http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 175
இதழ் 175 [ ஃபிப்ரவரி 2024 ] இந்த இதழில்.. In this Issue.. |
நாகபட்டினம் திருத்துறைப்பூண்டிச் சாலையில் சிக்கலுக்கு 5 கி. மீ. தொலைவில் உள்ள கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்1 பாடல் பெற்ற மாடக்கோயிலாகும்.2 அதன் ஐந்து நிலைக் கோபுரம் சுதையுருவங்களால் நிறைந்துள்ளது. கபோதபந்தத் துணைத்தளம், கபோதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முக அரைத்தூண்கள் சூழ்ந்த சுவர், பூமொட்டுப் போதிகை கள் தாங்கும் கூரையுறுப்புகள் என அமைந்துள்ள அதன் முதல் தளம் குடப்பஞ்சரங்களும் கோட்டப்பஞ்சரங்களும் கொண்டுள்ளது. மேற்றளங்கள் செங்கல் கட்டுமானங்களாய் ஆரஉறுப்புகளுடன் பொலிந்து சாலை சிகரத்தில் முடிகின்றன. வெளிச்சுற்று வெளிச்சுற்றின் தென்புறத்தே உள்ள கருங்கல் கட்டுமானம் பத்மஉபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி பெற்றுச் சுவர்களோ, கூரையுறுப்புகளோ இல்லாமல், திராவிட கிரீவம், சிகரம் கொண்டு வேசரக் குடத்துடன் காட்சிதருகிறது. அதன் பெரு, குறுநாசிகைகள் நான்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ளன. பெருநாசிகைகள் கோட்டப்பஞ்சரங் களாகவும் குறுநாசிகைகள் பஞ்சரங்களாகவும் வடிவமைக்கப் பட்டு வெறுமையாக உள்ளன. வேதிகைக்கு மாற்றாகப் பெருநாசிகைகளில் கபோதமும் குறுநாசிகைகளில் பெருவாஜனமும் காட்டப்பட்டுள்ளன. இக்கட்டுமானத்தின் மேற்கில் யானைத் திருமகள் திருமுன் உள்ளது. வெளிச்சுற்றின் தெற்கு, மேற்குச் சுவர்களிலும் வடக்குச் சுவரின் மேற்குப்பகுதியிலும் பல்லக்குப் பயணிகள், இசைக்குழு, தேரோட்டம், வேட்டை, அரச ஊர்வலம், இறைப்பல்லக்கு, ஒட்டகப் பயணி, மராத்திய வீரர்கள், யானையின் பிள்ளைப்பேறு, ஆடவல்லான், பிச்சைபெறும் அண்ணல் இவற்றுடன் பாலுணர்வுச் சிற்பங்களும் மராத்தியர் காலப் பணியாக இடம்பெற்றுள்ளன. இடைச்சுற்று இரண்டாம் நுழைவாயிலாக அமைந்துள்ள மூன்று நிலைக் கோபுரத்தின் முன், தூண் மண்டபமும் வடபுறத்தே பெருமண்டபமும் உள்ளன. கபோதபந்தத் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம் பெற்று எழும் கோபுரத்தின் தளங்களிலும் ஆர உறுப்புகளிலும் முதற் கோபுரம் போலவே சுதைச் சிற்பங்கள். இவ்வாயில் வழிப் பெருகும் இடைச்சுற்றின் நடுவில்தான் சோமாஸ்கந்தர், கேடிலியப்பர் விமானங்களைத் தாங்கும் வெற்றுத்தளம் அமைந்துள்ளது. சுற்றின் வடகிழக்கில் கதிரவன், பைரவர், விசுவநாதர் திருமேனிகள் உள்ளன. வடகிழக்கு மூலைத் திருமுன்னில் அஞ்சுவட்டத்தம்மன் மூலவர் வடிவிலும் உற்சவர் வடிவிலும் உள்ளார். சுற்றின் தென்கிழக்கில் மாடக்கோயிலுக்கான படிக்கட்டுகளை ஒட்டி விசுவநாதர், முருகன் திருமுன்கள் உள்ளன. முருகன் திருமுன் இருதள வேசரமாய் அமைந்துள்ளது. படிக்கட்டுகளின் வடபுறம் கொடுங்கை விநாயகர் உள்ளார். சுற்றின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மாளிகையில் ஒருதள வேசர விமானத்தில் விசுவநாதரும் தொடர்ந்துள்ள பகுதியில் திருத்தொண்டர்களும் இடம்பெற்றுள்ளனர். சுற்றின் மேற்குப் பகுதியில் பத்ரிவிநாயகர், அகத்தீசுவரர், ஆளுங்கோவேசுவரர், விசுவநாதர், அஷ்டலட்சுமி, ஜம்புகேசுவரர், கயிலாசநாதர் திருமுன்கள் அமைந்துள்ளன. அவை அனைத்துமே ஒருதள விமானங்களாக வேசர, நாகர, திராவிட சிகரங்களுள் ஒன்றைப் பெற்று அமைந்துள்ளன. சுற்றின் வடமேற்கிலுள்ள ஒருதள வேசர விமானத்தில் முன்னால் மூன்று மண்டபங்கள் பெற்று வனமுலை அம்மை சமபங்கத்தில் எழுந்தருளியுள்ளார். பின்கைகளில் அக்கமாலையும் மலர்மொட்டும் ஏந்தியுள்ள அம்மையின் முன்கைகள் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் உள்ளன. வடபுற மதில் சுவரில் அனுமார் சிற்பம் வழிபாட்டில் உள்ளது. மேற்குச் சுவரில் தென்புறத்தே உள்ள கோட்டங்களில் ஒன்றில் வணக்க முத்திரையில் வடமலைப்பிள்ளை கட்டளைதாரரின் சிற்பமும் மற்றொன்றில் மராத்திய அரசர்கள் துக்காஜி, துளஜாஜி சிற்பங்களும் உள்ளன. பாவாடை போன்ற கீழாடை அணிந்து திறந்த மார்புடன் விளங்கும் அரசர்தம் இடுப்பின் இடப்புறத்தே கத்தியெhன்று செருகப்பட்டுள்ளது. கீழே மராத்தியில் உள்ள நாகரிக் கல்வெட்டு, சுற்று மதிலை துளஜாஜி எடுத்த தகவலைத் தருகிறது. பிறிதொரு கோட்டத்தில் இறைவனும் இறைவியும் நந்தியுடன் காட்சிதருகின்றனர். சுற்றின் வடபுறத்தே பிரகதீசுவரர், அண்ணாமலை ஈசுவரர், ஏகாம்பரர், காளஹஸ்தீசுவரர், குபேரர், காயாரோகணர், சோழீசுவரர் திருமுன்களும் வடகிழக்கில் ஆடவல்லான், உற்சவர் பாலசுப்பிரமணியர் திருமுன்களும் உள்ளன. மாடக்கோயிலின் உள்மண்டப வெற்றுத்தளம் ஒட்டிச் சண்டேசுவரர் திருமுன் ஒருதள நாகரமாய் அமைந்துள்ளது. பெருமண்டப வெற்றுத்தளம் 4. 10மீ. உயரமுள்ள பெருமண்டப வெற்றுத்தளம் உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளால் தழுவப்பட்ட பாதங்கள் பெற்ற கண்டம், கபோதம், பூமிதேசம் இவற்றாலான கபோதபந்தத் தாங்குதளத்தின் மீது எழுகிறது. மேலே வேதிகை, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள். சுவரில் பரவலாகக் காணப்படும் கோட்டங்களுள் சில மகரதோரணத் தலைப்புக் கொள்ள, பிற, பஞ்சரங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றில் மட்டும் பிச்சையேற்கும் அண்ணலின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. மிதியடி அணிந்த கால்களில் வலக்காலைச் சற்றே முன் நிறுத்தி நடக்கும் மெய்ப்பாட்டில் காட்சிதரும் அண்ணலின் இட முன் கை இடக்கை எனும் தோல்கருவி கொண்டிருக்க, வலக்கை குணில் கொண்டு அதை இயக்குகிறது. வலப் பின் கை மானுக்குப் புல் தர, இடப் பின் கையில் மயிற்பீலிக் கவரி தொங்கும் முத்தலைஈட்டி. அடர்த்தியான சடைக்கற்றைகளுடனான சடைமகுடம், வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், அக்கமாலை, தோள், கை வளைகள், பதக்கமாலை, சிம்மமுக அரைக்கச்சு இறுத்தும் இடைக்கட்டுடனான சிற்றாடை, வீரக்கழல், கால் சரங்கள் கொண்டு விளங்கும் இறைவனின் இடப்புறம் சடைப்பாரம், அக்கமாலை, சிற்றாடை கொண்டு விளங்கும் பூதம் நீளமான குடையொன்றை இறைவன் தலைக்காய்ப் பிடித்துள்ளது. வலப்புறம் பிச்சையேற்கும் பாத்திரத்தைத் தலையில் சுமந்தபடி மற்றொரு பூதம். மகரதோரணக் கீழ், மேல் வளைவுகள் சிலவற்றில் சிற்பங்கள் உள்ளன. அவற்றுள், பூதம் ஒன்றின் ஆடல், ஒருக்கணித்த நிலையில் உள்ள கந்தருவர் தலை இவை குறிப்பிடத்தக்கன. இரண்டு குரங்குகள் எதிரெதிர் நோக்கியவாறு அமர்ந்திருக்கும் மகரதோரணத்தின் மேல் வளைவுகளுள் முதல் வளைவு இசைப் பூதங்களைக் கொண்டிருக்க, இரண்டாம் வளைவு பல்லவர் மரபொட்டி இறகு விரித்த அன்னங்களைக் கொண்டுள்ளது. ஒரு மகரதோரணத்தில் அதன் கீர்த்திமுகத் தலைப்பைக் கிளிகள் கொத்துமாறு போலக் காட்டப்பட்டுள்ளது. மற்றொன்றில் கிளிகளுக்கு மாற்றாக அணில்கள் உள்ளன. பெருமண்டப வெற்றுத்தளச் சுவரில் ஒட்டப்பட்டுள்ள பஞ்சரங்கள் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிக்கண்டம், நான்முக அரைத்தூண்கள் தழுவும் கோட்டம், பூமொட்டுப் போதிகைகள், கூரையுறுப்புகள், வெறுமையான கிரீவகோட்டம் பெற்று வெற்றுத்தளக் கபோதத்தில் சிகரம் கொண்டு முடிகின்றன. வெற்றுத்தளத்தின் மேலே வேதிகையும் நான்முகத் தூண்கள் தழுவும் சுவரும் அமர்சிம்மத்துடன் பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளும் கொண்டு பெருமண்டபம் அமைய, மேலே, தெற்கில் சுதையுருவங்கள். அவற்றுள் பாலுணர்வை வெளிப்படுத்துவனவே மிக்குள்ளன. சோமாஸ்கந்தர் திருமுன் வெற்றுத்தளம் கபோதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத் தூண்கள் சூழ்ந்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் இவற்றுடன் கூடுவளைவுகள், சிற்றுருவச் சிற்பங்கள், கோணப்பட்டம் பெற்ற கபோதம் கொண்டு அமைந்துள்ள வெற்றுத்தளம், மேற்கில் அகலமாகவும் தெற்கில் குறுகியும் அமைந்து, சோமாஸ்கந்தர் விமானத்தையும் முகமண்டபத்தையும் தாங்குகிறது. எண்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்ட அதன் புறந்தள்ளிய சாலைப்பத்திகளில் உருளை அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ள கோட்டப் பஞ்சரங்கள் தெற்கில் வீணையேந்தி அமர்ந்த சிவபெருமானையும் மேற்கில் இலிங்கோத்பவரையும் கொண்டுள்ளன. சாலைப்பத்தியின் தாங்குதளம் குமுதத்திற்கு மாற்றாகப் பெருந்தாமரை பெற்றுள்ளது. உத்குடியில் வலக்காலை முயலகன் மீது இருத்தி, முன் கைகளால் வீணை மீட்டும் சிவபெருமானின் பின்கைகளில் வலப்புறம் பாம்பு; இடப்புறம் தீச்சுடர். சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சவடி, சரப்பளி, தோள், கை வளைகள், உதரபந்தம், வீரக்கழல், சிற்றாடை அணிந்துள்ள இறைவனின் தலைமுடியருகே கிளியெhன்றும் வீணையின் மேற்புறத்தே அணிலொன்றும் காட்டப்பட்டுள்ளன. மகுடமுகப்பில் மண்டையோடு. இறைவன் இருக்கையின் கீழ்ப்பகுதியில் அவர் காலுக்கு வலப்புறம் ஒரு பெரியவரும் இடப்புறம் மூன்று பெரியவர்களும் மூன்று இளைஞர்களும் காட்டப்பட்டுள்ளனர். இடப்புறம் உள்ளவர்களில் ஒருவர் வலப்புறப் பெரியவர் போல நிற்க, இரண்டு முதியவர்கள் அமர்ந்துள்ளனர். மூன்று இளைஞர்களுள் ஒருவர் வணக்க முத்திரையில் அமர்ந்திருக்க, மற்றொருவர் முழங்கால்களை மடக்கி அவற்றைக் கைகளால் அணைத்தபடி காட்சிதருகிறார். வியப்பூட்டும் இந்தச் செவிச் செல்வக் கூட்டம் கீழ்வேளூரின் தனிச்சொத்து எனலாம். மேற்குக் கோட்டத்தில் கோளத்திறப்பில் காட்சிதரும் சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், உதரபந்தம், தோள், கை வளைகள் அணிந்த இலிங்கோத்பவர் பின்கைகளில் மானும் மழுவும் ஏந்தி, வல முன் கையில் காக்கும் குறிப்புக் காட்டி, இட முன் கையைக் கடியவலம்பிதத்தில் கொண்டுள்ளார். கோளத்தைச் சுற்றிலும் தீச்சுடர்கள். முகமண்டபத்திற்கான வெற்றுத்தளம் விமான வெற்றுத்தளக் கட்டமைப்பிலேயே சிறிய அளவினதாக அமைந்துள்ளது. அதன் தென்கோட்டத்தில் முயலகன் முதுகில் இடப்பாதத்தைத் திரயச்ரமாக நிறுத்தி, வலப்பாதத்தை ஸ்வஸ்திகமாய் இடக்காலின் முன் அக்ரதலசஞ்சாரத்தில் அமைத்து நின்றவாறு முன்கைகளால் சிம்மமுக வீணையை வாசிக்கும் தென்திசைக்கடவுளின் பின்கைகளில் வலப்புறம் பாம்பு, இடப்புறம் தீயகல். சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, இடைக்கட்டுடனான சிற்றாடை, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், கால்சரம் இவற்றுடன் காட்சிதரும் இறைவனின் கீழுள்ள முயலகன் வல ஒருக்கணிப்பில் உள்ளார். சோமாஸ்கந்தர் விமானம் இருதளத் திராவிடமாக உள்ள சோமாஸ்கந்தர் விமானத்தின் பாதபந்தத் தாங்குதளம் பெற்ற கீழ்த்தளப் பத்திகள் அனைத்துமே புறந்தள்ளியுள்ளன. தாங்குதளத்திற்கு மேல் வேதிகைத் தொகுதியும் எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவரும் பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளும் உள்ளன. சில தூண்களின் பாதமுகப்புகளில் சிறிய அளவிலான விமானங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பத்திகளில் வேதிகைக்கு மாற்றாகக் கபோதம். அனைத்துத் தூண்களும் நாகபந்தம் பெற்ற சதுரபாதங்களின் மீதே எழுகின்றன. கர்ண, சாலைப்பத்திகளுக்கு இடைப்பட்ட ஒடுக்கத்தில் குடப்பஞ்சரம் உள்ளது. சாலைப்பத்திகளை எண்முக அரைத்தூண்களும் கர்ணபத்திகளை இந்திரகாந்த (பல மடிப்பு) அரைத்தூண்களும் அணைத்துள்ளன. சாலைப்பத்திகளில் உள்ள கோட்டப் பஞ்சரங்களில் தெற்கில் வீணையேந்திய சிவபெருமா னும் மேற்கில் வேணுகோபாலரும் உள்ளனர். வடக்குக் கோட்டம் வெறுமையாக உள்ளது. முன்கைகளால் வீணை இசைக்கும் பெருமானின் பின்கைகளில் அக்கமாலையும் தீச்சுடரும் அமைய, தலையில் சடைப்பாரம். வலக்காலை இடக்கால் முன் ஸ்வஸ்திகமாக்கி சூசியில் நிறுத்தி, முன்னிரு கைகளால் குழல் வாசிக்கும் கண்ணனின் பின்கைகளில் சங்கும் சக்கரமும் உள்ளன. இடைக்கச்சு மணி களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. தலையில் கிரீடமகுடம். முதல் தள ஆரச்சாலைகள் தெற்கில் வீணையேந்திய சிவபெருமானையும் மேற்கில் விஷ்ணுவையும் வடக்கில் நான்முகனையும் நின்றகோலத்தில் கொண்டுள்ளன. குறுகலான இரண்டாம் தளத்தை அடுத்தமைந்துள்ள கிரீவம், சிகரம் இரண்டும் திராவிடமாக உள்ளன. கிரீவகோட்டங்களில் ஆலமர்அண்ணல், விஷ்ணு, நான்முகன் மூவரும் அமர்நிலையில் உள்ளனர். முகமண்டபம் புறந்தள்ளல் அற்ற நிலையில் விமானத்தை ஒத்த கட்டுமானத் துடன் விளங்கும் முகமண்டபத்தின் தெற்கு, வடக்குக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. கூரையின் மேலே சிவபெருமானின் ஸ்வஸ்திக ஆடல் உட்பட்ட பல சுதை உருவங்கள். முன்னாலுள்ள பெருமண்டபத்தின் தென்மேற்கில் விளங்கும் வாயில் வழியாக சோமாஸ்கந்தர் விமானத்தையும் முகமண்டபத் தையும் வலம் வரும் அளவில் பாதை உள்ளது. விமானத்திற்கும் முகமண்டபத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கத்தில் உள்ள கோட்டப்பஞ்சரம் சாளரமாக்கப்பட்டுள்ளது. குறிப்புகள் 1. 2: 105, 6: 67. 'கலைநிலாவிய நாவினாற் காதல்செய் பெருந் திருக்கோயில்', 'பெருந்திருக்கோயில் எம்பெருமான்' எனும் சம்பந்தரின் பாடலடிகளும், 'போகாது என்னுள் புகுந்து இடம்கொண்டு என்னை ஆண்டானை' எனும் அப்பர் பெருமானின் பாடலடியும் குறிப்பிடத்தக்கன. 2. ஆய்வு நாட்கள் 21. 8. 1982, 28. 9. 2008. இக்கோயில் பற்றிய முதல் கட்டுரை, 'கீழ்வேளூர் மாடக்கோயில்' என்ற தலைப்பில் திருக்கோயில், ஜ]லை, ஆகஸ்டு, 1983 இதழில் வெளியானது. - வளரும் |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |