http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 29
இதழ் 29 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2006 ] ஓவியர் சில்பி சிறப்பிதழ் ] இந்த இதழில்.. In this Issue.. |
திருக்கொடுங்குன்றம் என்று கல்வெட்டுகளாலும் இலக்கியங்களாலும் புகழப்படும் பாரி வள்ளலின் பறம்புமலையே இன்று பிரான்மலையாக பெயர் மாறி வழங்குகிறது. திருச்சிராப்பள்ளியிலிருந்து சரியாக எண்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இவ்வூரையடையத் திருச்சிராப்பள்ளி மேலூர்ச் சாலையில் பயணித்துப் பள்ளப்பட்டியருகே கிழக்கில் பிரியும் வைரவன் சாலையில் ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் செல்லவேண்டும். மிகப்பெரும் முகடுகளுடன் ஓங்கி உயர்ந்திருக்கும் மலையின் தென்முகடொன்றின் கீழ்தான் திருக்கொடுங்குன்றத்து ஈசர் குடிகொண்டுள்ளார். அவர் இருக்கும் குடைவரையின் மேலே செங்கற் கட்டுமானமாய் நாகர தளங்கள், வேசர கிரீவம், சிகரம், தூபி.
பிரான்மலைத் திருக்கோயிலின் நுழைவாயில் எளிய அமைப்புடன் உள்ளது. இதனுள் நுழைந்ததும் நேரடியாக மேற்செல்லப் படிக்கட்டுகள் தொடங்குகின்றன. இடப்புறத்தே, அடிவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் இறைவன்கோயில், திருச்சுற்றும் விமானமுமாய்க் காட்சிதருகிறது. விமானத்தின் முன் பிற்கால மண்டபங்கள். இங்கிருந்தும் மேலே செல்ல வழிகள் உள்ளன. ஒன்று பாறை வழி. மற்றொன்று படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. இந்த இறைவன் கோயிலில் வாழும் மயில் பார்க்க ரம்மியமாக இருந்தாலும் வருபவர்களைக் கொத்துவதில் சுகம் காண்கிறது. மனிதர்களைத் துரத்தும் இந்த அதியச மயில் பாஞ்சாலங்குறிச்சிப் பிறப்புப் போலும். முதற்படிவரிசை ஏறியதும் அகன்ற மேடை போலப் பாறைத்தரை விரிந்துள்ளது. இங்கிருந்து பார்க்கும்போது நேர் கீழே இடப்புறத்தில் சுனையொன்று ஊர்மக்களுக்குப் பழமரமாய் உதவுவதைக் காணலாம். சுற்றிலும் கிராமத்து எழில். பக்கங்களில், வளரும் மலைப்பாறைகள், நீலவானம். காவற்காரர் வந்து இந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கோபுரத்தின் வாயிற்கதவுகளைத் திறந்ததும் மீண்டும் மேலேறும் பணி தொடங்குகிறது. இந்தக் கோபுரமும் இதைச் சுற்றியமைந்துள்ள மதிற்சுவரும் பிற்பாண்டியர் பணிகள் என்பதற்கு இங்குள்ள கல்வெட்டுகளே சான்று. அனைத்துக் கல்வெட்டுகளும் சுண்ணாம்புப் பூச்சில் சுகமின்றி எழுத்துக்களைச் சிறிது சிறிதாக உதிர்த்துக் கொண்டிருக்கின்றன. முன்னோர் ஆவணங்களைச் சிதறடிக்கும் இந்தச் சுண்ணாம்புப் பண்பு தமிழ்நாட்டுக் கோயில் நிர்வாகத்தை விட்டு எப்போது அகலும் என்பதே தெரியவில்லை. பல படிகள் ஏறியதும் மீண்டும் தரையமைப்புக் காணும் பாறைவெளியில் இடப்புறம் தென்திசைக் கடவுளின் திருமுன்னும் அடுத்து இப்பகுதியில் பெரும்புகழ் பெற்றுள்ள பைரவர் திருமுன்னும் காட்சிதருகின்றன. கொடுங்குன்றத்தார் வலப்புறத்தே உயரத்தில் இருப்பதால் மீண்டும் படிக்கட்டுகளின் துணையோடு மேலேறும் பணி. கல்வெட்டுகள் எண்ணெய் வண்ணத்தில் மன்றாடிக்கொண்டிருக்கும் சுவர்களோடமைந்த பெருமண்டபம் முதல்நிலையாய் வரவேற்கிறது. இங்கிருந்து, கொடுங்குன்றத்தார் திருமுன் காண மீண்டும் சில படிகளுடன் ஒரு மேடை. இம்மேடைவாயில், கொடுங்குன்றத்தார் திருமுன்னின் முன்னமைந்துள்ள தேவசபைக்குள் நம்மை அனுப்பிவைக்கிறது. இந்தத் தேவசபையின் விதானம் முழுவதும் பிற்பாண்டியர் சிற்பங்கள். நன்கு திட்டமிட்டுச் சிறுசிறு சதுரங்களாகப் பிரிக்கப்பட்ட இடஅமைப்பில், பிற்பாண்டியர் காலச் சமுதாயப் பண்பாட்டுப் படப்பிடிப்புகளாய் இச்சிற்பங்கள் அமைந்துள்ளன. வெள்ளி வண்ண எண்ணெய்ப்பூச்சில் இவ்விதானச் சிற்பங்கள் கூர்மையிழந்திருந்தாலும் இவற்றின் வரலாற்றுத் தன்மையைக் குறைத்து மதிப்பிடமுடியாது. கரணக்கோலங்கள், நதிகளின் நடப்பு, இசைக்கருவிகளின் வளர்ச்சி, எண்திசைக் காவலர்களின் அணிவகுப்பு, முனிவர்கள், இறைவிளையாடல்கள் என எத்தனை வரலாற்று வளங்கள்! மண்டபத்தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் எண்ணெய் வண்ணப்பூச்சில் குளித்துக் களையிழந்துள்ளன. சபையின் வடபுறம் தளம் அமைத்து நால்வர் திருமேனிகளைத் தென்பார்வையாக எழுந்தருள வைத்துள்ளனர். இந்தத் தேவசபையின் கிழக்கில் பெரிதாய் விரியும் செவ்வக மண்டபம் தெற்கிலும் வாயில் பெற்றுள்ளது. இதன் கிழக்குச் சுவரில் பிரான்மலைக் காற்றை அள்ளிவரும் சிறு சாளரம், ஏறிவந்த களைப்பையகற்றிச் சுகம் தருகிறது. வடசுவரருகே தளம் அமைத்து ஆடவல்லான் திருமுன்னாக்கியுள்ளனர். முன்றில் தேவசபையின் மேற்கிலுள்ள வாயில் குடைவரைக்கு முன்னுள்ள மண்டபத்துள் அநுமதிக்கிறது. இம்மண்டபத்தின் வட, தென், கிழக்குச் சுவர்கள் வெறுமையாக உள்ளன. மண்டபத்தின் மேற்கில் கட்டப்பட்டுள்ள முன்றில் வண்ணப்பூச்சில் களையிழந்த நிலையில் குடைவரைக்கு வழிவிடுகிறது. உபஉபானம், உபானம், பெருந்தாமரையிதழ்களாய் மலர்ந்த ஜகதி, தாமரை வரிகளால் அணைக்கப்பெற்ற உருள்குமுதம், கம்புகள் தழுவலில் பாதங்களுடன் அமைந்த கண்டம், கூடுகள் பொருந்திய கபோதம், பட்டிகையென 62 செ. மீ. உயரத்துடன் கபோதபந்தத் தாங்குதளமாய் அமைந்த முன்றில் மேடையில் நான்கு பெரும் உருளைத்தூண்கள். இவற்றின் மேலமர்ந்த போதிகைகள் பூமொட்டு நாணுதல்களை இறக்கியபடி மதலைகளால் உத்திரம் தாங்க, மேலே வாஜனம், வலபி, கூரையின் நீட்டலாய்க் கபோதம். மண்டபத்திலிருந்து முன்றிலையடைய தென்புறம் இரண்டு படிகள். வடபுறம் ஒரே படி. முன்றிலின் தென்புறத்தே கல்லில் வடித்த இறைவன், இறைவி சிற்பமொன்று சுவரோடு பதிக்கப்பெற்ற நிலையில் இருத்தப்பட்டுள்ளது. முன்றிலின் வடபுறத்தே மண்டப மேற்குச் சுவரைப் பாறையின் பிதுக்கத்தோடு இணைத்துப் பொருத்தியுள்ளனர். முன்றில் மேடையின் வடபுறத்தே இரண்டு பெரும் குத்துவிளக்குகள். அவற்றின் வெளிச்சத்தில்தான் இறைவனைக் காணமுடியும். குடைவரை கருவறை, முகமண்டபம், முகப்பென அமைந்திருக்கும் குடைவரையினுள் நுழைய, மண்டபத்தின் மேற்குச் சுவரில் முன்றில் மேடையின் பின்புறத்தே வாயிலமைத்துள்ளனர். 72 செ. மீ. அகலமும் 1. 44 மீ. உயரமும் தொண்டுள்ள இவ்வாயில் பக்கநிலைகளும் மேல், கீழ் நிலைகளும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. முகப்பு நடுவில் முழுத்தூண்களேதுமின்றி, பக்கச் சுவர்களை ஒட்டிய உறுப்புவேறுபாடற்ற இரு நான்முக அரைத்தூண்களை மட்டுமே கொண்டு உருவாகியுள்ள முகப்பின் தென்வடல் நீளம் 2.28 செ.மீ. இவ்வரைத்தூண்கள் போதிகைகளின்றித் தாங்கும் உத்திரத்தின் மேல்விளிம்பையொட்டியக் கூரையைத் தழுவியவாறு தென்வடலாக ஓடும் வாஜனம் சிறு சதுரப்பட்டியாகக் காட்டப்பட்டுள்ளது. வாஜன விளிம்பிலிருந்து 17 செ. மீ. முன்னோக்கி நீளும் சமன் செய்யப்பட்ட கூரை முன்மண்டப மேற்குச் சுவருடன் நன்கு இணைக்கப்பட்டிருப்பதால் கபோத அமைப்புக் கொண்டுள்ளதா என்பதை அறியக்கூடவில்லை. முகப்பின் பக்கச் சுவர்கள் அரைத்தூண்களை ஒட்டி 26 செ. மீ. அளவிற்கு இருபுறத்தும் கிழக்கில் பரவி முன்மண்டபத்தின் பின்சுவரில் ஐக்கியமாகின்றன. முகமண்டபம் கிழக்கு மேற்காக 46 செ. மீ. அகலமும், தென்வடலாக 2. 36 மீ. நீளமும் கொண்டு 1. 92மீ உயரச் செவ்வக அமைப்பாய்க் குடையப்பட்டுள்ள முகமண்டபத்தின். தென், வடபக்கச் சுவர்களும், கிழக்குச் சுவரும் சந்தனம் பூசப்பெற்று வெறுமையாகக் காட்சிதருகின்றன. மண்டபத்தின் பின்சுவர் 11 செ. மீ. உயரமுள்ள உபானத்தின் மேல் சற்று உள்ளடங்கிய நிலையில் தொடங்குகிறது. இதன் நடுவில் திறக்கப்பட்டுள்ள கருவறை வாயில் உபானத்திலிருந்து 1.60 மீ. உயரமும், 70 செ. மீ. அகலமும் கொண்டமைந்துள்ளது. மேல், கீழ் நிலைகளும் பக்கநிலைகளும் பெற்றுள்ள இவ்வாயிலை அணைவு செய்தமைந்துள்ள உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள், உபானத்தின் மீது நின்றபடி பட்டையிட்ட தரங்கப் போதிகைக் கைகளால் உத்திரம் தாங்குகின்றன. முகமண்டப மேற்குச் சுவர், வடதென் சுவர்களைத் தொடுமிடத்து, இதே போன்ற, உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள், உபானத்தின் மீதெழுந்தபடி பக்கத்திற்கொன்றாய் அமைந்து, பட்டையிட்ட தரங்கப் போதிகைக் கைகளுடன் உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தின் மேல் காட்டப்பட்டுள்ள சிறுவாஜனம் முகமண்டபத்தின் நாற்புறத்தும் தொடர்கிறது. கருவறை வாயிலின் இருபுறத்துமுள்ள இவ்அரைத்தூண்களின் இடையே பக்கத்திற்கொன்றாய் அமைந்துள்ள தென், வட கோட்டங்களில் துவாரபாலகியர்கள், பக்கத்திற்கொருவராய் நின்ற கோலத்தில் சுதையுருவங்களாய் அமைக்கப்பட்டுள்ளனர். கருவறை தென்வடலாக 2.03 மீ. அளவும் கிழக்கு மேற்காக 1. 07 மீ. அளவும் 1. 87மீ. உயரமும் கொண்டமைந்துள்ள கருவறையின் கூரையும் வட, தென் சுவர்களும் வெறுமையாக உள்ளன. பின்சுவரையொட்டிக் கருவறைத் தரையிலிருந்து 23 செ. மீ. உயரத்தில் அகலம் குறைந்த பின்னாளைய தளமொன்றும், அதன் பின்னே அதிலிருந்து 32 செ. மீ. உயரத்தில் கருங்கல் மேடையொன்றும் உள்ளன. இம்மேடையின் மீதே, இறைவன் மங்கைபாகராகவும் இறைவி தேனம்மையாகவும் பேருருவினராய் அமர்ந்துள்ளனர். கற்பூர ஒளியில் மட்டுமே காணவேண்டியிருக்கும் இத்திருமேனிகள் எழிலார்ந்தவை. கருமையான வண்ணப்பூச்சில் உள்ள இவற்றின் தோற்றம், மஞ்சள் வண்ணச் சுவர்களின் பின்னணியில் கற்பூர ஒளியின் ஆரஞ்சு நிறத்தில் மின்னிக் கண்களில் நிறைகின்றன. சிற்பங்கள் 1. முன்றில் மேடையிலுள்ள இறைவனும் இறைவியும் கருவறைச் சிற்பத்தின் நகலென்று கூறப்படும் இதற்கும், கருவறைச் சிற்பத்திற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. இச்சிற்பத்தில் மேடைமீதமர்ந்துள்ள இறைவன் இடக்காலை மேடைமீது கிடத்தி, வலக்காலைக் கீழிறக்கிச் சுகாசனத்தில் உள்ளார். வலக்கை தொடைமீதுள்ளது. இடக்கை உயர்ந்து இன்னதென அடையாளப்படுத்தமுடியாத பொருளொன்றைப் பிடித்துள்ளது. தலையில் சடைமகுடம். செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். மார்பில் உபவீதமாய் முப்புரிநூல். கழுத்தில் சரப்பளி. உதரபந்தமும் காட்டப்பட்டுள்ளது. தோள், கை வளைகளும் உள்ளன. இடையில் அரைக்கச்சு இறுக்கும் சிற்றாடை. இறைவனின் இடப்புறம் அமர்ந்துள்ள தேவி கரண்டமகுடம் அணிந்துள்ளார். செவிகளில் கடிப்புவகைத் தோடுகள். கழுத்தில் சவடி. முழங்கைகளில் கடகவளைகளும் மணிக்கட்டுகளில் வளையல்களும் உள்ளன. அம்மையின் இடக்கால் கீழே தொங்கவிடப்பட்டுள்ளது. வலக்கால் மடக்கியநிலையில் மேடைமீதுள்ள இறைவனின் இடத்தொடைமீது இருத்தப்பட்டுள்ளது. இறைவியின் இடக்கை தொடைமீதிருக்க, வலக்கை வலத்தொடைமீது முஷ்டி முத்திரையிலுள்ளது. இளமைநலம் பொருந்திய மார்பகங்கள் கச்சின்றி உள்ளன. 2. துவாரபாலகியர் முகமண்டப மேற்குச் சுவர்க் கோட்டங்களில், கருவறை வாயிலின் இருபுறத்தும் நிற்கும் துவாரபாலகியரைக் கோயிலார் துவாரசக்தியென்கின்றனர். சுதைவடிவினரான இவர்களின் கருவறையொட்டிய கைகள் தாமரை மலர்களை ஏந்த, பக்கச் சுவர்களையொட்டிய கைகள் கடியவலம்பிதத்தில் உள்ளன. சடைமகுடமும் பனையோலைக் குண்டலங்களும் பட்டாடையும் தோள், கை வளைகளும் கழுத்தணிகளம் அணிந்துள்ள இத்துவாரபாலகியரின் எடுப்பான மார்பகங்களில் கச்சணிவிக்கப்பெற்றுள்ளது. 3. மங்கைபாகர் இறைவன் சுகாசனத்தில், இடக்காலை மடக்கி மேடைமேல் கிடத்தி, வலக்காலைக் கீழேயுள்ள படிக்கட்டில் பாதம் பொருந்துமாறு இறக்கியுள்ளார். பின்னால் முத்துப்பதித்த இருக்கை விரிப்புக் காட்டப்பட்டுள்ளது. சுதைமேனியென்பதால் அலங்காரங்களுக்கு அளவில்லை. பாதங்களில் தாள்செறிகள். தலையில் சடைகளின் மீது குமிழ்வைத்த கிண்ணத்தைக் கவிழ்த்தாற் போன்ற சடைமகுடம்; சடைகளில் இருபுறத்தும் நெருஞ்சிப் பூக்கள். நெற்றி முகப்பில் பதக்கமும் முத்து வடமும். நெற்றிக் கண்ணமைந்த திருமுகத்தில் இளகிய சிறுநகை. செவிகளில் பளபளக்கும் மகரகுண்டலங்கள். கழுத்தில் ருத்திராக்கமாலையுடன் பதக்கமிட்ட மாலைகள் இரண்டு. இருபுறமும் முத்துத் தைத்த கச்சை போலவுள்ள முப்புரிநூல் நிவீதமாக அணியப்பட்டுள்ளது. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் உதரபந்தம். இடையில் அரைக்கச்சால் அணைக்கப்பட்ட மரவுரியாடை. இடைக்கட்டுத் தொடையளவாய்ச் சுருக்கப்பட்டு, அதன் தொங்கல் மடக்கிய இடக்காலின் கீழ் மேடைமீது விரிப்பெனப் படிந்துள்ளது. கைகளின் மேற்பகுதியில் தோள்வளைகள்; மணிக்கட்டுகளில் பட்டை வளைகள்; விரல்களில் மோதிரங்கள். இறைவனின் கழுத்திலிருந்து, விஷ்ணுவின் மார்பில் புரளும் வனமாலையொத்த நீளமாலையொன்று தொடைவரை தொங்குகிறது. உர்ஊசூத்திரமும் உள்ளது. இறைவனின் வலக்கை தொடைமீதமர, இடக்கை மடிந்து உயர்ந்து, இறைவியின் முகத்திற்காய்க் கடகமாகியுள்ள உள்ளங்கையில் பொருளொன்றை ஏந்தியுள்ளது. இப்பொருள் பலவிதழ்களின் தொகுப்புப் போல அமைந்துள்ளது. இதழ்கள் நெருங்கி மலர்ந்த மலரொன்றை ஏந்தியிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியுள்ள இப் பொருளின் கீழ்ப்பகுதி கைக்குள் மறைந்திருப்பதால், உறுதியாக இன்னபொருள் என்று கூறமுடியவில்லை. இறைவனின் திருமுகம் இலேசான இடப்புறத் திருப்பத்தில் உள்ளது. இறைவனின் இடப்புறம் வலக்காலைக் குத்துக்காலாக மேடைமீது இருத்தி, இடக்காலைப் பாதம் படியிலிருக்குமாறு கீழிறக்கியுள்ள உமையன்னையின் உத்குடிகாசனக் கோலம் எழிலார்ந்தது. இடக்கையைத் தொடைமீதிருத்தி, வலக்கையைக் குத்துக்காலாக உள்ள வலக்கால்மீது தாங்கலாய் நிறுத்தி, அக்கையில் நீலோத்பல மலரொன்று ஏந்தியுள்ள இறைவியின் வலப்பாதம், இறைவனின் இடத்தொடையின் கீழ் மறைந்துள்ளது. பட்டாடையணிந்துள்ள இறைவியின் தாள்களில் செறிகள், பாடகங்கள்; விரல்களில் மிஞ்சி. இறைவியின் செவிகளை அலங்கரிக்கும் குண்டலங்கள், ‘கடிப்பு’ வகையினவாகலாம். தோள்களில் ஸ்கந்தமாலை. கைகளில் தோள்வளைகள், வளைகள், மோதிரங்கள். கழுத்தில் முத்துமாலை, பதக்கம் தைத்த ஆரம். இப்பதக்கம் தேவியின் கச்சற்ற இருமார்பகங்களுக்கும் இடையில் அவற்றின் மேலெழுச்சியை முத்தமிட்டவாறு அமர்ந்துள்ளது. வயிற்றுப்பகுதியை அரவணைத்தவாறு மார்பகங்களுக்கிடையே எழுச்சி காட்டும் அணி மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. தலையில் முத்து முகப்பணி அரவணைத்த கரண்டமகுடம். நெகிழும் சடையில் இடப்புறம் இதழ்விரித்த நெருஞ்சி. நெற்றியில் அழகிய திலகம். இடுப்பில் மேகலை. இறைவியின் தோளில் தொங்கும் மாலை தோளின் பின்புறம் முழங்கைவரை நீலோத்பல மலர்களின் தொகுப்பென நீள்கிறது. திருமுகம் வலச்சாய்வாய், இலேசாய்க் குனிந்த நிலையில், பார்வை கீழ்நோக்கித்தாழ நாணம் கொழிக்க அழகின் சிகரமாய் அமைந்துள்ளது. முடிவுரை கல்வெட்டுகள் ஏதுமற்ற எளிய கட்டமைப்புள்ள இக்குடைவரையின் பெருஞ்சொத்தாக இறைவன், இறைவி திருமேனிகளைக் குறிப்பிடவேண்டும். இவை பாறையில் செதுக்கப்பட்டுச் சுதைப்பூச்சு கொண்டவையென்றே கருதுமாறு பின்சுவரையொட்டிய நிலையில் உள்ளன. அழகு கொழிக்கும் இத்திருமேனிகள் விளங்கும் இக்குடைவரையின் அமைப்புக் கொண்டு இது உருவாகிய காலத்தைக் கி. பி. எட்டாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம். இறைவி தனித்தமர்ந்த நிலையினும், மங்கைபாகரென்ற பெயரை இக்குடைவரை இறைவர் ஏன்பெற்றார் என்பதற்குச் சான்றுகளில்லை. அன்னையும் அத்தனுமாய் மணவழகுக் கோலத்தில் ஒளிவிடும் இவ்விறை இணையைக் கண்ணுற்றாரே கண்பெற்ற பயன்பெற்றார். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |