http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 21

இதழ் 21
[ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

டாக்டர். மா. இராசமாணிக்கனார்
பழுவூர் - 10
வரலாற்றின் வரலாறு - 1
பல்லவர் யாவர்?
கீழ்மலையும் பொற்கோயிலும்
பல்லவர் வரலாறு - ஒரு பார்வை
இதழ் எண். 21 > கலைக்கோவன் பக்கம்
வரலாற்றின் வரலாறு - 1
இரா. கலைக்கோவன்

என்றுமுள தென்றமிழ் ஏற்றம் பெற உழைத்த தமிழறிஞர்கள் எண்ணற்றவர். தங்கள் எழுத்தாற்றலால் தமிழுக்கு எழில் சேர்த்தவர்கள், பேச்சாற்றலால் பெருமை குவித்தவர்கள், பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர்கள், சங்க நூல்களுக்குச் சிறந்த விளக்கமளித்தவர்கள், படைப்பிலக்கியம் புனைந்தவர்கள், முத்தமிழ் செழிக்க முழுமூச்சுடன் பாடுபட்டவர்கள் என்று இவர் பல திறத்தவர் ஆவர். தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தும் அருந்தமிழ் உயர்வுக்கே அமைக என்று அயராது பாடுபட்ட இத்தகு தமிழ்ச் சான்றோர்களில் முன்னணியில் வைத்து எண்ணத்தக்கவர்களில் டாக்டர். மா. இராசமாணிக்கனார் குறிப்பிடத்தக்கவர். தமிழுடன் மிகுதியான தொடர்போ, தமிழில் தனித்த ஈடுபாடோ இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் தெலுங்கு மொழியே பயின்று வளர்ந்தவரான இவர் பின்னாளில் தமிழ் வளர்த்த செம்மலாக மலர்ந்தமை வியப்பும் சுவையும் நிரம்பிய நெடிய வரலாறாகும்.

நிலம் அளந்து தரம் விதிக்கும் அலுவலகத்தில் ஒரு பிரிவின் மேலாளராக இருந்து, வட்டாட்சியராக உயர்ந்தவரான மாணிக்கம் என்பவரின் கடைசி மகனாகத் தோன்றியவர் இராசமாணிக்கனார். பணி காரணமாகப் பல ஊர்களுக்கு மாறிய மாணிக்கம், கர்நூலில் வாழ்ந்த போது 1907ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 12ஆம் நாள் இவர் பிறந்தார். இராசமாணிக்கனாரின் அன்னை பெயர் தாயாரம்மாள். ஏழு பேர் பிறந்த குடும்பத்தில் இராசமாணிக்கனாரும் அவர் தமையனார் இராமகிருட்டினருமே எஞ்சினர்.

அரசுப் பணியாளரான தந்தையார் அலுவல் காரணமாகப் பல ஊர்களுக்கும் மாற்றப்பட்டார். அதனால் இராசமாணிக்கனாரின் கல்வியும் பல ஊர்களில் வளர்ந்தது. பல ஆண்டுகள் வரையில் தெலுங்கு நாட்டில் கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் இருக்க நேரிட்டதால் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியே பயின்ற இவர், 1916 இல் தந்தையார் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கோட்டைக்கு மாற்றப்பட்ட பிறகே அதாவது, தம்முடைய ஒன்பதாவது வயதிலிருந்துதான் தமிழ் பயிலத் தொடங்கினார். அது முறைசார்ந்த கல்வியாக அமையாவிடினும் தமிழே அறியாத இராசமாணிக்கனார் விரைவில் கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தால் ஓராண்டிற்குள் ஐந்தாம் வகுப்பு வரையிலான தமிழ் நூல்களைப் படித்துத் தேர்ந்தார்.

நிலக்கோட்டையில் வாழ்ந்த காலத்தில், 'அல்லி அரசாணி மாலை', 'பவளக்கொடி மாலை', 'பஞ்சபாண்டவர் வனவாசம்' முதலிய கதைப்பாடல்களையும் தாலாட்டு, கும்மி, நொண்டிச்சிந்து முதலிய நூல்களையும் அக்கம் பக்கத்தில் இருந்தார் கொணர்ந்து கொடுத்துப் படிக்கச் சொல்வது வழக்கம். 'அவர்கள் பொழுது போக்காகக் கொண்டு வந்த நூல்கள் என் தமிழறிவை வளர்த்தன' என்று தம்முடைய வாழ்க்கையின் தொடக்க நாட்களை நினைவு கூர்ந்துள்ளார் இராசமாணிக்கனார்.

நல்லது எங்கிருந்தாலும் போற்றப்பட வேண்டும். சொல்லுவது யார் என்று பார்க்கக்கூடாது. சொல்லப்படுவது என்ன என்பதை மட்டுமே நோக்கவேண்டும். இக்கோட்பாடுகளைத் தம் வாழ்வின் அடிநாளிலிருந்து இறுதிநாள் வரையிலும் பின்பற்றி வந்த இராசமாணிக்கனார் தாம் சந்திக்க நேர்ந்த பல தரத்தினரான மக்களிடமிருந்து அறிந்து கொண்டவை, முன் மாதிரியாக ஆக்கிக்கொண்டவை எண்ணிறந்தவை. அவையே, வாழ்வில் அவர் உயர்வெய்த அடித்தளம் அமைத்துத் தந்தவை. எந்த சூழ்நிலையிலும் உண்மையாகப் பாடுபடுபவன் அப்பாட்டின் பயனை அடையமுடியும் என்னும் பேருண்மையை நெஞ்சில் ஆழப் பதித்தவர் இராசமாணிக்கனார். அதன் விளைவே அவர் மடியறியா உழைப்பினராகி எண்ணிய எண்ணியாங்கு எய்தும் பேராற்றல் பெற்றவராகி விளங்க முடிந்தது.

191 இல் பணி காரணமாக திண்டுக்கல் வந்த தமையனார் இராமகிருட்டிணருக்குத் துணையாகத் தாயாருடன் இராசமாணிக்கனாரும் வந்தார். திண்டுக்கல் வாழ்க்கை அவருடைய கல்விப் பாதையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நிலக்கோட்டையில் தொடங்கிய அவருடைய தமிழ்க் கல்வி, திண்டுக்கல் தூய மேரி உயர்நிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவராக அவர் சேர்ந்த நிலையில் தொடர்ந்தது.

திண்டுக்கல் நகரவை உயர்நிலைப்பள்ளியில் அந்நாளில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஒருவர் இராசமாணிக்கனாருக்கு அறிமுகமானார். அவர் வழி இவர் அறிந்தவை பல. திண்டுக்கல்லில் இராசமாணிக்கனாரின் குடும்பம் வாழ்ந்த இடத்திற்குச் சற்றே தள்ளி 'மௌனசாமி மடம்' என்னும் மடம் இருந்தது. அவருக்கு முன்பே அறிமுகமாகியிருந்த உடற்பயிற்சி ஆசிரியர் அம்மடத்திற்கு அவரை அழைத்துச் சென்றார். அதன்பின் அடிக்கடி அங்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்ட இராசமாணிக்கனார், அம்மடத்திலிருந்த இளந்துறவியின் அன்பிற்குப் பாத்திரமானார். அத்துறவி சித்தர் பாடல்களையும் அருட்பாவையும் இவர் அறியுமாறு செய்தார்.

அந்த இளந்துறவி பாடல்களை இனிமைக்காக மட்டுமல்லாது, அவை வெளிப்படுத்தும் வாழ்வியல் உண்மைகளுக்காகவும் நேசிக்கவேண்டும் என்பதை இராசமாணிக்கனாருக்கு உணர்த்தியவர். சாதிகள் யாவும் மனிதன் படைத்துக் கொண்டவை. கடவுள் படைத்தவை ஆண் பெண் என்ற இரண்டு சாதிகளே என்னும் பேருண்மையையும் அவரே இராசமாணிக்கனாரின் இளம் நெஞ்சில் ஆழப் பதியச்செய்தார். அந்த இளந்துறவியின் வழிகாட்டல்களே எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் சாதிகளைக் கடிந்து வன்மையாக எதிர்க்க, சாதிகளற்ற சமுதாயம் காணப் பாடுபட, சாதி ஒழிப்பு மாநாடுகளில் கலந்து கொண்டு சாதி ஒழிப்பில் தீவிரம் காட்ட இராசமாணிக்கனாருக்கு எழுச்சியூட்டின.

திண்டுக்கல் உடற்பயிற்சி ஆசிரியரின் தொடர்பால் எதையும் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும் என்னும் உணர்வைப் பெற்ற இராசமாணிக்கனார், திப்புசுல்தானோடு இணைத்துக் கூறப்படும் திண்டுக்கல் குன்றின் மீது அமைந்திருக்கும் கோட்டைக்கு அவ்வாசிரியருடன் சென்றார். அதுவே, இராசமாணிக்கனார் கண்ட முதல் வரலாற்றுச் சிறப்புடைய இடமாகும். அப்போது, அவ்வாசிரியர் கூறிய, 'படிக்கும் பிள்ளைகள் எந்த இடத்துக்குச் சென்றாலும் அந்த இடத்தைப் பற்றிய வரலாறு, அங்குள்ள கட்டடங்கள், விளைபொருள்கள், செய்பொருள்கள் இவற்றைப்பற்றி அரிய வேண்டும். இந்த அறிவு பெரிதும் வேண்டற்பாலது. பலர் இவற்றைக் கவனிப்பதே இல்லை.' என்னும் அறிவுரையே பின்னாளில் இராசமாணிக்கனார் ஒரு வரலாற்று அறிஞராக மலரக் காரணமாக அமைந்தது. 'அவர் கூறிய செய்திகள் என் மனதிற் பதிந்தன. அன்று முதல் நான் எந்த ஊருக்குச் சென்றாலும் அவ்வூர் பற்றிய விவரங்களை அறிந்து குறிப்பெடுத்துக் கொள்ளத் தொடங்கினேன்' என்று இராசமாணிக்கனார் கூறியிருப்பது இங்கு கருதத்தக்கது.

ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் தந்தையார் மறைந்ததால் திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டைக்கு வந்த இராசமாணிக்கனாரின் கல்வி மீண்டும் தடைப்பட்டது. குடும்பப் பொறுப்பேற்ற தமையனாருடன் அவரும் அன்னையாரும் இருக்க வேண்டிய சூழல் அமைந்ததால் தமையனார் பணிமாற்றம் பெற்ற இடங்களுக்கெல்லாம் அவரும் செல்ல நேர்ந்தது. நன்னிலத்தில் நிலையாக ஓராண்டு தங்கிப் பணியாற்றும் வாய்ப்பைத் தமையனார் பெற்ற நிலையில் 1920 இல் இராசமாணிக்கனார் மீண்டும் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து பயின்று தேறினார்.

அங்கு பயின்ற காலத்துச் சில மாணவ நண்பர்களை அழைத்துக் கொண்டு நன்னிலத்தைச் சுற்றியிருந்த திருவாஞ்சியம், திருப்புகலூர், திருச்செங்காட்டான்குடி, திருக்கண்ணபுரம், திருமருகல் முதலிய திருத்தலங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் இராசமாணிக்கனார். அப்போது அவருக்கு வயது பதின்மூன்று. பைந்த வயதில் எழுந்த இந்த ஆர்வம்தான் பின்னாட்களில் தென்னாட்டுக் கோயில்கள் பற்றி அறியும் விழைவை அவரிடம் மிகுவித்தது.

தமையனார் இராமகிருட்டினருக்கு நன்னலித்திலிருந்து தஞ்சாவூருக்குப் பணி மாற்றலாகிய நிலையில் அங்கு தம் படிப்பைத் தொடர விரும்பினார் இராசமாணிக்கனார். ஆனால், 'இவனது படிப்பு பலமுறை தடைபட்டு வீணாகிவிட்டது. பதின்மூன்று வயது நிரம்பிய இவனை எப்படி முதல் படிவத்தில் சேர்ப்பது' என்று பலரும் கூறியதால் தயங்கிய தமையனார், 'இவனைத் தையற்கடையில் விடுவது நல்லது' என்று கருதி, இவரை வேலை கற்க வாய்ப்பாக ஒரு தையற்கடையில் விட்டார். 'நான் பதினைந்து நாட்கள் வேலை பழகி காஜா எடுக்கக் கற்றுக்கொண்டேன். சிறிய பைகளைத் தைக்கவும் பயின்றேன். நாள்தோறும் இரவில் வீடு திரும்புகையில் கடை உரிமையாளர் எனக்குக் காலணா கொடுப்பார்' என்று தம் தையற்கடை வாழ்க்கையை விவரிக்கின்றார் இராசமாணிக்கனார்.

எப்படியாவது படிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த இராசமாணிக்கனாரின் மனம், தையல் தொழிலில் ஈடுபடவில்லை. தஞ்சாவூர் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால், தடைபட்டு நின்ற படிப்புத் தொடர்ந்தது. 1921இல் ஆறாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்ட இராசமாணிக்கனாரின் படிப்பு தலைமையாசிரியரின் கருணையால் நாளும் வளர்ந்தது. அனைத்துப் பாட நூல்களையும் வாங்கும் வாய்ப்பு இன்மையின் ஆங்கில, கணித நூல்களை மட்டும் வாங்கிக் கொண்டார். ஏனைய பாடநூல்களை இரவல் வாங்கிப் படித்தார். 'தலைமையாசிரியர் சொற்படி இரண்டு நூல்கள் மட்டும் வாங்கிக் கொண்டேன். சிலரை நண்பராகக் கொண்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் என்னிடம் இல்லாத நூல்களை அவர்களிடம் பெற்றுச் சனி, ஞாயிறுகளில் படித்து வந்தேன்' என்பார் இராசமாணிக்கனார்.

பீட்டர்ஸ் பள்ளிக்கு மூன்று கிளைகள் உண்டு. இந்த மூன்றிலும் இருந்த முதல் படிவ மாணவருக்குள் முதல் மாணவராகத் தேறியதன் வாயிலாகப் பள்ளியிலும், வீட்டிலும் பெரும் பாராட்டைப் பெற்றார் இராசமாணிக்கனார். இதனால் இவரது மேற்படிப்பு தடையின்றித் தொடர்ந்தது. பள்ளி நாட்களில் அவர் தமிழார்வம் வளரக் காரணமானவருள் அவருடைய அண்ணியார் அம்புஜம் அம்மையும் ஒருவர். தேவாரம், திருப்புகழ் ஆகியவற்றில் தமக்கு மிகுந்த ஈடுபாடு எழக் காரணமாக இருந்தவர் அவர் என்பதை, 'என் அண்ணியார் முருக வழிபாடு செய்பவர், திருப்புகழ் படிப்பவர்; அவர் எங்கள் வீடு வந்த பிறகு நான் திருப்புகழும் தேவாரமும் மிகுதியாகப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்' என்ற இராசமாணிக்கனாரின் குறிப்பால் அறிய முடிகிறது.

இராசமாணிக்கனார் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது அவர் தமையனார் ஆந்திர நாட்டிற்குப் பணி மாற்றமாகிச் சென்றார். தாயாருடன் தஞ்சாவூரிலேயே தங்கித் தம் படிப்பைத் தொடர்ந்த இராசமாணிக்கனாருக்கு அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கும் கல்வி சார்ந்த செலவுகளுக்கும் தமையனார் திங்கள் தோறும் அனுப்பிய பதினைந்து ரூபாய் போதுமானதாக இல்லை. அதனால் அந்த வயதிலேயே அவர் பொருளீட்ட வேண்டியிருந்தது. 'மூன்றாம் படிவ மாணவரும் இரண்டாம் படிவ மாணவரும் ஆக நால்வர் என்னிடம் தனியே பாடம் படிக்க வந்தனர். அவர்கள் தந்த தொகையை வைத்துத்தான் என் பள்ளி வாழ்க்கையை நடத்தினேன்' என்பார் இராசமாணிக்கனார்.

பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்து கல்வி பயின்றவர், ஒவ்வோர் ஆண்டு இறுதித் தேர்விலும் முதல்வராகத் தேறி, அதற்குரிய பரிசைப் பெற்றார். பள்ளி இறுதித் தேர்வில் சிறந்த முறையில் வெற்றி பெற்றுப் பியர்ஸ் பரிசைப் பெற்ற இவர் மூன்று ஆண்டுகள் தமிழ் மன்றச் செயலாளராக இருந்து பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கின்றார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்திய பள்ளி இறுதித் தமிழ்த் தேர்விலும் இவர் முதல்வராகத் தேறினார்.

தஞ்சாவூர் பள்ளியில் பயின்றபோது, இவருக்குத் தமிழாசிரியராக அமைந்தவர் கரந்தை கவியரசு ரா.வேங்கடாசலம்பிள்ளை ஆவார். வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்த இவரை அப்பெருந்தகை தனியே அழைத்துத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்தார். அப்பெரியாரிடம் இவர் மூன்றாண்டுகள் முறையாகப் படித்தார்.

நிலக்கோட்டையில் அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களுக்குப் படித்துக் காட்டிய கதைப்பாடல்களும் திண்டுக்கல் மௌனசாமி மடத்து இளந்துறவி வழி அறிந்துகொண்ட திருஅருட்பாவும் சித்தர் பாடல்களும், அண்ணியார் துணையுடன் அறிய நேர்ந்த தேவாரமும் திருப்புகழும் வளர்த்த தமிழார்வம், ரா.வேங்கடாசலம்பிள்ளையால் முறைப்படுத்தப்பட்டது. அவரே இராசமாணிக்கனாரின் தமிழ் உணர்வையும் அறிவையும் ஆர்வத்தையும் புரிந்துகொண்டு அவரை வளர்த்தவர்; இளைஞர் இராசமாணிக்கத்தின் ஆற்ற்ல்களை இனங்கண்டு ஊக்கிய முதல்வர் என்ற பெருமைக்கு உரியவரும் அவரே. அவர் இராசமாணிக்கனாரிடம் கொண்டிருந்த அன்பும் பற்றும் ஈடுபாடும் தூயவை; எல்லை கடந்தவை.

கரந்தை கவியரசுவின் துணையால் கரந்தைத் தமிழ் சங்கத்துடன் இராசமாணிக்கனாருக்குத் தொடர்பேற்பட்டது. இதனால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரம்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலிய பெருமக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பமைந்தது. உ.வே.சாமிநாதையர், ரா.இராகவையங்கார், போன்ற தமிழ்ப் பெருமக்களின் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவையெல்லாம் சேர்ந்து, இராசமாணிக்கனாரின் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த தமிழ்ப்பற்று என்னும் நெருப்பைக் கிளறிவிட்டன. இராசமாணிக்கனாரின் வாழ்க்கையும் கல்வியும் தமிழார்வமும் நெறிப்பட்ட இடம் தஞ்சாவூராகும்.

தஞ்சாவூரில் இருந்தபோது, திருவையாற்றை மையமாகக் கொண்டு ஆண்டுதோறும் நடைபெற்ற ஏழூர் விழாவில் இராசமாணிக்கனார் நண்பர்களுடன் கலந்து கொள்வது இயல்பு. தஞ்சாவூரைச் சேர்ந்த தேவாரக் குழுவினருடனும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாருடனும் சேர்ந்து திருவையாறு, திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருநெய்தானம், திருப்பூந்துருத்தி, திருப்பழனம், திருவேதிக்குடி எனும் ஏழு ஊர்களுக்கும் தேவாரம் பாடிக்கொண்டு கால்நடையாகச் செல்வதும் வழக்கம். சமய உணர்வும் ஈடுபாடும் இளமையிலேயே அவர் நெஞ்சில் இடம்பெற இவ்வழக்கமும் காரணமானது.

1927 மார்ச்சுத் திங்களில் நடைபெற்ற பள்ளி இறுதி வகுப்புத் தேர்வில் தேறியதும் ஆந்திர மாநிலம் சென்று தமையனாருடன் சில மாதங்கள் இருந்த இராசமாணிக்கனார் தஞ்சாவூர் மீண்டு ஒரத்தநாடு போர்டு உயர்நிலைப்பள்ளியில் எழுத்தராகச் சேர்ந்தார். அப்பணியில் அவருக்கு நாட்டம் இல்லாமல் போனதால் தந்தையாரின் நண்பரும் சென்னை பின்னி கம்பெனியில் திவிபாஷியாக (மொழி பெயர்ப்பாளர்) இருந்தவருமான கே.திருவேங்கடம் என்பாரின் உதவியுடன் 1928 ஆம் ஆண்டு சென்னை வந்து, வண்ணாரப்பேட்டையிலுள்ள தியாகராயர் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். தஞ்சாவூர் மண் விதைத்த மொழி, சமய சீர்திருத்த உணர்வுகளுடன் சென்னையில் தம் வாழ்க்கையைத் தொடங்கியவர், தெளிவாகவும் இனிமையாகவும் உள்ளம் கவரும் வகையிலும் பாடம் நடத்துவதில் திறமை பெற்றவராக விளங்கியமையால் மாணவர் இடையில் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தார்.

(வளரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.