http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 21
இதழ் 21 [ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2006 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
பழுவூர்ப் புதையல்கள்
கண்டன் அமுதனின் ஆட்சிக்காலம் எவ்வளவு நாள் நீடித்தது என்பதை அறிந்துகொள்ள எவ்வகைச் சான்றுகளும் கிடைக்கவில்லை. ஆனால் தென்வாயில் ஸ்ரீகோயிலின் இடைநடை கிழக்குச் சுவரிலுள்ள உத்தமசோழனின் பதினாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றைப் பதிப்பித்திருக்கும் திரு. ஜி.வி. சீனிவாசராவ் கண்டன் அமுதன் உத்தம சோழனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் உயிருடன் இருந்ததாகக் கன்காட்டுகிறார்76. இக்கல்வெட்டைப் படித்துப் பதியெடுத்த நிலையில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவை இச்செய்தி தவறானது என்பதைக் கண்டுபிடித்தது. மிகவும் சிதைந்துள்ள இக்கல்வெட்டின் ஒன்பதாம் வரியிலிருந்து பதினோராம் வரிக்குள்ளாகவே இச்செய்தி வருகிறது.
9. ண்டு பலிசை இடுவாரா நிற்க்க ஸ்ரீ உத்தம சோழ(தேவ)ர் கொப்பரகேசரிப 10. ன்ம(ற்)க்கு யசு (16) ஆவது அடிகள் பழு...ரயர் கண்டன் 11. (...) னார் அருளச் செ... பத்தாம் வரியிலுள்ள பதினாறாம் ஆட்சியாண்டைக் கல்வெட்டறிக்கை பத்தொன்பது எனத் தவறாகப் பதிப்பித்துள்ளது. பதினாராம் வரியில் முதல் மூன்றெழுத்துக்கள் இல்லை. எழுத்துக்களை ஊகிக்கக் கூட முடியாத அளவு இங்குக் கல் தேந்து போயுள்ளது. ஆனால் திரு. ஜி. வி. சீனிவாசராவ் சிறிதும் தயங்காமல் பதினோராம் வரியின் புள்ளியிட இடங்களை 'அமுத' என்ற சொற்களால் நிரப்பிக் 'கண்டன் அமுதனார்' என்றாக்கி, இம்மன்னன் உத்தமசோழனின் பதினாறாம் ஆட்சியாண்டில் வாழ்ந்திருந்த நிலையை உருவாக்கியுள்ளார். இதே புள்ளிகளில் 'மறவ' என்ற மூன்றெழுத்துக்களை நிரப்பினால் 'மறவனார்' என்றாகும். இதுதான் பொருத்தமும் உண்Mஐயுமாகும். உத்தமசோழனின் பதினாறாம் ஆட்சியாண்டில் பழுவூர் ஆட்சியில் இருந்தவன் கண்டன் மறவனே. படியெடுத்த கல்வெட்டுகளை ஒப்பிட்டு ஒருங்கிணைத்து நோக்காமல் திரு. ராவ் இப்பிழையைச் செய்துள்ளார். நல்ல காலம் பழுவேட்டரயர்களைப் பற்றி எழுதியுள்ள அறிஞர்கள் யாரும் திரு. ராவின் இந்தக் குறிப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கண்டன் அமுதனுக்கு அடுத்தபடியாகப் பழுவூரை ஆண்டவர், கல்வெட்டுகளால் அதிகம் பேசப்படும் மறவன் கண்டனே. இம்மன்னரைப் பற்றிய வரலாற்றுக்குள் நுழையும் முன் நம்முடைய முதற் கேள்வியான, பராந்தகனுக்குப் பெண் கொடுத்த பழுவேட்டரையர் யார் என்பதற்கு விடைகாண முயல்வோம். பராந்தகனின் ஆட்சிக் காலத்தில் பழுவூர் அரியணையில் இருந்தவர்கள் குமரன் மறவனும், கண்டன் அமுதனுமே ஆவர். இவ்விருவருள் ஒருவர்தம் பெண்ணே பராந்தகனின் மனைவியான அருள்மொழி நங்கை. வெள்ளூர்ப்போர், உதயேந்திரம் செப்பேடுகளின் காலம் அருள்மொழிக்கும் பராந்தகனுக்கும் பிறந்தவன் அரிஞ்சயன் என்ற செய்தி இவற்றையெல்லாம் கொண்டு நோக்கும்போது உதயேந்திரம் செப்பேடுகளும், அன்பில் செப்பேடுகளும், திருக்கென்னம்பூண்டிக் கல்வெட்டும் குறிக்கும் பராந்தகனுக்குப் பெண் கொடுத்த பழுவேட்டரையர், குமரன் மறவனே என்று துணியலாம். மறவன் கண்டன் கண்டன் அமுதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் குமரன் மறவனின் மகனான மறவன் கண்டன். இவர் பெயரே இவ்வுண்மையை நிறுவுகிறது. கண்டன் அமுதனுக்கு வாரிசு இல்லாமல் போனமையால் குமரன் மறவனின் மகனான மறவன் கண்டன் ஆட்சிக்கு வந்திருக்கலாம். இம்மன்னரைக் குறிக்கும் முதல் கல்வெட்டு இராசகேசரிவர்மனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் காணக்கிடைக்கிறது77. இந்த இராசகேசரி வர்மன் சுந்தரசோழனே என்பதில் இதுவரையில் யாருக்கும் கருத்துவேறுபாடு இல்லை. கி.பி. 919இல் அறிமுகமாகும் கண்டன் அமுதனுக்கும் கி.பி. 962இல் அறிமுகமாகும் மறவன் கண்டனுக்கும் இடையில் பழுவூர் அரியணையை அலங்கரித்தவர்களாகப் பழுவேட்டரையன் கோதண்டன் தப்பிலிதர்மன், பழுவேடரையன் விக்கிரமாதித்தன், அவனிகந்தர்வ ஈசுவரகிரகத்துத் தேவனார் ஆகிய மூவருள் ஒருவரை அல்லது இருவரைப் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். i) டாக்டர் பாலாம்பாள்: அவனிகந்தர்வ ஈசுவர கிரகத்துத் தேவனார் கி.பி 921-957----கோதண்டன் தப்பிலிதர்மன் கி.பி. 957-96078 ii) திரு. ஜி.வி. சீனிவாசராவ்: கோதண்டன் திஅப்பிலிதர்மன்79 iii) திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம்: பழுவேட்டரையன் விக்கிரமாதித்தன்80 iv) திரு. தியாகராசன்: கோதண்டன் தப்பிலிதர்மந்---பழுவேட்டரையன் விக்கிரமாதித்தன்81 இந்நான்கு அறிஞர்களும் குறிக்கும் மும்மூர்த்திகளுள் அவனிகந்தர்வ ஈசுவர கிரகத்துத் தேவனாரை முதலில் பார்ப்போம். அவனிகந்தர்வ ஈசுவரகிரகத்துத் தேவனார் வேலப்பழுவூரை அடுத்துள்ள கீழையூர்க் கோயில் வளாகமே அவனிகந்தர்வ ஈசுவரகிரகம். இவ்வளாகத்துள் இரண்டு கோயில்கள் உள்ளன. இவ்விரண்டு கோயில்களுக்கும் இராசகேசரியின் ஆறாம் ஆட்சியாண்டில் சேரமானார் மனைவியான அக்காரநங்கையார் விளக்குக் கொடைகள் அளித்துள்ளார். இக்கொடைகளைச் சுட்டும் இரண்டு கல்வெட்டுகளும் இதிரும் புதிருமாக ஒன்று வடவாயில் கருவறையின் தென் புறச்சுவரில் ஆலமர் அண்ணலுக்கு இடப்புறத்திலும்82, மற்றொன்று தென் வாயில் கருவறையின் வடபுறச் சுவரில் நான்முகனுக்கு வலப்புறத்திலுமாய்83 அமைந்துள்ளன. இக்கல்வெட்டுகள் கொடையாளியான அக்கார நங்கையை 'இத்தளி தேவனார் மகளார்' என்று அன்போடு அழைக்கின்றன. இத்தேவனாரையே டாக்டர் பாலாம்பாள் அவனிகந்தர்வ ஈசுவரகிரகத்துத் தேவனாராக்கிக் கண்டன் அமுதனையடுத்துப் பழுவூர் அரியணையேறிய அரசராய்க் காட்டுகிறார். இவ்வாறாம் ஆட்சியாண்டுக்குரிய இராசகேசரியைக் கண்டராதித்தனாகக் கொள்கிறார் டாக்டர் பாலாம்பாள்84. அவனிகந்தர்வ ஈசுவரகிரகத்தில் சுந்தரசோழனுடையதாக உறுதி செய்யப்பட்ட கல்வெட்டுகள் ஆறு உள்ளன85. இந்த ஆறு கல்வெட்டுகளின் எழுத்தமைதி அக்கார நங்கையைக் குறிக்கும் இராசகேசரிக் கல்வெட்டின் எழுத்தமைதியை அப்படியே ஒத்திருக்கிறது. இந்நிலையில் அக்கார நங்கையைக் குறிக்கும் இராசகேசரியைச் சுந்தரசோழனாகக் கொள்ளாமல், டாக்டர் பாலாம்பாள் கண்டராதித்தனாகக் கொண்டது ஏனென்று தெரியவில்லை. இம்முதல் பிழையே இவரைத் தொடர்ச்சங்கிலி போல் பல இடறல்களுக்கு ஆளாக்கியுள்ளது. டாக்டர் பாலாம்பாள் இத்தேவனாரைக் குறித்துத் தெரிவிக்கும் கருத்துக்களை அடுத்த இதழில் பார்ப்போம். அடிக்குறிப்புகள் 76 S.I.I. Vol. XIX, Ins. No. 105. 77 S.I.I. Vol. V, Ins. No. 679. 78 வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 23-26. 79 A.R.E. 1925-26, Part II, No. 20., P. 103 80 S.R. Balasubramanyam, Early Chola Temples, P. 37 81 இல. தியாகராசன், கீழப்பழுவூரில் பள்ளிப்படைக் கோயில் கண்டுபிடிப்பு, கட்டுரை, தினமலர் (நாளிதழ்), திருச்சிப் பதிப்பு, 27-12-1987. 82 S.I.I. Vol. XIII, Ins. No. 153. 83 Lbid., Ins. No. 154. 84 வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 24. 85 S.I.I. Vol. XIII, Ins. Nos. 208, 215, 229, 236, S.I.I. Vol. V, Ins. Nos. 679, 682. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |