http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 149
இதழ் 149 [ மே 2020 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
சமீபத்தில் திருச்செந்தூர் சென்றபோது அங்கிருந்து உடன்குடி வழியாகப் பள்ளக்குறிச்சி என்ற கிராமத்திற்குக் குலதெய்வ வழிபாடு நிமித்தமாகச் சென்றிருந்தேன். எங்கள் குலதெய்வக் கோயிலுக்கு மிக அருகிலேயே ஒரு பழங்காலச் சிவாலாயம் உள்ளது. ஆலயத்தின் முன்பு ஓர் அருமையான குளமும் அமைந்து அந்த ஆலயவளாகம் அற்புதமான சுற்றுப்புறத்தை அமைவிடமாகக் கொண்டிருந்தது.
(கழுகுப் பார்வை-முழு கிராமமும்) உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், பாதங்களுடன் கூடிய கண்டம், பட்டிகை, பாதங்களுடன் கூடிய வேதிகைகள் பெற்ற பாதபந்தத் தாங்குதளம் கொண்ட இருதள நாகர-வேசரக் கலப்பு விமானம். பத்திப்பிரிப்பு மிகவும் நேர்த்தியாகக் காட்டப்பட்டுள்ளது. தூண்களின் அமைப்பிலேயே பத்திப்பிரிப்பு எளிமையாகக் கர்ணம்-சாலை-கர்ணம் என்ற முறையில் காட்டப்பட்டுள்ளது. சாலைகள் கோட்டங்கள் பெற்றுள்ளன. தெற்கு மட்டும் தஷிணாமூர்த்தி சிற்பம் பெற்றுள்ளது. முதல் தள முடிவில் கபோதத்திற்கு மேல் எழும் பூமிதேசம் மிகவும் தனித்துவமான முறையில் காட்டப்பட்டிருப்பதே இக்கட்டுரை எழுத என்னைத் தூண்டியது. இவ்வாலயக் கருவறைக் கோட்டங்கள் இயல்பாக அங்கங்கு இருக்கவேண்டிய கோட்டத் தெய்வங்கள் பெறாமல் தெற்கில் மட்டும் தஷிணாமூர்த்தி பெற்றிருப்பது சற்றுக் கவனிக்கத்தக்கது. பின்னாளில் குருவார வழிபாட்டிற்காகச் சேர்க்கப்பட்ட சன்னதியாகத் தஷிணாமூர்த்தி சன்னதியைக் கருத இடமுண்டு. பொதுவாகச் சிவாலயக் கருவறைக் கோட்டங்களில் தெற்கே தஷிணாமூர்த்தியும், மேற்கே பெருமாள் ரூபங்களில் ஒன்றும் வடக்கே பிரம்மாவும் அமைவது வழக்கம். (சில கோயில்களில் இம்மரபு மாற்றப்பட்டிருப்பதையும் காண்கிறோம்). ஆனால் மேற்கூறிய இம்மரபு இவ்வாலயத்தில் தனித்தன்மையுடன் பூமிதேசத்தின் மையப்பகுதியில் இதே அமைப்பில் வடக்கில் பிரம்மாவும் மேற்கில் யோகநரசிம்மரும் தெற்கில் வீணாதர தஷிணாமூர்த்தியும் குறுஞ்சிற்பங்களாக எழிலுடன் காட்டப்பட்டுள்ளனர். வடக்கு-பிரம்மா மேற்கு-யோக நரசிம்மர் தெற்கு-வீணாதர தஷிணாமூர்த்தி (நான் வேறெங்கும் பார்த்ததில்லை. இக்கட்டுரையை வாசிப்போர் அவரவர் பகுதிகளில் எங்கேனும் இதுபோல் பார்க்க நேரிட்டால் எனக்குத் தெரியப்படுத்தவும் (9443324665). காண ஆவலாக உள்ளேன்) மேலும், இதே பூமிதேச யாளிவரிகளில் சில இடங்களில் சிவபுராணக் காட்சிகள் குறிப்பாகக் கண்ணப்ப நாயனார் சரித்திரம், கோ (பசு)லிங்க வழிபாடு, வாலி(வானர) லிங்க வழிபாடு, கஜேந்திர லிங்க வழிபாடு, நாரதர் மற்றும் இசையுடன் கூடிய நாட்டிய நிகழ்ச்சிகள் போன்ற காட்சிகள் எழிலுடன் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இது இந்தக் கோயிலின் தனித்தன்மையாக இக்கட்டுரையாசிரியர் உணர்கிறார். மேலும் ஆரச்சுவர்கள் அனைத்தும் ஆறங்கம் பெற்றுச் சுதையாக இருப்பினும் அழகாக அமைந்துள்ளன. (முக மண்டப பூமி தேசப் பகுதி-இசையுடன் கூடிய நாட்டியம்) (வடக்கு-கருவறை மற்றும் முகமண்டப பூமி தேசம்) (கருவறை-தெற்கு கண்ணப்ப நாயனார் சரித்திரம், கோ (பசு)லிங்க வழிபாடு, வாலி(வானர) லிங்க வழிபாடு, கஜேந்திர லிங்க வழிபாடு) |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |