http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 13

இதழ் 13
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

அள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரம்
கல்வித் தலைமை
பகவதஜ்ஜுகம் - 4
கதை 5 - தேவதானம்
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
வாழ்க நீ தம்பி!
விடியலைக் கண்ட விட்டுப்போன தொடர்ச்சிகள்
கோயில்களை நோக்கி
2. வலம் வருவோம் வாருங்கள்

கட்டடக்கலைத்தொடர் - 10
திருநந்தி ஈஸ்வரம் - 1
சங்கச் சிந்தனைகள்-1
இதழ் எண். 13 > கலையும் ஆய்வும்
விடியலைக் கண்ட விட்டுப்போன தொடர்ச்சிகள்
மு. நளினி
திருவலஞ்சுழிச் சடைமுடிநாதர் திருக்கோயிலில் 1902ல் அரசுக் கல்வெட்டுப் பணியாளர்களால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பாடங்கள் 1937ல் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி ஏட்டில் வெளியாயின. அவற்றுள் 236,237 ஆகிய எண்களின் கீழ் வெளியிடப்பட்டிருகும் சேத்ரபாலர் கோயில் கல்வெட்டுகள் இரண்டு, முழுமையான பாடமின்றி, 'Inscription is incomplete' (236), 'The inscription is built in below and at the right end' (237) எனும் அடிக்குறிப்புகளுடன் வெளியாகியுள்ளன. டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் இக்கோயிலில் மேற்கொண்டுவரும் தொடராய்வுகள் இவ்விரு கல்வெட்டுகளையும் முழுமையாகப் பெற உதவியுள்ளன.

'முழுமையற்ற கல்வெட்டு' என்ற குறிப்போடு அரசுக் கல்வெட்டுப் பணியாளர்களால் கைவிடப்பட்டிருக்கும் 237ம் எண் கல்வெட்டின் பதிப்பிக்கப்பட்ட இரண்டு வரிகளின் தொடர்ச்சியாக ஆய்வு மையத்தினர் ஐந்து புதிய வரிகளைக் கண்டறிந்துள்ளனர். இவ்வரிகள், முதலிரண்டு வரிகள் காணப்படும் முகமண்டப வடக்குப் பட்டிகையின் கீழுள்ள குமுதத்திலேயே வெட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் இராஜேந்திர சோழர் எள் மலை புகுந்தருளிய தகவலைத் தரும் இக்கல்வெட்டின் முதல் வரியைத் தொடர்ந்தமைந்துள்ள இரண்டாம் வரி அப்பெருவேந்தர் சேத்ரபாலரின் திருவடிகளில் பன்னிரண்டு பொற்பூக்களைத் தூவித் தொழுதமையையும் அவர் தேவியருள் ஒருவரான வானவன் மாதேவி இக்கோயிலுக்கு ஒரு பொற்பூ அளித்தமையையும் தெரிவிக்கிறது. கல்வெட்டில் இத்தேவியின் பெயர் வானவன் மாதேவி என்று தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தும் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி இவரை வளவன் மாதேவியாக்கி மகிழ்ந்துள்ளது.

முதலாம் இராஜேந்திரரின் மற்றொரு தேவியான கிழாநடிகள் பொன்னில் செய்த 25 நெருஞ்சிப் பூக்களைக் காணிக்கையாக்கினார். முதலாம் இராஜராஜரின் பட்டத்தரசியாரும் சேத்ரபாலர் கோயிலைத் திருக்கற்றளியாக எடுத்தவருமான உலகமாதேவியார் அறுபது பொற்பூக்களை சேத்ரபாலர் திருவடிகளில் அட்டித் தொழுததுடன், தம் பணிமகள் வேளான் இலங்கவிச்சாதிரி வழ்க்கழஞ்சே இரண்டு மஞ்சாடிக் குன்றிப் பொன் இக்கோயிலுக்கு உவந்தளித்தார்.

237ம் எண்ணிட்டு எட்டாம் தொகுதியில் பதிவாகியிருக்கும் கல்வெட்டு மூன்று வரிகளுடன் உள்ளது. இதன் தொடர்ச்சி கட்டமைப்புக்குள் சிக்கியிருப்பதாக அடிக்குறிப்புச் சொல்கிறது. சேத்ரபாலர் கோயில் முகமண்டபப் பட்டிகையில் வடபுறம் வெட்டப்பட்டிருக்கும் இம்மூன்று வரிகளின் தொடர்ச்சியாக மேலும் பன்னிரண்டு வரிகள் கீழுள்ள குமுதம், ஜகதி ஆகிய தாங்குதள உறுப்புகளில் வெட்டப்பட்டுள்ளன. இவற்றை மண் மூடியிருந்தது. கல்வெட்டுத் தொகுதி குறிக்குமாறு போல இங்கு எந்தக் கட்டுமானமும் இல்லை. சிறிதள்வு மண்ணை அக்ழந்து பார்த்திருந்தால் 1902லேயே இக்கல்வெட்டின் தொடர்ச்சி அறிந்து முழுமையாகப் படித்திருக்கலாம். 1902ல் செய்யாமல் விடப்பட்ட இப்பணியை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் மேற்கொள்ளத் துணையாய் இருந்தவர்கள் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் திரு. இராசநாயகமும் சென்னை வாழ் கட்டடக் கலைஞர் திரு. சுந்தர் பரத்வாஜும் அவர்தம் தளர்வரியாச் செயலர் திரு. சீதாராமனும் தான்.

முதலாம் இராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டில் (இதே ஆட்சியாண்டில் முதல் இராஜராஜரின் 29ம் ஆட்சியாண்டு இணையும் - தந்தையும் மகனும் மூன்றாண்டுகள் இணையாட்சி நடத்தினர் - இதற்கு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன) முதலாம் இராஜராஜரின் பட்டத்தரசியார் உலகமாதேவியார் திருவிசலுர் சிவயோகநாதசாமி கோயிலில் இரண்ய கர்ப்பம் புகுதருளினார், அதற்கு அளிக்கப்பட்ட பொன்னில் ஒரு பகுதியை இத்தேவி தாம் எடுப்பித்தருளின சேத்ரபாலர் கோயிலுக்கு நகைகளும் பொற்பூக்களும் செய்யத் தந்துதவினார். 144 கழஞ்சுப் பொன்னில் செய்யப்பட்ட 147 பொற்பூக்கள் சேத்ரபாலருக்குச் சாத்தியருளபட்டன. சேத்ரபாலருக்கான நகைகளாகத் தகட்டுத் திருமாலை, தகட்டுத் தோள்வளை, தகட்டுப் பாத சாயலம் ஆகியவையும் இரண்ய கர்ப்பப் பொன்னால் செய்தளிக்கப்பட்டன.

தட்சிணாயன சங்கிராந்தி அன்று முதலாம் இராஜேந்திரர் 46 கழஞ்சுப் பொன்னல் செய்யப்ப்ட்ட 1116 பொற் பூக்களால் சேத்ரபாலரைப் போற்றித் தொழுதார். இராஜேந்திரரைத் திருவயிறு வாய்த்த அவரது அன்னையார் திரிபுவன மாதேவியார் சேத்ரபாலருக்குப் பெருந்திருவமுது அளித்து, 20 பொற்பூக்கலை இறைவன் திருவடிகளில் இட்டு வனங்கினார். அத்துடன் பொன்னால் உதரபந்தமும் தட்டு ஒன்றும் தந்துதவினார். முதலாம் இராஜராஜர் பொன்னாலான இரண்டு சரணங்களை சேத்ரபாலருக்குச் சாத்தியருளினார்.

முதலாம் இராஜராஜரின் பட்டத்தரசியார் உலகமாதேவியார் சேத்ரபாலருக்கு வெள்ளி மானவட்டில் அளிக்க, அரசு அலுவலரான பெருந்தனத்துத் தந்தி திட்டையான சோழேந்திர சிங்க விழுப்பரையின் அரசியார் ஆச்சணன் வெம்பவையார் வெள்ளியாலான கச்சோரம் (பாத்திரம்) ஒன்றும் வெண்கலத் தளிகைகள் இரண்டும் இறைத்திருமேனிக்குச் சாத்த வெண்கலத்தாலான கவசமும் கரகமுடியும் இலைத் தட்டு ஒன்றும் அளித்து மகிழ்ந்தார். மற்றொரு பெருந்தனத்து அலுவலர் செம்பியன் மங்கலப் பேரையன் பொன் மோதிரம் வழங்கினார்.

அரசர்கள், அரசியர், அலுவலர்கள், ஆகியோரால் சேத்ரபாலருக்கு வழங்கப்பட்ட இத்தனை பொருட்களையும் கோயிலில் உரியவாறு பதிவு செய்ய ஆணையிட்ட பட்டத்தரசியார் உலகமாதேவியார், அதை முன்னிருத்து நிறைவேற்றுமாறு தம் பணிமகள் இலங்கவிச்சாதிரியைப் பணித்துத் திருமுகம் அனுப்பினார். அத்திருமுக ஆணை விச்சாதிரி, திருக்குடமூக்கில் மூலவருடையாருக்காகக் கணிவாரியம் செய்த பாரதாயன் தாமோதரன் சங்கர நாராயணன், காமக்காணி உதயனன், மொகிலியன் முத்துக்கிருஷ்ன நாராயணன், இந்தத் திருக்கோயில் குடமூக்கு மூலபருடையாருக்காக கணக்கராக இருந்த வேளான் கூத்தன் ஆயர்கொழுந்தின் கரணத்தான் பல்லாரி கிருஷ்ணன் நக்கன், வலஞ்சுழி சிவபிராமணன் மாடிலன் குமரன் தவசேனன், பாரதாயன் ஆராமத்தி விக்கிரமன் ஆகியோர் கண்காணிப்பில் நிறைவேற்றப்பட்டது.

சோழராட்சியில் அரசியருக்கு இருந்த செல்வாக்கையும் அரசர்களைப் போலவே அரசியரும் திருமுக ஆணைகள் பிறப்பித்தமையையும் அத்தகு ஆணைகள் நிறைவேற்றப்பட்ட பாங்கையும் அரசியர்தம் பணிமகள்கள் வாரியப் பெருமக்களுக்கும் கணக்கர்களுக்கும் இணையாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டமையையும் இக்கல்வெட்டு வெளிச்சப்படுத்துகிறது. இதில் குறிக்கப்படும் பெருந்தனத்து அலுவலர் தந்தி திட்டை, பட்டத்தரசி தந்தி சத்தி விடங்கியாரின் உறவினராகலாம். இக்கல்வெட்டில் குறிக்கப்படும் 'சரணம்' என்ற அணி தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகளில் கூட இடம்பெறாத நகை என்பது குறிப்பிடத்தக்கது. சேத்ரபாலர், முதலாம் இராஜராஜரின் குடும்பத்தினரால் எவ்வளவு நேசிக்கப்பட்டார், போற்றி வணங்கப்பட்டார் என்பதற்கு இவ்விரு கல்வெட்டுகளும் சான்று பகர்வதுடன், அரசுப் பதிவுகளின் நம்பகத் தன்மை குறித்தும் எச்சரிப்பது கவனிக்கத்தக்கது.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.