http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1771 Articles]
Home About US Temples Facebook
Issue No. 33

இதழ் 33
[ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

திருவிழா, நம்ம தெருவிழா
திரும்பிப் பார்க்கிறோம் - 5
கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் - 1
தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் சமணம்
ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
Links of the Month
சங்கச்சாரல் - 16
இதழ் எண். 33 > கலையும் ஆய்வும்
கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் - 1
மு. நளினி


திருக்கோயில் வளாகங்களை ஆய்வுக்குட்படுத்தி ஆய்வேடுகளை வழங்கும் போக்கு கடந்த சில ஆண்டுகளாகப் பெருகியுள்ளது. இளங்கலை, முதுகலை, முதுநிறைஞர், முனைவர் பட்டங்களுக்காக இவ்வாய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. பல்வேறு கல்வி மற்றும் கல்விசாரா நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கோயிலாய்வுகளில் ஈடுபட்டுக் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டு வருகின்றனர். இவ்வாய்வேடுகளும், கட்டுரைகளும் நூல்களும் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு மேலோட்டமானவையாகவே அமைந்திருப்பது துன்பம் தரும் உண்மையாகும்.

அடிப்படைப் பின்புலம்

கோயிலாய்வில் ஈடுபடுவோருள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் கோயில் பற்றிய அடிப்படைப் பின்புலம் ஏதுமில்லாமல் ஆய்வு தொடங்குவதால்தான், அவர்கள் தொகுக்கும் தரவுகள் ஐயத்திற்கு இடமானவையாகவே அமைந்துவிடுகின்றன. கோயிலாய்வு செய்யும் பெரும்பாலான ஆய்வு மாணவர்கள் வரலாறு அல்லது தமிழ்ப்புலம் சார்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு வரலாற்றுப் பின்புலமோ, இலக்கியப் பின்புலமோ, அவரவர் பாடத்திட்டஞ் சார்ந்து ஓரளவிற்கு இருக்கிறதே தவிர, இரண்டிலுமே பரந்துபட்ட தெளிவில்லை. பாடத்திட்ட எல்லைக்கு வெளியே படித்தறிவது என்பது இன்றைய ஆய்வு மாணவர்களிடம் அருகி வருகிறதென்ற கசப்பான உண்மையை மறப்பதற்கில்லை. இத்தகு சுருங்கிய அறிவுப் பின்புலத்தோடுதான் ஆய்வர்கள் கோயில்களை நெருங்குகிறார்கள்.

கோயிலாய்வு இலக்கிய, வரலாற்றுப்புல ஆய்வுகள் போல் ஒருதுறை சார்ந்த ஆய்வல்ல. பல துறைகளின் சங்கமிப்பாக அது இருப்பதை ஆய்வர்கள் உணர்தல் வேண்டும். அழுத்தமான அறிவுப்பின்புலமின்றிக் கோயிலாய்வுகள் மேற்கொள்வது பொருத்தமற்ற செயலாகும். கோயிலாய்வு செய்ய விழைவோர் முதலில் கோயில்களின் அமைப்புப் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்திருக்கும் நூல்களுள் தகுதியான சிலவற்றையேனும் படித்தறிதல் வேண்டும். அப்போதுதான் கோயில் என்பது கட்டடம், சிற்பம், ஓவியம், கல்வெட்டு, வார்ப்புரு, சுதையுரு, ஆகமம், சமயம், தத்துவம், வரலாறு, இலக்கியம் முதலிய எண்ணோரன்ன பிரிவுகள் பிரித்தறிய முடியாதவாறு பின்னிப் பிணைந்திருக்கும் கூட்டு வடிவம் என்பதை உணர்தல் கூடும்.

கோயிலாய்விற்குள் நுழைவோர் தரவுகளைப் பதிவு செய்வதற்குச் சில அடிப்படை நெறிமுறைகளைப் பின்பற்றல் நன்று. அனுபவம், இந்நெறிமுறைகளை விரித்துக் கொள்ளவும் புதுக்கிக் கொள்ளவும் உதவும். ஆய்விற்கு எடுத்துக் கொள்ளும் கோயில் உள்ள ஊர், வட்டம், மாவட்டம் இவற்றின் பெயர்கள், அருகிலுள்ள நன்கு அறிமுகமான ஊரிலிருந்து கோயில் உள்ள ஊரின் தொலைவு, கோயில் தனியாருக்குரியதா, அரசின் கீழ் உள்ளதா, வழிபாட்டுத்தலமா, பாதுகாக்கப்பட்ட இடமா என்ற தகவல்கள், கோயில் உள்ள ஊரையடைய வாய்ப்பான பேருந்து, தொடர்வண்டித் தடங்கள் ஆகியவற்றைக் குறித்துக் கொள்ளவேண்டும். ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ள கோயில் பற்றி, அதுநாள் வரையிலும் வெளிவந்துள்ள கட்டுரைகள், நூல்கள், ஆய்வேடுகள் இருப்பின் அவற்றைக் கண்டறிந்து, படித்துக் குறிப்பெடுத்துக் கொள்வதுடன் அவற்றைப் பற்றி விரிவான நூலோதியும் கொள்ளவேண்டும்.

கோயிலாய்வு நெறிமுறைகளை, எங்கள் இருபது ஆண்டுகால அனுபவம் கொண்டு அணுகல், ஆராயல், தொகுத்தல், அறிதல், தெளிதல் என ஐந்து நிலைகளாகப் பகுத்துள்ளோம். இவற்றுள் அறிதல், தேடல், ஒப்பிடல் எனும் இரு உள்தலைப்புகள் பெறும்.

அணுகல்

ஒரு கோயில் வளாகத்தை கோபுரங்கள், சுற்றுகள், முதன்மை விமானம், துணை விமானங்கள், மண்டபங்கள், தனிச்சிற்பங்கள் எனப்பிரித்துக் கொள்ளலாம். கோயிலின் சுருக்கம் பெருக்கத்திற்கேற்ப இவை விரியும், குறையும். ஆய்விற்கு எடுத்துக் கொள்ளும் கோயில் பற்றிய முந்து நூல்களைப் படிக்கும்போதே 'அணுகல்' தொடங்கிவிட்டாலும், கோயிலை ஒருமுறை வலம் வரும்போதுதான் அது முழுமையடைகிறது.

இவ்வுலாவின்போது விமானம் எத்திசை நோக்கிக் கருவறை கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதுடன் ஊர்ப்பெருமை, குளப்பெருமை, கோயில் மரம் பற்றிய தகவல்களையும் கோயில்சார்ந்த பெருமக்களிடம் கேட்டறியலாம். இவை கோயில்புராணம் எழுதுவோர்க்குப் பயன்படும். வரலாறு எழுதுவார்க்குக் கோயில் சார்ந்த மரம், குளம் என்பன வேளாண் தகவல்கள். ஒரு கோயிலுடன் நீர்நிலையையும் மரவகை ஒன்றையும் இணைத்த தமிழ்ச் சிந்தனை சுற்றுச்சூழல் வளமையின் வித்தாக வந்ததாகும். புனிதக்குளம், புனிதமரம் என வரையறுத்ததன் வழி நீர்நிலைகளும் மரவகைகளும் காலமெல்லாம் காப்பாற்றப்பட வேண்டியவை என்ற திட்டம் பிறந்தது.

கோயில் வளாகத்தின் அமைப்பை தரைப்படமாக (Ground plan) வரைந்து இடங்களைக் குறித்துக் கொள்ளல் இன்றியமையாதது. இது பின்னாளில் கட்டுரை எழுதுங்கால் கோயில் வளாகம் பற்றிய முழுமையான தெளிவைப் பெற உதவுவதுடன் கால நிரலான அதன் பெருக்கம் பற்றித் தெரிந்து கொள்ளவும் வழிவகுக்கும். படம் வரைந்து இடம் குறித்த பிறகு, ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. விட்டுப்போனவற்றைச் சேர்த்துக் கொள்ளவும் பிழையாக வரைய அல்லது குறிக்கப்பட்டவற்றைச் சரி செய்து கொள்ளவும் இது உதவும்.

கோயில் வளாகக் கட்டுமானங்கள்

கோபுரம் எனும் கட்டமைப்புக் கோயிலின் நுழைவாயிலாகும். கோயிலின் தகுதிக்கேற்ப எண்ணிக்கையில் இது பலவாக அமையலாம். எளிய கோயில்களில் கோபுர வாயில்களுள் நுழைந்ததும் அவ்வளாகத்தின் நடுப்பகுதியில் கோயிலுக்குரிய முதன்மை விமானம் முன்னால் மண்டப இணைப்புகள் பெற்று ஒரு நேர்க்கோட்டில் அமைந்திருப்பதைக் காணலாம். இவ்விமானம் மண்டபக்கூட்டிணைவை வலம் வர வாய்ப்பாகச் சூழ அமைந்திருக்கும் தரைப்பரப்பு சுற்று எனப்படும். கோபுரத்துடன் இணைந்த மதில் சுவரால் அனைத்துத் திசைகளிலும் சூழப்பட்டிருக்கும் இச்சுற்றில்தான் துணைவிமானங்கள் அமையும். இத்துணை விமானங்களின் எண்ணிக்கை கோயிலுக்குக் கோயில் மாறுபட்டாலும் பொதுவாக ஒன்பது துணைவிமானங்கள் இருப்பது மரபு. அவற்றுள் எட்டுச் சுற்றாலைத் தெய்வங்களுக்கும் ஒன்று அம்மன் எழுந்தருளவும் அமையும். பல கோயில்களில் சூரியன், சந்திரன், அன்னையர் எழுவர், பைரவர் ஆகிய சுற்றாலைத் தெய்வங்களுக்குத் தனிவிமானங்கள் இருப்பதில்லை. பிள்ளையார், முருகன், யானைத்திருமகள், சண்டேசுவரர் மட்டுமே இத்தகு கோயில்களில் தனிவிமானம் பெற்றமைவர்.

ஒரு கோயில் வளாகத்தில் விமானங்கள் தவிர மண்டபங்கள் சுற்றுமாளிகைகள், நடைமாளிகைகள் ஆகியனவும் அமையும். சுற்றுமாளிகை என்பது முதன்மை விமானத்தைச் சூழ்ந்த சுற்றில் மதிலையொட்டி அமையும் மேடையாகும். இது பொதுவாகத் தெய்வத் திருமேனிகளை இருத்தப் பயன்படுகிறது. நடைமாளிகைகள் விமானத்தைச் சூழ்ந்தமையும் கூரை வேயப்பட்ட நடைபாதையாகும். வெயில், மழைத் துன்பமின்றி மக்கள் விமானத்தை வலம்வர இத்தகைய நடைமாளிகைகள் உதவுகின்றன.

மண்டபங்கள் சுவர்களால் மூடப்பட்டும் திறப்புடனும் அமையலாம். முன்றில்களும் சில கோயில் வளாகங்களில் இடம்பெறும். தாங்குதளம், சுவர், கூரை பெற்று விமானத்தின் முன்னும் சுற்றுகளிலும் அமையும் மண்டபங்கள் அமைவிடம் நோக்கியும் அளவு நோக்கியும் நடைபெறும் நிகழ்வுகளாலும் பெயர் பெறுகின்றன. கருவறைக்கு முன்னுள்ள மண்டபம் அர்த்த மண்டபம் என்றும், அளவில் சற்று பெரியதாக இருந்தால் முகமண்டபம் என்றும் அழைக்கப்பெறும்.

விமானத்திற்கு முன்னுள்ள மண்டபங்களில் அளவில் பெரியது பெருமண்டபம் எனப்படும். அலங்கார மண்டபம், ரத மண்டபம், வசந்த மண்டபம், திருமஞ்சன மண்டபம், உற்சவ மண்டபம், நிருத்த மண்டபம் எனப் பல பெயர்களுடன் மண்டபங்கள் அமைந்திருந்தாலும் ரத மண்டபம் தவிர பிறவற்றின் அமைப்பு முறையில் பெருமாற்றங்கள் காணப்படுவதில்லை. விமானமும் அதன் முன்னிருக்கும் அர்த்த அல்லது முக மண்டபமும் பெரும்பாலும் ஒரே கட்டமைப்புடன் காணப்படும். பிற மண்டபங்கள் காலத்தால் பிற்பட்டமையும் கூடுகள் இணைப்புகளாகவோ ஒரே காலத்துக் கட்டுமானங்களாகவோ அமையலாம்.

கருவறையும் அதன் முன்னுள்ள மண்டபத்தையும் இணைக்குமாறு போலப் பக்க வழிகளுடனான இடைநாழிகை சில கோயில்களில் அமையும்(1). தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் இத்தகைய இடைநாழிகைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சில கோயில்களில் இவ்விடைநாழிகை மண்டபங்களுக்கு இடையிலும் இடம்பெறலாம். கீழையூர்த் தென்வாயில் ஸ்ரீகோயில் இத்தகு இடைநாழிகையைக் கொண்டுள்ளது(2). ரத மண்டபங்கள் சக்கரங்கள், இழுக்கும் விலங்குகள் பெற்றிருப்பதுடன், உட்புறத்தும் கூடுதல் அழகூட்டல் கொண்டிருக்கும். தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலின் ராஜகம்பீரன் மண்டபம் இத்தகு ரத மண்டபமாய் அமைந்துள்ளது.

ஆய்விற்குரிய கோயிலில் இவற்றுள் எவையெல்லாம் இடம்பெற்றுள்ளனவோ அவற்றையெல்லாம் அணுகலின் போதே பறவைப்பார்வையாகப் பார்த்து அவற்றுள் எது மிகுந்த கவனத்துடன் ஆராய்தற்குரியது என்பதைத் திட்டமிடல் வேண்டும். மிகுதியான அளவில் சிற்பங்களும் கல்வெட்டுகளும் அழகூட்டல்களும் பெற்றுள்ள இடம் நன்கு ஆராயப்படல் வேண்டும். அணுகலின்போதே கட்டட உறுப்புகளின் அமைப்பு, அவற்றால் அறியக்கூடிய காலம், சிற்பங்களின் தேர்வு, அவற்றின் சமயநிலை, அதன் வழியான காலம், கல்வெட்டுகளின் எழுத்தமைதி எனப்பலவும் நோக்கலாம். அழகூட்டல் உறுப்புகளான மகரதோரணங்கள் பஞ்சரங்கள், கூடுவளைவுகள், வலபி வரிகள், தூண் பாதங்கள், ஆர உறுப்புகள், கோட்டங்கள், நாசிகைகள், கொடிக்கருக்குகள் என்பனவும் அணுகலின்போதே பார்வை வட்டத்தில் இடம்பெற வேண்டும்.

2. ஆராய்தலும் தொகுத்தலும்

கோயிலின் ஒவ்வொரு பகுதியும் வரலாற்றுக் களமாகவோ சமய ஊற்றாகவோ அமைந்திருப்பதால் கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வுக்குட்படுத்தித் தரவுகளை அறிந்து பின் தொகுத்தல் அடுத்தநிலை. தொகுக்கும்போதே கட்டமைப்பு, சிற்பங்கள், கல்வெட்டுகள், அளவுகோல்கள், அழகூட்டல்கள் எனத் தரவுகளைப் பிரித்துக் கொள்வது ஆராய்வதற்கும் ஒப்பீட்டிற்கும் எளிய வழியாகும். முதன்மை உறுப்புகள், பேருறுப்புகள், சிற்றுறுப்புகள், அழகூட்டல்கள் எனக் கட்டமைப்பு பலபடப் பிரியும். பேருருவச் சிற்பங்கள், இடைநிலைச் சிற்பங்கள், சிற்றுருவச் சிற்பங்கள் எனச் சிற்பத் தொகுப்புகளை வகைப்படுத்தலாம். சமயஞ்சார்ந்தவை, வாழ்வியல் சார்ந்தவை என்றும் பகுக்கலாம். தேவர், மனிதர், பிற வாழினம் என்றும் பிரிக்கலாம். கட்டடம், சிற்பம் இரண்டிலுமே காலம் நோக்கல் இன்றியமையாதது. கல்வெடுட்டுகளைக் கட்டமைப்பில் உள்ள நிலையிலேயே காலநிரலாகப் பதிவு செய்யலாம். அளவுகோல்கள் நில அளவுகளாகவோ (3), தச்சு முழங்களாகவோ (4) அமையும். அவற்றுள் பெரும்பாலானவை கல்வெட்டுப் பொறிப்புகளுடன் இருக்கும் (5).

விமானம், கோபுரம்

நுழைவாயிலான கோபுரமும் வளாகத்தின் தலைமையிடமான முதன்மை விமானமும் வளாகஞ்சார்ந்த பிற விமானங்களும் ஒன்றுபோல் அடிப்படை உறுப்புகள் பெற்றமைவன. கோபுரத்தையும் விமானத்தையும் முழுமையான ஆய்வுக்குட்படுத்த அவை பற்றிய அடிப்படைத் தெளிவு தேவை.

தாங்குதளம் (அதிட்டானம், பாதக்கட்டு), சுவர் (பாதம், பிட்டி), கூரை (பிரஸ்தரம்), கழுத்து (கிரீவம்), தலை (சிகரம்), குடம் (கலசம், தூபி) என்றழைக்கப்படும் ஆறு அடிப்படை உறுப்புகள் பெற்றமையும் கட்டுமானமே விமானம் அல்லது கோபுரம் எனப்படும். இவற்றின் உயரத்தை மிகுவிக்கத் தாங்குதளத்தின் கீழே துணைத்தளம் என்ற உறுப்பு இணைக்கப்பெறும். அதுபோலவே, கீழ்த்தளத்திற்கு மேலே அதாவது தாங்குதளம், சுவர், கூரை என்றமையும் முதல் மூன்று உறுப்புகளின் மேலே சுவர், கூரை எனும் இரண்டு உறுப்புகளைக் குறைவான உயரத்தில் மீண்டும் சேர்த்து ஒரு தளம் என்ற அளவில் தள எண்ணிக்கையைக் கூட்டி அமைப்பர். இதுபோல் எத்தனை தளங்கள் வேண்டுமானாலும் விமானத்திலும் கோபுரத்திலும் அமைக்கப் பெறலாம்.

தள எண்ணிக்கைக்கு ஏற்ப விமானங்கள் ஒருதள, இருதள, முத்தள, நாற்றள விமானங்கள் எனப் பெயர்பெறும் (6). நாற்றளம், ஐந்தளம் பெறும் விமானங்கள் ஜாதிவிமானங்கள் எனப்படும். ஐந்திற்குமேல் தள அமைப்புப் பெறும் விமானங்கள் முக்கிய விமானங்கள் என அழைக்கப்பெறும் (7). தேவைக்கேற்பத் தளங்கள் கூட்டி இறுதித் தளத்தின் மீது கழுத்து, தலை, குடம் வைத்துக் கட்டுமானத்தை நிறைவு செய்வது மரபு.

துணைத்தளம், தாங்குதளம்

விமானத்தின் கீழுறுப்பான துணைத்தளம் பல்வகையினது. விமானத்தின் உயரத்தை மிகுவிக்க இணைக்கும் முறை பல்லவர் காலத்திலேயே வழக்கிற்கு வந்து விட்டது. எடுத்துக்காட்டாக, மாமல்லபுரத்துக் கொற்றவைத்தளி, அருச்சுனர் தளி, தருமராஜர் தளி ஆகியவற்றைச் சுட்டலாம். இவ்வமைப்பை சோழர்காலப் பணியாகத் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்திலும் கங்கைகொண்டசோழபுரத்துச் சோழீசுவரத்திலும் காணலாம்.

தாங்குதளமும் பல்வகையினதாக அமையும். முக்கியமானவை பாதபந்தம் (8), பிரதிபந்தம் (9). இவை ஒவ்வொன்றும் பேருறுப்புகள், சிற்றுறுப்புகள் பெற்றமைவன. பாதபந்தம், பிரதிபந்தம் இரண்டிற்குமான அடிப்படை உறுப்புகளாக ஜகதி, குமுதம் இவற்றைக் குறிக்கலாம். பாதபந்தத்தில் இவற்றின் மேலுறுப்புகளாகக் கண்டமும் பட்டிகையும் அமைய, பிரதிபந்தத்தில் பிரதிவரி இவ்விடத்தைக் கொள்ளும். பிரதிவரியின் கீழுறுப்பான ஜகதி தாமரையிதழ் வடிவம் பெறின் அத்தாங்குதளம் பெருந்தாமரைத் தளமாக அறியப்படும் (10). தாங்குதள உறுப்புகளில் சிற்பங்கள், கல்வெட்டுகள், அளவுகோல்கள், அழகூட்டல்கள் என்ற நான்கும் அமையக்கூடும். இவற்றுள் கண்டபாதச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை (11).

சுவர்

தாங்குதளத்தின் மீதெழும் சுவர், வேதிகை, கோட்டங்கள், அரைத்தூண்கள், அழகுறுப்புகள், சாளரங்கள் பெறும். அரைத்தூண்கள் சதுரமாகவோ, உருளையாகவோ, எண்முகம், பன்முகம் பெற்றோ அமையலாம். ஒவ்வொரு தூணும் பல உறுப்புகள் பெற்றமையும். இவ்வுறுப்புகளுள் முக்கியமானவை பாதமும் மாலைத்தொங்கலும். தொடக்கக் கோயில்கள் பல இவற்றில் சிற்பங்கள் கொண்டுள்ளன. பசுபதி கோயிலுள்ள பிரம்ம புரீசுவரர் கோயில் சிறந்த சான்றாகும் (12). கோட்டங்கள் அணைவுத் தூண்கள் பெற்றுத் தோரணத் தலைப்புக் கொள்ளும். கோட்டங்களில் பெருங்சிற்பங்களும் பக்கச்சுவர்களில் தொடர்பான இடைநிலைச் சிற்பங்களும் அமையலாம்.

தோரணத்தலைப்புகள் பல்லவர், சோழர் கோயில்களில் அரிய சிற்பக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. காஞ்சிபுரம் இறவாதானீசுவரம், எறும்பியூர் எறும்பீசுவரம் (14) சிறந்த சான்றுகளாகும். வேதிகைப் பாதங்கள் சிற்றுருவச் சிற்பங்களைப் பெறுவதுண்டு. திருத்தவத்துறை சப்தரிஷீசுவரர் கோயில் இதற்குரிய எடுத்துக்காட்டாகும் (15). பலவகையான பஞ்சரங்கள் அழகூட்டல்களாகச் சுவரில் இடம்பெறும். சுவரில் கல்வெட்டுகள் பெற்றுள்ள கோயில்கள் பலவாகும்.

கூரை

தூண்களின் மேலமரும் போதிகைகள் தாங்கும் உத்தரத்திலிருந்து கூரைவரை கூரையுறுப்புகளில் அடங்கும். போதிகைகள் காலநிரலாக மாற்றம் பெற்றிருப்பதால் கோயிலின் வயதை அறிய வழிகாட்டும். கூரையை ஒட்டி அமையும் வளைமுக உறுப்பான வலபி பழங்கோயில்களில் சிற்பக் களஞ்சியங்களாக அமைந்துள்ளது. இதில் அமையும் பூதவரிக் கோயில் கட்டப்பட்ட காலத்தின் சமுதாயக் கண்ணாடி எனில் அது மிகையன்று (17). கூரையின் வெளிநீட்டலாக அமையும் கபோதம் அழகூட்டல்களும் சிற்பங்களும் பெறும் (18).

மேற்றளங்கள்

பொதுவாகப் பழங்கோயில்களில் மட்டுமே மேற்றளங்களில் சிற்பங்கள் உள்ளன. மாமல்லபுரம் அத்யந்தகாமத்தைச் சான்றாகக் கூறலாம் (19). மேற்றளங்களில் கல்வெட்டுகளோ, அளவு கோல்களோ இருப்பது அரிதாகும் என்றாலும், அவற்றையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்துவது பயன் தரும் (20).

ஒரு தளத்திற்கு மேற்பட்டுத் தளங்கள் அமையின், உச்சித்தளம் தவிர ஏனைய தளக்கூரைகளின் மீது சற்றே உள்ளடங்கிய நிலையில் அத்தளத்தின் மீதமரும் அடுத்த தளக் கட்டுமானத்தைச் சுற்றிலும் ஆர உறுப்புகள் காட்டப்பட்டிருக்கும். இவ்வார உறுப்புகள் அடுத்ததளக் கட்டுமானத்தோடு ஒட்டி உறவாடி நெருக்கமாக அமைந்திருப்பின் ஒட்டல் (அர்பிதம்) என்றும் (21), நன்கு இடைவெளி விட்டுச் சுற்றிவர வாய்ப்பாக இடம் ஒதுக்கி அமைந்திருப்பின் தள்ளல் (அனர்ப்பிதம்) என்றும் (22) அழைக்கப்பெறும். இத்தள்ளி அமையும் ஆரம் பொதுவாக விமானங்களில் மட்டுமே அமையும்.

(தொடரும்)

பின்குறிப்புகள்

1. மு.நளினி, இரா.கலைக்கோவன், இடைநாழிகை (பதிப்பிக்கப்படாத கட்டுரை).

2. இரா.கலைக்கோவன், பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம் பக். 97-99.

3. மு.நளினி, இரா.கலைக்கோவன், காவிரிக்கரையிலொரு காவியக்கற்றளி, செந்தமிழ்ச்செல்வி ஏப்ரல் 1990 - டிசம்பர் 1990, தினமணி 21-6-2000.

4. தினத்தந்தி, 13-1-1992.

5. Indian Express 11-9-1991.

6. ஒருதளவிமானம் - சிறுபழுவூர் ஆலந்துறையார் கோயில்.
இருதளவிமானம் - திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில்.
முத்தளவிமானம் - மாமல்லபுரம் அத்யந்தகாமம்.
நாற்றளவிமானம் - காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரம்

7. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், கங்கைகொண்டசோழபுரத்துச் சோழீசுவரம் ஆகியன சிறந்த எடுத்துக்காட்டுகள்.

8. பாதபந்த அதிட்டானத்தைத் தளவானூர் சத்ருமல்லேசுவராலய முகப்பு கொண்டுள்ளது.

9. பிரதிபந்த அதிட்டானம் கொண்டுள்ள கோயில்களுள் குறிப்பிடத்தக்கது தஞ்சாவூர் இராஜராஜீசுவரம்.

10. இலால்குடி சப்தரிஷீசுவரமும் திருச்செந்துறை சந்திரசேகரர் கோயிலும் பத்மபந்தமான பெருந்தாமரைத் தளம் கொண்டுள்ளது.

11. கண்டபாதச் சிற்பங்கள் பெற்றுள்ள கோயில்களுள் பசுபதிகோயில் பிரம்மபுரீசுவரர் கோயிலும் கும்பகோணம் நாகேசுவரர் கோயிலும் குறிப்பிடத்தக்கவை.

12. அற்புதமான சிற்பங்கள் இவை. இவற்றை விரிவான அளவில் ஆய்வு செய்து டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் பல அரிய கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்துள்ளது.

13. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் இத்தகைய சிற்பங்களைக் கொண்டுள்ளது.

14. மு.நளினி, இரா.கலைக்கோவன், மகரதோரணச் சிற்பங்கள் (பதிப்பிக்கப்படாத ஆய்வுக்கட்டுரை).

15. M.Nalini, R.Kalaikkovan, Political History of Thiruththavathurai and its neighbourhood, Quest Historica Vol III. No.2, Oct 2004. p.p 48-56.

16. பசுபதிகோயில் பிரம்மபுரீசுவரர், திருவெறும்பியூர் எறும்பீசுவரர், திருப்புறம்பியம் சாட்சீசுவரர் கோயில்களில் உள்ள சுவர்ப் பஞ்சரங்கள் சிறப்பானவை.
பல்லவர்களால் தொடங்கப்பட்ட இப்பஞ்சரங்கள் முற்சோழர் கோயில்களில் தனித்துவம் பெற்றன.

17. மு.நளினி, இரா.கலைக்கோவன், அத்யந்தகாமம், பக். 3-4, 11-13;
இரா.கலைக்கோவன், பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம், பக். 130-137

18. மு.நளினி, இரா.கலைக்கோவன், சத்ருமல்லேசுவராலயம், வரலாறு 12-13, பக். 74-76.
இரா.கலைக்கோவன், பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம், பக். 223-224.

19. மு.நளினி, இரா.கலைக்கோவன், அத்யந்தகாமம், பக். 34-54.

20. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் உச்சிக்குடத் தளத்தகடு கல்வெட்டுப் பொறிப்புகள் பெற்றுள்ளது.

21. பெரும்பாலான கோயில்கள் ஒட்டல் நிலையிலேயே தளங்கள் பெறும். எ-கா மாமல்லபுரம் முகுந்தநாயனார் கோயில், திருமங்கலம் சாமவேதீசுவரர் கோயில்.

22. திருப்பட்டூர் கைலாசநாதர் கோயில் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.