http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1771 Articles]
Home About US Temples Facebook
Issue No. 17

இதழ் 17
[ நவம்பர் 16 - டிசம்பர் 15 ]


இந்த இதழில்..
In this Issue..

கருத்தரங்குகள் - சில கருத்துக்கள்
பழுவூர் - 6
சிற்பக்கலை ஆய்வு - ஓர் அறிமுகம்
கல்வெட்டாய்வு - 12
ஸ்ரீநிவாச நல்லூர் பயணம் - 3
தக்கோலம் ஜலநாதீஸ்வரம்
Gopalakrishna Bharathi-3
சங்கச் சிந்தனைகள் - 5
இதழ் எண். 17 > பயணப்பட்டோம்
ஸ்ரீநிவாச நல்லூர் பயணம் - 3
மா. இலாவண்யா
ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் ஆலயத்தில் முதல் வலத்தில் நீங்கள் காணவேண்டியவற்றை சென்ற இதழில் பார்த்தோம். இப்பொழுது இரண்டாம் மற்றும் மூன்றாம் வலங்களில் காணவேண்டியவற்றைப் பற்றிப் பார்ப்போம். சென்ற இதழ்களில் நான் குறிப்பிட்டிருந்த யாளிவரிகளை இரண்டாம் வலத்தில் நன்றாகப் பார்த்துக்கொண்டு வாருங்கள். முதலில் பார்ப்பதற்கு வரிசையாய் அமைந்திருக்கும் யாளிகள் ஒன்று போல் இருந்தாலும், சற்று உன்னிப்பாக கவனித்தால் ஒவ்வொரு யாளியும் வித்தியாசமானது என்று புலப்படும். ஒவ்வொரு திருப்பத்திலும் இருக்கும் யாளிகளின் வாயைப் பிளந்தபடி கையில் வாளும் கேடையமும் ஏந்திய வீரர்கள் வீரத்துடன் போரிடுவதை அத்தனை அழகாய் அமைத்திருக்கின்றனர் நமது சோழ சிற்பிகள். வீரத்துடன் போரிடும் பொழுது கூட புன்சிரிப்புடன் விளங்கும் அவர்களைக் கண்டால், நமது முன்னோர்கள் எத்தனை வீரம் மிக்கவர்களாய் இருந்திருப்பார்கள் என்பது விளங்கும்.யாளிகளைப் பார்த்துக்கொண்டுவரும் பொழுது, தெற்குப்பக்கம் பிக்ஷாடனர் சிலைக்கு இடது பக்கத்தில், ஒரு யாளி யாரடா அது என்னை சீண்டுவது என்பது போல் கோபத்துடனும் ஆக்ரோஷத்துடனும் திரும்பிப்பார்க்க, நாமும் யாளி பார்ப்பது எவரை என்று பார்த்தால், அட பாலகன் போல் இருக்கும் ஒரு வீரன் ஒரு காலை மடக்கி ஒயிலாக அமர்ந்த நிலையில், யாளி அவனை நோக்கி நகராத படி தன் மற்றொரு காலை நீட்டி தடுக்கிறான். அந்த வீரன் நல்ல விஷமக்காரனாக இருக்க வேண்டும், யாளியை சீண்டிவிட்டதோடல்லாமல், அது அவன் மேல் பாயாதிருக்கும் வகையில் தடுக்கும் விதம். ஆஹா! அந்த சிற்பிக்கு நிச்சயம் இப்படியொரு விஷமக்கார குழந்தை இருந்திருக்க வேண்டும். அக்குழந்தையின் ஞாபகத்தில் அந்த வீரனை செதுக்கியிருக்க வேண்டும்.அந்த புலிமுகக் கச்சு வீரனைத்தாண்டி இருக்கும் இரு யாளிகள் மனித முகமும் யாளி உருவம் அல்லது பறவை உருவம் கொண்டவை (Spinx). இப்படியாக, யாளி வரியைப் பார்த்துக்கொண்டு உங்கள் இரண்டாம் வலத்தையும் முடித்தாகிவிட்டதா?அடுத்து மூன்றாம் வலம். எல்லாம் தான் பார்த்தாகிவிட்டதே இன்னும் என்ன இருக்கிறது என்கிறீர்களா? நீங்கள் இன்னும் சரிவரப் பார்க்கவில்லையல்லவா அதுதான். இப்பொழுது பார்த்துவிடலாம். இப்பொழுது சுவற்றில், செதுக்கப்பட்டிருக்கும் தூண்கள் (Pilasters) ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு வாருங்கள். நன்றாக உன்னிப்பாக கவனித்துப் பார்க்கவும். என்ன தெரிகிறது. ஆமாம் நீங்கள் நினைப்பது சரி தான். அநேகமாக அவையனைத்தும் நாட்டியக் கரணங்கள் தான். இவற்றை சிற்பச்செதுக்கல்கள் (Miniatures) என்று சொல்வார்கள்.

இந்த சிற்ப செதுக்கல்கள் எல்லாமே முக்கியமாக பார்க்க வேண்டியவை தான் என்றாலும் மிகவும் முக்கியமாய் பார்க்கவேண்டியவைகளை இங்கே சொல்கிறேன். முதலில் தக்ஷிணாமூர்த்திக்கும் பிக்ஷாடனர்க்கும் மத்தியில் இருக்கும் தூணில் ஒரு மங்கை நடமாடிக்கொண்டிருக்க, பக்கவாத்தியக்காரர் மத்தளம் போன்ற ஒன்றை இடது கையால் பிடித்தபடி வலது கையால் முழக்கிக்கொண்டிருக்கிறார். அந்த மத்தளத்தின் பெயர் இடக்கை. தக்ஷிணாமூர்த்தியின் சிலைக்கருகில் இருக்கும் மற்றொரு தூணில் வலது பக்கமிருக்கும் ஒரு மங்கை நடனமாடிக்கொண்டிருக்க, இடப்பக்கமிருப்பவள் தன் முதுகுப்புறத்தை நமக்குக் காட்டியபடி, ஒரு பெரிய ஊதுகுழலை (நாதஸ்வரம் போல் பெரியது) இசைத்துக்கொண்டிருக்கிறாள். அவளின் தலைக் கொண்டை அலங்காரத்தைப் பாருங்கள். எத்தனை அழகு.அடுத்து புலிமுகக்கச்சு வீரனின் அருகில் உள்ள தூணில் இருக்கும் வளைகாப்புப் படலம். ஒரு கருத்தரித்த பெண்மணி தன் தோழிகள் இருவரின் தோள்களில் கையை போட்டபடி, அவர்கள் தாங்க நடந்துவரும் காட்சி, அவளின் முகத்தில் தெரியும் வலி உணர்வு. அவர்கள் ஒவ்வொருவரின் பாதமும் மிகவும் துல்லியமாக வடிக்கப்பட்டிருப்பதை கூர்ந்து பாருங்கள். அதே தூணில் அதற்கடுத்ததாக, இரு பெண்கள், அதில் ஒரு பெண் ஐந்து முகம் கொண்ட ஒரு பெரிய குத்துவிளக்கை ஏற்றுகிறாள்.அதற்கடுத்து ஒரு பெண்மணி காலை நன்றாய் மடக்கி எதன் மீதோ அமர்ந்துகொண்டு, தம்புரா போல் எதையோ மீட்டிக் கொண்டிருக்கிறாள். அதற்கு மேல் ஒரு பெண் பாட, ஒரு பெண் நன்றாக குனிந்து ஏதோ ஒரு கூத்து ஆடிக்கொண்டிருக்கிறாள். அதற்கருகில் ஒரு தாய், தன் குழந்தைக்கு பால் தர, அவள் தலையை அவள் தோழி (அல்லது செவிலித்தாய் என்று சொல்லலாம்) வருடிக்கொடுத்துக்கொண்டிருக்கிறாள். அந்தத் தாயின் முகத்தில் தான் எத்தனை உணர்வுகள், தாயின் பெருமிதம் ஒருபுறம், தாய்மையின் நிறைவு மறுபுறம்.அடுத்து மேற்கில் மகர தோரணத்திற்கு அருகிலிருக்கும் ஒரு தூணில் உள்ள கஜசம்ஹார மூர்த்தி. யானைமுகம் கொண்டஅரக்கனை வதைத்து, அவனைப் பிளந்து, அந்த யானையின் முகம் பாதத்தில் இருக்க உடலை மாலைபோல் சுற்றியணிந்து நடமாடும் சிவபெருமான். மகர தோரணத்தின் வலது பக்கம் இருக்கும் தூணில், ஒரு வினோதமான சிற்பச் செதுக்கலைக் காணலாம். 