http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 13

இதழ் 13
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரம்
கல்வித் தலைமை
பகவதஜ்ஜுகம் - 4
கதை 5 - தேவதானம்
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
வாழ்க நீ தம்பி!
விடியலைக் கண்ட விட்டுப்போன தொடர்ச்சிகள்
கோயில்களை நோக்கி
2. வலம் வருவோம் வாருங்கள்

கட்டடக்கலைத்தொடர் - 10
திருநந்தி ஈஸ்வரம் - 1
சங்கச் சிந்தனைகள்-1
இதழ் எண். 13 > கதைநேரம்
தண்டோரா சத்தம் -

இப்போதெல்லாம் அரசாங்க அறிவிப்புக்கள் எதற்கெல்லாம் வருவது என்று வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. சேரர் அல்லது பாண்டியருடனான போரில் வெற்றி என்பான்...அல்லது அரசர ன் பிறந்தநாள் விழா, நட்சத்திரம், உத்தமச்சோழேச்சுரர்க்கு சிறப்பு வழிபாடு என்பான்....

இதைப்பற்றியெல்லாம் நான் அதிகம் கவலைப்படுவதில்லை. நானுண்டு என் வேலையுண்டு என்று இருப்பேன். அடியேனுக்கு பிராயம் ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டது. நிலத்திலிருந்து வரும் வருமானத்தைக்கொண்டு நானும் என் மாமனும் அமைதியாய் பொங்கித்தின்றுகொண்டிருக்கிறோம்.

மாமனுடைய ஒரே மகள் - என் மனையாள் மாணிக்க நாச்சி - ஐந்து வருடங்களுக்குமுன் போய்ச்சேர்ந்து விட்டாள்... புண்ணியவதி ! என்னுடைய மகன் தஞ்சை அரசவையில் திருமந்திர ஓலைநாயகத்திடம் ....

இருங்கள். தண்டோரா அறிவிப்பில் நிலம் நீச்சு என்று பதங்கள் அடிபடுகிறன..என்னவென்று பார்த்துவிட்டு வருகிறேன். (வயதானவர்களுக்கென்று சோழராஜ்ஜியத்தில் ஏதாவது நிலமானியம் அளித்தால் நந்தா விளக்கு ஏற்றுவதாக ஆதித்தேச்சுரரிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன் - கடைசி காலத்திலாவது அதிருஷ்டம் கதவைத்தட்டாதா என்று நப்பாசை !)

என்ன...ஊரே தண்டோராக்காரனைச்சுற்றி திரண்டிருக்கிறது...முக்கிய அறிவிப்பு போலிருக்கிறதே ? என்னுடைய சிவப்பிரார்த்தனை பலித்து விட்டதா என்ன ?

"....ஆதலால் நமது சேனையின் வெற்றியை கொண்டாடும் பொருட்டும் ஈறைவனுக்கு தன்னுடைய நன்றியை தெரிவிக்கும் பொருட்டும் நமது அரசர் மகாராஜாதிராஜ உடையார் ஸ்வஸ்திஸ்ரீ பரகேசரி உத்தமச் சோழ தேவர் இத்திருநாரையூர் நாட்டுக் கூரூர்(1) கோயில் இறைவன் ஆதித்தேச்சுரமுடைய மகாதேவர் ஸ்ரீகாரியத்திற்காகவும் வழிபாட்டு நைவேத்தியங்களுக்காகவும் இவ்வூர் கோயிலின் வடக்குப்புறத்திலுள்ள ஐந்துவேலி நிலங்களை இறையிலியாக்கி(2) தேவதானமாய்(3) சாஸனம் செய்ய உத்தரவிட்டுள்ளார். நிலாஸாசனத்தை வரும் திருவாதிரை நன்னாளில் திருவாய்க்கேள்வி எறிபடைச்சோழர் ஸ்ரீ மதுராந்தக உத்தமச்சோழ வேளார் அரசருடைய பிரதிநிதியாக வந்திருந்து முறைப்படி முடித்து வைப்பார். அந்த வைபவத்தில் அவரே தேவதானமாகப்போகிற நிலங்களின் தற்போதைய கிழார்களுக்கு ஊருக்குத்தெற்கே உள்ள அரசாங்க நிலத்தையோ அதற்கு ஈடான பொற்காசுகளையோ கிரயதானம் பண்ணிவைப்பார்.....அரச ஆணையின்படி திருமந்திர ஓலைநாயகம் விடுக்கும் ஸ்ரீமுக ஆணை...."

(1) இன்றைய கூகூர். கும்பகோணம் நாச்சியார் கோயிலிருந்து மூன்று கல் தொலைவு.
(2) வரியில்லாத நிலம்
(3)ஆதாரம் - 1917ம் ஆண்டு கல் வெட்டு எண் 287

திடுக்கிட்டேன் ! ஆதித்தேச்சுரம் கோயிலின் வடக்கிலிருக்கும் ஐந்துவேலி... ஐயோ ! அதில் என்னுடையது இரண்டு வேலிக்கும்மேல் !

கூட்டம் கலைகையில் ஓரிருவர் என்னைக்கைகாட்டி பேசுவது தெரிகின்றது...

ஊரான் எவனுடனும் எனக்கு அணுக்கமான தொடர்பில்லை - ஓருவனுக்கும் என்னைக்கண்டால் பிடிப்பதில்லை...! அத்தனை பேரும் பொறாமை பிடித்த திருடர்கள் ! எவனுடைய கண் பட்டதோ - என் நிலத்திற்கு கேடு வந்து விட்டது. எவனோவொருவன் என்காதில்பட வேண்டுமென்று என் அருகிலேயே பேசிக்கொண்டு போகிறான்....

"கிழாருக்கு ஒருவழியாக சிவயோகம் கிட்டிவிட்டதடா ! இப்படியாவது போகிறவழிக்குக் கொஞ்சம் புண்ணியம் சேரட்டும் ! " (சாத்தன் மகன் குரல் போலிருக்கிறது ?)

உடனே கூட்டம் கொல்லென்று நகைக்கிறது.

"அடேய் !" என்று கோபத்தோடு திரும்ப முயற்சிக்கையில் - தள்ளாடி - நல்லவைளை ! கீழே விழுவதற்குமுன் எவரோ பிடித்துக் கொண்டார்கள்.
ஏன் இப்படி படபடத்து வருகிறது....? மூச்சு வாங்குகிறது....?

எவரோ நீர் என்று குரல் கொடுக்கிறார்கள்.

"ஏனப்பா கிழவரை வம்புக்கு இழுக்கிறீர்கள் ? பாவம் - பெருங்கோக்கிழாருக்கு நிலம் பெண்ஜாதிபோல...பொத்திப் பொத்தி விவசாயம் செய்தார்... இந்த வயதான காலத்தில் திடீரென்று நிலத்தை இறையிலியாக்கிவிட்டால் அதிர்ச்சியாய் இருக்காதா என்ன...!"

"அடே மோகேதா ! உனக்கு இவன் அந்தக் காலத்தில் ஆடிய ஆட்டமெல்லாம் தெரியாது.. நாடுகாவலதிகாரியை சிநேகிதம் செய்துகொண்டு ஊரையே ஆட்டி வைத்தான்..தேவதான நிவந்தத்தை பல வருஷங்கள் சுரண்டினான்.... தஞ்சாவூரிலிருந்து கணிகை எவளோ ஒருத்தியை வீட்டிற்கே கூட்டிக்கொண்டு வந்து கூத்தடித்தான்... பாவம் அவன் மனையாள் ! மகாலட்சுமி மாதிரியிருப்பாள் - இவனிடம் படாத பாடுபட்டாள்...கடைசியில் ஒரேயடியாய் போய்ச்சேர்ந்துவிட்டாள்....அதற்குப்பின்தான் இவன் கொஞ்சம் அடங்கினான்.... ஆனால் நிலத்தின் மீதிருக்கும் ஆசை இன்னும் குறையவில்லை...மகனுக்கு இன்னமும் நிலத்தை கிரயமாக்க மறுக்கிறான்...கிராதகன் !"

எவன் என்னுடைய பழங்கதைகளையெல்லாம் கிளறிக்கொண்டிருக்கிறவன் ? சாத்தனாய்த்தான் இருக்கும்.. அவனும் அவன் குடும்பமும் நாசமாய்ப்போக ! அதற்கப்புறம் எனக்கு லேசாய் இருட்டிக்கொண்டு வந்தது..மயங்கிச் சாய்ந்து விட்டேன்.


***********************************************************************************************


தத்தித் தை.. தை...
தத்தித் தை.. தை...
தித்தித்தை...தித்தித்தை...
தை.. தை...தித்தித்தை...

சுந்தரவல்லி என் எதிரே நாட்டியமாடிக்கொண்டிருக்கிறாள்...

இந்த பரத சாஸ்திரம் இருக்கிறதே - அதை எல்லோராலும் கைக்கொள்ள முடியாது. கை - கால் - உடம்பு - இதயம் என்று எல்லாவற்றிலும் படரக்கூடிய மாயாஜாலம் அது !

சுந்தரவல்லி பிறந்ததே இந்த நாட்டியமாடுவதற்கு மட்டும்தான் என்று சிலசமயங்களில் எனக்குத் தோன்றும் ! என்னமாய் ஆடுகிறாள்...

மருதாணி பூசிய அவளது பஞ்சு விரல்கள் காற்றில் ஏதோ நெளிவுகள் காட்டுகின்றன.. இவளைப்போய் கணிகை என்று யாராவது சொல்வார்களா ?

தனித்திருக்கும்போது அபிநயம் - கரணம் - முத்திரை என்று ஏதேதோ சொல்வாள்.. எனக்கெங்கே புரியப் போகிறது...!

நாட்டிய சாஸ்திரம் தெரியாதே தவிர, சுந்தரவல்லியின் அங்க லாவண்யங்களையும் - நாட்டியமாடுகையில் என் எதிரே விரியும் சொப்பன லோகத்தையும் ரசிக்கும் தன்மை உண்டு....(என்வீட்டில் ஓரு ஜென்மம் இருக்கிறதே - அதற்கு ஒரு இழவு இரசனையும் கிடையாது !)

நேரம் காலம் மறந்து அவளும் ஆடிக்கொண்டேயிருக்கிறாள்.... நானும் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்... எத்தனை நாழிகை ஆகியிருக்குமோ !

திடீரென்று தடுமாறி..கால்தடுக்கி ..ஐயோ ! கீழே விழுந்துவிட்டாளே !

நான் எழுந்திருக்க முயல்கிறேன்....ஆ ! என் கால்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது ? கைகளையும் ஓரங்குலம் கூட அசைக்க முடியவில்லை.... மிகவும் பிரயத்தனம் செய்து உடலை ஒரு உலுக்கு உலுக்கி - கண்களை திறந்து..

அடடா...கனவு கண்டுகொண்டிருந்தேனா ? எப்பேர்ப்பட்ட கனவு...கலைத்துத்தொலைத்து விட்டேனே |

சுந்தரவல்லி...

இருங்கள். இப்போது எங்கே ஈருக்கிறேன் ? விட்டத்தைப்பார்த்தால் என் வீடு போலத்தான் தெரிகிறது...கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கிறேன். என்ன நேர்ந்தது எனக்கு ? பொழுது இரவா பகலா ?

ஆ...ஞாபகம் வருகிறது...தண்டோரா அறிவிப்பை கேட்க வெளியில் சென்றேன்... தேவதான அறிவிப்பு...என் நிலம் ! ஐயோ ! என்ன ஆயிற்றோ என் நிலத்திற்கு ??

அவசர அவசரமாய் எழுந்திருக்க முயல்கிறேன்...முடியவில்லை. உடம்பு அடித்துப் போட்டதுபோல் இருக்கிறது.

வெளியில் ஏதோ ஆள் அரவம் கேட்கிறது - ஆதூரசாலை வைத்தியனும் மாமனும் நுழைகிறார்கள்.

"நான் முன்பே கூறவில்லை...நான்காம்நாள் கண்விழித்து விடுவாரென்று ? இது கண்டிப்பாய் தொற்று சுரம்தான் !" - வைத்தியன் உரிமையுடன் நெருங்கிவந்து நாடிபிடித்தான்.

இந்த வைத்தியன் வாய்ஜாலக்காரன். எது நடந்தாலும் "நான் முன்பே சொல்லவில்லை?" என்பான். நடப்பவற்றை முன்பே அறிந்துகொண்டால் நிமித்தக்காரனாகியிருக்கவேண்டியதுதானே ! ஏன் வைத்தியனாகி ஊரார் உயிரை எடுக்கிறான் ?

வைத்தியன் மேலும் சொல்லிக்கொண்டே போகிறான்..."பித்தநாடியில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது...(யார் கண்டது ?) நான் கொடுத்த சூரணத்தை தொடர்ந்து தேனில் குழைத்து கொடுத்து வாருங்கள்(எல்லா வியாதிக்கும் ஒரே சூரணம்தான்....சகல ரோக நிவாரணி !) ...நல்ல குணம் தெரியும்...(உன் வைத்தியமில்லாவிட்டால் ­இன்னும் சீக்கிரம் கூட குணமடையலாம்!)"

வேலை முடிந்துவிட்டது - இனி சற்றுநேரம் ஊர்க்கதை அளப்பான்.

"உங்கள் மகள் இப்போதிருந்தால் இவரை இப்படி அல்லல்பட விட்டுவிடுவார்களா ??"

சும்மா சொல்லக்கூடாது - வைத்தியனுக்கு எங்கே தட்டினால் மாமன் விழுவானென்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது.

"ஆமாம் ஐயா.... மிகுந்த புண்ணியவதி ! சுமங்கலியாய் போய்ச்சேர்ந்துவிட்டாள் ! என்ன பாவம் செய்தேனோ - அவளுடைய கடைசி முகதரிசனம்கூட கிடைக்கவில்லை.."

"ஏன் - என்ன ஆயிற்று ?" (இவனுக்கென்ன அக்கரை ?)

"வடநாட்டு ஸ்தல யாத்திரைக்குச் சென்றவள் திரும்பவேயில்லையையா... தொண்டை மண்டலத்தில் ஏதோ ஓரு ஊரில் உடம்பு முடியாமல் கிடக்கிறாள் என்று செய்தி வந்தது. இவர்தான் சென்றார் - அங்கேயே அவள் ஆவி பிரிந்துவிட்டது ! எனக்கு மிகவும் தாமதமாகத்தான் செய்தி வந்தது... எனக்கென்று யார் ஆதரவு ? அதனால்தான் - இங்கே இவருடனே தங்கிவிட்டேன்..."

"சரி - நான் நாளை வந்து பார்க்கிறேன்..!"

வைத்தியன் கிளம்ப எத்தனிக்கையில் மாமன் அவரை ஒரு பரிதாப பார்வை பார்க்க - "பதினைந்து மாடைகள் !" என்றான். என்ன அக்கிரமம் ? காட்டில் கிடக்கும் செடிகொடிகளை பிடுங்கிப்போட்டு...லேகியம் சூரணமென்று..எப்படியெல்லாம் செழிக்கிறார்கள் ! நிலக்கிழானானதற்குபதில் வைத்தியனாகியிருக்கலாமோ ...?

நிலம்....ஐயகோ ! முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டு கண்டதையும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் ??

"மாமா...நிலவிஷயம் என்ன ஆயிற்று ?"

அதற்காகத்தான் மூன்று நாட்களாக மூலப்பருடையார்(4) வீட்டிற்கும் கோயில் தனபண்டாரத்தின் கொட்டகைக்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறேன்...ஆனால் இதுவரை ஒன்றும் செய்ய இயலவில்லை !

(4) கோயில் நிர்வாகத்தை கவனித்த சபை அல்லது தனிமனிதர்

முழுப்பொய். கிழவனுக்கு என் நிலத்தில் துளிக்கூட அக்கறையில்லை.. ! அடடா... மூன்று நாட்கள் பிரக்ஞையின்றி விழுந்துவிட்டேனா...பெருந்தவறு செய்துவிட்டேனே !

தள்ளாடியபடி எழுந்திருக்க முயல்கிறேன்..இப்பொழுது மூலப்பருடையானை சந்தித்தே ஆகவேண்டும். இல்லையேல்...நினைக்கவே நெஞ்சு பதறுகிறதே !

பொறு...பொறு...மீண்டும் படபடப்புக்கு ஆளாகாதே ! உடம்பு உன் கட்டுப்பாட்டி­ல் இப்போது இல்லை.

சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். இப்பொழுது என்ன செய்ய வேண்டும் நான் ?

மூலப்பருடையானிடம் நிலத்தை தேவதானமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை என்று கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். ஆனால் பயன் இருக்குமா ?

இது ஏதோ சிறு அதிகாரிகளின் குழவிப்பேறு வேண்டுதலில்லை...சோழ சாம்ராஜ்ஜியத்தின் சர்வ வல்லமையும் பொருந்திய அரசரின் நேரடி ஸ்ரீமுகம் ! ஆதித்தேச்சுரத்தின்மேல் உத்தமச்சோழருக்கிருக்கும் அபிமானம் நாடறிந்த செய்தி.... இருப்பினும் ஒரு முயற்சிசெய்ய வேண்டியதுதான். வேறு வழியேயில்லை.

ஒரு பெருமுயற்சிசெய்து கட்டிலை விட்டு எழுந்தேன்... "மாமா - என்னைப்பிடித்துக்கொள்ளுங்கள் ! மூலப்பருடையாரை சந்திக்க வேண்டும்..!"

"இந்த நிலைமையில் நீங்கள் போய்த்தான் ஆக வேண்டுமா ??"

"ஆமாம் !"

குரல் கொஞ்சம் உயர்ந்துவிட்டது. உணர்ச்சிவசப்படாதே !


***********************************************************************************************


"ஐயா -வாருங்கள். இந்த ஆசனத்தில் அமருங்கள் !" - மூலப்பருடையான் இளைஞன். அரங்கன் பொன்னடியான் மகன்.

அமர்ந்தேன்.

"அரசரின் திருவாதிரை நட்சத்திர தேவதான அறிவிப்பு சம்மந்தமாக உங்களிடம் பேசிவிட்டு போகலாமென்று வந்தேன்.."

"நானும் கேள்விப்பட்டேன்.... ஸ்ரீமுக ஓலை அறிவிப்பைக் கேட்டதிலிருந்து மிகுந்த படபடப்புக்குள்ளாகி படுத்த படுக்கையாகிவிட்டீர்களாமே ?"

நான்கு நாட்கள் மனிதன் வெளியே வரவில்லையென்றால், அவனுக்கு திதிகூடச் செய்து விடுவார்கள்...தரித்திரம் பிடித்த ஊர்!

"உடம்புக்கு கொஞ்சம் முடியவில்லை - சுரம். இந்த நிலைமையிலும் இப்போது நான் இங்கு வந்தது இந்த தேவதானத்தில் எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை என்று கூறத்தான்...என் பாட்டன் காலத்திலிருந்து பாடுபட்டு வளர்த்த நிலமைய்யா ! திடீரென்று பிடுங்கிக்கொண்டால் எப்படி ?"

அவன் முகத்தில் சலனமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.

"பிரஜைகளிடமிருந்து பிடுங்கி இறைவனுக்கு கொடுப்பதுதான் பக்தியா ? சிபிச்சக்ரவர்த்தி - மனுநீதிச்சோழர் வம்சத்தில் வந்த உத்தமச்சோழருக்கு இதுதான் நீதியாகப்படுகிறதா ?"

"ஐயா -நான் சொல்வதை சற்று பொறுமையோடு கேட்கவேண்டும். இந்த நிலம் ஆதித்தசோழ மகாராஜா காலத்தில் ஏதோ ஒரு சோழ சேனாபதியால் உங்கள் முப்பாட்டனுடைய தந்தையாருக்கு கிரயம்பண்ணிக் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் நிலம் கோயிலுக்கே சொந்தமானதாய் இருந்ததென்று கேள்வி.

பராபரியாய் கேள்விப்படும் இந்த செய்திகளை விட்டு விடுவோம். நமது அரசர் உத்தமச் சோழதேவருக்கும் அவரது குடும்பத்தாரும் நம் கோயில் மகாதேவரிடம் கொண்டுள்ள பக்தி உங்களுக்குத் தெரியாததல்ல. நம் ஊருக்கு அருகிலேயே இருக்கும் திருமாம்பலமுடையாருக்கும்(5) திருக்கட்டளைக் கோயிலுக்கும்கூட இத்தனை நிவந்தங்கள் அளிக்கப்பட்டதில்லை. தேவதானம் முடிந்தபின் கோயிலையும் புதுப்பிக்கும் எண்ணமிருப்பதாக கேள்வி. இத்தனைக்கும் நடுவில் நீங்கள் இரண்டுவேலி நிலத்தை வைத்துக்கொண்டு தரமறுப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல - ஊருக்கே அவப்பெயர் வரும். அரசரின் நன்மதிப்பை நாமெல்லாம் இழக்க வேண்டி வரும்...."

(5) கல்வெட்டுக்களில் இடம்பெற்று இன்று இருந்த சுவடின்றி அழிந்தவிட்ட மற்றொரு கோயில்

"முன்பு நடந்ததுபோல் உத்தமச்சோழர் நிலத்தை ஒன்றுமில்லாமல் பிடுங்கிக்கொள்வதில்லையே... பெயருக்கேற்றார்போல் உத்தமனாக - இழந்த நிலத்திற்கு ஈடாய் வேறு நிலமோ பொற்கழஞ்சுகளையோ உங்களுக்கு தந்துவிட்டுதானே நிலத்தை தேவதானமாக்குகிறார் ? உங்கள் நிலத்தைத் தவிர அஸ்திர சிவக்கிழாருடைய நிலமும் தேவதானமாகப்போகிறதல்லவா ? அவரைப்பாருங்கள் ! சாமர்த்தியமாய் 25 பொற்காசுகளுக்கு நெய்விளக்கு தானமெல்லாம் செய்து (6) அரசருடைய நன்மதிப்பை ஏற்கனவே பெற்று விட்டார்."

(6) ஆதாரம் - 1917ம் ஆண்டு கல்வெட்டு எண் 292

"முன்பே இதைப்பற்றி கேள்விப்பட்டிருந்தால் ஏதாவது செய்திருக்கலாம். இப்போது இறையிலிக்கான திருநாள் குறிக்கப்பட்டு ஸ்ரீமுகமும் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில் உங்களின் எதிர்ப்பு உங்களுக்கே வினையாய் முடியும்.. சிவத்துரோகி என்று பட்டம் கட்டி விடுவார்கள் ! மேலும்..."

எதற்குத்தயங்குகிறான் ? ­துவரை சொன்னதைவிட மனவேதனை தரக்கூடிய செய்திவேறு இ­ருக்கிறதா என்ன ?

"வேறொரு செய்தியும் பராபரியாகக் காதில் விழுந்தது...”

"பரவாயில்லை - சொல்லுங்கள்..”

அவன் சற்று முன்வந்து நிமிர்ந்தான்..

"உங்கள் மகன் அரசவையில் பணிபுரிகிறாரில்லையா ? அவர்...நீங்கள் இ­ன்னமும் அந்த நிலத்தை மட்டும் அவருக்கு சாஸனம் செய்ய மறுத்து வரும் வருத்தத்தில்... திருமந்திர ஓலைநாயகத்தின் மூலம் அரசரிடம் ­இந்நிலம்பற்றி பிரஸ்தாபித்து..”

அடப்பாவி! அவசரப்பட்டுவிட்டானே ! காட்டுக்கரைக்கு அப்பால் ஆறு வேலிநிலம் எழுதிவைத்தும் திருப்தியில்லை ! இ­ந்த பாவப்பட்ட நிலம் உனக்கு வேண்டாமென்றுதானே....

ஒருவேளை..? சுந்தரவல்லிக்கு எழுதிவைத்துவிடுவேனென்று நினைத்துவிட்டானா ?? அடேய்! சுந்தரவல்லி போய்ச்சேர்ந்துவிட்டாளடா! இ­ந்த குதர்க்க வேலையை செய்வதற்குமுன் என்னிடம் ஒருவார்த்தை சொல்லியிருக்கலாமே!

எப்படிச்சொல்வான் ?அவனுக்கும் எனக்கும்தான் பலவருடங்களாக பேச்சு வார்த்தையில்லையே!

பெருமூச்சு விட்டபடி எழுந்தேன்..

"கவலைப்படாதீர்கள் ஐயா -உங்கள் வயதைக்கருதி நிலத்திற்கீடாக சற்றே அதிகப்படியான பொற்கழஞ்சுகளை...”

­இவன் நல்லவன். ­இவனிடம் தைரியமாய் வேண்டுகோள் விடுக்கலாம்.

"தம்பி! அதிகப்படியான செல்வம் எனக்கு வேண்டியதில்லை - முடிந்தால் வேறொன்று செய்யுங்களேன்...மிகுந்த நன்றியுடையவனாய் இ­ருப்பேன்!"

"சொல்லுங்கள்!"

"என் நிலத்தில் எங்கள் மூதாதையர் நட்ட சூலம் ஒன்று இ­ரு வரப்புக்களுக்கி­டையில் உள்ளது. அதனையோ அதனைச்சுற்றியுள்ள மண்மேடிட்ட பகுதிகளையோ ஒன்றும் செய்து விட வேண்டாம் - வழிவழியாய் வழிபட்டு வந்த இ­டம்! அங்கே எங்கள் குலதெய்வமான நிசும்பசூதனியே குடியிருப்பதாக ஐதீகம். நாளை எங்கள் குடியில் ஒரு நல்லது நடந்தால் அங்குவந்துதான் பொங்கலிடவெண்டும். ஆகவே ரொம்ப வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..”

"ஐயா ! அதைப்பற்றி கவலையே படவேண்டாம். நானே திருவாய்கேள்வியை நேரில் சந்தித்து இ­துபற்றி பேசுகிறேன். நிம்மதியாய் உடம்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!"

சொந்த பிள்ளைகூட இ­த்தனை கனிவாய் என்னிடம் பேசியதில்லை.

"நீங்கள் நன்றாயிருக்க வேண்டும் தம்பீ! திருவாதிரை நட்சத்திரத்திற்கு இ­ன்னும் எத்தனை நாட்கள் உள்ளன ?”

"மூன்று நாட்கள் ஐயா !"


***********************************************************************************************


சொல்லிவிட்டு வந்தேனே தவிர பாழும் மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. நிலத்தை ஒருமுறை போய் என் கண்களால் பார்த்துவிட்டு வந்தேனானால் நிம்மதியாய் ­ருக்கும்.

"மாமா - நான் வேண்டுமானால் கோயில் வரை சென்று வரட்டுமா ?”

"வேண்டாமையா ! சுரம் ­ன்னும் குறையவேயில்லை. இ­ந்நிலையில் மூலப்பருடையானை சந்தித்துவிட்டு வந்ததே பெரிது. இ­ப்போதே கோயிலுக்கும் கிளம்பினீர்களானால் அவன் குறிப்பிட்டபடி நிஜமாகவே படுத்த படுக்கை ஆகிவிடுவீர்கள்! வேண்டுமானால் நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேனே...”

­இவர் பார்ப்பதற்கு என்ன அங்கே இ­ருக்கிறது ?

ஆனால் என் உடல் நிலை பற்றி அவர் சொல்வதும் சரிதான். மூலப்பருடையான் வீட்டிலேயே சற்று இ­ருட்டிக்கொண்டு வந்தது...சமாளித்துவிட்டேன்.

சுரம் ­இன்னமும் தணியவில்லைதான். ஏன் இ­ப்படி அலைபாய்கிறேன் ? திருவாதிரைக்கோ ­இன்னமும் மூன்று நாட்கள் உள்ளன...அதற்குள் உடம்பு சுகமாகி எழுந்துவிடமாட்டேனா என்ன ?

உடம்பு பலகீனப்பட்டால் மனதும் சோர்ந்து விடுகிறது! இ­ன்னும் ஒருநாள் பொறுக்கலாம். அதற்குப்பிறகு உடம்பின் நிலையை பார்த்துக்கொண்டு... கட்டிலில் சாய்ந்தேன்.


***********************************************************************************************


பயங்கரமானதொரு கனவு....

என் மகன் வாளெடுத்தபடி வெட்ட வருகிறான் .... அவனிடமிருந்து தப்பிக்க மூச்சிறைத்தபடி வேகமாய் ஓடுகிறேன்... வழியில் கல் தடுக்கி கீழே விழுகிறேன்.. மகன் நெருங்கிவிட்டான்...நான் உன் தகப்பனடா!

எங்கிருந்தோ வந்த சாத்தன் கைகொட்டிச்சிரிக்கிறான் ! "வெட்டு! வெட்டு! தகப்பனென்று பாராதே ! அவன் மனிதனே அல்ல! அவன் செய்த காரியங்களுக்கெல்லாம் சேர்த்து ஒரே போடாக போட்டுவிடு !"

அவன் பின்னால் ஒரு கும்பலே கூடசேர்ந்து கத்துகிறது - "வெட்டு! வெட்டு!" அவர்கள் கண்களில்தான் எத்தனை வெறுப்பு!

வாள் ஓங்குகிறான் ... "ஐயோ மகனே!"

­இடையில் மாணிக்க நாச்சி குறுக்கிடுகிறாள்....கையில் திரிசூலம்! இ­வள் எப்படி இ­ங்கே வந்து சேர்ந்தாள் ? மாணிக்க நாச்சிதானா ? அல்லது மாணிக்க நாச்சியின் வடிவில் அன்னை நிசும்பசூதனியா ?

வானுக்கும் மண்ணுக்குமாய் உயர்ந்து திரிசூலத்தை ஓங்கி..."அடேய்! விட்டுவிடுவேனென்றா நினைத்தாய் ??

"கொன்றுவிடு! என்னை உன் திருக்கரங்களாலேயே கொன்றுவிடு! திரிசூலத்தை நடுமார்பில் பாய்ச்சிக் கொன்றுவிடு !"

அப்போது வேறொரு மாணிக்க நாச்சி குறுக்கிடுகிறாள் ...எத்தனை நாச்சிகள் !

"வேண்டாம்! வேண்டாம்! ­இந்த அசுரனை ஒரேயடியாய் கொன்றுவிடாதே! ­இவன் உயிரோடு ­ருக்கவேண்டும்.... ­இருந்து அணுஅணுவாய் துடிதுடித்து அதற்குப்பின்தான் சாகவேண்டும்" என்கிறாள் அந்த புண்ணியவதி!

கும்பலிடமிருந்து இ­டைவிடாத கூச்சல் - "கொல்! கொல்!"

வியர்த்து விறுவிறுத்தபடி எழுந்திருக்கிறேன்.... ஏதேது - ­இதே நிலைமை நீடித்தால் பைத்தியமாகிவிடுவேன் போலிருக்கிறதே!

அடே பெருங்கோக்கிழானே! வாழ்க்கையில் எத்தனை இ­ன்ப துன்பங்களை நீ சந்தித்திருப்பாய் ? எத்தனை சோதனைகளிலிருந்து மீண்டு வந்திருப்பாய் ?

­இதுவரை உன்னை யாராலும் அசைக்க முடியவில்லை - ­இனியும்கூட யாரும் எதுவும் செய்துவிடமுடியாது.

ஆனால் நீயாக வீணில் மனதைப்போட்டு அலட்டிக்கொள்கிறாய்! எதை எதையோ கற்பனை செய்துகொண்டு பயந்துசாகிறாய்!

­இப்பொழுது என்ன ? நிலம் தேவதானமாகப்போகிறது. போய்த்தொலையட்டும். அதற்கு ஈ­டாக எத்தனை பொற்கழஞ்சுகள் கிடைக்கும் ? அல்லது நிலமாகக் கேட்டு சாஸனம் பண்ணிக்கொள்ளலாமா ?

சரி - அதைப்பற்றி யோசிப்பதற்கு அவகாசமிருக்கிறது.

சூலம் ! மூலப்பருடையானிடம் உருக்கமாய் வேண்டுகோள் வைத்தாயிற்று. ஆனால் அவன் பேச்சு திருவாய் வேள்வியிடம் எடுபடுமா ?

கண்டிப்பாய் எடுபடும் - எடுபடவேண்டும்!

நிசும்பசூதனித்தாயே! நீதான் என் பழைய பாவகாரியங்களையெல்லாம் மன்னித்து அருள்புரியவேணும்! உன் சூலாயுதத்தையும் என்னையும் நீதான் காக்க வேணும்! எல்லாம் நல்லபடியாக முடிந்தால் தஞ்சையில் உன் ஆலயத்திற்கு வந்து 25 கழஞ்சு பொன்னி­ல் நந்தா விளக்கு ஏற்றி...

எதற்கும் ஒருமுறை நிலத்தை பார்த்துவிட்டு வந்து விடலாமா ? மாமனை காணவில்¨­ல - வெளியில் சென்றிருப்பான்.

சந்திவேளையாகிவிட்டது... இ­ப்பொழுது கிளம்பினால்தான் இ­ரவு முதல் ஜாமத்தில் திரும்பிவிடலாம். இ­ந்த நேரத்தில் கோயிலில் ஆள் நடமாட்டம் அதிகமிராது. நிலத்திலும் ஒருவரும் தென்படவில்லையென்றால்..... சற்றே முயன்று....

கிளம்பிவிட்டேன்.


***********************************************************************************************


­இருட்டத்துவங்கும் நேரத்தில் கோயிலை அடைந்து விட்டேன். வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது - மழை வரப்போகிறதா என்ன ?

முன் பக்கமாகச் சென்றால் எவன் கண்களிலாவது படநேரும். ஊரில் ஒருவனுக்காவது தன்னுடைய வேலையை மட்டும் கவனித்துக்கொண்டு போகத் தெரியாது. வெளிக்கிருக்கப் போனாலே ஆயிரம் விசாரிப்புக்களை கடந்துகொண்டுதான் போகவேண்டுமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

நல்லவேளை! கோயிலில் அரவம் அதிகமில்லை. ஆனால் தோரணங்களும் வாழைகளும் கட்டியிருப்பது மங்கலாய்த் தெரிகிறது...

ஐந்துவேலி இ­றையிலி என்றால் கசக்குமா ? ஆதித்தேச்சுரமுடையாருக்கு அபிஷேகம் ஆராதனையென்று...ஒரே தடபுடல்தான்!

அதோ தெரிகிறது என் நிலம்!

வரப்புக்கு நடுவில்..மண்மேடிட்ட இ­டத்தில்...சூலம்தான் முதலில் கண்ணில் படுகிறது ! வழிபாடு செய்வதற்கு ஏதுவாக சூலத்தைச் சுற்றியுள்ள கணிசமான நிலத்திலும் மண்ணடித்து தரிசாகவே விட்டிருக்கிறேன்.

நெருங்கும் நேரத்தில் ... வானத்திற்கும் பூமிக்குமாய்... கண்களையை குருடாக்கி விடுகிறாற் போல ஓரு நெடிய மின்னல்!

அதோ! மின்னலின் வெளிச்சத்தில் திரிசூலத்தின் கூரியமுனைகள் ராட்சஸனின் பற்களைப்போல் தெரிகின்றன...

அன்னை நிசும்பசூதனியின் சூலம்! நெடிது ஓங்கி நிற்கும் காள படாரியின் சூலம்! அக்கிரமக்காரர்களை வதம் செய்து அழிக்க வரும் சூலம்!

முன்னிருட்டு நேரத்தின் மங்கிய வெளிச்சத்தில்... அந்த சூலம் அப்படியே நிலத்திலிருந்து அரையடி மேலே எழுகிறதே!

வானத்தில் எதிரொலி - "அடே! விட்டுவிடுவேனென்றா நினைத்தாய் ??

சூலம் கோபத்தோடு மண்ணைப் பிளந்துகொண்டு வெளியேறி...ஐயோ! என்ன பயங்கரம்!

நான் வாய்குழற நடுநடுங்கிவிட்டேன்.

"யாரது ஐயா -­இங்கே இ­ந்த நேரத்தில் ?”

எங்கிருந்தோ ஒரு மனிதக் குரல் கேட்கறது.... சை! கண்டது அத்தனையும் மனப்பிரமை ! ஏனிப்படி பயந்து சாகிறேன் ?

"நான்தானய்யா பெருங்கோக்கிழான்!" - கஷ்டப்பட்டு...சற்றே குரலெடுத்துக் கத்துகிறேன்.

"பெருங்கோக்கிழாரா ? ஹா! ஹா! ஹா!"

அந்தச்சிரிப்பு ?

அவன் சற்றே நெருங்கி வந்தான்... "என்ன கிழாரே! கடைசிமுறையாய் நிலத்தை பார்த்துவிட்டுப்போக வந்தீரோ ?? ஹா! ஹா! ஹா !"

சாத்தன் மகன்! இ­ப்போது யாரையாவது பார்க்கக்கூடாது என்று நினைத்தேனென்றால் - அது இ­வன்தான்! பற்களை நறநறவென்று கடித்தேன்..

"அல்லது புதையல் கிதையல் ஏதாவது நிலத்தில் புதைத்து வைத்திருந்துவிட்டு ­ரகசியமாய் ஒருவருமறியாமல் கிளப்பிக்கொண்டு போகலாமென்று வந்தீரோ ??”

­இல்லை. ­இந்தமுறை உணர்ச்சிவசப்படக்கூடாது. உடம்புக்கு ஒத்துக்கொள்ளமல்... மறுபடியும் பழையகதை ஆகிவிடும்.

­இவன் ஒரு முழு முட்டாள்! முரடனிடம் கூட வாயை கொடுக்கலாம் - முட்டாளிடம் கொடுக்கவே கூடாது!

"புதையல்! ஆஹா! ஹா! ஹா! உமது நிலத்தில் புதைந்து கிடக்கும் பெரும் புதையல்! ஹா! ஹா! ஹா! ஹா !"

எதற்கு வெறிவந்தவன்போலச் சிரிக்கிறான் ? பைத்தியமாகிவிட்டானா என்ன ?


***********************************************************************************************


நான் பயந்துகொண்டிருந்த திருவாதிரை நாளும் வந்து விட்டது! பக்கத்து ஊர்களிலிருக்கும் ஜனமெல்லாம் காலையிலேயே வரத்தொடங்கிவிட்டன... ஒரே போக்குவரத்து.

­இடையில் மூலப்பருடையானை ஒருமுறை தரிசித்து சூலம் பற்றிய வேண்டுகோளை ஞாபகமூட்ட முயன்றேன்... அவனைப் பிடிக்க முடியவில்லை.

நிலத்தின் பக்கம் செல்லமுடியவில்லை. கோயிலில் போக்குவரத்து மிக அதிகமாகி விட்டது. அரசாங்க அதிகாரிகளும் கிராம சபையினரும் ­டைவிடாது அங்குமிங்கும் பறந்தோடிக் கொண்டிருக்கிறார்கள். ஆதித்தேச்சுரமுடைய பட்டாரகர்க்கு மூன்று நாட்களாய் சிறப்பு பூஜை நடைபெறுகிறதாம்!

­இந்த ஊர்ப் பயல்கள் அரசாங்கம் அதிகாரிகள் என்றால் தலைகால் புரியாமல் ஆடுவார்கள். ஓருவனாவது இ­தெல்லாம் ­இப்போது தேவையா என்று கேட்கிறானா பாருங்களேன்!

இ­ந்நிலையில் நிலமிருக்கும் பக்கமே போக முடியாது. அங்கு வேறொரு சனிவேறு - சாத்தன் மகன் ருபத்தில் - எனக்காக காத்துக்கொண்டிருக்கிறது! என்னத்தைச் சொல்வது ? எல்லாம் என் போதாத காலம்...

இ­னிவேறு வழியில்லை. அன்னையின் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு திருவாய் கேள்வியிடம் மூலப்பருடையானின் வேண்டுகோள் பலிக்க வேண்டுமென்று பிரார்த்தித்துக்கொள்ள வேண்டியதுதான்!

வாசலில் ஆள் அரவம்...

"ஐயா - மூலப்பருடையார் தங்களுக்கு செய்தியனுப்பியுள்ளார். தேவதானமாகப்போகிற நிலங்களின் கிழார்களை திருவாய்வேள்வி பார்க்க பிரியப்படுவதால் ­இன்னும் ­இரண்டு நாழிகை நேரத்தில் - விழா ஆரம்பிக்குமுன் - தங்களை கோயிலுக்கு வரச் சொன்னார்.”

"சரி - வருகிறேன் என்று சொல் !” - இதேதடா புது வினை ? திருவாய்கேள்வி என்னை எதற்கு சந்திக்க வேண்டுமாம் ?

ஆனால் மறுப்பது நல்லதல்ல. சூலம் ..அம்மா தாயே! மெய் ஒருகணம் நடுங்கிற்று - சமாளித்துக்கொண்டேன்.

­இப்போதே கிளம்பினால்தான் - நான் நடக்கும் ஆமை வேகத்திற்கு - குறித்த நேரத்திற்குள் கோயிலை சென்றடைய முடியும். உத்திரீயத்தை தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினேன்.

கோயிலை நெருங்க நெருங்க - அப்பப்பா ! எத்தனை ஜனம்! பூலோகமே ­இந்த வைபவத்தைக்காண திரண்டு வந்துவிட்டதா என்ன ?அத்தனை பேருக்கும் ஆதித்தேச்சுரமுடையார் மேல் பக்தி பொங்குகிறதே என்று பார்க்கிறீர்களா ? அதுதான் ­இல்லை!

பக்கத்து ஊர்களில் உள்ள கிராம சபையார்க்கு இ­து திருவாய் கேள்வியை சந்திக்க ஒரு வாய்ப்பு. கோயிலுக்கு நிவந்தம் - நந்தா விளக்கு என்று ஆயிரம் காரணங்கள் ! இளவட்டங்களுக்கு அவரவர் காதலிகளை சந்திக்கும் நப்பாசை. கிழவர்களுக்கு சுற்று வட்டார கதைகளை பிற கிழவர்களோடு வம்படிக்கும் ஆசை. பெண்டுகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். பக்கத்து ஊர்க்காரி புதிதாய் ஏதாவது நகை நட்டு அணிந்து கொண்டிருக்கிறாளா... அல்லது தஞ்சை அரச குடும்பத்து ­இளவரசி எவளைப்பற்றியாவது புதிதாய் செய்திகள் ஏதாவது உண்டா...என்று வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.

பக்தியாவது...மண்ணாவது... ! ஒருத்தனும் மகாதேவரை நினைக்கப்போவதில்லை! நானாவது நினைக்கிறேன்....சர்வேசுவரா! என்னை காத்தருள்!

கூட்டத்தில் மூலப்பருடையானை எங்கேயென்று தேடுவேன் ? நல்லவேளை! அவன் அனுப்பிய ஆள் பக்கத்திலேயே தென்படுகிறான்...

"ஐயா - மூலப்பருடையார் தற்சமயம் எங்கே உள்ளார் என்று தெரியுமா ?”

"உங்களை தேடித்தானய்யா வந்து கொண்டிருக்கிறேன்! அனைவரும் குழுமிவிட்டார்கள்... இ­ன்னும் ஓருஜாமத்தில் வைபவம் ஆரம்பமாகிவிடும்...என்னுடன் வாருங்கள்!"

அவனுடைய உதவியுடன் கூட்டத்தை கடந்து கோயில் முன்பந்தலை நெருங்குகையில்... ஒருமுறை நிலத்தை கடைசி முறையாய் பார்க்க...

ஐயோ ! இ­தென்ன அக்கிரமம் ? என் நிலம் முழுவதையும் யாரோ இ­ப்படிக் குண்டுங்குழியுமாய்த் தோண்டி வைத்திருக்கிறார்களே! இ­ந்த மாதிரி ஏதாவது இ­ழவு நடக்குமென்றுதானே பயந்து கொண்டிருந்தேன்... !

"ஐயோ ! ஐயோ !" வென்று தலையிலடித்துக்கொண்டேன்..

"என்ன ஐயா ?? என்ன ஆயிற்று ??” அவன் பதறிப்போனான்..

"பாருங்கள் ஐயா ! என் நிலத்தை எப்படி குதறி வைத்திருக்கிறார்களென்று பாருங்கள்! இரண்டு நாட்களுக்கு முன்புகூட வந்து பார்த்தேனே...”

"அட! கடைசியில் இ­து உங்கள் நிலமா..? அதை ஏன் கேட்கிறீர்கள் ? இந்த நிலத்தில் ஏதோ புதையல் இ­ருக்கிறதென்று எவனோ ஓருவன் நேற்று புரளி கிளப்பிவிட்டிருப்பான் போலிருக்கிறது!"

வேறு யார் ? சாத்தன் மகனாய்த்தான் இ­ருக்கும்...இ­தற்குத்தான் அன்றைக்கு அந்தப் பேய்ச்சிரிப்பு சிரித்தானா ?? அட சண்டாளா ! உன் தலையில் இ­டி விழ!

"நம் ஊர்க்காரப்பயல்களைப் பற்றித்தான் உங்களுக்குத்தெரியுமே! ஒட்டு மொத்த நிலத்தையும் உடனே தோண்டி நாசம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்! விஷயத்தை மூலப்பருடையார் கேள்விப்பட்டு எங்களை அனுப்புவதற்குள் கணிசமான அளவு நிலம் சேதமாகிவிட்டது! நாங்கள் வந்துதான் அத்தனை பேரையும் விரட்டினோம்...ஏதோ உங்கள் குடிக்குச்சொந்தமான சூலமாமே ?? அதைச்சுற்றித்தான் புதையல் புதைந்துகிடக்கிறதென்று நினைத்து...பலத்த சேதம்! நல்லவேளை - சூலத்தை ஒருவழியாய்க் காப்பாற்றிவிட்டோம்!"

நாசமாய்ப் போயிற்று!

அதோ மங்கலாய் தூரத்தில் தெரிகிறது சூலம்... சற்றே சாய்ந்தவாறு கிடக்கிறதே!

"ஐயா ! அந்த சூலம் எங்கள் குலதனம்! அதனை ஒருமுறை சென்று பார்த்து நிமிர்த்தி வைத்துவிட்டு வருகிறேனே!"

"மன்னிக்க வேண்டுமையா ! ஏற்கனவே நாழிகையாகிவிட்டது! திருவாய்கேள்வி சபையை அடைந்திருப்பார்... இ­ந்த நேரத்தில் தாமதம் செய்வது இ­ருவருக்குமே நல்லதல்ல! சூலத்தை பிற்பாடு கவனித்துக்கொள்ளலாம் - நானே உதவிக்கு வருகிறேன்! இ­ப்போது தயவு செய்து என்னுடன் வரவேண்டும் !"

வெள்ளம் தலைக்குமேல் போய்க்கொண்டிருக்கிறது.. ! முகம் முழுக்க வியர்வை அரும்பி... சே! சே! என்னை நினைத்தால் எனக்கே கோபம் வருகிறது...கோழை!

சபையை வேகவேகமாய் அடைந்தோம்...உண்மைதான். எங்களைத்தவிர அனைவரும் வந்து அமர்ந்திருக்கிறார்கள்.

உத்திரீயத்தால் முகத்தை துடைத்துக்கொள்கிறேன்... கால்கள் ஏன் சற்றே நடுங்குகின்றன ??

மூலப்பருடையான் ஒவ்வொருவரையும் திருவாய்கேள்விக்கு அறிமுகம் செய்கிறான்..

"இ­வர்தான் நான் முன்பு குறிப்பிட்ட கண்டன் மறவர். நிலப்பொறையைக் கருதி இ­வரை பெருங்கோக்கிழார் என்றுதான் ஊரில் குறிப்பிடுவது வழக்கம்!"

"மிக்க மகிழ்ச்சி கிழாரே! உமது குலதனமாகிய சூலம் பற்றியும் கேள்விப்பட்டேன். உம்மையும் உம் குடியயும் மரியாதை செய்யும் பொருட்டு ஏர்பிடிக்கும் ஸ்ரீகாரியத்தை சூலத்திலிருந்தே தொடங்குகிறேன் !"

கெட்டது குடி ! எனக்கு எங்கிருதோ கண்களில் நீர்கோர்த்துக் கொள்கிறது.... வாயிலிருந்து ஏதோ வார்த்தைகள் குழறியயபடி வெளிவருகின்றன...என்ன சொல்கிறேனென்று எ­னக்கே புரியவில்லை! கும்பிட்டபடி நகர்கிறேன்...

"கிழார் இ­த்தனை உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததே இ­ல்லை!" எவனோ காதில் முணுமுணுக்கிறான்..

மூலப்பருடையான் அருகில் வந்து என்னை அணைத்துக் கொள்கிறான் - "மிகப்பெரிய மரியாதை உங்களுக்கு - கிழாரே! எல்லாம் மகாதேவர் அருள்!"

"மிக்க நன்றி ஐயா - எனக்கு சற்றே மயக்கமாய் உள்ளது... நான் வேண்டுமானால் இ­ல்லம் திரும்பிவிடவா ?”

"என்ன அப்படிச்சொல்லி விட்டீர்கள்! கேள்வி உங்களை அருகில் வைத்துக்கொண்டுதான் ஏர்பிடிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார் ! மேலும் ஸ்ரீகாரியம் முடிந்தபின் பொற்கழஞ்சுகளையும் ­திருக்கோயில் மரியாதைகளையும் பெற்றுக்கொண்டுபோக வேண்டாமா ?? உடம்புக்கு முடியவில்லையென்றால் அந்த மண்டபத்தூணில் சாய்ந்து கொள்ளுங்கள்... நீர் கொண்டுவர ஆள் அனுப்புகிறேன் !"

­இவன் என்னை வெளியேசெல்ல விடமாட்டான். நடப்பது நடக்கட்டும்.

பூஜைகள் ஆரம்பமாயின. ஆதித்தேசுவரமுடையாரை பிரமாதமாய் அலங்கரித்திருந்தார்கள். மாலைகள்...பூவலங்காரம்.... தங்கத்தில் மகரதோரணம் ... அவரைச் சுற்றியபடி தலைக்கு மேல் குடையாய் விரியும் ஐந்துதலை நாகாபரணம்!

நாகாபரணம்....பொன் நாகம்! அதில் கண்களாய் பதிக்கப்பெற்ற மாணிக்கக் கற்கள்! நாகம் நிசும்பசூதனியின் வடிவம்! அந்த நாகத்தின் கண்கள் என்னையே முறைப்பது போலில்லை ?

"அடேய் கண்டன் மறவா ! விட்டுவிடுவேனென்றா நினைத்தாய் ??

கண்களைத்திருப்பி முடிக்கொள்கிறேன். குலை நடுங்குகிறது..

பூஜை விஸ்தாரமாய் ஒருஜாமத்துக்கும் மேலாக நடக்கிறது..

"கோயில் திருக்கலப்பையை அர்த்த மண்டபத்துக்கு எடுத்து வாருங்கள்!” - யாரோ குரல் கொடுக்கிறார்கள். புதிதாய் தேவதானமாகும் நிலங்களை முதன்முதலில் உழும்போது பூஜையில் வைக்கப்பட்ட கோயில் கலப்பையினால் உழுவார்கள். அந்தச் சடங்கு நடைபெறப்போகிறது போலும்.

தங்கப் பூண்களும் கவசமுமிடப்பட்ட கலப்பை கொண்டுவரப்படுகிறது... கடவுளே! உழுமுனை முழுதும் தங்க வார்ப்படம் அடிக்கப்பட்டு - என்ன கூர்மை!

பூஜைகள் எல்லாம் ஒருவழியாய் முடிந்து...பூசாரிகள் உட்பட அனைவரும் தேவதான நிலங்களை நோக்கி கிளம்புகிறார்கள்.

"ஐயா - வருகிறீர்களா ?” - மூலப்பருடையான் வந்து என்னை அணைத்தபடி வெளியே அழைத்துக்கொண்டு வருகிறான்.

"கிழாருக்கு எத்தனை மகன்களடா ?” எவனோ தூரத்திலிருந்து குரல் கொடுக்க - அந்தக்குரல் இ­ருக்கும் திசையில் திரும்ப முயல்கிறேன். "வேண்டாம் ஐயா - அவர்களை பொருட்படுத்தாதீர்கள்!" - மூலப்பருடையான் சிறிதும் சலனமின்றி தொடர்ந்து நிலத்தை நோக்கயபடியே நடந்துகொண்டிருந்தான்.

எத்தனை மனத்திட்பம் இ­ந்த வயதில்...இ­வன் ஒற்றை ஆளாக அத்தனை கோயில் காரியங்களை சமாளிப்பதில் ஆச்சரியமேயில்லை.

அனைவரும் திரிசூலத்தைச் சுற்றி குழுமிவிட்டனர்.

கூட்டத்தில் ஏதோ சலசலப்பு... கேள்வி என்னைக் கேட்டிருப்பார்போல... பரபரப்பாக அவர்முன் கொண்டு செல்லப்பட்டேன்!

சூலத்தைச் சுற்றி பெருங் கும்பல்....அட ! எனக்கு முன்னால் என் மாமன் எப்படியோ கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு முன்வந்துவிட்டானே!

கேள்வி என்னை ஒரு பக்கத்திலும் சிவக்கிழாரை மற்றொரு பக்கத்திலும் வைத்துக்கொண்டு கம்பீரமாய் முன்மொழிந்தார் -

"நிலங்கள் கோயிலுக்கு தேவதானமாவதில் அரசருக்கு என்ன பங்கிருக்கிறதோ - ஏறக்குறைய அதே பங்கு - அதன் நிலக்கிழார்களுக்கும் இ­ருக்கிறது. இ­ன்றைக்கு தேவதானமாகப்போகிற நிலங்களின் கிழார்களான பெருங்கோக்கிழார் கண்டன் மறவரும் அஸ்திர சிவக்கிழாரும் நமக்கொல்லாம் தனிப்பெரும் ­இறைவனாக விளங்கும் ஸ்ரீ ஆதித்தேச்சுர உடையாராகிய மகாதேவ பெருமானடிகளிடம் வைத்திருக்கும் சிவபக்தியை நாம் மனமார மெச்சுகிறோம்! ­இன்றுமுதல் சந்திர சூரியர்கள் உள்ளவரையில் ஒவ்வொரு திருவாதிரைத் திருநாளிலும் அவருக்கும் அவர்தம் குடிக்கும் பரிவட்டத்துடன் கூடிய சிறப்பு மரியாதைகள் செய்யப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!"

மிகுந்த கரகோஷமும் ஆஹாகாரமும் கிளம்பின.. !

என் மனம் இ­வை எதிலும் பதியவில்லை... நிலத்தையே உற்றுப் பார்த்தபடியிருந்தேன்.முதல் நாளிரவு நடந்த புதையல் வேட்டையால் மண்மேடிட்டிருந்த பகுதிகளெல்லாம் சிதைந்து... வரப்பெல்லாம் உடைந்து....

சூல பூஜை ஆரம்பமாகிவிட்டது.

திரிசூலமே! உன்னை எத்தனை முறை தொழுதிருப்பேன் ! என்னைக் காப்பாயா ??

"விலகுங்கள்! விலகுங்கள்! திருவாய்கேள்வி தமது திருக்கரங்களால் நம் கோயில் கலப்பையை பிடித்து முதல் ­றையிலி உழவைத் தொடங்கி வைப்பார் !"எங்கிருந்தோ ஒருவன் இ­ரண்டு கம்பீரமான எருதுகளை கொண்டுவந்து ஏரில் பூட்டுகிறான்.

ஐயோ ! திரிசூலத்திற்கு மிக அருகில் ஏரின் கூரிய முனை பிடித்து அழுத்தப்படுகிறது...

"தாயே!" கும்பல் காதைக் கிழிக்கும்படி ஓலமிடுகிறது... நான் சூலத்தையே முறைத்துப் பார்க்கிறேன்...அலைபாய்ந்துகொண்டிருந்த என் மனதில் திடீரென்று எதனாலோ ஒரு சாந்தி பரவ ஆரம்பிக்கிறது.

கேள்வி நிலத்தில் அழுத்தம் கொடுக்க - எருதுகள் அசைய ஆரம்பிக்கின்றன...

எல்லாமே முடியப்போகிறது. எல்லாமே என்றால்...? எல்லாம்தான்!

ஏர் கொஞ்சம் நகர்ந்து...நின்று...எதிலோ சிக்கிக் கொண்டதுபோல் தெரியவில்லை ? "அடேய்! போய் மண்ணை விலக்குங்களடா!"

கண்டன் மறவா ! கடைசியில் ஜெயித்தது நீதான்! உன்னை கடைசிவரை விட்டுவைத்துக் கழுத்தறுக்க வேண்டுமென்று அவள் நினைத்தாள்...நல்லவேளை! நீ முந்திக்கொண்டாய்!

கூட்டத்தில் திடீர் சலசலப்பு... "நான் அப்பொழுதே சொல்லவில்லை ? கிழான் தனது நிலத்தில்தான் சொத்தனைத்தையும் பதுக்கியிருக்கிறானென்று ?”

நான் ஜெயித்துவிட்டேன்! அவளுடைய அட்டகாசங்களுக்கெல்லாம் இ­ன்றோடு முடிவு கட்டுகிறேன்!

மண்ணை வேகவேகமாய் விலக்கியவர்கள் - "ஆ...ஊ...” என்று அலறியபடி விலக ஓட ..கூட்டம் ஆவலுடன் முன்வந்து எட்டிப்பார்க்கிறது!

அடேய் கண்டன் மறவா ! இ­ப்போதும் உன்னை விட்டுவிடுவேனென்றா நினைத்தாய் ? அசரீரியாய் வானத்திலிருந்து ஒலிக்கும் அந்தக் குரல்...??

மண்ணிலிருந்து கோரமாய் வெளிப்பட்டது - ஒரு எலும்புக்கூடு! மண்டையோட்டின் கீழ் கழுத்தில் தெரியும் அந்த தங்கப் படைத்தாலி - சூரிய ஒளியில் தகதகக்கிறது...

வானத்தில் அவள் உருவம் மெல்ல மெல்ல எனக்கு புலனானது. அடியேய் - உன்னால் ­இனி என்ன செய்துவிட முடியும் ?? எல்லாம் முடிந்துவிட்டதடி! அவளைப்பார்த்து எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது!

கூட்டத்தின் முன்னாலிருந்த மாமனுக்கு ஏதோ எண்ணம் தோன்றி - தாலியை உற்றுப்பார்த்து - "மகளே ! மாணிக்க நாச்சி !" பிராந்தியமே அதிரும் வண்ணம் அலறுகிறான் !

சிரிக்கிறேன்! வானத்தில் அவள் கண்கள் கோவைப்பழமாய் சிவந்து போகின்றன. நான் அவளைக் கைகாட்டி - வாய்விட்டுச் சிரிக்கிறேன் - ஹா! ஹா! ஹா! ஹா!

"அடேய்! தொண்டை மண்டலத்தில் புதைத்தேன் என்றாயே! பின் பிணம் இ­ங்கெப்படியடா வந்தது ? சொல்! என் மகளைக் கொன்றது நீதானே ?? அடப் பாவி! சண்டாளா !”

மாமன் தலையிலடித்துக்கொண்டு புலம்பியபடி முன்னால் பாய்கிறான் !

ஹா! ஹா! ஹா! ஹா! நான் தொடர்ந்து வெறியோடு சிரித்தபடி - ஊரிலேயே ஆழமான ஆழிவெண்ணாடன் கிணறிருக்கும் திசையை குறிவைத்து தட்டுத் தடுமாறி ஓடுகிறேன்...

நான் ஜெயித்துவிட்டேனடி! ஹா! ஹா! ஹா! ஹா!***********************************************************************************************
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.