![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 13
![]() இதழ் 13 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
கட்டிடக்கலை ஆய்வு
கிரீவத்தையும் சிகரத்தையும் காணும் முன் சுவர் உறுப்புகளைப் பார்த்து விடுவோம்.
நம் வீடுகளில் தரைக்கும் கூரைக்கும் இடையே சுவர் அமைந்திருப்பதைப் போலவே, விமானங்களிலும் தாங்குதளத்தின் மீதுள்ள வேதிகைத்தொகுதிக்கும் கூரை உறுப்புகளுக்கும் இடைப்பட்ட பகுதியே சுவர். இவற்றில்தான் வாயில்கள், ஜன்னல்கள் மற்றும் கோட்டங்கள் ஆகியன இடம்பெறும். பொதுவாகச் சுவர் பல பத்திகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இப்படிப் பிரிப்பதில் இரண்டு வகைகள் உள்ளன. முந்தைய இதழ்களில் கண்டவாறு ஆர உறுப்புகளை வைத்து கர்ணப்பத்தி, சாலைப்பத்தி மற்றும் பஞ்சரப்பத்தி எனப் பிரிப்பது ஒரு வகை. அரைத்தூண்களை வைத்து சுவரைப் பல பாகங்களாகப் பிரிப்பது மற்றொரு வகை. உதாரணமாகத் தஞ்சை இராஜராஜீசுவரத்தை எடுத்துக் கொண்டால், விமானத்தின் முதல் தளச்சுவர் பன்னிரண்டு அரைத்தூண்களைக் கொண்டு பதினொரு பத்திகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இப்பதினொன்றில் நடுவில் உள்ளது வாயிலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாயிலுக்கு இருபுறமும் உள்ள பத்திகள் வாயிற்காவலர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள எட்டுப் பத்திகளில் பக்கத்திற்கு இரண்டு இறைத்திருமேனிகளும் இரண்டு குடப்பஞ்சரங்களும் அமைந்துள்ளன. இந்தக் குடப்பஞ்சரங்கள் கர்ணப்பத்தி, சாலைப்பத்தி மற்றும் பஞ்சரப்பத்திகளை வேறுபடுத்திக் காட்டவும் பயன்பட்டுள்ளன. ![]() கொடும்பாளூரிலுள்ள மூவர் கோயிலில் சுவர் ஆறு அரைத்தூண்களால் ஐந்து பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் நடுப்பத்தியில் மட்டும் கோட்டங்கள் உள்ளன. மற்ற பத்திகள் வெறுமையாக உள்ளன. பரப்பு குறைவாக உள்ளதால் பஞ்சரப்பத்தியின்றி சாலை மற்றும் கர்ணப்பத்திகள் மட்டுமே உள்ளன. பஞ்சரத்திற்குப் பதிலாக ஆரச்சுவரில் நேத்ர நாசிகையைக் காட்டியுள்ளனர். ![]() கோட்டங்களில் இறைத்திருமேனிகள் இருந்தால் கோட்டத்தை அணைத்து இருபுறமும் அணைவு அரைத்தூண்களும் மேலே மகரதோரணமும் இருக்கும். எல்லாத் தளங்களிலும் இத்தகைய பத்திகள் காணப்படும். மேலே செல்லச்செல்ல உயரம் குறைந்து கொண்டே போகும். சுற்றளவும் குறைந்து கொண்டே போகும். தஞ்சை இராஜராஜீசுவரத்திலும் சீனிவாசநல்லூர் திருக்கொருக்குத்துறையிலும் மட்டுமே ஆதிதளம் மற்றும் முதல்தளத்தின் சுவர்கள் ஒரே சுற்றளவில் உள்ளன. இங்கு இராஜராஜீசுவரத்தைப் பற்றிய மற்றுமொரு சுவாரசியமான தகவல் இருக்கிறது. விமானத்தின் பிரம்மாண்டத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். 216 அடி. அதன் அஸ்திவாரம் எத்தனை அடி ஆழம் இருக்குமென நினைக்கிறீர்கள்? இன்றைக்கு 216 அடி உயரத்தில் ஒரு அடுக்குமாடிக் கட்டடம் கட்ட வேண்டுமென்றால் எத்தனை அடி ஆழம் தோண்டவேண்டும்? ஆனால் இராஜராஜீசுவரத்தில் இருப்பதோ வெறும் 4 அடி அஸ்திவாரம் மட்டுமே. என்ன? நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆகவேண்டும். தொல்லியல் துறையினர் Test hole போட்டு அளந்தே பார்த்து விட்டனர். இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? கிரீவம் மற்றும் சிகரம் விமானத்தின் உச்சி உறுப்பு சிகரம். அதற்குக் கீழுள்ள கழுத்துப்பகுதி கிரீவம். மனித உடலுக்குத் தலையும் கழுத்தும் இருப்பது போல விமானத்துக்கு இருப்பது கிரீவமும் சிகரமும். சிகரங்களில் மூன்று வகைகள் உள்ளன. திராவிடம், நாகரம் மற்றும் வேசரம். வேசரம் என்பது எண்பட்டை, நாகரம் என்பது சதுரம் மற்றும் வேசரம் என்பது வட்டம். சோழர்காலக் கோயில்களில் மூன்றுவகை சிகரங்களையும் காணலாம். உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
கிரீவங்களிலும் கோட்டங்கள் வருவதுண்டு. அவற்றிற்கு கிரீவக்கோட்டங்கள் என்று பெயர். சிகரம் என்ன விதமாக இருக்கிறதோ கிரீவமும் அதே விதமாகத்தான் இருக்கும். ஆனால் தளங்களும் சிகரமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரே விதமாக இருந்தால் தூய விமானம் என்றும் கலந்து இருந்தால் கலப்பு விமானம் எனவும் அழைக்கலாம். கங்கைகொண்ட சோழபுரத்தில் தளங்களே மூன்றும் கலந்ததாக இருக்கிறது. கீழே நாகரமாக ஆரம்பித்து, நடுவில் எண்பட்டையாக மாறி, உச்சியில் வேசரமாக முடிகிறது. இந்தியக் கட்டடக்கலை வரலாற்றில் வேறு எந்தக் கோயிலிலும் காண இயலாத அதிசயம். வேறு எந்த நாட்டுச் சிற்பிகளும் நினைத்துப் பார்த்திராத வித்தை. தமிழ்ச்சிற்பிகள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். இதுவரை ஒரு கட்டுமானத்தின் பல்வேறு உறுப்புகளை பறவைப்பார்வையாக (Bird's eye view) அலசினோம். இக்கட்டுரைகளை உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு கோயிலுக்கு எடுத்துச்சென்று அந்தக் கட்டுமானத்தின் அமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இனி அடுத்த இதழிலிருந்து ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாக விளக்கப் போகிறோம். அப்போது கட்டடக்கலையை இன்னும் ஆழமாக நீங்கள் புரிந்து கொள்ள முடியும். சங்க இலக்கியங்களிலும் திருமுறைகளிலும் கட்டடக்கலை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. இது வரை வெளிவந்துள்ள கட்டுரைகளில் இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள் எதுவும் கையாளப்படவில்லை. அந்தக் குறையும் அடுத்த இதழிலிருந்து நீங்கப் போகிறது. சுருக்கமாகச் சொன்னால், இதுவரை கற்றுக்கொண்ட விஷயங்களை இலக்கியப் பின்புலத்துடன் முற்றிலும் புதிய கோணத்தில் படித்து இரசிக்கப் போகிறீர்கள். (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
|||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |