http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 170
இதழ் 170 [ ஆகஸ்ட் 2023 ] இந்த இதழில்.. In this Issue.. |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 浅茅生の 小野の篠原 しのぶれど あまりてなどか 人の恋しき கனா எழுத்துருக்களில் あさぢふの をののしのはら しのぶれど あまりてなどか ひとのこひしき ஆசிரியர் குறிப்பு: பெயர்: ஆளுநர் ஹிதோஷி காலம்: கி.பி 880 - 951 கி.பி 809 முதல் 823 வரை ஜப்பானை ஆண்ட பேரரசர் சாகாவின் கொள்ளுப்பேரன். பேரரசர் சாகாவின் வழித்தோன்றலும் இத்தொடரின் 13வது பாடலின் ஆசிரியருமான பேரரசர் யோசெய்யின் கோமாளித்தனங்களால் அவரது பாதுகாவலராக இருந்த தாய்மாமன் மொதோட்சுனே கோபங்கொண்டு யோசெய்யின் தாத்தாவான கோக்கோவிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தார். அப்போது அதிகாரத்தை இழந்த குடும்பத்தில் வந்தவர்தான் இப்பாடலின் ஆசிரியர். அரண்மனையில் பல்வேறு பதவிகளை வகித்துவந்த இவர் கி.பி 947ல் ஆளுநராகப் பதவி உயர்ந்தார். பாடுபொருள்: ரகசியக் காதலை மறைக்க இயலாமை பாடலின் பொருள்: உயர்ந்து வளர்ந்த மூங்கில் காட்டினிடையே வளரும் களைகள் எளிதாக மறைந்து கொள்வதைப் போன்றதன்று காதல். யாரிடமும் சொல்லாவிட்டாலும் காதலர் மீதான அன்பின் மிகுதியால் வெட்கம் அல்லது பசலை ஆகியவற்றால் எப்படியாவது வெளிப்பட்டுவிடுகிறது. எனக்கு ஏன் உன்மீது இத்தனை காதல் பொங்கி வழிகிறது? அந்தக்கால ஜப்பானிய அரண்மனைகளில் இருந்தவர்களின் காதலுக்கு ஒரு வாழ்க்கைச் சக்கரத்தை வகுத்து வைத்திருக்கிறார்கள். 1. ஒருவருக்கு இன்னொருவர்மீது காதல் பிறப்பது 2. தன் காதலைப் பாடல்களாக இயற்றுவது 3. நேரடியாகக் காதலைச் சொல்லாமல் பாடல்களை அனுப்புவது 4. காதலர் தன் காதலை ஏற்றவுடன் தனிமையில் சந்திப்பது 5. காதல் வாழ்க்கையில் ஏதாவது திருப்பம் ஏற்பட்டுப் பிரிவது இந்தச் சக்கரத்தின் 2வது நிலையில் இயற்றப்பட்டதுதான் இப்பாடல். இதில் காதலுக்கு உவமையாகக் கூறப்படுவது மூங்கில் காட்டில் வளரும் களைகள். உயர்ந்து வளரும் செடிகளுக்கு இடையில் களைகள் எளிதாக மறைந்து கொள்கின்றன. ஆனால் காதலை அவ்வாறு மறைக்க முடிவதில்லை. இந்தப் பழங்குறுநூறு இலக்கியத்தின் சமகாலத்திய இன்னோர் இலக்கியமான கொக்கின்ஷூவில் இதேபோன்றதொரு சொல்லாத காதல் குறிப்பிடப்பட்டுள்ளது. மூங்கில் செடிகளுக்கிடையில் மறைந்து கிடக்கும் களைகளைப் போல் உள்ளத்தினுள் காதலை மறைத்து வைத்தாலும் காற்றடிக்கும்போது ஏற்படும் சலசலப்பில் களைகள் வெளிப்படுவதுபோல் உன்மீது அன்பு ஊற்றெடுக்கும்போது காதல் வெளித்தெரிந்துவிடுகிறது என விரிகிறது அப்பாடல். வெண்பா: வளைமிகு மூங்கில் செடியிடை தோன்றும் களையென உள்ளம் மறைப்பின் - தளையும் அறுந்து வழிந்திடும் காதலின் ஊற்றில் வெளியில் தெரியுமே அன்பு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |