http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 149
இதழ் 149 [ மே 2020 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
பூர்வாசிரமத்தில் திண்ணன் என்ற கைதேர்ந்த வில்லாள வேடன் வேட்டையாடச் சென்றபோது, கானகத்தில் சிவனிற்குக் கட்டப்பட்டிருந்த ஒரு சிறு சிவாயலத்தில் இருந்த சிவலிங்கத்தைக் கண்டான். திண்ணனுக்குச் சிவன்மீது இருந்த ஆழமான பக்தி வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதது. மேலும் பக்தி என்பது உணர்வுக்குட்பட்ட விஷயமாகையால் வார்த்தைகளில் வடிக்க முயற்சிக்கலாமேயொழிய முடியுமா என்பது சற்று சந்தேகத்திற்குரியதுதான்!
இருந்தாலும் முயல்வது மனித தர்மமல்லவா? இறைவனை வணங்கும்போது ஏதோவொன்றை அர்ப்பணிக்க அவ்வேடன் விரும்பினான். வேடன் தானே?! சர்க்கரைப் பொங்கலோ, தயிர் சாதமோ தயார் செய்து படைக்க அறிந்திருக்கவில்லை. முறையாக அர்ப்பணிப்புகள் செய்யும் வழிமுறைகளை அறியாததால், எதனைத் தான் விரும்பி உண்பானோ அந்த மாமிசத்தை லிங்கத்திற்கு அர்ப்பணித்து, லிங்கரூபமாக உள்ள சிவன் அதை ஏற்றுக்கொண்டதாகப் பாவித்து மகிழ்ச்சியுடன் இல்லம் செல்வதை வழக்கமாகக் கொண்டான். சற்று தூரத்தில் வாழ்ந்து வந்த சிவகோசரியார் என்ற அந்தணரால் அந்தக் கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது. அவரும் சிவபக்தராக இருந்த போதிலும், தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து கோயிலுக்குச் செல்ல முடியாததால், மாதத்திற்கு ஒரு சில முறைகள் மட்டுமே வந்து செல்வார். அடுத்தநாள் சிவகோசரியார் வந்து பார்த்தபொழுது, லிங்கத்திற்கு அருகில் மாமிசம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை ஏதோ சில காட்டு விலங்குகள் செய்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கோயிலைச் சுத்தம் செய்து தன் பூஜைகளை முடித்துவிட்டுச் சென்றார். அடுத்தநாள் திண்ணன் இன்னும் அதிகமாக மாமிசத்தைக் கொண்டுவந்து படைத்துவிட்டு, பூஜையோ சடங்கோ எதுவும் தெரியாவிட்டாலும் சிவனுடன் ஏற்பட்ட மானசீகமான ஓர் உறவு அங்கேயே உட்கார்ந்து சிவனிடம் மனமாரப் பேசிவிட்டுச் செல்லுமளவு வளரத்தொடங்கியது. தான் வேட்டையாடிய மாமிசத்தைப் படைப்பதற்காகத் தினமும் அக்கோயிலுக்கு வரத் துவங்கினான். திடீரென்று ஒருநாள் லிங்கத்தைச் சுத்தம் செய்யவேண்டும் என்று எண்ணினான். சுற்றும் முற்றும் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீரோ அதனை எடுத்து வர தேவையான பாத்திரங்களோ கண்ணில் படவில்லை.இருப்பினும் லிங்கத்தைச் சுத்தம் செய்தே தீருவது என்ற நினைப்போடு இங்குமங்கும் அலையும்போது கண்ணில் பட்ட நீரோடைக்குச் சென்று வாயில் தண்ணீரை நிறைத்துக் கொண்டுவந்து லிங்கத்தின்மீது வாயாலே ஊற்றினான். இவ்வாறாக அவன் சிவனுக்கு நித்தியப்படி "அபிஷேகம்" செய்யத் தொடங்கினான். வழக்கமாகப் பூஜை செய்யும் அந்தணர் சிவகோசரியார் ஒரு நாள் கோயிலில் இருந்த மாமிசத்தையும், லிங்கத்தின் மீது இருந்த எச்சிலையும் கண்டு தாங்கமுடியாத அருவருப்படைந்தார். அதுகாறும் வெறும் மாமிசத்துண்டுகளை மட்டுமே பார்த்திருந்த அந்தணர் இது காட்டு விலங்குகளின் சேட்டை என்று மட்டுமே எண்ணி வந்த நிலையில் லிங்கத்தின் மேல் படிந்த எச்சிலைக் கண்டவுடன் இதை எந்தவொரு விலங்கும் செய்திருக்காது, இதைச் செய்தது ஒரு மனிதனாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தார். இருப்பினும் கோயிலைச் சுத்தம் செய்து, பூஜை செய்வதற்கு முன்பு லிங்கத்தைத் தூய்மைப்படுத்த மந்திரங்கள் உச்சாடனம் செய்து, அர்ப்பணிப்புகள் செய்துவிட்டுக் கிளம்பினார். ஆனால் ஒவ்வொரு முறை அவர் திரும்பி வந்தபோதும், லிங்கம் அதே 'அசுத்தமான' நிலையில் இருப்பதைக் கண்டு வெறும் கவலை என்ற நிலையிலிருந்து கோபம் என்ற நிலைக்குச் சென்றார். இருப்பினும் அப்பாவி அந்தணரான அவரால் என்ன செய்யமுடியும்! ஒருநாள் கண்களில் கண்ணீர் மல்கச் சிவனிடம் வந்து, 'மஹாதேவா!, இப்படிப்பட்ட அசிங்கம் உனக்கு நிகழ்வதை நீ எப்படி அனுமதிக்கலாம்?' என்று கேட்டார். அப்போது சிவன் அசரீரியாக அந்தணருக்குப் பதில் உரைத்தார். 'எதை நீ அசிங்கம் என்று சொல்கிறாயோ, அதுவே எனக்கு இன்னொரு பக்தன் இதயபூர்வமாய் செய்த அர்ப்பணிப்பு. நான் அவன் பக்திக்குக் கட்டுப்பட்டு அவன் அர்ப்பணிக்கும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன். அவன் பக்தியின் ஆழத்தை நீ பார்க்க விரும்பினால், அருகில் எங்காவது ஒளிந்துகொண்டு கவனித்துப்பார். அவன் சீக்கிரமே இங்கு வருவான்'. சிவன் திருவிளையாடலுக்கு தயாரானார்! அந்தணர் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார். அப்போது திண்ணன் மாமிசத்துடனும் தண்ணீருடனும் வந்தான். வழிபாட்டுக்குத் தயாரானான். வழக்கமான "அபிஷேகம்" செய்தான்! வழக்கமான நிவேதனமும் மாமிசத்தால் படைத்தான்! வழக்கமாக அவருடன் பேசவும் தலைப்பட்டான்! ஆனால் வழக்கமாக ஏற்படும் திருப்தியும் மகிழ்ச்சியும் அன்று அவனுக்கு ஏற்படவில்லை! இது அவனுக்கு உள்ளுணர்வில் சிவன் அவனது வழிபாட்டை அன்று ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை உணர்த்தியது. எப்போதும் போல் சிவன் தன் அர்ப்பணிப்பை ஏற்காததைக் கண்டு குழம்பிப்போனான். தான் என்ன தவறு செய்தோம் என்று யோசித்துக்கொண்டே லிங்கத்தை உற்று கவனித்தான்! அப்பொழுது அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் உறைய வைத்தது! ஆம்! லிங்கத்தின் வலது கண்ணிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டான். உடனே காட்டிற்குள்ளே ஓடினான், சுற்றிச் சுழன்றான். சில