http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 169
இதழ் 169 [ ஜூன் 2023 ] இந்த இதழில்.. In this Issue.. |
பாடல் 35: மனித மனமும் மலர் மணமும் மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 人はいさ 心も知らず ふるさとは 花ぞ昔の 香に匂ひける கனா எழுத்துருக்களில் ひとはいさ こころもしらず ふるさとは はなぞむかしの かににほひける ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் ட்சுராயுக்கி காலம்: கி.பி 872-945. தலைநகர் கியோத்தோவுக்குத் தென்கிழக்கே இருக்கும் தொசா மாகாணத்தின் ஆளுநராகப் பணியாற்றினார். இருப்பினும் இவருக்குப் பெருமையும் புகழும் தரக்கூடியது இவரது இலக்கியப் பங்களிப்புதான். இதுவரை பார்த்த பல பாடல்களில் இடம்பெற்ற கொக்கின்ஷூ தொகுப்பை உருவாக்கிய குழுவுக்குத் தலைமை தாங்கியவர்தான் இந்த ட்சுராயுக்கி. கி.பி 905ல் பேரரசர் தாய்கோ தனது தந்தை பேரரசர் உதாவின் கனவான மாபெரும் இலக்கியத்தொகுப்பை நனவாக்க இவரது தலைமையில் மூன்று புலவர்களை (தொமொனொரி, மிட்சுனே, ததாமினே) நியமித்து அதுவரை தனிப்பாடல்களாக இயற்றப்பட்டு இருந்தவற்றைத் தொகுக்குமாறு பணித்தார். கி.பி 922ல் இப்பணி சுமார் 11,000 பாடல்களுடன் நிறைவுபெற்றது. கொக்கின்ஷூ தொகுப்புக்கு சீன மொழியில் ஒன்று, ஜப்பானிய மொழியில் ஒன்று என இரண்டு முன்னுரைகள் உள்ளன. அவற்றில் ஜப்பானிய மொழி முன்னுரையை எழுதியவர் இவர்தான். ஜப்பானிய இலக்கியத்தில் முதல் விமர்சனக் கட்டுரையும் இதுதான். புராணங்கள் முதல் தற்காலக் கவிதைகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய ஜப்பானிய இலக்கிய வரலாற்றையும் இந்த முன்னுரை பதிவு செய்துள்ளது. இத்தொகுப்பில் 102, இவரது தனிப்பாடல் திரட்டில் 350 என மொத்தம் 452 பாடல்களை இயற்றியுள்ளார். காலத்தால் அழியாத 36 கவிஞர்களின் பட்டியலிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். கென்ஜியின் கதை எனும் புகழ்பெற்ற புதினம் பேரரசர் உதா இவரையும் சில பெண் ஓவியர்களையும் கொக்கின்ஷூ பாடல்களைத் திரைச்சீலை ஓவியங்களாக வரைந்து அரண்மனையை அலங்கரிக்கும் பொறுப்பைத் தந்திருந்ததாகக் குறிப்பிடுகிறது. கொக்கின்ஷூவைத் தவிர இவரது புகழுக்கு மகுடமாய் இருப்பது தொசா நாட்குறிப்பு. ஏறத்தாழ இதை இவரது வாழ்க்கை வரலாற்றின் ஒருபகுதி என்றே குறிப்பிடலாம். கி.பி 934ல் ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுத் தலைநகர் கியோத்தோவுக்குத் திரும்பிய பின்னர் இதை எழுதினார். தொசா மாகாணத்தின் ஒரு சிற்றூரில் வசிக்கும் ஒரு பெண் தலைநகர் கியோத்தோவுக்கு 55 நாள் பயணமாக வந்துபோனதைக் கதையாகக் கூறுவதுபோல் எழுதினார். ஓர் ஆண் ஒரு பெண்போல் எழுதுவது அப்போதே இலக்கியவாதிகளிடையே புயலைக் கிளப்பியது. இவரது பல பாடல்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. பாடுபொருள்: மனிதர்களின் மாறும் மனது பாடலின் பொருள்: மனிதர்களின் மனம் அடிக்கடி மாறுமா என்று தெரியாது. ஆனால் மலர்கள் என்றுமே அவற்றின் மணத்தை மாற்றுவதில்லை. மனித மனத்தின் மாறும் தன்மையையும் மலர் மணத்தின் மாறாத் தன்மையையும் ஒப்பிடும் ஒரு புறப்பாடல். இப்பாடலுக்கு ஒரு சுவையான பின்னணி கூறப்படுகிறது. முன்பு ஒரு காலத்தில் இப்பாடலாசிரியர் ஒரு குறிப்பிட்ட விடுதியில் அடிக்கடி சென்று தங்கி வந்துள்ளார். பின்னர் நெடுநாட்கள் அங்குச் செல்லவே இல்லை. மீண்டும் ஒருநாள் சென்றபோது அந்த விடுதியின் மேலாளர், இந்த விடுதி எப்போதும் மாறாமல் தங்களுக்காக ஓர் அறையை வைத்துக்கொண்டுள்ளது. நீங்கள்தான் மாறிவிட்டீர்கள் என்றாராம். இத்தனை கால இடைவெளியிலும் எப்படி வழியை நினைவு வைத்திருந்தீர்கள் என்று கேட்டார். உடனே அதற்குப் பதிலளிக்கும் விதமாக, மனிதர்கள் மனம் மாறுவார்களா எனத் தெரியாது. ஆனால் இவ்விடுதிக்கு வரும் வழியிலுள்ள ப்ளம் மரத்தின் மலர்கள் முன்பிருந்த அதே வாசனையைக் கொண்டு எனக்கு வழிகாட்டின என்றாராம். ஜப்பானிய இலக்கியங்களில் சகுரா எனப்படும் செர்ரிப் பூக்களும் உமே எனப்படும் ப்ளம் மலர்களும் அதிகம் விதந்தோதப்படுபவை. சகுரா கண்ணுக்கு அழகானால் உமே மூக்குக்கு மணமாகும். இரண்டுமே வசந்த காலத்தின் தொடக்கத்தில் மலர்பவை. ஆனால் காலப்போக்கில் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் உமேவை விடச் சகுரா அதிக கவனத்தைப் பெற்றது. இப்போதும் சகுரா பூக்கும் ஏப்ரல் முதல் வாரத்தை வசந்தத்தை வரவேற்பதுபோல் கொண்டாடுகிறார்கள் ஜப்பானியர்கள். வெண்பா: மனிதரில் மாற்றமும் தோன்றிடில் நெஞ்சம் கனிதலில் இன்புற வன்சொல் - இனித்தலும் போக்க நிலைஇல் மனத்தினும் நன்றாம் நறுமணம் மாற்றா மலர் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |