http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 153

இதழ் 153
[ ஏப்ரல் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

இராஜராஜரின் திருவிளக்குகள்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 5
புள்ளமங்கை ஆலந்துறையார் தளப்பஞ்சரங்கள்
இறவாதான் ஈசுவரம்
மாமல்லபுரக் குடைவரைகள் - 4
இதழ் எண். 153 > கலையும் ஆய்வும்
இறவாதான் ஈசுவரம்
இரா.கலைக்கோவன், மு.நளினி

காஞ்சிபுரத்திலுள்ள இருதளப் பல்லவக் கற்றளிகளில் இறவாதான் ஈசுவரம் குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே சிதைந்திருந்தாலும் கட்டமைப்பிலும் சிற்பயிருப்பிலும் செழித்திருக்கும் இக்கற்றளி பல்லவர் கட்டடக்கலை பயில பெருந்துணையாகும்.



விமானம்



தாங்குதளம், சுவர்



இருதளத் தூய நாகர மணற்கல் தளியான இறவாதான் விமானம் துணைத்தளம், உபானத்தின் மீதமைந்த பாதபந்தத் தாங்குதளம் கொண்டெழுகிறது. இதன் உபானமும் (துணைத்தளத்தின் பெருவாஜனம்) பட்டிகையும் கருங்கல் பணிகள். ஜகதி அளவில் 4. 90 மீ. பக்கமுடைய சதுரமாக விளங்கும் இவ்விமானத்தின் சுவர்த் திருப்பத்தூண்கள் பாதம் பெற்ற நான்முகத் தாவுயாளித் தூண்களாக அமைய, அவற்றிற்கு இடைப்பட்ட சுவர் இரு நான்முக அரைத்தூண்களால் அகலமான நடுப்பகுதி, அகலக்குறுக்கமான பக்கப்பகுதிகள் என மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. நடுப்பிரிவை முழுமையாகத் தழுவும் விரிவான மகரதோரணத்தின் கீழ்ச்சிற்பங்களாகத் தெற்கிலும் மேற்கிலும் யோகசிவனும் வடக்கில் முருகனும் அமைய, மகரங்களின் மேல் வீரர்கள். மகரதோகைகள் முடியுமிடத்தே மேற்கில் பக்கத்திற்கொரு கின்னரரும் வடக்கில் போற்றி முத்திரையுடன் முனிவர்களும் விளங்க, தெற்கில் இவ்விடம் வெறுமையாக உள்ளது. 





இப்பிரிவின் மையத்தில் சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் தழுவும் கோட்டம். அதில் தெற்கில் ஆலமர்அண்ணலும் மேற்கில் குஞ்சிதகரணரும் வடக்கில் ஜலந்தரவதமூர்த்தியும் காட்சியாக, கோட்டத்தின் இருபுறத்துள்ள சுவரில் தெற்கில் ஆலமர்அண்ணல் தொடர்புடைய சிற்பங்கள். மேற்கில் குஞ்சிதரின் வலப்புறம் கங்காளரும் இடப்புறம் யானையை அழித்தவரும் அமைய, வடக்குக் கோட்டத்தின் வலப்புறம் கங்காதரரும் இடப்புறம் யமனை அழித்தவரும் உள்ளனர். 



நான்முக, திருப்பத் தூண்களுக்கு இடைப்பட்ட சுவரில் கீழ்ச் செவ்வகத்தில் பாம்பு சுற்றிய உருள்பெருந்தடிகளுடன் கோட்டச் சிற்பங்களுக்காய் ஒருக்கணித்த காவலர்களும் மேல் வளைமாடங்களில் சம்மணத்தில் இடம்புரிப் பிள்ளையாரும் உள்ளனர். காவலர்கள் ஒருக்கணித்திருந்தபோதும் அவர்தம் முகம் நேர்ப்பார்வையில் உள்ளது. 



தூண்கள்



இறவாதான் ஈசுவரச் சுவர்கள் மூன்று விதமான நான்முகத் தூண்களைக் கொண்டுள்ளன. சதுரபாதத்தின் மேல் தாவுயாளியுடன் தொடங்கும் திருப்பத்தூண்கள் தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை,வீரகண்டம் ஆகிய உறுப்புகளைக் கொள்ள, சுவர்ப் பகுப்புத் தூண்கள் பாதம், விலங்கடியற்ற நெடிய தூண்களாய் மேலுறுப்புகளுடன் உள்ளன. சுவர்ப் பகுப்புத் தூண் களை ஒத்துள்ள கோட்ட அணைவுத் தூண்கள் சட்டத்தலை யுடன் அளவில் சிறுத்துப் பலகையில் மகரங்கள் பெற்றுள்ளன.



காவலர்கள்



விமானத்தின் முத்திசைகளிலுமுள்ள ஆறு காவலர்களுமே ஒரு காலைத் தளத்தில் ஊன்றி, மற்றொரு காலின் பாதத்தை அக்ரதலசஞ்சாரத்தில் இருத்தியுள்ளனர். அருகிலுள்ள உருள் பெருந்தடிமீது அவர்தம் ஒரு கை இருக்க, மற்றொரு கை கடகம் அல்லது எச்சரிக்கும் நிலையில். சடைமகுடம், அடர்த்தியான சடைக்கற்றைகள், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூலென மடித்த துண்டு, உதரபந்தம், தோள், கை வளைகள், கிண்கிணிகள், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள அவர்களுள் மேற்கர் இருவரும் மார்புநூலும் (உரஸ்சூத்திரம்) வடக்கர் இருவரும் முப்புரிநூலை நிவீதமாகவும் பெற, தென் சுவரிலுள்ள மேற்கர் இடத்தொடை தழுவும் சிம்மத்தலைப் பதக்கம் பெற்ற சிறப்பு மணிமாலை கொண்டுள்ளார். மேற்குச் சுவர்த் தென்காவலர் தலையின் இருபுறமும் பரவும் சூலஇலைகளால் சூலத்தேவராய்ப் பொலிய, வடசுவர்க் கிழக்கர் கோரைப் பற்களுடன் விளங்க, தெற்குத் தவிர்த்த பிற இருதிசைகளிலும் காவலர்களின் பின் தோரணத் தொங்கல்கள்.



பிள்ளையார்கள்



கருவறையின் முச்சுவர்களிலும் உள்ள கரண்டமகுட இடம் புரிப் பிள்ளையார்களின் முன், அகலமான பாத்திரத்தில் உணவு. உதரபந்தம், முப்புரிநூல், தோள், கை வளைகள், சிற்றாடை பெற்றுள்ள இப்பிள்ளையார்களின் பின்கைகள் சில சிற்பங்களில் கரும்பு, தாமரைமொட்டு கொள்ள, சிலவற்றில் சிதைந்துள்ளன. முன்கைகளில் இடக்கை தொடை அல்லது முழங்கால் மீதமர, வலக்கை சிதைந்துள்ளது. ஒரு சிற்பத்தில் இக்கை கடகத்தில் உள்ளது. 



மகரதோரணம்



திசைக்கோட்டங்களை அணைத்துள்ள நான்முக அரைத்தூண்களின் பலகைமீது காலிருத்தி ஒன்றையொன்று நோக்கும் இரண்டு மகரங்களின் அடர்ந்த தோகைகள் கீழ்நோக்கிப் பரவிக் கோட்டத்தை அடுத்துள்ள சுவர்ச் சிற்பங்களின் தலைப்பைத் தொட்டவாறுள்ளன. மகரங்களின் அங்காத்த வாய்களிலிருந்து வளைந்தெழும் தோரணம் கோட்ட மேற்பகுதியை அலங்கரிக்க, மகரங்களின் மீது பூதவீரர்கள். மகரவளைவின் கீழுள்ள சிற்றுருவச் சிற்பங்கள் கோட்ட மேல்நிலையை அடுத்தமையும் கூரையுறுப்புகளைப் பொருத்தும் தூண்பதக்கத் தொங்கல் மீதிருக்குமாறு செதுக்கப்பட்டுள்ளன. 



சிற்பங்கள்



தெற்குச்சுவர்



இறவாதானின் தென்கோட்டத்தில் இடஒருக்கணிப்பிலான வீராசனத்தில் யோகபட்டத்துடன் ஆலமர்அண்ணல். இடுப்புக்கு மேற்பட்ட அவரது உடற்பகுதி வலஒருக்கணிப்பில். சடைப்பாரத்துடன் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, நிவீதமுப்புரிநூல், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான இடையாடை அணிந்துள்ள அவரது ஆடையும் இடைக்கட்டு முடிச்சும் இருக்கையில் தவழ, தலைக்குப் பின் கிளைகளுடன் மரம். 



இறைவனின் வலப் பின் கை சிதைந்திருக்க, முன்கையில் பிடித்துள்ள பாம்பு படமெடுத்துள்ளது. இடப் பின் கையில் சுவடி. முன் கை கடகத்தில். மேற்பகுதியில் இறைவனின் வலப்புறத்தே கின்னர இணையும் இடப்புறத்தே கிம்புருட இணையும் காட்சியாக, இருக்கையின் வலப்புறத்தே பாம்பும் இரு மான்களும். இரு பிரிவுகளாக்கப்பட்டுள்ள கோட்டத்தின் இருபுறச் சுவரில் மேலுள்ள செவ்வகத்தில் வலப்புறத்தே சிம்மஇணையும் இடப்புறத்தே புலிகளும் காட்சிதர, கீழுள்ள சதுரங்களில் பக்கத்திற்கு மூன்று முனிவர்கள். 





இருபுறத்துமுள்ள நடுவர்கள் முதியவர்களாய்த் தலைமையர் போலமைய, அவர்தம் வலப்புறத்துள்ளவர்கள் நடுவயதினராய்க் காட்சிதருகின்றனர். இடப்புறத்துள்ளவர்கள் கையிலுள்ளது கொடித்தண்டாகலாம். வலப்புற மூவரில் மேற்கர் இருகைகளையும் பத்திமையுடன் கட்டியுள்ளமை புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள் சிலவற்றில் காணப்படும் அடியவர் சிற்பங்களை நினைவூட்டுகிறது. முனிவர்கள் அனைவரும் சடைமகுடம், தோள், கை வளைகள், சிற்றாடை கொள்ள, வலப்புற இருவர் முப்புரிநூலென மடித்த துண்டை நிவீதமாக அணிந்துள்ளனர். 



மேற்குச் சுவர்



பத்துக் கைகளுடன் கருடாசனம் போல வலக்காலை முழங்காலளவில் மடித்துப் பாதத்தைத் தளத்தில் ஊன்றி, இடமுழங்கால் தரையில் படர, இடப்பாதத்தை உயர்த்திக் கரணம் நிகழ்த்தும் இறைவனின் வல முன் கை வேழமுத்திரையில். சடைமகுடம், முப்புரிநூல், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்துள்ள அவரது இட முன் கை தலைக்கு மேல் உயர்த்தப்பட்டுக் கீழ்நோக்கிய பதாகமாகியுள்ளது. இடக்கைகளுள் ஒன்று பதாகத்திலும் மற்றொன்று தொடையிலும் அமர, வலக்கைகளில் ஒன்று மழுவும் மற்றொன்று தீச்சுடரும் கொண்டுள்ளது. பிற கைகள் சிதைந்துள்ளன. இறைவனின் இடுப்பாடையும் இடைக்கட்டு முடிச்சும் அவர் முழங்கால் பொருத்தியுள்ள தளத்தின் மேல் படர்ந்துள்ளன. இறைவனின் வலப்புறம் கீழமர்ந்தவாறு இருகால்களுக்கிடையில் இருத்திய குடமுழவை இசைக்கும் பூதம். 



குஞ்சிதரின் இடப்புறத்துள்ள யானையை அழித்தவர் வலக்காலை யானைத்தலை மேலிருத்தி, இடப்பாதத்தை யானையின் கால்மீது ஊன்றியுள்ளார். ஆறு கைகளுடன் சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை கொண்டு காட்சிதரும் இறைவனின் இட முன் கை யானையின் வாலைப் பிடித்திருக்க, பிறகைகள் யானையின் தோல் பற்றியுள்ளன. இறைவனின் வலப்புறத்தே கரண்டமகுடத்துடன் இடஒருக்கணிப்பில் நிகழிடத்தை நீங்குமாறு போலுள்ள இறைவியின் இடக்கை இடுப்பிலிருக்க, வலக் கை மார்பருகே. முகம் இறைவனை நோக்கி உயர்ந்துள்ளது. 



குஞ்சிதரின் வலப்புறமுள்ள கங்காளர் தொகுதியில் சடைப்பாரத்துடன் நிவீதமாய் முப்புரிநூலென மடித்த துண்டும் அரைக்கசைத்த புலித்தோலாடையுமாய் இடஒருக்கணிப்பிலுள்ள இறைவனின் இட முன் கையில் கவரி. ஆடையின் ஓரங்கமான புலியின் தலை இடமுழங்காலருகே தொங்க, அதன் வால் இடக்கணுக்காலுக்காய் நெகிழ்ந்துள்ளது. இறைவனின் வல முன் கை படமெடுத்துள்ள பாம்பின் வாலைப் பிடித்துள்ளது. இறைவனின் இடப்புறம் சுவஸ்திகத்தில் வலஒருக்கணிப்பிலுள்ள பெண்ணின் தலையில் கரண்டமகுடம். இறைவன் அருகே மண்டியிட்டுத் தலைதாழ்த்தி அமர்ந்துள்ள மற்றொரு பெண்ணின் இடக்கை தொடையில். வலக்கை சிதைந்துள்ளது. இறைவனின் இடப்புறம் மேற்பகுதியில் இடையளவினராய் உள்ள முனிவரின் வலக்கை மேலுயர்ந்த கடகமாக, இடக்கை மார்பருகே. வல மேற்கையில் மடித்த துண்டு. 



வடக்குச் சுவர்



நடுக்கோட்டத்தின் மேற்பகுதியில் தலைச்சக்கரத்துடனான சடைமகுடம், மகரகுண்டலங்கள், முப்புரிநூல், தோள், கை வளைகள், சிற்றாடை அணிந்தவராய் யோகபட்டத்துடன் யோகாசனத்திலுள்ள ஜலந்தரவதரின் பின்கைகளில் வலப்புறம் குண்டிகை, இடப்புறம் அக்கமாலை. வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை முழங்கால் மீது நெகிழ்ந்துள்ளது. மேலே, பின்னணியில் தோரணத் தொங்கல்கள். கோட்ட மேற்சட்ட முகப்பில் பக்கத்திற்கொன்றாக அடர்ந்த தோகைகளுடன் அன்னங்கள். வலக்காலை மடக்கி வீழ்ந்துள்ள ஜலந்தரனின் வலக்கை வியப்பு காட்ட, இடக்கை மார்பருகே. சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடையுடன் நெறித்தபுருவமும் பிதுங்கிய விழிகளுமாய்த் தோன்றும் ஜலந்தரனின் வலத்தோளில் சக்கரம் பாய்ந்துள்ளது. 





நடுக்கோட்டத்தின் வலப்புறமுள்ள யமனைஅழித்தவர் தொகுதியில் குப்புற விழுந்திருக்கும் யமனின் முகம் இறைவனை நோக்கித் திரும்பியுள்ளது. வெறுமையான நீள்செவிகளும் கோரைப்பற்களும் நெறித்த புருவங்களுமாய் உள்ள அவரது வலக்கை வியப்பில் விரிந்துள்ளது. இடக்கை முழங்கால் மீது. இயமனின் முகம் நோக்கி வலக்காலை உயர்த்தியுள்ள இறைவனின் இடப்பாதம் யமனின் பின்புறம் அழுந்தியுள்ளது. சடை மகுடம், உதரபந்தம், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை, நிவீதமுப்புரிநூல், கிண்கிணிகள் அணிந்துள்ள இறைவனின் இட முன் கையில் முத்தலைஈட்டி. பின்கைப் பொருள் பாசமாகலாம். வலப் பின் கையில் பாம்பு. முன் கை சிதைந்துள்ளது. வலச்செவி நீள்செவியாக இடச்செவியில் பனையோலைக் குண்டலம். இறைவனின் வலமேற்பகுதியில் லிங்கத்தின் மீது விழுந்த பாசக்கயிற்றைப் பிடித்தபடி மார்க்கண்டேயன். 



நடுக்கோட்டத்தின் இடப்புறத்தே வலப்பாதத்தைத் தரையிலிருத்தி, இடப்பாதத்தைக் கீழமர்ந்துள்ள முயலகன் தலைமீது இருத்தியுள்ள கங்காதரரின் வல முன் கை கடகத்தில். வலப் பின் கை தொடையில். வணங்கிய கைகளுடன் வரும் கங்கையை இட முன் கை பற்ற, இடப் பின் கை வியப்பில். தலைச்சக்கரத்துடனான சடைமகுடம், நிவீதமுப்புரிநூல், மார்புநூல், உதரபந்தம், தோள், கை வளைகள் மகர, பனையோலைக் குண்டலங்கள், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்துள்ள இறைவனின் வலமேற்புறத்தே அமர்நிலை நாய். இறைவனின் இடப்புறத்தே வலக்கையை இறைவன் இடத்தொடையில் ஊன்றி, இடக்கையால் சடையைப் பிடித்தபடி முவ்வளைவுக் கோலத்தில் ஒயிலுடன் நிற்கும் உமையின் செவிகளில் பனையோலைக் குண்டலங் கள். கரண்டமகுடம், தோள், கை வளைகள் அணிந்துள்ள இறைவியின் முகத்தில் மெல்லிய புன்னகை. 



கூரையுறுப்புகள்



திருப்ப, நான்முகத் தூண்கள் பட்டை பெற்ற வளைமுகத் தரங்கப் போதிகைகளால் கூரையுறுப்புகள் தாங்க, வலபியில் பூதவரி. கோணப்பட்டம் பெற்றுள்ள கபோதத்தில் திசைக்கு நான்கு கூடுவளைவுகள் பிள்ளையார் சிற்பங்களுடன். வளைவுகளின் தலைப்பில் கீர்த்திமுகம். மேலே பூமிதேசம், வேதிகை.



ஆரம்



ஆறங்கம் பெற்றுள்ள விமான ஆரஉறுப்புகளுக்கு இடைப்பட்டுள்ள ஆரச்சுவர்த்துண்டுகளில் பக்கத்திற்கு இரு செவ்வக ஸ்புடிதங்கள். கர்ணகூடங்களின் சுவர்ப்பகுதியில் நாற்புறத்தும் யோகசிவன் அமைய, சாலைச்சுவர் முன்பகுதியில் இரு அடியவர்களுடனான சிதைந்த இறைவடிவம். சிகர நாசிகைகளில் கர்ண கூடங்கள் கந்தருவத்தலைகள் கொள்ள, சாலைகளில் யோக சிவன். செவ்வக ஸ்புடிதங்களின் சிறு நாசிகைகளில் தாவு யாளிகளும் அதன் கபோதக்கூடுகளில் கந்தருவத்தலைகளும் அமைய, கபோதத்தில் கோணப்பட்டம், சந்திரமண்டலம். ஆரச்சுவரின் கந்தருவத்தலைகள் பெற்ற கபோதக்கூடுகள் ஸ்புடிதங்களின் சிகரமெனத் திகழ்கின்றன. 



இரண்டாம் தளம்



உயரமாகவும் எடுப்பாகவும் அமைந்துள்ள இரண்டாம் தளத்தின் திருப்பத் தூண்களாக நான்முக அரைத்தூண்கள் அமைய, தளச்சுவரிலுள்ள இரு நான்முக அரைத்தூண்கள் சுவரை மூன்றாகப் பிரிக்கின்றன. நடுப்பிரிவு ஆறங்கச்சாலை பின் மறைய, பக்கப் பிரிவுகளில் திசைக்கிரண்டாகத் தளப்பஞ்சரங்கள். இப்பஞ்சரங்களின் தூண்களுக்கு இடைப்பட்ட கோட்டத்தில் வணங்கிய கைகளுடன் அடியவர் சிற்பங்களும் பஞ்சரங்களுக்கும் திருப்பத்தூண்களுக்கும் இடைப்பட்ட சுவர்த்துண்டுகளில் காவலர் சிற்பங்களும் உள்ளன. தூண்களின் வளைமுகப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, கபோதத்தில் திசைக்கிரண்டாக உள்ள கூடுவளைவுகள் பஞ்சரங்களின் சிகரங்களென மிளிர்கின்றன. கபோதத்தில் கோணப்பட்டம், சந்திரமண்டலம். மேலே பூமிதேசம், வேதிகை. வேதிகையின் நாற்புறத்தும் நந்திகள். 



கிரீவம், சிகரம்



உயரக்குறுக்கமான கிரீவசுவரின் திருப்பங்களில் நான்முக அரைத்தூண்கள். கிரீவ கோட்டங்களைச் சிறிய அளவிலான நான்முக அரைத்தூண்கள் தழுவ, அவற்றின் நாசிகை மேல் வளைவில் ஒருதள நாகர விமானம். கோட்டங்களில் தெற்கில் ஆலமர்அண்ணல், மேற்கில் விஷ்ணு. வடக்கில் நான்முகன். கிழக்கில் உமாசகிதர். மேலே நாகர சிகரம். 



முகமண்டபம்



விமானத்தைப் போலவே துணைத்தளமும் தாங்குதளமும் பெற்றுள்ள முகமண்டபத்தின் தென், வடசுவர்கள் நான்முக அரைத்தூண் ஒன்றால் இரு பிரிவுகளாக்கப்பட்டுள்ளன. அகலமான மேற்குப் பிரிவு சட்டத்தலை நான்முக அரைத்தூண்களால் தழுவப்பெற்ற கோட்டமும் அதன் இருபுறத்தும் தொடர்புடைய சிற்பங்களும் பெற, அகலக்குறுக்கமான சுவர்ப்பகுதியின் கீழ்ப் பிரிவில் காவலர்களும் மேலுள்ள வளைமாடத்தில் சங்கூதும் பூதங்களும் உள்ளன. சுவரின் கிழக்குத் திருப்பங்களில் தாவுயாளித் தூண்கள். 



மண்டபத்தின் வடக்குக் கோட்டத்தில் கொற்றவையும் அவரின் வலப்புறம் காவற்பெண்டும் இடப்புறம் பூதங்களும் அமைய, தெற்கில் இலலிதாசனப் பிள்ளையார். கீழேச் சிதைந்த பூதங்கள். கோட்டத்தை அடுத்துள்ள வலச்சுவர் வெறுமையாக அமைய, இடச்சுவரில் கந்தருவர், பூதங்கள். கோட்டங்களை பதக்கத்தொங்கல் பொருத்தப் பெற்ற உத்திரம், வாஜனம், வலபி மூட, மேலுள்ள மகரதோரணங்களின் கீழ் யோகசிவன். 



விமானம் போலவே கூரையுறுப்புகள் அமைய, விமானத்தின் கிழக்குக் கர்ணகூடங்களுடன் ஆரச்சுவரால் இணைக்கப்பட்ட நிலையில் முகமண்டபத்தின் கூரையில் தெற்கிலும் வடக்கிலும் பக்கத்திற்கொரு கர்ணசாலை. ஆரச்சுவரில் அமர்நிலைச் சிம்மத்துடன், பக்கத்திற்கிரு குறு நாசிகைகள்.



கோட்டச் சிற்பங்கள்



வலப்பாதத்தைத் திரயச்ரத்திலும் இடப்பாதத்தை சமத்திலும் இருத்தி, எழிலுற நிற்கும் கொற்றவையின் வல முன் கை வில் பற்றியிருக்க, வல மேற்கையில் சக்கரம். இடைக்கைகளில் ஒன்று அச்சுறுத்த, மற்றொன்று அம்மையின் வலப்புறத்தே முன்கால்களுள் ஒன்றை உயர்த்தி அமர்ந்திருக்கும் சிம்மத்தின் தலையருகே. கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், மார்புநூல், கச்சு, முந்தானையுடனான இடையாடை, இடைக்கட்டு, தண்டை பெற்றுள்ள இக்கொற்றவையின் வலப் புறத்துள்ள காவற்பெண்டு சுவஸ்திகத்தில், வல முன் கையை மார்பருகே கடகத்தில் இருத்தி, இடக்கையில் வில் பிடித்துள்ளார். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சவடி, கணுக்கால் வரையிலான இடையாடையுடன் கொற்றவைக்காய் ஒருக்கணித்துள்ள அவரது வலத்தோள் பின் அம்புக்கூடு. இவ்வம்மையின் மேலுள்ள சுவர்ப்பகுதியில் வளை கொம்புகளும் காதுகளின் கீழ்க் குஞ்சலங்களும் முகபடாமும் பெற்ற மான். கொற்றவையின் இடப்புறச் சுவர்ப்பகுதியில் மேலே கவரியுடன் பூதம். கீழே இடக்கையைச் சிறுதடி மேல் ஊன்றி, வலக்கையால் இறைவியைப் போற்றும் மற்றொரு பூதம். கோட்ட மகரதோரணத்தில் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகையுடன் முன்கைகளைக் கடகத்தில் இருத்தியுள்ள யோகசிவன். அவர் தலைக்கு மேல் குடை. இருபுறத்தும் கவரிகள். 



இரு பிரிவுகளாக உள்ள தென்கோட்டத்தின் மேற்பகுதியில் சம்மணத்திலுள்ள பிள்ளையாரின் தலைக்கு மேல் குடை. இருபுறமும் கவரி. கரண்டமகுடம், தோள், கை வளைகள், சிற்றாடையுடன் இடம்புரியாக உள்ள அவர் முன் படையல் தட்டு. வலப் பின் கையில் உள்ளது கரும்புத்தோகையாகலாம். இட முன் கை முழங்கால் மீது. பிற கைகள் சிதைந்துள்ளன. கீழ்ப்பிரிவுச் சிற்பம் சிதைந்துள்ளபோதும் இரு பூதவடிவங்களை அறியமுடிகிறது. மகரதோரணத்தில் யோகபட்டத்துடன் யோகாசனத்திலுள்ள சிவபெருமானின் முன்கைகள் முழங்கால்களை ஒட்டி நெகிழ்ந்துள்ளன. சடைப்பாரம், கைவளைகள் கொண்டுள்ள அவரது முகம் சிதைந்துள்ளது. 



கோட்டத்தின் வலப்புறச் சுவர் வெறுமையாக அமைய, இடச்சுவரில் மேலிருந்து கீழாக கந்தருவரும் இரண்டு பூதங்களும். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், சிற்றாடையுடன் பறக்கும் நிலையிலுள்ள கந்தருவரின் இடக்கை மார்பருகே, வலக்கை இறைவனைப் போற்றுகிறது. வலக்கையால் போற்றி இடக்கையால் தலைச்சுமையைப் பிடித்திருக்கும் மார்பளவிலான பூதத்தின் கீழே பெருவடிவினதாகக் காட்சிதரும் மற்றொரு பூதம் வலக்கையில் உருள்பெருந்தடி ஏந்தி, இடக் கையை மார்பருகே கொண்டு பிள்ளையாருக்காய் ஒருக்கணித்துள்ளது. உதரபந்தம், முப்புரிநூல், இடைத்தொங்கலுடனான சிற்றாடை பெற்றுள்ள அதன் பெருவயிறு சற்றே சரிந்துள்ளது. 



இவ்விரு கோட்டங்களின் கிழக்கிலுள்ள காவலர்கள் கோட்டத் தெய்வங்களுக்காய் ஒருக்கணித்திருந்தபோதும் முகம் நேர்நோக்கியுள்ளது. நிற்கும் அமைப்பு, ஆடை, அணிகலன்கள், கைநிலைகள் என அனைத்திலும் விமானக் காவலர்களை ஒத்துள்ள அவர்களுக்கு மேலுள்ள வளைமாடத்தில் சங்கூதும் பூதங்கள். 



முகமண்டப வாயில்



தென், வடலாக 2. 46 மீ. நீளம், கிழக்கு மேற்காக 1. 48 மீ. அகலம் கொண்டுள்ள முகமண்டபத்தின் வாயிலை நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. அவற்றிற்கும் திருப்பத்தூண்களுக்கும் இடைப்பட்டுள்ள கோட்டங்களில் உருள்பெருந்தடிகளுடன் வாயில் நோக்கி ஒருக்கணித்த காவலர்கள். சடைமகுடம், அடர்த்தியான சடைக்கற்றைகள், தோள், கை வளைகள், பட்டாடையுடன் ஒருகாலை ஊன்றி மறு காலின் பாதத்தை அக்ரதலசஞ்சாரத்தில் இருத்தியுள்ள அவர்களுள், வடக்கர் வலக்கையைத் தடிமீதிருத்தி இடக்கையில் வியப்பு காட்ட, தெற்கர் இடக்கையைத் தடிமீதிருத்தி வலக்கையால் அச்சுறுத்துகிறார். முகமண்டப வாயிலின் பின்னாளைய நிலைக்கால்களில் சிறிய அளவிலான நாகபந்தங்கள். மண்டப அகச்சுவர்களில் வடபுறம் இராவண அருள்மூர்த்தி சுவரளாவி அமைய, தென்புறம் ஊர்த்வதாண்டவர். 



ஊர்த்வதாண்டவர்



வலக்கையில் பாம்புடன் மண்டியிட்டுள்ள முயலகன் மீது இடப்பாதம் ஊன்றி, வலக்காலை முதுகுக்குப் பின் தலையொட்டி உயர்த்தியிருக்கும் சிவபெருமானின் வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை உயர்ந்து பதாகமாக உள்ளது. இறைவன் தலைக்கு மேல் குடை. அவரது வலக்கைகளுள் இரண்டு வியப்பு, கடகமுத்திரைகளில் இருக்க, ஒன்றில் வாள். மற்றொன்று பாம்பைப் பிடித்துள்ளது. இடக்கைகளுள் ஒன்று மடியருகே ஏந்து கையாகவும் மற்றொன்று கடகத்திலும் அமைய, ஒன்றில் உடுக்கை. மற்றொன்று சிதைந்துள்ளது. 



செவிகளில் வலப்புறம் மகரகுண்டலம். இடச்செவி நீள்வெறுஞ் செவியாகச் சடைமகுடம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், தொடையளவான சிற்றாடையுடன் ஊர்த்வதாண்டவமாடும் இறைவனை நோக்கியவாறு அவர் இடப்புறத்தே ஒருக்கணித்திருக்கும் உமையின் மடக்கிய வலக்கால் அருகிலுள்ள பாறைமீது தாங்கலாக, இடக்கால் தரையில். வலக்கை பாறைமீதமர, இடக்கை மடியில். சடைமகுடம், செவியணிகள், மெல்லிய ஆரம், பட்டாடை கொண்டு விளங்கும் அம்மையின் உடல் இடஒருக்கணிப்பில். முகம் இறைவனுக்காய்த் திரும்பியுள்ளது. மேற்புறத்தே மார்பளவினராய் இறைவனின் வலப்புறம் நான்முகனும் இடப்புறம் விஷ்ணுவும் ஆடல் காண, கீழே இசைக்கலைஞர்கள். ஒருவர் குழலும் மற்றொருவர் தாளமும் இசைக்க, பேரளவினராய் உள்ள முழவுக்கலைஞர் இரு ஒருமுக முழவுகளை இயக்குகிறார். ஒரு பூதம் தலையில் கூடை கொள்ள, மற்றொரு பூதத்தின் கையிலுள்ள பறவை அலகால் அக்கூடைப் பூதத்தின் சடைமுடியை இழுக்கிறது. 



இராவண அருள்மூர்த்தி



முகமண்டப வடஅகச்சுவரில் பரவியிருக்கும் இராவண அருள்மூர்த்தி சிற்பம் இணையற்ற படைப்பாகும். கருடாசனத்தில் இருந்தவாறு தம் இருபது கைகளாலும் கயிலாயமலையைப் பெயர்த்தெடுக்கும் முயற்சியில் இராவணன். காட்டப்பட்டுள்ள ஐந்து தலைகளிலும் கிரீடமகுடம். இடையில் சிற்றாடை. நீள்வெறுஞ் செவிகளுடன் தோள், கைவளைகள், முப்புரிநூல் அணிதுள்ள அவரது முயற்சியின் அருமை முகங்களில் வெளிப்பட்டுள்ளது. மலையின் இடைப்பகுதியில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடையுடன் உள்ள மூன்று பூதங்களுள் கிழக்கிலுள்ளது ஓங்கிய வாளும் கேடயமுமாய்ப் போரை எதிர்கொள்ள, மேற்கிலுள்ள இரண்டில் முன்னதன் இடக்கைப் பொருள் மணியாகலாம். அதன் வலப்புறப் பூதம் கைகளைப் பரப்பிக் 'கருவிகள் வேண்டாம் கைகளே போதும்' என்பது போல் பார்க்கிறது. 



மலைமீது வீராசனத்தில் சற்றே பின்சாய்ந்தவாறுள்ள இறைவனின் வலக்கைகள் கடகத்தில். இட முன் கை இருக்கைமீதமர, இடப் பின் கை தோளுக்குப் பின்னுள்ள லிங்கத்தை அணைத்தவாறுள்ளது. பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், முப்புரிநூல், சிற்றாடை, வீரக்கழல் அணிந்துள்ள இறைவனின் வலப்புறத்தே உத்குடியிலுள்ள இறைவியின் இடக்கை இறைவனின் வலமுழங்கால் மீதிருக்க, வலக்கை கடகத்தில். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணி, தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்துள்ள அம்மையின் வலப்புறத்தே தாடியுடன் இடுப்பளவினராய்க் காட்சிதருபவர் கயிலை முனிவராகலாம். இறைவனின் இடப்புறத்தே முருகனை மார்போடு தழுவிய வாறு காட்சிதரும் பெண் உமையின் தோழியாகலாம். 



கருவறை



காவலர்கள்



தென், வடலாக 2. 11 மீ. நீளம், கிழக்கு மேற்காக 2. 05 மீ. அகலம் கொண்டுள்ள கருவறையின் 1. 96 மீ. உயரம், 1 மீ. அகலம் கொண்ட வாயிலை அணைத்துள்ள நான்முக அரைத்தூண்கள் கருவறையின் நிலைக்கால்களாக, வாயிலின் இருபுறத்துள்ள கோட்டங்களில் சடைப்பாரம் மீறிய சடைக்கற்றைகள், பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடை, உருள்பெருந்தடியுடன் கருவறைக்காய் ஒருக்கணித்துள்ள காவலர்களுள் சூலத்தேவரான தென்புறத்தாரின் வலக்கை அச்சுறுத்த, இடக்கை தடிமீது. வடக்கர் வலக்கையைத் தடி மீதிருத்தி, இடக்கையில் வியப்பு காட்டுகிறார். வாயிலின் மேலுள்ள மகரதோரணத்தில் லட்சுமி. 



மகரதோரணம்



வாயில் அணைவுத் தூண்களின் வீரகண்டங்களின் மீது தோரணமகரங்கள் கால்பதித்துள்ளன. அவற்றின் செழிப்பான தோகைகள் இருபுறத்தும் பரவ, மகரங்களின் மேல் பக்கத்திற் கொன்றாய் கைகளை உயர்த்திய பூதங்கள். மகரவாய்களிலிருந்து வெளிப்படும் யாளிகள் வளைவுத்தோரணம் அமைக்க, அதன் கீழே தாமரையிலமர்ந்து கால்களைத் தொங்கவிட்டவாறு லட்சுமி. தலைக்கு மேல் குடையும் இருபுறத்தும் கவரிகளும் பெற்றுள்ள அவரது திருவடிகள் மற்றொரு தாமரையில். கச்சற்ற மார்பகங்க ளுடன் பனையோலைக் குண்டலங்களும் இடையாடையும் பெற் றுள்ள இறைவியின் கைகளிலும் தாமரைகள். அவரின் இருபுறத்தும் பக்கத்திற்கிரண்டாய்த் தாமரைமொட்டுகள். அணுக்கமொட்டுகள் உயர்ந்தும் அடுத்துள்ளவை சற்றே உயரம் குறைந்தும் உள்ளன. தோரணத்தின் இருபுறத்தும் அழகிய தொங்கல்கள். 



சோமாஸ்கந்தர்



சதுரமாகவுள்ள கருவறையின் பின்சுவரில் சிறு மேடையை அடுத்து வளைமுகப் போதிகைகளுடன் நான்முக அரைத்தூண்கள் தழுவிய கோட்டம். கோட்டத்தை உத்திரம், வாஜனம், வலபி மூட, கபோதத்தில் இரண்டு கூடுவளைவுகள். மேலே பூமிதேசம், வேதிகை. 1. 14 மீ. அகலம், 1. 40 மீ. உயரமுள்ள கோட்டத்தில் சோமாஸ்கந்தர். அதன் இருபுறத்துமுள்ள சுவர்த்துண்டுகளில் கவரிப்பெண்கள். 



இருமுனைகளிலும் மகரதலைகள் பெற்ற சாய்விருக்கையில் சுகாசனத்திலுள்ள இறைவனின் இடப்பாதம் முயலகன் மீதுள்ளது. வடக்கு நோக்கியுள்ள முயலகனின் வலக்கையில் தலையோடு, இறை வனின் வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, பின்கையில் பாம்பு. இட முன் கை மடியிலமைய, பின்கையில் மலர்மொட்டு. சடைமகு டம், மகரகுண்டலங்கள், நிவீத முப்புரிநூல், உதரபந்தம், கண்டிகை தோள், கை வளைகள் அணிந்துள்ள அவரது இடையாடை தொடைவரை அமைந்துள்ளது. இறைவனின் இடப்புறத்துள்ள உமையின் இடக்கால் முயலகன் முகத்தின் மீதமைய, அம்மையின் இடக்கை இருக்கையில். சடைமகுடம், பனையோலைக் குண்டலங் கள், சவடி, தோள், கைவளைகள், தாள்செறிகள் அணிந்துள்ள அவரது இடையாடை தொடைவரை சுருக்கப்பட்டுள்ளது. வலப்புறக் குடைக்காம்பு தலையின் பின்புறம் நீள்கிறது. இருவரையும் போற்றுமாறு இருக்கையின் பின் நான்முகனும் விஷ்ணுவும். இறைவன் இருக்கையின் கீழ்ப்பகுதியிலுள்ள இரண்டு பூதங்களுள் வலமுள்ளது குடமுழா வாசிக்க, இடமுள்ளது இறைக் குடும்பத்தைப் போற்றுகிறது. கருவறைத் தரையில் ஆவுடையாரின் மீதுள்ள லிங்கத்தின் கீழ்ப்பகுதி எண்முகமாகவும் மேற்பகுதி உருளையாகவும் உள்ளது. கருவறைக் கூரையின் நாற்புத்தும் வாஜனம், வலபி.

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.