http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 29

இதழ் 29 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2006 ]
ஓவியர் சில்பி சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

மறக்கப்பட்ட மாகலைஞன்
கதை 9 - ஆலங்காரி
திரும்பிப் பார்க்கிறோம் - 1
பிரான்மலைக் குடைவரை
வேண்டாத வதந்திகள்
சில்பியே சிகரம்
Some portions of Early Tamil Epigraphy
தேவை வாசகர்கள் சேவை
Master’s Strokes
Links of the Month
இதழ் எண். 29 > கதைநேரம்
கீழ்ச்செங்களி நாடு என்னும் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அங்கே குன்றுகள் புடைசூழ வயல் வெளிகள் மற்றும் பல்வேறு காடுகள் விரிக்கும் பசுஞ்சூழலின் நடுவே அழகாய் அமைந்திருக்கும் திருவாலத்தூரைப் (1) பற்றியும்கூடக் கேள்விப்பட்டிருக்கக்கூடும். திருவாலத்தூர் என்று குறிப்பிட்டதும் பலருக்கும் ஞாபகம் வருவது அந்தக் குன்றுகளின் அடியில் அமைந்துள்ள மிக அழகிய சிவ - விஷ்ணு குடைவரைகள்தான். பெம்மானின் பெயர் திருவாலத்தூர் மகாதேவர். அவருக்குத் தன் தங்கையை மணமுடித்த திருமாலின் பெயர் ஒளிபதி விண்ணகரத்து ஆழ்வார் (2) ! என்ன அழகான பெயர்கள் பார்த்தீர்களா ?


(1) இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனுருக்கு அருகில் அமைந்துள்ள மலையடிப்பட்டி
(2) கல்வெட்டுக்களில் இக்குடைவரை ஒளிபதி விஷ்ணுக்கிருகம் என்றழைக்கப்படுகிறது. அக்காலத்தில் பெருமாள் பெயருடன் ஆழ்வார் என்னும் அடைமொழியைக் கூட்டி வழங்குதல் மரபு


திருவாலத்தூரில் பல காலமாக ஆலமரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்ததாம். எத்தனை கொடிய வியாதியாக இருந்தாலும் அவரிடம் வேண்டிக்கொண்டால் சரியாகிவிடுமாம். சில வருடங்களுக்கு முன்பு முத்தரைய மகாராஜா (3) ஒருவரின் பெண்ணுக்குக் கடுமையான சுரம் கண்டுவிட்டதாம். என்னவெல்லாமோ வைத்தியம் செய்தும் குணமாகவில்லையாம். காளாமுக (4) வீரசைவப் பெரியவர் ஒருவர் சொல்லியனுப்பியதன் பேரில் அந்த மகாராஜா திருவாலத்தூர் லிங்கத்திடம் வந்து "வெட்ட வெளியில் வெய்யிலிலும் மழையிலும் நனைகிறீர்களே - என் பெண்ணைக் குணமாக்கினால் ஒரு கூரை அமைத்துத் தர மாட்டேனா ?" என்று வேண்டினாராம். ஒரு திங்களில் மந்திரம் போட்டதுபோல் பெண்ணுக்கு குணமாகிவிடவே மகாராஜா மிகவும் மகிழ்ந்துபோய் "கூரையென்ன ! ஒரு குடைவரையே அமைந்துவிட்டால் போயிற்று !" என்று சொல்லி அதற்கான உத்தரவு போட்டாராம்.


(3) சிவபெருமான் குடைவரை முத்தரைய அரசரான குவாவன் சாத்தனால் அகழப்பட்டதற்கு கல்வெட்டுச் சான்றுள்ளது. ஒளிபதி விண்ணகரமும் அதே அரசரால் அகழப்பட்டதென்பது நமது கற்பனை. புதுக்கோட்டையிலேயே அமைந்துள்ள திருமெய்யத்தில் சிவ - விஷ்ணு குடைவரைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்க
(4) காளாமுகர் அந்நாளைய சைவ மரபில் ஒரு வகையினர். தீவிர சைவர்


திருவாலத்தூருக்குத் தென்கிழக்கே அமைந்திருந்த உயரம் குறைவான குன்றுகளில் சிவபெருமானுக்குக் குடைவரை அமைப்பதென்று முடிவாயிற்று. வேலை தொடங்கும் நேரத்தில் மகாராஜாவுக்கு அணுக்கமான வைணவப் பெரியவர் ஒருவரின் கனவில் பெருமாள் தோன்றி "ராஜன் அமைக்கும் சிவக் குடைவரைக்கு அருகில் நாமும் எழுந்தருளப் பிரியப்படுகிறோம் ! ஆவன செய்யவும் !" என்று ஆக்ஞையிட்டாராம். தெய்வத்தின் சொல்லைத் தட்டலாகுமா ? அதனால் இரண்டு குடைவரைகள் நல்லபடியாகக் கட்டி முடிக்கப்பட்டன. பெருமாள் உத்தமோத்தமம் (5) என்கிற வகையில் சேஷ சயனத் திருக்கோலத்தில் அனந்த சாயியாகக் குடைவரையில் எழுந்தருளினாராம். அதனைப் பார்த்த மகாராஜாவின் அன்னை "அடடா ! பெருமாள் என்னமாய் கண்களை நிறைக்கின்றார் !" என்று சொல்லவே அவர் அந்தப் பெயரினாலேயே "கண் நிறைந்த ஆழ்வார்" என்று தமிழிலும் "ஒளிபதி" என்று வடமொழியிலும் பெயர் சூட்டப்பெற்றார்.


(5) வெவ்வேறு வகையான சயன மூர்த்தங்களை வைணவ ஆகமங்கள் அறிமுகப்படுத்துகின்றன. மது, கைடபர், மார்க்கண்டேயர், நிலமகள் மற்றும் இதர தேவர்களுடன் இருக்கும் சயன மூர்த்தி உத்தமோத்தமம் என்கிற உயர்ந்த வகை மூர்த்தமாகும். ஒளிபதி விண்ணகரம் வைகானச ஆகமப் பிரிவைச் சார்ந்ததென்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள.


குடைவரை அமைத்த நாள்முதல் திருவாலத்தூருக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. சுற்றுப்புறமெங்கிலும் இருந்த பல ஊர்களிலிருந்தும் திருவாலத்தூருக்கு மக்கள் திரண்டு வரத் துவங்கினார்கள். கீழ்ச்செங்களி நாட்டு வணிகர்கள் (6) ஆழ்வாரிடம் வேண்டிக்கொண்டதன் பேரில் அவர்களுடைய கீழ்த்திசை வாணிபம் கொட்டிக் கொழித்தது. நாட்டார்கள் நன்றி மறவாமல் கோயிலுக்கு உவச்சக் காணிகளையும் நிருத்த போகங்களையும் (7) அள்ளி வழங்கினார்கள். இவ்வாறாக சிவம் மற்றும் விஷ்ணுக் கிருகங்களின் மகிமை தேசமெங்கும் பரவிக்கிடந்தது. அதனால்தான் திருவாலத்தூர் என்றதும் குடைவரைகள் பலருக்கும் ஞாபகத்திற்கு வரும் என்று குறிப்பிட்டேன்.


(6) கீழ்ச்செங்களி நாட்டார் இவ்வூர்க் கல்வெட்டுகளில் இடம்பெற்றிருக்கிறார்கள்
(7) உவச்சக் காணிகள் - இசை வல்லுனர்களுக்கு அளிக்கப்படும் நிலம் / நிருத்த போகங்கள் - ஆடல் வல்லுனருக்கு வழங்கப்படும் நிலம்


ஆனால் இன்னும் சிறிது நேரத்திற்கு அந்தக் குடைவரைகளை மறந்துவிடுங்கள். அந்தக் குடைவரைகள் அமைந்திருக்கும் அழகான குன்றுகள், பசுஞ்சோலைகள் வயல்வெளிகள் எல்லாவற்றையுமே மறந்துவிடுங்கள். ஊருக்கு வடமேற்கே அமைந்துள்ள திருச்சீரபுரத்திற்குச் செல்லும் பெருவழியில் சிறிது கவனம் செலுத்துங்கள். கார்த்திகை மாதத்தின் விடியற்காலை நேரத்தில் அந்தப் பெருவழியில் இராச சுவரன் (8) குளத்திற்கருகே ஆடி அசைந்துகொண்டே வரும் மாட்டு வண்டியைக் கவனியுங்கள். மாடுகள் நுரைதள்ளி அலுப்பாய்த்தான் தெரிகின்றன - இரவு முழுவதும் பயணப்பட்டுள்ளன போலும். ஆங்காங்கே ஓய்வுகாட்டி நீர் அருந்திக்கொண்டாலும் பயணம் பயணம்தானே... ஆயிற்று ! இன்னும் நாலெட்டு வைத்தால் ஊர் வந்துவிடும். சாவகாசமாக சுவரன் சத்திரத்தில் படுத்துக்கொள்ளலாம் என்கிற நினைப்பில் வண்டிக்காரனும் மெதுவாகவே மாடுகளைச் செலுத்திக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறான். அந்த வில்வண்டியின் பின்புறம் தூங்கி வழிந்துகொண்டு ஒரு ஓரமாய்ச் சாயந்திருக்கும் பயணியை மிகவும் நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். வாயில் எச்சில் ஒழுகுவதுகூடத் தெரியாமல் எப்படித் தூங்கிக்கொண்டிருக்கிறானே... என்றெல்லாம் எக்குத்தப்பாக ஏதாவது சொல்லிவைத்து விடாதீர்கள். அவன் தவறாக நினைத்துக் கொள்கிறானோ இல்லையோ அவனுடைய மாமன் மகளுக்கு எக்கச்சக்கமாகக் கோபம் வந்துவிடும் ! உங்களை உண்டு இல்லையென்று பண்ணிவிடுவாள். அப்புறம் கதை கேட்டாற்போல்தான் !


(8) கல்வெட்டுக்களில் இக்குளம் இடம்பெற்றுள்ளது



***********************************************************************************************


மாடுகள் "ஜல்...ஜல்..." என்று தம் கழுத்து மணிகளை அசைத்தபடி குளத்தின் நீரை ஒருமுறை ஆசையோடு பார்த்துக் கொண்டன. ஊருக்கு அது உண்துறையாதலால் மாடுகளுக்கு அதில் நீர்காட்ட முடியாது. மேலும் ஊர்ச் சத்திரம் நெருங்கிவிட்டதால் இங்கு நீர்காட்ட வண்டிக்காரன் பிரியப்படவில்லை. அவனுடைய எண்ணமெல்லாம் மாடுகளுக்குத் தெரியுமா என்ன ? "குளம் முழுவதும் நீர் நிறைந்திருக்க அதனை ஒரு வாய் மொண்டு குடிக்க விடமாட்டேன் என்கிறானே பாவிமகன் !" என்று வண்டிக்காரனை வைதபடி அவை குளத்தைக் கடந்தன.

ஊர்ப் பெண்டுகள் சிலர் அதிகாலையிலேயே எழுந்து வாசலில் நீர் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு தண்ணீர் எடுப்பதற்காக தத்தம் குடங்களுடன் குளத்தை நோக்கிப் படையெடுக்கத் துவங்கினர். சாதாரணமாக எந்த சுவாரஸ்யமும் இல்லாத அந்த வேலையை மிகவும் இரசனைக்குரியதாக ஆக்குவது வம்பு தும்புப் பேச்சுக்கள்தான். ஊரில் என்னென்ன கயமைத்தனங்கள் நடந்தாலும் அது எப்படியோ இந்தப் பெண்கள் கூட்டத்திற்கத் தெரிந்துவிடுகிறது... அவற்றை அலசி ஆராய்வதில் உள்ள சுவாரஸ்யமே தனிதான் !

ஆனால் அன்றைக்கு அதிகம் கதைகள் பேசப்படவில்லை. காரணம் ஊரை ஒரு மாட்டுவண்டி அந்த விடியற்காலை நேரத்தில் அணுகிக் கொண்டிருந்ததே. அதில் உள்ளவர்கள் யார், அவர்கள் எதற்காக ஊரை அணுகிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தங்கள் ஊர்க்காரர்களா அல்லது வெளியூரா என்று பெண்கள் மண்டையை உடைத்துக்கொண்டார்கள்.

"அதுதான் இன்னும் சிறிது நேரத்தில் வண்டி நம்மைக் கடக்கப் போகிறதே - நேரிலேயே பார்த்துக்கொள்வோமே !" என்றாள் ஒருத்தி.

"இல்லையக்கா ! பொழுது இன்னும் சரியாக விடியவில்லையே - வண்டியை சரியாக நோட்டமிட முடியுமா என்று...."

"ஆமாமாம் ! இவளைப் பெண்பார்க்க தஞ்சாபுரிச் (9) சீமையிலிருந்து மாப்பிள்ளை வந்துகொண்டிருக்கிறார் - அவருடைய கண் காது மூக்கெல்லாம் பத்திரமாக இருக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றனவா என்று பார்த்துச் சொல்லுங்களடி !" என்றாள் முதலாமவள். உடனே அங்கே "கொல் !"லென்று சிரிப்பொலி கிளம்பியது. இப்படிக் கேலிபேசினாலும் உள்ளூர அந்தப் பெண்கள் அனைவருக்குமே வண்டியில் வருவது யார் என்றறியும் ஆசை எழத்தான் செய்தது.


(9) இக்கதை நடக்கும் காலத்தில் தஞ்சாபுரி என்றே தஞ்சை குறிப்பிடப்பட்டது


"உஸ் ! பெண்கள் இத்தனை சத்தமிட்டுச் சிரிக்கக் கூடாது !" என்று மிரட்டினாள் ஒரு வயதான பெண். அதனைத்தொடர்ந்து சிறிது நேரம் மெளனம் நிலவியது.

இந்தப் பேச்சுக்களையெல்லாம் செவிமடுக்காது தூரத்தில் மாடுகள் நடைபயின்றுகொண்டிருந்தன. பெண்கள் தங்களையுமறியாமல் கால்களை எட்டிப்போட்டார்கள். குளத்திற்குக் கிழக்கே அமைந்திருந்த அய்யனார் கோயிலுக்கருகில் பெண்கள் கூட்டத்தை வண்டி கடந்தது. வண்டிக்குள் இருப்பது யாரென்று சரியாகத் தெரியாவிட்டாலும் பெரியதொரு தலைப்பாகை அணிந்து சீமைக்காரர்கள் அணியும் மெய்ப்பையுடன் (10) இளைஞனொருவன் அந்த வண்டியில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. துரதிருஷ்டவசமாக அவனுடைய முகத்தை எவ்வளவு முயன்றும் பெண்களால் பார்க்கமுடியவில்லை. முகத்தை ஒருக்களித்துத் திருப்பித் தூங்கிக்கொண்டிருந்தான் அந்த வழிப்போக்கன்.


(10) அந்நாளில் பெரும்பாலும் மக்கள் எவரும் மேல்சட்டை அணியவில்லை (மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புக்களிலிருந்து)


வண்டி கடந்தவுடன் பெண்கள் மீண்டும் வழிப்போக்கனைப் பற்றிக் கலந்தாலோசிக்கத் தலைப்பட்டார்கள்.

"பார்த்தால் நாட்டாரைப் போல் தெரிகிறது - வாணிபம் செய்ய வந்தவராயிருக்குமோ ?"

"நல்ல பிராயமடைந்த இளைஞராகத்தான் தெரிகிறார் ! ஆடை அணிமணிகளைப் பார்த்தால் தெற்கத்திச் சீமையிலிருந்து "

"தெற்கத்திச் சீமையாவது மண்ணாங்கட்டியாவது ! அங்கெல்லாம் போர் நடந்து நடந்து விவசாயமே பாழாகிக் கிடக்கிறது - வேண்டுமானால் தஞ்சாபுரியிலிருந்தோ தொண்டை மண்டலத்திலிருந்தோ வந்திருக்கலாம். அங்குதான் இப்போதெல்லாம் செல்வம் கொழிக்கிறதாம்..."


***********************************************************************************************


மாடுகள் ஒருவழியாக ஊர்க்கோடியில் அமைந்திருந்த சுவரன் சத்திரத்தை அடைந்தன. வண்டியின் குலுங்கல் நின்றுவிட்டதில் ஒரு வழியாக பயணியின் உறக்கம் கலைந்தது.

"ஐயா ! திருவாலத்தூர் வந்து சேர்ந்து விட்டோம் !" என்றான் வண்டிக்காரன்.

அவன் மெதுவாக வண்டியிலிருந்து இறங்கினான். பாதங்கள் அந்தத் தரையை ஸ்பரிசித்ததும் உள்ளுக்குள் சிலீரென்று ஏதோ புறப்பட்டு தொண்டையை அடைத்தது. அடடா... இந்த மண்ணை நேற்றுப் பிரிந்ததுபோல் இருக்கிறது... ஆயிற்று, தை வந்தால் நான்கு வருடங்கள் கழிந்துவிட்டன ! ஊர் முன்பு போல அதே அழகுடன் இருக்கிறதா அல்லது மாறிவிட்டதா ? ஊர் கிடக்கட்டும்.... அவன் மாமன் வீடு ? உறவுகள் ? எல்லாவற்றுக்கும் மேலாக.....அவள்.....அவள் எப்படியிருப்பாள் ? முன்பு பார்த்ததைவிட நன்கு வளர்ந்திருப்பாளா ? தான் கிளம்பும்போது அவளுக்குப் பருவமடைந்து ஓரிரு வருடங்கள் கழிந்திருந்தன... இப்போது எப்படியிருப்பாள் ?

நீர் சேந்தி முகத்தில் அறைந்துகொண்டான். அடடா ! என்னதான் தஞ்சை - காஞ்சி சுற்றித் திரிந்தாலும் சொந்த ஊர் - சொந்த மண் - என்பதில் உள்ள சுகமே தனிதான். அதிலும் ஊரை சிறிதுகாலம் பிரிந்துவிட்டு மீண்டு வந்தால்தான் ஊரின் அருமை முழுவதையும் புரிந்துகொள்ளவே முடிகிறது ! சத்திரத்தின் கிணற்று நீர்கூட தேனாக இனிக்கிறது...! முகம் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவன் வண்டிக்காரன் தன் அருகிலேயே நிற்பதை கவனித்துவிட்டு அவனுக்கு ஒரு பொற்கழஞ்சையும் இரண்டு மாடைகளையும் கொடுத்தான். அதனை வாங்கி இடுப்பில் முடிந்துகொண்ட வண்டிக்காரன் மாடுகளை வண்டியிலிருந்து பிரித்து நீர்காட்ட அழைத்துப் போனான்.

பயணி வண்டிக்குள் இருந்த தனது மூட்டையை எடுத்துக்கொண்டான். கலைந்திருந்த ஆடைகளை சரிசெய்துகொண்டான். ஊருக்குள் தன் மாமன் குடும்பத்தார் வசிக்கும் கறையூர் வீட்டைக் குறிவைத்து நடக்கத் தொடங்கினான்.


***********************************************************************************************


அவள் முடிவில்லாமல் ஒரு பாதையில் போய்க்கொண்டேயிருக்கிறாள் - அவளைக் கைப்பிடித்து அவளுக்குத் துணையாக அவனும் நடந்துகொண்டிருக்கிறான். சட்டென்று இருள் வந்து கப்புகிறது.... இருளில் அவன் அவளுடைய கரங்களை விட்டுப் பிரிவதை அவளால் அறிய முடிகிறது... இருளில் பயத்தால் நடுங்கிக்கொண்டே "அத்தான் ! அத்தான் !" என்று அவள் அலறுகிறாள்.... "காரி !" என்று தூரத்தில்... வெகுதூரத்தில் அவன் குரல் கேட்கிறது.. அவன் அவளை அடையவிடாமல் வெள்ளுடை அணிந்த புகையுருவம் ஒன்று தடுக்கிறது... அந்தப் புகையுருவத்தைப் பிடித்து விலக்க நினைக்கிறாள் அவள்... கையை வைத்தால் உருவமில்லை - ஒரே புகை ! இருள் இராட்சதன் ஒரேயடியாக அவளை அமிழ்த்திவிடுவதற்காக நெருங்குகிறான்... "அத்தான் அத்தான் !" என்று அவன் கரங்களை இருளில் அவள் தேடுகிறாள்.... அவனும் அவளை அடையக் கையை நீட்டி...ம்ஹூம், கரங்களை எட்டிப் பிடி !

பெருமுயற்சி செய்து பிடித்ததில் ஆலங்காரிக்கு முழிப்புத் தட்டிவிட்டது. அடக்கடவுளே ! இன்று அதிகாலையிலேயே தீய கனா. விடியற்காலை கனவு பலித்துவிடும் என்றல்லவா சொல்வார்கள்... அடடா ! அவளது உடல் இன்னமும் மெல்ல நடுங்கிக்கொண்டுதான் இருந்தது.

உக்கிராண அறையின் சப்தங்களிலிருந்து அவளது அன்னை எழுந்துவிட்டது தெரிந்தது. எழுந்து வாசலுக்குச் சென்று சாணநீர் தெளிக்க வேண்டும். அதென்னவோ அந்த இருள் பிரியாத அதிகாலையில் வாயிலுக்குத் தனியாக செல்வதென்றாலே ஆலங்காரிக்கு பயம். வாயிலில் அவளுக்காகவே ஒரு அரக்கன் இரவு முழுவதும் காத்திருந்து விடியற்காலையில் அவள் தனியாக வரும் நேரம் பார்த்து அபகரித்துக்கொண்டு போய்விடுவதாக ஒரு கற்பனை ! அதற்காகவே படுக்கையில் நீண்ட நேரம் உறங்குவதாக பாவனை செய்துவிட்டு அன்னையிடம் வாங்கிக் கட்டிக்கொள்வாள்.

ஆனால் இன்று அவ்வாறு செய்ய முடியாது. உடனடியாக எழுந்து உள்ளறையில் அமைந்துள்ள தேவாரத்திற்குச் (11) சென்று "சாமி ! நானும் அவரும் எந்தக் குத்தத்தையும் செய்யவில்லை - எங்களைப் பிரித்துவிடாதே !" என்று வேண்டிக்கொண்டால்தான் அவளுக்கு நிம்மதி.


(11) தேவாரம் என்பது அந்நாளில் வீட்டில் அல்லது அரண்மனை வளாகத்தில் அமைந்த பூசையறை என்பதைத்தான் குறித்தது. இன்றைக்கு நாம் தேவாரம் என்று குறிப்பிடும் பாடல்கள் அந்நாளில் திருமுறைகள் என்றுதான் வழங்கப்பட்டன. பார்க்க "கபிலக்கல்" டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.


காரி அதிகாலையிலேயே எழுந்து படுக்கையைச் சுருட்டுவதை நந்தா விளக்கின் மெல்லிய ஒளியில் கவனித்துவிட்ட அவளது அன்னை "என்ன ஆச்சரியமாக இருக்கிறதடி ! விடியற்காலையிலேயே எழுந்துவிட்டாய் !" என்று வினவினாள்.

"கெட்ட கனவு வந்து எழுப்பிவிட்டதம்மா !"

"அடிக்கடி கெட்ட கனா வருகிறது என்கிறாய்.... வீட்டில் தனியாக இருப்பதற்கு பயப்படுகிறாய்... தூக்கத்தில் ஏதேதோ அடிப்பேன் பிடிப்பேன் என்றெல்லாம் பிதற்றுகிறாய்... என்னடி ஆகிவிட்டது உனக்கு ? காளபடாரியார் கோயில் பூசாரியை வேண்டுமானால் மந்திரிக்கச் சொல்லட்டுமா அம்மா ?"

எனக்கு மந்திரிக்க வேண்டிய பூசாரி தஞ்சைச் சீமையிலல்லவா கல் போன்று உட்கார்ந்து கொண்டிருக்கிறார் ! என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் காரி. அன்னையிடம் அதனை மனம்விட்டுச் சொல்ல முடியவில்லை. ஆண்டார் வீட்டுக் கிழவியிடம் இன்றும் ஒரு அரை நாழிகையாவது புலம்பிவிட்டு வந்தால் சற்று மனம் ஆறுதலடையும் என்று தோன்றியது. கிழவிக்குக் காது சுத்தமாகக் கேட்காது. கண்பார்வையும் ஓரளவிற்குத்தான். காரியின் புலம்பல்களையெல்லாம் பார்த்துவிட்டு "வருத்தப்படாதே அம்மா ! விண்ணகரத்தாருக்கு நேர்ந்துகொள் - எல்லாம் சரியாகிவிடும் !" என்பதுதான் அவளுடைய ஒரே பதில். ஆண்பிள்ளைகளுக்குக் கல்நெஞ்சையும் பெண்களுக்கு இளகிய மனத்தையும் இறைவன் ஏன்தான் படைத்தானோ.... தான் இங்கு கிடந்து பைத்தியம் மாதிரி புலம்பிக்கொண்டிருக்கிறோம் - அவர் இப்போது தஞ்சையில் யாருடன் எங்கே சுற்றிக்கொண்டிருக்கிறாறோ....

சில திங்களுக்கு முன்னர் தஞ்சையின் கணிகையர் சேரியைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து காரிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய்விட்டது. வெளியூர் ஆட்களை அவர்கள் குறிவைத்து மடக்குகிறார்களாம். ஒன்றும் தெரியாத அபலை ஸ்த்ரீகளைப்போல் நடித்து அப்பாவி ஆண்களின் மனதைக் கலைத்து அவர்களைத் தங்களின்பின் அலையவைப்பதுதான் அவர்களின் ஒரே பொழுதுபோக்காம். "என் பின்னால் நான்கு பேர் !" "என் பின்னால் ஐந்து பேர் !" என்றெல்லாம் வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்வதுகூட சேரியில் வழக்கம்தானாம். தஞ்சையிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு இவர்களை நன்றாக அடையாளம் தெரியுமாதலால் அவர்களை நெருங்கக்கூட மாட்டார்களாம். வெளியூரிலிருந்து பிழைப்புக்காகவும் கல்விக்காகவும் தங்கிப் படிக்கும் இளைஞர்கள்தான் அவர்களின் இரையாம் ! காரிக்கு ஒரு கணம் அவளின் அத்தான் எவளோ ஒருத்தியின் பின் தன்னை மறந்து போய்க்கொண்டிருப்பதைப் போலவும் அவள் இருப்பதையெல்லாம் பிடுங்கிக்கொண்டுவிட்டு அவரை சொல்லொண்ணாத துன்பத்தில் ஆழ்த்திவிடுவதைப் போலவும் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது..... அப்படிப்பட்ட நினைப்பு தோன்றும்போதெல்லாம் அவளுடை உடல் லேசாக பயத்தில் வெடவெடக்கும்... சீச்சீ ! அவர் அப்படிப்பட்டவரல்ல... அந்த மாதிரி தகாத வழிகளுக்குப் போகாமல் நம்மைப் பற்றிய நினைப்பு காப்பாற்றும்....

நம்மைப் பற்றிய நினைப்பும் அவருக்கு உண்டா ? அப்படி இருந்தால் இத்தனை காலமாக ஒரு ஓலையாவது அனுப்பாமல் இருப்பாரா ? ஒழுங்காக விவசாயத்தை கவனித்துக்கொண்டு வீட்டோடு இருந்தவர் தஞ்சைச் சீமை வரை வீட்டை விட்டுப் பிரிந்து போவதற்குத் தானும் காரணமாகிவிட்டோமே என்பதுதான் காரியின் சொல்லமுடியாத வேதனை.


***********************************************************************************************


விளையாட்டு வினையாகிவிட்டது.

அவர்களுடைய குடும்பம் விவசாயக் குடும்பம். அவளுடைய தந்தை காரி ஈசுவரனுக்கு ஒரே தமக்கை. அந்தத் தமக்கை சிறு வயதிலேயே புண்ணியவதியாய்ப் போய்ச்சேர்ந்துவிட்டாள். அவளுடைய மக்கள்தான் அவளுடைய அத்தான்களான மாயன் காடனும் மாயன் வில்லியும். இருவரையுமே ஈசுவரன்தான் வளர்த்தார். சிறு வயது முதலே காடனுக்குக் காரி என்று பேசிவைத்து விட்டது. பருவமடைந்த பிராயம் முதன் அவன் நினைப்பாகவேதான் காரி வளர்ந்தாள். நட்பும் உறவுகளும் புகை போட்டு அவர்களின் நேசத்தை வளர்த்தது.

மாறன் காடனுக்கு விவசாயத்தில் நாட்டமில்லை. அவர்களுடைய குலமுறைக்குப் பொருந்தாத ஒரு ஆர்வம் அவனை ஆட்டிப்படைத்தது. அவன் சிறுவனாக இருந்தபோதுதான் திருவாலத்தூரில் தச்சுப்பணிகள் (12) துவங்கின. அதிலும் குறிப்பாக எழுத்தச்சர்களின் (13) பணி அவனை மிகவும் கவர்ந்துவிட்டது. சீரான கல்தரையில் விதவிதமான உளிகள் கொண்டு நிவந்தங்களையும் தேவதானங்களையும் (14) அவர்கள் அழகாகச் செதுக்கி வைப்பதை அவன் வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தப் பணி அவனை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.


(12) தச்சுப்பணி என்பது அந்நாளில் சிற்பம் மற்றும் கல் வேலைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. கல்தச்சர்களை கல்வெட்டுக்கள் அறிமுகப்படுத்துகின்றன. இந்நாளில் தச்சுவேலை என்பதை மரவேலை என்றே கொள்கிறோம்
(13) கல்வெட்டு பொளிப்பவர் என்பதாகக் கொள்க
(14) திருக்கோயில்களுக்குக் கொடுக்கப்படும் நிலங்கள் மற்றும் பிற தானங்கள்


தானும் அவர்களின் உளியை வாங்கி ஓரிரு இடங்களில் பொளித்துப் பார்த்தான்... தரை சேதமானதுதான் மிச்சம் ! தச்சர் இவனுடைய ஆர்வத்தைப் பார்த்துவிட்டு "தஞ்சாபுரிச் சீமைக்கு என்னுடன் வருகிறாயா தம்பீ !" என்று கேட்டார். அவனும் பிடிவாதமாகக் கிளம்ப நினைத்தான். கடைசியில் மாமன் ஈசுவரன் தடுத்தாட்கொண்டு விட்டார். வீட்டிற்கத் தலைப்பிள்ளை அவன்தானாம் ! அவன்தான் அவருக்குப்பின் நிலபுலன்களையெல்லாம் கவனித்துக்கொள்ள வேண்டுமாம். பொறுப்பற்று அவன் சீமைக்குக் கிளம்பிவிட்டால் அப்புறம் குடும்பத்தின் கட்டுக்கோப்பு குலைந்துவிடுமாம். ஊராரும் அவருடைய குரலுக்கு ஒத்தூதினார்கள். இவ்வாறாக என்னவெல்லாமோ சொல்லி அவனுடைய மனதைக் கலைத்து தன்னுடைய பிற்கால மருமகன் தச்சருடன் தஞ்சைக்குக் கிளம்பாமல் பார்த்துக்கொண்டார் காரி ஈசுவரன்.

காடனும் ஒரு வழியாக மனச்சமாதானம் செய்துகொண்டு விவசாயத்தில் ஈடுபட்டாலும் அந்த எழுத்தார்வம் அவனுள் உறங்கிக்கொண்டுதான் இருந்தது. பெரியவனானதும் சீமைக்குச் சென்று திரும்பும் வணிகர்களிடம் சொல்லி எழுத்தச்சர்கள் உபயோகிக்கும் பிரத்யேக உளியையும் சுத்தியலையும் தருவித்துக்கொண்டான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருவாலத்தூரின் குன்றுகளுக்குச் சென்று ஒரு ஓரத்தில் அமர்ந்து எழுத்துக்கள் ஓரிரண்டையாவது தன்னால் செதுக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பார்ப்பது வழக்கம். இது ஊராரின் கண்களுக்கு கிறுக்குத்தனமாகத்தான் பட்டது. கல் மீது உளி படும்போது எழும் சப்தத்தினால் இதனை இரகசிய முயற்சியாகவும் செய்து பார்க்கமுடியவில்லை. கேலிப்பேச்சுக்களைப் பொருட்படுத்தாமல் அவன் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருந்தான்.

ஒருநாள் மதியம் தென்கிழக்குக் குன்றின் உச்சிப்பாறையில் அமர்ந்து தன்னை மறந்து செதுக்கிக்கொண்டிருந்தான் காடன். திடீடென்று அடிவாரத்தில் காரியின் தலை தெரிந்தது. வேகாத வெய்யிலில் அவனுக்கான மதியக் கஞ்சியினை சுமந்துகொண்டு அவனை வயலில் காணாமல் ஊர் முழுவதும் சுற்றிவிட்டு மிகுந்த அலுப்போடு மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள் அவள். அவள் வந்திருப்பது தெரிந்த பின்னரும் அவளைக் கவனிக்காமல் தன்னை மறந்து கல் பொளித்துக்கொண்டிருந்த காடனைப் பார்த்து அவளுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது !

"அத்தான் ! வயல் வேலைகளை சரிவரக் கவனிக்காமல் இப்படிப் பித்துப் பிடித்து எந்நேரமும் கல்பொளித்துக்கொண்டிருந்தீர்களானால் நாம் உருப்பட்டாற்போல்தான் ! அப்புறம் எவனாவது நில புலன்களுடன் வரும் மூவேந்த வேளானுக்கு என் தந்தை என்னைக் கட்டிவைத்துவிடுவார் !" என்று பொரிந்து தள்ளினாள் காரி.

ஊரார் எத்தனையோ கேலிப்பேச்சுக்கள் பேசியபோது உண்டாகாத கோபமும் ரோசமும் காடனுக்கு அந்தக் கணத்தில் பொங்கிக்கொண்டு வந்துவிட்டன.

"காரி ! இந்த உளி மீது ஆணையாகச் சொல்கிறேன் ! இந்தத் தொழிலை தஞ்சைச் சீமைக்குச் சென்று சரிவரக் கற்றுக்கொண்டு நல்லதொரு எழுத்தச்சனாகத் திரும்புவேன் ! இல்லையேல் ஊருக்குத் திரும்பவே மாட்டேன். நான் வரும்வரை முடிந்தால் உன் தகப்பனைக் காத்திருக்கச் சொல். அல்லது நீ சொன்னபடி ஏதாவது ஒரு வேளானுக்குக் கழுத்தை நீட்டு - நான் தடுக்கமாட்டேன் !"

விடுவிடுவென்று வீட்டிற்கு வந்தவன் மாமனிடம் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லிவிட்டு காரியிடம் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டான் ! காரி பொங்கிப் பொங்கி முற்றத்தில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தும் அவனது மனது இளகவில்லை. "இப்படி இரக்கமில்லாமல் - தன்னுடைய வேண்டுகோளை மதிக்காமல் கிளம்புபவனை நினைத்து நாம் ஏன் அழவேண்டும் ?" என்றுதான் காரிக்கும் தோன்றியது.

ஆனால் நாள் செல்லச் செல்ல பிரிவு வேதனை அவளை வாட்டி வதைத்தது. காடனிடமிருந்து ஒரு செய்தியுமில்லை. ஊரின் கிணற்று மூலைகள், வயல் வெளிகளின் ஆலமரத்துச் சந்துகள், தென்னந் தோப்புக்கள் என்று எங்கு சென்றாலும் அவன் அவளிடம் ஆசையாக நடந்துகொண்ட இடங்களாகவே காட்சியளித்தன. எத்தனை நாட்கள்தான் விக்கி விக்கி அழுது கொண்டிருப்பது ? ஏக்கத்தை மனதின் ஒரு மூலையில் போட்டுப் புதைத்துவிட்டு வேலைகளை கவனிக்கலானாள் காரி.

ஆனால் தந்தையிடம் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லிவிட்டாள். "எனக்குத் திருமணம் என்று ஒன்று நடந்தால் அவருடன் தான் அப்பா ! இல்லையேல் கன்னி கழியாமலே காலத்தைக் கழிக்கிறேன் !". படிப்பும் நாகரீகமும் நிறைந்த பட்டினத்துப் பெண்களிடம் ஒருக்காலும் காணமுடியாத மனோதிடமும் உறுதியும் படிப்பறிவில்லாத அந்த கிராமத்துப் பெண்ணுக்கு இயல்பாக வாய்த்தது. காடனில்லாத வாழ்வை அவளால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. அவன் சீக்கிரம் திரும்பவேண்டும் என்பதற்காக வேண்டாத தெய்வமில்லை - நேராத நோன்பு இல்லை. ஆனால் தெய்வந்தான் இன்னும் கண்திறந்த பாடில்லை.


***********************************************************************************************


எழுந்து சாமியிடம் வேண்டிக்கொண்டுவிட்டு ஒரு வெண்கலப் பாத்திரத்தில் சாணநீர் கரைத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள் காரி. நல்ல வேளையாக அவள் வாயிலுக்கு வரும்போதே லேசாக வெளிச்சம் படியத்துவங்கிவிட்டதால் வாயிலில் காத்துக்கொண்டிருந்த அரக்கன் கிளம்பிப் போய்விட்டிருந்தான். பயமில்லாமல் நீர் தெளித்தவிட்டு சாணம் படிந்த இளம் மண்ணில் கோலம் போடத் துவங்கினாள். அவளுடைய கைகள் வளையவும் நெளியவும் மிக அழகானதொரு கோலம் மண்ணில் உருவாயிற்று.

முதலில் கிழக்கில் ஒரு கிளி தோன்றியது. அப்புறம் திசைக்கொன்றாக நான்கு கிளிகள் மளமளவென்று தோன்றின. கிளிகளை இணைக்கும் அலங்காரச் சங்கிலிகளை முடித்துக்கொண்டிருந்தவளுக்கு முன் குதிரைச் சேவகர்களான யவனர்கள் அணியும் இரு பாதக் குறடுகள் தோன்றின.

நிமிர்ந்தாள்.

வீட்டிற்கு முன் புதியவன் ஒருவன் நின்றான். தாடியும் மீசையும் கொண்டு அலுத்துக் களைத்த முகத்துடன்....

"யார் ஐயா நீங்கள் ?" என்று வினவினாள் அவள்.

அவளை சிறிது நேரமாவது கேலிசெய்யவேண்டும் என்கிற நோக்கத்தோடு மாறுவேடம் பூண்டு வந்திருந்தவன் பருவத்தின் சொல்லவொண்ணா வாளிப்பை உடலெங்கிலும் தேக்கி சித்திரக் கொடிபோல நிற்குக் காரியைக் கண்டு திகைத்துப்போய் நின்றான் ! புதியவனொருவன் தன்னை வெறித்து நோக்குவதைக் கண்டு ஏற்கனவே எரிச்சலிலிருந்த காரிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சாணப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கோபமாய் நிமிர்ந்தவள் விடியற்காலை ஆதவனின் கிரணங்களின் வெளிச்சத்தில் அந்தக் கண்களை அடையாளம் கண்டுகொண்டு விட்டாள் !

அவரா ? அவர்தானா ? நிஜமாகவே அவர்தானா ?

சட்டென்று வெட்கமும் துக்கமும் அவளைப் பிடுங்கித்தின்றன. கண்களில் சொல்லிவைத்ததுபோல் ஆனந்தக் கண்ணீர் அருவியாகக் கொட்டியது ! "ஓ!" வென்று அழுதுகொண்டே வீட்டிற்குள் ஓடினாள் அவள். "காரி ! காரி !" என்று காடன் கூப்பிட்டதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவனைப் பார்ப்பதைவிட தன்னுடை வேண்டுகோளையும் ஒரு பொருட்டாக மதித்து நிறைவேற்றிய தேவார தெய்வத்திற்கு நன்றிசொல்வதுதான் அவளுக்கு முதல்காரியமாகப்பட்டது.


***********************************************************************************************


மாயன் காடன் வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக அவனை ஊர்க்கோயிலுக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்று முடிவு செய்தாள் காரி. காரி ஈசுவரனுக்கும் தன் அக்காள் மகனுடன் கோயிலுக்கு வர ஆசைதான் - ஆனால் சின்னஞ்சிறுசுகள்... தனியாகச் சென்று வரப் பிரியப்படும் என்று புரிந்துகொண்டு அவர்கள் இருவரை மட்டும் கோயிலுக்கு அனுப்பினார். விபரம் புரியாமல் அண்ணன் வந்துவிட்ட சந்தோஷத்தில் அவர்களுடன் கூடக் கிளம்பிய சிறுவன் மாயன் வில்லியை தடுத்து நிறுத்துவதற்குள் அவருக்கு உன்பாடு என்பாடு என்றாகிவிட்டது !

காடன் கம்பீரமாக ஊருக்குத் தென்கிழக்கே அமைந்துள்ள குடைவரைகளை நோக்கிப் புறப்பட்டான். ஊர்மக்கள் அவனப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் - அவன் பழைய மாயன் காடன் அல்ல என்று வலியுறுத்தவேண்டும் - என்பதற்காக அவனுக்குத் தலைப்பாகையும் மெய்ப்பையையும் அணிவித்துக் கூட்டிக்கொண்டு வந்தாள் காரி. கோயிலுக்குள் நுழைந்தவுடன் மெய்ப்பையைக் கழற்றியாக வேண்டுமே.. அதற்கு ஒரு துண்டை மாத்திரம் போத்திக்கொண்டு வருகிறேனே...(15) என்று காடன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காரி பிடிவாதமாக இருந்தாள். அவளுக்கு ஊர்க்காரப் பயல்களைப் பற்றி நன்றாகவே தெரியும். காடன் திடீரென்று தஞ்சைக்குக் கிளம்பியவுடன் அவளிடம் என்னென்ன கேள்விகளெல்லாம் கேட்டார்கள் ! நான்கு வருடங்களாக அவள் பட்டுக்கொண்டிருக்கும் சித்திரவதை இவருக்குப் புரியவா போகிறது ? நேரிடையாகவும் ஜாடை மாடையாகவும் "அவன் திரும்பி வர மாட்டான் - நீ உன் மனதை மாற்றிக்கொள் !" என்பதாக எத்தனை உபதேசங்கள் ! எத்தனையெத்தனை பேச்சுக்கள் ! குறிப்பாக அந்த வாணியந்தெருவின் அன்னம்மை அன்று குளக்கரையில் என்னவெல்லாம் பேசினாள்.... இருக்கட்டும் ! அத்தனை பேருக்கும் இன்று இருக்கிறதடி சவுக்கடி....


(15) சாதாரணமாகவே பொதுமக்கள் அதிக ஆடைகளை அந்நாளில் உடுத்தவில்லை. பெரும்பாலும் அரையாடை மட்டும்தான். ஆண்கள் மேல்சட்டையை கோயிலுக்குள் கழற்றிவிட வேண்டும். இந்நாள்வரை இப்பழக்கம் கேரளத்தில் நடைமுறையில் உள்ளது.


பெருவீதிவழியாக ஊரக்காரர்கள் அத்தனை பேரும் பார்க்கும்படி காடனுடன் தனியாக திருமணத்திற்கு முன்பே நடந்து வருவதென்பது அவளுக்கு சிரமமாகத்தான் இருந்தது. வெட்கம் பிடுங்கித் தின்றது. என்றாலும் அவளைக் கேலிபேசிய ஊர்க்காரர்களின் முகத்தில் கரி பூச வேண்டும் என்கிற ஒரே நோக்கில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பெருவீதியில் நடந்தாள் அவள்.

அவர்கள் கிளம்பிய நேரம் உழுகுடிகள் வேலைக்குச் செல்லும் நேரம் - வெளியூருக்கு வாணிப நிமித்தமாகச் செல்லும் நாட்டார்கள் கோயிலுக்குக் கிளம்பும் நேரமும் அதுதான். அதனால் பெருவீதியில் கூட்டத்திற்குக் குறைவில்லை. அத்தனைபேரும் புதிய மனிதனொருவன் கம்பீரமாக நடைபழகுவதையும் அவனுக்குப் பின்னால் காரி பெருமிதமும் வெட்கமும் பொங்க நடப்பதையும் வியப்போடு பார்த்துக்கொண்டார்கள். வேலைக்குச் செல்லும் ஆண்கள் தத்தம் காரியங்களில் கண்ணாக இருந்ததால் அவர்களை அதிகம் கண்டுகொள்ளவில்லை - ஆனால் வீட்டின் சாளரங்களிலிருந்து பெருவீதியை எந்நேரமும் நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் பெண்டுகளின் பாடு வேறு மாதிரியிருந்தது.

வழக்கமாக சோகமே வடிவெடுத்து எந்த அலங்காரமும் செய்துகொள்ளாமல் குடத்தைத் தூக்கிக்கொண்டு குளத்திற்கு வரும் ஆலங்காரி இந்தக் காலை நேரத்தில் தைரியமாக அந்நியனொருவனுடன் அத்தனை பேரும் பார்க்கும்படி பெருவீதியில் போய்க்கொண்டிருப்பதா ? இதென்னடி கறையூர்க் குடும்பத்திற்கு வந்த கேடு ? என்பதாகப் பேசிக்கொண்டார்கள். காலை நேரத்தில் ஊருக்கு வண்டியில் வந்து சேர்ந்தவன் அவன்தான் என்பது தெரிந்தாலும் காரியை இத்தனை தைரியமாக அழைத்துச் செல்லும் அவன் யாராக இருக்கக்கூடுமென்று அவர்களின் மண்டை மீண்டும் உடைந்தது. அவன் போயும் போயும் கறையூர் வீட்டிற்குப் போய்ச்சேர்வானா - சத்திரத்திலேயே தங்கியிருக்கக்கூடாதோ - ஆலங்காரி சட்டென்று வந்த ஒரு பொழுதில் மடக்கிவிட்டாளே - என்று இளம் பெண்கள் மனதிற்குள் ஆதங்கப்பட்டார்கள். வேடிக்கை என்னவென்றால் அவர்களில் ஒருவருக்குக்கூட அவன் மாயன் காடனாக இருக்கக்கூடும் என்பது தோன்றவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவன் ஆலங்காரியைக் கட்டிக்கொள்ளப் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டவன் ! அவ்வளவுதான்.

கோயில் வளாகத்தில் காலை நேரப் பரபரப்பு காணப்பட்டது. மடைப்பள்ளியிலிருந்து இனிய சூடான பொங்கலின் வாசமும் அதன்மீது வழிந்துகொண்டிருந்த தூய நெய்யின் மணமும் கலந்து எழுந்தன. ஆழ்வாருக்குக் காலை நைவேத்தியம் தயாராகிக்கொண்டிருக்கிறது போலும்.

முகமண்டபத்திற்குள் நுழைந்தாலோ பொங்கலின் வாசமெல்லாம் மறந்துபோய் தூப தீபாராதனைகளின் மணம் மனதை ஆட்கொண்டது. அந்தக் காலை வேளையில் வணிகர்கள் தங்களின் பொற்கழஞ்சு மூட்டைகளை பெருமானின் காலடியில் வைத்துத் தருமாறு பட்டர் மதுசூதனரை வேண்டிக்கொண்டிருந்தனர்.

பட்டருக்குக் காரியை நன்றாகத் தெரியும். அதுதான் நாள்தவறாமல் வந்து ஆழ்வாரிடம் வேண்டிக்கொண்டிருக்கிறாளே ! சமயமிருக்கும்போதெல்லாம் அவர் காரிக்கு நம்பிக்கை ஊட்டுவார். ஒளிபதியாழ்வாரை சாதாரணமாக எடைபோட்டுவிடவேண்டாம் - ஒன்றுமறியாமல் படுத்துக்கொண்டிருப்பதுபோலத்தான் தெரியும் - ஆனால் பின்னணியில் நடக்க வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் நடந்துகொண்டிருக்கும் - அது அனைத்துமறிந்த அறிதுயில் - அதனால் மனதைத் தளரவிட்டுவிடாதே - என்றெல்லாம் அவர் தேற்றுவது வழக்கம்.

காரி நுழைந்தவுடன் முகமன் கூறும் விதமாக பட்டர் தலையை அசைத்தார். முகக் குறிப்பினாலேயே வந்திருப்பது யார் என்று வினவினார். காரி மகிழ்ச்சியுடன் அவரை நெருங்கி அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக "அவர் வந்துவிட்டார் !" என்றாள் மெல்லிய குரலில். அவளுடைய மகிழ்ச்சி பட்டருக்கும் தொற்றிக்கொண்டது. ஆழ்வாருக்கான அர்ச்சனைகளும் பிரபந்தப் பாசுரங்களும் வழக்கத்தைவிட உரத்த குரலில் பாடப்பட்டன.

ஆரத்தி காட்டும் சமயத்தில் உவச்சர்கள் மேளம், இடக்கை முதலியவற்றைக் கொட்டினார்கள். சங்கும் காளமும் ஊதப்பெற்றன. தன் வேண்டுகோளை நிறைவேற்றிவிட்டு ஒன்றுமறியாதவர்போல் பாம்பணையில் பள்ளிகொண்டிருந்தவனை நேசத்துடன் நோக்கினாள் காரி. பெருமாள் லேசாகத் திரும்பி அவளுக்கு மட்டும் தெரியும் வண்ணம் கண்களைச் சிமிட்டுவதுபோல அவளுக்குத் தோன்றியது.

கர்ப்பக்கிருகம் என்பதையும் மறந்து "களுக்!" கென்று சிரித்து வைத்தாள் காரி.


***********************************************************************************************


காடன் ஊர் திரும்பியதைக் கறையூர் வீடு மட்டுமல்லாமல் அந்த திருவாலத்தூர் முழுவதுமே கொண்டாடியது. சுற்றுவட்டாரத்தில் அந்தப் பகுதிகளில் எழுத்தச்சர்களே இல்லையென்கிற குறை நீங்கிவிட்டதாக ஊர்ப்பெரியவர்கள் பெருமை பேசிக்கொண்டார்கள்.

"நம் ஊரில் பல நிபந்தங்களைக் கல்லில் பொறிக்கவேண்டும் - வா ! வா ! என்று நான்கு வருடங்களாக அந்தத் திமிர் பிடித்த தஞ்சாபுரி எழுத்தச்சனிடம் ஓலையனுப்பிக்கொண்டிருக்கிறேன்... மரியாதைக்காகக்கூட ஒரு பதில் போடவில்லை. இனி அவன் தயவு நமக்குத் தேவையில்லை. நம்மிடமே ஆள் இருக்கிறதப்பா - இந்தப் பக்கம் தப்பித் தவறிக்கூட வந்துவிடாதே என்று முறிஎழுதவேண்டும் " என்று ஊர்ச்சபைப் பெரியவர் அதவத்தூரார் பஞ்சாயத்துக் கூட்டத்திலேய வெளிப்படையாகக் கூற ஊரே கைகொட்டிச் சிரித்தது.

"தலைமுறை தலைமுறையாக தற்குறிகளைப் (16) பெற்றெடுத்த குடும்பத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவன் ஒருத்தன் வந்துவிட்டானே ! அதுபோதும்..." என்று காரி ஈசுவரனார் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.


(16) அக்காலத்தில் எழுதப் படிக்கத்தெரியாத பலர் இருந்தார்கள். இவர்கள் கல்வெட்டுக்களில் தங்களைத் தற்குறிகள் என்றே குறித்துக்கொண்டார்கள். அவர்களின் சார்பில் படிப்புத் தெரிந்த வேறொருவர் ஒப்பமிடுவது வழக்கம்



***********************************************************************************************


ஆதவனின் கிரணங்கள் மெல்ல மேற்திசையில் மங்கிக்கொண்டிருந்தன. அந்த மயக்கும் மாலைவேளையில் தென்கிழக்குக் குன்றின் உச்சிப் பாறையில் அவனுக்கு மிகவும் பிடித்தமான இடத்தில் காடன் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனுடைய கரங்களில் தன் கரங்களைக் கோர்த்துக்கொண்டு அவனுடைய தோளில் முகத்தைப் புதைத்தபடி காரி எங்கோ வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள்.

"நம்முடைய திருமணம் நடக்குமா என்று எனக்கு பயமாக இருக்கிறது அத்தான். நீங்கள் வந்து ஒருவார காலமாகிறது. தந்தை இன்னமும் திருமணப் பேச்சை எடுக்கவேயில்லை. நீங்கள் ஊருக்குத் திரும்பவே மாட்டீர்கள் என்கிற நினைப்பில் அவர் எனக்குத் தெரியாமல் ஏதாவது ஏற்பாடுகள் செய்திருப்பாரோ - எவருக்காவது வாக்குக் கொடுத்திருப்பாரோ என்று சந்தேகமாக இருக்கிறது...."

"அதெல்லாம் ஒன்றுமில்லை . அப்படி ஏதாவது இருந்தால் இந்நேரம் என்னிடமாவது அதனைச் சொல்லியிருப்பார்- வீணாக மனதைக் குழப்பிக்கொள்ளாதே. அதோபார் - நான்கு வருடங்களுக்கு முன் தொழில் தெரியாமல் நான் பொளித்த எழுத்துக்கள்.... இப்போது பொளித்துக் காட்டட்டுமா ?"

"உங்கள் பணியில் பல்வேறு ஊர்களுக்குச் செல்லவேண்டுமாமே - எனக்கு உங்களை மறுபடியும் பிரிந்து தனியாக இருப்பதற்கு பயமாக இருக்கிறது..."

"காரி ! என்னுடைய தொழில் திறமைகளையெல்லாம் உன்னிடம் காட்டவேண்டுமென்று ஆசை ஆசையாய் ஓடி வந்தேன் - நான் தப்புந் தவறுமாய் கல் பொளித்த அதே பாறையில் "மாயன் காடனும் ஆலங்காரியும் அமர காதலர்கள் !" என்று உன்னிடம் பொளித்துக் காட்டவேண்டுமென்று எத்தனையோ ஆசைப்பட்டேன். நீ என்னவென்றால் நான் கற்றுக்கொண்டு வந்ததைப் பற்றி எதுவும் கேட்காமல் ஏதோ வீண் பயங்களை மனதில் வளர்த்துக்கொண்டிருக்கிறாய் !"

"படிப்புக் கற்றாலும் கற்றீர்கள் - நன்கு வட்டணையாகப் (17) பேசுகிறீர்களே ! நான் நமது திருமணம் நன்கு நடைபெறவேண்டுமே என்று கவலையில் இருக்கிறேன் - நீங்களோ அமரம்.. காதல்..என்று என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள்...தை பிறப்பதற்குள் எல்லாம் நல்லபடியாக முடிவாக வேண்டுமே என்று பயமாக இருக்கிறது..."


(17) வட்டணையை ஒருவகை ஆடல் நடையாக அப்பர் பெருமான் குறிப்பிடுகிறார்


காடனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

"நீ இப்படித் தொட்டதற்கெல்லாம் பயந்துகொண்டிருந்தால் அப்புறம் நான் நம் காதலைப் பற்றிப் பொளிக்காமல் "எப்பொழுது பார்த்தாலும் இந்த ஆலங்காரிக்கு பயந்தான்" என்பதுபோல எதையாவது இந்தப் பாறையில் எழுதிவைத்து விடுவேன்.. !"

"அதையுந்தான் செய்யுங்களேன் !" என்றாள் காரியும் வீம்புக்கு.

அவன் சட்டென்று உளியைக் கையில் பிடித்தான். ஒரு கணம் - ஒரே ஒரு கணம் -அந்த வித்தையை படிப்படியாகப் பொறுமையோடு கற்றுத்தந்த குருவை மனதில் வரித்தான். அடுத்த கணம் அவனுடைய கரங்கள் உளியின் மூலம் அந்தப் பாறையோடு பேசின. மளமளவென்று ஐந்து நிமிடங்கள் முடிந்தபின் அழகிய அக்கால எழுத்துக்கள் அந்தப் பாறையில் இடம்பெற்றுவிட்டன !

வைத்தகண் வாங்காமல் வியப்புடன் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் காரி. உளியைப் பிடிப்பதற்கே எத்தனை சிரமப்படுவார் ! இப்போது என்னவென்றால் பாறை ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டதுபோல் மெளனமாக இருக்கிறது... சப்தம்கூட அத்தனை எழவில்லை... படபடவென்று பொளித்துவிட்டு சிரித்தபடி நிற்கும் காடனைக் கட்டிக்கொண்டாள் காரி.

"பாறையில் என்ன எழுதியிருக்கிறீர்கள் அத்தான் ?"

"கறையூர் ஆலங்காரிக்கு...."

"என்ன ! என்னுடைய பெயரையா கல்லில் பொளித்துவிட்டீர்கள் ? நிஜமாகவா ? இப்படியா இருக்கும் என் பெயர் ?"

"ஆமாம் - இதோ இந்த எழுத்திலிருந்து இந்த எழுத்துவரை உன் பெயர் !"

"...அப்புறம்..?"

"என்ன அப்புறம் ?"

"என் பெயருக்கு அப்பால் என்னவோ எழுதியிருக்கிறதே - அது என்ன ?"

அவன் சற்று தயங்கினாற்போல் தெரிந்தது.

"அ...அதுவா... கறையூர் ஆலங்காரியைப் போல் புத்திசாலிப் பெண் இந்த உலகத்திலேயே கிடையாது ! என்று எழுதியிருக்கிறேன் !"

அவள் செல்லமாக அவன் மார்பில் குத்தினாள்... "பொய் ! கறையூர் ஆலங்காரிக்கு...என்று சொன்னீர்கள். இப்போதோ வேறுவகையாக மாற்றிச் சொல்கிறீர்கள் !"

அவன் சிரித்தான்.

"கறையூர் ஆலங்காரிக்குப் பிச்சும் பிராந்தும் அமனி ! என்று எழுதியிருக்கிறேன்..."

"அப்படியென்றால் என்ன அர்த்தம் ?"

"ஆலங்காரிக்கு எப்போதும் பயமும் பித்தும்தான் வழி ! வேறொன்றும் அவளுக்குத் தெரியாது என்று அர்த்தம் !"

"நிஜமாகவே அப்படியா எழுதிவிட்டீர்கள் ?"

"ஆமாம் !"

காரிக்கு சட்டென்று அழுகை வந்துவிட்டது ! "ஓ! வென்று பெருங்குரலெடுத்து அழத்துவங்கிவிட்டாள் அவள்.

"அடடா - நினைத்தால் அழுகிறாய் - நினைத்தால் சிரிக்கிறாய் ! ஊரார் எவராவது பார்த்தால் தவறாக எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் !"

"பின் நீங்கள் மட்டும் என்னைப் பற்றி இப்படி எழுதி வைக்கலாமா ?" என்றாள் காரி அழுகையினுடே.

"இதோ பார் ! ஊரில் நம்மைத்தவிர வேறு எவரும் இந்த மொட்டைப் பாறையின் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஆட்டுக்கார மன்றாடிச் சிறுவர்கள்தான் வருவார்கள். அவர்களுக்கு இதைப் படிக்கத் தெரியாது. ஆக இதனை ஒருவரும் கண்டுகொள்ளப் போவதில்லை......"

"என்ன இருந்தாலும் நீங்கள் இப்படிச் செய்திருக்கக்கூடாது...." என்று தொடர்ந்து அழுகைப் புராணம் படித்த காரியை ஒருவாறு தேற்றி அழைத்துக்கொண்டுபோனான் அவளுடைய முறை மாப்பிள்ளையான மாயன் காடன்.


***********************************************************************************************


மேற்கொண்டு இந்தக் கதையின் முடிவில் திடுக்கிடும் சம்பவங்களையோ அல்லது எதிர்பாராத ஓஹென்றி வகைத் திருப்பங்களையோ (O Henry's Twist) எதிர்பார்ப்பவர்கள் ஏமாந்து போவார்கள். இந்த மாதிரி சமாச்சாரங்களெல்லாம் என்போன்ற சில சிறுகதை எழுத்தாளர்கள் செய்யும் வீண் சாகசங்கள். நிஜ வாழ்வில் பெரும்பாலான சம்பவங்கள் சாதாரணமாக / சுமுகமாக நடந்தேறி விடுகின்றன. அதனால்....

"ஆலங்காரி பயந்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. ஒரு சுபயோக சுபதினத்தில் அவளுக்கும் மாயன் காடனுக்கும் நல்லபடியாகத் திருமணம் நடந்தேறியது. பிள்ளை குட்டிகள் பெற்றுக்கொண்டு அவர்கள் நெடுங்காலத்திற்கு சுகமாக வாழ்ந்தார்கள்"

என்று கதையை முடிக்கலாமென்று நினைக்கிறேன்.

உங்களுக்கு இதிலொன்றும் வருத்தமில்லையே ?

(முற்றும்)





கல்வெட்டுச் செய்தி




மலையடிப்பட்டி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனுருக்கு தெற்கே பதினெட்டு கிமீ தூரத்தில் அமைந்துள்ள சிறு கிராமம்.

ஊரின் தென்கிழக்கே அமைந்துள்ள சிறு மலைக்குன்றுகள். அந்தக் குன்றுகளை அகழ்ந்து வடிக்கப்பட்டிருக்கும் முத்தரையர்கால சிவ - விஷ்ணு குடைவரைகள்.....

முத்தரையர்களின் கலைப்பாணியை இன்னமும் நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது. கலைப்பாணியை விடுங்கள், அவர்களைப் பற்றிய ஆய்வும் புத்தகங்களும் கூட அதிக அளவில் கிடைப்பது கிடையாது. இது தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்த பெரும்பாலான சிற்றரசுகளுக்கும் பொருந்தும்.

முத்தரையர்களின் கலைப்பாணியைப் பறைசாற்றும் குடைவரைகளுள் முக்கியமானவை நார்த்தாமலை பழியிலி ஈஸ்வரம், குன்றாண்டார் கோயில் குடைவரை மற்றும் ஆலத்தூரான மலையடிப்பட்டி இரட்டைக் குடைவரைகள். ஆலத்தூர் மகாதேவர் குடைவரை முத்தரையர் குவாவன் சாத்தனால்தான் அகழப்பட்டதது என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுள்ளது. இக்கதையில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களான மாறன் காடன், மாறன் வில்லி, காரி ஈசுவரன், காரி பொதுவன் ஆகிய அனைவருமே இக்குடைவரையின் கல்வெட்டொன்றில் இடம்பெற்றுள்ளனர்.

விஷ்ணு குடைவரையும் முத்தரையர் காலத்தியதுதான் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் இல்லை. இங்கு கிடைக்கும் மூத்த கல்வெட்டுக்களில் சோழர்கால இராஜகேசரிக் கல்வெட்டே பழமையானது. தமிழ்நாட்டில் கிடைக்கும் பழமையான சயனத்திருக்கோலங்களில் ஒளிபதி மூர்த்திக்கு தனி இடம் உண்டு. மாமல்லபுரம் - நாமக்கல் - சிங்காவரம் - திருமெய்யம் முதலான குடைவரை சயன மூர்த்திகளோடு இந்த மூர்த்தம் ஒப்பு நோக்கத்தக்கது. இக்கோயில்களில் காணப்படும் சப்தமாதர், கணபதி, வாயிற்காவலர் முதலியோரும் படிமவியல் பார்வையில் (Iconographic Viewpoint) மிகுந்த முக்கியத்தவம் பெறுகிறார்கள்.

குடைவரைகள் அமைந்துள்ள தென்கிழக்குக் குன்றின் உச்சிப்பாறையில் ஏறத்தாழ எட்டாம் நூற்றாண்டின் அமைதியுடன் காணப்படும் கல்வெட்டொன்று மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையத்தால் கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் இன்னமும் நம்மால் சரிவரப் புரிந்துகொள்ளமுடியாத கல்வெட்டுக்களுள் இது முக்கியமானது.

திருக்கோயில் - மலையடிப்பட்டிக் குடைவரைகள்

இடம் - குடைவரைகள் அமைந்துள்ள தென்கிழக்குக் குன்றின் உச்சிப்பாறை

காலம் - பல்லவ தந்திவர்மர் / முத்தரையர் (கி.பி. எட்டாம் நூற்றாண்டு)

கல்வெட்டு முதன்முதலில் வெளியான இதழ் - வரலாறு இதழ் 3

கல்வெட்டுப் பாடம்


1 கறையூர் ஆலங்காரி
2 க்கு பிச்சும் பிராந்
3 தும் அமனி


பொருள் - கறையூர் ஆலங்காரிக்கு பித்தும் அச்சமுமே வழியாக அல்லது முடிவாக உள்ளன

அமனிக் கல்வெட்டு என்று அழைக்கப்படும் ஆலங்காரிக் கல்வெட்டை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை முன்னணி ஆய்வாளர்களுக்கு அனுப்பிப் பொருள் கேட்டும் இன்னமும் முழுமையான முடிவான பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கல்வெட்டறிஞர் திரு.ஐராவதம் மகாதேவன் ஆலங்காரியின் பைத்தியமும் மனக்குழப்பமும் இங்கே தீர்ந்தன - முடிந்தன - என்பதாகப் பொருள் கண்டுள்ளார். மேலும் இது சமண மத வழக்காறு போலத் தோன்றுகிறது என்றும் சொல்கிறார். இவருடைய கருத்துக்களும் பிற அறிஞர்களின் கருத்துக்களும் வரலாறு ஆய்விதழ் - 4ல் இடம்பெற்றுள்ளன.

அமனிக் கல்வெட்டுக்கு அருகில் "இன்னவென்று இனம் காண முடியாத சில எழுத்துக்கள்" இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் (பார்க்க வரலாறு ஆய்விதழ் - 4, "மலையடிப்பட்டி குடைவரைகளும் கல்வெட்டுக்களும்" கட்டுரை). மாறன் காடன் தஞ்சைக்குச் சென்று முறையாக கல்வெட்டு செதுக்கும் கலையைக் கற்கும்முன் பொளித்த எழுத்துக்களாக அவை இருக்கலாமோ என்னவோ !

பின்குறிப்பு - விசலூர், மலையடிப்பட்டி மற்றும் குன்றாண்டார் கோயில் குடைவரைகளுக்கு முனைவர் கலைக்கோவன் மற்றும் முனைவர் நளினியுடன் வரலாறு டாட் காம் குழுவைச் சேர்ந்த கமல், லாவண்யா மற்றும் லலிதா - சென்ற பயணம்தான் கோயில் கட்டுமானங்களையும் கல்வெட்டுக்களையும் முறையாகப் பயிலத்தொடங்கிய பயணம் என்பது எண்ணி மகிழத்தக்கது. இது நடந்து நவம்பர் 2003ல் - சரியாக முன்று வருடங்களுக்கு முன்னால்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.