பச்சிலைகளைக் குழம்பாக்கி அதை வைத்துக் குணமாக்க முயற்சித்துப் பார்த்தான். ஆனால் குணமாகவில்லை. மாறாக இரத்தம் இன்னும் அதிகமாக வந்தது. குழம்பிப் போனான்! என்ன செய்வது ? மருந்துக்குக் கட்டுப்படாத நோய்க்குத் தீர்வு என்ன என்று தீர்க்கமாக யோசித்தான்! கானகத்தில் முற்றிய நோய்க்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சில காட்சிகள் கண்முன்னே வந்து சென்றன. அவன் என்ன செய்யவேண்டும் என்பதை அக்காட்சிகள் அவனுக்குப் புலப்படுத்தின. ஆம்! அவன் அறுவை சிகிச்சை செய்து இறைவனைக் குணப்படுத்தி விடுவது என்று தீர்மானித்தான். தீர்மானித்தவுடன் குதூகலம் அவனை ஆட்கொண்டது. அறுவை சிகிச்சைக்கு உபகரணங்கள் வேண்டுமே? எங்கு போவது என்று யோசிக்க, தான் தரித்திருந்த அம்பறாத்துணி ஞாபகம் வந்தது. வேடனல்லவா? எப்பொழுதும் வைத்திருக்கும் கருவிகள் இன்று இறைவனுக்குக் கண் கொடுக்க உதவப்போகின்றன என்று எண்ணியவுடன் அவன் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது! ஆகா, வில்லும், அம்பும் வாழ்வில் இறைவனுக்கு உதவும் ஆயுதங்களாக மாறிப்போனதே! என்று மகிழ்ந்து இறுதியில் தன்னுடைய கண்ணை அர்ப்பணிக்க முடிவு செய்தான். தன் பாணங்களில் ஒன்றை எடுத்து, தன் கண்ணைப் பெயர்த்தெடுத்து லிங்கத்தில் பொருத்தினான். ஆஹா! என்ன ஆச்சர்யம்!!! இரத்தம் வடிவது நின்றே போனது! திண்ணன் சற்று நிம்மதியடைந்தான். ஆனால் அந்த நிம்மதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆம்! இப்போது லிங்கத்தின் இடது கண்ணிலிருந்து இரத்தம் வடிவதை கவனித்தான். ஆனால் இம்முறை அவன் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் தன் சிகிச்சையின் கைவண்ணத்தில் சிவனுக்கு ஒருகண் கிடைத்து அது இரத்தம் வடியாமல் குணமானது கண்டு நிறைவுற்றிருந்தான்! நாம் விரும்பும் உணவை நிவேதனமாக ஏற்றுக் கொண்ட இறைவன் நம் உடலில் இவ்வுலகையே பார்த்து மகிழ்ந்துணர அவனால் கொடுக்கப்பட்ட அற்புதமான கண்களை இன்று நிவேதனமாகக் கேட்டிருக்கிறான்! நல்லவேளை இதனை உணரும் அறிவையும் கொடுத்தானே! ஈசனுக்கு ஈயக் கண்களைப் பெற்ற தான் பெரும் பாக்கியவான் என்றுணர்ந்தான். கண்களை இழக்கும் கவலைக்குப் பதிலாக இறைவனுக்குக் கண்கொடுக்கக் கண்கள் உள்ளனவே என்ற பரிபூரணத் திருப்தியே அவனை ஆட்கொண்டு பேரானந்தப் பெருவெளியிலே ஆழ்த்தியது. எனவேதான், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் அவனுக்கு குழப்பமில்லை! தன் இன்னொரு கண்ணை எடுத்திட இன்னொரு பாணத்தைக் கண்ணில் வைத்தான்! ஆனால் இப்போது ஒரு குழப்பமிருந்தது! இரண்டு கண்களும் இல்லாமல் எங்கு பொருத்துவது என்று தெரியாமல் போனால் என்ன செய்வது? ஒரு யோசனை வந்தது! உடனே முகம் பொலிவுற்றது! ஆம்! யாரும் செய்யத்துணியாத அந்தச் செயலை இறைவனின் கண் குணமாகும் பொருட்டுச் செய்யத் துணிந்து விட்டான்! ஆம்! உண்மையான பக்திக்கு மரியாதை தெரியாது! எங்கு அகம்பாவம் இல்லையோ அங்கு மரியாதையும் தேவைப்படாது! இறைவனின் கண்ணிருக்கும் இடத்தை அடையாளப்படுத்த லிங்கத்தின்மீது தனது காலை வைத்து மற்றொரு கண்ணையும் பெயர்த்தெடுக்க முற்படும்போது மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்தணர் சிவகோசரியார் திகைத்தார்! இந்த மகானுபவரின் பக்திக்கு முன்னே நாமெல்லாம் எம்மாத்திரம்? அடடா இது புரியாமல் நாம் என்னென்னவோ நினைத்து இறைவனிடமே முறையிட்டுவிட்டோமே என்று தவறை நினைத்து வருந்தினார்! இறைவா!!! இவரைத் தவறாக நினைத்த என்னை மன்னித்து விடு என்று கண்களால் கண்ணீர் சொறிந்தார். அப்பொழுது ஒரு அதிசயம் நடைபெற்றது! திண்ணனுடைய பரிபூரண பக்தியைக் கண்ட லிங்கரூப சிவவடிவத்திலுருந்து ஒரு கை கிளம்பித் திண்ணனின் கையைப் பற்றி தடுத்ததோடல்லாமல் "நில்லு கண்ணப்ப!" என்ற ஓசை அதிர்ந்து கேட்க, நடப்பதை உணரச் சற்று அவகாசம் பிடித்தது திண்ணனுக்கு. யாரை யார் அழைப்பது? நம் பெயர் கண்ணப்பனல்லவே? ஆனால் யாரோ நம்மைக் கண்ணை எடுக்கவிடாமல் தடுத்து நிறுத்துகிறாரே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே இழந்த கண்ணிலும் ஒளி ஏற்பட்டு, வந்திருப்பது சாஷாத் சிவபெருமானே என்பதை உணர்ந்து சாஷ்டாங்கமாகச் சிவனின் காலடியில் விழுந்தான். "கண்ணப்ப! திண்ணனான நீ எனக்குக் கண் கொடுத்ததால் இன்று முதல் கண்ணப்பர் என்று அழைக்கப்படுவாய்! உனக்கு விருப்பமானவற்றைத் தயங்காமல் என்னிடம் கேள்" "சுவாமி! எனது ஊனக் கண்களை நிவேதனமாகப் பெற்றுக்கொண்டு "ஞானக் கண்களை" வழங்கி என்னை கண்ணப்பனாக ஆக்கியுள்ளீர்கள்!" இதை விட எனக்கு இன்னொரு வரம் வேண்டுமா ஐயனே! என்று கண்ணீர் மல்க கண்ணப்பர் கைகூப்பி நின்றார். சிவனுக்காகத் தன் கண்ணையே அர்ப்பணித்த சிவபக்தரான திண்ணன் சிவனருளுக்குப் பாத்திரமான நாயனார் ஆகியதால், அன்று முதல் அவர் கண்ணப்ப நாயனார் என்ற பெயரைப் பெற்று இவ்வுலகில் நீங்காப் புகழை அடைந்தார்! நிற்க. இது தெரிந்த கதைதானே! இதிலென்ன சிறப்பு என்பவர்கள் ஆவுடையார் கோயிலில் வடிக்கப்பட்ட இச்சிற்பத்தை பாருங்கள்! இக்கதையில் இருவர் முக்கியப் பாத்திரங்கள். ஒன்று - கண்ணப்பரான திண்ணன். இரண்டு - அவரை கண்ணப்ப நாயனாராக ஆக்க ஏதுவாக இருந்த அந்தணர் சிவகோசரியார். பெரும்பாலும் இந்தக்கதை சொல்லப்படும்பொழுது அந்த அந்தணரை யாருமே நினைவு கொள்ள மாட்டார்கள். ஆனால் இச்சிற்பத்தை வடித்த சிற்பி அவரையும் "யக்ஞோபவீத"த்துடன் காண்பித்துச் சிறப்பாக நினைவுகூர்ந்து இக்கதையைக் காட்டிய பாங்கு என்னை இக்கட்டுரை வடிக்கத்தூண்டியது! |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |