![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 28
![]() இதழ் 28 [ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2006 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
கல்வெட்டுக் கதைகள்
புலவர் சட்டென்று வேட்டியைப் பிடித்துக்கொண்டு மளமளவென்று அந்த ஒற்றையடிப்பாதையில் நடக்க ஆரம்பித்துவிட்டார். "அட, சற்று இருங்களேன் ! இந்த இடத்தின் அழகை சற்று அனுபவித்துக்கொள்கிறேன் !" என்றேன். "அனுபவிப்பெல்லாம் அப்புறம் இருக்கட்டும் - வெய்யில் ஏறும்முன் அந்தப் பாறைப் பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு வந்து விடுவோம் - வாருங்கள் !" ![]() அம்மன்கோயில்பட்டியில் புலவர் சற்று தூரத்தில் "நத்தமேடு"க் தெரிந்தது. "என்றாவது ஒரு நாள் உங்கள் இலாகா ஆட்களை வைத்துக்கொண்டு இங்கே தோண்டுங்கள் - ஏதாவது கிடைக்கும் !" நத்த மேட்டுக்கப்பால் சிறிது தூரத்தில் ஒரு பின்தங்கிய கிராமம் கண்களுக்குப் புலனானது. ஓரிரண்டு ஓட்டு வீடுகள் - பெரும்பாலும் தென்னங்குடிசைகள் - சில சமயங்களில் அதுவும் முடியாமல் பனையோலைகளை வைத்து வேயப்பட்ட குடிசை. அப்படிப்பட்ட சிறிய பனையோலைக் குடிசையொன்றில் கிழவர் ஒருவர் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக்கொண்டு விச்ராந்தியாக அமர்ந்திருந்தார். "அடடா, இதல்லவா வாழ்க்கை ! என்ன அமைதியான சுற்றுப்புறம் - என்னவொரு எளிமை ! இவரைப்போல் இருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் !" என்றேன். ![]() விச்ராந்திக் கிழவர் "நீங்கள் வேறு ஏன் வயிற்றெறிச்சலைக் கிளப்புகிறீர்கள் ? இங்கு மழை சுத்தமாகப் பெய்வதில்லை - நிலத்தடி நீருக்காக போர் பம்பு அடித்தால் சொத்தை எழுதி வைக்கவேண்டும் ! பிழைக்க வழியில்லாமல் வெறுத்துப்போய் உட்கார்ந்திருக்கிறார்கள் அவர்கள் !" என்றார் புலவர் மனம் வெதும்பி. அவர்களுக்காக அரை சொட்டு கண்ணீர் சிந்திவிட்டு மேலே தொடர்ந்தோம். நாங்கள் அந்த நத்தமேட்டுப் பகுதிக்குள் நுழைந்ததிலிருந்தே இரண்டு சிறுவர்கள் எங்களைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தார்கள். கிராமப் பகுதிகளில் இதெல்லாம் சகஜம். குளாயை (பேண்ட்) மாட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தால் குறைந்தபட்சம் இரண்டு இரசிகர்கள் உங்களைத் தொடர்வது உறுதி. காரெல்லாம் கொண்டு சென்றால் சீட்டியடித்துக்கொண்டு ஒரு கூட்டமே பின்னால் வரும். புலவர் அவர்களில் ஒருவனைப் பிடித்துப் பாறை எழுத்துக்கள் இருக்குமிடத்தைக் காட்டச் சொல்ல - அவன் மளமளவென்று நடக்க ஆரம்பித்தான். நாங்களிருவரும் பின்தொடர்ந்தோம். "தம்பீ - என்னடா படிக்கிறாய் ?" "படிக்கலீங்க - அஞ்சாவதோட வீட்டுல நிறுத்திட்டாங்க !" என்றான் சிறுவன். அதில் அவனுக்கு வருத்தமோ வேதனையோ இல்லை. சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால் எனக்குள் படிந்த வேதனையை வார்த்தைகளில் வடிக்க முடியாது. "நீயாவது படிக்கிறாயா ?" என்று அடுத்தவனை விசாரித்தார் புலவர். அவர் படிக்கிறான் என்று அறிந்துகொண்டதில் இருவருக்குமே திருப்தி ஏற்பட்டது. முட்செடிகொடிகள் நிரம்பியிருந்த ஓட்டு வீட்டை அனைவரும் கடந்தோம். ![]() முட்செடி வீடு "என்ன வீடு இது ?" என்று விசாரித்தேன். "அதுவா - அங்ஙன வயசாளிங்க ரெண்டு பேர் - பாட்டி தாத்தா இருந்தாங்க - அவங்க போனப்புறம் வீட்டில யாரும் இருக்கறதில்ல !" என்று விளக்கினான் சிறுவன். ஏதோ ஒரு வேதனை மனதைச் சுற்றிப் படர்ந்தது. தனியாக அந்த மிகச்சிறிய ஓட்டு வீட்டில் - கல்வெட்டுக்களுக்கு மிக அருகில் அமைந்திருந்த வீட்டில் - ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்து மறைந்த அந்த இரண்டு ஆத்மாக்களை நினைத்துக்கொண்டேன். அநியாயத்துக்குப் புதர் மண்டிக் கிடந்தது. இன்னும் சிறிது காலத்தில் அந்த வீடுகூட கீழே விழுந்துவிடுமோ என்னவோ ! அப்புறம் அங்கே இரண்டு மனித இதயங்கள் இருந்து மடிந்தன என்பதை எடுத்துச் சொல்லக்கூட நாதியிருக்காது. இதுதான் வாழ்க்கை என்று விரக்தி ஏற்பட்டது. நாங்கள் இப்போது நின்றுகொண்டிருந்த மண்கூட எத்தனை பழமையானது ! கிமுவிலிருந்து இங்கே தமிழ்ப் பெருங்குடி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் - மறைந்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் மெளன சாட்சியாக இருப்பது ஒரு கல்வெட்டு - ஒரே ஒரு கல்வெட்டு ! "முந்தியெல்லாம் இங்ஙன வரவே முடியாது - ஒரே புதரா இருக்கும். இப்போ புதரெல்லாம் விலக்கி வேலிகூட போட்டுட்டாங்க !" என்றான் சிறுவன். "உங்கள் இலாகா செய்த பணி !" என்று என்னிடம் ஞாபகப்படுத்தினார் புலவர். வேலியில் சிறியதாக கதவு இருந்தது. ஆனால் நல்லவேளையாகப் பூட்டப்படவில்லை. ஏறிக்குதிக்கும் திருப்பணியிலிருந்து தப்பித்தோம். விறுவிறுவென்று பாறைகளின்மீது ஏறினான் சிறுவன். "இந்த எளுத்த தப்பாப் படிச்சா இரத்த வாந்தி வருமாம் - அம்மா சொல்லிச்சு !" "சரியாகப் படித்தால் என்னடா ஆகும் !" என்று வினவினார் புலவர். "அந்த சொனத் தண்ணிலேந்து தங்கத் தேர் வெளில வருமாம் !" எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. புலவரும் சிரிப்பில் சேர்ந்து கொண்டார். "கல்வெட்டுக்களை எவரும் தப்பித்தவறி படித்துவிடக்கூடாது என்று நமது ஆட்கள் என்னவெல்லாம் கதை கட்டுகிறார்கள் பார்த்தீர்களா ?" "கதயில்லீங்க சாமி ! நெசந்தான் - போன தடவை...." ![]() கல்வெட்டுப் பாறைமீது சிறுவர்கள் "டேய் தம்பி ! இவர் யார் தெரியுமா ? இதுபோல தமிழ் நாட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்களைப் படியெடுத்தவர் ! அப்படியொன்றும் தவறாகப் படித்துவிட மாட்டார் - பயப்படாதே !" என்றார் புலவர் சிரிப்புடன். அந்த சுனையை கவனித்தேன். பாசிபிடித்துப்போய்க் கிடந்தது. "சுத்தமான தண்ணிங்க !" என்று உறுதியளித்தான் சிறுவன். எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ![]() அந்தக்காலச் சுனை - கல்வெட்டு இந்தச் சுனையைப் பற்றியதுதான் சுனைக்கருகில் அந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு.... நான் தேடி வந்த தடயம் ! கல்வெட்டுக்கள் அத்தனை ஆழமாகப் பதியவில்லை - மிக மேலாகத்தான் வெட்டப்பட்டிருந்தது. அதனால் கல்வெட்டு அந்தப் பாறையில் இருப்பதுகூட சட்டென்று தெரியவில்லை. இதனைக் கண்டுபிடித்த அறிஞர் பெரியமனிதர்தான் ! "டேய் தம்பி - இந்த எழுத்தைத் தவிர வேறு ஏதாவது எழுத்து இங்கே இருக்கிறதா ?" என்று சிறுவனை நயமாக விசாரித்தார் புலவர். பழைய கல்வெட்டைப் படியெடுக்க வந்த இடத்தில் புதுக்கல்வெட்டும் கிடைத்தால் என்ன என்கிற நப்பாசை அவருக்கு. "எளுத்தெல்லாம் இல்லீங்க - ஆனால் பாம்பு போன வழி இருக்குங்க !" என்றான் சிறுவன். "அதென்ன பாம்பு போன வழி ?" என்றேன் ஆர்வத்தை அடக்க முடியாமல். "வாங்க காட்றேன்" என்று பாறைப் பகுதிகளில் சட்டென்று ஏறி ஓடினான் சிறுவன் உற்சாகமாக. புலவர் பாறைப்பகுதிகளை ஆராயத் துவங்கினார். "இங்கே சமணர் படுகைகள் எதாவது இருக்குமா என்று பார்க்கிறேன் !" "இதோ பாருங்கள் ! நம்மை மாதிரி பித்துப் பிடித்தவர்கள் பலர் இந்தப் பகுதிக்கு விஜயம் செய்து விட்டார்கள். அப்படி ஏதாவது இருந்தால் இந்நேரம் செய்தி வந்திருக்கும் - பேசாமல் பாம்பு போன வழியைப் பார்க்கலாம் வாருங்கள் !" புலவர் தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு என்னுடன் வந்தார். "இதோ !" என்று பாறையின் ஒரு பிளவைக் காட்டினான் சிறுவன். அது பாறைப்பகுதிகள் பிளந்ததால் உண்டான ஒரு தோற்றம். சிறுவனின் பார்வைக்கு அது பாம்பு போன வழியாகிவிட்டது. ஒரு பக்கமாகப் பார்த்தால் அது பாம்பின் உருவம்போலத்தான் இருந்தது - சிறுவனைச் சொல்லிக் குற்றமில்லை ! இவ்வாறாக பாம்பு சமாச்சாரம் "புஸ்...."வாணமாகிப் போனாலும் என்னுடைய ஆர்வத்தை வேறொன்று கவர்ந்தது. அது என்னவெனில் அந்த கிராமத்து மனிதர்கள் கற்களால் உருவாக்கியிருந்த "பெருமாள் கோயில்"தான். ![]() பாம்பு போன வழி கோயில் என்றாலே குறைந்தபட்சம் அதிஷ்டானம், சுவர், விமானம் எல்லாம் இருக்கும் என்கிற நம்பிக்கையை இது தகர்த்தது. உண்மையில் சொல்லப்போனால் இதுதான் எந்த ஒப்பனையும் இல்லாத நிஜமான கோயில். சுவர் என்றால் கற்களை அடுக்கி வைத்து கட்டப்பட்ட சுவர் - அவ்வளவுதான் ! வானமே கூரை - வையம் முழுவதும் வியாபித்திருப்பவனுக்கு எல்லைகள் ஏது ? மூன்று கற்கள் - அவைதான் இறைவன் ! பண்டைய காலத்திற்கு - வழிபாடு என்றொரு சிந்தனை மனித இனத்திற்குத் தோன்றிய காலத்திற்குச் சென்றுவிட்டதைப் போன்றதொரு பிரமை ஏற்பட்டது எனக்கு. கோயில்கள் மட்டுமல்ல - பண்டைய கிராமங்களும்கூட வரலாற்றுக் கருவூலங்கள்தான் என்பதை உணர்த்துவதுபோல் இருந்தது அந்தக் கோயில். ![]() எளிய கோயிலும் பெருமாளும் பெருமாளுக்கு புரட்டாசி மாத வழிபாடு உண்டென்று சொன்னான் சிறுவன். கோயிலின் முன்னால் கல் கம்பமொன்று இருந்தது. விளக்குக் கம்பமாம் அது. "வந்த வேலையை கவனிப்போம் - வாருங்கள் !" என்று புலவர் மீண்டும் கல்வெட்டு இருக்கும் இடத்திற்கே அழைத்துச் சென்றார். நான் நோட்டுப் புத்தகத்தை பிரித்து வைத்துக்கொண்டேன். எழுத்து எழுத்தாக வாசிக்க ஆரம்பித்தேன். சிறுவனின் முகத்தில் பெரியதொரு சங்கடம் தோன்றியது - "சாமி, வேண்டாங்க, படிக்காதீங்க சாமி ! தப்பித்தவறி ஏதாவது தப்பாப் போயிட்டா...." "டேய் - கொஞ்சம் சும்மா இருக்கிறாயா ?" என்று அதட்டல் போட்டார் புலவர். நான் மும்முரமாக அந்த எழுத்துக்களைப் படிப்பதில் ஈடுபட்டேன். ஓரிரு எழுத்துக்கள் சந்தேகமாக இருந்தன - என்னுடைய கல்வெட்டகராதியை அவ்வப்போது புரட்டிக்கொண்டு வந்தேன். ![]() கல்வெட்டு "ப....ரம்...பன்.......கோகூர்.....கிழான்....மகன்.... அடுத்து என்ன அது ?...ம்......வினக்கன், இல்லை, வியக்கன்....." "மேலே படியுங்கள் !" என்று உற்சாகப்படுத்தினார் புலவர். "ஐயோ சாமி, வேண்டாங்க....சொன்னா கேளுங்க...." என்று சிறுவனும் விடாமல் மன்றாடிக்கொண்டிருந்தான். "வியக்கன்.....கோ......கோபன்.........துணதேவன்......." "ஆஹா - படியங்கள் !" "ஐயோ - கேக்க மாட்டேங்கறீங்களே ! இது ஆபத்துங்க...." "துண....துணதேவன்......தொட்ட.....இல்லை.... தொட.....சுனை....!" "பிரமாதம் பிரமாதம் !" என்றார் புலவர். சட்டென்று எனக்கு வயிற்றுக்குள் ஒரு சங்கடம் தோன்றியது. கணத்தில் அது சுரீரென்று கத்தி பாய்ந்தாற்ப்போல் வலியாக மாறி.... என்ன நேர்கிறது என்று நான் சுதாரிப்பதற்குள் அருகிலுள்ள பாறையில் சாய..... "ஐயோ - என்ன ஆயிற்று ? வாயில் இரத்தம் !!!" என்று அலறினார் புலவர். "ஐயோ ! நான்தான் படிச்சுப் படிச்சுச் சொன்னேனே - பக்கத்துல ஆஸ்பத்திரிகூட இல்லீங்களே ஐயா !" - சிறுவன் அழுவதை என்னுடைய மயக்கத்தில் சரியாகப் பார்க்கமுடியவில்லை. வயிற்றில் அகோரமான வலி. "ஐயோ - அவன் சொன்னது சரிதான் போலிருக்கிறதே - என்ன இழவு இது ? ஒரு முறை கல்வெட்டை சரியாகப் படித்துவிடுங்களேன் - டேய், செடி தழைகளை கல்வெட்டின்மேல் தேயுங்கள், எழுத்து பளிச்சென்று தெரியும் !" சிறுவர்கள் பரபரவென்று இலைதழைக¨ப் பறிப்பதையும் பாறையின்மேல் தேய்ப்பதையும் உணர்ந்தாலும் பார்க்கமுடியவில்லை - வலியின் அவஸ்தையில் பாறையில் ஏறக்குறைய படுத்துக்கொண்டு விட்டேன். ![]() சீக்கிரம் - சீக்கிரம்.....கல்வெட்டு சரியாகத் தெரிகிறதா ? புலவருக்கிருந்த சங்கடத்தில் ஒரு கட்டத்தில் அவரே இலைகளைப் பறித்துப் பரபரவென்று தேய்த்தார். "இப்போது படியுங்கள் - நான் வேண்டுமானால் தாங்கிப் பிடித்துக் கொள்கிறேன் !" அவருடைய தோளில் சாய்ந்துகொண்டு - அவருடைய வெள்ளைச் சட்டையை என்னுடைய இரத்தவாந்தியால் சேதப்படுத்திக்கொண்டு மீண்டும் பார்த்தேன். எழுத்துக்கள் இப்போது தெளிவாகவே தெரிந்தன. முதல்வரியில் எனக்குச் சந்தேகமே இல்லை - வேகவேகமாகப் படித்தேன்...."பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன்..." அடுத்த வரியில்தான் தவறு செய்திருக்க வேண்டும் - எச்சரிக்கை - "வியக்கன்...கோபன்...து..." - இல்லை, து இல்லை, க அது ! இங்குதான் தவறு - "கணதேவன் தொட சுனை !" "மீண்டும் சற்று உரக்கச் சொல்லுங்கள் !" "பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன் கோபன் கண தேவன் தொட சுனை !" என்ன ஆச்சரியம் ! மந்திரம் போட்டதுபோல் என்னுடைய வயிற்றின் சங்கடங்கள் மாயமாய் மறைந்துபோக.... "ஹைய்யா ! தங்க ரதம் வெளியில வரப்போகுது டோய் !" என்று சிறுவன் சுனையைப் பார்த்தபடி காட்டுக்கத்தலாகக் கத்தினான். அதுவரை மிக அமைதியாயிருந்த சுனை நீரில் சளசளவென்று நீர்க்குமிழிகள் உருவாவதை நானும் புலவரும் பீதியுடன் கவனித்தோம் ! (முற்றும்) கல்வெட்டுச் செய்தி அம்மன்கோயில்பட்டி. சேலம் மாவட்டத்தில் ஒரு அமைதியான கிராமம். இங்கே ஒரு அனாமதேயமான சிறு பாறையின்மேல் எந்த முகப்பூச்சும் இன்றி சர்வ சாதாரணமாக - மிக எளிமையாகக் காட்சியளிக்கிறது அந்தப் பண்டைய தமிழிக் கல்வெட்டு. பண்டைய தமிழரின் எச்சங்கள் பலவற்றைத் தாங்கி நிற்கும் இந்த மாவட்டத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களிலேயே மிகப் பழமையான கல்வெட்டு இது. கல்வெட்டை நாம் காணும்படி செய்த புலவர் நாமகிரிப்பேட்டை துரைசாமி அவர்களும் இந்த கல்வெட்டுக் கதை உருவாகக் காரணமான அந்த கிராமத்துச் சிறுவர்களும் நமது நன்றிக்குரியவர்கள். இடம் - அம்மன் கோயில்பட்டி, ஓமலூர் வட்டம் - சேலம் மாவட்டம் காலம் - கிபி நான்காம் நூற்றாண்டு கல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - அறியக்கூடவில்லை கல்வெட்டுப் பாடம் 1 பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன் 2 கோபன் கண தேவன் தொ(ட்)ட சுனை பொருள் - பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன் கோபன் என்பவர் தோண்டிய சுனை எதற்காக அங்கே சுனை தோண்டப்பட்டதென்று தெரியவில்லை. மக்களுக்கான உண்துறையாக அவர் தோண்டியிருக்கலாம். சிறுவர்கள் என்னிடம் சொன்ன தங்க இரதக் கதை...... உண்மையாகக்கூட இருக்கலாமோ என்னவோ ! அந்த பிராமிக் கல்வெட்டை முதன் முதலில் கண்டுபிடித்துப் பதிப்பித்த ஆய்வாளரை ஒரு நப்பாசையில் தேடிக்கொண்டிருக்கிறேன். ![]() புலவர் ஐயாவுடன் அடியேன் this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |