http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 30
இதழ் 30 [ டிசம்பர் 16, 2006 - ஜனவரி 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
டாக்டர். மா. இராசமாணிக்கனார் ஆய்வு மையத்தின் வெளியீடான வரலாறு ஆய்விதழ் தொகுதி 12,13ல் வெளியான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களின் கட்டுரை இங்கே வரலாறு.காம் வாசகர்களுக்காக.
தமிழ்க் கல்வெட்டுகளில் நக்கன் என்ற சொல் ஆண்பாலரையும் பெண்பாலரையும் பொதுவில் குறிக்கும் பெயர்ச்சொல்லாக வழங்கியுள்ளது. [எ-கா] ஆண்பால் : நக்கன் [ஐ.ம. 2003 : எண் 103] நக்கங்காரி [நக்கன் மகன் காரி] [தெ.இ.க. 5 : 366] நக்கம் புல்லன் [நக்கன் மகன் புல்லன்] புல்ல நக்கன் [புல்லன் மகன் நக்கன்] [தெ.இ.க. 14 : 26] பெண்பால் : நக்கன் சோழ குல சுந்தரி [தெ.இ.க. 2 : 261] நக்கன் என்ற சொல், 'நிர்வாணி' என்ற பொருளில் நக்ந என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகத் தமிழ் லெக்சிகன் குறிக்கிறது. "அம்மணமாயுள்ளவன் திகம்பரன் ஆகையாலே நக்கன் என்ற பேராய்" என்ற மேற்கோளையும் [திருவாய். 10, 8, பன்னீ] அது எடுத்துக்காட்டுகிறது. நிகண்டுகளிலும் இப்பொருள் தரப்பட்டுள்ளது [பிங்கல. 894; சூடா. 2:47]. சித்தன்னவாசல் கீழ்க்குகையில் இருக்கும் முற்கால வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் காணப்படும் நக்கன் என்ற பெயர் ஒரு சமணத் துறவியைக் குறிப்பிடுவதாக எடுத்துக் கொண்டால், அவர் திகம்பரராக இருந்தமையால் அவருக்கு நக்கன் என்ற காரணப் பெயர் வழங்கியது என்பதை ஒருவாறு ஏற்றுக்கொள்ளலாம். ஆயினும், பிற்காலக் கல்வெட்டுகளில் ஆண்பாலரைக் குறிக்கும் நக்கன் என்ற பெயர் படைத்தவர் அனைவரும் நிர்வாணிகளாக இருந்திருப்பார்கள் என்று கருதமுடியாது. சிவபெருமானுடைய திருநாமங்களில் ஒன்றான நக்கன் என்பதுவே இப்பெயருக்கு மூலம் என்ற கருத்தும் அவ்வளவு வலுவுள்ளதாகத் தோன்றவில்லை. இறைவனின் பல திருநாமங்களில், 'நிர்வாணி' என்ற பொருள்தரும் பெயரைத் தம் மக்களுக்குச் சூட்டினர் என்பதை நம்புவது கடினமாக உள்ளது. பெண்பாலரில் நக்கன் என்ற சொல் சிவன் கோயில்களில் பணியாற்றிய தேவரடியார்களின் பெயர்களில் முன்னொட்டாகவே காணப்படுகிறது. இவர்கள் சிவபெருமானின் மகள்களாகக் கருதப்பட்டதால் நக்கன் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டனர் என்ற விளக்கம் வலிந்து கூறப்படுவதாகவே தோன்றுகிறது. நக்கன் என்ற பெயர் ஆண்பாலாகத்தான் இருக்கமுடியும் என்ற அடிப்படையில் நக்கன் என்ற முன்னொட்டுத் தேவரடியார்களின் தந்தையான சிவபெருமானைக் குறிக்கிறது என்ற விளக்கம் எழுந்துள்ளது. ஆயினும், 'அன்' விகுதியுடன் பெண்பால் பெயர்களும் வரக்கூடும்; [எ-கா] அக்கன், அம்மன். "தேவரடியார்கள் கோயில்களில் நிர்வாணமாக நடனமாடினதால் அவர்களுக்கு நக்கன் என்ற பெயர் உண்டாயிற்று" என்ற முற்றிலும் விபரீதமான மற்றொரு விளக்கமும் தரப்பட்டுள்ளது [தி.நா.சுப்பிரமணியன், தெ.இ.கோ.க.III.2 : சொல்லடைவு] நக்கன் என்ற சொல்லுக்கு வேறு பொருள் உண்டா என்ற இந்த ஆய்வுக்கு மேற்கண்ட பொருத்தமற்ற விளக்கங்களே தூண்டுதலாய் அமைந்தன எனலாம். சிவபெருமானுக்கு 'நிர்வாணி' என்ற பொருளில் நக்கன் என்ற வடமொழியிலிருந்து பெறப்பட்ட பெயர் வழங்கியது என்பது உண்மையே. ஆயினும் மக்கள் சூட்டிக்கொண்ட நக்கன் என்ற பெயர் மேற்கண்ட சொல்லிலிருந்து வேறான ஒரு தமிழ்ச்சொல் என்றே தோன்றுகிறது. நகு : நகைத்தல் [> நக்கல் 'சிரிப்பு'] என்ற வேர்ச்சொல்லுடன் நக்கன் [நகு + அன்] தொடர்புடையது என்று கொண்டால் இச்சொல்லுக்கு 'நகைமுகன் அல்லது இன்முகத்தினன்' என்ற பொருள் காண இயலும். தம் மக்களுக்குப் பெற்றோர் இப்பெயரை ஏன் சூட்டினர் என்பதற்கு இயல்பான, பொருத்தமான விளக்கமும் கிடைத்து விடுகிறது. நக்கன் என்ற சொல் பெண்பாலாக வரும்பொழுது அதற்கு வேறுவிதமாகப் பொருள் காணவேண்டும். நக்கன் என்ற சொல் பெரிதும் வழங்கும் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளிலேயே அக்கன் என்ற சொல்லும் 'தமக்கை' என்ற பொருளில் வந்திருப்பதை இங்குச் சிறப்பாகக் கருத்தில் கொள்ளவேண்டும் [தெ.இ.க. 2 : 2]. ஏனெனில் இதுவே நக்கன் ஓர் உறவுமுறைச் சொல் என்பதை விளக்கும் தடயமாக அமைந்துள்ளது. தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் உறவுமுறைச் சொற்கள் [Kinship terms] எவ்வாறு முன்னொட்டுகளுடன் [Prefixes] அமைக்கப்பட்டுள்ளன என்பதற்குக் கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
அந்தை என்ற வேர்ச்சொல் பழந்தமிழில் 'தந்தை முறையிலுள்ள பெரியோன்' என்ற பொருளில் வழங்கியது என்பதற்குத் தமிழ் - பிராமிக் கல்வெட்டுகள் சான்றாக உள்ளன [ஐ.ம. 2003. பக். 104, 550]. அந்தை என்ற வேர்ச்சொல்லுடன் உறவுமுறையைச் சுட்டும் தம், நம் என்ற முன்னொட்டுக்களை இணைத்தால் முறையே தந்தை, நந்தை என்ற சொற்கள் உருவாகின்றன. அதேபோல, அம்பி என்ற சொல்லிலிருந்து முறையே தம்பி, நம்பி என்ற சொற்களும், அங்கை என்ற சொல்லிலிருந்து முறையே தங்கை, நங்கை என்ற சொற்களும் பெறப்படுகின்றன. அங்கை என்ற சொல் வலிந்து ஒலிக்கும்பொழுது அக்கை என்ற மாற்றுருவைப் பெறுகிறது. அங்கை என்ற சொல்லிலிருந்து அங்கச்சி, அங்கைச்சி, தங்கை, தங்கச்சி, தங்கைச்சி என்ற தங்கை முறையைக் குறிக்கும் சொற்கள் அமைந்துள்ளன. அதே போன்று அக்கை என்ற சொல்லிலிருந்து அக்கன், அக்கா, அக்காள், அக்கச்சி, அக்கைச்சி, தமக்கை, நக்கன் ஆகிய தமக்கை முறையைக் குறிக்கும் சொற்கள் உருவாகின்றன. மேலும் ஆய் என்ற வேர்ச்சொல்லிலிருந்து ஆய்ச்சி, ஆச்சி, தாய், தாய்ச்சி, ஞாய், யாய் போன்ற உறவுமுறைச் சொற்கள் முன்னொட்டுகளை இணைத்துப் பெறப்படுகின்றன. இப்பின்னணியில் நோக்கும்பொழுது நக்கன் என்ற பெண்பால் பெயர்ச்சொல்லின் பொருள் தெளிவாகக் கிடைக்கிறது. கூடப் பிறந்த பெண்டிரை வயதுக்கேற்ப தமக்கை என்றோ அல்லது தங்கை என்றோ அழைத்தனர்; அதைப் போன்று உடன் பிறவாப் பெண்டிரை நக்கன் என்றோ அல்லது நங்கை என்றோ அழைத்தனர். உலக வழக்கில் நங்கை என்ற சொல் பொதுவில் இளம்பெண்டிரைக் குறிப்பதாகவும், நக்கன் என்ற சொல் கோயில்களில் பணியாற்றிய தேவரடியார்களைக் குறிப்பதாகவும் சிறப்புப் பொருள்களைப் [Honorifics] பெற்றுவிட்டன எனலாம். குறிப்புகள் சூடா. : சூடாமணி நிகண்டு [கழகப்பதிப்பு] திருவாய். பன்னீ. : திருவாய்மொழி [பன்னீராயிரப்படி] தெ.இ.க. : தென்னிந்தியக் கல்வெட்டுகள் [South Indian Inscriptions Volumes] தெ.இ.கோ.க. : தென்னிந்தியக் கோயில் கல்வெட்டுகள், தி.நா.சுப்பிரமணியன், 1957. பிங்கல. : பிங்கலந்தை நிகண்டு [கழகப்பதிப்பு] ஐ.ம. : Early Tamil Epigraphy, ஐராவதம் மகாதேவன், 2003 this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
||||||||||||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |