http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 164

இதழ் 164
[ மே 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

கோலாட்டம்
கம்பன் மணியனான விக்கிரமசிங்க மூவேந்தவேளார்
நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 13 (வலிய காதல் வழிகிறதே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 12 (கொண்டல் விலக்காயோ கொண்டலே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 11 (என் நிலை உரைப்பார் யாரோ?)
இதழ் எண். 164 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 13 (வலிய காதல் வழிகிறதே!)
ச. கமலக்கண்ணன்

பாடல் 13: வலிய காதல் வழிகிறதே!

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
筑波嶺の
峰より落つる
男女の川
恋ぞつもりて
淵となりぬる

கனா எழுத்துருக்களில்
つくばねの
みねよりおつる
みなのがは
こひぞつもりて
ふちとなりぬる

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: பேரரசர் யோசெய்

காலம்: கி.பி. 869-949.

இவரது வரலாற்றைப் படித்தால் ஜப்பானின் 23ம் புலிகேசி என்றுதான் எண்ணத் தோன்றும். கி.பி 858ல் பேரரசர் மோண்டொக்குவின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து 8 வயதே ஆன செய்வா அரசராக முடிசூட்டிக்கொண்டார். ஜப்பான் வரலாற்றிலேயே மிகவும் இளவயதில் முடிசூடிய மன்னர் என்று இவரைக் கூறலாம். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 26ம் வயதிலேயே அரச வாழ்வில் ஆர்வமிழந்து துறவறம் பூண விரும்பினார். எனவே, அப்போது பதின்ம வயதைக்கூட நெருங்காத தன் மூத்த மகன் யோசெய்க்குப் பட்டம் சூட்டி அரசனாக்கிவிட்டுப் புத்தத் துறவியாகிவிட்டார். யோசெய்க்கும் 9 வயதே ஆன காரணத்தால் அவரது தாய்மாமன் மொதோட்சுனே காப்பாளராக நியமிக்கப்பட்டார்.

விளையாட்டுத்தனம் நீங்காத யோசெய்யின் குறும்புத்தனம் அரசரான பின்பும் தொடர்ந்தது. காலப்போக்கில் குறும்புத்தனம் குறைவதற்கு மாறாக மூர்க்கமடையத் தொடங்கியது. கொரியாவின் பேக்ச்சே வம்சம் ஜப்பானுடன் வாணிபத் தொடர்பு கொள்ள விரும்பித் தூதுக்குழுவை அனுப்பியது. ஆனால் யோசெய்க்கு அதன் பயன்கள் என்னவென்று புரியாததால் அதற்கு உரிய மரியாதை தரவில்லை. எனவே, தூதுக்குழு தோல்வியுடன் திரும்பிச் செல்லவேண்டியதாயிற்று. யோசெய் பதின்ம வயதை அடைந்தபோது தனிமையையே அதிகம் விரும்பினார். தனிமையில் இவரது பொழுதுபோக்குகள் விசித்திரமாக இருந்தன. பாம்புக் கூண்டுக்குள் தவளைகளை விட்டுப் பாம்புகள் அவற்றை விழுங்குவதை இரசிப்பது, நாயையும் குரங்கையும் ஒரே கூண்டில் அடைத்து அவை சண்டையிடுவதைக் கண்டுகளிப்பது என நீண்டன. காலம் செல்லச்செல்ல இவை அதிகரித்தனவே தவிரக் குறையவில்லை. ஒரு கட்டத்தில் குற்றவாளிகளைத் தன் கையாலேயே கொலையும் செய்தார். அரண்மனையில் தனக்குப் பிடிக்காத பெண்களை இசைக்கருவிகளின் நரம்பினால் கழுத்தை அறுத்துக் கொலைசெய்து ஆற்றில் வீசுதல், மக்களை ஓரிடத்தில் குழுமியிருக்கச் செய்து அவர்கள் மீது குதிரையைச் செலுத்துதல், ஷிண்டோ மதத்தில் கடவுளின் தூதர்களாகக் கருதப்பட்ட காட்டுப்பன்றிகளையும் புள்ளிமான்களையும் வேட்டையாடுதல் என எல்லைமீறிச் சென்றுகொண்டிருந்தன.

ஒருநாள் இவரது செய்கை ஒன்றைக்கண்டு மொதோட்சுனே மிகுந்த அதிர்ச்சியுற்றார். அரசவை ஊழியர்கள் சிலரை ஒரு மரத்தின்மீது ஏறவிட்டுச் சிலரைக் கீழிருந்து அவர்களை நோக்கி ஈட்டிகளை எறியச் செய்தார். மேலிருந்தவர்கள் மடிந்து கீழே விழுவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார். இவற்றையெல்லாம் கண்ட மொதோட்சுனே இவர் இனியும் அரசராக நீடிப்பது நாட்டுக்கு நல்லதல்ல என முடிவு செய்தார். எவ்வளவோ எடுத்துக் கூறியும் யோசெய் செவிமடுக்காததால் மொதோட்சுனே ஒரு தீட்டம் தீட்டினார். நம் ஊரின் ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்று ஜப்பானிலும் இருந்த அரசருக்கான ஆலோசனைக்குழுவின் ஒப்புதலையும் இரகசியமாகப் பெற்றார். யோசெய்யிடம் தனிமையில் இருப்பதால்தான் இதுபோன்ற கொடூர எண்ணங்கள் வருவதாகவும் தொலைதூர நகரில் குதிரைகளுக்கிடையே நடக்கும் ஓட்டப்பந்தயத்தைக் கண்டுவந்தால் ஒரு மனமாறுதல் கிடைக்கும் எனவும் கூறினார். இதைக்கேட்டு மகிழ்ந்த யோசெய் குதிரைப் பந்தயத்தைக் காணச்செல்ல உடனே ஒப்புக்கொண்டார். ஓர் ஊரில் பந்தயமும் பல்லக்கில் பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டன. தலைநகர எல்லையைக் கடந்தவுடன் மொதோட்சுனேவின் திட்டப்படி வீரர்கள் எண்ணிக்கை குறைந்தது. சிறிது நேரத்தில் மொதோட்சுனே ஒரு சிறுபடையுடன் பல்லக்கைச் சூழ்ந்து யோசெய்யைச் சிறைப்பிடித்தார். முதிர்ச்சியற்ற செயல்கள் தொடர்ந்ததால் அரசராக நீடிக்கும் தகுதியை இழந்ததாகவும் அவருக்குப் பதிலாகக் கோக்கோ (யோசெய்க்கு தாத்தா முறை) என்பவரை அரசராக நியமிப்பதாகவும் இனிச் சாதாரண வாழ்க்கையையே வாழவேண்டும் எனவும் கூறியபோது யோசெய் தனது தவறுகளை உணர்ந்து உண்மையிலேயே மனமுடைந்து நீண்டநேரம் அழுதார்.

இனிமேல் திருந்தி வாழ விரும்பியதால் அரண்மனையிலேயே வசிக்க அனுமதிக்கப்பட்டார். பின்னர் இலக்கியத்தின்பால் மனம் செல்லத் தொடங்கியது. பல்வேறு கவிதைப்போட்டிகளையும் விவாதங்களையும் அரசவையில் நடத்தினார். இவரது 7 மனைவியரில் அப்போதைய அரசர் கோக்கோவின் இரண்டு மகள்களும் அடக்கம். இவரது இரண்டாவது மனைவியும் கோக்கோவின் மூன்றாவது மகளுமான யசுக்கோ மீதான காதலால் இப்பாடலை இயற்றினார். மூர்க்கத்தனத்தால் பதவியிழந்த ஒருவருக்குக் காதல் மலரச்செய்து கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் எனக் காட்டிய காலத்தின் குறும்புகள்தான் எத்தனை விசித்திரமானது!

பாடுபொருள்: காதல் நிரம்பி வழியும் உள்ளம்

பாடலின் பொருள்:

ஆண், பெண் என இரு சிகரங்களைக் கொண்ட ட்சுகுபா மலை மீதிருந்து பாயும் மினா நதி தரைதொடும் இடத்தில் ஆழமான நீர்நிலையை உருவாக்கி நீரை நிரப்பி வழிய விடுவதுபோல் காதல் என் உள்ளத்தில் ஆழமாகப் பாய்ந்து நிரம்பி வழிகிறது.

இப்பாடல் இயற்றப்பட்டபோது தலைநகராக இருந்தது கியோத்தோ என்றாலும் தற்போதைய தலைநகர் தோக்கியோவுக்கு வடக்கே உள்ள இபராக்கி மாகாணத்தின் ட்சுகுபா எனும் மலையும் அதில் உருவாகும் மினா நதியும் உவமையாகக் காட்டப்பட்டுள்ளன. தலைநகரிலிருந்து வெகுதூரத்தில் இருந்ததால் அங்கு வாழ்ந்தவர்கள் நாகரிக வளர்ச்சி அடையாதவர்களாக இருந்தார்கள் எனவும், யோசெய் இந்த இடத்தை நேரில் கண்டிருக்க வாய்ப்பில்லையாதலால் செவிவழிச் செய்திகளையும் ஓவியங்களையும் மட்டுமே பார்த்து இவ்வுவமையைப் பயன்படுத்தி இருக்கவேண்டும் எனவும் சில உரையாசிரியர்கள் கருதுகிறார்கள். இச்செய்யுளை ஒரு காதல் கடிதமாகவும் கருதலாம்.இந்த ட்சுகுபா மலை இரு சிகரங்களைக் கொண்டது. 871 மீட்டர் உயரம் கொண்ட ஆண் சிகரம், 877 மீட்டர் உயரம் கொண்ட பெண் சிகரம் என அவை அழைக்கப்படுகின்றன. நதியின் பெயரான மினா என்பதன் பொருள் ஆணும் பெண்ணும் இணைந்த என்று பொருள். நம் மாதொருபாகனார் போல. மினே என்றால் சிகரம். 3வது அடியில் மினா ஆற்றைக் குறிக்கும் சொல்லுக்கு மோனையாக 2வது அடியின் முதல் சீராக இடம்பெற்றிருக்கிறது மினே. இந்த மலையின் பெயர் ட்சுகுபாவில் இருக்கும் ட்சுகு என்ற சொல்லுக்கு இணைதல் என்றொரு பொருளும் உண்டு. நான்காவது அடியில் வரும் கொய் என்ற சொல்லுக்குக் காதல் என்றொரு பொருளும் அடர்நிறம் என்றொரு பொருளும் உள்ளன. ஆழமான இடத்தில் சேரும் நீர் அடர்நிறமாக மாறுவதுபோல் என் இதயத்தில் காதலும் அடர்த்தியாகிறது என்ற தொனியில் கையாளப்பட்டுள்ளது. இவைபோலச் சொல்லழகு நிறைந்த இந்த ஒரே ஒரு பாடல் மட்டுமே இவர் இயற்றியதாக ஜப்பானிய இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கிறது.

வெண்பா:

இதயமலை தோன்றித் தவழும் நதியாய்
இதமான அன்பும் வழியும் - அதலத்தின்
தாள்சேர் அடர்த்தெழு நீர்பெருகல் அன்ன
உளத்தினுட் காதலின் ஊற்று

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.