http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 164

இதழ் 164
[ மே 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

கோலாட்டம்
கம்பன் மணியனான விக்கிரமசிங்க மூவேந்தவேளார்
நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 13 (வலிய காதல் வழிகிறதே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 12 (கொண்டல் விலக்காயோ கொண்டலே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 11 (என் நிலை உரைப்பார் யாரோ?)
இதழ் எண். 164 > கலைக்கோவன் பக்கம்
கோலாட்டம்
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி,

நீயும் நானுமாய்க் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள தாராசுரத்திற்குச் சென்ற பயணங்கள் உனக்கு நினைவிருக்கலாம். அங்கு இரண்டாம் ராஜராஜ சோழரால் எடுப்பிக்கப்பெற்ற ராஜராஜ ஈசுவரம் சிற்பக்களஞ்சியமாக விளங்குவதைப் போகும் வழியெல்லாம் பேசிச் செல்வோம். பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் விளங்கிய பண்பாட்டுக் கூறுகளின் படப்பிடிப்புகளாகப் பல சிற்பங்களை அங்குக் காணமுடிவதை உன்னிடம் பகிர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் சில சிற்பங்களைப் பார்ப்பதும் அவை பற்றிக் கலந்துரையாடுவதுமாகவே நம் பயணங்கள் நிறைந்திருக்கின்றன. நீ பலமுறை பார்த்துப் பல கேள்விகளுடன் என்னை நோக்கிய அந்தச் சிறப்பான சிற்பம் இன்றும் என் கண்முன் நிற்கிறது. அந்தச் சிற்பத்தையும் அது தொடர்பான உன் கேள்விகளுக்கான விடைகளையும் இம் மடல் வழிப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

மூன்று பெண்கள் இணைந்து நிகழ்த்துமாறு அமைந்த அந்தக் கோலாட்டச் சிற்பம் தனித்துக் குறிப்பிடத்தக்கதுதான். தமிழ்நாட்டிலுள்ள பழங்கோயில்களில் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டமைந்த சிற்பக் காட்சிகளில் கோலாட்டத்தைக் காணக்கூடவில்லை. ஆடற்சிற்பங்களின் காட்சியகமாக விளங்கும் துக்காச்சி விக்கிரமசோழீசுவரத்தில்கூடக் கோலட்டச் சிற்பத்தை நாம் பார்த்ததில்லை. நாம் அறிந்தவரையில், தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் முதல் கோலாட்டச் சிற்பமாகத் தாராசுரம் காட்சியே முன் நிற்கிறது.

தாராசுரத்துக் கோலாட்டம்

துணைத்தளக் கண்டசிற்பமாக அமைந்துள்ள இக்கோலாட்டக் காட்சியில் மூன்று பெண்கள் இரண்டு கைகளிலும் கோல் கொண்டு ஆடுவதைக் காணமுடிகிறது. பெருங்கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சுவர்ணவைகாக்ஷம், இடைவிரிப்புடனான சிற்றாடை, இடைக்கட்டு என ஒப்பனை நிறைத்து, கொண்டையை மீறிய சடைக்கற்றைகள் தோள்களில் நெகிழ ஆடும் இம்மூவரில் முதலிருவர் நேர்ப்பார்வையில் ஆட, மூன்றாமவர் ஒருக்கணிப்பிலும் சுழற்சியிலுமாய்க் கோலடிக்கிறார்.



இலேசான வலஒருக்கணிப்பில் இடப்பாதத்தை உத்கட்டிதத்திலும் வலப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் இருத்தி மண்டலநிலையில் காட்சிதரும் வலப்பெண்ணின் வலக்கை, கோலுடன் தலைக்குமேல் உயர்ந்துள்ளது. இடக்கைக் கோல் தொடையருகே நீண்டுள்ளது. அவரைப் போலவே லேசான வலஒருக்கணிப்பிலுள்ள நடுப்பெண் இருபாதங்களையும் உத்கட்டிதமாக்கி வலக்கையை உயர்த்தி அதிலுள்ள கோலால் முதல் பெண்ணின் வலக்கைக் கோலைத் தட்டுகிறார். இடமாய் ஒருக்கணித்து இளநடைபயில்வது போல் திரும்பியுள்ள மூன்றாம் பெண்ணின் வலக்கைக் கோல் நடுமங்கையின் இடக்கைக் கோலில் மோத, உடலின் சுழற்சியில் ஆட்ட விரைவைக் காட்டும் அவரது இடக்கைக் கோல் இடுப்பருகே நீண்டுள்ளது. மூவரில் நடுப்பெண்ணின் இரு கைக் கோல்களும் பிற இருவர் கோல்களுடன் இணைந்து ஒலியெழுப்ப முதல்வர், மூன்றாமவர் கைக் கோல்களில் ஓரிணை அடுத்த சுழலுக்காய்க் காத்துள்ளன.

கோலாட்டக் கோயில்கள்

முதல் கோலாட்டச் சிற்பமாகத் தாராசுரக் காட்சி கண்முன் கதை விரித்தபோதும் தமிழ்நாட்டில் கோலாட்டத்தைப் பரவலாக்கிய பெருமை விஜயநகர அரசர்களையே சாரும் வாருணி. ஹம்பிக் கோயில்களில் காணப்படுமாறு போலவே தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றிலும் கோலாட்டத்தில் தங்களுக்குள்ள ஆளுமையை விஜயநகரச் சிற்பிகள் பதிவுசெய்துள்ளமையை உன்னிடம் கூறியிருக்கிறேன். ஊர்வலக் காட்சிகள் போலவும் தனித்த கோலாட்ட நிகழ்வுகளாகவும் அவர்தம் செதுக்கல்களைச் சிராப்பள்ளி திருநெடுங்களநாதர், திருக்கோடிக்கா கோலக்கநாதர், காஞ்சிபுரம் கச்சபேசுவரர் - ஏகாம்பரேசுவரர் - வரதராஜப்பெருமாள், வேலூர் ஜலகண்டேசுவரர், வல்லம் விசுவநாதேசுவரர், மேலைச்சேரி திரௌபதி அம்மன் கோயில்களில் நான் பார்த்திருக்கிறேன். காஞ்சிபுரத்திலுள்ள திருப்பருத்திகுன்றம் சமணக்கோயிலிலும் உத்தரகோசமங்கை ஆடவல்லான் மண்டபத்திலும் ஓவியக்காட்சியாகக் கோலாட்டம் காட்டப்பட்டுள்ளது.

கோலாட்டக் களங்கள்

கோயில் கட்டுமானத்தின் பல பகுதிகளில் இக்கோலாட்டக் காட்சிகளைக் காணமுடிந்தாலும் வளாகச் சுற்றின் துணைத்தளக் கண்டத்திலேயே அவை பரவலாக இடம்பெற்றுள்ளன. வேலூர்க் கோயிலில் தூண் கட்டிலுள்ள பட்டையில் சிற்றுருவச் சிற்பத் தொகுதியாகக் காட்டப்பட்டுள்ள கோலாட்டம், மேலைச்சேரியில் உத்திரத்தில் காணப்படுகிறது. திருக்கோடிக்கா கோலாட்டம் கோபுர உட்சுவரிலமைய, வல்லத்துக் கோலாட்டம் அங்குள்ள நீர்த்தொட்டிகளின் பக்கப்பகுதிகளைச் சிறப்பிக்கிறது. ஓவியக் கோலாட்டமோ கூரைக்காட்சியாய் மலர்ந்துள்ளது.

ஊர்வலக் கோலாட்டம்

நெடுங்களநாதர் வளாகத்துள்ள அம்மன்கோயில் பெருமண்டபத் தென்முகத்தில் வெளித்தெரியும் துணைத்தளப் பகுதியில் மண்டப வாயிலின் வலப்புறம் கோலாட்டமும் இடப்புறம் ஊர்வலமும் சிற்பத்தொடராகக் காட்சியாகின்றன. ஊர்வலத்தில், முன்னால் ஒருவர் ஓங்கிய வாளுடன் நன்கு அலங்கரித்த குதிரையை நடத்திச்செல்ல அதன் மேல் இவர்ந்துள்ளவர் இடக்கையில் கடிவாளத்தைப் பிடித்தவாறு வலக்கையை நீட்டியுள்ளார். குதிரையின் பின்னால் குடை, கவரி, குடுவை, சந்தனக்கிண்ணம் ஆகியவற்றுடன் பணியாட்கள் ஐவரும் வாள், கேடயம் கொண்டவர்களாய் வீரர்கள் மூவரும் பின்தொடர்கின்றனர்.





இந்த ஊர்வலத்திற்கான முன்னோட்ட ஆடலாய் வாயிலின் வலப்புறம் பத்துப் பெண்களின் கோலாட்டம். அனைவருமே அழகிய கொண்டையும் பனையோலைக் குண்டலங்களும் கழுத்தாரமும் தோள், கை வளைகளும் நடுப்பட்டை கொண்ட இடையாடையும் பெற்றுள்ளனர். இடையாடையின் மேல் அழகிய விரிப்பாய் அனைவருக்கும் தொடையளவிலான சுருக்கிக்கட்டிய மடிப்பாடை. சிலர் நேர்ப்பார்வையிலும் சிலர் லேசான ஒருக்கணிப்பிலும் உள்ளனர். ஆட்ட விரைவுக்கேற்பச் சிலர் தலையை வலம் அல்லது இடம் சாய்த்தும் குனிந்தும் சற்றே நிமிர்ந்தும் அழகுடன் திகழ்கின்றனர். ஒரு கையின் கோல், உடலின் முன்புறம் நீண்டு வல அல்லது இட ஆடலரின் கோலுடன் மோத, மற்றொரு கை தலையின் பின்புறம் கோலை நீட்டி, அடுத்துள்ள ஆடலரின் அதே அமைப்பிலான கோலைத் தட்டுமாறு ஆடும் இவ்வழகியரின் பாதங்கள் ஆட்டத்தின் போக்கிற்கேற்பப் பார்சுவம், சூசி, அக்ரதலசஞ்சாரம் எனப் பலவாறு அமைய, சிலர் ஊர்த்வஜாநுவாய்க் காலை உயர்த்தியும் ஆடுகின்றனர் வாருணி.

திருக்கோடிக்கா கோபுரப் பெண்கள் ஒரு பாதத்தைப் பார்சுவமாக்கி, ஒரு காலை ஊர்த்வஜாநுவாக உயர்த்திக் கோலாட்டம் அடிக்கின்றனர். பூட்டுக்குண்டலம், கழுத்தணிகள், தோள், கை வளைகள், நெற்றிச்சுட்டி, நடுவிரிப்புடனான இடைப்பட்டாடை, சலங்கையுடன் இரு கைக் கோல்களும் அடுத்துள்ளவர் கோல்களுடன் மோத, விரைந்தும் சுழன்றும் ஆடும் அப்பெண்களின் திருமுகங்கள் பல கோணங்களில் திரும்ப, இதழ்களில் எழிலார்ந்த புன்னகை. ஊர்வலத்தில் வாளும் கேடயமும்ஏந்திய வீரர்கள் பலராகவும் ஈட்டி, குத்துவாள், கொடி, தண்டு, பானை கொண்டவர்கள் சிலராகவும் உள்ளனர். ஒரு சிற்பம் தேருக்கு முன் தனியாய் ஆடும் கோலாட்டப் பெண்ணைப் படம்பிடிக்க, மற்றொன்றில் கோலாட்டக் காரிகைக்கு மத்தளத் தாளம் தரும் கலைஞர்.





வல்லத்துக் கோலாட்டம்

வல்லம் கோலாட்டம் நீ அறிவாய். 1990லேயே அது குறித்த என் தினமணி கதிர் கட்டுரையை உனக்குத் தந்திருக்கிறேன். அக்கோயிலிலுள்ள கலையெழில் தொட்டிகள் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கோலாட்டம் மங்கல நிகழ்வின்போது நிகழ்த்தப்பட்டதாகும். கருவுற்ற பெண் ஒருவர் அமர்ந்திருக்க, அவருக்குப் பூச்சூட்டி ஒப்பனை செய்கிறார் தோழி. முன்னால் கோலாட்ட நிகழ்வு. வளைந்தும் நிமிர்ந்தும் சாய்ந்தும் சரிந்தும் கோலாட்டமிடும் அழகியர்தம் இடையாடைகள் அவர்தம் ஆட்டத்திற்கேற்ப விரிந்தும் சுருங்கியும் மடிப்புகளுடன் விளங்க, இவ்வாட்டத்திற்கு மத்தளம் வழித் தாளம் தருகிறார் ஆடவக்கலைஞர். கோயில் மடைப்பள்ளியில் உள்ள மற்றொரு தொட்டியிலும் அதன் கீழ்ப்புறத்தே கோலாட்டக் காட்சியும் அன்னங்களும் காட்டப்பட்டுள்ளதைப் பார்த்தது உனக்கு நினைவிருக்கலாம்.



பிற கோலாட்டங்கள்

ஏகாம்பரநாதர் கோயில் சுற்றுமாளிகைத் துணைத்தளக் கோலாட்டப் பெண்கள் அனைவரும் ஒருபாதத்தைப் பார்சுவத்திலிருத்தி, மற்றொரு காலின் முழங்காலை இடுப்பளவு உயர்த்தியுள்ளனர். அனைவருமே பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், பட்டாடை, இடைவிரிப்புக் கொண்டவர்களாய் ஒருவர் வலமும் ஒருவர் இடமுமாய் ஒருக்கணித்தாடுகின்றனர். கோலாட்டங்களின் தாளத்திற்கு மத்தள இசை துணைநிற்கிறது. வேலூர்க் கோயில் தூண் கட்டுப் பெண்கள் ஊர்த்வஜாநுவின் பல நிலைகளில் ஒரு கால் உயரக் கோலாட்டமடிக்கின்றனர். அவர் தம் கைக்குச்சிகளின் நீளம் சற்றே குறைந்துள்ளது. இக்கோயில் துணைத்தளக் கண்டக் கோலாட்டக் குழுவினர் கோடிக்காக் குழுவினரை ஒத்துள்ளனர். இங்கும் மத்தள வாசிப்பைக் காணமுடிகிறது. கச்சபேசுவரர், வரதராஜர், மேலைச்சேரி கோலாட்டக் காட்சிகளும் இவற்றைப் பின்பற்றியுள்ளன.



ஓவியக் கோலாட்டம்

பருத்திக்குன்றத்து ஓவியக் கோலாட்டம் நாம் பார்த்ததுதான். பிற இடக் கோலாட்டக் காட்சிகளிலிருந்து இது மாறுபட்டுள்ளது. இப்பெண்கள் முந்தானை விரிந்த புடவையும் மேற்சட்டையும் அணிந்தவர்களாய்க் கோலாட்டமாடுகின்றனர். அவர்தம் நீள்சடை ஆட்டவளைவுக்கேற்பச் சுழன்றும் நெகிழ்ந்தும் காட்சிதர, நிமிர்ந்த தலையினராய் ஒருவரையொருவர் பார்த்தவாறு அவர்கள் கோலடிக்கும் அழகு சிறப்பானது. இதே அமைப்பிலான கோலாட்டம் உத்தரகோசமங்கையிலும் ஓவியமாக்கப்பட்டுள்ளது. பருத்திக்குன்றம் போலல்லாது இங்கு புடவையின் தலைப்பு ஆடுவோரின் மார்புப்பகுதியை மறைத்துள்ளது.



மாமல்லபுரம் செங்கல்பட்டுச் சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் நாம் பார்த்த காட்சி உனக்கு நினைவிருக்கலாம். இருபதுக்கும் மேற்பட்ட ஆடவர்கள் கோலாட்டமாடிக் கொண்டே ஊர்வலமாகச் சாலையில் சென்றனர். அவர்கள் சற்று ஓய்வெடுத்தபோது நாம் அவர்களை நெருங்கி உரையாடினோம். கோலாட்டமாடிக்கொண்டே திருப்பதிக்கு நடைப்பயணம் செல்வதாக அப்பெருமக்கள் தெரிவித்தது உனக்கு நினைவிருக்கலாம்.

பிற்சோழர் காலத்தே ஒற்றைக் காட்சியாய்க் கண்காட்டும் கோலாட்டம் விஜயநகர வேந்தர்களின் தழுவல் பெற்ற தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில் தொடராகவும் தனித்தும் காட்டப்பட்டிருப்பதுடன் ஊர்வலம், தேரோட்டம் ஆகியவற்றின் சிறப்பு நிகழ்வாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளமை இப்போது உனக்குத் தெளிவாகியிருக்கும். இன்றைக்குத் தமிழகத்தில் ஆண், பெண் இருவருக்குமான பொதுவான ஆடல்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோலாட்டம் பிற்சோழர், விஜயநகரத்தார் காலத்தில் பெண்களால் மட்டுமே இம்மண்ணில் நிகழ்த்தப்பட்டது போல் இதுவரை கிடைத்துள்ள சிற்பக்காட்சிகள் கண்காட்டுகின்றன. உன்னுடைய ஆய்வுப் பயணங்களில் வேறெங்கேனும் கோலாட்டக் காட்சிகள் கண்டிருப்பின் எனக்கு எழுது. கோலாட்டம் ஆய்வு நிறைவுற அது உதவும்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.