4 பேர் ஒருவரைஒருவர் பற்றியபடி (சதுர வடிவில் செதுக்கப்பட்டிருக்கிறது) ஆடிக்கொண்டிருப்பது போல் இருக்கும் அந்த சிற்பச்செதுக்கலை நன்றாக கவனித்துப்பார்க்கவும். ஏதாவது வினோதமாக புலப்படுகிறதா?? அவர்கள் நான்கு பேராக இருந்தபோதும், இரு தலைகளை மட்டும் செதுக்கி அந்த இரு தலைகளை வைத்தே நான்குபேர் இருப்பதை சிற்பிகள் எத்தனை அருமையாய் செதுக்கியிருக்கிறார்கள்.அதற்குப் பக்கத்திலேயே இருக்கும் ஒரு தொகுதியில், பறவையொன்று ஒரு பூதகணத்தின் உறுப்பைக் கடிக்க, அந்த பூதகணம் அழுதபடி ஒருகையால் அந்தப்பறவையை தள்ளி, மறுகையால் கண்களை துடைத்துக்கொண்டிருக்கிறது. இதைப்பார்க்கும் பொழுது ஒரு குழந்தை அழுது தன் கண்களைக் கசக்கிக் கொள்வதுபோல் உள்ளது.இதற்கருகிலேயே இருக்கும் தூண் ஒன்றில் இரு மங்கையர் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த சிற்பச்செதுக்கலில் உள்ள விசேஷம் என்னவென்றால் அந்த நடனமணிகளின் இசை அல்லது நடன ஆசிரியையும் நட்டுவாங்கம் சொல்லிக்கொண்டிருப்பதும், பக்கவாத்தியக்காரர்களில் ஒருவர் குடமுழா (குடத்தின் வாயில் தோலைச்சுற்றப்பட்ட முழக்கும் கருவி) ஒன்றை முழக்க, இன்னொருவர் இக்கால கஞ்சிரா போல் இருக்கும் ஒருகண்சிறுபறை ஒன்றை முழக்கிக்கொண்டிருப்பதும் அங்கே செதுக்கப்பட்டிருப்பது தான். அந்த நடன மங்கையரின் கால்களை கவனிக்கவும், ஒரு கால் தரையில் பதிந்திருக்க மறுகாலின் கட்டைவிரல் நுனி மட்டும் தரையில் படுமாறு (இப்படி வைத்திருப்பதற்கு அக்ரதள சஞ்சாரம் என்று பெயர்) குறுக்காக ஸ்வஸ்திகா சின்னத்தில் வைத்திருக்கிறார்கள்.வடக்கில் இருக்கும் ஒரு தூணில் சிவன் நடமாடிக்கொண்டிருக்க அருகிலேயே ஒரு பூதம் அழகான குடமுழா ஒன்றை இசைத்துக்கொண்டிருக்கிறது. இடது கையை நன்றாக எளிதாக வீசியபடி (இப்படி வீசியபடி இருப்பதற்கு அர்த்தரேசிதம் என்று பெயர்), இடது பாதம் பூமியில் பதிந்திருக்க, வலது முழங்காலை மடக்கி உயர்த்தியபடி இருக்கிறார். இப்படி முழங்காலை உயர்த்தியபடி இருப்பதற்கு ஊர்த்துவஜானு கரணம் என்று பெயர். அடுத்து கிழக்குத்திக்கில் இருக்கும் ஒரு தூணில் சண்டேஸ்வரனுக்கு அனுக்கிரகம் செய்தபடியிருக்கும் ஒரு அழகான சண்டேஸ்வரானுகிரகமூர்த்தியின் சிற்பச்செதுக்கலைக் காணலாம்.இப்படித் தூண்களில் அழகான சிற்ப செதுக்ககளை சில கோயில்களில் காணலாம். ஆனால் பொதுவாக கோயிலுக்கு செல்பவர்கள் இவற்றை உன்னிப்பாக காணத்தவறிவிடுவார்கள். எத்தனை அழகுமிக்க சிற்பங்கள், எத்தனை நளினம், எத்தனை அழகான முகபாவம் இப்படி உணர்வுகளைக் கூடத் துல்லியமாக பெரிய சிற்பங்களில் கொண்டுவருவதே கடினமான ஒன்று, அதுவும் இவ்வளவு சிறிய சிற்ப செதுக்கல்களில் கொண்டுவருவது எத்தனை கடினமான செயல், அதையும் நமது சோழதேசத்து சிற்பிகள் செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆற்றல் மிக்கவர்களாய் இருந்திருப்பர்கள் என்று நீங்களே எண்ணிப்பாருங்கள். அத்தனை ஆற்றலுடன், பொறுமையும் பக்தியும் மிகுந்த அக்கறையும் கொண்டு, எவ்வளவோ நாள் உழைத்துப் படைத்திருக்கும் அந்த சிற்பிகளின் படைப்பு இப்படி வீணாகலாமா என்று எண்ணிப்பாருங்கள். நாம் இரசிக்கவில்லையென்றால், அவர்கள் உழைப்பு பொருளிழந்துவிடாதா?? நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ??

சரி இவ்வளவையும் பொறுமையுடன் இரசித்த உங்களுக்கு இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன். நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பூதவரி இக்கோயிலில் இருந்து அழிந்தது எவ்வளவு துன்பகரமானது என்று கூறியது எதனால் என்று உங்களுக்கே புரிந்திருக்கும். இல்லையென்றால் பூதவரிகள் நன்றாக இருக்கும் சில கோயில்களை சுற்றிப்பார்த்துவிட்டு வரவும். பொதுவாகவே பூதவரிகள் மிகவும் அழகாய் அமைந்திருக்கும். ஒவ்வொரு பூதமும் வெவ்வேறு உணர்ச்சியைத்தாங்கியபடி, ஒவ்வொரு வாத்தியக் கருவியை இசைத்தபடி, இல்லையென்றால் ஒன்று மற்றொன்றை கேலி செய்தபடியிருக்கும். இப்படி ஒவ்வொரு கோயிலிலும் உள்ள பூதவரிகளை நன்கு பார்த்துக்கொண்டு வந்தாலே அவற்றின்மேல் உங்களுக்கு ஒரு காதல் ஏற்பட்டுவிடும். சாதாரண கோயிலுக்கே இப்படியென்றால், அதுவும் ஒவ்வொரு சிற்பமும் மிக அழகாய் இருக்கும் இக்கோயிலில் பூதவரி எவ்வளவு அழகானதாய் அமைந்திருக்கும் என்று கற்பனை செய்துபார்க்கமுடிகிறதல்லவா. அத்தனை அழகிய சிற்பங்களை இழந்துவிட்டோம் என்றால், எத்தனை துன்பம் தரக்கூடியது அது. சரி போனது போகட்டும் இனி இருக்கும் சிற்பங்களையும், பூதங்களையும் பார்த்து இரசிப்பதோடல்லாமல் அவற்றை பேணிக் காப்பதையும் நமது கடமையாகக் கொள்வோம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.