http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 33

இதழ் 33
[ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

திருவிழா, நம்ம தெருவிழா
திரும்பிப் பார்க்கிறோம் - 5
கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் - 1
தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் சமணம்
ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
Links of the Month
சங்கச்சாரல் - 16
இதழ் எண். 33 > தலையங்கம்
திருவிழா, நம்ம தெருவிழா
ஆசிரியர் குழு
கவிக்கோ அப்துல் ரகுமான் ஆதங்கப்பட்டதுபோல், 'தமிழ் நாட்டில் தமிழுக்கு விழா எடுப்பதைப் பாராட்டும் நிலைமை தமிழனுக்கு'. இருப்பினும், காலமாற்றத்தால் அருகிவரும் பறையாட்டம், கரகாட்டம் போன்ற கலைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் கடந்த மாதம் தலைநகரில் நடந்த 'சென்னை சங்கமம்' திருவிழா, கண்மூடித் தமிழர்களால் தமிழகக் கலைகள் மண்மூடிப் போகாது என்ற நம்பிக்கையை அளித்தது. அதை நடத்திக் காட்டிய 'தமிழ் மையம்' நிறுவனத்துக்கும், தமிழகச் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது வரலாறு.காம்.

தமிழனுக்கு
பெரியதிரை பெரிய வீடு,
சின்னத்திரை சின்ன வீடு
வீடு பேற்றுக்காக
அறம் பொருள் இழந்தான்
அகம் புறம் இழந்தான்

என்ற வரிகளுக்கேற்ப, சினிமா மட்டுமே பொழுதுபோக்கு; சினிமாத்தொழிலே கலைச்சேவை; அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களே கலைஞர்கள் என்ற மாயையில் உழன்று கொண்டிருக்கும் சென்னைவாழ் தமிழர்களுக்கு சினிமா தாண்டிய, அதைவிடத் தரமான, மண்ணின் மணம் கமழும் பொழுதுபோக்குகளைக் கொண்ட இன்னொரு கலையுலகம் உள்ளது என்பதை உணர்த்த இதுபோன்ற விழாக்கள் மிக அவசியம். தாய்மொழிப்பற்று என்ற உணர்வையே தமது Value System-லிருந்து தூக்கியெறிந்துவிட்ட பாதிக்கு மேற்பட்ட வளர்ந்துவிட்ட தலைமுறையினருக்கும் முக்கால்பங்குக்கும் மேற்பட்ட வளரும் தலைமுறையினருக்கும், தமிழனின் பாரம்பரியக் கலைகள் என்னென்னவென்றே தெரியாமல் வளரும் குழந்தைகளுக்கும் தமிழகக் கலைகளின் அருமை பெருமைகளை எடுத்துக்காட்ட வல்லன இத்தகைய விழாக்களே.

'திசைகள் அதிரப் பறையாட்டம்' என்று அழைப்பிதழில் வாசித்ததுமே மெய் சிலிர்த்தது. ஒருமுறை பறையடியைக் கண்டு, கேட்டவர்கள், தம் வாழ்நாள் முழுக்க அதை மறப்பது கடினம். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்வரை தமிழகக் கிராமங்களில் திருவிழாக்களின்போது நடைபெற்று வந்த இந்நிகழ்ச்சி, தொலைக்காட்சி எடுத்த விஸ்வரூபத்தால் தன் மிடுக்கான நிலையை இழந்து, தன்னை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான கலைஞர்களின் வயிற்றுப்பாட்டையே கேள்விக்குறியாக்கியது. பக்கத்திற்குப் பத்துப் பேராக இருபக்கங்களிலும் நின்றுகொண்டு நையாண்டி மேளக் கலைஞர்களுடன் இணைந்து, 'பறை' என்ற போர்முரசைக் கொட்டி முழக்குவார்கள். இரு வரிசைகளுக்கும் இடையிலிருக்கும் இடத்தில் மெதுவாக நடனமும் ஆரம்பிக்கும். காலவரம்பின்றித் தொடரும் இப்பரவச நிகழ்ச்சியில் தொடர்ந்து வாசித்துக் களைப்படையும் கலைஞர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு கொடுத்து, பறையின் ஒலியைக் குன்ற விடாமல் பார்வையாளர்களைத் துள்ளவைப்பார்கள். நேரமாக ஆக, வேகமும் ஒலியும் கூடிக்கொண்டே போகும். இவ்வாறு பறையொலி உச்சஸ்தாயியை அடையும்போது ஆட்டத்தின் வேகமும் உச்சகட்டத்தில் இருக்கும். எந்தவிதமான ஒலிப்பெருக்கும் சாதனங்களும் இல்லாமலேயே விழா நடக்கும் இடத்தை அதிர வைக்கும் இக்கலைகளுடன் ஒப்பிடும்போது மைக்கேல் ஜாக்சன் போன்றோரின் மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள் தூசுக்குச் சமானம் என்று பார்த்தவர்கள் உணர்வார்கள்.

குழந்தைகளாக இருக்கும்போது அனுபவிக்கும் சந்தோஷங்கள் தலைமுறைக்குத் தலைமுறை மாறிக்கொண்டே வருகின்றன. இதை இன்னொரு விதமாகச் சொல்வதென்றால்,அறிவியல் கண்டுபிடிப்புகளும் பொழுதுபோக்கின் தளங்களையே மாற்றி வருகின்றன எனலாம். மணல்வீடு கட்டி விளையாடி, அம்புலிமாமா கதைகளில் சென்ற தலைமுறைக் குழந்தைகள் மனநிறைவு கண்டன என்றால், இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு ஹாரிபாட்டரும் பவர்ரேஞ்சரும் தேவைப்படுகிறார்கள். இவற்றின்மூலம் கற்பனைத்திறன் வளர்கிறது என்பதைவிட, பிஞ்சு மனங்களில் விதைக்கப்படும் வன்முறை விதைகளே அதிகம். இதுபோன்ற நச்சுக்களிலிருந்து இளைய தலைமுறையை மீட்க இத்தகைய கலைச் சங்கமங்கள் நிச்சயம் உதவும். கோலாட்டம் என்றால் குஜராத்தின் தாண்டியா ஆட்டம்தான் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் தமிழர்களும் உண்மையை உணர இது ஒரு நல்வாய்ப்பு.

இச்சங்கமங்களால் மக்கள் அடையும் இன்னொரு நன்மை என்னவெனில், அழிந்து வரும் பாரம்பரியக் கலைகள் மட்டுமின்றி, 'இதெல்லாம் நமக்குப் புரியாது' என்று உண்மை புரியாமலேயே ஒதுக்கி வைக்கப்படும் பரதநாட்டியம், கர்நாடக இசை போன்ற கலைகளையும் சென்னை மாநகரத்தின் தெருக்களிலும் பூங்காக்களிலும் மேடைகளில் புகழ்பெற்ற அதே கலைஞர்களை வைத்து நடத்தும்போது, 'இதையா இவ்வளவு நாட்களாக அனுபவிக்கத் தவறினோம்?' என்று பார்ப்பவர்களில் பாதிப்பேரையாவது நிச்சயம் சிந்திக்க வைக்கும். மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட, 'Apna Utsav' என்ற நிகழ்ச்சியில் நாற்சந்தியில் நடனமாடிய தாரகை ஸ்வர்ணமுகியின் திறமை முற்றிலும் வேறான ரசனை கொண்டவர்களையும் கவர்ந்தது இங்குக் குறிப்பிடத்தக்கது. டிசம்பர் சீசனில் சபாக்களுக்குச் சென்று செலவழித்துக் கச்சேரி கேட்க ஆர்வமில்லாதவர்களுக்கும் சென்னையின் பூங்காக்களில் நடைபெற்ற சஞ்சய் சுப்ரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன் போன்ற பாடகர்களின் தமிழ்க்கானங்கள் செவிவிருந்து அளித்து, வரும் டிசம்பரில் புதிய ரசிகர்களைப் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை. கலைஞர்களும் கவுரவம் பார்க்காமல் தெருக்களில் நிகழ்ச்சியை நடத்துவார்கள். வாதாபி நகரத் தெருக்களில் சிவகாமி நாட்டியமாடத் தொடங்கியபோது இருந்த தயக்கத்தை மக்களின் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கியதுபோலத்தான். தன் திறமை மக்களைச் சென்றடையும் போதுதானே பணம் கிடைக்கும் தருணத்தைவிட அதிக மகிழ்ச்சியடைகிறான் உண்மையான கலைஞன்!

இப்படிப் பல நன்மைகளுடன் நடந்து முடிந்த திருவிழாவைப் பற்றி விமர்சனங்களும் எழாமல் இல்லை. இலக்கியவாதிகளுக்குரிய முக்கியத்துவம் கொடுத்து அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்றும், முதல்வரின் மகளுக்கு வேண்டிய நிறுவனம் என்பதால், 'தமிழ்மையம்' நிறுவனத்துக்கு இதை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்தனர். இது தமிழர்களால் தமிழர்களுக்காக நடத்தப்படும் விழா. தம்மைத் தமிழரென்று நம்பும் ஒவ்வொருவரும் தம் ஈகோவை விட்டுவிட்டு, அழைப்பிதழை எதிர்பார்க்காமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டியது அவசியம். யார் நடத்தினாலும் இது தமிழர்களுக்காக நடத்தப்பட்ட விழா என்று எடுத்துக்கொண்டு, இதுபோன்ற சிறுசிறு பிரச்சினைகளைப் பெரிதாக்காமல் தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்ட முற்படவேண்டும்.

அடுத்துவரும் ஆண்டுகளிலும் இவை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும், மேலும் சிறப்பாகச் செய்யப் பின்வரும் யோசனைகளை முன்வைக்கிறது வரலாறு.காம்.

1. இந்த ஆண்டு முதல்முறை என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது. இருப்பினும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டுபோல் நான்கே வாரங்களில் ஏற்பாடுகளைச் செய்யாமல், சற்று முன்கூட்டியே திட்டமிட்டு, ஓரிரு மாதங்களுக்கு முன்பிருந்தே மக்களுக்குத் தெரியப்படுத்தித் தயார்படுத்த வேண்டும். தொலைக்காட்சி/பத்திரிகைகள் மூலம் அறியும் வெளியூர்த் தமிழர்களும் இணையம் மூலம் அறியும் வெளிநாட்டுத் தமிழர்களும் அதற்கேற்றவாறு பயணத்திட்டம் வகுத்துக்கொள்ள உதவும்.

2. தமிழகத்தின் பாரம்பரியக்கலைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த, வீடியோக்களோ, வேறு ஆவணப்படங்களோ இல்லாத நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து DVDயாக வெளியிட்டால், என்றென்றும் நிலைத்து நிற்கும். இதன் விற்பனை மூலம் செலவையும் ஓரளவுக்கு ஈடுகட்டலாம். நேரில் காண வாய்ப்பமையாத வெளிநாட்டிலிருக்கும் தமிழர்களுக்கும் இக்கலைகளைக் கொண்டு சேர்த்த நிறைவு ஏற்படும்.

3. இந்த ஆண்டுத் தைத்திருநாளைச் சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்த தமிழக அரசு, இச்சங்கம விழாவையும் பொங்கல் சமயத்தில் நடத்தினால், மக்களுக்கும் தீபாவளியைவிடப் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடத் தூண்டும். சங்கமங்களின் நோக்கமும் வெற்றியடையும்.

4. இந்நிகழ்ச்சி நடக்கும் ஒருவார காலத்துக்குத் தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளிலும் சிறப்புப் பக்கங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்போ அல்லது தொகுப்போ காண்பிக்கப்பட வழி செய்யவேண்டும். இத்தகைய அங்கீகாரங்கள் கலைஞர்களுக்கு உற்சாகம் அளித்துத் தங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்த வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது அரசு நினைத்தால் முடியாதது இல்லை.

சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும். ஆங்கிலவழிக் கல்வியின் கையைப் பிடித்துக் கொண்டு, தமிழின்மீது ஏறிமிதித்து முன்னேறும் நகரங்களுக்கு இது அத்தியாவசியத்தேவை. ஒரேயடியாக இல்லாவிட்டாலும், படிப்படியாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செயல்படுத்தலாம். அப்போதுதான் பள்ளி விழாக்களில் கலைநிகழ்ச்சிகளில் சினிமாப் பாடலுக்கு நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டு, தமிழ்க்கலைகளின்மீது ஆர்வம் காட்ட இளைய தலைமுறை முற்படும். இறுதி நாள் நிகழ்ச்சியில், "மக்கள் நல்லதைப் புறம்தள்ளுவதில்லை, நாம் தராமல் போனால் அவர்கள் போலியைத் தேடிச் செல்கிறார்கள்." என்று திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் கூறியதுபோல், சென்னை மட்டுமின்றித் தமிழகத்திலுள்ள அனைத்துத் தமிழர்களும் நம் நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏற்றுக்கொள்வார்கள். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை நிகழ்த்தித் திரளான மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் சமத்துவப் பொங்கல் விழாவே உண்மையான தமிழர் திருநாள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.