http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 13

இதழ் 13
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரம்
கல்வித் தலைமை
பகவதஜ்ஜுகம் - 4
கதை 5 - தேவதானம்
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
வாழ்க நீ தம்பி!
விடியலைக் கண்ட விட்டுப்போன தொடர்ச்சிகள்
கோயில்களை நோக்கி
2. வலம் வருவோம் வாருங்கள்

கட்டடக்கலைத்தொடர் - 10
திருநந்தி ஈஸ்வரம் - 1
சங்கச் சிந்தனைகள்-1
இதழ் எண். 13 > கலைக்கோவன் பக்கம்
வாழ்க நீ தம்பி!
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி, உன் முகத்தில் வியப்பு ரேகைகள் விரிவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. "இதென்ன அதிசயம்! இப்போதுதான், 'என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே' என்று மகிழ்ந்து படித்துக் கொண்டிருந்தேன்; அதற்குள் இன்னொரு மடலா?" என்று உன் விழிகளில் வினாவொன்று தேங்குவதையும் காண்கிறேன். பொதுவாக இப்படி நான் அவசரப்படுவதில்லைதான். ஆனால் ஜூலை 2,3ல் நடந்தவற்றை உன்னுடன் பகிர்ந்து கொள்ள ஒரு திங்கள் காத்திருக்க என்னால் முடியாது போலிருந்தது. அதனால்தான் இந்த இரண்டாவது மடல். இதை இரண்டாவது மடல் என்பதினும், 'என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே' வின் இரண்டாம் பகுதி எனலாம்.

வரலாறு.காம் ஆசிரியர் குழுவினர் அவர்தம் நண்பர் சதீஷுடன் வலஞ்சுழி வந்திருந்தனர். ஆசிரியர் குழுவில் ஒருவரான திரு.ச.கமலக்கண்ணன் ஆகஸ்டு முதல் வாரம் ஜப்பான் செல்கிறார். சென்ற ஆண்டில் இருமுறை அமெரிக்கா சென்று வந்தது போல் இது குறுங்காலப் பணிப் பயணம் அன்று. ஐந்தாண்டுகள் அங்கிருக்கத் திட்டமிட்டுச் செல்கிறார். ஜப்பான் வாழ்க்கை அவருடைய இளமைக்கனவு. அதற்காகப் பெரிதும் முயன்று நன்கு திட்டமிட்டு, அயராது உழைத்து இந்த நல்வாய்ப்பை ஈட்டியுள்ளார். அவருக்கு ஒரு வழியனுப்பு விழாச் செய்ய வேண்டும் என சுந்தர் பரத்வாஜ் விழைந்தார். அதை வலஞ்சுழிப் பயணத்தின்போது மேற்கொள்ளலாம் எனக்கருதி, கமலக்கண்ணனைப் பற்றிப் பேசுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்.

நான், ஆசிரியர் குழுவைச் சேர்ந்த செல்வி. மா. இலாவண்யாவுக்குத் தொலைபேசி செய்து கமலக்கண்ணனைப் பற்றிய அவர் எண்ணங்களை விழாவில் பகிர்ந்து கொள்ளக் கேட்டேன். மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார். வெண்பா வேந்தர் திரு.கிருபா சங்கருக்குத் தொலைபேசி செய்து, 'கமலக்கண்ணன் வெண்பாமாலை' தயாரிக்கக் கேட்டேன். கிருபாவை எனக்கு மிகவும் பிடிக்கும். திறனாளர்; ஆனால் பார்வைக்கு எளியர். எனக்குக் கவிதை பிடிக்கும் என்பதால், அவரைச் சந்திக்கும் போதெல்லாம் வெண்பா கேட்டுத் துளைப்பேன். எனக்கு வெண்பா பாட அஞ்சியே அவர் பல பயணங்களைத் தவிர்த்ததுண்டு. ஆனால் அவரைக் கேட்டால் சமயத்தில் அவருக்குப் போட்டியாக நான் கூறும் வெண்பாக்களைத் தாங்க முடியாமல்தான் வருவதில்லை என்பார். அது கிடக்கட்டும், கமலக்கண்ணன் வெண்பாமாலைக்குக் கிருபா ஒப்புக்கொண்டார். கமலக்கண்ணன் ஆளுமை பேச ம.இராமச்சந்திரன் சரியானவர் என்ற இலாவண்யா, அதற்கு முயற்சி மேற்கொண்டார். இவையேதும் சுந்தர் அறியமாட்டார்! அவர் நான் பேசினால் போதுமென்று நினைத்தார். கமலக்கண்ணனை என்னினும் அவருடன் மிக நெருங்கிப் பழகிய இந்த மூவரும் படம்பிடிப்பதே பொருந்துமென்று நான் கருதினேன்.

ஜூலை இரண்டாம் நாள் வலஞ்சுழிப் பிடாரியார் ஏகவீரியாருக்கு வீச்சொளி விளக்கு அமைந்தது. முழுக்காட்டும் நிகழ்ந்தது. திருமுழுக்காட்டு, நீரால் அமைவது சரியே. பிற பொருட்களால் முழுக்காட்டும்போது அவை சரியாகக் கழுவப்படாத நிலையில் சிற்பத்திருமேனியில் அங்கும் இங்கும் தேங்கித் தங்கி, பூச்சிகளின் வரவுக்கும் இருப்புக்கும் காரணமாகி, நாளடைவில் திருமேனிச் சேதத்திற்கும் வழிவகுக்கும். எதிர்காலத்திலாவது, பக்தர்கள் இத்தகு 'அபிஷேகங்களை' நிறுத்திக்கொண்டு நீர்முழுக்கு மட்டும் செய்து மகிழ்வது பழமையும் பெருமையும் பொலிவும் நிரம்பிய அற்புதமான இறைத்திருமேனிகளைக் காப்பாற்ற உதவும். சுந்தர் இதை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்.

முழுக்காட்டல் முடிந்ததும் அனைவரும் பிடாரியார் ஏகவீரியைப் படம்பிடித்தனர். ம.இராமச்சந்திரன் எடுத்திருந்த படங்களுள் ஒன்று மிக அற்புதமாக வந்திருந்தது. ஏகவீரியை இடப்புறத்திருந்து பார்த்த அந்த இராமச்சந்திரப் பார்வையை ஏகவீரியே மகிழ்ந்து சிலாகித்திருப்பார், 'என்ன அழகு! எத்தனை அழகு!' என்று பாடத் தோன்றியது எனக்கு. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று உள்ளம் கதறியது. ஒரு முகம் இத்தனை அழகுடன் இருக்கமுடியுமா என்று வியந்தேன்! தமிழ்நாட்டின் தவப்பேறு முதலாம் இராஜராஜர் கால ஏகவீரி வெளிச்சத்துக்கு வந்தார். சுந்தருக்குத்தான் கலை ஆர்வலர்கள் நன்றி சொல்லவேண்டும். வரலாறு காக்க, பரப்ப அந்த இனிய மனிதர் எடுக்கும் முயற்சிகள் ஒன்றிரண்டல்ல. ஒன்றரையாண்டுகளுக்கு முன் நான் சந்தித்த சுந்தர் அல்லர் இவர். வெடிகளைக் கொளுத்திப் போடுவதில் உல்லாசம் கண்டவர், இன்று உண்மைகளின் ஊர்வலத்தில் ஒன்றியிருக்கிறார்.

மாலை ஐந்து மணிக்கு மடைப்பள்ளிக்குள் நுழைந்த நானும் நளினியும், அங்கு பத்மநாபன் கண்டுபிடித்திருந்த இரண்டு கல்வெட்டுகளையும் படியெடுத்தோம். இரண்டுமே அற்புதமான சோழர் கல்வெட்டுகள். ஒன்று, மடப்பள்ளிக்கு முன்னிருந்த செங்கற் கட்டுமானமும் மரக்கோப்பும் இடிந்து சிதைந்தமையைக் கூறி அதற்கு மாற்றாக எடுக்கப்பட்ட கட்டமைப்புப் பற்றிப் பேசியது. மற்றொன்று, இதுநாள்வரை தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் பகிர்ந்து கொள்ளாத செய்தியொன்றைப் பறைசாற்றியது. திருக்கோயிலின் அசையும் சொத்துக்களை ஒரு கோயில் மற்றொரு கோயிலுக்குத் தருவதோ பெறுவதோ கூடாதென்று அறிவிக்கும் அரச ஆணையாக அமைந்திருந்த அந்தக் கல்வெட்டில் கோயில் சார்ந்த அத்தனை பொருட்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. மடைப்பள்ளித் தூணொன்றில் வெட்டப்பட்டிருந்த இந்த ஆறுவரிக் கல்வெட்டைப் படித்து முடிப்பதற்குள் நானும் நளினியும் அந்தத் தூணை எத்தனை முறை சுற்றியிருப்போம் என்பதை அந்த வலஞ்சுழி வாணர்தான் அறிவார். எவ்வளவு துன்பப்பட்டால்தான் என்ன! கிடைத்திருக்கும் செய்தி சாதாரண தரவா! வலஞ்சுழியில் வெளிப்படுவதெல்லாம் புதையலாகத்தான் இருக்கிறது, வாருணி.

மாலை ஆறுமணிக்கு அனைவரும் புறப்பட்டோம். கிருபா வரப்போவதில்லை என்பது அப்போதுதான் தெரிந்தது. தான் வராவிடினும் வெண்பாக்களை எழுதிக் கைபேசு வழி அனுப்புவாரென இலாவண்யா கூறினார். நாங்கள் கும்பகோணம் சென்று குளித்து உடைமாற்றித் தயாரானோம். இலாவண்யாவும் பத்மநாபனும் வந்தனர். அனைவரும் புறப்பட்டுச் சுவாமிமலை ஸ்டர்லிங் ரிசார்ட்ஸ் சென்றோம். சுந்தர், அனுராதா, கமலக்கண்ணன், இராமச்சந்திரன், சதீஷ், சீதாராமன் ஆகியோர் ஏற்கனவே அங்கிருந்தனர். வயலின் இசை கேட்கும் வாய்ப்பமைந்தது. திடீரென இலாவண்யாவின் கைபேசி சிணுங்கியது. கிருபாசங்கர் மூன்று வெண்பாப் பூக்களை வீச இலாவண்யா மாலையாக்கினார். அவசரத்தில் கொய்த பூக்கள்தான் என்றாலும் கமலக்கண்ணனைப் பற்றிய கிருபாவின் பதிவாக அவை அமைந்தன.

கல்வெட்டுக் காரிகை மா.இலாவண்யா கமலக்கண்ணன் நட்பை மெய்க்கீர்த்தியாக்கி மகிழ்ந்தார். சுறுசுறுப்புக்குப் புதுவிளக்கம் தந்த ம.இராமச்சந்திரனின் உரை வீச்சில் கொஞ்சம் சினம் இருந்தது போலவே கமலக்கண்ணனைப் பற்றிய அருமையான படப்பிடிப்பும் இருந்தது. இராமின் அந்தச் சினம் அவருடைய பலம்! சுந்தர் கமலக்கண்ணனைப் பற்றி நிறைய பேசக் கருதியிருப்பாரென்று நினைக்கிறேன். அவரால் சரியாகப் பேசமுடியவில்லை. கரைந்து கலங்கிப் போனார். அன்பு எத்தனை வலிமையானது என்பதையும் சுந்தர் அந்த இளைஞரிடம் கொண்டிருந்த நேயம் எவ்வளவு உண்மையானது என்பதையும் நாங்கள் உணர்ந்தோம். நளினி, அகிலா, அனுராதா, சதீஷ், சீதாரமன் அனைவரும் அவரவர்தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இறுதியாக என் முறை வந்தது.

பொன்னியின் செல்வன் குழுவினரில் என்னுடன் முதன்முதல் தொடர்பு கொண்டவர் கமலக்கண்ணன்தான். வந்தியத்தேவனைப் பின்பற்றி அவர் சென்று வென்ற வழியெல்லாம் இக்குழுவினரும் செல்ல விழைந்து, வழித்திட்டத்திற்காக எனை நாடினார். மூன்று, நான்கு முறை அவருடன் தொலைபேசியில் பேசியிருப்பேன். கமலக்கண்ணனுக்குக் கனிவான குரல். அந்தக் கனிவின் குழைவு என்னைக் கவர்ந்தது. முதல் சந்திப்பு ஏப்ரல் 2003ல் என்று நினைக்கிறேன். கல்வெட்டு அறிஞர் திரு. ஐராவதம் மகாதேவனின் நூல் வெளியீட்டு விழா முடிந்ததும் மேடைக்கு வெளியே சுந்தர் அறிமுகத்தில் கமலக்கண்ணனையும் இலாவண்யாவையும் பார்த்தேன். இளைஞர்களின் ஆர்வம் மகிழ்வளித்தது.

இரண்டாம் சந்திப்பு என் இல்லத்தில் நிகழ்ந்தது. கமலக்கண்ணன்தான் தொடர்பாளர். இதுபோல் பல குழுக்களைக் கடந்த இருபதாண்டுகளாகச் சந்தித்து வருகிறேன் என்றாலும், இந்தக் குழுவினரின் வரலாற்று நேயம் என்னைக் கவர்ந்தது. அவர்களோடு உரையாடியதிலும் அவர்கள் ஐயங்களுக்கு எனக்குத் தெரிந்த அளவில் விடையிறுத்ததிலும் நிறைவிருந்தது. மூன்றாம் சந்திப்பின் போதுதான் அக்குழுவினருள் சிலரையேனும் தனிப்பட அறியமுடிந்தது. கமலக்கண்ணன் தவிர, இலாவண்யா, அனுராதா, இராமச்சந்திரன், கோகுல், கிருபாசங்கர் ஆகியோர் பெயர்கள் நினைவில் நின்றன. இந்தச் சந்திப்பின்போதுதான் கோயில்களின் மேல் அவர்களுக்கிருக்கும் காதலை அறிந்தேன். அந்தக் காதல் புரிதலோடு இருந்தால் வரலாறு சுகப்படும் என எண்ணினேன். அதனால்தான் அடுத்தநாள் அவர்களோடு புள்ளமங்கை வருவதாகக் கூறினேன். அது அவர்களுக்கு எத்தனை மகிழ்வைத் தந்தது என்பதைப் பின்னாளில் கோகுல் எழுதிய கட்டுரையின் வழி நான் அறிந்து கொள்ள முடிந்தது.

ஞாயிற்றுக்கிழமைகளில் எனக்குக் காலை மட்டும் மருத்துவமனை உண்டு. இந்த இளைஞர்களுக்காகவும் வழக்கம்போல் வரலாற்றுக்காகவும் மருத்துவமனையை மூடச்சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். நான் அதிகம் பேசவில்லை. அவர்களைப் பேசவிட்டேன்.அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் எனக்குத் தெரிந்த அளவில் மறுமொழி தந்தேன். புள்ளமங்கைக்குள் நுழைந்தோம். ஆலந்துறையார் கோயிலை நீயும் நானும் ஒருமுறை பார்த்திருக்கிறோம், நினைவிருக்கிறதா வாருணி? ஒவ்வொரு சிற்பத்தையும் எப்படியெல்லாம் இரசித்தோம்! மாறி மாறிக் கேள்விகளும் மறுமொழிகளும் விளக்கங்களும் வியப்புமாய் அந்தக் கோயிலை நாம் பார்த்து முடித்தபோது மாலை மயங்கிவிட்டது. அது ஒரு மந்திரக் களம்! சோழச் சிற்பிகளில் மகத்தானவர்கள் மக்களை மயங்கடிக்கவேண்டும் என்றே கங்கணம் கட்டிக்கொண்டு உளிதொட்ட இடம் அது. அழகு அங்கே நிலையாய்க் குடிவந்து விட்டது.

புள்ளமங்கைக் கோயிலை உடன் வந்த இளைஞர்கள் நன்கு இரசித்தனர். வாலி மரணம், தண்டபட்சம், குழு ஆடல்கள், சண்டேசுவர அனுக்கிரகர் என்று எல்லாம் பார்த்தோம். மதிய உணவிற்குச் சுந்தரும் வந்திருந்தார். பிறகு தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் சென்றோம். ஓவியக்கூடத்தில் அந்த ஓவியங்களைப் பார்த்தபோது வந்திருந்த அனைவருமே உளம் பூரித்தமை அறிந்தேன். இரண்டாம் தளத்தின் மேல் சற்று நேரம் அமர்ந்திருந்தோம். கிருபாசங்கரின் அனுமதியோடு அவர்மடியில் தலைவைத்துப் படுத்தேன். அப்போது அவருடைய வெண்பாத்திறன் எல்லாம் எனக்குத் தெரியாது. நெருக்கமும் கிடையாது. பக்கத்தில் இருந்தவர் அவர்தான். படுக்கத் தோன்றிய எனக்கு அவர் மடிதான் அருகில் இருந்தது. அந்தக் கோயிலில் படுத்தபடி வானத்தையும் விமானத்தையும் சேர்த்துப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். அப்படிப் பார்க்கும்போதெல்லாம் நான் தனித்துப் போவேன். என் கண் முன்னால் அந்த மனித மேதை முதலாம் இராஜராஜரும் அவர் கால உளி வேந்தர்களும்தான் தெரிவர். அது ஓர் உன்னத அனுபவம். அன்று கோகுலும் இராமச்சந்திரனும் பாடினர். அற்புதமான மணித்துளிகள். இராமச்சந்திரன் திடீரெனச் சிலப்பதிகாரம் பற்றிப் பேசினார். அதுவும் அரங்கேற்றுக் காதை, வாருணி. எனக்குத் துணுக்குற்றது. 'அரங்கேற்று காதை படித்திருக்கிறேன், புரியவில்லை' என்ற அந்தக்குரல், அந்தக் குழுவின் முதல் நெருக்கமானவராக இராமச்சந்திரனை என்னுள் பதிவு செய்தது.

பிறகு பலமுறை நாங்கள் பயணங்கள் மேற்கொண்டோம். ஒவ்வொரு பயணத்தின்போதும் அவர்கள் அறிந்தார்கள். நானும் புதியன கற்றேன். அவர்கள் கேள்விகள் என்னைப் படிக்க வைத்தன; தேடவைத்தன. ஏன், தெளியவும் வைத்தன. கமலக்கண்ணன் என் கணிணியை மேம்படுத்த இருமுறை வந்தார். அப்போது அவருடைய பெற்றோர், துணைவியார் பற்றி அறிந்தேன். ஒருமுறை கோபிசெட்டிபாளையத்திலிருந்து தொலைபேசினார். அது அவரது பெற்றோர் ஊர். பழனித் திருக்கோயிலைப் பார்த்து வந்தவர், அக்கோயில் பற்றிய ஐயங்களைப் பகிர்ந்து கொண்டு விளக்கங்கள் பெற்றார்.

ஒரு பயணத்தின்போது, என் பணிகளை இணையத்தில் கொணரும் முயற்சிகள் பற்றி கமலக்கண்ணனும் பிறரும் பேசினர். இப்பேச்சு பலமுறை தொடர்ந்தும் பயனேதும் விளையவில்லை. காரணம், அவர்கட்கு அதற்கான நேரம் கிடைக்கவில்லை என்பதுதான். ஒருங்கிணைப்பும் இல்லை. அதனால் அவர்களோடு பயணம் செய்ய வாய்ப்பமைந்தபோது, ஜூலை 2004 என்று நினைக்கிறேன். ஆகஸ்டு 15க்குள் இணையத்தில் ஒரு இதழ் கொணர்ந்தே தீரவேண்டுமெனக் கூறி, அதற்கு எங்கள் வரலாறு இதழின் பெயரையே வைத்துக் கொள்ள ஒப்புதலும் அளித்தேன். ஒரு மாதமே இடைவெளி இருந்தமையால் கமலக்கண்ணன், இலாவண்யா, இராமச்சந்திரன், கிருபாசங்கர், கோகுல் ஆகிய ஐவரும் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நன்கு உழைத்து ஆகஸ்டு 15ம் நாள் வரலாறு.காமின் முதல் இதழை வெளிக்கொணர்ந்தனர். 'இவர்கள் சாதிப்பார்கள்' என்ற நம்பிக்கையை அந்த முயற்சி என்னுள் விதைத்தது. அந்த நம்பிக்கை, எனக்கும் அவர்களுக்கும் இடையில் மெலிந்துகொண்டே வந்த தொலைவை முற்றிலுமாய் நீக்கியது.

கமலக்கண்ணன் நிதானமானவர். திட்டமிடுவதில் வல்லவர். பலமுறை அந்த வல்லமையை நான் உணர்ந்திருக்கிறேன். அந்தத் திட்டத்தை செயலாக்குவதிலும் உறுதியுடையவர். அவருடைய திட்டமிடுதலில் வரலாறு.காம் வளர்ந்தது. ஒருமுறை மகேந்திரவாடி, விளாப்பாக்கம் சென்று திரும்பும் வழியில், அவர் இல்லம் வந்து உணவருந்தித் தாம்பரத்தில் தொடர்வண்டி பிடிக்குமாறு அமைந்தது. அந்தச் சமயம் இலக்கியப் பீடம் ஆசிரியர் திரு.விக்கிரமன் என்னுடைய பழுவூர் நூல் படிகள் 50 தந்திருந்தார். பெரிய புத்தகக்கட்டு. தாம்பரத்தில் சுமைக்கூலி இருப்பார் என்ற நம்பிக்கையில் அதைக் கொணர்ந்தேன்.

தாம்பரம் சந்திப்பு விநோதமான சந்திப்பு. அங்குத் தொடர்வண்டி வரும்போதுதான் அது எந்தத் தடத்தில் வருகிறது என்று அறிவிப்பார்கள். பற்றாக்குறைக்குச் சுமைக்கூலிகளும் அங்குக் கிடையாது. நான் இதய அறுவை செய்திருப்பதால் சுமைதூக்க முடியாது. என்னுடன் வந்த நளினி ஏற்கனவே பல சுமைகளைக் கொண்டிருந்தார். அதனால் அந்தப் புத்தகக் கட்டை கமலக்கண்ணன் தான் சுமக்கும்படியாயிற்று. எனக்கு அது ஒப்புதல் இல்லை. என்றாலும், தவிர்க்க முடியாத துன்பமாக அது அமைந்து விட்டது. மனம் வருந்தினேன். சுமைக்கூலி கிடைக்கமாட்டார் என்று முன்பே தெரிந்திருந்தால் புத்தகக்கட்டை அவர் வீட்டிலேயே வைத்து வந்திருக்கலாம். எந்தத் தடமென்று அறியாத நிலையில், அந்தச் சுமையுடன் நாங்கள் பட்டபாடு இன்றும் நினைவிருக்கிறது. அந்த நல்ல இளைஞருக்கு நான் தந்த முதலும் கடைசியுமான துன்பம் அது ஒன்றுதான். அன்றிரவு நெடுநேரம் வருந்தியிருந்தேன்.

கமலக்கண்ணன், இலாவண்யா, இராமச்சந்திரன் மூவருமே என்னை அடிக்கடி சந்தித்தனர். அவர்களுடைய உண்மையான ஆர்வம் எனக்குப் பிடித்தது. அதனால் அவர்களை விருப்பமான ஒரு துறை தேர்ந்து அதில் தேர்ச்சி கொள்ள வேண்டினேன். கமலக்கண்ணன் கோயிற் கட்டடக்கலைத் துறையைத் தேர்ந்தார். எனக்கு வியப்பும் மலைப்பும் ஏற்பட்டாலும், அந்த இளைஞரின் துணிவை மதித்தேன். வரலாறு.காம் இதழில் கட்டடக்கலைத் தொடரெழுதும் அளவிற்கு விரைந்து முன்னேறினார். அவரது ஆர்வமும், ஈடுபாடு, முயற்சி அனைத்துமே எனக்கு நிறைவு தந்தன. இராமும் இலாவண்யாவும் கமலக்கண்ணன் போலவே ஆனால் வெவ்வேறு துறைகளில் முனைந்து முன்னேறினர். இந்த மூவரும் வெல்வார்கள் என்ற நம்பிக்கையை அவர்தம் கேள்விகள், கலந்துரைகள், எழுத்துரைகள் என்னுள் விதைத்தன.

கோயிற் கட்டடக்கலை ஓர் அற்புதமான துறை. அறிஞர் பெருந்தகை கூ.இரா.சீனிவாசனின் நூல்களைப் பயின்று அத்துறைசார் அறிவு பெற்று எனக்குக் களப்பணிகள்தான் அக்கலையை நன்கு தெளியும் வாய்ப்பளித்தன. நான் கற்றதைப் பலருடனும் பகிர்ந்து கொண்டிருந்தபோதும், ஒருவர்கூட 'கட்டடம்' எனும் அமைப்பைத் தாண்டிப் பார்வை செலுத்தவில்லை. கல்வெட்டுத் தனித்துப் பார்க்கலாம்; சிற்பமும் தத்துவங்களின் பின்புலத்துடன் தனித்துப் பார்க்கமுடியும். ஆனால் கட்டடம் ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பு. அதில் எல்லாமும் இடம்பெற்றிருப்பதை மறந்துவிட்டு, ஜகதி, குமுதத்துடன் நின்றுவிட்டவர்கள் பலர். ஆனால், கமலக்கண்ணன் நிறைய படிப்பவர். உண்மையான அக்கறையோடும், தேடலோடும் படிப்பவர். அதனால் தமிழ்நாட்டுக் கோயிற்கட்டடக்கலை அவருக்கு வயப்படும் என்ற நம்பிக்கைத் துளிர் என்னுள் உள்ளது. கட்டமைப்புகளை நேசித்து உரையாடக் கற்றுக்கொண்டால், தொட்டதும் சிலிர்த்துத் தொடர்ந்து வருவன அவை.

கமலக்கண்ணனை நீ படங்களில் பார்த்திருப்பாய். அந்தக் கண்கள் எனக்குப் பிடிக்கும். பெற்றோர் பார்த்தே பெயர் வைத்துள்ளனர். அந்தக் கண்களில் ஒரு குழந்தைத்தனம் உண்டு. அவர் சிரிக்கும்போது அந்தக் கண்களும் சிரிக்கும். அப்போது வெளிப்படும் ஆனந்தக் களிப்பை நான் பலமுறை இரசித்திருக்கிறேன். அவருடைய அபூர்வமான படங்களுள் ஒன்று இராமின் ஒளிப்படக்கருவியில் ஒளிந்திருக்கிறது. அதை எடுக்கச் செய்தவன் நான்தான். ஆறகளூர் களப்பயணத்தின்போது உயரமான நாற்காலி மீது உட்கார்ந்து அவர் கல்வெட்டு வாசித்த அழகை அவரே படம் பிடிக்கச் செய்து வைத்துள்ளார். படம் பிடிப்பதில் அவருக்கு ஈடுபாடு உண்டு. அந்தக் கலையில் வல்லமை பெறும் ஆர்வமும் உண்டு. அவர் படத்தொகுப்புகளை அதிகம் நான் பார்த்ததில்லை என்றாலும், பல்லாவரம் குடைவரையை அற்புதமாகப் படம் பிடித்து என் மகேந்திரர் குடைவரைகள் நூலுக்கு அவர் அளித்தமையை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

கமலக்கண்ணனுக்கு பாரதியைப் பிடிக்கும். எவ்வளவு ஆழமாகப் பயின்றிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் வீட்டுச் சுவரில் அந்த மீசைக்காரரைப் பார்த்தேன். ஒருமுறை பயணத்தின்போது பாரதி பாடல் ஒன்று குறித்து சற்று ஆழமாக விவாதித்தது நினைவில் உள்ளது. பாரதியை எனக்கும் பிடிக்கும் என்பதால் அந்த பாரதி செல்லத்திடம் கூடுதல் பிடிப்புப் பிறந்தது.

கமலக்கண்ணனிடம் யாரைப் பற்றியும் எதுவும் பேசலாம். திறந்த உள்ளத்துடன் சிக்கல்களை அணுகுவார். குழுவினர் செயற்பாடுகள் குறித்து என் உள்ளத்தில் தோன்றுவன அனைத்தும் அவருடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்கு சிந்தித்துத் தீர்வு காண்பார். சில நேரங்களில் அவரும் உள்ளத்தில் உள்ளதை உள்ளவாறு பகிர்ந்து கொள்வார். எங்களைப் பற்றிப் பேசிக்கொண்டதைவிட பொதுப்படையானவற்றைப் பற்றியே நிறைய பேசியிருக்கிறோம். அன்பு காரணமாக இந்தக் குழுவினர் என்னை 'குருநாதர்' என்றழைக்கத் தொடங்கியபோது, மிகுந்த மரியாதையுடன் அதை நான் மறுத்தேன்.

யாரும் யாருக்கும் குருநாதராக முடியாது. 'குரு' என்னும் நிலையின் கடப்பாடுகளை உணர்ந்தவன் நான். அது துன்பமான பதவி. நான் என்றைக்கும் ஒரு கைக்காட்டியாக இருக்கவே விழைகிறேன். அன்பின் வழிப்பட்டும், அப்படி வழிப்படாமலும்கூட என்னால் கைக்காட்ட முடியும். கமலக்கண்ணன், கோகுல், இராமச்சந்திரன், இலாவண்யா எனும் நான்கு இளைஞர்களும் இந்தக் கைக்காட்டியைத் தேர்ந்து அவரவர்கள் விரும்பிய பாதைகளில் பயணம் தொடங்கியுள்ளனர். இனி அந்தப் பயணங்கள் அவர்தம் பொறுப்பு. அதனால்தான் கமலக்கண்ணன் ஜப்பான் செல்வது என்னை வருத்தவில்லை. அவர்தம் பயணங்களை இனி எந்தச் சக்தியாலும் நிறுத்த முடியாது. கோயில் அவர்களைப் பொறுத்தமட்டில் உயிர். ஒரு கோயிலை எப்படி அணுகவேண்டும் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். பாடுகளும் படல்களும் அவர்களைச் செம்மைப்படுத்தும். கோயில்கள் கைப்பிடித்து அவர்களை வரலாறு எழுதவைக்கும்.

வாருணி, அன்று இவையெல்லாம் பேசக் கருதினேன். அவையடக்கம் என்னைக் குறைவாகவே பேசவைத்தது. அனைவருக்கும் இருந்த பசி மயக்கமும் என்னை அதிகம் பேச அனுமதிக்கவில்லை. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் அடுத்தநாள் (03-07-2005) இரவு சந்தித்தபோது அன்று நிகழ்ந்த புள்ளமங்கைப் பயணம் குறித்து ஓரிரு வரிகளில் கனவு மயக்கத்தில் கமலக்கண்ணன் பேசியபோதும், விடைபெறும்போது வழக்கத்திற்கு மாறாக என் கையை இறுகப் பற்றியபோதும், என் உள்ளம் உறுதியோடு கூவியது, 'வரலாறு வாழும், வளரும்' என்று.

ஞாயிற்றுக்கிழமை காலை மறக்கமுடியாத பொழுதாக விடிந்தது. இனிய நண்பர் பத்மநாபனின் இல்லத்தில் காலையுணவு அருந்திக் கோயிலுக்கு வந்தபோது, தமிழ்நாட்டு வரலாற்றிற்கு ஒரு புதிய செய்தியைக் கண்டறிந்து தரப்போகிறோம் என்று கனவிலும் கருதவில்லை. வலஞ்சுழி வாணர் கோயில் பெருமண்டபத்தின் இரண்டாம் பகுதி வாயிலின் வடபுறம் கலைமகள் சிற்பத்தின் இருபுறத்தும் பத்மநாபன் கண்டறிந்த கல்வெட்டு, பல்லாண்டு போர்த்தியிருந்த சுண்ணாம்புப் பூச்சுகளைச் சீதாராமனின் உதவியாளர்கள் காட்டிய கோபத்தில் உதிர்த்து, வரலாறு பேசத் தொடங்கியிருந்தது. நளினி படிக்க நான் எழுதினேன்.

சிவபாதசேகரன் என்று முதலாம் இராஜராஜர் தம்மை அழைத்துக்கொண்டது போல், 'சிவசரணசேகரன்' என்று முதலாம் இராஜேந்திரர் தம்மை அழைத்துக் கொண்டுள்ளார். 'சரணம்' பாதத்தைக் குறிக்கும் சொல்லென்பதால் சிவசரண சேகரனும் சிவபாத சேகரன்தான். தந்தையும் மகனும் சிவபெருமானின் திருவடிகளில் கொண்டிருந்த பத்திமைதான் எத்தனை பெரிது! கல்வெட்டின் தொடக்க வரிகள், முதலாம் இராஜேந்திரர் தம் மூன்றாம் ஆட்சியாண்டில் வலஞ்சுழிக் கோயிலுக்கு வந்து, அதன் மேற்குப்புற நந்தவனமான வியாளகஜமல்லனில் இருந்த காவணத்தில் அமர்ந்து உணவுண்டமையையும் அது போழ்து கோயிற் செயற்பாடுகளுக்கு நிலக்கொடையளித்து உத்தரவிட்டமையையும் தெரிவித்தன.

நளினி படிக்கப் படிக்க என் செவிகள் குளிர்ந்தன. உள்ளம் களிகொண்டு கூத்தாடியது. அப்பெருவீரர் நடந்த தடத்தில் நாங்களும் நடந்திருக்கிறோம். அம்மாமனிதர் உலவிய இடங்களில் நாங்களும் இருந்திருக்கிறோம். அவர் உணவுண்ட நந்தவனத்தில்தான் ஆந்தை எங்களைக் கண்காணித்தது. எத்தனை பெரும் பேறு. செய்தியைப் பகிர்ந்து கொண்டபோது சீதாராமன், இராமச்சந்திரன், கமலக்கண்ணன், பத்மநாபன், இலாவண்யா, அகிலா அனைவருமே துள்ளிக்குதித்தனர். மகிழ்ந்து பூரித்தனர்.

ஞாயிறு இரவு தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் இறைவனை தரிசித்தோம். மிக நெருக்கத்தில் அவரே அழைத்து ஆசிர்வதித்தார். ஜப்பான் செல்லும் கமலக்கண்ணனை வரலாறு வாழ்த்துகிறது என்றுதான் என்னால் அப்போது நினைக்க முடிந்தது. வாருணி, ஒஸாகா புண்ணியம் செய்த பூமி. திறனும் உழைப்பும் நிதானமும் மென்மைத்தன்மையும் நிரம்பிய ஒரு தமிழிளைஞரின் அறிவுச் செல்வத்தை அது பெறப்போகிறது. தமிழ்நாடும் புண்ணிய பூமிதான். உலகெங்கிலும் உழைக்க உன்னதமான இளைஞர்களைத் தளராமல் பெற்றுத் தந்து கொண்டே இருக்கிறதே! வாழ்க நீ தம்பி என்று உள்ளத்தின் உள்ளிருந்து வாழ்த்தி வழியனுப்புவோம். அவர் தொடங்கிய இடத்தை மறவாதவர். தொடர்ந்து தொண்டு செய்வார் தமிழுக்கும் வரலாற்றுக்கும்.

அன்புடன்,
இரா.கலைக்கோவன்
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.