http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 33
இதழ் 33 [ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் இயற்கைக் குகைகளில் கல்வெட்டுகள் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைக் கண்டறிந்த தொல்லெழுத்தியல் அறிஞர்கள் அவை 'பிராமி எழுத்துகளில் பாளி மொழியில் பௌத்த மதத்தினர் பொறித்த கல்வெட்டுகள்' என்றே கருதினர். இக்கல்வெட்டுகளில் எழுத்துகள் பெரும்பாலும் அசோகமன்னரின் கல்வெட்டுகளில் காணப்படும் பிராமி எழுத்தை ஒத்திருப்பதாலும், அசோகனின் கல்வெட்டுகள் பாளி மொழியில் உள்ளதாலும் அவை பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பொறிக்கப்பட்டவை என்பதாலும் அறிஞர்கள் இவ்வாறு கருதினார்கள். ஆயினும் கல்வெட்டுகளை முழுமையாகப் படித்தறியும் முன்னரே இக்கருத்துகள் கூறப்பட்டன. பின்னர் கே.வி.சுப்பிரமணிய ஐயர் முதலிய பல அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தமிழகக் குகைக் கல்வெட்டுகள் தமிழில் எழுதுவதற்காக பிராமியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன என்றும், சமயச் சார்பான சில பிராகிருதச் சொற்களைத் தவிர இக்கல்வெட்டுகளின் மொழி தமிழே என்றும் தமிழகத்தில் அக்காலத்தில் பௌத்தத்தைவிடச் சமணமே செல்வாக்குடன் இருந்ததைப் பண்டைத் தமிழ் எழுத்துக்களும் இடைக்காலக் கல்வெட்டுகளும் காட்டி நிற்பதால், குகைக்கல்வெட்டுகளும் சமணச் சார்புடையவையே என்பதும் படிப்படியாகத் தெரியவந்தது. இன்று பெரும்பாலான அறிஞர்கள் இக்கருத்துகளை ஏற்றுக் கொண்டிருப்பினும் இவையும் புறச்சான்றுகளிலிருந்து ஊகிக்கப்பட்டவையே. குகைக்கல்வெட்டுகளின் திருத்தமான பாடங்கள் கிடைக்காத நிலையில் அவை சமணச்சார்புடையவை என்று ஐயமின்றி நிறுவ அகச்சான்றுகள் கண்டறியப்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாக நான் தமிழகத்திலுள்ள இயற்கைக் குகைகளுக்கு மீண்டும் நேரில் சென்று தமிழ்நாடு தொல்லியல் துறை வல்லுனர்களின் பேருதவியுடன் கல்வெட்டுகளை மிகவும் கவனமாகப் படியெடுத்து அவற்றின் முழுமையான திருத்தமான பாடங்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். தமிழகக் குகைக்கல்வெட்டுகள் சமணச்சார்புடையவை என்பதற்கு அகச்சான்றுகளாக அக்கல்வெட்டுகளில் காணப்படும் சில முக்கியமான சொற்களைத் தொகுத்தளிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சமணத்திற்கும் மற்ற சமயங்களுக்கும் பொதுவான ஆசாரியர், தம்மம், தான(ம்), ப(ள்)ளி போன்ற பல கல்வெட்டுச் சொற்கள் இக்கட்டுரையில் இடம்பெறவில்லை. மேலும் கல்வெட்டுகளின் பாடங்களையும் மேற்கோள்களின் முழுவிவரங்களையும் இடமின்மையால் இதில் சேர்க்க இயலவில்லை. அண்மையில் வெளிவர இருக்கும் 'பண்டைத் தமிழ்க் கல்வெட்டியல்' (Early Tamil Epigraphy) எனும் என் நூலில் இவற்றைக் காணலாம். I. தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் சமண சமயச் சொற்கள் 1. கணி சமண சமயத்தில் கணங்கள் என்ற பெயரில் துறவிகளின் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கணத்திற்கும் தலைமை தாங்கிய மூத்த துறவி கணி என்றழைக்கப்பட்டார். சமஸ்கிருதத்தில் கணீ என்பதும், பிராகிருத மொழியில் கணி என்பதும் இச்சொல்லின் மூலமாகும். சமணம், பௌத்தம் ஆகியவற்றிற்குச் சமயத்தொடர்பான பல சொற்கள் பொதுவாக இருப்பினும் கணி என்ற சொல் சமணத்துறவிகளுக்கு மட்டுமே உரியது என்பதைச் சமண நூல்களும் பிராகிருத மொழிக் கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன. பௌத்த சங்கங்களின் தலைவர்களை இச்சொல் குறித்ததாகச் சான்றுகள் இல்லை. தமிழகத்தில் மதுரைக்கடுத்த மாங்குளத்திலும் அழகர்மலையிலும் உள்ள குகைக்கல்வெட்டுகளில் அங்கு வாழ்ந்திருந்த சமணத்துறவிகளுக்கு கணி என்ற அடைமொழி தரப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் எழுத்தமைதியின் அடிப்படையில் ஏறத்தாழ கி.மு 2-1 நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்று கருதலாம். தமிழகத்துக்குக் குகைக் கல்வெட்டுகள் தொடக்க காலத்திலிருந்தே சமண சமயத்தைச் சார்ந்தவை என்பதற்கு கணி என்ற இச்சொல் மிகப்பழமையான முக்கியமான அகச்சான்றாகும். பல்லவர் காலத்தில் நந்தி சங்கத்தைச் சார்ந்த மூத்த சமணத்துறவியான வஜ்ரநந்தி என்னும் பெரியார் கணி என்றழைக்கப்பட்டார். (பள்ளன்கோயில் செப்பேடுகள் சமஸ்கிருதப் பகுதி). சோழர் காலத்திலும் கணி சேகர மருபொற்சூரியன் என்ற சமண முனிவரின் பெயர் ஒரு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. (தெ.இ.க. 1-66). கணம் என்ற சொல்லுடன் தொடர்புடைய கணி (கணத்தின் தலைவர்) என்ற இச்சொல் கணித்தல் என்ற வினைச்சொல்லுடன் தொடர்புடைய கணி (சோதிடன்) என்ற சொல்லிலிருந்து வேறானது. 2. அமணம் ச்ரமண என்ற சமஸ்கிருதச் சொல் பிராகிருத மொழியில் ஸமண என்று வழங்கியது. இச்சொல் பிராகிருதக் கல்வெட்டுகளில் பௌத்த, ஜைன, ஆஜீவிகச் சமயங்களைச் சார்ந்த துறவிகளைக் குறித்தது. ஆயினும் இச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சமண > அமண என்ற தமிழ்ச்சொற்கள் சமண சமயத்தை மட்டுமே குறிக்கின்றன. (எ-கா) சமணீர்காள் (மணிமேகலை); சமணரொடு புத்தரும், அருகரொடு புத்தர், சமணர் சாக்கியர் போன்ற தேவார வழக்குகள் ஜைன மதத்தினரை அருகர், சமணர் என்றும், பௌத்த மதத்தினரை புத்தர், சாக்கியர் என்றும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகின்றன. மேட்டுப்பட்டிக் குகைக்கல்வெட்டில் அமணன் என்ற சொல் முதன்முதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு 2ம் நூற்றாண்டாகும். பின்னர் புகழியூர்ப் புகழிமலைக் கல்வெட்டுகளில் அமண்ணன் என்ற சொல் இருமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளின் காலம் ஏறத்தாழ 2ம் நூற்றாண்டாகும். பல்லவர் காலத்திய பள்ளன் கோயில் செப்ப்பேடுகளில் வடமொழிப் பகுதியில் வரும் ச்ரமணாச்ரமம் என்ற சொல் அமண்சேர்க்கை என்று தமிழ்ப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸமண என்ற பிராகிருதச் சொல் தமிழில் சமண என்றாகி, பின்னர் மொழிமுதல் 'ச'கரம் கெட்டு அமண என்று உருமாற்றம் பெற்றிருப்பது நீண்டகால மொழியியல் மாற்றமாகும். அமணன் என்ற தமிழ்ச்சொல் கி.மு 2ம் நூற்றாண்டிலேயே கல்வெட்டில் பயின்று வருவதால், அதற்கு மிகவும் முந்தைய காலத்திலேயே கி.மு 4-3 நூற்றாண்டுகளிலேயே சமணம் தமிழகத்தை வந்தடைந்திருக்க வேண்டும். கர்நாடகத்தில் சிரவணபெலகோலா என்ற இடத்திலிருந்து மவுரிய மன்னன் சந்திரகுப்தனின் மறைவிற்குப் பிறகு அவனது குருவான பத்ரபாகுவின் பிரதான சீடரான விசாகமுனிவர் தமிழகத்தில் சமயப்பணிகளை மேற்கொண்டார் என்று சமண சமய நூல்கள் கூறும் கர்ணப் பரம்பரையான வரலாற்றை இச்சொல்லாய்வு ஓரளவு உறுதி செய்கிறது எனலாம். 3. உப(ச்)சன் சமஸ்கிருத மொழியில் உபாத்தியாய (ஆசிரியர்) என்ற சொல் பாளி மொழியில் உபஜ்ஜாய, உபஜ்ஜ என்றும், அர்த்தமாகதி மொழியில் உவஜ்ஜாய, ஒஜ்ஜாய என்றும் உருமாறி வழங்கியது. இச்சொல் திருவாதவூர் குகைக் கல்வெட்டில் உப(ச்)சன் என்றும், கீழவளவு, கொங்கர்புளியங்குளம் குகைக் கல்வெட்டுகளில் உப(ச்)ச-அன் என்றும் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளின் காலம் ஏறத்தாழக் கி.மு 2-1ம் நூற்றாண்டுகளாகும். சமண சமயத்தில் பஞ்சபரமேஷ்டிகள் என்று துதிக்கப்படும் ஐவரில் உவஜ்ஜாய என்ற உபாத்தியாயரும் ஒருவர் ஆவர். தமிழகத்துச் சமண வரலாற்றில் சமண சமய சாத்திரங்களைக் கற்றறிந்து பிறருக்குப் போதிக்கும் திறன் படைத்த குரு உபாத்தியாயர் என்று அழைக்கப்படுகிறார். இவர் இல்லற வாழ்வை மேற்கொண்டு சமணக் கோயில்களில் பூசை செய்வது, சமணர் இல்லங்களில் சடங்குகள் நடத்துவது போன்ற சமயப் பணிகளைச் செய்துவருகின்றனர். பிங்கலந்தையில் ஓசன் ஆசாரியன் என்றும் சூடாமணி நிகண்டில் ஓசன் உபாத்தியாயன் என்றும் தமிழ் லெக்சிகனில் ஓச்சன் கணக்காயன் என்றும் பொருள் தரப்பட்டுள்ளது. பிற்காலக் கல்வெட்டுகளில் உபச்சன் என்ற சொல் உவச்சன் என்று திரிந்ததுமல்லாமல் அதன் பொருளும் பிடாரிக் கோயில் பூசாரி கோயில்களில் சங்கு, முழவு போன்ற வாத்தியங்களை இசைப்பவன் என்றும் மாறிவிட்டது. 4. ப(ம்)மித்தி அழகர்மலைக் குகைக் கல்வெட்டில் ஒரு சமணப் பெண் துறவி ப(ம்)மித்தி என்றழைக்கப்படுகிறாள். இச்சொல் சமண முனிவரைக் குறிக்கும் பம்மன் (அருங்கலச்செப்பு) என்ற சொல்லின் பெண்பாலாகும். ஆரியாங்காணிகள் எனப்பட்ட சமணப் பெண்துறவியர் திவாகரத்தில் பைம்மை என்றும் பிங்கல நிகண்டில் பைமை என்றும் குறிக்கப்படுகின்றனர். சீவக சிந்தாமணியில் பம்மை என்பது ஒரு சமணப் பெண்துறவியின் பெயராக வருகிறது. இச்சொல்லுக்கு உ.வே.சாமிநாதய்யர் பத்மை என்று பொருள் கூறியிருப்பினும், திவாகர, பிங்கல நிகண்டுகள் குறிப்பிடும் பைம்மை, பைமை என்ற சொற்களும் சீவக சிந்தாமணியில் வரும் பம்மை என்ற சொல்லும் அழகர்மலைக் கல்வெட்டில் வரும் ப(ம்)மித்தி என்ற சொல்லும் பம்மன் என்ற சொல்லின் பெண்பாலென்றும் சமணப் பெண்துறவியரைக் குறிக்கும் பொதுவான சொற்கள் என்றும் கொள்ளலாம். 5. கந்தி தமிழ்-பிராமிக் கல்வெட்டுகளின் இறுதிக் காலமாகிய சுமார் கி.பி 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த நேகனூர்ப்பட்டிக் குகைக் கல்வெட்டில் தாயும் மகளுமாகிய இரு சமணப் பெண்துறவியர் கந்தி என்று குறிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் பழங்கன்னடக் கல்வெட்டுகளில் சமணப் பெண்துறவியர் பெரும்பாலும் கந்தி என்ற அடைமொழியாலேயே குறிக்கப்படுகின்றனர். ஆயினும், கால வரையறையில் நேகனூர்ப்பட்டிக் கல்வெட்டு பழங்கன்னடக் கல்வெட்டுகளைவிட முந்தையதாகும். கந்தி என்ற சொல் சமஸ்கிருதத்தில் க்ரந்தின் (கற்றுணர்ந்தவர்), பிராகிருதத்தில் கந்தி (நூல் இயற்றுபவர்) ஆகிய சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். கந்தி என்ற சொல் பிற்காலத் தமிழ் வெட்டுகளில் காணப்படவில்லை. ஆயினும் இச்சொல் பழந்தமிழில் வழங்கியதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. கறந்த பால் அனைய கந்தி (சீவகசிந்தாமணி) கந்தியைக் காணினும் (நீலகேசி) இடைமடுத்த கந்தி தன் பிழைப்பும் (பரிபாடல், உரைச்சிறப்பாயிரம்) * கவுந்தியடிகள் (ஒரு சமணப் பெண்துறவி - சிலப்பதிகாரம்) கவுந்தி (திவாகரம்) கந்தி, கௌந்தி (சூடாமணி) * (கந்தியார் என்ற சமணப் பெண்துறவி சீவகசிந்தாமணியில் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இடைச்செருகல்களாகச் சேர்த்துவிட்ட வரலாற்றை இது குறிக்கிறது போலும். சீவகசிந்தாமணியில் உ.வே.சாமிநாதய்யர் குறிப்பு) II. முற்கால வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் சமண சமயச் சொற்கள் தமிழ் பிராமி எழுத்துக்கள் காலப்போக்கில் ஓலைச் சுவடிகளில் எழுத்தாணியால் எழுதும் முறையினால் வட்ட எழுத்துக்களாக உருமாறி வட்டெழுத்துகள் என வழங்கலாயிற்று. இம்மாறுதல் நிகழ்ந்த காலம் ஏறத்தாழ 5,6 நூற்றாண்டுகளாகும். இக்காலகட்டத்தைச் சார்ந்த கல்வெட்டுகளை முற்கால வட்டெழுத்துக் கல்வெட்டுகள் எனலாம். இவை மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே கிடைத்துள்ளன. இவற்றில் பல சமண சமயத் தொடர்பு கொண்டவையாகும். இக்கல்வெட்டுகளிலிருந்து சில அரிய சமண சமயச் சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன. 6. ஆராதனி இது ஆராதனை என்ற சொல்லின் மாற்றுருவமாகும். இச்சொல் பறையன்பட்டுப் பாறைக் கல்வெட்டில் காணப்படுகிறது. இதன் காலம் ஏறத்தாழக் கி.பி ஐந்தாம் நூற்றாண்டாகலாம். ஆராதனை என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பூசனை என்பத்டு பொதுவான பொருளாகும். ஆயினும் ஆராதனி என்ற கல்வெட்டுச் சொல்லை ஜைன பரிபாஷையின்படி பொருள் கொள்ள வேண்டும். ஆராஹண (ஆராதந) என்ற சொல்லுக்கு அநசந (உண்ணாநோன்பு) என்று பிராகிருத மொழி அகராதியில் பொருள் தரப்பட்டுள்ளது. (அனசனம் என்பதற்கு விளக்கம் கீழே காண்க). ஒரு சமணத்துறவி சாகும்வரை உண்ணாநோன்பு இருந்ததையே 'ஆராதனி நோற்று முடித்த' என்ற பறையன்பட்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதையே 'ஆராதநெ நோந்து' என்று ஒரு பழங்கன்னடச் சமணக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. (A.N.நரசிம்மையா, எண் 33, கி.பி 7ம் நூற்றாண்டு). மற்றொரு பிற்காலக் கன்னடக் கல்வெட்டில் 'ஆராதநா விதி' நோற்று உயிர்நீத்த சமணத் துறவியைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது (ARE B.239/1947-48, கி.பி. 13ம் நூற்றாண்டு). மேலும் முடிபு (கன்னடம்), முடிவு (தமிழ்) என்ற சமண சமயச் சொற்கள் உண்ணாநோன்பிருந்து உயிரை முடித்துக் கொள்வதையே குறிப்பிடுகின்றன. (P.B.தேசாய், 1957). 7. அனசனம் திருநாதர் குன்று பாறைக் கல்வெட்டில் காணப்படும் இவ்வடமொழிச் சொல்லுக்கு 'உண்ணாமை' என்பது நேரடிப் பொருளாகும். ஆயினும் சமண வழக்கில் இது உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தலையே பெரும்பாலும் குறிக்கிறது. சமணத் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. அண்ணல் அனசனத் தவம் அமர்ந்தவான் (யசோதர காவியம்) அனசன நோன்பு கொண்டான் (நாககுமார காவியம்) அனசனாதி தபசு (நீலகேசி 1, உரை) 8. நிசீதிகை கலிங்க அரசன் காரவேலனின் உதயகிரிக் கல்வெட்டு (கி.மு முதல் நூற்றாண்டு) சமண முனிவர்களின் இருக்கைகளை நிஸீதியா என்று குறிப்பிடுகிறது. பறையன்பட்டிலும் திருநாதர் குன்றிலும் சமணத்துறவிகள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த இருக்கைகள் நிசீதிகை என்று குறிக்கப்பட்டுள்ளன. இதே சொல் திருநாதர் குன்றிலேயே பொறிக்கப்பட்டுள்ள ஒரு பிற்காலக் கல்வெட்டிலும் வருகிறது. (தெ.இ.க. XVII, 261, கி.பி 10ம் நூற்றாண்டு). கர்நாடகத்தில் சிரவணபெலகோலா என்ற தலத்தில் பெரும்புகழ் பெற்ற கோமடாசுவரர் சிலையை நிறுவிய சாமுண்டராயனின் தங்கை புளியப்பை தமிழ்நாட்டில் விஜயமங்கலத்தில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த இடத்தை அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு நிஸிதிக என்று குறிப்பிடுகிறது. (ARE 597/1905). பழங்கன்னட மொழியிலுள்ள பல சமணக் கல்வெட்டுகளில் நிஸிதிகெ என்ற சொல் பரவலாகக் காணப்படுகிறது. இறுதியில் குறிக்கப்பட்டுள்ள ஆராதனி, அனசனம், நிசீதிகை என்ற மூன்று சொற்கள் காணப்படும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் (கி.பி 5,6ம் நூற்றாண்டுகள்). காலத்தால் பழங்கன்னட மொழியிலுள்ள சமணக் கல்வெட்டுகளைவிட முந்தியவை எனினும், இச்சொற்கள் கர்நாடகத்துச் சமணர்களிடமிருந்தே தமிழகச் சமணரிடை பரவின என்று கருத இடமுண்டு. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |