதைவடிவினராய் வேலேந்திய முருகன். அவரது கைகளும் பின் நிற்கும் மயிலும் சிதைந்துள்ளன. விமான கிரீவத்தில் நாற்புறமும் சுதையாலான இரட்டை மயில்கள். வடக்கு கிரீவகோட்டத்தில் இருபுறமும் பானைகள் தொங்கும் கழையுடன் (காவடி) ஆடவர். கருவறை வாயில் மேல் யானைத் திருமகள். சுற்றின் வடபுறத்தே மையக்கோயில் முகமண்டபத்தருகே துணைத்தளம், தூண்களற்ற சுவர், கூரையுறுப்புகள், கூடுவளைவு களுடனான கபோதம் பெற்றுக் கருங்கல் கட்டுமானமாயுள்ள கருவறையில் தென்பார்வையாய்ச் சண்டேசுவரர். மையக்கோயி லின் பெருமண்டபத்துள் வாயில் பெற்றுள்ள அம்மன் கோயி லின் முகமண்டபம், விமானம் ஆகியவை சுற்றின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன. தனிச்சிற்பங்கள் சுற்றின் வடபுறத்தே மதிலையொட்டி நிறுத்தப்பட்டுள்ள சூரியனின் சிற்பம் அளவில் பெரியதாகும். வலக்கை முற்றிலு மாய்ச் சிதைந்திருக்க, இடக்கையில் மலர். அவரருகே மண்ணில் கிடத்திய நிலையில் நான்முகி, வராகி, வைணவி தவிர்த்த பிற நான்கு எழுவர்அன்னையரின் சிதைந்த சிற்பங்கள் காணப்படு கின்றன. சுகாசனத்திலுள்ள அவற்றுள் சாமுண்டி தவிர்த்த பிற மூவரும் வல முன் கையைக் காக்கும் குறிப்பில் கொண்டு, இட முன் கையை முழங்கால்மீது இருத்தியுள்ளனர். சூரியன் அவர்தம் தலையை மகுடம் அலங்கரிக்க, செவிகளில் பனை யோலைக் குண்டலங்கள். சரப்பளி, தோள், கை வளைகள், பட்டாடை அணிந்துள்ள அவர்களுள் இந்திராணி பின்கைகளில் சக்தியும் அங்குசமும் கொள்ள, கௌமாரி வஜ்ரமும் சக்தியும் ஏந்தியுள்ளார். மார்புக்கச்சு அணிந்துள்ள கௌமாரி முப்புரிநூல் கொள்ள, இந்திராணி சுவர்ணவைகாக்ஷம் அணிந்துள்ளார். மகேசுவரியின் பின்கைகளுள் ஒன்றில் அக்கமாலை. சுடர்முடி யுடனுள்ள சாமுண்டியின் வல முன் கையில் முத்தலைஈட்டி. அவரது பின்கைக் கருவிகள் சிதைந்துள்ளன.4 சாமுண்டியும் மகேசுவரியும் தோள்மாலை பெற்றுள்ளனர். சாமுண்டி கௌமாரி சுற்றாலை இறைவடிவங்கள் மகாராஜலீலாசனத்திலுள்ள சுற்றாலைப் பிள்ளையார் முன் கைகளில் உடைந்த தந்தமும் மோதகமும் பெற்று இடம்புரியாய்ச் சுருண்டுள்ள துளைக்கை வளைவிலும் மோதகம் பிடித்துள்ளார். கரண்டமகுடம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை பெற்றுள்ள அவரது பின்கைகளில் அங்குசம், பாசம். வலத்தந்தம் உடைந்துள்ள அவர் முன் அவரது ஊர்தியான எலி. வள்ளி தெய்வானையுடன் நின்றகோலத்திலுள்ள முருகனின் பின் மயில். முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண் டுள்ள முருகனின் பின்கைகளில் சக்தி, வஜ்ரம். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், உருத்திராக்கமாலை, தோள், கை வளைகள், சன்னவீரம், பட்டாடை கொண்டுள்ள அவரது இருபுறத் தேவியரும் முருகனுக்கு அணுக்கமான கைகளில் மலர் கொண்டு, வெளிக் கைகளை நெகிழ்த்தியுள்ளனர். இருவருமே கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சுவர்ண வைகாக்ஷம், பட்டாடை அணிந்திருந்தபோதும் வலப்புற வள்ளிக்கு மார்புக்கச்சு இல்லை. தெய்வானை அருகே சிறிய அளவிலான பழனியாண்டிச் சிற்பம் வலக்கையில் கோலுடன், இடக்கை கடியவலம்பிதமாகக் கோவணஆடையுடன் உள்ளது. உயரமான கருங்கல் தளத்தின் மீது வலக்கையில் மழுவுடன் இடக்கையைத் தொடையிலிருத்தி சுகாசனத்திலுள்ள சண்டேசு வரரின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள், சடைமகுடம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், சிற்றாடை, தாள்செறி கொண்டு நிமிர்ந்து நேர்ப்பார்வையில் அமர்ந்திருக்கும் சண்டேசுவரரின் சிற்பம் பிற்சோழர் காலத்தது. அம்மன் திருமுன் ஒருதளத் திராவிட விமானம், முகமண்டபம் பெற்றுள்ள அம்மன் திருமுன் மையக்கோயிலின் பெருமண்டப வடசுவரில் வாயில் பெற்றுள்ளது. துணைத்தளமும் தூண்களும் கோட்டங்களு மற்ற சுவரும் கூரையுறுப்புகளும் கூடுகளுடனான கபோதமும் கொண்டு பின்னாளைய கட்டுமானமாய் விளங்கும் இறைவி விமான கிரீவகோட்டங்களில் சுதையாலான நின்றகோல அம்மன் வடிவங்கள். வேதிகையில் நாற்புறத்தும் சுதையாலான நந்திகள். விமானக் கட்டமைப்பிலுள்ள சிறிய முகமண்டபம் வெறுமையாக உள்ளது. கருவறையில் தர்மசம்வர்த்தினியாக அறியப்படும் இறைவி உயரமான வேசரத்தளத்தில் நின்ற திருக்கோலத்தில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, பட்டாடை அணிந்து முன்னிரு கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டு பின்கைகளில் மலரேந்தியுள்ளார். இறைவன் விமானம் உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதியுடன் சாலை முன்தள்ளல் பெற்றெழும் விமானத்தின் சுவரைச் செவ்வகப் பாதம் கொண்ட எண்முக அரைத்தூண்கள் அணைத் துள்ளன. தூண்களின் மேலுள்ள தாமரை கூர்மையான வடிப்பு பெற்றுள்ளது. தரங்க வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரை யுறுப்புகளில் வலபியில் பூதவரி. தூண் போதிகைகளின் மீது வலபி மடியும் இடத்தில் ஆலிலைக்கண்ணன், அமர்நிலையில் இருகாளைகள், நடைபயிலும் யானை உள்ளிட்ட அழகிய சிற்பங்கள். திருப்பங்களில் மார்பளவான தாவுயாளிகள். வலபிப் பூதங்கள் சில சிதைந்திருந்தபோதும் பல நன்னிலை யில் உள்ளன. மாறுபட்ட தலைக்கோலங்கள், பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணிகள், சிற்றாடை கொண்டுள்ள அவற்றுள் சில ஆடல் நிகழ்த்த, சில குறும்புகளில் களித்துள்ளன. பனை யோலைக் குண்டலங்களுடன் வலக்கையை வேழக்கையாக்கி, முகத்தை இடம் சாய்த்து இனிய முறுவலுடன் ஆடலில் இலயித்துள்ள இரட்டைப் பூதங்கள் சிறந்த காட்சி. இணையாக விளங்கும் ஆண், பெண் பூதங்களில் ஆண் சொல்வது கேட்டு பெண் வியக்கும் பாங்கும் குறிப்பிடத்தக்கது. பிறகோயில்களில் காணுமாறு போலப் பல்வேறு இசைக்கருவிகளுடனான பூதக் கலைஞர்கள் இங்கில்லையென்றாலும், இடப்புறம் ஆடும் பூதத் திற்கு மென்னகையுடன் தலையை இடம் சாய்த்து நீள்மத்தளம் வாசித்து மகிழும் பூதம் தனித்து நிற்கிறது. கொற்றவைக் கோட்டத்திற்கு மேல் இவ்வரியில் காட்டப்பட்டுள்ள தனிப்பூதம் விரிசடை, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சிற்றாடை யுடன் வலக்கையை அர்த்தரேசிதத்தில் வீசி, இடக்கையை நெகிழ்த்தி இலலிதாசனத்தில் இருந்தபடியே அவிநயிக்கும் காட்சி அழகின் உச்சம். மற்றோர் இணை சங்கு, உடுக்கையுடன் வாசிக்கத் தயாராகும் நிலையில். கபோதம் சந்திரமண்டலம், கோண, நடுப்பட்டங்களுடன் எளிய கூடுவளைவுகள் கொண்டுள்ளது. மேலே பூமிதேசத்தின் மகர வாய்களில் வாளுடன் வெளிப்படும் வீரர்கள். அதன் வடபுற வரியில் இடைச்செருகலாய் ஆணும் பெண்ணுமாய் இரண்டு அழகிய பூதங்கள். துணையின் இடத்தோளை ஆண் தன் இடக்கையால் காதலோடு பற்றியுள்ளது. இருவருக்குமே விரி சடை. உபானம் முதல் கூரைவரை கற்றளியாக விளங்கும் விமானத்தின் கூரை மேலுள்ள வேதிகை, கிரீவம், சிகரம், தூபி ஆகியன செங்கல் கட்டுமானங்கள். வேதிகையின் நாற்புறத்தும் சுதை நந்திகள். கிரீவசுவரில் இடைவெளிவிட்ட நிலையில் நான்முக அரைத்தூண்கள். வலபியில் மதலைகள். சந்திரமண்டலம், தொங்கல்கள், கண்ணாடிப்பட்டைகள், பதக்கங்கள் எனப் பல அழகூட்டல்களுடன் சிகரம் கம்பீரமாக அமைந்துள்ளது. மேலே வேசரத்தூபி. கிரீவகோட்டங்களைத் தழுவியுள்ள நான்முக அரைத்தூண்கள் போதிகைகளுடன் கூரையுறுப்புகள் தாங்க, மேலே கூடுவளைவுகளுடன் அழகிய கபோதம். கபோதத்தின் மேல் வேதிகையும் கீர்த்திமுகப் பெருநாசிகைத் தலைப்பும் அமைந்து கோட்டத்தைத் தனித்தன்மையதாக்குகின்றன. கிரீவகோட்டங்களில் தெற்கில் வலப்புறமிருந்து உயர்ந்து விரியும் ஆலமரத்தடியில் இறைவன் வீராசனத்திலுள்ளார். கைகள் சிதைந்துள்ள அவரது செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். கழுத்தணிகள், தோள், கை வளைகள் முப்புரிநூல் என மடித்த துண்டு, சிற்றாடை பெற்றுள்ள அவரது வலப்பாதம் முயலகன் மீதுள்ளது. இருபுறத்துமுள்ள முனிவர்களில் வலப் புறத்தார் அர்த்தபத்மாசனத்தில் இருகைகளையும் முழங்கால் மீதிருத்தித் தவக்கோலம் காட்ட, இடப்புறத்தார் முழங்கால்களை மடித்து அமர்நிலையில் கூப்பிய கைகளுடன் வழிபாட்டிலுள்ளார். மேற்கு கிரீவகோட்டத்தில் சுகாசனத்திலுள்ள விஷ்ணு பின் கைகளில் சங்கு, சக்கரம் கொண்டுள்ளார். முன்கைகளும் முழங் கால்களுக்குக் கீழ்ப்பட்ட உடல்பகுதியும் சிதைந்துள்ளன. வடக் குக் கோட்டத்தில் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை கொண்டு நான்முகன் சுகாசனத்திலுள்ளார். சடைமகுடம், பதக்க மாலை, பூட்டுக்குண்டலங்கள், முப்புரிநூல், மாலை பெற்றுள்ள அவரது முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் உள்ளன. கிழக்கிலுள்ள முருகனும் சுகாசனத்திலுள்ளார். பின்கைகளில் சக்தி, வஜ்ரம் அமைய, முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். விமானச் சுவரின் முப்புறத்துமுள்ள சட்டத்தலை உருளை அரைத்தூண்களால் தழுவப்பட்டுள்ள கோட்டங்களை எளிய வளைவுத் தோரணங்கள் தலைப்பிட்டுள்ளன. மேற்கு, வடக்குக் கோட்டங்கள் வெறுமையாக அமைய, தென்கோட்டத்தில் பின் னாளைய ஆலமர்அண்ணல். குப்புறப் படுத்திருக்கும் முயலகன் முதுகில் வலப்பாதம் ஊன்றி வீராசனத்திலுள்ள இறைவனின் பின் கைகளில் படமெடுத்த பாம்பு சுற்றிய உடுக்கையும் தீச்சுடரும். முறமென விரிந்த சடைப்பாரமும் பதக்கமாலையும் சவடியும் தோள், கை வளைகளும் சிற்றாடையும் வீரக்கழலும் அணிந்துள்ள இறைவனின் வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கையில் சுவடி. இறைவனின் தலைக்கு மேல் காட்டப்பட்டுள்ள மரத்தில் கிளி. செவிகளில் மகர, பனையோலைக் குண்டலங்கள். யோக தட்சிணாமூர்த்தியாக அறியப்படும் இவ்விறைவனின் முன் காரை யாலான வட்டமேடை. இக்கோட்டத்தின் முன் எழுப்பப்பட்டுள்ள பின்னாளைய காரைக் கட்டடம் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகை, சுவர், கூரையுறுப்புகள் பெற்றுள்ளது. தெற்கில் வாயில் பெற் றுள்ள இதன் சுவரில், கிழக்கிலும் மேற்கிலும் திறப்புகள். இதன் கூரையில் சுதைவடிவிலுள்ள ஆலமர்அண்ணல் பின்கைகளில் பாம்பு சுற்றிய உடுக்கை, தீச்சுடர் கொண்டு, வல முன் கை அக்க மாலையுடன் சின்முத்திரை காட்ட, இட முன் கையை முழங்கால் மீதிருத்தி உத்குடியில் உள்ளார். சடைமகுடம், பல்வேறு அணிகள், சிற்றாடை கொண்டுள்ள இறைவனின் இருபுறத்தும் முனிவர்கள். அவர் தலைக்குப் பின் மரம். மண்டபங்கள் விமானக் கட்டமைப்பில் ஆனால், சாலை முன்தள்ளலின்றி அமைந்துள்ள முகமண்டபத்தின் கோட்டங்களில் வடக்கிலுள்ள கொற்றவை பின்னாளைய சிற்பம். பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டு, கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், கழுத்தணிகள், தோள், கை வளைகள், மார்புக்கச்சு, பட்டாடை, தாள்செறிகள் பெற்று எருமைத்தலைமீது நிற்கும் இறைவியின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் உள்ளன. தென்கோட்டத்தில் அடுக்குப்பாறைகள் மீது வீராசனத்தி லுள்ள ஆலமர்அண்ணல் சிற்பத்தின்5 வல முன் கை சிதைந்துள் ளது. இட முன் கையில் சுவடி. பின்கைகளில் வலப்புறம் பாம்பு சுற்றிய உடுக்கையும் இடப்புறம் பாம்பும் கொண்டுள்ளார். கீழிறக்கியுள்ள இடக்காலின் பாதம் குப்புறக் கவிழ்ந்துள்ள முயலகன் முதுகின் மீதுள்ளது. சுடர்முடி, தோள், கை வளைகள், கோவணஆடையுடனுள்ள முயலகனின் வலக்கையில் பாம்பு. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், பதக்கமாலை, சிற்றாடை, தோள், கை வளைகள் பெற்றுள்ள இறைவனின் பின்புறம் ஆலமரம். அடுக்குப்பாறையின் பக்கப்பகுதிகளில் பக்கத்திற்கு இருவராக நான்கு முனிவர்கள். வலப்புற இருவரில் பின்னவர் போற்ற, இடப்புற இருவரில் முன்னவர் போற்றுகிறார். துணைத்தளமோ, தாங்குதளமோ அற்ற பெருமண்டபத்தின் சுவர்களில் தூண்களோ, கோட்டங்களோ இல்லை. கிழக்கில் வாயில் பெற்றுள்ள இம்மண்டபத்தின் மேல்நிலையில் இரு புறத்தும் கவரிப்பெண்கள் நிற்க, யானைத்திருமகளின் சிற்பம். வாயிலின் மேற்புறத்தே கூரைநீட்டலாக வெளிப்படும் கபோதத் தின் மேலிருக்குமாறு அமைக்கப்பட்டுள்ள வளைமாடத்தில் நந்தி யின் மேல் சுகாசனத்தில் சிவபெருமானும் அருகில் உமை யன்னையும் சுதைவடிவங்களாகக் காட்சிதருகின்றனர். கூரையின் தெற்கு, வடக்கு மூலைகளில் சுதையாலான நந்திகள். உட்புறம் முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகள் கொண்டு கூரைதாங்கும் இம்மண்டபத்துள் வடக்கில் அம்மன் திருமுன் முகமண்டப வாயிலும் மேற்கில் இறைத்திருமுன் முகமண்டப வாயிலும் உள்ளன. தூண்களின் சதுரங்களிலுள்ள சிற்பங்களில் பல சிதைந்துள்ளன. கீழ்ச்சதுரங்களின் நான்கு முனைகளிலும் பாம்புப்படம். இடைச்சதுரங்களின் மேல்முனை களிலும் மேல்சதுரங்களின் கீழ் முனைகளிலும் நாற்புறத்தும் குமிழ்கள். சில கட்டுகள் முப்பட்டை பெற, சில கட்டுகள் சிதைந் துள்ளன. இருகைகளையும் விரித்து உயர்த்தியவாறு ஓடிவரும் நிலையில் காட்டப்பட்டுள்ள ஆடவர் சிற்பம் நன்கு அமைக்கப் பட்டுள்ளது. மற்றொரு சதுரத்திலுள்ள கைகூப்பிய ஆடவர் இம்மண்டபத்தை உருவாக்கியவர்களுள் ஒருவராகலாம். சில சதுரங்களில் விஜயநகரஅரசுக் காலக் குந்துசிம்மங்களைக் காண முடிகிறது. மண்டபத்தின் வடகிழக்கு மேடையில் ஒன்பான் கோள்களின் சிற்பங்கள். அம்மன் திருமுன் முகமண்டப வாயிலின் வலப்புறச் சுவரில் பிள்ளையாரும் இடப்புறச் சுவரில் மயில்மீது சுகாசனத்தில் முருகனும் காட்சிதருகின்றனர். மண்டபச் சிற்பங்கள் பெருமண்டபத்தின் தென்மேற்குப் பகுதியில் கருங்கல் தளத்தின் மேல் கிழக்குப் பார்வையாக சமபாதத்தில் மிதியடி களுடன் நிற்கும் பிற்சோழர் கால அகோரவீரபத்திரரின் பின்கை களில் வலப்புறம் அம்பு, இடப்புறம் வில். வீரபத்திரர் இட முன் கை பக்கத்தில் நிறுத்தியுள்ள கேடயத்தின் மேல் அமர, வல முன் கையில் ஓங்கிய வாள். மகுடம், குண்டலங்கள், கழுத்தணிகள், தோள், கடக, கை வளைகள், கழல்கள் அணிந்துள்ள அவரது இடையில் சிற்றாடை. முழங்கால்களைச் சுற்றி மேலேறும் மண்டையோட்டு மாலை இடுப்பளவில் மறைகிறது. மீசை யுடனுள்ள அவரை வணங்கிய நிலையில் வலப்புறத்தே ஆட்டுத்தலையுடன் தக்கன்.6 சமபாதத்தில் கரண்டமகுடத்தை ஒளிவட்டம் அலங்கரிக்க, குண்டலங்கள், கழுத்தணிகள், முப்புரிநூல், உதரபந்தம் பெற்று, இருகைகளிலும் தாமரைகளுடன் நிற்கும் கதிரவனின் இடையில் இடைக்கட்டுடனான பட்டாடை. முகமண்டபத்தைப் பார்த்தவாறு பெருமண்டபத்தின் நடுப்பகுதியில் சிறு மேடைமீது அமர்ந்துள்ள நந்தியின் கழுத்தில் மணி. தம் ஊர்தியான நாய் பின் நிற்க, சமபாதத்தில் வெற்றுடம்பினராய்க் காட்சிதரும் பைரவரின் பின்கைகளில் பாம்பு சுற்றிய உடுக்கை, பாசம். முன்கைகளில் வலப்புறம் முத்தலைஈட்டி, இடப்புறம் தலையோடு. சுடர்முடி, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, மிகநீண்ட பட்டையான முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், கழல்கள் பெற்றுள்ள அவரது இடையில் பாம்பு; தோளிலிருந்து கணுக்கால்வரை தொங்கும் பட்டைமாலை. பாம்புப் படமும் தாமரைவரித் தழுவலும் பெற்ற நிலைக்கால்களுடன் விளங்கும் முகமண்டப வாயிலின் உயரம் 1. 70 மீ., அகலம் 96 செ. மீ. வாயிலின் வலப்புறம் இலலிதா சனத்திலுள்ள பிள்ளையார் வல முன் கையில் தந்தமும் பின்கைகளில் அங்குசம், பாசமும் கொண்டுள்ளார். கரண்டமகுடம் சரப்பளி, உதரபந்தம், முப்புரிநூல், சிற்றாடை பெற்றுள்ள அவரது இட முன் கை மோதகத்தை இடம்புரித் துளைக்கை சுவைக்கிறது. கிழக்கு மேற்காக 3. 20 மீ. நீளமும் தென்வடலாக 2. 50 மீ. அகலமும் பெற்று வெறுமையாக உள்ள முகமண்டபத்தை அடுத்துள்ள கருவறையின் வாயிலும் பாம்புப் படமும் தாமரைவரித் தழுவலும் பெற்றுள்ளது. 1. 70 மீ. உயரம், 94 செ. மீ. அகலம் பெற்றுள்ள இவ்வாயிலை அடுத்து விரியும் கருவறை 2. 68 மீ. சதுரமாக அமைய, அதில் வேசர ஆவுடையார் மீது உயரமான உருளைப்பாணம் கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகிறார் சேமீசுவரர். கல்வெட்டுகள் இக்கோயில் வளாகத்தில் ஐந்து கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் நந்திப்பந்தல் தூண்களிலுள்ள கல்வெட்டுப் படிக்க முடியாதவாறு சிதைந்துள்ளது. கோபுரவாயிலின் வலப்புறச் சுவரிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டு மதில்சுவர் கட்டுமானம் கூற, கோபுர வடஅகச்சுவரில் பன்னிரண்டு வரிகளில் தெலுங்குக் கல்வெட்டு.7 கல்வெட்டுப் படியெடுப்பு குலதீபநாடாள்வார் இறைவன் விமானத் தாங்குதளத்திலிருந்து படியெடுக்கப் பட்ட மூன்றாம் குலோத்துங்கர் காலக் கல்வெட்டு, இராஜராஜ வளநாட்டு மீமலையான ஜெயங்கொண்டசோழச் சதுர்வேதி மங்கலத்துப் பிடாகையான அலகறை, குலோத்துங்க சோழ நல்லூர் என்றும் அழைக்கப்பட்டதாகக் கூறுகிறது. செந்நி வாழ்க்கை8 எனும் ஊரினரான சேமன் தாயிலும் நல்லானான குலதீபநாடாள்வார், பாண்டி குலாசனி வளநாட்டு இடையாற்று நாட்டுத் திருத்தவத் துறையில் பாடிகாவல் பொறுப்பிலிருந்தார். அவரது முன்னோர் களும் இப்பகுதியிலிருந்து ஆட்சி செய்த மையைத் திருவரங்கம், திருச்செந்துறைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.9 குலதீபநாடாள்வார் அலகறையான ஜெயங்கொண்ட சோழ நல்லூரில் மீமலைநாட்டுக் கயிலாசமுடையாராகத் தம் பெயரில் எழுப்பிய சேமீசுவரமுடையார் கோயில், அதன் முற்றம், மடை விளாகம், நந்தவனங்கள், தீர்த்தக்குளம் அமைய, ஜெயங்கொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்து சபை ஏறத்தாழப் பத்தரை மா நிலம் 660 அன்றாடு நற்காசுகளுக்குத் தேவதானமாக விற்றது. அத்துடன், சதுர்வேதிமங்கலத்தின் விளைநிலமான பிடாகை நிலத்தில் இரு போகம் விளையும் நிலமாக (பல்லவப்பாடியில் அமைந்த நிலத்துண்டு மட்டும் ஒரு போக நிலமாக அமைந்தது) ஏறத்தாழ இருபது மாவும் குலதீபநாடாள்வாரிடம் சபை பெற்றுக்கொண்ட அன்றாடு நற்காசு 2,060க்குத் தேவதானமாக விற்கப்பட்டது. நம்பியாழ்வான் திருவரங்கப் பெருமானால் எழுதப்பெற்ற இவ்விரு விற்பனை பேசும் ஆவணம் சபையால் கோயிலில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டது. இரு நிலவிற்பனைகளை விரித்துரைக்கும் இக்கல்வெட்டு, இரண்டாம் நிலத்தொகுப்பிற்கு நீரளித்த திருச்சிற்றம்பல வாய்க் கால், வளவன் வாய்க்கால், ஜெயங்கொண்ட சோழ வாய்க்கால் ஆகிய பாசன அமைப்புகளின் பெயர்களையும் ஆடவல்லான் வதி என நீர்வடிகால் ஒன்றின் பெயரையும் வெளிப்படுத்துகிறது. அரசாணை கோபுரத்தின் தென், வடஅகச்சுவர்களிலுள்ள தமிழ்க் கல் வெட்டு, சேமீசுவரத்தை எடுப்பித்த குலதீபநாடாள்வார், ஜெயங் கொண்ட சோழச் சதுர்வேதிமங்கல சபையிடம் கோயிலுக்காக விலைக்குப் பெற்ற நிலங்களை மூன்றாம் குலோத்துங்கரின் அரசாணை இறையிலித் தேவதானமாக்கிய தகவலைத் தருகிறது. சேமீசுவரம் கோயில் தேவர்கன்மிகளுக்கும் மாகேசுவரக் கண்காணி செய்வார்களுக்கும் வழங்கப்பட்ட அரசாணையாக விளங்கும் இக்கல்வெட்டு, பிற்சோழர் கால இறுதியில் நிலவிய வரிமுறைகளின் படிநிலைகள் பற்றிய பல தரவுகளை உள்ளடக்கியுள்ளது. இறைவனின் வழிபாடு, படையல் உள்ளிட்ட நிவந்தங் களுக்காக அலகறையிலும் அதன் சிற்றூர்களான இராஜேந்திர சோழ நல்லூரிலும் மாணிக்கநல்லூரிலும் கோயில் பெயருக்கு, ஜெயங்கொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி மகா சபை விலையாவணம் செய்து கொடுத்த ஏழரை வேலி மூன்றரைமா முந்திரிகைக் கீழ் அரைவேலி இரண்டு மா நிலம் மூன்றாம் குலோத்துங்கசோழரின் 13ஆம் ஆட்சியாண்டு முதல் தேவதான இறையிலியாக்கப்பட்டது. வரிநீக்கம் செய்யப்பட்டமை சுட்டுமிடத்து, "முன் இறை (வரி) கட்டினபடியும் ஊர்க்கீழ் இறையிலி நிலத்துந் தரமிலி நிலத்தும் ஒபாதி (நிலவரி) ஏற்றுகையும் தவிர்ந்து 13ஆம் ஆண்டு முதல் அந்தராயம் பாட்டம் உட்படத் தேவதான இறையிலியாக இட்டும்" என்று வரிநீக்கச் செயல்முறை விளக்கப்பட்டுள்ளது. "இந்நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு ஐம்பதிந் கலமாக இறை கட்டினபடியும், எழுதிப் புகுந்தால், தரஓபாதி நெல்லு ஊரில் சுருக்கி, இந்நெல்லு இறைகட்டின நெல்லுக்கு ஏறுமாகில், இந்நெல்லே இறைக்கட்டாகக் கொள்ளவும். இந்நிலத்துக்கு அடை முதற்படியாய் இறுத்து வருகிற நெல்லு இறைகட்டின நெல்லுக்கு ஏறுமாகில், அடை முதற்படி நெல்லும் நம் நத்தத்துக்கு உடலாகக் கொள்ளவும்" எனும் கல்வெட்டுத் தொடர்கள், இந்நிலத்தொகுப்பின் மீதிருந்த வரி குறித்தும், வரிநீக்கத்தால் நேரும் மாற்றங்கள் குறித்தும் விரிவாகச் சுட்டுகின்றன. கல்வெட்டின் பிற்பகுதி, குலோத்துங்கசோழ நல்லூர்க் கொல்லை நிலத்தில் கோயில் திருமுற்றம், திருமடைவளாகம், தீர்த்தக்குளம் ஆகியவற்றிற்காக நாடாள்வாருக்கு சபை விற்பனை செய்த இரண்டரை வேலி நான்கு மா நிலமும் நந்தவனத்திற்கென விற்கப்பட்ட ஒன்றரை வேலி ஒருமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் முக்கால் வேலி ஒருமா முக்காணி முந்திரிகை நிலமும் சேர்த்து நாலேகால் வேலி அரைக்காணி முந்திரிகைக் கீழ் முக்கால் வேலி ஒருமா முக்காணி முந்திரிகை நிலத்தில் முன்னுடையாரையும் இறைக்கட்டுக்கு உடலாய் வருகிற படியையும் தவிர்த்து நீங்கலாக நீக்கியமை தெரிவிக்கிறது. இந்நிலத்துக்குத் தரம் நிருணயிக்கப்படுமாயின் அதற்கான வரிநெல் என்னாகும் என்பது குறித்த தகவலை அறியமுடியாதபடி கல்வெட்டு முற்றுப்பெறாதுள்ளது. காலம் இவ்வளாகத்தே கிடைத்துள்ள மூன்றாம் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகளின் அடிப்படையில் கோயிலின் காலத்தைப் பொ. கா. 12ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம். குறிப்புகள் 1. ஆய்வுக்கு உதவிய திரு. க. சரவணன், சிவாச்சாரியார் த. சுப்புரத்தினம், கூடுதல் தகவல்களைக் களஆய்வின் வழி வழங்கிய மைய ஆய்வரும் ஆசிரியருமான திருமதி மு. பி. நந்தினி, மீளாய்வுக்கு உதவிய திரு. கு. சோமசுந்தரம் (சோமு) ஆகியோ ருக்கும் கட்டுரையாக்கத்திற்குத் துணைநின்ற வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவனுக்கும் உளமார்ந்த நன்றி. 2. வரலாறு 25, ப. 27. 3. வரலாறு 25, பக். 64 - 66. 4. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து 25. 7. 2015. 5. இச்சிற்பம் விமானத் தென்கோட்டத்திலிருந்து சிதைவின் காரணமாக இங்கு இருத்தப்பட்டுள்ளது. தென்கோட்டத்தில் புதிய ஆலமர்அண்ணல் இடம்பெற்றுள்ளார். 6. சிராப்பள்ளி மாவட்டப் பழங்கோயில்களில் தக்கனுடன் அமைந்த வீரபத்திரர் சிற்பங்கள் மிக அரிதாகவே காணக் கிடைக்கின்றன. 7. தினமணி, தி இந்து தமிழ் 25. 7. 2015; டெக்கான் கிரானிக்கிள் 26. 7. 2015. 8. அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன், சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு, ப. 51. 9. மேலது, ப. 68. தெ. க. தொ. 24: 129-131. டெக்கான் கிரானிக்கிள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 11. 9. 2015, தி இந்து, தினகரன் 12. 9. 2015. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |