http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 154

இதழ் 154
[ மே, 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

ஒரு நாடகக் காணி கல்வெட்டான வரலாறு
புள்ளமங்கை ஆலந்துறையார் முகமண்டபம்
பிறவாதான் ஈசுவரம்
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 1
இதழ் எண். 154 > இலக்கியச் சுவை
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 1
மா.இராசமாணிக்கனார்

அரண்மனை

நாட்டையும் நாட்டிலுள்ள குடிகளையும் காத்து வந்தவன் காவலன் எனப்பெயர் பெற்றான். அவன் வாழ்ந்த மனை பாதுகாவல் மிக்கதாய் இருந்தது. அதனால் அஃது அரண்மனை எனப்பட்டது. சிலப்பதிகாரம் அரண்மனையைக் கோவில் என்றே குறித்துள்ளது. கடவுள் மனைக்கும் கோவில் என்பதே பெயர். மன்னனைக் கடவுட்கூறாக மதித்த சங்ககாலச் சமுதாயம் அவனது இல்லத்தையும் கோவில் என்றே வழங்கியதில் வியப்பில்லை.

மன்னனது அரண்மனை பரந்த நிலத்தில் மாடமாளிகைகளோடும் கூடகோபுரங்களோடும் கட்டப்பட்ட மிகப்பெரிய இல்லமாகும். அரண்மனையில் எழுநிலைமாடம் அமைந்திருத்தலும் உண்டு (முல்லைப்பாட்டு அடி 86).

அரண்மனை வாயில் கோவில் வாயிலைப் போல உயர்ந்தும் அகன்றும் இருந்தது. யானை தன்மீது ஒரு கொடியை உயர்த்திக்கொண்டு அவ்வாயிலில் எளிதில் நுழையலாம். அரண்மனை பல மனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் பெற்றிருந்தது. நிலா முற்றங்களைக் கொண்ட உயர்ந்த மாடங்கள் இருந்தன. அரண்மனை முற்றத்தில் கவரிமான்களும் அன்னப்பறவைகளும் தாவித்திரிந்தன. அரசனுக்கு என்று தனி மனையும் அரசிக்கு என்று தனி மனையும் அமைந்திருந்தன. அரசி வாழ்ந்த பகுதி அந்தப்புரம் எனப்பட்டது. அஃது ஆடவர்கள் புகவியலாத அரிய காவலை உடையது. அரண்மனைச் சுவர்களில் பல ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. அரசமாதேவி படுக்கும் கட்டிலின் சிறப்பு நெடுநல்வாடையில் மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (நெடுநல்வாடை, அடி 78-114).

பாண்டிமாதேவியின் கட்டில் தந்தத்தாலாகியது; சிறந்த வேலைப்பாடு கொண்டது. அதன் மேற்கூரை ஓவியங்கள் எழுதப்பட்டது. அன்னப் பெடையின் தூவி கொண்டு அமைக்கப்பட்ட மெத்தையும் தலையணைகளும் அக்கட்டிலில் இருந்தன. அம்மெத்தைமீது கஞ்சியிட்டுச் சலவை செய்யப்பெற்ற துகில் விரிக்கப்பட்டிருந்தது. அதன்மீது செங்கழுநீர் மலரின் இதழ்கள் பரப்பப்பட்டிருந்தன (நெடுநல்வாடை, அடி 117-135).

அரச மகளிர் அந்தி நேரத்தில் விளங்கும் கிரணங்களின் இளவெயில் தோன்றினாற்போன்ற நிறத்தை உடையவர்; மயில் போன்ற சாயலினையும் மாந்தளிர் போன்ற மேனியையும் உடையவர்; சிறந்த கற்புடையவர்; கல் பதித்த நகைகளை அணிந்தவர்; நெருப்புப் போலும் இதழ்களை உடையவர்; தாமரை போன்ற ஒளியுடைய முகத்தினையுடையவர்; இனிய சொற்களையுடையவர் (மதுரைக்காஞ்சி, அடி 702-712)

காலையில் அரசன் செயல்கள்

வைகறையில் அரண்மனையுள் முரசு ஒலிக்கும். அது பள்ளியெழுச்சி முரசம் எனப்படும். அப்போது சூதர் நின்று அரசனை வாழ்த்துவர்; மாகதர் என்பவர் இருந்து அரசன் புகழைச் சொல்லுவர்; வைதாளிகர் என்பவர் இசைக்கருவிகளை இயக்குவர்; நாழிகைக் கணக்கர் நேரத்தை அறிவிப்பர் (மதுரைக்காஞ்சி அடி 670-672).

அரசனுடைய மெய்க்காப்பாளர் ‘பெருமூதாளர்’ எனப்பட்டனர். அவர்கள் சட்டை அணிந்திருந்தனர். சிறந்த ஒழுக்கமுடையவர் (முல்லைப்பாட்டு 53-54). அரசனுக்கு உதவிசெய்யப் பணிப்பெண்டிர் பலர் இருந்தனர். அவர்கள் சிறந்த அழகிகள்; நிறைந்த நகைகளை அணிந்தவர்; தம் பாட்டாலும் சொல்லாலும் கூத்தாலும் அரசனை மகிழ்விப்பவர். அவர்கள் மன்னனுக்கும் அவன் ஏவற்படி புலவர் பாணர் முதலியோர்க்கும் பொற்கிண்ணங்களில் மதுவை வார்த்துத் தருவது வழக்கம் (பொருநராற்றுப்படை, அடி 84-87, மதுரைக்காஞ்சி 779-781).

பாண்டியன் நெடுஞ்செழியன் காலையில் எழுந்து நீராடித் தன் வழிபடு தெய்வத்தை வணங்கினான். அப்பொழுது அவனுடைய முகத்தில் பண்பட்ட ஓவியனால் தீட்டப்பெற்ற பாவையிடத்தே காணப்படும் களை காணப்பட்டது. அவன் தன் உடம்பில் சந்தனத்தைப் பூசிக்கொண்டான். அவனது மார்பில் முத்துமாலையும் அன்றலர்ந்த பூமாலையும் விளங்கின. அவனது தோளில் வீரவளை விளக்கமுற்றது; கைவிரல்களில் மணிகள் அழுத்தின மோதிரங்கள் இருந்தன. அவன் தன் இடையில் கஞ்சியிட்டுச் சலவை செய்யப்பட்ட துகிலை உடுத்தியிருந்தான். உடைக்கு மேல் சில அணிகள் பொலிவு பெற்று விளங்கின. அவன் காலில் வீரக்கழல் அணி செய்தது (மதுரைக்காஞ்சி அடி 715-722).

ஐம்பெருங்குழு

அரசனுக்கு ஆட்சியில் உதவி புரியும் குழுக்களுள் சிறப்புடையது ஐம்பெருங்குழு என்பது. அமைச்சர், புரோகிதர் (ஆசான்), படைத்தலைவர், தூதுவர், சாரணர் என்பவரே ஐம்பெருங்குழுவினர் என்று சிலப்பதிகாரத்துக்கு உரை வகுத்த அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். மாசனம், புரோகிதர், மருத்துவர், கணியர், அமைச்சர் என்பவர் ஐம்பெருங்குழுவினர் என்று சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் கூறியுள்ளார். இவருள் மாசனம் என்பது குடிமக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் குறிப்பது. இவர்கள் குடிகளின் நலன்களையும் தேவைகளையும் அரசனிடம் எடுத்துக் கூறிப் பாதுகாக்கப் பயன்பட்டார்கள்; நாட்டில் சமயத் தொடர்பான செயல்களைப் புரோகிதர் கவனித்தனர். இவர்களைச் சமயப் பிரதிநிதிகள் என்றும் கூறலாம். மருத்துவர் நாட்டுச் சுகாதாரத்தைக் கவனித்து வந்தனர். கணியர் நாட்டில் நடைபெற வேண்டிய நல்ல செயல்களைத் தொடங்குவதற்குரிய நாளையும் நேரத்தையும் குறிக்கவும், வருவது உரைக்கவும் பயன்பட்டனர். நாட்டின் வருவாயையும் அரசாங்கச் செலவையும் நீதி முறையையும் அமைச்சர் கவனித்தனர். அவர்கள் எக்காலமும் மெய்யையே பேசுவதால் புகழ் வாய்ந்தவர்கள்; தலைமை அமைந்த காவிதிப்பட்டம் அரசனால் வழங்கப்பட்டவர்கள் (மதுரைக்காஞ்சி, அடி 19, 20, 499).

எண்பேராயம்

கரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளி மறவர் என்பவர் எண்பேராயத்தாராவர். இவருள்
1. கரணத்தியலவர் - அரசாங்கப் பெருங்கணக்கர்
2. கருமவிதிகள் - அரசாங்க வேலைகளை நடத்தும் தலைவர்கள்
3. கனகச்சுற்றம் - அரசாங்கப் பொருட்காப்பு அதிகாரிகள்
4. கடைகாப்பாளர் - நாடு காக்கும் அதிகாரிகள்
5. நகரமாந்தர் - நாட்டில் இருந்த பல நகரங்களின் பிரதிநிதிகள்
6. படைத்தலைவர் - காலாட்படைத் தலைவர்
7. யானைவீரர் - யானைப்படைத் தலைவர்
8. இவுளி மறவர் - குதிரைப்படைத் தலைவர்

மன்னன் ஐம்பெருங்குழுவினரையும் எண்பேராயத்தாரையும் கலந்தே ஆட்சி புரிந்தான். இப்பெருமக்கள் நற்குடிப் பிறப்பு, கல்வி, நல்லொழுக்கம், உண்மையுடைமை, தூயவுள்ளம், நடுவுநிலைமை முதலிய நற்பண்புகள் பெற்றிருத்தல் வேண்டும் என்று மன்னர் எதிர்பார்த்தனர்; நாட்டுப் பெருவிழாக்களிலும் நாட்டுப் பெருஞ்செயல்களிலும் இக்குழுவினர் பங்குகொண்டனர் என்பது சிலப்பதிகாரம் - இந்திர விழவூரெடுத்த காதையால் அறியலாம்.

நாளோலக்கம்

அரசனது கொலுமண்டபம் ‘நாளோலக்கமண்டபம்’ எனப்படும். அரசன் ஒவ்வொரு நாளும் அம்மண்டபத்திலிருந்து அரசியற்செய்திகளைக் கவனிப்பது வழக்கம். அங்கு அவனுக்கு உதவியாக ஐம்பெருங்குழுவினர், எண்பேராயத்தினர், மண்டில மாக்கள் முதலியோர் கூடியிருப்பர். மன்னன் பல மீன்களுக்கு இடையில் விளங்கும் மதிபோல அவர்கட்கு இடையில் விளங்குவான். அங்ஙனம் இருந்து போரில் வெற்றிபெற்ற தன் வீரர்களுக்குப் பட்டமும் பரிசிலும் நல்குவான்; தம் புலமையைக் காட்டிப் பரிசில் பெறவந்த புலவர், பாணர், கூத்தர் முதலியோர்க்கும் பரிசில் வழங்குவான்; பின்பு தன் அமைச்சர்களுடன் அரசாங்கத்தின் நடைமுறைகளைக் கவனிப்பான் (மதுரைக்காஞ்சி, அடி 725-778)

கோதை என்னும் சேர அரசனது நாளோலக்க இருப்பில் எல்லாக் கலைகளையும் உணர்ந்த சீரியோர் திரண்டு அவன் கேட்பத் தருக்கங்களைக் கூறிக்கொண்டிருந்தனர். மதுரை அந்திக்கடைத் தெருவின் ஆரவாரம் மேலே கூறப்பட்ட சேரனது அவைக்கள ஆரவாரத்தை ஒத்திருந்தது என்று மாங்குடி மருதனார் கூறியுள்ளார் (மதுரைக்காஞ்சி, அடி 511-526).

நன்னனது அவைக்களத்தில் தாம் கற்றவை நாவினிடத்தே பயின்ற நல்ல அறிவினையுடையோர் திரண்டிருந்தனர் (மலைபடுகடாம், அடி 77-80).

அரசனிடம் நால்வகைப் படைகள் இருந்தன. குதிரைகளைப் பற்றிய நூல் இருந்தது. அந்நூலில் வல்லவரும் இருந்தனர் (பெரும்பாணாற்றுப்படை, அடி 487-489).

அறவுரையும் அறிவுரையும்

ஆசான் என்பவன் இராஜகுரு. அவன் புரோகிதன் என்று கூறப்பட்டான். அவன் சிறந்த நூல்களிலுள்ள அறவுரைகளையும், அறிவுரைகளையும் எடுத்துக்கூறி மன்னனை நல்வழிப்படுத்துபவன். நாட்டில் புகழ்பெற்ற புலவர்களும் அரசனுக்கு அறிவுரைகள் கூறுதல் வழக்கம். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அவனது அவைக்களத் தலைமைப் புலவரான மாங்குடி மருதனார் என்பவர் அறக்கள வேள்வி செய்து நலம் பெறும்படி அறிவுரை கூறியதை மதுரைக்காஞ்சியால் அறியலாம் (மதுரைக்காஞ்சி, அடி 759-781)

- தொடரும்
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.